என் மலர்
திண்டுக்கல்
- மதிய வேளையில்கூட முகப்புவிளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் செல்லும்நிலை ஏற்பட்டுள்ளது.
- வழக்கமாக டிசம்பர் மாதத்தில் இறுதியில் காணப்படும் வெப்பநிலை தற்போது நிலவி வருகிறது.
கொடைக்கானல்:
தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன் தாக்கமாக தேனி, திண்டுக்கல் மாவட்டத்திலும் 2 நாட்கள் கனமழை பெய்தது. அதன்பிறகு மழை குறைந்து விட்டுவிட்டு சாரல்மழையாக பெய்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானலில் நேற்று காலை முதலே அடர்ந்த பனிமூட்டமும், சாரல்மழையும் பெய்து வருகிறது.
இதனால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக சூரிய ஒளியே இல்லாத அளவிற்கு நகர்முழுவதும் பனிமூட்டம் நிலவி வருகிறது. மலைச்சாலையில் எதிரில் நடந்து வருபவர்களும், வாகனங்களும் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் உள்ளது. இதனால் மாலை, இரவு நேரங்களை போல மதிய வேளையில்கூட முகப்புவிளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் செல்லும்நிலை ஏற்பட்டுள்ளது.
பனிப்பொழிவால் கொடைக்கானலில் சாலையோர வியாபாரிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான கடைகள் அடைக்கப்ப்டடு வஉள்ளது. முக்கிய வீதிகளில் உள்ள கடைகளும் பகுதியளவு மட்டுமே திறந்துள்ளது. ஏரிச்சாலையில் வியாபாரிகள் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர். நகரில் சராசரி வெப்பநிலை 25 டிகிரி செல்சியசுக்கு குறைவாக உள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் இறுதியில் காணப்படும் வெப்பநிலை தற்போது நிலவி வருகிறது.
இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் அன்றாடம் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். திண்டுக்கல் நகரிலும் கடந்த 2 நாட்களாக கொடைக்கானலை போன்ற சூழலே நிலவி வருகிறது. கடும் பனிமூட்டம் மற்றும் சாரல்மழையால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
- குளிர்சீசன் என்பதால் பூங்காவில் உள்ள பூச்செடிகள் கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ளன.
- சிலுவை மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவி வருகிறது. மேலும் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே உள்ளது. பிரையண்ட் பூங்காவில் பூச்செடி நாற்றுகளை நடவும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குளிர்சீசன் என்பதால் பூங்காவில் உள்ள பூச்செடிகள் கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக டிசம்பர் மாதத்தில் சிலுவை பூக்கள் பூக்கும். அதன்படி தற்போது சிலுவை பூக்கள் பூத்து குலுங்குவது கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது.
எபிடன்ரோபியம், சீசஸ்கிராஸ் என்று தாவரவியல் பெயர் கொண்ட இந்த சிலுவை மலர்கள் குளிர்பிரதேசங்களில் மட்டும் பூக்கக்கூடியதாகும். சிகப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் பூத்துக்குலுங்கும். இந்த சிலுவை மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். செட்டியார் பூங்கா மற்றும் தனியார் தோட்டங்களிலும் நடவு செய்யப்பட்ட சிலுவை பூக்கள் பூத்து குலுங்குகிறது.
இந்த வார இறுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதனைதொடர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவர்களை வரவேற்கும் விதமாக பல்வேறு முன்னேற்பாடுகள் ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் செய்யப்பட்டு வருகின்றன.
- பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் முயற்சியில் மாநில அரசு சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
- அ.தி.மு.க இன்னும் பா.ஜ.க நிழலில்தான் உள்ளது என்பதற்கு இதுவே சான்று.
திண்டுக்கல்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
சென்னை மக்கள் வெள்ளத்தில் இருந்து மீண்டு வரும் சூழ்நிலையில் தற்போது நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்ததால் மக்கள் பெரும் துயரத்தை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் முயற்சியில் மாநில அரசு சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆனால் நிவாரணம் வழங்கவேண்டிய மத்திய அரசு முழுமையாக வழங்காமல் ஆய்வுக்குழுவை அனுப்புவதாக பாரபட்சம் காட்டுகிறது. மாநில அரசு கேட்கும் நிவாரணத்தில் பாதிஅளவு கூட மத்திய அரசு வழங்கவில்லை. கடந்த 100 வருடமாக நீர்நிலைகள், குளங்களை பாதுகாக்க தவறியதே இதுபோன்ற இயற்கை பேரழிவுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
எனவே தமிழகத்தில் இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற இயற்கை பேரிடரை சமாளிக்க சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். வருகிற 23-ந்தேதி சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழுகூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் இயற்கை பேரிடர்களை சமாளிப்பது குறித்து ஆய்வுகள் சேகரிக்கப்பட்டு அதனை அரசுக்கு வழங்க உள்ளோம்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுத்தர எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இதனை வைத்து அரசியல் செய்யும் முயற்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார். சென்னையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சிறப்பாக கையாண்டதாக மத்திய குழுவே பாராட்டி சென்றுள்ளது. அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் அண்ணாமலை பேசி வருகிறார்.

பாராளுமன்றத்தில் 2 இளைஞர்கள் உள்ளே புகுந்து கலர்புகை குண்டுகளை வீசி சென்றுள்ளனர். நாட்டின் பாதுகாப்பு மிகுந்த பகுதியான பாராளுமன்றமே கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து கேள்வி எழுப்பிய எதிர்கட்சி எம்.பிக்கள் 92 பேரை பா.ஜ.க அரசு சஸ்பெண்டு செய்துள்ளது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிக்க கோரியதற்காக எதிர்கட்சி எம்.பிக்களை சஸ்பெண்டு செய்துவிட்டு பாராளுமன்றத்தை பா.ஜ.க பொதுக்குழுபோல நடத்த முடிவு செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க தனது கடமைகளை சரிவர செய்யாததால் கடும் பாதிப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. அதனை மறைத்து எடப்பாடி பழனிச்சாமி பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு எடுத்த முடிவின்போது அதற்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க தற்போது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எந்தவித பதிலும் கூறாமல் மவுனம் காத்து வருகிறது. இவர்கள் எவ்வாறு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருப்பார்கள். அ.தி.மு.க இன்னும் பா.ஜ.க நிழலில்தான் உள்ளது என்பதற்கு இதுவே சான்று.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மதுக்கூர்ராமலிங்கம், பாண்டி, சச்சிதானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.
- நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 5 மின்கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்து விழுந்ததில் மின் வயர்கள் அறுந்தன.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மிக கனமழை கொட்டி வருகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதுடன் முக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. நகரின் மத்தியில் உள்ள நட்சத்திர ஏரியும் நிரம்பிவிட்டது.
இன்று காலை வரை கொட்டித் தீர்த்த கனமழையால் மேல்மலை கிராம சாலைகளில் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. கொடைக்கானலில் இருந்து வானியல் ஆய்வு மையத்துக்கு செல்லும் சாலையில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சாலை மன்னவனூர், பூம்பாறை ஆகிய மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் பிரதான பகுதியாகும். நிலச்சரிவு ஏற்பட்டதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. நிலச்சரிவை தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதும் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் சீரமைப்பு பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதே போல் இரவு முழுவதும் நீடித்த மழையால் மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையான அப்சர்வேட்டரி செம்மண் மேடு பகுதியில் இன்று அதிகாலை மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட நேரம் மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களால் போக்குவரத்து சீரானது.
கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, கே.சிபட்டி, குப்பம்மாள்பட்டி, ஆடலூர், பன்றிமலை, பெரியூர், பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்தே பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு, மரக்கிளைகள் விழுந்தன. இதேபோல் பெரும்பாறை அருகே உள்ள மஞ்சள்பரப்பு-மூலக்கடைஇடையே மலைப்பாதையில் மரக்கிளை முறிந்து விழுந்தது.
இதனால் அப்பகுதியில் உள்ள 5 மின்கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்து விழுந்ததில் மின் வயர்கள் அறுந்தன. இதனால் மூலக்கடை, புல்லாவெளி, மீனாட்சி ஊத்து பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா, உதவிசெயற் பொறியாளர் மாணிக்கம், அய்யம்பாளையம் உதவிமின் பொறியாளர் செல்லகாமாட்சி ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சாய்ந்து கிடந்த மின் கம்பங்களை அவர்கள் அப்புறப்படுத்தினர். அப்பகுதியில் இன்று மின் வினியோகம் சீராகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோல் ஆங்காங்கே மலைபாதையில் முறிந்து விழுந்த மரங்களை அப்பகுதி மக்களே அகற்றி வருகின்றனர். தற்போது மழை குறைந்திருந்தாலும் விட்டு விட்டு பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று கொடைக்கானல் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று மாணவ-மாணவிகள் சாரல் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர்.
- மாணவிகள் போராட்டத்தால் விடுதியை பூட்டியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- தங்களது குறைகளை மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்க உள்ளதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
சின்னாளபட்டி:
திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் காந்தி கிராமத்தை அடுத்து அம்மாபாத்துரையில் அரசு பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது.
இங்கு காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவிகள் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள அரசு, தனியார் கல்லூரி மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். கல்லூரி விடுதியில் சேர்வதற்கு எந்தவித கட்டணமும் கிடையாது என்ற போதும் மாணவிகளிடம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.
இந்நிலையில் இந்த விடுதியில் மாணவிகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என கூறி கொட்டும் மழையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாணவிகள் தெரிவிக்கையில், தற்போது இங்கு 60-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி உள்ளோம். மாணவிகளுக்கு ரேசன் அரிசியில்தான் உணவு சமைத்து வழங்கப்படுகிறது. பல நேரங்களில் சுகாதாரமற்ற முறையில் உண்பதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
குடிநீர் இல்லாததால் வெளியில் இருந்து மாணவிகள் தண்ணீர் கேன்கள் விலை கொடுத்து வாங்கி வருகிறோம். கழிவறைகள் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை. நாப்கீன்கள் வைக்கும் எந்திரம் சுகாதாரமான முறையில் இல்லை. இதுபோன்ற அடிப்படை வசதிகள் கேட்டு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமையலர், தூய்மை பணியாளர்கள், காவலாளிகள் ஆகியோர் இருந்தும் அவர்களது பணியை முறையாக செய்யவில்லை. விடுதி அதிகாரிகளிடம் கேட்டால் அரசு இலவச விடுதியில் இவ்வாறுதான் இருக்கும் என்று பொறுப்பற்ற முறையில் பதில் அளிக்கின்றனர்.
எனவே எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர். இதனிடையே மாணவிகள் போராட்டத்தால் விடுதியை பூட்டியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்பு தாங்கள் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்ததை அடுத்து விடுதி திறக்கப்பட்டது. மாணவிகள் போராட்டத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அம்பாத்துரை போலீசார் மற்றும் ஆத்தூர் தாசில்தார் வடிவேல்முருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களது குறைகளை மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்க உள்ளதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
- தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் வேறு மார்க்கத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.
- ரெயில் நிலையத்தில் பயணிகள் மிகுந்த அவதியடைந்தனர்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் நேற்று முதல் பலத்தமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வரும் ரெயில்கள் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ் காலை 2.40 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் வரும். அந்த ரெயில் இன்று காலை 3 மணிக்கு திண்டுக்கல் வந்தடைந்தது. ஆனால் 2 மணி நேரம் தாமதமாக 4.58 மணிக்குதான் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு சென்றது.
இதே போல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இரவு 2.17 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் வரும் அந்த ரெயில் 5.55 மணிக்கு வந்தது. சுமார் 3 மணி நேரம் தாமதமாக 9 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு சென்றது.
மதுரை வழித்தடத்தில் ரெயில்கள் இயக்க முடியாத நிலை உள்ளதால் பெரும்பாலான ரெயில்கள் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சிக்னல் கோளாறு மற்றும் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதன் காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் வேறு மார்க்கத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி திண்டுக்கல்லில் இருந்து மதுரை வழியாக நெல்லை, நாகர்கோவில் செல்லும் ரெயில்கள் திண்டுக்கல்லில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக இயக்கப்பட்டது. இதே போல் மும்பையில் இருந்து நாகர்கோவில் வந்த ரெயிலும் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 3 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக சென்றது. இதனால் ரெயில் நிலையத்தில் பயணிகள் மிகுந்த அவதியடைந்தனர்.
- லஞ்ச ஒழிப்புத்துறையினரின் பெரும்பாலான கேள்விகளுக்கு அங்கிட் திவாரி தெரியாது என பதிலளித்தார்.
- அங்கிட் திவாரியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை டிசம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை சூப்பிரண்டாக இருப்பவர் டாக்டர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அதிகாரியான அங்கிட் திவாரி டாக்டர் சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டு பேசினார். சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த இருப்பதாகவும், இதிலிருந்து தப்பிக்க ரூ.51 லட்சம் பணம் தரவேண்டுமென கேட்டுள்ளார்.
அதன்படி கடந்த 1-ம் தேதி திண்டுக்கல்லில் ரூ.20 லட்சம் லஞ்ச பணத்தை வாங்கியபோது போலீசார் அங்கிட் திவாரியை கையும், களவுமாக பிடித்து கைதுசெய்தனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திண்டுக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் மனுவை ஏற்றுக்கொண்டு அங்கிட் திவாரியை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.
அதன்படி, நேற்று முன்தினம் முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து அங்கிட் திவாரியிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை மேற்கொண்டனர். மதுரையில் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டபோது 2 லேப்டாப்கள் கைப்பற்றப்பட்டது. அந்த லேப்டாப்களை அங்கிட் திவாரியை வைத்து திறக்கச் செய்தனர். அதில் அமலாக்கத்துறை சோதனையின் போது யார் யாரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்பது குறித்த விபரங்கள் இருந்தன.
லஞ்ச ஒழிப்புத்துறையினரின் பெரும்பாலான கேள்விகளுக்கு அங்கிட் திவாரி தனக்கு தெரியாது என்று பதிலளித்ததுடன், சில கேள்விகளுக்கு மவுனமாக இருந்துள்ளார். இருந்தபோதும் அமலாக்கத் துறையை காரணம் காட்டி பல்வேறு நபர்களிடம் அங்கிட் திவாரி லஞ்சம் வாங்கி அதை தனது துறைசார்ந்த அதிகாரிகளுக்கு வழங்கியது தெரிந்திருப்பதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் அங்கிட் திவாரி மதுரையில் பணிக்குச் சேர்ந்துள்ளார். அப்போது பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் 3 நாள் காவல் இன்றுடன் நிறைவடைவதை முன்னிட்டு அங்கிட் திவாரியை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கிட் திவாரியின் 15 நாள் காவல் நாளையுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அவருக்கு காவல் நீட்டிப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கிட் திவாரி சார்பில் ஆஜரான வக்கீல்கள் சிறையில் அவருக்கு முதல் வகுப்பு அனுமதி வழங்கக்கோரி மனுதாக்கல் செய்தனர்.
அவர் மதுரை சிறையில் சாதாரண கைதிகளை போல அடைக்கப்பட்டிருப்பதாகவும், வருமான வரியை கட்டி வருபவர் என்பதால் அவருக்கு முதல் வகுப்பு அனுமதி வழங்க கேட்டு மனு அளித்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அங்கிட் திவாரி தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என கேட்டு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்தார். அரசுத்தரப்பு சார்பில் ஆஜரான வக்கீல்கள் இந்த வழக்கில் குற்றவியல் வக்கீல் ஆஜராக வேண்டியிருப்பதால் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் அங்கித் திவாரி திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அங்கிட் திவாரியை டிசம்பர் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. டிசம்பர் 28-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது.
- நீதிமன்றத்தில் அனுமதி பெற்றால் முதல் வகுப்பு அறை ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மதுரை மத்திய சிறையில் இருந்து அங்கிட் திவாரி பலத்த பாதுகாப்புடன் திண்டுக்கல் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ.20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது கடந்த 1ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டார்.
அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். மறுநாள் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அவருக்கு டாக்டர்கள் கவுன்சிலிங் அளித்தனர். தான் வருமானவரி செலுத்தக்கூடிய நபர் என்பதால் தனக்கு முதல் வகுப்பு அறை வேண்டும் என அவர் வைத்த கோரிக்கையை சிறைத்துறையினர் ஏற்க மறுத்துவிட்டனர்.
நீதிமன்றத்தில் அனுமதி பெற்றால் முதல் வகுப்பு அறை ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கைதிகள் வாரம் ஒருமுறை செல்போன் மூலம் தங்கள் குடும்பத்தினரிடம் பேச அனுமதி வழங்கப்படுகிறது. இந்த வசதியை பயன்படுத்தி அங்கிட் திவாரி தனது குடும்பத்தினரிடம் பேசியபோது கதறி அழுதார். அப்போது அவர்கள் அங்கிட் திவாரிக்கு ஆறுதல் கூறிச்சென்றனர்.
இதனிடையே அங்கிட் திவாரி தான் பெற்ற லஞ்ச பணத்தை தன்னுடன் பணியாற்றும் மேலும் சில அதிகாரிகளுக்கு வழங்கியதாக தெரிவித்திருந்தார். எனவே லஞ்ச பணத்தில் வேறு யாருக்கேனும் பங்கு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அங்கிட் திவாரியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கும்படி மனு அளித்திருந்தனர். அந்த மனு இன்று நீதிபதி மோகனா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக மதுரை மத்திய சிறையில் இருந்து அங்கிட் திவாரி பலத்த பாதுகாப்புடன் திண்டுக்கல் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அவரது சார்பில் வக்கீல் செல்வம் என்பவர் ஆஜரானார்.
லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வக்கீல்கள் இந்த வழக்கில் மேலும் சில முக்கிய தகவல்கள் சேகரிக்க உள்ளதால் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு அங்கிட் திவாரியின் வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி லஞ்ச ஒழிப்புத்துறையினர் கேட்ட 3 நாள் காவலை வழங்கி உத்தரவிட்டனர். இதனையடுத்து போலீசார் அவரை தங்கள் பாதுகாப்பில் அழைத்துச் சென்று விசாரணை நடத்த அழைத்துச் சென்றனர். மீண்டும் 14ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
- கேரளாவில் இருந்து வரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
- சுற்றுலாப் பயணிகள் குளுகுளு காலநிலையை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும், உலக நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்திருந்த நிலையில், தற்போது கேரளாவிலிருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர். கேரளாவில் இருந்து வரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் முக்கிய சுற்றுலாத் தலங்களான தூண்பாறை, பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் கேரள சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
கொடைக்கானலில் காலை முதல் கடும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகன ஓட்டிகள் வாகனங்களை செலுத்தி வருகின்றனர். மலைச்சாலை முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.
கடும் பனி மூட்டத்தால் சுற்றுலாத்தலங்களில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை காணமுடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தபோதும் குளுகுளு காலநிலையை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர்.
- சம்பவ இடத்துக்கு மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் டி.எஸ்.பி. துர்காதேவி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.
- 5 மாத கைக்குழந்தை கதறி அழுதது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கிழக்கு பூத்தாம்பட்டியை சேர்ந்த பெரியசாமி மனைவி மாரியம்மாள் (வயது70). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
அவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக பக்கது ஊரில் வசித்து வருகின்றனர். பெரியசாமி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மாரியம்மாள் மட்டும் தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார்.
இவரது வீட்டிற்கு அருகே வடமதுரை கொல்லப்பட்டியை சேர்ந்த ஜெகநாதன் (30), அவரது மனைவி கவுசல்யா (25) ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதிலும், 5 மாதத்திலும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
ஜெகநாதன் மற்றும் அவரது மனைவி மாரியம்மாளின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து பார்த்து வந்தனர். மேலும் கவுசல்யா மாரிம்மாள் வீட்டிலும்வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு மாரியம்மாளுடன் சேர்ந்து கவுசல்யா மற்றும் அவரது கணவர் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர். பின்னர் நள்ளிரவில் அவரை இரும்பு கம்பியால் அடித்து கொன்று விட்டு அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை திருடிக் கொண்டு தங்களது வீட்டிற்கு சென்று விட்டனர்.
அதிகாலையில் மாரியம்மாளின் வீடு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவரது மகன் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.
ராஜேந்திரன் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் டி.எஸ்.பி. துர்காதேவி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மாரியம்மாள் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பிறகு ஜெகநாதன் மற்றும் அவரது மனைவியிடம் விசாரித்ததில் தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறி உள்ளனர்.

அதன்பின்பு போலீசார் நடத்திய கிடுக்கிபிடி விசாரணையில் தாங்கள் கொலை செய்ததை ஒத்துக்கொண்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கவுசல்யாவை போலீசார் அழைத்து சென்றபோது அவரது 5 மாத கைக்குழந்தை கதறி அழுதது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், மாரியம்மாள் தனது வீட்டில் வேலை பார்த்த கவுசல்யாவை சரியாக வேலை பார்க்க வில்லை என சத்தம்போட்டு வந்துள்ளார். இது குறித்து அவர் தனது கணவரிடம் கூறவே அவரும் கோபத்தில் இருந்துள்ளார்.
நேற்று இரவு ஜெகநாதன் எப்படியும் மாரியம்மாளை கொலை செய்து விட வேண்டும் என முடிவு செய்துள்ளார். வழக்கமாக டி.வி. பார்த்து விட்டு தூங்க சென்ற மாரியம்மாளை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு வீட்டில் இருந்த ரத்த கறையை துணியால் துடைத்து அதனை வெளியில் வீசி உள்ளார். கொலையை மறைக்க அவர் கீழே தவறி விழுந்து இறந்ததுபோல காட்ட வேண்டும் என முயற்சி செய்துள்ளார். ஆனால் அது முடியாமல் போகவே இரவு மாரியம்மாளின் மகன் ராஜேந்திரனுக்கு தானே போன் செய்துள்ளார். உங்கள் அம்மாவை 4 பேர் சேர்ந்து அடித்து கொலை செய்து விட்டனர். நான் அவர்களை பிடிக்க செல்வதற்குள் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர் என்று கூறி உள்ளார். ஆனால் அவரது பேச்சில் நம்பிக்கை இல்லாமல் போலீசார் விசாரித்தபோது மாட்டிக்கொண்டனர் என தெரிவித்தனர்.
- உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- தற்கொலை முயற்சி குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள கே.புதுக்கோட்டை மொட்டணம்பட்டியை சேர்ந்தவர் ராஜா. கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் நடுப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
அதேபள்ளியில் படித்த சக்திவேல் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சக்திவேல் பிளஸ்-2 முடித்துவிட்டு தற்போது கவரிங் கடையில் வேலைபார்த்து வருகிறார். வாரவிடுமுறை நாட்களில் இவர்கள் இருவரும் வெளியே செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும்போது அவர்களது புகைப்படங்களை சக்திவேல் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.
இதைபார்த்த ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் தனது மகளை கண்டித்துள்ளனர். மேலும் இனிமேல் சக்திவேலுடன் பழகக்கூடாது என்றும் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி பிரேக் ஆயிலை குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வையம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போதிய மழை இல்லாததால் தற்போது கண்மாய் வறண்டு காணப்படுகின்றன.
- தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள விருவீடு பகுதியில் கண்மாய் பாசனம் மூலம் முருங்கை, அவரை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் உள்ள கண்மாய்களில் 58 கிராம கால்வாயில் இருந்து வரும் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்தனர்.
இங்கு போதிய மழை இல்லாததால் தற்போது கண்மாய் வறண்டு காணப்படுகின்றன. இதனால் தாங்கள் பயிரிட்ட முருங்கை, அவரை, வாழை உள்ளிட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி வாடி வருவதாக வேதனை தெரிவித்தனர்.
எனவே கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் 58 கிராம கால்வாயில் இருந்து கண்மாய்களுக்கு தண்ணீர் தேக்க வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விருவீட்டில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் முக்கிய வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.
கடையடைப்பு போராட்டம் குறித்து ஏற்கனவே விவசாயிகள் அறிவிப்பு செய்திருந்ததால் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்திருந்தனர். மேலும் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.






