என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் மழை கொட்டியது.
நேற்று பல்வேறு பகுதிகளில் காலை மற்றும் மதியம், இரவு என நாள் முழுவதும் மழை விட்டு விட்டு பெய்தது,
ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் ரோட்டில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் மெதுவாக சென்றது.
ரோட்டின் ஓரம் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் ஆங்காங்கே சிறு குட்டை போல் தேங்கி நின்றது. இதே போல் சத்தியமங்கலம், பவானிசாகர், சென்னிமலை, மொடக்குறிச்சி, பெருந்துறை, நம்பியூர், கோபி என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை கொட்டியது.
அதிகபட்சமாக வனப்பகுதிகளான கடம்பூர் மற்றும் பெரும்பள்ளம் அணை பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை கொட்டியது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஈரோடு மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி ஆலோசனை பேரில் மாநகர செயலாளர் மு.சுப்பிரமணியம் தலைமையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவனிடம் தி.மு.க.வினர் ஒரு மனு கொடுத்தனர்.
ஈரோடு மாநகரத்தில் பாதாள சாக்கடை பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக 60 வார்டுகளிலும் சாலைகள் தோண்டப்பட்டு வருகிறது. இதனால் ஈரோட்டில் ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த ரோடுகள் நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது.
இதனால் மாணவ- மாணவிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என பலர் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் தோண்டப்பட்ட சாலைகளில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி கொசுக்களும் உற்பத்தியாகி வருகிறது.
இதனால் டெங்கு மற்றும் விஷ காய்ச்சல்கள் பரவும் அபாயம் உள்ளது. ரோடுகள் சரியாக மூடப்படாமல் இருக்கிறது. இதன் காரணமாக பல இடங்களில் தொடர் விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.
இதை உடனடியாக மாவட்ட நிர்வாகம் சரி செய்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதில் மாநகர அவைத் தலைவர் சேகரன், மாநகர துணை செயலாளர் நந்தகோபு, மாநகர பொருளாளர் சண்முகம், மாவட்ட பிரதிநிதி கே.சந்திரசேகர், பகுதி செயலாளர்கள் லட்சுமண குமார், வி.சி.நடராஜன், அக்னி சந்துரு, பொ.ராமசந்திரன், நிர்மல் பாபு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே கடந்த 5 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் மாவட்டத்தில் பரவலாக மழை கொட்டியது. குறிப்பாக வனப்பகுதியில் வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டி தீர்த்தது.
சத்தியமங்கலம் வனப்பகுதியையொட்டி உள்ள கடம்பூர் மல்லியம்துர்க்கம், காடகநல்லி, குத்தியா லத்தூர், ஈரட்டி உள்பட சுற்று வட்டார வனப்பகுதிகளில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய கனமழை நள்ளிரவு 12 மணி வரை கொட்டி தீர்த்தது.
இந்த கனமழையால் கடம்பூர் மலைப்பகுதியில் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சத்தியமங்கலம் நால்ரோட்டில் இருந்து கடம்பூர் செல்லும் மலைப்பதையில் ரோட்டோரம் புகழ்மிக்க மல்லியம்மாள் கோவில் உள்ளது. குறுகிய வளைவு பாதையில் உள்ள இந்த மலையின் மேல் பகுதியிலிருந்து பேரிறைச்சலுடன் தண்ணீர் குற்றால அருவி போல் கொட்டி ரோட்டை ஆக்கிரமித்தப்படி பாய்ந்து மறுகரையில் உள்ள பள்ளத்தில் கொட்டியது.
ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நேற்று நள்ளிரவு முதல் கடம்பூர்-சத்தியமங்கலம் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது. இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து போக முடியாமல் நின்றன. இதில் பல வாகனங்கள் சிரமத்துடன் திரும்பி சென்றன.
கடம்பூர் மலை பகுதியில் விடிய விடிய கொட்டிய கனமழையால் அப்பகுதியில் பார்க்கும் இடம் எல்லாம் திடீர் அருவிகள் தோன்றி தண்ணீர் கொட்டியது.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சின்னிவலசு பகுதியை சேர்ந்த ஏழு வயது சிறுமிகள் 2 பேர் அப்பகுதியில் ஒரு கோவில் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த தங்கமுத்து (வயது 52) என்பவர் வந்தார்.
அவர் அந்த 2 சிறுமிகளிடமும் நைசாக பேச்சு கொடுத்து தனியாக ஒரு இடத்துக்கு அழைத்து சென்றார். பிறகு 2 சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து 2 சிறுமிகளும் தப்பி ஓடி வந்து பெற்றோரிடம் கூறினர். இதை கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக ஈரோடு சைல்டு லைன் உறுப்பினரான புவனேஸ்வா பெருந்துறை போலிஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரை பெற்ற இன்ஸ்பெக்டர் சரவணன் சிறுமிகளிடம் செக்ஸ் குறும்பில் ஈடுபட்டதாக கூறப்படும் தங்கமுத்து மீது வழக்குபதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி மற்றும் காந்தி நகர் துணை மின் நிலையங்களில் நாளை (17-ந் தேதி) மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்சாரம் இருக்காது.
கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கே.புதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபுரம் பெருமாபாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம்.
குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடி புதூர், மாணிக்க வலசு, அய்யன் வலசு, மணிபுரம், விராலி மேடு, தங்கமேடு, சேவா கவுண்டனூர், ஆலத்தூர், கவுண்டன் பாளையம், குட்டி பாளையம், செரையாம் பாளையம்.
காஞ்சிகோவில், பள்ளபாளையம், கவுண்டம் பாளையம், கரட்டுபாளையம், சின்னியம் பாளையம், அய்யன் வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலப்பாளையம், கந்தம்பாளையம் பிரிவு, சாமிகவுண்டன் பாளையம், வேட்டை பெரியாம்பாளையம், காந்தி நகர், நடுவலசு, கருக்கம்பாளையம், துடுப்பதி, பொன்னாண்டா வலசு, கொளத்தான் வலசு.
சூரியம்பாளையம், பெத்தாம்பாளையம், இளையாம்பாளையம், ஒசப்பட்டி, மாத நாயக்கன்பாளையம், சாணார்பாளையம், தீர்த்தம்பாளையம், சமாதானபுரம், சீரங்க கவுண்டம்பாளையம், பாலக்கரை, தொட்டியனூர், கோவில் காட்டு வலசு.
இந்த தகவலை ஈரோடு மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பழனிவேல் தெரிவித்தார்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி வடக்கு வீதியை சேர்ந்தவர் பாப்பாத்தி என்கிற தவசியம்மாள் (வயது 78). இவரின் கணவரும் முதல் மகனும் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் தற்போது மகன் பகவதி (வயது 60) மற்றும் மகள் ஒருவரும் வெவ்வேறு ஊர்களில் உள்ளனர்.
தனியாக வசிக்கும் தனது வயதான அம்மாவை கவனித்து கொள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்த புஷ்பா என்ற பெண்ணை சம்பளத்திற்கு மகன் பகவதி சேர்த்துள்ளார்.
வயது முதிர்வு காரணமாக தவசியம்மாளுக்கு உடல் ரீதியான பல பிரச்சனைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், வேலையாள் புஷ்பா மளிகை சாமான்கள் வாங்க சென்றுவிட்டு சுமார் அரைமணி நேரம் கழித்த வீடு திரும்பியவர் வீட்டுக்குள் நெருப்பு புகை வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் பூட்டப்பட்ட கதவை திறந்து பாத்தபோது தவசியம்மாள் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். மண்ணெண்ணெய் கேன் அருகில் கிடந்ததால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக தெரிகிறது.
கோபி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற தவசியம்மாளின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகேயுள்ள அத்தாணி பகுதியில் செல்லும் பவானி ஆற்றில் கடந்த ஜனவரி மாதம் இரண்டு பள்ளி மாணவிகளின் உடல் பிணமாக மீட்கப்பட்டது.
இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை செய்து வந்ததில் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்திலும் பார்க்கப்பட்டது.
மாணவிகளை பற்றி விசாரிக்கையில் அந்தியூர் அருகேயுள்ள காந்திநகர்-புதுக்காடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மகள் ஓவியா (வயது 14) மற்றும் கழுதைப்பாளி பகுதியைச் சேர்ந்த கரியன் என்பவர் மகள் சுகந்தி (வயது 16) என்பதும் தெரியவந்தது.
இருவரும் அந்தியூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் மாணவிகளின் பெற்றோர் மற்றும் அந்தியூரைச் சேர்ந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை சேர்ந்த பழனிச்சாமி ஆகியோர் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் மாணவிகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், எனவே இந்த வழக்கினை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டுமென மனு அளித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து ஈரோடு மாவட்ட எஸ்.பி சக்திகணேசன் உத்தரவின்பேரில் பவானி டிஎஸ்பி சேகர் மற்றும் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தொடங்கினர்.
இந்நிலையில் பூனாச்சி பகுதியை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளியான நந்தகுமார் (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். மாணவிகளின் இறப்பு சம்பவத்திற்கும் தனக்கும் தொடர்பு இருப்பதாக கூறி ஒரிச்சேரிப்புதூர் கிராம நிர்வாக அலுவலர் வெள்ளியங்கிரியிடம் சரண் அடைந்தார்.
இதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலரான வெள்ளியங்கிரி நந்தகுமாரை ஆப்பக்கூடல் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
போலீசார் தொடர்ந்து நந்தகுமாரிடம் விசாரணை நடத்தியதில், அந்தியூரில் உள்ள ஒரு துணிக்கடையில் சுகந்தி விடுமுறை நாட்களில் வேலைக்கு வந்து சென்றதும், அங்கு துணி எடுக்க வந்த நந்தகுமார் சுகந்தியிடம் பேசியதில் தன்னுடைய செல்போன் நம்பரை கொடுத்து பழகி வந்ததாக சொல்லப்படுகிறது.
நாளடைவில் அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கத்தில் சுகந்தியையும் இவரின் தோழியான ஓவியாவையும் பைக்கில் கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி அத்தாணி பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு கூட்டி சென்று பிறகு அருகிலுள்ள அத்தாணி-பவானி ஆற்றுக்கு குளிப்பதற்காக மூவரும் சென்றதாக கூறப்படுகிறது.
மேலும், ஆற்றங்கரையில் சுகந்தி மற்றும் ஓவியா இருவரையும் நந்தகுமார் தனது செல்போனில் போட்டோ எடுத்ததாகவும், அதை சுகந்தி தான் வேலை செய்து வந்த கடையில் வேலை செய்யும் நண்பருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது.
பிறகு மூவரும் ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும் போது கரையில் வைத்திருந்த நந்தகுமாரின் செல்போன் மணி அடிக்கவே கரைப்பகுதிக்கு வந்து போனில் பேசிய நந்தகுமார் பிறகு ஆற்றில் திரும்ப வந்து பார்க்கும்போது ஓவியா மற்றும் சுகந்தியை காணவில்லை, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்க கூடும் என்று பயந்துபோன நந்தகுமார் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு யாருக்கும் தகவல் சொல்லாமல் வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டதாக தெரிகிறது.
அதன் பின்னரே கடந்த ஜனவரி 3-ம் மற்றும் 4-ம் தேதிகளில் ஆற்றில் இரண்டு மாணவிகள் அடுத்தடுத்து சடலங்கமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்பே, சில மாதங்கள் கடந்து செல்ல நந்தகுமாரின் செல்போன் தொலைந்து போகவே அதில் மாணவிகள் எடுத்த போட்டோ இருக்கிறதே! போட்டோவை யாராவது பார்த்து விட்டால் தான் மாட்டி விடுவோம் என்ற பயத்தில் நந்தகுமார் சரண் அடைந்து வாக்கு மூலம் கொடுத்து உள்ளார்.
இதனையடுத்து போலீசார் நந்தகுமார் மீது, அபாயகரமான இடத்திற்கு கூட்டி சென்று இளம்பெண்களின் இறப்பிற்கு காரணமாக இருத்தல் மற்றும் தகவல்களை மறைத்தது என இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
பள்ளி மாணவிகள் இருவர் பெற்றோருக்கு தெரியாமல் வெளிநபரோடு பழகியதால் ஏற்பட்ட துயரம்... கூடா நட்பு கேடாக முடிந்ததையே இச்சம்பவம் உணர்த்துவதாக உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
பெருந்துறை அருகே உள்ள குட்டையூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 21).
இவர் மதியம் 12 மணியளவில் வீட்டில் இருந்த போது திடீரென வீட்டின் விட்டத்தில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர் முருகன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கடம்பூர் மலைப் பகுதிகளில் பவள குட்டை என்னுமிடத்தில் தாயை பிரிந்து 3 மாதமே ஆன பெண் குட்டி யானை விளை நிலங்களில் புகுந்தது.
இதை பார்த்த கிராம மக்கள் அதற்கு உணவு கொடுத்து பராமரித்து வனத்துறையின் மூலம் மீண்டும் காட்டுக்குள் விடப்பட்டது.
மனித வாடை பட்டவுடன் குட்டி யானையை மற்ற யானைகள் நிராகரித்தது மீண்டும் அந்த குட்டியானை ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்தது.
மீண்டும் வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு கராச்சி குரையில் உள்ள வனத்துறையின் மருத்துவமனையில் பராமரித்து வந்தனர். நாளொன்றுக்கு 15 லிட்டர் லாக்டோஜன் பால் குடித்து வந்தது. இந்நிலையில் மீண்டும் வனத்துறையினர் தாயுடன் குட்டியானையை சேர்க்க முயற்சி எடுத்துள்ளனர்.
இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த குட்டி யானை மீண்டும் காட்டில் விட்டால் தாய் நிராகரித்தால் அது எங்கு போகும்? புலி சிறுத்தைக்கு பலியாகி விடும் என்று கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதனை வனத்துறை பாதுகாத்து முதுமலை யானைகள் காப்பகம் இல்லையென்றால் வண்டலூர் வன உயிரியல் காப்பகத்திற்கு கொண்டு செல்லுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வனத்துறையினர் தொடர்ந்து குட்டியானையை ஒவ்வொரு இடமாக தூக்கி சென்று காட்டில் விட்டு தாயுடன் சேர்க்க முயற்சி செய்து வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுபாளையம் பிரம்மதேசம் சாலையில் அழகு முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் எதிரே பெரிய தோட்டம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
நேற்று இரவு வழக்கம்போல் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தூங்கி விட்டனர். இன்று காலை வெளியே வந்து பார்த்தபோது பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ரத்தக்கறை படிந்திருந்தது. தங்கள் வீட்டில் மட்டும்தான் ரத்தம் படிந்து உள்ளதா? என சந்தேகப்பட்டு பார்த்த மக்கள் அனைத்து வீட்டு வாசல்களிலும் ரத்தம் படிந்துள்ளதால் ஒரு வித பீதியுடன் காணப்படுகிறார்கள்.
இரவு நேரத்தில் யாரோ இந்த ரத்தத்தை தெளித்து சென்றது போல் உள்ளது.
அந்த பகுதியில் சுடுகாடு உள்ளது என்பதால் பொதுமக்கள் மேலும் அச்சத்துடன் காணப்படுகிறார்கள்.
யாராவது ஆடு அல்லது கோழி பலியிட்டு இந்த வழியாக சென்றபோது ரத்தக்கறை படிந்ததா? அல்லது ஒவ்வொரு வீட்டு வாசல்களிலும் ரத்தத்தை தெளித்து யாராவது பரிகாரம் எதுவும் செய்து இருப்பார்களா? என அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசி கொண்டார்கள்.
இதுகுறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வருண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
வீட்டு வாசல்களில் ரத்தக்கறை படிந்திருப்பதை கண்டு போலீசாரும் ஆச்சரியம் அடைந்து உள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீட்டு முன் ரத்தம் சிந்தியிருப்பதை பார்வையிடும் மக்கள்.
ஈரோடு கருங்கல் பாளையம் மரப்பாலம் ரோடு ஐந்தாவது வீதியைச் சேர்ந்தவர் சுந்தரம் (வயது78). இவர் சம்பவத்தன்று காலை ஈரோடு ரெயில் நிலையம் எதிரே அவருக்கு சொந்தமான ஆட்டோவை நிறுத்தியிருந்தார்.
பின்னர் அவர் டீ குடித்து விட்டு திரும்பி வந்து பார்த்தபோது ஒரு வாலிபரை அவரது ஆட்டோவை ஓட்டி செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சுந்தரம் ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் ஆட்டோவின் எண்ணை வைத்து ஆட்டோவை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். மொடக்குறிச்சியில் அந்த ஆட்டோவை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த வாலிபரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில் அந்த வாலிபர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த விக்னேஷ் (26 )என்பது தெரியவந்தது. ஈரோடு மூலபட்டறையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
விக்னேசை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகேயுள்ள அத்தாணி பகுதியில் செல்லும் பவானி ஆற்றில் கடந்த ஜனவரி மாதம் இரண்டு பள்ளி மாணவிகளின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை செய்ததில் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையம் காந்திநகர்- புதுக்காடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மகள் ஓவியா (வயது-14) மற்றும் ஜி.எஸ்.காலனி கழுதைப்பாளி பகுதியைச் சேர்ந்த கரியன் என்பவர் மகள் சுகந்தி (16) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் அந்தியூரைச் சேர்ந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மாவட்ட எஸ்.பி. சக்தி கணேசனடம் இந்த வழக்கினை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டுமென மனு அளித்திருந்தார்.
மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் அந்தியூர் தாசில்தார் மாணவிகளின் பெற்றோர்களுடன் பழனிச்சாமி இதுதொடர்பாக மேலும் ஒரு மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் எஸ்பி சக்தி கணேசன் உத்தரவின்பேரில் பவானி டிஎஸ்பி சேகர், இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க துவங்கினர்.
விசாரணையில் அந்தியூரில் உள்ள ஒரு துணிக்கடையில் சுகந்தியும் ஓவியாவும் விடுமுறை நாட்களில் வேலைக்கு வந்து சென்றது தெரியவந்தது.
அங்கு துணி எடுக்க வந்த செங்கல் சூளையில் வேலை செய்து வந்த நந்தகுமார் (வயது-25, திருமணமானவர்), சுகந்தியிடம் தன்னுடைய செல்போன் நம்பரை கொடுத்து பேசச் சொன்னதாகவும், அதில் அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கத்தில் சுகந்தியையும் ஓவியாவையும் பைக்கில் கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி அத்தாணி சவண்டப்பூர் பாலத்தின் அடியில் ஓடும் பவானி ஆற்றுக்கு குளிப்பதற்காக கூட்டிச் சென்றதும் தெரியவந்தது.
மேலும், அங்கு அவர்களுடன் செல்போனில் போட்டோ எடுத்து விட்டு நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளனர்.
பிறகு மூவரும் குளிக்க சென்று நந்தகுமார் மட்டுமே ஆற்றின் கரை பகுதிக்கு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
பின்பு நந்தகுமார் சென்று ஆற்றில் பார்க்கும்போது ஓவியா, சுகந்தி காணாமல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனை நந்தகுமார் கடந்த 8 மாதங்களாக பயந்துபோய் யாரிடமும் சொல்லாமல் இருந்துள் ளதாக தெரிகிறது.
இவரது செல்போன் காணாமல் போனதால் இந்த போட்டோ தகவல் யாரிடமாவது சிக்கி தான் மாட்டிக்கொண்டு விடுவோமோ? என பயந்துபோன நந்தகுமார் ஒரிச்சேரிப்புதூர் கிராம நிர்வாக அலுவலர் வெள்ளியங்கிரியிடம் சரண் அடைந்துள்ளார்.
துணி கடையில் வேலை செய்து வந்த போது யாருடன் சுகந்தி பேசுவார் என போலீசார் விசாரித்ததில் நந்தகுமார் பவானி ஆற்றுக்கு தான் கூட்டிச்சென்றதை ஒப்புக்கொண்டார் என்பதாக போலீஸார் தரப்பில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ஆப்பக்கூடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நந்தகுமார் மீது இளம்பெண் கடத்தல், தகவல்களை மறைத்தது உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் நேற்று இரவு அடைக்கப்பட்டார்.






