என் மலர்
ஈரோடு
- 26 அலுவலகங்களில் ஒரே நேரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிகிறது.
- வருமான வரி ஏய்ப்பு காரணமாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு பூந்துறை ரோடு செட்டிபாளையம் ஸ்டேட் வங்கி நகர் பகுதியில் என்.ஆர். மற்றும் ஆர்.சி.சி.எல். கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனம் என்.ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமானது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அரசு கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்தம் செய்துகொண்டு குடிநீர் கட்டுமான பணிகள், சாலை பணிகள், உள்கட்டமைப்பு வசதிகள், அரசு கட்டிடங்கள் என அனைத்து வகை பணிகளையும் செய்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று கோவை வருமான வரித்துறை அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் 2 கார்களில் ஈரோடு பூந்துறை ரோட்டில் உள்ள என்.ஆர். கட்டுமான நிறுவன அலுவலகத்துக்கு வந்தனர். கார்களை விட்டு இறங்கிய அதிகாரிகள் நேராக அலுவலகத்துக்குள் சென்றனர். அங்கு பணியில் இருந்தவர்கள் வெளியில் எந்த தொடர்பும் ஏற்படுத்த முடியாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் செய்தனர். பின்னர் அங்குள்ள ஆவணங்கள், கணினி பதிவுகளை சோதனை செய்தனர்.
இதுபோல் இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக சேலம், திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் 26 அலுவலகங்களில் ஒரே நேரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிகிறது. வருமான வரி ஏய்ப்பு காரணமாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து, இன்றும் 2-வதுநாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
என்.ஆர். கட்டுமான நிறுவனம் மற்றும் ஆர்.சி.சி.எல். நிறுவனத்தின் உரிமையாளர் என்.ராமலிங்கம் தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளி வார சந்தை நடைபெற்று வருகிறது.
- குளிர் காலத்துக்கான சால்வை, பெட்ஷீட், கம்பளி ரகங்களும் அதிக அளவில் விற்பனையாகின.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளான மணிக்கூண்டு ரோடு, டி.வி.எஸ். வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, என்.எம்.எஸ்.காம்பவுண்ட், காமராஜர் வீதி, பிருந்தாவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நடைபெற்று வருகிறது.
இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளி வார சந்தை நடைபெற்று வருகிறது. இந்த ஜவுளி வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு மகாராஷ்டிரா ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வெளி மாநில வியாபாரிகளும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து துணிகளை கொள்முதல் செய்வார்கள்.
இந்த நிலையில் இந்த வார ஜவுளிச்சந்தை நேற்று இரவு தொடங்கியது. கடந்த வாரங்களில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஜவுளி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தொடர்ந்து தற்போது பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒருவாரகாலமே உள்ள நிலையில், இதற்கான ஜவுளி விற்பனை இந்த வாரமும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதில் ஆண்கள், பெண்கள் குழந்தைகளுக்கான புதிய ரக ஆடைகள், ஜீன்ஸ் பேண்ட், வேட்டி, பனியன் ரகங்கள், உள்ளாடைகள் மற்றும் புடவை, சுடிதார், குர்தீஸ் உள்ளிட்ட துணி ரகங்கள் அதிக அளவில் விற்பனையாகின. மேலும், குளிர் காலத்துக்கான சால்வை, பெட்ஷீட், கம்பளி ரகங்களும் அதிக அளவில் விற்பனையாகின.
அடுத்தவாரம் வர உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த வார ஜவுளிச்சந்தையில் மொத்த மற்றும் சில்லறை விற்பனை அதிக அளவில் நடைபெற்றதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் கேரளா, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அதிகளவில் வெளி மாநில வியாபாரிகள் வந்து குவிந்ததால் விடிய விடிய ஜவுளி விற்பனை விறு விறுப்பாக நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
- கவர்னரின் இந்தச் செயல் சட்டப்பேரவையின் மாண்பை அவமதிப்பதாக கூறி தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
ஈரோடு:
இந்த ஆண்டுக்கான சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் நேற்று தொட ங்கியது. இந்த நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
சட்டமன்றத்துக்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, சட்டமன்றத்தில் முதலில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி, சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார்.
கவர்னரின் இந்தச் செயல் சட்டப்பேரவையின் மாண்பை அவமதிப்பதாக கூறி தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், தி.மு.க சார்பில் இன்று தமிழக முழுவதும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து, ஈரோடு மாநகரில் நகர், பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள், பன்னீர்செல்வம் பூங்கா, மீனாட்சி சுந்தரனார் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கெட்அவுட் ரவி எனும் ஹேஷ்டேக்குடன் "தமிழ் நாட்டில் அத்துமீறும் கவர்னர், அவரை காப்பாற்றும் அ.தி.மு.க-பா.ஜ.க. கள்ளக்கூட்டணி" எனும் வாசகங்கள் அச்சிடப்பட்டு, எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோரின் கார்டூன் படங்களுடன் எடப்பாடி பழனிசாமி-கவர்னர் ஆர்.என்.ரவி பேசிக்கொள்வது போல் போஸ்டர்கள் அதிக அளவில் ஒட்டப்பட்டுள்ளது.
- வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் ஏலத்தில் கலந்துகொண்டு மஞ்சளை வாங்கி செல்கிறார்கள்.
- வருகிற 20-ந்தேதி முதல் மஞ்சள் மார்க்கெட் வழக்கம்போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படியாக மஞ்சள் பயிரிடப்பட்டு வருகிறது. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த மஞ்சளை விற்பனைக்காக பெருந்துறை அருகே கருமாண்டிசெல்லிபாளையத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு செம்மாம்பாளையத்தில் உள்ள மஞ்சள் மார்க்கெட் மற்றும் ஈரோடு, கோபி ஆகிய வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களுக்கு கொண்டு செல்கிறார்கள்.
அங்கு ஏலம் மூலம் மஞ்சள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் ஏலத்தில் கலந்துகொண்டு மஞ்சளை வாங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு வருகிற 11-ந்தேதி முதல் 19-ந் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 11, 12-ந்தேதி மற்றும் 18, 19-ந்தேதி சனி, ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த நாட்களில் மஞ்சள் ஏலம் நடைபெறாது. எனவே ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்கு தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறைக்கு விடப்பட்டுள்ளது. அதன் பின்னர் வருகிற 20-ந்தேதி முதல் மஞ்சள் மார்க்கெட் வழக்கம்போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து இருக்க காரணம் ஒருபுறம் டாஸ்மாக், மறுபுறம் போதை பொருட்கள் நடமாட்டம்.
- சட்டம் ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் ஒன்று தான்.
ஈரோடு:
ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், புதிய கட்சி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் ஜி.கே.வாசன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் முக்கிய பிரச்சனையாக அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்த பிரச்சனை உள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான பெற்றோர்கள், மாணவிகள் அச்சத்தில் இருப்பது தான் உண்மை நிலை.
குற்றவாளிக்கு யார் பின்பலமாக உள்ளார்கள். அரசியல் பின்புலம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் யார் அந்த சார் என்பதை தெளிவுப்படுத்தினால் தான் மக்கள் அரசை நம்புவார்கள். குற்றவாளியை விரைவில் விசாரித்து தண்டனையை விரைந்து வழங்க வேண்டும்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது தான். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து இருக்க காரணம் ஒருபுறம் டாஸ்மாக், மறுபுறம் போதை பொருட்கள் நடமாட்டம். இதனை கட்டுப்படுத்த, நிறுத்த முடியமால், முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் தமிழக அரசு செயல்படுவது தமிழக மக்களுக்கு தலைக்குனிவு.
பாலியல் வழக்குகளில் உண்மையான குற்றவாளி என கண்டறியப்பட்டால் தூக்கு தண்டனை வழங்குவதில் தவறில்லை. விசாரணை நம்பிக்கைக்குரிய விசாரணையாக நடைபெற வேண்டும் என்றால் கடந்த மாதம் 23-ம் தேதி நிகழ்ந்த சம்பவத்தில் தொடர்ந்து கடந்த 15 நாட்களாக திகில் சினிமா போல ஊடகங்களில் செய்தி வருவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து முதலமைச்சர் நேரடியாக பதில் கூறாதது உண்மையில் மகளிருக்கு போதுமான மரியாதை கொடுக்கவில்லை என்பது தான் அர்த்தம். தி.மு.க .கூட்டணியில் உள்ள தோழமை கட்சி கூட நேரடியாக சம்பவத்தை விமர்சனம் செய்து போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்து எமர்ஜென்சி போல நிலை ஏற்படுகிறது என்று தோழமை கட்சி கூறுவது அரசு நிர்வாக சீர்கேடுக்கு எடுத்துக்காட்டு.
அண்ணா பல்கலைக்கழகம் மாணவி விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை. பெற்றோர், மாணவிக்கு எதிர்கட்சிகள் துணை நிற்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்பாடுகள் உள்ளது. அதே நேரத்தில் நீதிமன்றம் ஆணையை ஏற்கிறோம். அமைச்சர் துரைமுருகன் மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை சட்டத்தின் படி தான் நடக்கின்றது.
சட்டம் ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் ஒன்று தான். அமலாக்கத்துறை சோதனை குறித்து தி.மு.க செய்தி தொடர்பாளர்கள் விளக்கம் கொடுக்க வேண்டும். மாணவி விவகாரத்தில் நாள்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வருகிறது. அதனால் பெற்றோர், மாணவிகளுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்றால் சி.பி.ஐ விசாரணைக்கு போகவேண்டும்.
இந்த விவாகரத்தில் தமிழக அரசு எதையோ மறைக்க நினைப்பதாக மக்கள் நினைக்கின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தவுடன் கூட்டணி சார்பில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும். தேர்தலுக்கு 6 மாதம் முன்பு தான் அனைத்து கட்சிகளும் தங்களை பலப்படுத்தி கொள்ள நினைக்கும்.
அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் கட்சி பணிகளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, உறுப்பினர்கள் அதிகரிப்பு பணிகளை செய்து வருகிறது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி ஆகியவற்றுடன் ஊராட்சி பகுதிகளை இணைக்கும் சட்ட ஆணையை ரத்து செய்ய வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் கேன்சர் நோயாளிகள் அதிகமாக இருப்பதால் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பொது சுத்தகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
கோவை இருகூர் முதல் முத்தூர் வரை கேஸ் பைப்லைன் விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக அமைக்கப்படும் குழாய்களை சாலையோரமாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து பட்டாசு ஆலைகள் வெடி விபத்து நிகழ்ந்து வருகிறது. இதற்கு அரசு சரியான நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இடைத்தேர்தலில் ஆளும் கட்சி ரூ.2 ஆயிரம், 3 ஆயிரம் கொடுக்க நினைக்கும் நிலையில் பேரிடர் மற்றும் பொங்கல் தொகுப்பு என்றால் நிவாரண தொகை வழங்குவதில்லை. அதனால் பொங்கல் சிறப்பு தொகுப்பில் பணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோபிசெட்டிபாளையம் பகுதியில் 90 சதவீதம் அதாவது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
- கடையடைப்பு போராட்டம் காரணமாக கோடிக்கணக்கான வர்த்தகம் முடங்கியது.
நகராட்சியில் டிரேடு லைசென்ஸ் என்ற பெயரில் வருடம் தோறும் ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விதித்துள்ள கட்டணத்தை குறைக்க வேண்டும். கடை மற்றும் வீட்டு வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மின்சார கணக்கெடுப்பை மாதம் ஒருமுறை என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோபிசெட்டிபாளையம் ஆல் டிரேடர்ஸ் அசோசியேசன் சார்பில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கோபிசெட்டிபாளையம் பகுதியில் 90 சதவீதம் அதாவது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.பஸ் நிலையப் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

இதே போல் கடைவீதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டல்கள், மளிகை கடைகள், நகைக் கடைகள், ஜவுளி
க்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கடையடைப்பு போராட்டம் காரணமாக கோடிக்கணக்கான வர்த்தகம் முடங்கியது. இதே போல் கோபிசெட்டிபாளையத்தில் இன்று காலை முதல் மாலை வரை தியேட்டரில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
- தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.
- நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடி அருகே ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட குருபரகுண்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதேகவுடா (வயது 49) என்பவர் 2 ஏக்கரில் ராகி பயிர் செய்துள்ளார். நேற்று இரவு தோட்டத்தில் புகுந்த 4-க்கும் மேற்பட்ட யானைகள் ராகி பயிரை சேதாரம் செய்துள்ளது.
காலையில் மாதேகவுடா தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது ராகி பயிர் சேதாரம் ஆனாதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யானையால் ஒரு ஏக்கர் ராகி பயிர் சேதாரம் ஆகியுள்ளது. சேதம் அடைந்த ராகி பயிர்களுக்கு வனத்துறையினர் உரிய நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், யானைகள் தோட்டத்தில் புகாதவாரு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
யானைகள் தொடர்ந்து ராகி தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கர்நாடக மாநிலத்திலிருந்து யானை கூட்டங்கள் இடம் பெயர்ந்து தாளவாடி மற்றும் வனப்பகுதியில் முகாமிட்டு சுற்றி வருகின்றன.
எனவே தாளவாடி வனப்பகுதி செல்லும் கிராம மக்கள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வலியுறுத்தி உள்ளனர்.
- புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- மாறுவேடத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
ஈரோடு:
நாளை 2025 ஆம் ஆண்டு பிறக்க உள்ளது. இப்போதிலிருந்தே புத்தாண்டு கொண்டாட்டம் களைக்கட்ட தொடங்கியுள்ளது. பெரிய பெரிய ஓட்டல், ரிச்சார்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் பொதுமக்கள் ஒன்று கூடி புத்தாண்டின் போது ஒருவர் ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வார்கள். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை புத்தாண்டின்போது ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இளைஞர்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஒன்று திரண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வார்கள். சிலர் கேட்கலை வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். வாகன ஓட்டிகள் மது அருந்துவிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவதால் சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது.
இதை தடுக்க போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த முறை புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது போலீஸ் தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்திலுள்ள மாநில மாவட்ட சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தவிர மாவட்டத்தின் முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் 80 இடங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட முழுவதும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மாறுவேடத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். குறிப்பாக புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பெண்களை கிண்டல் செய்வது, அவர்களுக்கு தொந்தரவு செய்வது போன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கூறும்போது,
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்தாலோ, புத்தாண்டு வாழ்த்து சொல்வதாக கூறி மோட்டார் சைக்கிள்களை தாறுமாறாக ஓட்டி வந்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்து அவர்கள் மீது நடவடிக்கை பாயும். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நள்ளிரவு ஒரு மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு மக்கள் கலைந்து செல்ல வேண்டும் என்றார்.
- பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளன.
- ஞானசேகரன் தவிர மேலும் சிலருக்கு இந்த விவாகரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கோபி:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை, கோட்டூர் புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் அந்த நபர் பாலியல் பலாத்காரத்தை தனது செல்போனில் படம் பிடித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே ஞானசேகரன் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யும் போது சார் என்று அழைத்து யாரிடமோ பேசியது தெரிய வந்துள்ளது.
எனவே ஞானசேகரன் தவிர மேலும் சிலருக்கு இந்த விவாகரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளன. யார் அந்த சார் என்ற வாசகம் சமூக வலை தளங்களில் வைரலானது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மட்டும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அ.தி.மு.க புறநகர் மேற்கு மாவட்டம், தகவல் தொழில்நுட்பம் பிரிவு சார்பில் பரபரப்பான போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிரு ந்தன.
அந்த போஸ்டரில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார்? என்ற வாசகம் கேள்விக்குறியுடன் இடம் பெற்றிருந்தது. மேலும் அதில் சேவ் அவர் டக்டர்ஸ் (நமது குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்) என்ற வாசகத்துடன் எடப்பாடி பழனிச்சாமி படமும் அந்த போஸ்டரில் ஒட்டப்பட்டி ருந்தது.
இதைப்போல் கவுந்தப்பாடி, பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்ததால் பரபரப்பு நிலவியது.
- கரும்புகள் அதிக அளவில் லாரிகளில் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
- யானை ஒன்று காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதி வழியாக தமிழக-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இந்த சாலை வழியாக இரு மாநிலங்களுக்கு இடையே வாகன போக்கு வரத்து நடைபெற்று வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக தாளவாடியில் கொள்முதல் செய்யப்படும் கரும்புகள் அதிக அளவில் லாரிகளில் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் வரும் வாகனங்களை வழிமறித்து கரும்பு துண்டுகளை சாப்பிடு வதை வழக்கமாக வைத்துள்ளது. இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடியது.
அந்த வழியாக வந்த கார், அரசு பஸ், லாரிகளை வழி மறித்து கரும்பு கட்டு உள்ளதா என பார்த்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து அந்த யானை சாலையோரம் நடமாடிக் கொண்டிருந்தது. இதனால் அந்தப் பகுதியை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வாகனங்களை சற்று தொலைவிலேயே நிறுத்தினர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் சாலையில் நடமாடிய காட்டு யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே போக்குவரத்து சீரானது. இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு கட்டுகளுக்காக வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் வாகனங்களை தற்போது வழிமறித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் வனப்பகுதி சாலையில் வாகனத்தை மிக வேகத்தில் இயக்க வேண்டும் அதிக ஒலி எழுப்பும் ஏர்கா ரன்களை ஒழிக்க கூடாது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டனர்.
- கட்டிடத்தின் உள்ளே சென்று ஏணி எடுத்துவர சென்றுள்ளார். அப்போது கட்டிடத்தின் சுவர் கூலிதொழிலாளியின் மீது விழுந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றியத்துக்கு உட்பட்டது கேர்மாளம் ஊராட்சி. இந்த ஊராட்சி அலுவலகம் கட்டிடம் மிகவும் பழுதடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது.
இந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. புதிய கட்டிடம் கட்ட ஒப்பந்ததாரர் பழுதடைந்த அலுவலக கட்டிடத்தை ஆட்கள் மூலம் இடித்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது கூலி தொழிலாளி கடம்பூர் மாக்கம் பாளையத்தைச் சேர்ந்த சிக்குமாதன் (வயது 45) என்பவர் கட்டிடத்தின் உள்ளே சென்று ஏணி எடுத்துவர சென்றுள்ளார். அப்போது கட்டிடத்தின் சுவர் கூலிதொழிலாளியின் மீது விழுந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த சிக்குமாதனை அங்கிருந்தவர்கள் கேர்மாளம் அரசு துணை சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் கூலிதொழிலாளி சிக்குமாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடம்பூர் வனப்பகுதியில் குன்றி சாலை மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது.
- குன்றி பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, கரடி, மான் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
கடம்பூர் வனப்பகுதியில் குன்றி சாலை மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது. கடம்பூர் வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் அவ்வப்போது கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் குன்றி செல்லும் வழியில் கடந்த 2 நாட்களாக ஒற்றை யானை சாலையில் உலா வந்தபடி வாகனங்களை துரத்தி வருகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து உள்ளனர். யானை பார்ப்பதற்கு மிகவும் பெரிய தோற்றத்தில் பெரிய தந்தங்களுடன் இருப்பதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தற்போது யானைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக திம்பம், ஆசனூர், குன்றி போன்ற வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக உணவு ஏதாவது உள்ளதா என காலையில் வரும் வாகனங்களை நிறுத்தி பார்த்து வருகிறது.
தற்போது குன்றி சாலையில் அடர்ந்த வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று கடந்த 2 நாட்களுக்கும் மேலாக அந்தப் பகுதியில் முகாமிட்டு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. எனவே குன்றி பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் வாகனங்களை எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் நிறுத்த வேண்டாம் என்றனர்.
இந்நிலையில் சாலை ஓரமாக சுற்றி வரும் ஒற்றை யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






