என் மலர்
திண்டுக்கல்
- கொடைக்கானலுக்குள் நுழையும் முன்பு பயணிகளிடம் இ-பாஸ் சோதனை.
- சோதனை சாவடிகளிலேயே சோதனை.
கொடைக்கானல்:
ஊட்டி, கொடைக்கானலுக்கு விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் அளவுக்கு அதிகமான சுற்றுலா வாகனங்கள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க கடந்த மே7-ந் தேதி முதல் செப்டம்பர் 30ந் தேதி வரை உயர் நீதிமன்ற உத்தரவுபடி இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்தும் இங்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி இ-பாஸ் அனுமதி குறித்து கொடைக்கானல் நகருக்குள் நுழையும் முன்பு பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கியூ.ஆர். கோடு மூலம் ஸ்கேன் செய்து இ-பாஸ் பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
இ-பாஸ் பெறாத வாகனங்கள் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. வார விடுமுறை காரணமாக காலை முதலே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பல்வேறு வாகனங்களில் வந்தனர்.

இ-பாஸ் மற்றும் வழக்கமான சோதனைக்கு போதிய பணியாளர்கள் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
மேலும் 5 லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில் மற்றும் குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒவ்வொரு பாட்டிலுக்கும் தலா ரூ.20 பசுமை வரி வசூலிக்கப்பட்டது.
இதனால் வெள்ளி நீர் வீழ்ச்சி அருேக உள்ள சுங்கச்சாவடியில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இ-பாஸ் பெறாமல் வந்த வாகனங்களை சுங்கச்சாவடி அருகிலேயே நிறுத்தி சோதனை செய்ததால் மற்ற வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இ-பாஸ் குறித்து தெரியாமல் வந்த சுற்றுலாப் பயணிகள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அவர்களிடம் இ-பாஸ் பெறுவது குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
மலைச்சாலையில் இ-பாஸ் சோதனை செய்வதால் குறுகிய இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வத்தலக்குண்டு அருகே உள்ள காட்ரோடு மற்றும் காமக்காபட்டி சோதனைச்சாவடியிலும், பழனி அடிவார பகுதியிலும் கொடைக்கானல் வருவதற்கு முன்பே சுற்றுலாப் பயணிகளிடம் இ-பாஸ் சோதனை மேற்கொண்டால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம்.
மேலும் நேர விரையமும் தவிர்க்கப்படலாம். எனவே அடிவாரப்பகுதியில் உள்ள சோதனை சாவடிகளிலேயே சோதனை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள தீய சக்திகளை விரட்டும் தன்மை கொண்டதாகவும் கருதி பிடித்து செல்கின்றனர்.
- புனித நீராக வழங்கப்பட்டுsam வரும் நிலையில் நோய் தீர்க்கும் மருந்தாக இருப்பதாகவும் பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுக்காம்பட்டியில் ஸ்ரீவாஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. அதில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 20 அடி ஆழத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் சிவலிங்கத்திற்கு அடியில் நீரூற்று தோன்றி சிவலிங்கம் வழியாக வழிய தொடங்கியது. அந்த நீரானது பாதாள சிவலிங்கத்தை சுற்றி சுமார் 1 அடியிலிருந்து 2 அடி வரை நீரூற்றிலிருந்து வெளியேறி தண்ணீர் அறை முழுவதும் சிவலிங்கத்தை மறைக்கும் அளவிற்கு ஊற்று பெருக்கெடுக்க தொடங்கியது.
இதனைக் கண்ட பக்தர்கள் அந்த தண்ணீரை புனித நீராக கருதி பிடித்து செல்கின்றனர். இந்த தண்ணீர் கும்பாபிஷேகத்திற்கு புனித நீராகவும், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், உடலில் ஏற்படும் பல்வேறு வியாதிகளை போக்குவதாகவும், வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள தீய சக்திகளை விரட்டும் தன்மை கொண்டதாகவும் கருதி பிடித்து செல்கின்றனர்.

இந்த தகவல் பரவியதும் திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வாஸ்தீஸ்வரர் கோவிலுக்கு வந்து பாதாள சிவலிங்கத்தை வழிபட்டு புனித நீர் பெற்றுச் செல்கின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 20 அடி ஆழத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும்போது 2 அடி ஆழத்திற்கு கான்கிரீட் போடப்பட்டு பின்னர் அதன் மேல் டைல்ஸ் கல் பதிக்கப்பட்டு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆறு போல் ஊற்று பெருக்கெடுத்து வருவது மிகுந்த ஆச்சரியத்தை அளிப்பதாகவும் தற்போது புனித நீராக வழங்கப்பட்டு வரும் நிலையில் நோய் தீர்க்கும் மருந்தாக இருப்பதாகவும் பக்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் சுக்காம் பட்டி சித்தர்ஸ்ரீலஸ்ரீ துரை ஆதித்தன் சுவாமிகள் அருளாசி வழங்கி புனித நீர் மற்றும் காணிக்கை பூக்களை பிரசாதமாக அளித்து வருகிறார்.
- சோதனை சாவடியில் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்கிறது.
- விடுமுறை என்பதால் வழக்கத்திற்கு மாறாக சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் இ-பாஸ் சோதனை தீவிரமாக நடைபெறுகிறது.
கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொடைக்கானல் நுழைவாயில் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்கிறது. நகர கூட முடியாமல் நீண்ட நேரமாக சுற்றுலா பயணிகள் காத்திருக்கின்றனர்.
விடுமுறை என்பதால் வழக்கத்திற்கு மாறாக சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.
- குரங்குகள் சேதப்படுத்தியதற்காக புதிய வீடு எவ்வாறு கட்டித்தர முடியும் என தெரிவித்துள்ளனர்.
- மக்கள் நத்தம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி கணவாய்பட்டியை சேர்ந்தவர் சதீஸ்பாண்டியன் (36). இவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குரங்குகள் புகுந்து வீட்டில் இருந்த பொருட்களையும், வீட்டையும் சேதப்படுத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புதிய வீடு கட்டித் தருமாறு சதீஸ்பாண்டியன் புகார் அளித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை. மேலும் குரங்குகள் சேதப்படுத்தியதற்காக புதிய வீடு எவ்வாறு கட்டித்தர முடியும் என தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சதீஸ்பாண்டியன் இன்று காலை மங்கம்மாள் சாலை பகுதியில் உள்ள உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறினார். இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் அவரை கீழே இறங்குமாறு சத்தம் போட்டனர். ஆனால் தனது வீடு சேதம் அடைந்து விட்டது. அதற்கு புதிய வீடு கட்டித்தர வேண்டும் என்று கோஷமிட்டபடி உச்சி பகுதிக்கு ஏறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நத்தம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி மற்றும் போலீசார் மைக் மூலம் அவரை கீழே இறங்கும்படி அறிவுறுத்தினர். ஆனால் அதனை அவர் கேட்கவில்லை. அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து அவர் கீழே வர சம்மதித்தார். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சதீஸ்குமார் பத்திரமாக கீழே இறக்கப்பட்டார். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
- அரை நிர்வாண கோலத்தில் போதை ஆசாமி சாலையின் டிவைடரின் மேல் யோகாசனம் செய்துள்ளார்.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் காட்டாஸ்பத்திரி பகுதியில் சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில் அமர்ந்து மதுபோதையில் யோகாசனம் செய்த நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ட்ரவுசர் மட்டும் அணிந்து அரை நிர்வாண கோலத்தில் போதை ஆசாமி சாலையின் நடுவே உள்ள டிவைடரில் ஏறி அமர்ந்து யோகாசனம் செய்துள்ளார்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த நபரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனர்.
- இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெறும்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் கந்தசஷ்டி விழா கடந்த 2ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனர்.
மலைக்கோவிலில் தினந்தோறும் உச்சி காலத்தின் போது கல்ப பூஜையும், மாலையில் சண்முகர் தீபாராதனையும் நடைபெற்று வருகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு உச்சிகால பூஜையை தொடர்ந்து சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு சூரர்களை வதம் செய்யும் வகையில் மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னகுமாரர் வேல்வாங்கும் விழா நடைபெறுகிறது.
அதன் பின் இன்று மாலை 3 மணிக்கு மலைக்கோவில் நடை அடைக்கப்பட்டு சுவாமி பராசக்தி வேலுடன் அடிவாரம் வந்தடைவார்.
இதனால் காலை 11 மணி வரை மட்டுமே மலைக்கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மலைக்கோவிலில் இருந்து சின்ன குமாரர் பராசக்தி வேலுடன் வரும் சமயம் பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து வள்ளி தெய்வானை சமேத முத்துகுமாரசாமி மயில் வாகனத்தில் அடிவாரம் வந்தடைந்தார்.
திருஆவினன்குடி கோவிலில் சிறப்பு பூஜைக்கு பின்பு கிரிவீதியில் இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெறும். 4 இடங்களில் நடைபெறும் இந்த விழாவில் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதம், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் வதம், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரன் வதம், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதம் நடைபெறும்.
சூரசம்ஹாரத்தை காண இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர். இதில் கந்தசஷ்டி விழாவிற்காக காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தர்களுக்கு வாழைத்தண்டு, பழங்கள் மற்றும் தயிரால் செய்யப்பட்ட உணவும், கருப்பட்டி, எலுமிச்சையால் தயாரிக்கப்பட்ட சத்து மிகுந்த பானகம் இறைவனுக்கு படையல் இடப்பட்டது.

பின்னர் அந்த உணவை வாழை இலையில் வைத்து நெய்விளக்கு ஏற்றிவைத்து தங்கள் விரதத்தை முடித்துக் கொண்ட பக்தர்கள் அந்த உணவை பிரசாதமாக வாங்கி சாப்பிட்டனர்.
சூரசம்ஹாரத்தில் பங்கேற்பதற்காக தாரகாசூரன் புறப்பாடாகி சென்றார். இதனை தொடர்ந்து ஒவ்வொரு சூரர்களும் புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சூரசம்ஹாரத்தை காண குவிந்துள்ள பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சூரசம்ஹாரத்தை தொடர்ந்து முருகனுக்கு வெற்றி விழாவும், திருக்கல்யாணமும் நடைபெறும்.
- பி.ஏ. தமிழ் இலக்கியம் படித்துள்ள நித்யா விளையாட்டு போட்டியிலும் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.
- கடந்த 2016ம் ஆண்டு தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் பெற்றுள்ளார்.
வேடசந்தூர்:
சென்னை மாதவரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்தவர் நித்யா (வயது 35). இதே போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த மதுரையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (38) என்பவருடன் நேற்று மதுராந்தகம் அருகே ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது சாலையில் தறிகெட்டு ஓடிய கார் இவர்கள் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து விபத்தில் பலியான நித்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கொசவபட்டிக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. அங்கு மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.
விபத்தில் பலியான நித்யாவின் தந்தை சவுந்தர்ராஜன் இறந்து விட்டார். தாய் சரஸ்வதி (63) வேடசந்தூரில் உள்ள புகையிலை ஆராய்ச்சி மையத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நித்யாவுக்கு 2 மூத்த சகோதரிகளும், ஒரு அண்ணனும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். சிறு வயது முதலே போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்பது நித்யாவின் ஆசையாக இருந்துள்ளது. திண்டுக்கல்லில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.ஏ. தமிழ் இலக்கியம் படித்துள்ள நித்யா விளையாட்டு போட்டியிலும் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.
கராத்தே, குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை வாங்கி குவித்துள்ளார். 16 ஆண்டுகளாக காவல் துறையில் பணியாற்றி வந்த அவர் கடந்த 2016ம் ஆண்டு தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் பெற்றுள்ளார்.
திருமணமாகாமல் காவல் துறையில் தொடர்ந்து துடிப்பாக பணியாற்றி வந்த நித்யா விபத்தில் பலியான சம்பவம் அந்த கிராம மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- இரவு நேரத்தில் இரும்புக் கட்டிலின் போல்டு கழன்று விழுந்துள்ளது.
- உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள சாணார்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோபிக்கண்ணன் (வயது 35). இவர் வீட்டிலேயே துணிகள் தைத்துக் கொடுக்கும் டெய்லர் வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி யோகேஸ்வரி (32). நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் கார்த்திக் (10) அங்குள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று இரவு யோகேஸ்வரி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் கோபிக்கண்ணன் மற்றும் அவரது மகன் மட்டும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
மாடியில் இவர்கள் வசித்து வரும் நிலையில் கீழ் வீட்டில் யோகேஸ்வரியின் சகோதரர் வசித்து வருகிறார். கட்டிலில் கோபிக்கண்ணன் போதையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது இரவு நேரத்தில் இரும்புக் கட்டிலின் போல்டு கழன்று விழுந்துள்ளது. இதனால் அவரது தலை கட்டிலின் இடுக்கில் மாட்டிக் கொண்டது.
அதிலிருந்து விடுபட முயன்ற கோபிக்கண்ணன் தவறி கீழே படுத்திருந்த தனது மகன் கார்த்திக் மீது விழுந்தார். இதில் தந்தை மகன் 2 பேரும் மூச்சுத்திணறி இறந்து விட்டனர்.
காலையில் பள்ளிக்கு செல்வதற்காக கார்த்திக் கீழே வராததால் அவரது மாமா எழுப்புவதற்காக சென்றுள்ளார். அப்போது தந்தை, மகன் 2 பேரும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த 2 பேரின் உடல்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர்கள் பொன் குணசேகர், ராஜேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 7 நாட்கள் நடைபெறும் விழாவின் 6-ம் நாளில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
- 8-ந்தேதி பழனி கோவிலில் சண்முகர் வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பழனி:
பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா இன்று தொடங்கியது. இதையொட்டி பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர், மூலவர், சண்முகர், வள்ளி-தெய்வானை, துவார பாலகர்கள், மயில், வேல் மற்றும் நவவீரர்களுக்கு காப்புக்கட்டு நடைபெற்றது. முன்னதாக அடிவாரத்தில் இருந்து கோவில் யானை கஸ்தூரி யானைப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று வழிபாட்டில் கலந்து கொண்டது.
7 நாட்கள் நடைபெறும் விழாவின் 6-ம் நாளில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நைவேத்தியம், 11.30 மணிக்கு தங்க சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல், 11.45 மணிக்கு மண்டகப்படி நடக்கிறது. பின்பு 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது. பின்னர் 3.10 மணிக்கு சூரர்களை வதம் செய்வதற்காக அம்மனிடம் சின்னக்குமாரர் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மலைக்கோவில் நடை சாத்தப்படுகிறது.
பின்னர் சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக சின்னக்குமாரர் வில், அம்பு, கேடயம், குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் நவவீரர்களுடன் மலைக்கோவிலில் இருந்து புறப்பட்டு அடிவாரம் பாதவிநாயகர் கோவிலுக்கு வருகிறார். அதனை தொடர்ந்து திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று குழந்தை வேலாயுதசுவாமியிடம் பராசக்தி வேல் வைத்து சிறப்பு பூஜை நடைபெறுகிறது. 6 மணிக்கு மேல் கிரிவீதிகளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு மேல் மலைக்கோவில் படிப்பாதையில் உள்ள ஆரியர் மண்டபத்தில் வெற்றிவிழா நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பராசக்தி வேல் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோட்சன பூஜை, ராக்கால பூஜை நடைபெறுகிறது.
8-ந்தேதி பழனி கோவிலில் சண்முகர் வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. முன்னதாக திருக்கல்யாண மண்டபத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து காலை 9.30 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் அன்று இரவு 8.20 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
பழனி முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் நடைபெறும் 7-ந்தேதி மதியம் 3.10 மணிக்கு பராசக்தி வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனவே 3.10 மணிக்கு பின் நடை அடைக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு அனைத்து கட்டண சீட்டுகளும் நிறுத்தப்படும். இதனால் காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் அன்று இரவு தங்கர புறப்பாடும் நடைபெறாது என தகவல் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தற்பொழுது மழை குறைந்து அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது.
- அதிகமானோர் ஏரிச்சாலையை சுற்றி சைக்கிள் சவாரி, நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்வதில் ஆர்வம் காட்டினர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை தொடர் மழை பெய்து வந்தது. தற்பொழுது மழை குறைந்து அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. தரைப்பகுதியில் நிலவும் வெப்பத்தை விட இங்கு குறைவாக இருப்பதாலும் அவ்வப்போது சாரல் மழை பெய்வதாலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
குறிப்பாக கடந்த வாரம் வரை சுற்றுலா பயணிகள் இல்லாததால் அனைத்து இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் அண்டை மாநிலமான கேரளாவில் விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக கேரள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் வருகை தந்ததால் அனைத்து சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இதில் அதிகமானோர் ஏரிச்சாலையை சுற்றி சைக்கிள் சவாரி, நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்வதில் ஆர்வம் காட்டினர். இதனால் சிறு குறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அடுத்து வரும் நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
- எங்களது பணி தொய்வில்லாமல் இன்னும் வேகமாக நடக்கும்.
- திராவிட மாடல் ஆட்சிக்கு முழு உருவம் கொடுத்த ஒரே தலைவர் முதலமைச்சர் தான்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்க உட்பட்ட பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க. இதுவரை பல நபர்களை பார்த்துள்ளது. 1973-ல் எம்.ஜி.ஆர் போன்ற பல தலைவர்களை கடந்து தான் தி.மு.க. வந்துள்ளது.
தி.மு.க. பனங்காட்டு நரி. அனைத்து அரசியல் போராட்டங்களையும் சந்தித்து வந்த இயக்கம் தி.மு.க.
75 ஆண்டுகள் கடந்து வந்துள்ளோம். இன்னும் 100 ஆண்டு காலம் ஆனாலும், இந்த இயக்கம் மக்களுக்காக உழைக்கக்கூடிய இயக்கமாக இருக்கும். போராடக்கூடிய தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின் இருப்பார்.
அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம் சந்தோஷம், மகிழ்ச்சி. ஒருவர் அரசியல் கட்சி தொடங்குவதால் எங்களுக்கு கஷ்டம் வரும் என்றால் அது இல்லை.
எங்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. மக்கள் எங்களது பக்கம் இருக்கிறார்கள். எங்களது பணி தொய்வில்லாமல் இன்னும் வேகமாக நடக்கும். விஜய் கட்சி தொடங்கியதால் எங்களுக்கு பாதிப்பு இல்லை
தந்தை பெரியாரின் திராவிட மாடலையும், ஒரு காலத்தில் காங்கிரஸ் சோசியலிசம் பேசியது. காமராஜர் மற்றும் அப்போது இருந்த தலைவர்கள் அனைவரும் பேசினார்கள். இதை குறையாக கூறவில்லை. அவர்கள் சமத்துவம் என்ற சோசியலிசத்தை நாடு சுதந்திரம் அடைந்த பின்னால் கொண்டு வருவோம் எனக்கூறினார்கள். தற்போது வரை மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை.
ஆனால் தமிழகத்தில் குடும்பத் தலைவிக்கு, புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் என 2 கோடி பேர் பயனடைகின்றனர். இதன் மூலம் பொருளாதாரம் வாழ்க்கை தரம் உயர்கிறது. கிராமப் பொருளாதரமும் உயர்ந்துள்ளது. பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து வருகிறது. இதற்குக் காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்
திராவிட மாடல் ஆட்சிக்கு முழு உருவம் கொடுத்த ஒரே தலைவர் முதலமைச்சர் தான்.
கூட்டணியில் பங்கீடு குறித்து விஜய் பேசியதற்கு வி.சி.க. ஆதரவு தெரிவித்துள்ளது என்ற கேள்விக்கு...
இதுகுறித்து முதலமைச்சர் கொள்கைகளை வகுப்பார்.
இதுவரை தமிழ்நாட்டில் பலமுறை ஆட்சிக்கு வந்துள்ளோம். எங்களது கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் கூட்டணியில் இருக்கிறார்கள். ஒற்றைக் கொள்கையுடன் இருக்கிறார்கள். பதவி என்பதை கூட்டணியில் இருப்பவர்கள் விரும்பவில்லை என்பதே எனது கருத்து. தனித்து தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் 7 முறை ஆட்சி அமைத்துள்ளோம் கூட்டணி ஆட்சி என்று இருந்ததில்லை.
வருங்காலங்களில் எங்களது முதலமைச்சர் கொள்கை திட்டங்களை அறிவிப்பார். அதற்கு ஏற்றார் போல் தேர்தல் களம் அமையும்.
உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. முதலமைச்சரின் ஆலோசனை கேட்கப்படும். மேலும் அதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் எப்போது நடத்தப்படும் எனக் கூறுகிறார்களோ அப்போது நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 30 கிலோ கஞ்சா, ஆட்டோ மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
- தமீம் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் கடந்த மே 20ந் தேதி திண்டுக்கல்-திருச்சி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோவில் அருகே சந்தேகப்படும்படியாக வந்த ஆட்டோ, கார் ஆகியவற்றை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் பாறைமேட்டு தெருவை சேர்ந்த சுப்பிரமணி (வயது 44), மது பாலாஜி (31), நாகல் நகரை சேர்ந்த மதன்குமார் (32), ரவுண்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் (22), வேடப்பட்டியை சேர்ந்த மாதவன் (23), கொசவபட்டியைச் சேர்ந்த ராஜா (24) என்பதும் விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 6 பேரையும் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குளித்தலை சுரேஷ்குமார் (45) என்பவரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களிடமிருந்து 30 கிலோ கஞ்சா, ஆட்டோ மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது
இந்த வழக்கில் கடந்த 5 மாதமாக சென்னை அய்யனார் புரத்தைச் சேர்ந்த தமீம் (63) என்பவர் தலைமறைவாக இருந்தார். இதையடுத்து திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் டி.எஸ்.பி முருகன், இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ், தலைமை காவலர்கள் பழனி முத்து, செல்வகுமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் சென்னையில் பதுங்கி இருந்த தமீம் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.






