என் மலர்tooltip icon

    ஈரோடு

    • இன்று 3-வது நாளாக தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
    • குடோன்களில் ரூ.300 கோடி மதிப்பிலான சரக்குகள் தேங்கி கிடக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு பார்க் ரோடு, மூலப்பட்டறை குப்பை காடு போன்ற பகுதிகளில் சரக்கு லாரி புக்கிங் மற்றும் டெலிவரி குடோன், ரெகுலர் லாரி சர்வீஸ் போன்ற 450-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.

    இந்த நிறுவனங்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பொருட்களை ஏற்றி, இறக்கும் வேலை செய்து வருகிறார்கள்.

    புக்கிங் அலுவலக மூலம் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் ஜவுளி, மஞ்சள், விளை பொருட்கள், மாட்டுத்தீவனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசி யேசனுடன் இணைந்து அனைத்து தொழிற்சங்கங்களும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு, பிற சலுகைகள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப் படவில்லை. தற்போது ஒரு டன் லோடு ஏற்ற ரூ.120 தருகின்றனர்.

    இத்துடன் சேர்த்து 41 சதவீத கூலி உயர்வு கேட்டு தொழிற்சங்கத்தினர் போராடி வருகின்றனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் சுமுகமான முடிவு ஏற்படவில்லை.

    இதனைத்தொடர்ந்து கடந்த 13-ந் தேதி முதல் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆயிரம் பேர் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று 3-வது நாளாக தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் அனைத்து தொழில் சங்கத்தினர் ஈரோடு ஸ்டார் தியேட்டர் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சி.ஐ.டி.யு. சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தங்கவேல் தர்ணா போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

    மத்திய சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.எஸ்.தென்னரசு, டி.பி.டி.எஸ். தலைவர் பெரியார் நகர் மனோகரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினர்.

    ஈரோடு மாவட்ட சுமைதூக்குவோர் மத்திய சங்க தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் மாதையன், பாட்டாளி தொழிற்சங்கம் எஸ்.ஆர்.ராஜு, பொதுத்தொழிலாளர் மத்திய சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுகம், கவுன்சில் செயலாளர் கோபால் உள்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சுமை தூக்கும் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் 3-வது நாளாக நீடித்து வருவதால் ஈரோடு மாநகரில் உள்ள குடோன்களில் ரூ.300 கோடி மதிப்பிலான சரக்குகள் தேங்கி கிடக்கிறது. 

    • பக்தர்கள் பரிகார பூஜைகள் செய்திட தற்காலிக இரும்பு சீட் செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • இந்தாண்டு ஆடி முதல் நாள் மற்றும் ஆடி கடைசி நாள் என 2 நாட்களில் அமாவாசை வருகிறது.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக கூடு துறை சங்க மேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இந்தக் கோவிலில் பின்பகுதியில் இரட்டை விநாயக சன்னதி படித்துறை யில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார தலம், சுற்றுலா தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், எள்ளும் தண்ணீர் விடுதல், பிண்டம் விடுதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து காவிரி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

    இதனால் பவானி கூடுதுறையில் எப்போதும் பக்தர்களின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த நிலையில் வரும் 17-ந் தேதி (திங்கட்கிழமை) ஆடி மாதம் பிறக்கிறது. மேலும் அன்று ஆடி அமா வாசை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இதனால் பவானி கூடுதுறைக்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் என ஆயிரக்கணக்கான வர்கள் வந்து பரிகார பூஜைகள் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இதனை தொடர்ந்து சங்க மேஸ்வரர் கோவில் நிர்வாக த்தின் சார்பில் கோவில் பின் பகுதியில் பக்தர்கள் பரிகார பூஜைகள் செய்திட தற்காலிக இரும்பு சீட்டினால் ஆன செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அதேபோல் கோவிலின் பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தி பவானி போலீ சார் மூலம் பாதுகாப்பு பணிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்தாண்டு ஆடி முதல் நாள் மற்றும் ஆடி கடைசி நாள் என 2 நாட்களில் அமாவாசை வருகிறது.

    இதனால் தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு 2 அமாவாசை தினங்களிலும் பரிகார பூஜைகள் செய்து வழிபட உகந்தது என புரோகிதர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனால் வழக்கத்தை விட கூட்டம் அதிகளவில் வர வாய்ப்புள்ளது. இதையொட்டி கோவில் வளாகம் மற்றும் கூடுதுறை புனித நீராடும் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒரு கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
    • 5 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    பவானி:

    பவானி அருகில் உள்ள ஜம்பை, கருக்கு பாளையம் பகுதியில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது ஜம்பையில் இருந்து கருக்கு பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒரு கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அதில் கோபி சிறுவலூர் பகுதியை சேர்ந்த ரகுபதி (வயது 38), கவுந்தப்பாடி பி.மேட்டுப்பாளையம் கோகுல்நாத் (32), பவானி தொட்டிபாளையம் செந்தில்குமார் (43), புன்னம் பிரகாஷ், மங்கலேஷ் என 5 பேர் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.500 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • தக்காளி விலையை தொடர்ந்து மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.
    • இதனால் மக்கள் கூட்டமின்றி ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

    ஈரோடு:

     ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த மார்க்கெட்டுக்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு தக்காளி விலை அதிகரித்து காணப்படுகிறது. அதிக பட்சமாக ஈரோடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ. 130 வரை விற்பனையானது.

    இதே போல் பல்ேவறு இடங்களில் மழை பெய்ததால் காய்கறி உற்பத்தியும் பாதிக்கப்பட்டு காய்கறி வரத்தும் குறைந்தது.

    இதனால் தக்காளி விலையை தொடர்ந்து மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. மார்க்கெட்டுகளில் கீரைகள் மட்டுமே விலை குறைந்து காணப்படுகிறது.

    தக்காளி மற்றும் காய்கறிகள் விலை ஏற்றம் காரணமாக நடுத்தர, ஏழை மக்கள் காய்கறி வாங்குவதை தவிர்த்து விட்டனர். இதனால் இன்று மக்கள் கூட்டமின்றி ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

    இது குறித்து வியாபாரிகள் கூறும் போது, வரத்து குறைந்து காணப்படுவதால் விலை வாசி அதிகரித்து காணப்படுகிறது. இன்னும் சில நாட்களில் காய்கறி வரத்து அதிகரித்து விலை குறைந்தால் தான் வியாபாரம் வழக்கம் போல் இருக்கும் என்றனர்.

    • ஈரோடு மாவட்டத்திலும் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் ஒரு கிலோ தக்காளி சில்லரை விற்பனையில் விண்ணைத்தொடும் அளவுக்கு ரூ.130 வரை விற்கப்பட்டு வருகிறது.

    இதனால் பொதுமக்கள் தக்காளியின் பயன்பாடுகளை குறைத்து விட்டனர். ஈரோடு மாவட்டத்திலும் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று காமராஜரின் 121-வது பிறந்த நாள் மற்றும் திருமாவளவனின் தந்தை தொல்காப்பியரின் நினைவு நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஜாபர்அலி தலைமையில் கட்சியினர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அதைத்தொடர்ந்து மற்ற கட்சியினரும் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களுக்கும், அங்கிருந்த பெண்களுக்கும் இனிப்புக்கு பதிலாக தக்காளி வழங்கினர்.

    இதை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். தக்காளி விலை ஏற்றத்தை பொதுமக்கள் உணரும் வகையில் பொதுமக்களுக்கு தக்காளி வழங்கப்பட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்தனர்.

    • கல்லாங்காடுபாளையம் பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் இன்று சாலை மறியல் செய்தனர்.
    • இதனால் கோபி-கோவை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு பகுதியான கல்லாங்காடு பாளையம் பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் இன்று சாலை மறியல் செய்தனர்.

    இது குறித்து அப்பகுதி பொது மக்களிடம் கேட்டபோது கடந்த 20 நாட்களுக்கு மேலாக எங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யவில்லை. அப்படியே தண்ணீர் வந்தால் மிகவும் குறைந்த அளவே வருகிறது.

    பலமுறை அதிகாரி களிடம் முறை யிட்டும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதனால் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறினர்.

    சாலை மறியல் பற்றி தெரிந்ததும் சம்பவ இடத்திற்கு நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தீபா தமிழ்செல்வன் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அதில் இன்று மதியத்திற்குள் குடிநீர் வினியோகம் சரி செய்து வழங்கப்படும் என உறுதி கூறியதன் பெயரில் அரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் கோபி-கோவை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • த.மா.கா. சார்பில் இன்று மாலை காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
    • பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தலைமை தாங்குகிறார்.

    ஈரோடு:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு திண்டல் அடுத்த வேளாளர் மருத்துவமனை வளாகத்தில் பிரம்மாண்ட முறையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மாலை காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தலைமை தாங்குகிறார்.

    பொதுக்கூட்டத்திற்காக வேளாளர் மருத்துவமனை வளாகத்தில் பிரம்மாண்டமாக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. த.மா.கா. கட்சி கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

    பொதுக்கூட்டத்தையொட்டி இளைஞர் அணி சார்பில் காமராஜர் ஜோதி விருதுநகரில் இருந்தும், மாணவரணி சார்பில் மூப்பனார் ஜோதி தஞ்சையில் இருந்தும் கொண்டு வரப்படுகிறது. அதனை ஜி.கே.வாசன் எம்.பி. பெற்றுக்கொள்கிறார்.

    • சுபாஷ் சந்திரபோஸ் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இச்சம்பவம் தொடர்பாக அவரது தந்தை கதிர்வேல் சித்தோடு போலீசில் புகார் செய்தார்.

    பவானி:

    சேலம் மாவட்டம் மேட்டூர் புங்கம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த வர் கதிர்வேல். இவரது மகன் சுபாஷ் சந்திர போஸ் (வயது 28). நடன பயிற்சியாளரான இவர் தற்போது சித்தோடு பகுதியில் உள்ள இந்திரா நகரில் வசித்து வருகிறார்.

    கொளத்தூர் வால்குறிச்சி பகுதியைச் சேர்ந்த காவ்யா என்பவரை காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    கடந்தாண்டு காவியா வெளிநாடு சென்று வந்ததிலிருந்து கணவன், மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவ்வ ப்போது சுபாஷ் சந்திர போஸ் நான் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி வந்துள்ளார்.

    இந்நிலையில் காவியா மீண்டும் வெளிநாடு செல்வ தாக தெரி வித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுபாஷ் சந்திரபோஸ் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பின்னர் அவரின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக அவரது தந்தை கதிர்வேல் சித்தோடு போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மாத தொடக்கத்தில் ரூ.8 ஆயிரத்து 500க்கு விற்பனையானது.
    • விலை உயர்வால் இருப்பு வைத்துள்ள மஞ்சள் இனி வரும் நாட்களில் விற்பனைக்கு வரும்.

    ஈரோடு:

    தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படியான மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. இதனால் ஈரோடு மஞ்சள் நகரம் என்று அழைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 4 இடங்களில் மஞ்சள் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது.

    கடந்த மாதம் ஈரோடு சந்தையில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ. 7 ஆயிரத்து 500 வரை விற்பனையானது. இதனிடையே மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வடமாநிலங்களில் அதிக மழை பெய்ததன் காரணமாக மஞ்சள் சாகுபடி பாதிக்கப்பட்டு தரம் குறைந்ததோடு, விலையும் குறைந்தது. இதன் காரணமாக வியாபாரிகளுக்கும், நிறுவனங்களுக்கும் தரமான மஞ்சள் கிடைக்கவில்லை.

    ஈரோடு மற்றும் சேலம் பகுதிகளில் விளையும் மஞ்சள் தரமாக இருப்பதால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் ரூ.8 ஆயிரத்து 500க்கு விற்பனையான ஒரு குவிண்டால் மஞ்சள் மேலும் விலை உயர்ந்து வெள்ளிக்கிழமை ரூ.10 ஆயிரத்து 500க்கு விற்பனை ஆனது.

    பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 568 முதல் ரூ.9 ஆயிரத்து 919 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.7 ஆயிரத்து 236 முதல் ரூ.9 ஆயிரத்து 779 வரைக்கும் விற்பனை ஆனது. இங்கு 962 மஞ்சள் மூட்டைகள் கொண்டு வரப்பட்டதில் 909 மூட்டைகள் ஏலம் போனது.

    ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.7 ஆயித்து 550 முதல், ரூ.10 ஆயிரத்து 500 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.7 ஆயிரத்து 119 முதல் ரூ.9 ஆயிரத்து 980 வரையும் ஏலம் போனது. இங்கு 1,246 மஞ்சள் மூட்டைகளில் 1,067 மூட்டைகள் ஏலம் போனது.

    ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரத்து 400 வரைக்கும், கிழங்கு மஞ்சள் ரூ.6 ஆயிரத்து 789 முதல் ரூ.9 ஆயிரத்து 999 வரையும் விற்பனை ஆனது. இங்கு கொண்டு வரப்பட்ட 3 ஆயிரத்து 508 மஞ்சள் மூட்டைகளில் 1,482 மூட்டைகள் ஏலம் போனது.

    கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 569 முதல் ரூ.9 ஆயிரத்து 459 வரைக்கும், கிழங்கு மஞ்சள் ரூ.8 ஆயிரத்து 529 முதல், ரூ.9 ஆயிரத்து 499 வரைக்கும் விற்பனையானது. இங்கு 182 மூட்டைகள் மஞ்சளில் 88 மூட்டைகள் ஏலம் போனது.

    கடந்த 2011-ம் ஆண்டு மஞ்சள் விலை குவிண்டால் ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் விற்பனையானது. அதன்பிறகு 12 ஆண்டுகளில் சராசரியாக குவிண்டால் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை மட்டும் விற்பனையானது. மராட்டியம், தெலுங்கானா மாநிலங்களில் சாகுபடி பரப்பு அதிகரித்து, தரத்திலும் ஈரோடு மஞ்சளோடு போட்டிபோட்டதால் மஞ்சள் விலை கடந்த 12 ஆண்டுகளாக உயரவில்லை. இந்த ஆண்டு மராட்டிய மாநிலத்தில் இருந்து தரமான மஞ்சள் சந்தைக்கு வராததால் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 500 வரை உயர்ந்துள்ளது.

    மஞ்சள் விலை உயராததால் ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 10 ஆண்டுகளாக இருப்பு வைத்துள்ளனர். விலை உயர்வால் இருப்பு வைத்துள்ள மஞ்சள் இனி வரும் நாட்களில் விற்பனைக்கு வரும். இருப்பினும் தரத்தில் வேறுபாடு இருக்கும் என்பதால் புதிய மஞ்சளுக்கு கிடைக்கும் விலை பழைய மஞ்சளுக்கு கிடைக்காது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • வனத்துறையினர் கால் தடங்களை ஆய்வு செய்து சிறுத்தை வந்துள்ளதை உறுதி செய்தனர்.
    • தோட்டத்தில் சிறுத்தையை கண்காணிக்க 3 இடங்களில் கண்காணிப்பு கேமிராவை பொருத்தினர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொங்கர்பாளையம் வெள்ளக்கரடு தோட்டம் பகுதியில் நஞ்சப்பன் (51) என்பவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் அவர் 4 ஆடுகள் மற்றும் 5 மாடுகளை வளர்த்தும் வருகிறார்.

    இவரது விவசாய தோட்டத்திற்கு அதிகாலை சுமார் 3 மணியளவில் வந்த சிறுத்தை அங்கு கட்டி வைக்கப்பட்டு இருந்த ஆடு ஒன்றை கடித்து கொன்று வனப்பகுதிக்குள் இழுத்து சென்றதாக நஞ்சப்பன் டி.என்.பாளையம் வனத் துறையினரிடம் தெரிவித்து உள்ளார்.

    இந்த தகவலின் பேரில் நஞ்சப்பன் தோட்டத்திற்கு வந்த வனத்துறையினர் கால் தடங்களை ஆய்வு செய்தும், ரத்த தாரை அடையாளங்களை வைத்தும் சிறுத்தை வந்துள்ளதை உறுதி செய்தனர்.

    இதனையடுத்து அவரது தோட்டத்தில் சிறுத்தையை கண்காணிக்க 3 இடங்களில் கண்காணிப்பு கேமிராவை வனத்துறையினர் பொருத்தினர்.

    இந்த தகவல் பரவியதும் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சமடைந்த நிலையில் உள்ளதால் வனத் துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு நஞ்சப்பன் வீட்டில் வளர்த்து வந்த நாய் ஒன்றை சிறுத்தை கடித்து கொன்று இழுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

    • வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது.
    • இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஈரோடு புறநகர் பகுதிகளான சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர் பகுதியில் பலத்த மழை பெய்து வந்தது. பலத்த சூறாவளி காற்றால் தாளவாடி பகுதியில் மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

    ஆனால் அதே நேரம் ஈரோடு மாநகர் பகுதியில் மழை பெய்யாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது.

    ஆனால் மாலை நேரத்தில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது.

    ஈரோடு மாநகர் பகுதியில் மாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    இதேப்போல் வரட்டுப்ப ள்ளம், பவானி, நம்பியூர் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    வரட்டுபள்ளம்-21.60, பவானி-14, ஈரோடு-9.50, நம்பியூர்-2, குண்டேரி ப்பள்ளம்-2.

    • சதாம் உசேன் தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்து கொண்டிருந்தார்.
    • அப்போது எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார்.

    ஈரோடு:

    கேரளா மாநிலம் பாலக்காடு, கன்னிமாரி, தண்ணிகூண்டு பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன் (30). இவர் ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் தங்கி டிரைவராக வேலை பார்த்து வந்தார். செம்பூத்தாம்பாளையத்தில் உள்ள நாய் பண்ணையில் நண்பருடன் தங்கி வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று சதாம் உசேன் தென்னை மரத்தில் இளநீர் பறிக்க வேண்டி மரத்தில் ஏறி இளநீர் பறித்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக தென்னை மரத்தில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் தொடை, இடுப்பு, கை போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சதாம் உசேன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×