என் மலர்
தர்மபுரி
- அ.தி.மு.க. - தி.மு.க.வினர் இடையே பெரும் வாக்குவாதம்.
- கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த வேப்பனஅள்ளி பகுதியில் உள்ள கும்பாளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ராமன் தொட்டி கிராமம் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் இருந்து சின்னாறு தொட்டி வரை தார் சாலை அமைக்க வேண்டும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று ஒன்றிய அரசு ரூ.5 கோடி மதிப்பிலான தார்சாலை அமைக்க தி.மு.க. நிர்வாகியும், கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி மன்ற குழு தலைவருமான மணிமேகலை நாகராஜ் தலைமையில், கும்பாளம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் பூமி பூஜை தொடங்கியது.
இந்த நிகழ்ச்சி நடைபெறுவதை அறிந்த அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், வேப்பனஅள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.பி.முனுசாமி தனது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து இந்த தார் சாலை பணிக்கு தங்களுக்கும் பங்கு உள்ளது என கூறி தனியாக பூமிபூஜை போடுவதற்காக வந்ததாக தெரிகிறது.
அப்போது அங்கு வந்த தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் நாகேஷ், பாக்கியராஜ் மற்றும் தி.மு.க.வினர் இந்த பகுதியில் எங்கள் கட்சியை சேர்ந்தவர் தலைவராக உள்ளார். எனவே எம்.எல்.ஏ. மீண்டும் பூஜை போடக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை கண்டித்து பேரிகை-தீர்த்தம் சாலையில் திடீரென்று கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க.வினர் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அ.தி.மு.க.வினர் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து ஓசூர் ஏ.எஸ்.பி. அக்ஷய் அணில் மற்றும் பேரிகை போலீசார் இருதரப்பினர் இடையே சமாதானம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் 2 மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- கர்நாடக மற்றும் கேரளா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது.
- தொடர் விடுமுறை காரணமாக நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லக்கு குவிந்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடக மற்றும் கேரளா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழுமையாக நிரம்பி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவு காரணமாக நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கடந்த இரு தினங்களாக வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தது.
இந்த நீர்வரத்தானது நேற்று காலை வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக சரிந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேலும் சரிந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.
நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இந்த நீர்வரத்தை கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளதால் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடையாக தொடர்ந்து 8-வது நாளாக நீடிக்கிறது.
தொடர் விடுமுறை காரணமாக நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லக்கு குவிந்தனர். பரிசலில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- இந்த ஆண்டு காவிரி ஆற்றில் ஒரு நாள் மட்டும் 17 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாக கலந்து உள்ளது.
- தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் உபரி நீரை நிரப்புவதற்கு 2 டி.எம்.சி. தண்ணீர் போதுமானது. இந்த தண்ணீர் ஒரு ஆண்டிற்கு போதுமானது.
தருமபுரி:
தருமபுரி பென்னாகரம் சாலையில் உள்ள பா.ம.க. கட்சி நிர்வாகி இல்லத்திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று தருமபுரிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பசுமை தாயகத்தின் தலைவர் சவுமியா அன்புமணி ஆகியோர் இன்று வருகை தந்தனர்.
அப்போது அன்புமணி ராமதாஸ் நிருபர்களை சந்தித்து கூறியதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் ஒரே ஒரு பிரச்சனை பெரிய பிரச்சனையாக உள்ளது. அது தண்ணீர் பிரச்சனை. இந்த பிரச்சனை தீர்க்க பா.ம.க.வினர் பல கட்டங்களாக போராட்டங்களை மருத்துவர் ராமதாஸ் தலைமையில் அரங்கேற்றி இருக்கிறோம். அதன் விளைவாக நிறைவேற்றப்பட்டது தான், ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம்.
தருமபுரி மாவட்டம் முழுவதும் விவசாயம் நிறைந்த மாவட்டம் திகழ்கிறது. அப்படிப்பட்ட இந்த மாவட்டத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் வசதி இல்லாததால், 2, 3, அல்லது 5 ஏக்கர் வரை நிலம் வைத்து முதலாளியாக இருந்த விவசாயிகள் தற்போது கூலி ஆட்களாக திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், பெங்களூரு, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கும் தினக்கூலிகளாக வேலைக்கு செல்கின்றனர்.
தருமபுரி மாவட்டத்திலேயே அவர்கள் சொந்தமாக தொழில் செய்து முன்னேறுவதற்காக பல திட்டங்களை பா.ம.க. முன்னெடுத்தது. இதில் எண்ணகோள்புதூர் திட்டம், ஆணைமடுவு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் முக்கிய திட்டமான காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்ற கோரி கையெழுத்து இயக்கம் தொடங்கி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி அதனை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்தோம். இதுபோன்று பல கட்டங்களாக போராட்டம் நடத்தியதன் விளைவாக சென்ற ஆட்சியில் காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்றுவதாக அவர் அறிவிப்பையும் வெளியிட்டனர்.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு காவிரி உபரி நீர் திட்டம் குறித்து எந்தவித அறிவிப்பு இதுவரை வெளியிடவில்லை.
இந்த ஆண்டு காவிரி ஆற்றில் ஒரு நாள் மட்டும் 17 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாக கலந்து உள்ளது. ஆனால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் உபரி நீரை நிரப்புவதற்கு 2 டி.எம்.சி. தண்ணீர் போதுமானது. இந்த தண்ணீர் ஒரு ஆண்டிற்கு போதுமானது.
இதைக்கூட நிறைவேற்ற தி.மு.க. அரசுக்கு மனமில்லை. அதனால் அகிம்சை முறையில் முதற்கட்டமாக அடுத்த மாதம் 4-ந்தேதி தருமபுரியில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை அனைத்து கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெறும். இதற்கு அரசுக்கு செவி சாய்க்கவில்லை என்றால், எங்களது போராட்டம் வேறு விதமாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கர்நாடக மற்றும் கேரளா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
- கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழுமையாக நிரம்பின.
ஒகேனக்கல்:
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அருவியில் குளிப்பதற்கான தடை தொடர்ந்து 5வது நாளாக நீடிக்கிறது.
கர்நாடக மற்றும் கேரளா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழுமையாக நிரம்பின. இதன் காரணமாக இரு அணைகளில் இருந்து 20 ஆயிரத்து 319 கன அடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவு காரணமாக நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக வந்தது.
இன்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
நீர்வரத்து அதிகரித்ததால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதேபோன்று காவிரி ஆற்றிலும் தண்ணீர் சீறி பாய்ந்து சென்றது.
இந்த நீர்வரத்தை கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலு வில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளதால் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடையாக தொடர்ந்து 5-வது நாளாக நீடிக்கிறது.
- தினமும் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எங்களது ஓட்டலில் உணவு சாப்பிட வருவது வழக்கம்.
- சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவேரி முத்தமிழை தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது.
தருமபுரி:
தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என தினந்தோறும் 3000-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது.
இந்த போலீஸ் நிலையத்தில் போலீசார் சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவேரி தினமும் மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஓட்டலில் உணவு சாப்பிடுவது வழக்கம். அவ்வாறு சாப்பிடும் உணவிற்கு கையில் உள்ள பணத்தை கொடுத்துவிட்டு மீதியை பின்பு தருகிறேன் என கூறிவிட்டு சென்று விடுவார் என கூறப்படுகிறது.
இதேபோன்று நேற்று சாப்பிட்ட உணவிற்கு பணம் கொடுக்காமல் பின்பு தருவதாக கூறி உள்ளார். அதேபோல் மாலை உணவு சாப்பிட வந்த காவேரி உணவை சாப்பிட்டுவிட்டு சென்றபோது கடை உரிமையாளர் முத்தமிழ் நேற்று சாப்பிட்ட உணவிற்கும் சேர்த்து பணம் கேட்டு உள்ளார். இதனால் கோபமடைந்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவேரி முத்தமிழை தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது.
மேலும் பணத்தை தூக்கி வீசிவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. மேலும் ஆத்திரமடைந்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவேரி தனது காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி அடிக்க சென்ற சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கடை உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறியதாவது:-
தினமும் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எங்களது ஓட்டலில் உணவு சாப்பிட வருவது வழக்கம். இவர் உணவு சாப்பிட்டு விட்டு பாக்கி வைத்து விட்டு சென்று விடுவார். மேலும் சாப்பிட்ட உணவிற்கு முழு தொகையை தராமல் கையில் இருப்பதை மட்டும் கொடுத்துவிட்டு செல்வார்.
நேற்று முன்தினம் சாப்பிட்ட உணவிற்கும் சேர்த்து பணம் கேட்டதற்காக தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி என்னை தாக்க வந்தார்.
இது குறித்து தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்க உள்ளேன் என தெரிவித்தார்.
இந்நிலையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷூவை கழற்றி ஓட்டல் உரிமையாளரை தாக்க முயன்ற சி.சி.டி.வி. காட்சி வெளியானதை அடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின்பேரில் தருமபுரி உதவி போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் விசாரணை நடத்தினர்.
சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவேரியை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி மகேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
- நீர்வரத்து குறைந்தபோதிலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- குளிப்பதற்கு தொடர்ந்து இன்று 3-வது நாளாக தடையானது நீடித்து வருகிறது.
ஒகேனக்கல்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நீரானது தமிழக-கர்நாடகா எல்லையில் உள்ள பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் காவிரி கரையோரங்களில் பெய்த கனமழையின் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து கடந்த சில தினங்களாக அதிகரித்த வண்ணமாக இருந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவு காரணமாக நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படி யாக குறைந்து நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக வந்தது.
இன்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.
நீர்வரத்து குறைந்தபோதிலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதேபோன்று காவிரி ஆற்றிலும் தண்ணீர் சீறி பாய்ந்து சென்றது.
இந்த நீர்வரத்து குறைந்ததால், சின்னாறு, கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து பரிசல் இயக்கம் மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. குளிப்பதற்கு தொடர்ந்து இன்று 3-வது நாளாக தடையானது நீடித்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர்.
- காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் காரணமாகவும் கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீரானது வினாடிக்கு 5,208 கன அடியில் இருந்து நேற்று வினாடிக்கு 10 ஆயிரத்து 576 கன அடியாக அதிகரித்து உபரி நீரானது வெளியேற்றப்பட்டதாலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்த நீரானது நேற்று தமிழக-கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வர தொடங்கியது.
இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,500 கன அடியாக இருந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீராலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாகவும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இன்றும், நாளையும் பள்ளிகள், கல்லூரிகள் தொடர் விடுமுறை காரணமாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர்.
அவர்கள் பரிசலில் சென்று சவாரி செய்து மகிழ்ந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.
- ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே குவிய தொடங்கியுள்ளனர்.
ஒகேனக்கல்:
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தளம் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது. இங்கு விடுமுறை நாட்களிலும் வார விடுமுறை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக கர்நாடகா அணைகளில் இருந்து வெளியறே்றப்பட்ட தண்ணீரால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
இதன் காரணமாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. அதனை தொடர்ந்து நீர்வரத்து படிப்படியாக காவிரி ஆற்றில் குறைந்ததையடுத்து சின்னாறு கோத்திக்கல் பரிசல் துறையிலிருந்து பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக வந்ததால், குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையானது நீக்கி சுற்றுலாப் பயணிகள் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. இருந்த போதிலும் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து செல்கிறது.
குளிப்பதற்காக விதிக்கப்பட்ட தடையை மாவட்ட நிர்வாகம் நீக்கியதால், ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் நேற்று முதலே சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். மேலும், இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகள் தொடர் விடுமுறை என்பதால் இன்று ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே குவிய தொடங்கியுள்ளனர்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்தும் அருவி மற்றும் ஆற்றுபகுதிகளில் குளித்தும். மீன் சமையலை உண்டும் ருசித்தும் மகிழ்ந்தனர்.
கடந்த வாரங்களில் நீர்வரத்து அதிகரித்ததின் காரணமாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது நீர்வரத்து குறைந்ததன் காரணமாக மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததை தொடர்ந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் பரிசல் ஓட்டிக்கல் மாசஜ்செய்யும் தொழிலாளர்கள் மீன் சமையல் செய்யும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.
- போலீசார் இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- போலீசார் அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா விற்பனை அதிகரித்து உள்ளது. பல இடங்களில் கஞ்சா போதைக்கு கல்லூரி மாணவர்கள் அடிமையாகி வருவது வாடிக்கையாக உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட போலீசார் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி சோதனையில் ஈடுபட்டு கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தருமபுரி மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடித்து போலீஸ் நிலைய ஆய்வாளர் கலையரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கோபி, எஸ் எஸ் ஐ முருகன், தலைமை போலீசார் கபில்தேவ், பாரதி, சிவகுரு, விஜயகுமார், உள்ளிட்ட போலீசார் பாலக்கோடு பகுதியில் உள்ள தக்காளி மார்க்கெட் பின்புறம் சென்று சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டுபிடித்து விசாரித்தனர். அதில் வெள்ளிச்சந்தை அருகே உள்ள கெட்டுகொட்டாய் பகுதியில் கஞ்சா இருக்கும் இடம் தெரிய வரவே போலீசார் விரைந்து சென்று அப்பகுதியில் சோதனை செய்ததில் வீட்டிற்கு பின்புறம் 6 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை மேற்கொண்டதில் வெள்ளி சந்தை அருகே கெட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்த மாதேஷ் என்பவரது மகன் தமிழரசன் (25) என்பதும் மற்றும் பாலக்கோடு நகரப் பகுதியைச் சேர்ந்த மாதேஸ் என்பவரின் மகன் மணிகண்டன் (25) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து மொத்த விலைக்கு கஞ்சா வாங்கி கடத்தி வரப்பட்டு மற்ற பகுதிகளுக்கு சில்லரையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
அதேபோல் நேற்று முன்தினம் அரூர் அரசு மருத்துவமனை பகுதியில் கஞ்சா பதுக்கு விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தில் இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு பணிக்கு செல்லாமல் கஞ்சா கடத்தல் செய்து விற்பனை செய்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கர்ப்பிணி வீட்டிற்க்கு சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு பெண் செல்வதை கண்டவர்கள்.
- மீண்டும் கருக்கலைப்பு சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா பாப்பாரப்பட்டி அருகே கிட்டனஅள்ளியில் கர்ப்பிணி பெண்ககளின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்வதாக மாவட்ட கலெக்டர் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அவரது உத்தரவின் பேரில் இணை இயக்குநர் சாந்தி, தலைமையில் மருத்துவர் பாலசுப்ரமணியம், மருந்தாளுநர் முத்துசாமி உள்ளிட்ட குழுவினர் கிட்டன அள்ளி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள கர்ப்பிணி வீட்டிற்க்கு சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு பெண் செல்வதை கண்டவர்கள், சிறிது நேரம் காத்திருந்து திடீரென வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தனர்.
விசாரித்தில் கர்ப்பிணிக்கு 8 வருடத்திற்க்கு முன்னர் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளதும், தற்போது வயிற்றில் உள்ள குழந்தையும் பெண் குழந்தை என தெரிந்ததால் கருக்கலைப்பு செய்ய முயன்றது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் பனமரத்துபட்டியை அடுத்த குள்ளப்பநாயக்கனூரை சேர்ந்த சித்ராதேவி (42) என்பவரை பிடித்து பாப்பாரப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். சித்ராதேவியை கைது செய்த போலீசார் மேலும் இதில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் கருக்கலைப்பு சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- திருமணமாகி சில காலங்கள் எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் இந்த கோவிலில் வேண்டி கொண்டோம்.
- பின்னர் 5 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்தது.
பாப்பிரெட்டிப்பட்டி:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பிரசித்தி பெற்ற இருளப்பட்டி காளியம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த கோவிலில் வழக்கம் போல இந்த ஆண்டும் தேர் திருவிழா இன்று காலை தொடங்கியது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சார்ந்த சுகனவிலாசம் (வயது 30). அவரது மனைவி அனிதா (27). வங்கி ஊழியரான அனிதாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால் இருளப்பட்டி காளியம்மன் கோவிலில் குழந்தை வரம் கேட்டு வேண்டியுள்ளார்.
இந்த நிலையில் அனிதாவுக்கும் குழந்தை பிறந்ததால், அதற்குப் பரிகாரமாக நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக இருளப்பட்டி தேர் திருவிழாவில் 2500 பக்தர்களுக்கு உணவு சமைத்து அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த சிலர் அனிதாவை அன்னதானம் வழங்க விடாமல் தடுத்து கோவிலை விட்டு வெளியேற்றினர். இதனால் தம்பதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அனிதா கூறியதாவது:-
நான் இந்த இருளப்பட்டி பகுதியை சேர்ந்தவள். எனக்கு திருமணமாகி கணவருடன் ஊத்தங்கரையில் வசித்து வருகிறேன். திருமணமாகி சில காலங்கள் எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் இந்த கோவிலில் வேண்டி கொண்டோம். பிறகு எங்களுக்கு குழந்தை பிறந்தது.
அதற்கு பரிகாரமாக இந்த கோவிலில் தேர்த்திருவிழாவின்போது அன்னதானம் வழங்குவதற்காக வந்தோம். அப்போது மாற்று சமூகத்தை சார்ந்த ஒரு சிலர் பழங்குடியின பெண்ணான நீங்கள் அன்னதானம் வழங்க கூடாது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள் வேண்டுதல் நிறைவேற்ற ஒத்துழையுங்கள் என கெஞ்சி கேட்டோம். இருந்தபோதிலும் அவர்கள் எங்களை விரட்டினர்.
இந்த நிலையில் அங்கு வந்த போலீசாரிடமும் நாங்கள் அன்னதானம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். ஆனால் போலீசார் எங்களை இங்கிருந்து வெளியேற்றுவதிலேயே குறியாக செயல்பட்டனர்.
நாங்கள் எவ்வளவு எடுத்துக் கூறியும் போலீசார் எங்களை கோவில் பகுதியில் இருந்து வெளியேற்றி விட்டனர். மேலும் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் அரசின் அனுமதி பெற்று அன்னதானம் இடுவதற்கும் அனுமதிக்காமல் எங்களது சமையல் செய்யும் சிலிண்டர் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தி மிரட்டினர். இந்த நிலையில் ஒரு வழியாக மாலை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டோம் என்று தெரிவித்தார்.
சம்பவம் குறித்து பாப்பி ரெட்டிப்பட்டி வட்டாட்சியரிடம் கேட்டபோது, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் அனைத்து சமூக மக்களும் வழிபாடு செய்வதற்கும் அன்னதானம் வழங்குவதற்கும் முழு உரிமை உண்டு. அதை யாராலும் தடுக்க முயற்சிகள் மேற்கொண்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இச்சம்பவம் குறித்து அறிந்த உடனேயே சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறையினர் அந்த பெண்ணை அன்னதானம் வழங்குவதற்கு எந்த தடையும் ஏற்படுத்தக் கூடாது என வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் அன்னதானம் வழங்குவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது என்றார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து அரூர் டி.எஸ்.பி. ஜெகநாதன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த சம்பவம் குறித்து அவர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாப்பிரெட்டிப் பட்டியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் காளியம்மன் கோவிலில் பழங்குடியின பெண் அன்னதானம் வழங்குவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- பிறந்தநாள் கொண்டாட்டம் டிஜிட்டல் பேனர் வைக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
- பேனரை கிழித்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனர் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டதால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் 62-வது பிறந்த நாளையொட்டி இன்று தமிழகம் முழுவதும் அவரது கட்சி தொண்டர்களால் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சாமியாபுரம் கூட்ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு நல திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியும், பிறந்தநாள் கொண்டாட்டம் டிஜிட்டல் பேனர் வைக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி கூட்ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் சார்பில் பெரிய அளவிலான டிஜிட்டல் பேனர்கள் நெடுஞ்சாலையோரம் தொண்டர்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த பேனர்களை நள்ளிரவில் மர்ம நபர்கள் கிழித்து விட்டுச் சென்றுள்ளனர். இன்று அதிகாலை 5 மணிக்கு பேனர் கிழிக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்த கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 20-க்கு மேற்பட்டவர்கள் சேலம்-அரூர் சாலையில் திரண்டு வந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேனர் கிழித்தவர்கள் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். இந்த போராட்டம் சுமார் ½ மணி நேரம் நடைபெற்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேனரை கிழித்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து கட்சி தொண்டர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் அந்த பகுதியில் போலீசார் கண்காணித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று அதிகாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்த நாள் பேனர் கிழிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.






