என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • மணி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
    • ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்த வடமதுரை கொல்லம்பட்டியை சேர்ந்த அழகுமலை என்பவரது மகன் மணி (வயது23). டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். குடிபோதைக்கு அடிமையான மணி நேற்று இரவு கொல்லம்பட்டி பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

    அதேபோல் திண்டுக்கல் அருகே செல்லமந்தாடியைச் சேர்ந்த பிச்சைமணி என்பவரது மகன் மணிமாறன் (33). பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். குடிபழக்கத்துக்கு அடிமையானதால் மனைவி பிரிந்து சென்று விட்டார். நேற்று இரவு மதுபோதையில் அந்த பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கேசவன், தனிப்படை காவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடம் சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டம் பெற்ற மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும்.
    • நல்ல அறிவார்ந்த சமூகத்தை வளர்க்க வேண்டும்.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்கலைக் கழக துணைவேந்தர் (கூடுதல் பொறுப்பு) காமகோடி வரவேற்று பேசினார். பல்கலைக் கழக வேந்தர் அண்ணாமலை பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.

    விழாவில் 2020-21, 2021-2022, 2022-2023 ஆகிய 3 ஆண்டுகளில் இப்பல்கலைக்கழகத்தில் பயின்ற இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி பட்டங்கள் மற்றும் பட்டயம், சான்றிதழ் படித்து முடித்த 4230 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

    ஆராய்ச்சி படிப்பான பி.எச்.டி. முடித்த 175 பேருக்கும் பல்வேறு பாடங்களில் முதலிடம் பிடித்த 172 பேருக்கு தங்க பதக்கத்தையும், கணித ஆராய்ச்சிப் பணியில் அளப்பரிய சாதனை புரிந்த பல்கலைக்கழக கணிதத்துறை பேராசிரியர் பாலசுப்பிரமணியனுக்கு காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் உயரிய விருதையும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் வழங்கி பேசியதாவது:-

    60 ஆண்டுகளில் இந்தியா சிறிய ராக்கெட் தொடங்கி தற்போது சந்திரனில் கால் பதிக்கும் அளவிற்கு சாதித்துள்ளது. இந்தியாவிலேயே தயாரித்து விண்ணுக்கு அனுப்பும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

    சந்திராயன்-2-ல் ஏற்பட்ட தோல்வியிலிருந்து கற்றுக்கொண்ட பாடத்தின் அடிப்படையில் தான், தற்போது சந்திராயன்-3ன் மூலம் வெற்றி பெற்றுள்ளோம். இதன் மூலம் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது.

    சந்திராயன்-3 விண்கலத்தின் வரலாற்று வெற்றி சமூகத்தில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியது. அதன் வெற்றியால் ஏராளமானோர், குறிப்பாக எண்ணற்ற குழந்தைகள் உத்வேகம் அடைந்துள்ளனர் என்பதைக் காண முடிந்தது. இந்தியாவும் இந்தியர்களும் இவ்வளவு பெரிய செயல்களைச் செய்ய முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர்.

    இந்தியாவிலேயே முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகம் காந்திகிராம பல்கலைக்கழகம் இது கிராமங்களின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை கிராமங்களுக்கு கொண்டு செல்லும் பணியை செய்து வருகிறது. புதிய கண்டுபிடிப்புகளால் தான் வளர்ச்சியை எட்ட முடியும்.

    பட்டம் பெற்ற மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும். நல்ல அறிவார்ந்த சமூகத்தை வளர்க்க வேண்டும். கடுமையாக உழைப்பது மூலம் நாட்டிற்கு நம்மை அர்ப்பணிப்பு உள்ளவர்களாக மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பதிவாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • கடை நடத்துவது தொடர்பான முடிவுகளை கண்காணிப்புக்குழு ஆய்வு செய்து முடிவு எடுக்கும்.
    • பழனி கிரிவல பாதையில் உள்ள மடங்கள் தொடர்ந்து செயல்படலாம்.

    பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு கோரி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    இதில், பழனி கிரிவலப்பாதையில் வணிக நோக்கத்தில் எந்த நடவடிக்கைகளும் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

    மேலும், பட்டா உள்ளவர்களை அனுமதிப்பது மற்றும் கடை நடத்துவது தொடர்பான முடிவுகளை கண்காணிப்புக்குழு ஆய்வு செய்து முடிவு எடுக்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    பழனி கிரிவல பாதையில் உள்ள மடங்கள் தொடர்ந்து செயல்படலாம் எனவும் நீதிபதிகள் கூறினர்.

    ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் சோதனைச்சாவடி பணிகளுக்கு தேவஸ்தானம் கோரும் போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    பழனிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • கோவில் அதிகாரிகள், வங்கி, கோர்ட்டு அதிகாரிகள் வருவதற்காக திறந்து மூடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • ஐகோர்ட்டு உத்தரவு என்பதால் இதில் அதிகாரிகள் தலையிட முடியாது.

    பழனி:

    பழனி கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், ஆக்கிரமிப்பு கடைகளாலும் பக்தர்கள் பாதிக்கப்படுவதாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்களை அனுமதிக்க கூடாது, கோவிலை சுற்றியுள்ள வீதிகளை வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மார்ச் 8ம் தேதிக்குள் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது. அதன்படி பழனி கிரிவலப்பாதைக்கு வரும் 9 இணைப்புச்சாலைகளில் 8 சாலைகளில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு வாகனங்கள் வருவது தடுக்கப்பட்டது. கொடைக்கானலில் இருந்து வரும் வாகனங்கள் பாதையில் மட்டும் அடைப்பு ஏற்படுத்தாமல் தற்காலிக கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக கோவில் அதிகாரிகள், வங்கி, கோர்ட்டு அதிகாரிகள் வருவதற்காக திறந்து மூடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


    இந்நிலையில் கிரிவலப்பாதை அடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் ஊர்வலம் நடத்தி ஆர்.டி.ஓ.விடம் மனு அளித்தனர். ஐகோர்ட்டு உத்தரவு என்பதால் இதில் அதிகாரிகள் தலையிட முடியாது. கோர்ட்டு உத்தரவு இன்றுமுதல் நடைமுறைக்கு வந்தது. கிரிவலப்பாதை வாகனங்கள் எதுவுமின்றி வெறிச்சொடி காணப்பட்டது. 

    • கொலையாளியை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேஸ்வரனை கல்லால் குத்திய 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

    பெரும்பாறை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் லோகேஷ்வரன் (வயது 22). கூலித்தொழிலாளி. இவர். திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு அருகே மூலையாறு பகுதியில் உள்ள தார் சுடுகலவை மையத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

    லோகேஷ்வரனுடன் அந்த மையத்தில் உசிலம்பட்டி அருகே உள்ள மாதரை கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 5 பேர் அங்கு பணியில் இருந்தனர். சம்பவத்தன்று வேலை செய்து கொண்டிருந்த போது லோகேஷ்வரனுக்கும், 17 வயது சிறுவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு பணி முடிந்து அனைவரும் தங்கும் அறைக்கு சென்று விட்டனர். நள்ளிரவில் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது எழுந்த சிறுவன் தன்னிடம் தகராறு செய்த லோகேஷ்வரனின் வயிற்றில் அங்கு கிடந்த கூர்மையான கருங்கல்லை எடுத்து குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து வலி தாங்க முடியாமல் லோகேஷ்வரன் அலறினார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் எழுந்தனர். பின்னர் அவர்கள் லோகேஷ்வரனை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி லோகேஷ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து லோகேஷ்வரனின் உறவினர்கள் தேனி அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். கொலையாளியை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேஸ்வரனை கல்லால் குத்திய 17 வயது சிறுவனை கைது செய்தனர். அதன் பின்பு உறவினர்கள் உடலை பெற்றுச் சென்றனர்.

    • இன்றைய நாகரீக காலத்தில் படித்தவர்கள் இதுபோன்ற வண்டிகளில் ஏறுவதற்கு தயக்கம் காட்டுவதுண்டு.
    • குடும்பத்தை சேர்ந்தவர்கள் மாசி திருவிழாவில் எந்தவித தயக்கமும் இன்றி ஒற்றுமையுடன் மாட்டு வண்டிகளில் செல்கிறோம்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்த பொதுமக்கள் மாசி மாத சிவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் தங்களது குலதெய்வ கோவிலில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.

    இதற்காக நிலக்கோட்டையில் இருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா திடியன் மலை அடிவாரத்தில் உள்ள வாலகுருநாதன் கோவிலுக்கு பாரம்பரியமாக இரட்டை மாட்டு டயர் வண்டியில் பங்காளிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து புறப்பட்டனர்.

    நிலக்கோட்டையில் வாண வேடிக்கையுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக சாமிபெட்டி அழைப்புடன் நிலக்கோட்டை, மெயின் பஜார், அணைப்பட்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக வந்து கருப்புசாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.

    பின்னர் ஊர்வலம் தொடங்கி மாட்டு வண்டியில் கிளம்பிச் சென்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    எங்கள் முன்னோர் காலத்தில் இருந்து 7 வருடத்திற்கு ஒருமுறை மாட்டு டயர் வண்டி மூலமாக குடும்பம் குடும்பமாக அனைவரும் மாசிமகா சிவராத்திரி விழாவுக்கு செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் நாங்கள் சலங்கை கட்டிய மாட்டுடன் பாரம்பரிய முறையில் செல்கிறோம்.

    இன்றைய நாகரீக காலத்தில் படித்தவர்கள் இதுபோன்ற வண்டிகளில் ஏறுவதற்கு தயக்கம் காட்டுவதுண்டு. ஆனால் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மாசி திருவிழாவில் எந்தவித தயக்கமும் இன்றி ஒற்றுமையுடன் மாட்டு வண்டிகளில் செல்கிறோம். சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான இந்த பயணம் வருங்கால சந்ததியினருக்கும் வழிகாட்ட வேண்டும் என்றனர். இதனை வழிநெடுகிலும் பொதுமக்கள் மிகுந்த ஆச்சரித்துடன் கண்டு ரசித்தனர்.

    • கிரிவலப்பாதைகளை அடைத்ததற்கு வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
    • பழனி கிரிவீதி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், விடுதிகளில் இருப்போர் வாகனங்களில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதால் கோவில் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களை குறிவைத்து அடிவாரம், கிரிவீதி, சன்னதி வீதி உள்ளிட்ட இடங்களில் ஏராளமான நடைபாதை கடைகள் மற்றும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிக அளவில் இருந்தன.

    இதனால் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். குறிப்பாக திருவிழா காலங்களில் பால்குடம், காவடி எடுத்து வரும் பக்தர்களும், அலகு குத்திவரும் பக்தர்களும் கடும் சிரமப்பட்டனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தனர். குறிப்பாக 3 கி.மீ. தூரம் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் சிரமப்பட்டு வந்ததால் அதனை அகற்ற ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்து கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்களை அனுமதிக்கக் கூடாது என்றும், கோவிலை சுற்றியுள்ள வீதிகளை இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதையடுத்து கிரிவலப்பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கிரிவலப்பாதையில் உள்ள 9 சந்திப்புகளில் 7 இடங்களில் தனியார் வாகனங்கள் நுழைவதை தடுக்க தடுப்புகள் மற்றும் வேலிகள் அமைக்கப்பட்டது. கிரிவலப்பாதைகளை அடைத்ததற்கு வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் கோர்ட்டு உத்தரவின் படி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பழனி கிரிவீதி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், விடுதிகளில் இருப்போர் வாகனங்களில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதால் கோவில் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் அதிகாரிகள் அதனை ஏற்காமல் கிரிவலப்பாதையை அடைக்கும் முயற்சியில் உறுதியாக இருந்தனர்.

    இதனால் இன்று அடிவாரம், கிரிவீதி, சன்னதி வீதி பகுதியில் வியாபாரிகள் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தெரிவிக்கையில்,

    பக்தர்களின் வருகையால் தான் எங்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுகிறது. தற்போது பாதையை அடைத்து விட்டதால் எங்களால் வியாபாரம் செய்ய முடியவில்லை. கருத்துக்கேட்பு கூட்டம் நடத்திய போதே வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நிலை குறித்து எடுத்தரைத்தும் அதனை பரிசீலனை செய்யவில்லை. இதனால் கருப்புக்கொடியுடன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகிறோம்.

    எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். இதனால் அடிவாரம் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    • பாபாவின் மீது அதிகம் பக்தி கொண்ட சாய் முருகன் தன் வீட்டையே பாபா ஆலயமாக மாற்ற முயற்சி செய்துவந்தார்.
    • ஷீரடி பாபா ஆலயத்தில் காலடி பதித்தாலே போதும் நினைத்த காரியம் நடந்து விடுகிறது என பக்தர்கள் கூற நாமும் கேட்டறிந்தோம்.

    திண்டுக்கல் நாகல்நகர் பாரதிபுரத்தில் அமைந்துள்ளது சீரடி சாய்பாபா ஆலயம் இந்த ஆலயத்தின் நிர்வாகி சாய் முருகன் அவர்கள் சாய்பாபா மீது அளவுகடந்தபக்தி கொண்டு அவர் வீட்டின் முன்புறமாக கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு சிறிய பாபா ஆலயத்தை தன் தாய், தந்தையின் உதவியுடன் ஆலயத்தை கட்டினார். திண்டுக்கல் நகர் பகுதி மக்கள் பாபா ஆலயம் இருப்பதை அறிந்து ஆலயத்திற்கு வர தொடங்கினர்.சாய் பக்தர்கள் அனைவரும் பாபாவை வணங்கிச் செல்ல வழிவகை செய்தார். இந்த பாபாவிற்கு ஆரத்தி நிகழ்ச்சியின்போது ஏராளமான பொதுமக்கள் சாலையில் அமர்ந்து பாபாவை தரிசனம் செய்தனர். வியாழக்கிழமை தோறும் திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரத் தொடங்கினார். சாய் பக்தர்களுக்கு அருட்பிரசாதமாக சப்பாத்தி வழங்கப்பட்டது. பக்தர்களின் எண்ணிக்கை நாளடைவில் அதிகமான காரணத்தினால் சப்பாத்தி இயந்திரம் ஒன்று வாங்கப்பட்டது. அதன்பின் பக்தர்களுக்கு தாரளாமாக சப்பாத்தி அருட்பிரசாதமாக வழங்கப்பட்டது. பாபாவின் மீது அதிகம் பக்தி கொண்ட சாய் முருகன் தன் வீட்டையே பாபா ஆலயமாக மாற்ற முயற்சி செய்துவந்தார்.

     

    அவரின் முயற்சியின்போது பல கஷ்டமான பாதைகளை கடந்து.. 2019ம் ஆண்டு தான் குடியிருந்த வீட்டை ஒழுங்குபடுத்தி சீரடி பாபா ஆலயத்தை உருவாக்க தொடங்கினார் . மேற்கூறையில் ஷீரடியில் உள்ள கோபுரம் போல அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆறு அடி உயரம் கொண்ட பளிங்கி கல்லால் ஆன பாபா சிலையினை நிறுவினார்.

    அதனைத் தொடர்ந்து பாபா ஆலயத்தில் மேற்புற பகுதியில் பக்தர்கள் தியானம் செய்வதற்காக தியான மண்டபத்தையும் உருவாக்கினார்

    நமதுசீரடி சாய்பாபா ஆலயத்தில் வியாழக்கிழமை தோறும் அருட்பிரசாதமாக சப்பாத்தி வழங்கி வந்தனர் அதனை தொடர்ந்து சாய் பக்தர் சாய் முருகன் மதிய வேலை பக்தர்களுக்கு அறுசுவை உணவு அளிக்க வேண்டும் எண்ணி கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பான அன்னதானத்தை தொடங்கினார். பாபா எண்ணுவாதெல்லாம் பசி என்று யாரும் இருக்க கூடாது என எண்ணம் கொண்டவர். சாய் பக்தரான முருகன் புதிய முயற்சியாக கடந்த 2023 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் முதல் சாய் பக்தர்களுக்கு காலை வேளை தினசரி பக்தர்களின் பசியாற்ற அருட்பிரசாதமாக காலை இட்லி சுட சுட தர தொடங்கினார் . திண்டுக்கல் நாகல்நகர் பாரதி புரத்தில் அமையப்பெற்ற பாபாவின் புகழ் அதிக அளவில் பக்தர்கள் மத்தியில் வரத் தொடங்கியது. ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினர். திண்டுக்கல் நகர் மட்டுமல்லாமல் மதுரை, திருச்சி, சென்னை என பல்வேறு ஊர்களில் இருந்து திண்டுக்கல் சீரடி சாய்பாபா ஆலயம் இருப்பதை அறிந்து வர தொடங்கினர்.

    ஷீரடி பாபா ஆலயத்தில் காலடி பதித்தாலே போதும் நினைத்த காரியம் நடந்து விடுகிறது என பக்தர்கள் கூற நாமும் கேட்டறிந்தோம்.

    பாபா ஆலயத்திற்கு மனநிலை பாதிக்கபட்ட நபர்கள். அழைத்து வரப்பட்டனர் ஆலயத்திற்கு வந்து சென்றபிறகு இப்பொழுது முன்னேற்றம் அடைந்து வருவதாக பெற்றோர்கள் கூற நாம் வியந்துபோனோம்'', ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்கள் பாபாவிற்கு பாலாபிஷேகம் செய்ய கோரிக்கை வைத்தனர். பாபாவின் ஆசியை பெற்ற ஆலய நிர்வாகி சாய் முருகன் உடனடியாக பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் சாய் பக்தர்களின் திருக்கரங்களால் 5 ஆயிரம் லிட்டர் பால் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் கார்த்திகை மாதம் ஆலய முன்பாகவும் ஐம்பதாயிரம் கார்த்திகை தீபம் ஏற்றபட்டு பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வழிபட்டனர்.

     

    ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மந்திர சொல்லுக்கு ஏற்ப சாதி, மதம் பேதமின்றி ஏராளமான சாய் பக்தர்கள் ஆலயதிற்கு வர தொடங்கினர். தொடர்ந்து சாய்பாபா மீது அளவு கடந்த பக்தியினால் மீண்டும் ஒரு முயற்சியினை கையில் எடுத்தார் நிர்வாகி சாய் முருகன். ஆலயம் அருகிலேயே மாபெரும் ஒரு அன்னதானம் கூடத்தை கட்ட வேண்டும் என்று முயற்சி வீண்போகவில்லை வெற்றி பெற்று ஆலயத்திற்கு அருகிலேயே சாய் பக்தரின் ஒருவரின் உதவியோடு காலி இடம் வாங்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து சிறப்பு பூமி பூஜை போடப்பட்டு பக்தர்களின் உதவியோடு அன்னதான கூட கட்டுப்பணியை தொடங்கினார்கள் இந்த கட்டுமான பணிக்கு ஆலயத்துக்கு வருகின்ற சாய் பக்தர்கள் ஏராளமானோர் கட்டிடத்திற்கு தேவையான மணல், ஜல்லி, இரும்பு கம்பி, சிமெண்ட் என கட்டிடத்தின் மூலப் பொருட்களை வாங்குவதற்காக ஒவ்வொரு பக்தர்களும் தங்கள் இயன்றதை செய்தனர். .இந்த அன்னதான கூடம் கட்டி முடிக்கப்பட்டு வருகின்ற (28.03. 24) வியாழக்கிழமை திறப்பு விழா காண உள்ளது. அன்று முதலே தினசரி காலை இட்லி, பொங்கல், மதியம் வடை, பாயசத்துடன் உணவு, இரவு சப்பாத்தி, கோதுமை தோசை குருமா, சட்னி என மூன்று வேலையும் சாய் பக்தர்களுக்கு உணவளிக்க போவதாக திட்டமிட்டு உள்ளேன் என கோயில் நிர்வாகியும் சாய் பக்தருமான சாய் முருகன் தெரிவித்தார்.

    • குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்கவே அவர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர்.
    • அங்கன்வாடி பணியாளரிடம் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை யூனியனுக்கு உட்பட்ட அய்யலூர் அருகே உள்ள களர்பட்டி 7-வது வார்டு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் சுமார் 70 மாணவ-மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் காலை உணவு திட்டத்திற்கு மாணவிகளை காலை 8 மணிக்கு வரச் சொல்வதாகவும், தாமதமாக வரும் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க மறுப்பதாகவும் புகார்கள் வந்தது. இதுகுறித்து குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்கவே அவர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    இங்கு காலை உணவு திட்டத்தின் கீழ் அமைப்பாளராக பணியாற்றி வரும் அம்பிகா என்பவர் பள்ளிக்கு வரும் குழந்தைகளிடம் தண்ணீர் குடத்தில் எடுத்து வரச்சொல்வதாகவும், தாமதமாக வந்தால் உணவு கிடையாது என்றும் கூறியதாக குழந்தைகள் தெரிவித்தனர்.

    கடந்த சில நாட்களாகவே இப்பிரச்சினை அடுத்தடுத்து எழுந்த நிலையில் இது குறித்து அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்த முடிவு செய்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் தலைமையில் வடமதுரை ஊட்டச்சத்து அங்கன்வாடி மேலாளர்கள், திண்டுக்கல் மண்டல துணைத் திட்ட தாசில்தார் ஆகியோர் நேரடியாக பள்ளி மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அங்கன்வாடி பணியாளரிடம் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது. தாமதமாக வந்தாலும் உணவு வழங்க வேண்டும் என்று எச்சரித்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • முதற்கட்டப் பயணம் கடந்த ஜன.28ம் தேதி சென்னை கந்தக்கோட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
    • அறுபடை வீடு ஆன்மீகப் பயணத்தின் 2ம் கட்டப் பயணம் இன்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இருந்து தொடங்கியது.

    பழனி:

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகியவற்றிற்கு ஆன்மிகப் பயணம் சென்று வருபவர்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கப்படும் என தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

    இதேபோல் தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 200 பக்தர்கள் வீதம் ஆண்டிற்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்து வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இதன் முதற்கட்டப் பயணம் கடந்த ஜன.28ம் தேதி சென்னை கந்தக்கோட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

    இதில் பங்கேற்ற 207 மூத்த குடிமக்களும் அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் சிறப்பாகவும், மிகுந்த மனநிறைவை தந்ததாகவும் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மண்டலங்களை சேர்ந்த 200 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் அறுபடை வீடு ஆன்மீகப் பயணத்தின் 2ம் கட்டப் பயணம் இன்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இருந்து தொடங்கியது.

    பழனியில் சாமி தரிசனம் செய்த பக்தர்களை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பாரதி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் இந்தக்குழு திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை மற்றும் திருத்தணி ஆகிய திருக்கோவில் தரிசனத்துக்கு பின் பழனியில் நிறைவடைகிறது. இந்த ஆன்மீகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம், உணவு, போர்வை, துண்டு, குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் எண்ணெய், சீப்பு போன்ற பொருட்கள் அடங்கிய பயணவழிப்பைகள் வழங்கப்படுகின்றன. மேலும் அவர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் சென்றனர்.

    • நகைகளை பெற்று கொண்ட தம்பதி 2 நாட்களில் கடன் பெற்று தருகிறோம் என கூறி சென்று விட்டனர்.
    • கடன் வாங்கி தருவதாக 350 பவுன் நகை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நத்தம்:

    சென்னை பெரம்பூரில் நகைக்கடை நடத்தி வருபவர் தீபக்தேவ்கர் (வயது51). இவரது நண்பர் சஞ்சய் ஜெயின் (52). சென்னை வேப்பேரியில் வசித்து வருகிறார். இவரிடம் தீபக்தேவ்கர் வட்டிக்கு 10 கோடி பணம் வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.

    அதற்கு சஞ்சய் ஜெயினும், அவரது மனைவி ரக்சாவும் கமிஷனாக ரூ.1 கோடி கொடுத்தால் பணம் வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளனர். அதற்கு தீபக்தேவ்கர் தன்னிடம் பணம் இல்லை நகைகள் மட்டுமே உள்ளது என கூறியுள்ளார்.

    அதற்கு அவர்கள் சம்மதித்தனர். இதனைத் தொடர்ந்து தீபக்தேவ்கர் சஞ்சய் ஜெயின் மற்றும் அவரது மனைவியை தொடர்பு கொண்டபோது நாங்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ளோம். எனவே அங்கு வந்து நகைகளை தருமாறு கூறியுள்ளனர்.

    அதன் பேரில் நத்தம் வந்த தீபக்தேவ்கர் பஸ் நிலையத்தில் வைத்து கடந்த மாதம் 21-ம் தேதி கடையில் இருந்த 350 பவுன் நகைகளை கொடுத்துள்ளார். நகைகளை பெற்று கொண்ட தம்பதி 2 நாட்களில் கடன் பெற்று தருகிறோம் என கூறி சென்று விட்டனர்.

    2 நாட்கள் கழித்து தீபக்தேவ்கர் அவர்களை போன் மூலம் தொடர்பு கொண்டார். அதற்கு அவர்கள் சரியாக பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். கடைசிவரை கடன் வாங்கி தராததால் தான் ஏமாற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தீபக்தேவ்கர் நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்கு பதிவு செய்து நகைகளுடன் மாயமான கணவன், மனைவியை தேடி வருகின்றனர். ஏமாற்றப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.84 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடன் வாங்கி தருவதாக 350 பவுன் நகை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதாலும் அ.ம.மு.க.வுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும் என்று கட்சி தலைமை கணக்கு போட்டுள்ளது.
    • அ.ம.மு.க. இந்த தொகுதியில் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது அரசியல் களத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சி கள் கூட்டணிகளை உறுதிப் படுத்துவதிலும் தொகுதி பங்கீட்டிலும் அதிக தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்க தமிழக அரசியல் கட்சிகள் அதிக அக்கறை காட்டி வருகிறது.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பா.ஜனதா கூட்டணியில் இந்த தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி பா.ஜனதா கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளரை நிறுத்தும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டு வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தினகரனே போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பும் மேலோங்கி உள்ளது.

    சிவகங்கை தொகுதியை பொருத்தவரை முக்குலத்தோர் அதிகம் உள்ள தொகுதியாகும். இந்த தொகுதியில் கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. தனித்து போட்டியிட்டு ஒரு லட்சத்து 22 ஆயிரம் வாக்குகள் பெற்றது. தற்போது பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதாலும், முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதாலும் அ.ம.மு.க.வுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும் என்று கட்சி தலைமை கணக்கு போட்டுள்ளது.

    அதன் காரணமாக இப் போதிலிருந்தே தொகுதி முழுவதும் அ.ம.மு.க.வினர் குக்கர் சின்னத்தை ஆதரித்து கட்சி நிர்வாகிகள் அனைத்து பகுதிகளிலும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். சிவகங்கை தொகுதியை பொருத்தவரை தி.மு.க-காங்கிரஸ் கூட்ட ணியில் கார்த்தி சிதம்பரத்திற்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? அதுபோல பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீண்டும் பா.ஜனதா சார்பில் களம் இறக்கப்படுவாரா என்ற பரபரப்பு ஏற்பட் டுள்ள நிலையில் அ.ம.மு.க. இந்த தொகுதியில் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது அரசியல் களத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×