என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • முத்தமிழ் முருகன் மாநாடு 2 தினங்கள் நடைபெறவுள்ளது.
    • அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    திண்டுக்கல்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை செயல்திட்டக் கூட்டத்தில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட தீர்மானிக்கப்பட்டது. வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட அனுமதி அளித்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

    அதன்படி, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, பழனி தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் 2 தினங்கள் நடைபெற உள்ளது.

    ஆன்மீக ஈடுபாடு உள்ளவர்களும், முருக பக்தர்களும், உலகளவில் உள்ள முத்தமிழ் அறிஞர்களும் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். ஆகையால் தமிழக அரசின் சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு மாநாடு சிறப்பாக நடத்தப்பட உள்ளது.

    மாநாட்டிற்கு வருகை தரும் அனைத்து பொதுமக்களும் எளிதாக வந்து செல்லும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மாநாட்டில் கலந்துகொள்வதற்கு அனுமதி இலவசம். எனவே பக்தர்கள் கலந்து கொண்டு முருகன் மாநாட்டை சிறப்பிக்க வேண்டும்.

    மேலும் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ள பங்கேற்பவர்கள் மற்றும் மாநாட்டினை காண வரும் பொதுமக்கள், மாநாடு தொடர்பான விவரங்கள், ஏதேனும் சந்தேகங்கள் உள்ளிட்ட விபரங்களை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் 04545-241471, 04545-241472, 04545-241473, 04545-241474, 04545-241475 மற்றும் இலவச தொடர்பு எண்-1800 425 9925 ஆகிய எண்கள் வாயிலாக தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம், என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    • பழங்கால பழக்க வழக்கங்கள் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்படுகிறது
    • தென்மாவட்டங்களில் இன்றும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த தம்பதி சபரிபாண்டி-சர்மிளா. இவர்களது மகன் சித்தேஷ். இவரது காதணி விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    காதணி விழாவிற்கு தாய்மாமன்கள் பண மாலை, டிரம்ஸ், சரவெடிகள், சாரட் வண்டி மற்றும் பண்டையகால வழக்கப்படி விவசாயிகளுக்கு உற்றத் துணைவனாக உள்ள டிராக்டர் வண்டியில் அரிசி மூட்டைகள், பழ வகைகள், வாழைத்தார்கள், சாக்லேட் வகைகள், புதிய ஆடைகள், விளையாட்டு சாமான்கள் 10-க்கும் மேற்பட்ட தாய்மாமனின் சீதனமான ஆட்டு கிடா என 1008 சீர் வரிசைகளைக் கொண்டு வானவேடிக்கைகளுடன் திருமண மண்டபத்திற்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    அதேசமயம் தாய்மாமன் சீருக்கு அத்தை மகன்கள் சளைத்தவர்கள் அல்ல என அவர்களும் தப்பாட்டம், ஆட்டுக்கிடா, சீர்வரிசைகள், வானவேடிக்கைகள் என மற்றொருபுறம் சீர் கொண்டு வந்தனர்.

    இதனால் தாடிக்கொம்பு கிராமமே சீர்வரிசை வண்டிகளின் அணிவகுப்பாக காட்சியளித்தது. இதனை அப்பகுதி மக்கள் வியப்புடனும் ஆச்சரியத்துடனும் கண்டு மெய்சிலிர்த்தனர்.

    மேலும் விழாவின் நாயகன் சித்தேஷ் தாய் மாமன்களின் பணமாலை மற்றும் சாக்லேட் மாலை, ரோஸ் மாலை, ரோஸ் இதழ் மாலை, தாழம்பூ மாலை, தாமரைப்பூ மாலை உள்ளிட்ட பல்வேறு மாலைகளால் குளிர்விக்கப்பட்டார்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தற்போதைய நாகரீக காலங்களில் வீட்டு விசேஷங்கள் என்பது குறிப்பிட்ட நபர்களை மட்டும் அழைத்து சடங்கு சம்பிரதாயமாக மாறிவிட்டது. ஆனால் பாரம்பரியத்தை மறக்காமல் ஒருசிலர் மட்டுமே அதனை கடைபிடித்து வருகின்றனர்.

    குறிப்பாக தென்மாவட்டங்களில் இதற்கு இன்றும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் உறவுகள் கூடுவதோடு, நமது பழங்கால பழக்க வழக்கங்கள் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்படுகிறது என்றனர். 

    • கொரோனா காலத்தில் இருந்ததுபோல் இல்லாமல் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது.
    • கொடைக்கானலில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் விடுதிகளிலேயே முடங்கும் நிலை உள்ளது.

    கொடைக்கானல்:

    தமிழகத்தின் புகழ்பெற்ற கோடை வாசஸ்தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தடுக்கவும், கடந்த மே மாதம் முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள், இ-பாஸ் பெறுவதற்கான இணைய முகவரியும் வெளியிடப்பட்டது. கொடைக்கானலில் வாரந்தோறும் சராசரியாக சுற்றுலா பயணிகள் வருகை தந்தாலும் வார இறுதி நாட்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

    இவர்களுக்கு இ-பாஸ் பெறுவதில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாத வகையில் நுழைவு வாயில் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சியில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் செல்போன் மூலமே இ-பாஸ் பதிவிறக்கம் செய்து அனுமதிக்கப்பட்டனர்.

    ஆரம்பத்தில் இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வருவதாக உள்ளூர் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

    இதனிடையே இ-பாஸ் நடைமுறையை செப்டம்பர் 30ந் தேதி வரை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்ட மே 7ந் தேதி முதல் அக்டோபர் 15 வரை 2 லட்சத்து 55 ஆயிரத்து 62 வாகனங்களில் 14 லட்சத்து 98 ஆயிரத்து 206 பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கொரோனா காலத்தில் இருந்ததுபோல் இல்லாமல் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது. மே 7ந் தேதி முதல் ஆகஸ்ட் 15ந் தேதி வரை 100 நாட்களில் 1 லட்சத்து 1523 வாகனங்களில் 6 லட்சத்து 59 ஆயிரத்து 818 பயணிகள் வந்துள்ளனர். கொடைக்கானலில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் விடுதிகளிலேயே முடங்கும் நிலை உள்ளது.

    நேற்று மட்டும் 6096 வாகனங்களில் 31,689 பயணிகள் கொடைக்கானல் செல்ல அனுமதி பெற்றிருந்த நிலையில் 98 வாகனங்களில் 705 பேர் மட்டுமே வருகை தந்தனர். வழக்கமாக சுதந்திரதினத்தை தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகரித்து காணப்படும் நிலையில் தற்போது குறைந்த அளவே உள்ளனர்.

    • அரசு டாக்டர்கள் ஸ்டிரைக்கால் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
    • சிலர் குழந்தைகளுடன் வந்திருந்து சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் சென்றனர்.

    தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி, க.விலக்கு, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி உள்ளிட்ட இடங்களில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் சுமார் 70க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு டாக்டர்கள் ஸ்டிரைக்கால் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். அந்த பிரிவில் பெயர் பதிவுகூட நடைபெறவில்லை. ஆனால் அவசர சிகிச்சை மற்றும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.


    இதேபோல் திண்டுக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி, பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்தூர் உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரி மற்றும் 100க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை. மற்ற சிகிச்சைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டும் தினந்தோறும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்லும் நிலையில் டாக்டர்கள் ஸ்டிரைக் குறித்து எந்த விவரமும் தெரியாததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் குழந்தைகளுடன் வந்திருந்து சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் சென்றனர்.

    • கனமழையால் சில பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
    • சாலையில் மிகப்பெரிய மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பெரும்பாறை:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்து வந்த கனமழை பகல் நேரத்திலும் பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நேற்று சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையால் அண்ணாசாலை, மூஞ்சிக்கல், ஏரிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அதன் பிறகு விட்டு விட்டு சாரல் மழையாக பெய்து வந்த நிலையில் இன்று காலை ஏரிச்சாலையில் மிகப்பெரிய மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து தடைபட்டது.

    இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மழை கிராமங்களில் பெய்த கனமழையால் பல இடங்களில் மின் வினியோகம் தடைபட்டது.


    கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, கே.சி.பட்டி, பாச்சலூர், பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. மேலும் பலத்த காற்றும் சுழன்று அடித்தது. இந்த நிலையில் நேற்று இரவு பெரும்பாறை பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் பெரும்பாறை-தாண்டிக்குடி மலைச்சாலையில் உள்ள மூலக்கடை-கொங்கப்பட்டி இடையே இன்று அதிகாலை சுமார் 2 மணிக்கு சாலையின் குறுக்கே மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் சாலையின் இருபுறமும் பஸ், லாரி, கார் போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் அணி வகுத்து நின்றது.

    இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பரத், மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர் துணை அமைப்பாளர்கள் மகாராஜன், ஜெயராஜ் ஆகியோர் தலைமையில் 2 அறுவை எந்திரத்தின் மூலம் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். இதனால் 4 மணி நேரத்துக்கு பிறகு மலைச்சாலையில் போக்குவரத்து சீரானது. இதேபோல் நேற்று மாலை தடியன்குடிசையில் வேரோடு மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் மாசிலாமணி மற்றும் பணியாளர்கள் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் அறுவை எந்திரத்தின் மூலம் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். இதனால் 2 மணி நேரத்துக்கு பிறகு மலைச்சாலையில் போக்குவரத்து சீரானது.

    • பழனியில் வருகிற 24, 25-ந் தேதிகளில் முத்தமிழ் முருகன் மாநாடு.
    • பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி மும்முரம்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற உள்ளது.

    உலகம் முழுவதிலும் உள்ள முருக பக்தர்களை ஒன்றிணைக்கும் வகையில் நடத்தப்படும் இந்த மாநாட்டுக்காக பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி முகூர்த்தக்கால் நடும் பணியுடன் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    மாநாட்டு பந்தலில் பழனி மலைக்கோவிலின் ஓவியம், முருகாற்றுப்படையில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள் மற்றும் முருகன் தொடர்பான படங்கள் வரையப்பட்டு வருகின்றன.

    மேலும் உலகம் முழுவதிலும் இருந்து தமிழ் அறிஞர்கள் தங்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கும் வகையில் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வு கட்டுரைகளில் சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு அவை மாநாட்டு நிறைவில் உரிய பரிசுக்குரியவையாக தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட உள்ளது.

    மேலும் விழா மாநாட்டு மலர் தயாரிப்பு, பக்தர்கள் தங்கும் இடம், வெளிநாட்டு ஆன்மீக அன்பர்கள் தங்கும் விடுதிகளில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர் சுகாதாரமாக வழங்கவும், கழிப்பிட வசதிகள் உரிய முறையில் ஏற்படுத்தி தரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாநாடு நடைபெறும் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 3 முறை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிவுறுத்தி உள்ளார்.

    இன்று மீண்டும் பழனிக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு மாநாடு மேடை அமைக்கும் பணியை பார்வையிட்டார். குறுகிய காலமே இருப்பதால் அதற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி, கலெக்டர் பூங்கொடி, எஸ்.பி. பிரதீப், மடாதிபதிகள், ஆதீனங்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 2 கண் பார்வைகளையும் இழந்து, ஆதரவின்றி மிகவும் ஏழ்மையான நிலையில் வசித்து வந்தார்.
    • பல்வேறு தரப்பினர் ஒன்று கூடி ரூ.75 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வீட்டை கட்டி முடித்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள விராலிப்பட்டியில் வசித்து வருபவர் மருதம்மாள் (வயது 75). கணவர் இறந்து பல ஆண்டுகள் ஆகியும், தனது 2 கண் பார்வைகளையும் இழந்து, ஆதரவின்றி மிகவும் ஏழ்மையான நிலையில் வசித்து வந்தார். இந்த நிலையில் மிகவும் சிதிலமடைந்த, ஆபத்தான நிலையில் இருந்த குடிசை வீட்டில் வசித்து வருவதை கண்ட சமூக ஆர்வலர் பால் தாமஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி, மருதம்மாள் மூதாட்டிக்கு வீட்டை கட்டித்தர முடிவு செய்தனர்.

    அதனை தொடர்ந்து, கொசவபட்டி சுகாதார ஆய்வாளர் முனியப்பன் மூலம் உண்மை நிலையை கண்டறிந்து, உறவின் சந்திப்பு தமிழக இளைஞர் பாராளுமன்ற குழுவினர் புதிய வீடு கட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த முயற்சியில் ராணுவதுறை, காவல்துறை, சுகாதாரத்துறை, ரெயில்வேத்துறை, மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் ஒன்று கூடி ரூ.75 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வீட்டை கட்டி முடித்தனர்.

    இந்த வீட்டின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மதுரையை சேர்ந்த முன்னாள் வணிகவரித்துறை இணை ஆணையர் தேவநாதன், அனுகிரகா கல்லூரி முன்னாள் முதல்வர் ஐசக், திண்டுக்கல் மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சத்பதி ஆகியோர் கலந்து கொண்டு புதிய வீட்டை திறந்து வைத்தனர்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் முனியப்பன், முன்னாள் ராணுவ வீரர்கள் விசுவாசம், மாறவர்மன், சி.ஐ.எஸ்.எப். போலீஸ் ஜெயராஜ் மற்றும் தன்னார்வலர்கள் குமார், சரவணன், தினேஷ், சகாய பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் மூதாட்டி மருதம்மாளுக்கு உணவு பொருட்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சமூக ஆர்வலர் பால்தாமஸ் நன்றி தெரிவித்தார்.

    • போலீசார் பிடிபட்ட வாலிபரை கைது செய்து அவருடன் வந்தவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கொள்ளை போன பொருட்களின் மதிப்பு குறித்தும் சோதனை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வேல்வார்கோட்டை பிரிவு அருகே தனியார் நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலையின் எதிரில் குளத்துக்கரை பிரிவில் ஏராளமான மில் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது24) என்பவரது வீட்டில் மர்மநபர்கள் சிலர் உள்ளே புகுந்தனர். அவர்கள் ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டுக்குள் நுழைந்து பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் நகைகளை திருடினர். சத்தம் கேட்டு கார்த்திக் எழுந்து பார்த்தபோது அதில் சுதாரித்துக்கொண்ட 2 பேர் தப்பி ஓடினர். பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஒருவரை பிடித்து அங்கிருந்த மின் கம்பத்தில் கட்டி வைத்தனர்.

    அவரிடம் விசாரித்ததில் அவர் ஒடிசா மாநிலம் ஜோன்பூர் பகுதியை சேர்ந்த அஜய் (19) என தெரிய வந்தது. இவருடன் சேர்ந்து மேலும் 2 பேர் வந்து வீட்டில் கொள்ளையடித்ததும் தெரிய வரவே அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர்கள் சித்திக் மற்றும் கிருஷ்ணவேணி தலைமையிலான போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதுடன் கொள்ளை நடந்த இடத்திலும் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், தனியார் மில்லில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு தங்கள் பாதுகாப்பில் இடம் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. இதனால் சாலையோரம் டெண்ட் அமைத்து தங்கி இருக்கும் அவர்கள் இரவு நேரங்களில் வீடுகளை நோட்டமிட்டு இதுபோன்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எனவே வடமாநில தொழிலாளர்களுக்கு மில் நிர்வாகம் இடம் கொடுக்க நடவடிக்கை எடுப்பதுடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனையடுத்து போலீசார் பிடிபட்ட வாலிபரை கைது செய்து அவருடன் வந்தவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளை போன பொருட்களின் மதிப்பு குறித்தும் சோதனை நடத்தி வருகின்றனர்.

    • சமையலுக்கு தேவையான பொருட்களை திருச்சியில் இருந்து கொண்டு வந்துள்ளனர்.
    • மற்றொரு அறையிலிருந்த நண்பர்கள் காலை வந்து எழுப்பியபோது இருவரும் இறந்து கிடந்துள்ளனர்.

    கொடைக்கானல் அருகே 'பார்பிகியூ' சிக்கன் சமைத்துவிட்டு அடுப்பை அணைக்காததால் வெளியேறிய புகையில் மூச்சுத்திணறி 2 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி மற்றும் சென்னையை சேர்ந்த 4 இளைஞர்கள் கொடைக்கானல் அருகே சின்னபள்ளம் செல்லும் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.

    அப்போது, ஜெயகண்ணன், ஆனந்த் பாபு ஆகியோர் மது அருந்திக்கொண்டே பார்பிகியூ சிக்கன் சமைத்து சாப்பிட்டுள்ளார். சமையலுக்கு தேவையான பொருட்களை திருச்சியில் இருந்து இவர்கள் கொண்டு வந்துள்ளனர்.

    அப்போது அடுப்பை அணைக்காமல் இருவரும் தூங்கச் சென்றுள்ளனர். மற்றொரு அறையிலிருந்த நண்பர்கள் காலை வந்து எழுப்பியபோது இருவரும் இறந்து கிடந்துள்ளனர்.

    சிக்கன் சமைத்த அடுப்பை அணைக்காததால் எழுந்த புகை காரணமாக இருவரும் மரணம் அடைந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிந்துள்ள காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

    • அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவது வழக்கம்.
    • வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மூங்கில்பட்டி கிராமத்தில் சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவில் உள்பிரகாரத்தில் வனவாராஹி அம்மன் சன்னதி உள்ளது. இங்கு தினமும் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவது வழக்கம்.

    குறிப்பாக பஞ்சமி திதியில் அம்மனுக்கு அதிகாலை முதல் நடக்கும் சிறப்பு பூஜையில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதன்படி நேற்று நாகபஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

    அப்போது பக்தர்கள் கொடுத்த பிரசாத பாலை நைவேதியம் செய்வதற்காக கரண்டியில் பாலை எடுத்துச் சென்றபோது அம்மன் அதனை குடித்தது. இதனை பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    தொடர்ந்து கரண்டியில் பாலை எடுத்து அம்மன் வாய் அருகே எடுத்துச் சென்றபோது அது முற்றிலும் காலியானது. இதனை பக்தர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டனர். தொடர்ந்து ஒவ்வொரு பக்தராக தாங்கள் கொண்டு வந்த பாலை அம்மனுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். இதனால் அவர்கள் பக்தி பரவசத்தால் உற்சாகம் அடைந்தனர்.

    • பா.ஜ.க. மட்டுமே உலகத்தில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் ஆதரவான நிலையில் உள்ளது.
    • கோவிலில் உள்ள தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

    பழனி:

    பழனி கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வங்கதேசத்தில் 20 சதவீத இந்துக்கள் இருந்த நிலையில் தற்போது 7 சதவீதமாக குறைந்துள்ளது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேசிய காங்கிரஸ், கம்யூனிஸ்டு, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வங்கதேசத்தில் நடைபெறும் கலவரத்தில் அங்கு சிறுபான்மையினராக வாழும் இந்துக்கள் மீதும், அவர்களது வணிக நிறுவனங்கள், வீடுகள், கோவில்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல் குறித்து எந்த கருத்தும் கூறாமல் மவுனமாக உள்ளனர்.

    பா.ஜ.க. மட்டுமே உலகத்தில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் ஆதரவான நிலையில் உள்ளது. கோவிலில் உள்ள தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். பழனியில் நடக்க உள்ள முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டால் அவர் கோவிலுக்கு சென்று வழிபட்டு நெற்றியில் திருநீறு அணிந்து கொள்ள வேண்டும். திரை உலகை முதலமைச்சர் குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல கோவில்களை தி.மு.க. மயமாக்க அமைச்சர் சேகர்பாபு முயற்சி செய்வதை கண்டிக்கிறோம்.

    தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு மேயர் தேர்தலில் வெட்ட வெளிச்சமாக தெரிந்துள்ளது. முதலமைச்சர் சொல்வதை தி.மு.க. கவுன்சிலர்கள் கூட கேட்பதில்லை. கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்க வேண்டும். கோவில் பணத்தில் கல்லூரிகள் கட்டி வருகின்றனர். கோவில் நிதியை மற்ற பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது. கும்பாபிஷேகம் பக்தர்கள் நன்கொடையில்தான் நடக்கிறது. எனவே இந்து விரோதிகளிடம் இருந்து கோவில்களை காப்பாற்ற வேண்டும். இந்துக்களை வாக்கு அரசியலுக்காக மட்டுமே அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்றனர். இந்து மதத்தில் பிளவை ஏற்படுத்தும் தி.மு.க.வின் ஜால்ராவாக ஆன்மீக சொற்பொழிவாளர் சுகிசிவம் உள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • போதை காளான் விற்பனை அதிகரித்து வருகிறது.
    • சிறப்புக்குழு அமைத்து கடும் நடவடிக்கை.

    கொடைக்கானல்:

    சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதில் வாலிபர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை காளான் மற்றும் கஞ்சா அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி இவர்களை பிடித்து நடவடிக்கை எடுத்த போதும் தொடர்ந்து கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை அதிகரித்து வருகிறது.

    கொடைக்கானல் நகர் பகுதி மட்டுமின்றி மேல்மலை கிராமங்களான பூண்டி, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா, போதை காளான் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    மலை கிராமங்களில் தங்கும் விடுதிகளில் போதைப்பொருள் பயன்படுத்தப் பட்டதாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தி தங்கும் விடுதிக்கு சீல் வைத்தனர்.

    இந்த நிலையில் மேல்மலை கிராம பகுதியில் ஒரு வாலிபர் போதை காளானை பறித்து அதில் தேன் ஊற்றி ருசிப்பது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அதில் சிலர் போதை காளானை எவ்வாறு பயன்படுத்துவது, எந்த பகுதியில் அதிகமாக கிடைக்கும் எனவும் சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.

    போதை காளான், கஞ்சா விற்பனையில் கும்பல் தீவிரமாக இயங்கி வருகிறது. கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் வாழ்வை தொலைத்து வருகின்றனர்.

    எனவே கொடைக்கானல் மலைப்பகுதியில் சிறப்புக்குழு அமைத்து கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை செய்யும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×