என் மலர்
ஈரோடு
- யானை கூட்டங்கள் அங்கு பயிரிடப்பட்டிருந்த ராகி பயிரை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தி உள்ளது.
- வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இவற்றில் தாளவாடி, ஆசனூர், கடம்பூர், திம்பம் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.
அவ்வபோது யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது.
சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலை பகுதியில் உள்ள அருள்வாடி கிராமத்தை சேர்ந்தவர் சென்னப்பா. இவர் அவரது தோட்டத்தில் 4 ஏக்கர் ராகி பயிரிட்டு இருந்தார். இந்நிலையில் நள்ளிரவில் இவரது தோட்டத்தில் புகுந்த 10-க்கும் மேற்பட்ட யானை கூட்டங்கள் அங்கு பயிரிடப்பட்டிருந்த ராகி பயிரை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தி உள்ளது. சென்னப்பா இன்று காலை தோட்டத்தில் சென்று பார்த்த போது ராகி பயிரை யானை கூட்டங்கள் சேதப்படுத்தி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் தோட்டம் முழுக்க யானை சாணங்கள் அதிக அளவில் இருந்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, கர்நாடக மாநிலத்திலிருந்து 40-க்கும் மேற்பட்ட யானை கூட்டம் தாளவாடி அடுத்த அருள்வாடி கிராமத்தில் முகாமிட்டுள்ளன.
இந்த யானை கூட்டங்கள் குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு மலை கிராமமாக சென்று பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாளவாடி அருகே உள்ள கிராமத்தில் சம்பங்கி பூந்தோட்டத்திற்குள் புகுந்த 10-க்கும் மேற்பட்ட யானைக் கூட்டங்கள் பூக்களை சேதப்படுத்தியது. அதே யானை கூட்டங்கள் தான் தற்போதும் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி இருக்கலாம் என கருதுகிறோம்.
எனவே தாளவாடி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராம மக்கள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றனர்.
இந்நிலையில் விவசாயி சென்னப்பன் மற்றும் விவசாயிகள் அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் யானைகள் ஊருக்குள் புகாதவாறு பெரிய அகழி வெட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 7 ஆண்டுகளாக மிஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
- நெஞ்சு வலிப்பதாக சக பணியாளர்களிடம் கூறியுள்ளார்.
அம்மாப்பேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பட்லூர் பாரதிநகரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மகன் சரவண க்குமார் (வயது 29). இவர் பூனாச்சியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மில்லில் கடந்த 7 ஆண்டுகளாக மிஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை 6 மணிக்கு வழக்கம்போல சரவணகுமார் வேலைக்கு சென்றுள்ளார்.
மில்லில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, நெஞ்சு வலிப்பதாக சகப் பணியாளர்களிடம் கூறிய சரவணக்குமார் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பூனாச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த போது சரவணக்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சரவணகுமாரின் பெற்றோருக்கு தனியார் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சரவணக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சரவணகுமாரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று மதியம் பூனாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மில் முன்பு உயிரிழந்த சரவணகுமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு நிறுவனத்தை முற்றுகையிட முயன்றனர். தொடர்ந்து அவர்கள் நிறுவனத்தின் நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் (பொ) தலைமையிலான போலீசார் சரவணகுமாரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டம் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கைவிடப்பட்டது.
மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பவானி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட இந்த அமைப்புகளின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
- இந்தக் கூட்டம் நாளை மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
ஈரோடு:
ஈரோடு வேப்பம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இந்து அமைப்புகள் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டம் இன்று காலை தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட இந்த அமைப்புகளின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் வட தமிழக ஆர்.எஸ்.எஸ். செயலாளர் ஜெகதீசன், இந்து முன்னணி காடேஸ்வர் சுப்பிரமணி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. முன்னாள் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.
இன்றும், நாளையும் என 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்து அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் தலைமை பண்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டம் நாளை மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
- வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த காரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
- சொகுசு கார் மற்றும் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சா பொட்டலங்களை சித்தோடு போலீசார் பறிமுதல் செய்தனர்.
சித்தோடு:
ஈரோடு மாவட்டம் பவானி கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கேரள மாநிலத்திற்கு சொகுசு காரில் நாமக்கல் மாவட்ட எல்லையை கடந்து ஈரோடு மாவட்ட எல்லையான லட்சுமி நகர் பைபாஸ் வாகன சோதனை சாவடி வழியாக கடத்தி செல்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலை அடுத்து சித்தோடு அடுத்த லட்சுமி நகர் வாகன சோதனைச் சாவடியில் சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் பவானி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி தீவிர சோதனை செய்து வந்தனர். அப்போது கேரளா பதிவு எண் கொண்ட ஒரு கார் அந்த வழியாக வந்தது. அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதை கண்டதும் காரில் வந்தவர் காரை தேசிய நெடுஞ்சாலையில் விட்டு சர்வீஸ் சாலையில் திருப்பி செல்ல முயன்றுள்ளார்.
இதை தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த காரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது காரின் பின்பக்க சீட்டுக்கு அடியில் ரகசிய அறை அமைத்து அதில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் காரை ஓட்டி வந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சாருங்கமகி (வயது 28) என்பதும், அவர் ஆந்திர மாநிலம் நெல்லுருவில் இருந்து 50 கிலோ எடை உள்ள கஞ்சாவை வாங்கி காரின் பின்பக்க சீட்டில் ரகசிய அறை அமைத்து அந்த கஞ்சாவை கேரள மாநிலம் கொச்சிக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து சொகுசு கார் மற்றும் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சா பொட்டலங்களை சித்தோடு போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சாருங்கமகியை கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
- ஜாமினில் வெளியே வந்தவர்களில் யாரேனும் பல்லடம் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
- கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சேமலைகவுண்டன் பாளையத்தில் தோட்ட வீட்டில் இருந்த தெய்வ சிகாமணி, அலமேலு, செந்தில்குமார் ஆகிய 3 பேரை நள்ளிரவில் மர்ம கும்பல் கொடூரமாக கொலை செய்தது. கொலையாளிகளை கண்டுபிடிக்க 14-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதே சம்பவம் போல் ஈரோடு மாவட்டம் சென்னிமலை, அரச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியாக தோட்ட வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதிகளை கொலை செய்து தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் நடந்தது. இந்த கொலை, கொள்ளை தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு 14 பேரை ஈரோடு மாவட்ட போலீசார் சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்த சிலர் ஜாமின் பெற்று வெளியே வந்துள்ளனர். ஜாமினில் வெளியே வந்தவர்களில் யாரேனும் பல்லடம் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் பல்லடம் கொலை சம்பவமும், சென்னிமலை கொலை சம்பவங்களும் ஒரே மாதிரி நடந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருப்பூரை ஒட்டிய ஈரோடு மாவட்டத்தில் தோட்ட வீடுகளில் தனியாக வசிக்கும் வயதான தம்ப தியரை தாக்கி இதுபோல் கொலை நடக்க கூடும் என போலீசார் சந்தேகிப்பதால் கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை பெருந்துறை, சென்னிமலை, அரச்சலூர் போன்ற பகுதிகளில் இதுபோன்று தனியாக ஏராளமான தோட்ட வீடுகள் இருக்கின்றன. இந்த வீடுகளில் வயதான தம்பதிகள் வசித்து வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்ட போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் தனியாகவும் சாலையை ஒட்டி பகுதியில் 570 தோட்ட வீடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் பெருந்துறை பகுதியில் மட்டும் 270 வீடு கள் உள்ளன. இந்த 570 வீடுகளுக்கு முன்னுரிமை அளித்து இரவு நேரங்களில் அந்தந்த பகுதியில் உள்ள இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் நேரடியாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இரவு முதல் காலை வரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதைப்போல் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சந்தேகப்படும்படி நபர்கள் யாராவது செல்கிறார்களா என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வங்கி கணக்கு எண், வங்கி கணக்கு பணம் இருப்பு விவரங்களை வீடியோ கால் மூலம் கேட்டறிந்துள்ளனர்.
- சீனிவாசன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
ஈரோடு:
தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று இணையதளம் மோசடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆன்லைனில் கவர்ச்சிகர விளம்பரம் என விதவிதமாக ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இதே போல் ஈரோட்டை சேர்ந்த இருவர் மோசடியில் இழந்த ரூ.37 லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு அவர்களிடம் வழங்கி உள்ளனர்.
இதைப்பற்றிய சம்பவம் வருமாறு:-
ஈரோட்டை சேர்ந்தவர் செல்வன். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது பேஸ்புக்கில் அறிமுகமான நபர் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என நம்பி செல்வன் ரூ.42 லட்சத்தை பல்வேறு தவணை முறைகளில் செல்வனுக்கு அனுப்பி உள்ளார்.
பின்னர் பேஸ்புக்கில் அறிமுகமான நபர் திடீரென தனது கணக்கை முடித்து விட்டார். இதனால் ஷேர் மார்க்கெட்டில் தன்னை முதலீடு செய்ய அறிவுறுத்திய நபர் குறித்த முழு விவரம் தெரியவில்லை. இதுகுறித்து செல்வன் ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இதைப்போல் ஈரோட்டில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் சீனிவாசனிடம் வீடியோ காலில் பேசிய நபர், மும்பை அந்தேரி பகுதியிலிருந்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய அதிகாரி பேசுவதாகவும், உங்கள் ஆதார் கார்டு மற்றும் சிம் கார்டு எண்ணை பயன்படுத்தி பல லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. எனவே உங்கள் ஆதார் கார்டு முடக்கப்படும்.
எனவே உங்கள் எப்.ஐ. ஆர் பதிவு செய்திருப்பதாகவும், விரைவில் உங்களை கைது செய்வோம் என்று கூறியுள்ளார். மேலும் வங்கி கணக்கு எண், வங்கி கணக்கு பணம் இருப்பு விவரங்களை வீடியோ கால் மூலம் கேட்டறிந்துள்ளனர். இதை உண்மை என்று நம்பி சீனிவாசனும் அந்த நபரிடம் வங்கியின் பணம் இருப்பு விவரங்களை தெரிவித்துள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில் சீனிவாசன் வங்கி சேமிப்பில் இருந்து ரூ.27 லட்சம் எடுக்கப்பட்டதாக அவருக்கு எஸ்.எம்.எஸ் வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இந்த இரு வழக்குகளையும் ஈரோடு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து பணத்தை எடுத்துக் கொண்ட வங்கியில் பேசி அந்த வங்கி கணக்கை உடனடியாக முடக்கினர். செல்வன் இழந்த தொகையில் ரூ.10 லட்சத்து 17 ஆயிரம், சீனிவாசன் இழந்த முழு தொகையான ரூ.27 லட்சத்தையும் மீட்டனர். இந்தத் தொகையை சைபர் கிரைம் போலீஸ் ஏ.டி.எஸ்.பி வேலுமணி ஈரோடு எஸ்.பி. ஜவகர் முன்னிலையில் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
- பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்களை சாப்பிட்டும், மிதித்தும் சேதப்படுத்தியது.
- வனப்பகுதியையொட்டி அகழிகளை அமைத்து யானைகள் கிராமத்திற்குள் புகாத வண்ணம் தடுக்க வேண்டும்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் அருகில் இருக்கும் மலை கிராமங்களில் தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள தம்முரெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தன். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார், இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சித்தனின் மக்காச்சோள தோட்டத்திற்குள் புகுந்தது.
தொடர்ந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்களை சாப்பிட்டும், மிதித்தும் சேதப்படுத்தியது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்திய யானை அதிகாலை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
யானை வனப்பகுதியில் இருந்து மலை கிராமங்களுக்கு வருவதை தடுக்கும் பொருட்டு வனப்பகுதியையொட்டி அகழிகளை அமைத்து யானைகள் கிராமத்திற்குள் புகாத வண்ணம் தடுக்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்ததோடு சேதமான பயிருக்கும் உரிய இழப்பீடு அரசு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளார்.
- 2 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.
- ஏராளமான ஏக்கரில் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
மண்ணச்சநல்லூர்:
மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள வாத்தலை கிராமத்தில் அய்யன் வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் முகொம்பு காவேரி ஆற்றில் இருந்து காவேரி, கொள்ளிடம் மற்றும் பாசனத்திற்காக புள்ளம்பாடி, அய்யன் என 2 பாசன வாய்க்காலாக பிரிகிறது.
வாத்தலை அருகே மனப்பாளையம், வேப்பந்துறை என 2 குக்கிராமங்கள் உள்ளன. இந்த 2 கிராமங்களை இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் கிராம மக்கள் பயன்பாட்டிற்காக அய்யன் வாய்க்கால் குறுக்கே தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு அதனை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
மேலும் தற்போது சில நாட்களாகவே பெய்ந்து வரும் மழையால் தரைபாலத்தில் சிறிது மழை நீர் தேங்கி இருந்தது. இந்த நிலையில் கொல்லிமலையில் கனமழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்ததை அய்யன் வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக மக்கள் பயன்பாட்டிற்கு இருந்த தற்காலிக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.
இதனால் 2 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. அங்கு வசிக்கும் பொதுமக்கள் 7 கி.மீ தொலைவு வரை சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் அய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அருகில் உள்ள வயல்வெளியில் தண்ணீர் சூழ்ந்து ஏராளமான ஏக்கரில் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சாலை விரிவாக்கம் செய்வதற்காக கரட்டடிபாளையம் மாரியம்மன் கோவில் இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது.
- பணியாளர்கள் மூலம் கோவிலை இடிக்கும் பணி நடைபெற்றது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையம் சத்தி-ஈரோடு மெயின் ரோட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வர்கள்.
இதையடுத்து ரோடு விரிவாக்கம் பணி செய்வதற்காக அந்த மாரியம்மன் கோவிலை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து இரு பிரிவினருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பொது மக்களிடம் சமரசம் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாரியம்மன் கோவிலில் இருந்து அம்மன் சிலை, விநாயகர் சிலை மற்றும் உலோக சிலைகள் அகற்றப்பட்டது.
இந்த சாமி சிலைகள் கோபி அடுத்த பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவிலில் உள்ள பாதுகாப்பு அறையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த அறை பூட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இதையடுத்து கரட்டடிபாளையம் மாரியம்மன் கோவில் மற்றும் சாமி சிலைகள் வைக்கப்பட்டு உள்ள பரியூர் ஆதி நாராயண பெருமாள் கோவில் என ஆகிய 2 கோவில்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சாலை விரிவாக்கம் செய்வதற்காக கரட்டடிபாளையம் மாரியம்மன் கோவில் இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இன்று காலை 6 மணி அளவில் நெடுஞ்சாலை துறையினர், வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
இதையடுத்து அவர்கள் முன்னிலையில் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பணியாளர்கள் மூலம் கோவிலை இடிக்கும் பணி நடைபெற்றது. தொடர்ந்து காலை கோவில் முழுவதும் இடித்து அகற்றப்பட்டது. இது பற்றி தகவல் கிடைத்ததும் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- பள்ளி குழந்தைகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
- குறுகலான சாலையில் வேன் இயக்கப்பட்டதால் விபத்து.
அம்மாப்பேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் பகுதியில் எம்.ஏ.எம். எக்ஸல் என்ற ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதி களை சேர்ந்த மாணவர்கள் பலர் படித்து வருகிறார்கள். அவர்களில் பலர் பள்ளி வேனில் அழைத்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பள்ளியில் படிக்கும் மாணவர்களை இன்று காலை வேனில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தது.
இதையடுத்து அந்த பள்ளி வேன் அம்மா பேட்டையில் இருந்து ஊமாரெட்டியூர் செல்லும் சாலையில் அரசு கால்நடை மருத்துவமனை வழியாக பள்ளி வேன் ஓட்டுநர் அம்மாபேட்டையை சேர்ந்த குணசேகரன் (வயது 38) என்பவர் வேனை ஓட்டி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது சாலையில் சிறிய அளவிலான வளைவில் திருப்பும் போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் வலது புறம் சாலையை ஒட்டி உள்ள கரும்பு தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது.
இந்த விபத்தில் பள்ளி வேனில் பயணம் செய்த பள்ளி குழந்தைகள் 10-க்கும் மேற்பட்டவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதை கண்ட பள்ளி குழந்தைகள் கதறி அலறினர்.
இது பற்றி தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்சு தகவல் கொடுத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்கு கால தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. அதற்குள் தகவல் கிடைத்ததும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து தங்கள் குழந்தைகள் விபத்தில் சிக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பள்ளி வாகனத்தில் இருந்து தங்களது குழந்தைகளை மீட்டு இரு சக்கர வாகனங்களில் ஏற்றிக்கொண்டு அருகே உள்ள அம்மா பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து பள்ளி குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அம்மாபேட்டை அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான சம்பவம் பெற்றோர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் குறுகலான சாலையில் அதிக நீளமுடைய பள்ளி வேன் இயக்கப்பட்டதால் விபத்து நிகழ்ந்திருப்பதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தகவல் அறிந்து வந்த அம்மாபேட்டை போலீசார் விபத்திற்கு உள்ளான பள்ளி வேனை, கிரேன் எந்திரம் கொண்டு வந்து அப்புறப்படுத்தி விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
- வனத்துறையினர் யானைகள் ஊருக்குள் புகாதவாறு தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- யானைகள் ஊருக்குள் புகாதவாறு பட்டாசுகளை வெடித்து வருகிறோம்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு தாளவாடி, திம்பம் மலைப்பகுதியில் யானைகள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி அருகே உள்ள அருள்வாடி கிராமத்தில் நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் அருள்வாடி கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதிக்கு வந்தது.
இதை பார்த்த பொதுமக்கள் 40 யானைகள் ஊருக்குள் வந்து விடும் என அச்சத்தில் இது குறித்து வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் யானைகள் ஊருக்குள் புகாதவாறு தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்பொழுது யானைகள் இடம்பெறும் காலம் என்பதால் யானைகள் கூட்டம் கூட்டமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழக வனப்பகுதிக்கு வருகின்றது. அதே
போன்றுதான் கர்நாடக மாநிலத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் தாளவாடி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. தொடர்ந்து யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம்.
யானைகள் ஊருக்குள் புகாதவாறு பட்டாசுகளை வெடித்து வருகிறோம். வனப்பகுதி ஒட்டி ஏராளமான மலை கிராமங்கள் உள்ளதால் மலை கிராம மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரம் தனியாக எங்கும் செல்ல வேண்டாம். சாலையோரம் முப்புதர்களில் யானைகள் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என்றனர்.
- தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ஈரோடு பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், குடோன்கள் கடையடைப்பில் பங்கேற்பார்கள்.
ஈரோடு:
மத்திய அரசு கடை வாடகைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பை கடந்த அக்டோபர் மாதம் 10-ந்தேதி முதல் அமலாக்கி உள்ளது. இந்த முறையால் வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், இந்த வரி விதிப்பு முறையை முழுமையாக நீக்கம் செய்யக்கோரி வருகிற 29ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் கடையடைப்பு நடத்த அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்த நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார்.
பொதுச்செயலாளர் ரவிசந்திரன், பொருளாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர். இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வாடகைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பினை கண்டித்து வருகிற 29-ந்தேதி ஈரோடு மாவட்டம் முழுவதிலும் ஒரு நாள் கடையடைப்பு, தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள் கூறியதாவது:-
அனைத்து வகை வாடகை கட்டடங்கள், கடைகளுக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி என்பது வணிகர்களை கடுமையாக பாதிக்கும். ரூ.10 ஆயிரம் வாடகையில் கடை நடத்தும் வியாபாரி ரூ.1,800 செலுத்த வேண்டி வரும். பெரிய வியாபாரிகள், வணிகர்கள், ஜிஎஸ்டி.யை 'இன்புட்' என்ற ரீதியில் திரும்ப பெற இயலும்.
குறைந்த வர்த்தகத்தில் தொழில் செய்யும், 'கன்சல்டேட்டேட்' முறையில் ஜி.எஸ்.டி.யாக, 1 சதவீதம் செலுத்தும் வணிகர்கள், 18 சதவீத ஜி.எஸ்.டி தொகையை திரும்ப பெற இயலாது. தவிர மிக மிக குறைந்த அளவிலும், பில் இன்றி பரிமாற்றம் செய்யப்படும் வணிகத்தில் உள்ளோரும் கடுமையாக பாதிப்பார்கள்.
எனவே 18 சதவீத ஜி.எஸ்.டி.யை வணிகர்களுக்கு முழுமையாக நீக்க கோரி வருகிற 29-ந் தேதி ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தை ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் மற்றும் இதனுடன் இணைந்த அமைப்புகளும் நடத்துகிறது. ஈரோடு பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், குடோன்கள் கடையடைப்பில் பங்கேற்பார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த போராட்டத்திற்கு ஈரோடு நகை வியாபாரிகள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு சங்கத்தினரும் அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.






