என் மலர்
ஈரோடு
- ஆர்.பி.பி. கட்டுமான நிறுவனம், வேலங்காட்டுவலசில் உள்ள வீடு உள்ளிட்ட பகுதிகளில் 36 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
- முள்ளாம்பரப்பில் உள்ள கட்டுமான அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடக்கிறது.
ஈரோடு:
ஈரோடு பூந்துறைரோடு செட்டிபாளையம் ஸ்டேட் வங்கி நகரில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் என்.ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான என்.ஆர்.கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் சார்பில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அரசுகளுடன் ஒப்பந்தம் செய்து, கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வருமான வரி ஏய்ப்பு செய்ததாக என்.ஆர். கட்டுமான நிறுவன அலுவலகத்தில் நேற்று முன்தினம் கோவையை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதேபோல் அவல்பூந்துறை பகுதியில் உள்ள என்.ராமலிங்கத்தின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. மேலும், இவருக்கு சொந்தமான அம்மாபேட்டையில் உள்ள மரவள்ளி கிழங்கு அரவை ஆலையிலும் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். இந்த 3 இடங்களிலும் நேற்று முன்தினம் இரவு வரை சோதனை நடத்தப்பட்டது.
இதற்கிடையே ஈரோடு அருகே முள்ளாம்பரப்பில் உள்ள ஆர்.பி.பி. கட்டுமான நிறுவன அலுவலகத்திலும் நேற்று முன்தினம் முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ரகுபதிநாயக்கன்பாளையத்தில் உள்ள ஆர்.பி.பி. நிறுவன உரிமையாளர் செல்வசுந்தரம் வீட்டிலும் அதிகாரிகளின் சோதனை நடந்தது. 2-வது நாளாக நேற்றும் அதிகாரிகளின் சோதனை தொடர்ந்தது.
இந்நிலையில் ஆர்.பி.பி. கட்டுமான நிறுவனம், வேலங்காட்டுவலசில் உள்ள வீடு உள்ளிட்ட பகுதிகளில் 36 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. முள்ளாம்பரப்பில் உள்ள கட்டுமான அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடக்கிறது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள ராமலிங்கம் கட்டுமான நிறுவனம், ஆழ்வார்பேட்டை எஸ்பிஎல் இன்ப்ராஸ்ட்ரக்சர் அலுவலத்தில் சோதனை நடைபெறுகிறது.
கட்டுமான நிறுவனம், வேலங்காட்டுவலசில் உள்ள வீடு உள்ளிட்ட பகுதிகளில் 36 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்று வருகிறது.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
- மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது அடையாள அட்டையை போலீசாருக்கு காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் வரும் பிப்ரவரி 5-ந்தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. உடனடியாக ஈரோடு கிழக்கு தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது. பறக்கும் படையினர் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டது.
இந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபால் சுன்கரா, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் டாக்டர்.மணிஷ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
கட்டுப்பாட்டு அறையில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினரின் கண்காணிப்பு பணிகள், தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் விதிமீறல்கள் பதிவு செய்து அவற்றிற்கு நடவடிக்கை எடுப்பது, பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்படும் ரொக்கம் மற்றும் பரிசுகள், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைப்பது போன்ற பணிகள் நடைபெறும்.
மேலும் சி-விஜில் செயலி மூலம் பெறப்படும் புகார்களுக்கு இங்கிருந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பறக்கும் படைக்கு உத்தரவிடப்படும் என அதிகாரிகள் தெரிவி த்தனர். இதையடுத்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது அடையாள அட்டையை போலீசாருக்கு காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 5-ந் தேதி நடைபெறுகிறது.
- காலை 11 மணி முதல் மதியம் 3 மணிக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 5-ந் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து வரும் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வரும் 10-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கணக்கிற்கு 8 நாட்கள் என்றாலும் பொங்கல் அரசு விடுமுறை நீங்கலாக வருகிற 10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) 13-ம் தேதி (திங்கட்கிழமை) 17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 3 நாட்கள் மட்டுமே மனு தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 11 மணி முதல் மதியம் 3 மணிக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- இடைத்தேர்தலுக்காக 3 பறக்கும் படை, ஒரு வீடியோ கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ பார்வை குழு ஆகவே உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளது.
- வாகன சோதனைகள் முறையாக நடைபெறுகிறதா என தேர்தல் நடத்தும் அலுவலர் மனீஷ் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலுக்காக 3 பறக்கும் படை, ஒரு வீடியோ கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ பார்வை குழு ஆகவே உடனடியாக நியமிக்கப்பட்டுள்ளது. இது தவிர 3 நிலை கண்காணிப்பு குழு, ஒரு கணக்கு தணிக்கை குழு ஆகியவை வேட்பு மனு தாக்கல் செய்யும் 10-ந் தேதி முதல் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பறக்கும் படைக்குழுவில் எக்ஸிக்யூட்டிவ் மேஜிஸ்ட்ரேட் நிலை அதிகாரி ஒருவர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீசார், ஒரு வீடியோ கிராபர் உள்ளனர். தலா 8 மணி நேரம் என 24 மணி நேரமும் பறக்கும் படையினர் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு, வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகன சோதனைகள் முறையாக நடைபெறுகிறதா என தேர்தல் நடத்தும் அலுவலர் மனீஷ் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட எல்லையான கருங்கல்பாளையம் சோதனை சாவடி, காளை மாட்டு சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் மேற்கொண்டார்.
இதில், முறையாக வாகனங்கள் சோதனை செய்யப்படுகிறதா, ஆவணங்கள் சரிபார்க்கப்படுகிறதா, பரிசுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை காவலர்கள் சோதனை செய்வதை தேர்தல் நடத்தும் அலுவலர் மனீஷ் உறுதி செய்தார். விடிய விடிய இந்த வாகன சோதனை நடைபெற்றது. மேலும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சான்றிதழ் சரி பார்க்கப்பட்டது.
- 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
- ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் நடத்தல் விதிமுறை உடனடியாக அமலுக்கு வந்தது. இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 636 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 760 பெண் வாக்காளர்களும், 37 மூன்றாம் பாலினத்தினரும் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 636 வாக்காளர்கள் உள்ளனர். 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஈரோடு கலெக்டர் அலுவலகத்திலும், மாநகராட்சி அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படும். மேலும், சி-விஜில் செயலி மூலமாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். 1950 என்ற இலவச தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தேர்தல் நடத்தை விதிமுறை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மற்ற தொகுதிகளில் விதிமுறைகள் அமலுக்கு வராது. தேர்தலில் விதிமீறல் ஏற்படுவதை தடுக்க 3 தேர்தல் பறக்கும் படைகள், 3 நிலை கண்காணிப்பு குழுக்கள், ஒரு வீடியோ கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ பார்வையாளர் குழு, ஒரு தணிக்கை குழு என மொத்தம் 5 வகையான குழுக்கள் செயல்படுகின்றன.
இதில் நிலை கண்காணிப்பு குழு மட்டும் 10-ந் தேதி முதல் செயல்படும். மற்ற குழுக்கள் தற்போது இருந்தே செயல்பாட்டுக்கு வந்துவிட்டன.
தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை கொண்டு செல்லக்கூடாது. அப்படி ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும்.
கடந்த முறை மாட்டுச்சந்தைக்கு வியாபாரிகள் கொண்டு வந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான பிரச்சனை ஏற்பட்டது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைக்குட்பட்டு வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 26 அலுவலகங்களில் ஒரே நேரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிகிறது.
- வருமான வரி ஏய்ப்பு காரணமாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு பூந்துறை ரோடு செட்டிபாளையம் ஸ்டேட் வங்கி நகர் பகுதியில் என்.ஆர். மற்றும் ஆர்.சி.சி.எல். கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனம் என்.ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமானது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அரசு கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்தம் செய்துகொண்டு குடிநீர் கட்டுமான பணிகள், சாலை பணிகள், உள்கட்டமைப்பு வசதிகள், அரசு கட்டிடங்கள் என அனைத்து வகை பணிகளையும் செய்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று கோவை வருமான வரித்துறை அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் 2 கார்களில் ஈரோடு பூந்துறை ரோட்டில் உள்ள என்.ஆர். கட்டுமான நிறுவன அலுவலகத்துக்கு வந்தனர். கார்களை விட்டு இறங்கிய அதிகாரிகள் நேராக அலுவலகத்துக்குள் சென்றனர். அங்கு பணியில் இருந்தவர்கள் வெளியில் எந்த தொடர்பும் ஏற்படுத்த முடியாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் செய்தனர். பின்னர் அங்குள்ள ஆவணங்கள், கணினி பதிவுகளை சோதனை செய்தனர்.
இதுபோல் இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக சேலம், திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் 26 அலுவலகங்களில் ஒரே நேரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிகிறது. வருமான வரி ஏய்ப்பு காரணமாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து, இன்றும் 2-வதுநாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
என்.ஆர். கட்டுமான நிறுவனம் மற்றும் ஆர்.சி.சி.எல். நிறுவனத்தின் உரிமையாளர் என்.ராமலிங்கம் தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளி வார சந்தை நடைபெற்று வருகிறது.
- குளிர் காலத்துக்கான சால்வை, பெட்ஷீட், கம்பளி ரகங்களும் அதிக அளவில் விற்பனையாகின.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான மணிக்கூண்டு ரோடு, டி.வி.எஸ். வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, என்.எம்.எஸ்.காம்பவுண்ட், காமராஜர் வீதி, பிருந்தாவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நடைபெற்று வருகிறது.
இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளி வார சந்தை நடைபெற்று வருகிறது. இந்த ஜவுளி வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு மகாராஷ்டிரா ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வெளி மாநில வியாபாரிகளும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து துணிகளை கொள்முதல் செய்வார்கள்.
இந்த நிலையில் இந்த வார ஜவுளிச்சந்தை நேற்று இரவு தொடங்கியது. கடந்த வாரங்களில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஜவுளி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தொடர்ந்து தற்போது பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒருவாரகாலமே உள்ள நிலையில், இதற்கான ஜவுளி விற்பனை இந்த வாரமும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதில் ஆண்கள், பெண்கள் குழந்தைகளுக்கான புதிய ரக ஆடைகள், ஜீன்ஸ் பேண்ட், வேட்டி, பனியன் ரகங்கள், உள்ளாடைகள் மற்றும் புடவை, சுடிதார், குர்தீஸ் உள்ளிட்ட துணி ரகங்கள் அதிக அளவில் விற்பனையாகின. மேலும், குளிர் காலத்துக்கான சால்வை, பெட்ஷீட், கம்பளி ரகங்களும் அதிக அளவில் விற்பனையாகின.
அடுத்தவாரம் வர உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த வார ஜவுளிச்சந்தையில் மொத்த மற்றும் சில்லறை விற்பனை அதிக அளவில் நடைபெற்றதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் கேரளா, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அதிகளவில் வெளி மாநில வியாபாரிகள் வந்து குவிந்ததால் விடிய விடிய ஜவுளி விற்பனை விறு விறுப்பாக நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
- கவர்னரின் இந்தச் செயல் சட்டப்பேரவையின் மாண்பை அவமதிப்பதாக கூறி தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
ஈரோடு:
இந்த ஆண்டுக்கான சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் நேற்று தொட ங்கியது. இந்த நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
சட்டமன்றத்துக்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, சட்டமன்றத்தில் முதலில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி, சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார்.
கவர்னரின் இந்தச் செயல் சட்டப்பேரவையின் மாண்பை அவமதிப்பதாக கூறி தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், தி.மு.க சார்பில் இன்று தமிழக முழுவதும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து, ஈரோடு மாநகரில் நகர், பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள், பன்னீர்செல்வம் பூங்கா, மீனாட்சி சுந்தரனார் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கெட்அவுட் ரவி எனும் ஹேஷ்டேக்குடன் "தமிழ் நாட்டில் அத்துமீறும் கவர்னர், அவரை காப்பாற்றும் அ.தி.மு.க-பா.ஜ.க. கள்ளக்கூட்டணி" எனும் வாசகங்கள் அச்சிடப்பட்டு, எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோரின் கார்டூன் படங்களுடன் எடப்பாடி பழனிசாமி-கவர்னர் ஆர்.என்.ரவி பேசிக்கொள்வது போல் போஸ்டர்கள் அதிக அளவில் ஒட்டப்பட்டுள்ளது.
- வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் ஏலத்தில் கலந்துகொண்டு மஞ்சளை வாங்கி செல்கிறார்கள்.
- வருகிற 20-ந்தேதி முதல் மஞ்சள் மார்க்கெட் வழக்கம்போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படியாக மஞ்சள் பயிரிடப்பட்டு வருகிறது. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த மஞ்சளை விற்பனைக்காக பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு செம்மாம்பாளையத்தில் உள்ள மஞ்சள் மார்க்கெட் மற்றும் ஈரோடு, கோபி ஆகிய வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களுக்கு கொண்டு செல்கிறார்கள்.
அங்கு ஏலம் மூலம் மஞ்சள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் ஏலத்தில் கலந்துகொண்டு மஞ்சளை வாங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு வருகிற 11-ந்தேதி முதல் 19-ந் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 11, 12-ந்தேதி மற்றும் 18, 19-ந்தேதி சனி, ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த நாட்களில் மஞ்சள் ஏலம் நடைபெறாது. எனவே ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறைக்கு விடப்பட்டுள்ளது. அதன் பின்னர் வருகிற 20-ந்தேதி முதல் மஞ்சள் மார்க்கெட் வழக்கம்போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து இருக்க காரணம் ஒருபுறம் டாஸ்மாக், மறுபுறம் போதை பொருட்கள் நடமாட்டம்.
- சட்டம் ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் ஒன்று தான்.
ஈரோடு:
ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், புதிய கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் ஜி.கே.வாசன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் முக்கிய பிரச்சனையாக அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்த பிரச்சனை உள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான பெற்றோர்கள், மாணவிகள் அச்சத்தில் இருப்பது தான் உண்மை நிலை.
குற்றவாளிக்கு யார் பின்பலமாக உள்ளார்கள். அரசியல் பின்புலம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் யார் அந்த சார் என்பதை தெளிவுப்படுத்தினால் தான் மக்கள் அரசை நம்புவார்கள். குற்றவாளியை விரைவில் விசாரித்து தண்டனையை விரைந்து வழங்க வேண்டும்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது தான். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து இருக்க காரணம் ஒருபுறம் டாஸ்மாக், மறுபுறம் போதை பொருட்கள் நடமாட்டம். இதனை கட்டுப்படுத்த, நிறுத்த முடியமால், முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் தமிழக அரசு செயல்படுவது தமிழக மக்களுக்கு தலைக்குனிவு.
பாலியல் வழக்குகளில் உண்மையான குற்றவாளி என கண்டறியப்பட்டால் தூக்கு தண்டனை வழங்குவதில் தவறில்லை. விசாரணை நம்பிக்கைக்குரிய விசாரணையாக நடைபெற வேண்டும் என்றால் கடந்த மாதம் 23-ம் தேதி நிகழ்ந்த சம்பவத்தில் தொடர்ந்து கடந்த 15 நாட்களாக திகில் சினிமா போல ஊடகங்களில் செய்தி வருவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து முதலமைச்சர் நேரடியாக பதில் கூறாதது உண்மையில் மகளிருக்கு போதுமான மரியாதை கொடுக்கவில்லை என்பது தான் அர்த்தம். தி.மு.க .கூட்டணியில் உள்ள தோழமை கட்சி கூட நேரடியாக சம்பவத்தை விமர்சனம் செய்து போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்து எமர்ஜென்சி போல நிலை ஏற்படுகிறது என்று தோழமை கட்சி கூறுவது அரசு நிர்வாக சீர்கேடுக்கு எடுத்துக்காட்டு.
அண்ணா பல்கலைக்கழகம் மாணவி விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை. பெற்றோர், மாணவிக்கு எதிர்கட்சிகள் துணை நிற்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்பாடுகள் உள்ளது. அதே நேரத்தில் நீதிமன்றம் ஆணையை ஏற்கிறோம். அமைச்சர் துரைமுருகன் மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை சட்டத்தின் படி தான் நடக்கின்றது.
சட்டம் ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் ஒன்று தான். அமலாக்கத்துறை சோதனை குறித்து தி.மு.க செய்தி தொடர்பாளர்கள் விளக்கம் கொடுக்க வேண்டும். மாணவி விவகாரத்தில் நாள்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வருகிறது. அதனால் பெற்றோர், மாணவிகளுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்றால் சி.பி.ஐ விசாரணைக்கு போகவேண்டும்.
இந்த விவாகரத்தில் தமிழக அரசு எதையோ மறைக்க நினைப்பதாக மக்கள் நினைக்கின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தவுடன் கூட்டணி சார்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும். தேர்தலுக்கு 6 மாதம் முன்பு தான் அனைத்து கட்சிகளும் தங்களை பலப்படுத்தி கொள்ள நினைக்கும்.
அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் கட்சி பணிகளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, உறுப்பினர்கள் அதிகரிப்பு பணிகளை செய்து வருகிறது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி ஆகியவற்றுடன் ஊராட்சி பகுதிகளை இணைக்கும் சட்ட ஆணையை ரத்து செய்ய வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் கேன்சர் நோயாளிகள் அதிகமாக இருப்பதால் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பொது சுத்தகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
கோவை இருகூர் முதல் முத்தூர் வரை கேஸ் பைப்லைன் விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக அமைக்கப்படும் குழாய்களை சாலையோரமாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து பட்டாசு ஆலைகள் வெடி விபத்து நிகழ்ந்து வருகிறது. இதற்கு அரசு சரியான நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இடைத்தேர்தலில் ஆளும் கட்சி ரூ.2 ஆயிரம், 3 ஆயிரம் கொடுக்க நினைக்கும் நிலையில் பேரிடர் மற்றும் பொங்கல் தொகுப்பு என்றால் நிவாரண தொகை வழங்குவதில்லை. அதனால் பொங்கல் சிறப்பு தொகுப்பில் பணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோபிசெட்டிபாளையம் பகுதியில் 90 சதவீதம் அதாவது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
- கடையடைப்பு போராட்டம் காரணமாக கோடிக்கணக்கான வர்த்தகம் முடங்கியது.
நகராட்சியில் டிரேடு லைசென்ஸ் என்ற பெயரில் வருடம் தோறும் ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விதித்துள்ள கட்டணத்தை குறைக்க வேண்டும். கடை மற்றும் வீட்டு வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மின்சார கணக்கெடுப்பை மாதம் ஒருமுறை என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோபிசெட்டிபாளையம் ஆல் டிரேடர்ஸ் அசோசியேசன் சார்பில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கோபிசெட்டிபாளையம் பகுதியில் 90 சதவீதம் அதாவது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.பஸ் நிலையப் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

இதே போல் கடைவீதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டல்கள், மளிகை கடைகள், நகைக் கடைகள், ஜவுளி
க்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கடையடைப்பு போராட்டம் காரணமாக கோடிக்கணக்கான வர்த்தகம் முடங்கியது. இதே போல் கோபிசெட்டிபாளையத்தில் இன்று காலை முதல் மாலை வரை தியேட்டரில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
- தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.
- நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடி அருகே ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட குருபரகுண்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதேகவுடா (வயது 49) என்பவர் 2 ஏக்கரில் ராகி பயிர் செய்துள்ளார். நேற்று இரவு தோட்டத்தில் புகுந்த 4-க்கும் மேற்பட்ட யானைகள் ராகி பயிரை சேதாரம் செய்துள்ளது.
காலையில் மாதேகவுடா தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது ராகி பயிர் சேதாரம் ஆனாதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யானையால் ஒரு ஏக்கர் ராகி பயிர் சேதாரம் ஆகியுள்ளது. சேதம் அடைந்த ராகி பயிர்களுக்கு வனத்துறையினர் உரிய நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், யானைகள் தோட்டத்தில் புகாதவாரு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
யானைகள் தொடர்ந்து ராகி தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கர்நாடக மாநிலத்திலிருந்து யானை கூட்டங்கள் இடம் பெயர்ந்து தாளவாடி மற்றும் வனப்பகுதியில் முகாமிட்டு சுற்றி வருகின்றன.
எனவே தாளவாடி வனப்பகுதி செல்லும் கிராம மக்கள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வலியுறுத்தி உள்ளனர்.






