என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த ஒரு வாரமாக நீர் வரத்து கடுமையாக சரிந்து வந்தது. நேற்று மாலை வரை 3 ஆயிரம் கன அடி அளவில் மட்டுமே வந்தது.

    இந்த நிலையில் நேற்றிரவு கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதியான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது.

    இதனால் ஒகேனக்கல்லுக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி 5 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து வந்தது.

    மெயின் அருவி, சினி பால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

    நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • இன்று காலை விடிந்து நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவரவில்லை.
    • கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தண்டுகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மார்கண்டன்.

    இவரது மகன் சிவபிரகாசம் (வயது47). இவருக்கு திருமணமாகி பொன்னுருவி என்ற மனைவியும், நந்தகுமார் என்ற மகனும், ரம்யா, நித்யா, சந்தியா ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.

    சிவபிரகாசம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் தண்டுகாரன்பட்டியில் உள்ள சிவபிரகாசத்தின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார். இதையொட்டி உறவினர் வீட்டின் அருகே உள்ள சென்றாய பெருமாள் கோவில் பகுதியில் நேற்று தெருக்கூத்து நடைபெற்றது. அதனை பார்ப்பதற்காக சிவபிரகாசம் வீட்டில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு சென்றார்.

    இன்று காலை விடிந்து நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவரவில்லை.

    இந்த நிலையில் சென்றாய பெருமாள் கோவில் பின்புறம் பகுதியில் உள்ள புதரின் அருகே சிவபிரகாசம் கை கட்டப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை இன்று காலை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைநதனர்.

    இந்த சம்பவம் குறித்து சிவபிரகாசத்தின் மனைவி மற்றும் உறவினர்களிடம் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த சிவபிரகாசத்தின் மனைவி மற்றும் மகன், மகள்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

    சம்பவ குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன் மற்றும் தொப்பூர் போலீசார் அங்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது சிவபிரகாசத்தை மர்மநபர்கள் யாரோ சிலர் கையை கட்டிப்போட்டு அடித்து கொன்று விட்டு சுமார் 200 மீட்டர் தொலைவில் இழுத்து வந்து புதரின் அருகே போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    பின்னர் போலீசார் சிவபிரகாசத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவபிரகாசத்தை முன்விரோதம் காரணமாக யாராவது அடித்து கொலை செய்தனரா? அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் யாராவது அடித்து கொலை செய்தனரா? என்ற பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • காவிரி ஆற்றிற்கு வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
    • போலீசார், வருவாய்த்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழைக்கு ஏற்ப ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் காலையில் வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக இருந்தது.

    இதனால் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடைவிதித்து இருந்தது. இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததன் எதிரொலியாக, ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து குறைந்தது.

    காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. இருப்பினும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதுடன், காவிரி ஆற்றில் பாய்ந்து ஓடுகிறது. காவிரி ஆற்றிற்கு வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக உள்ளதால் அருவிகள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்க தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி அனுமதி வழங்கி உள்ளார். மேலும் போலீசார், வருவாய்த்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு முற்றிலுமாக குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிய தொடங்கியது.
    • நீர் வரத்தானது படிப்படியாக குறைந்து தற்போது இன்று வினாடிக்கு 8000 கன அடியாக நீடித்து வருகிறது.

    ஒகேனக்கல்:

    தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி கரையோரங்களில் மழையின் காரணமாகவும் கர்நாடக அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது.

    இந்த நிலையில் கரையோரங்களில் பெய்த மழையின் அளவு அதிகரித்ததால், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு வினாடிக்கு 18,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு முற்றிலுமாக குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிய தொடங்கியது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு நீர்வரத்து 17,000 கன அடியாக இருந்த நிலையில் நேற்று மேலும் குறைந்து வினாடிக்கு 12,000 கன அடியாக நீடித்து வந்தது.

    இந்த நீர் வரத்தானது படிப்படியாக குறைந்து தற்போது இன்று வினாடிக்கு 8000 கன அடியாக நீடித்து வருகிறது. நீர்வரத்து குறைந்தபோதிலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.

    நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க மாவட்ட நிர்வாகம் 2 நாட்களுக்குப் பிறகு மீண்டும் அனுமதி வழங்கி உள்ளது.

    • லஞ்சம் தர விருப்பம் இல்லாத நாகன் இது குறித்து தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார்.
    • நாகனிடம், முருகேசன் லஞ்ச பணத்தை பெறும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.

    பாலக்கோடு:

    பாலக்கோடு அடுத்த நடுகுட்லானஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் நாகன்.

    இவருடைய தாய் காளியம்மாளுக்கு, இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்யும் வகையில் சிக்கதோரணபெட்ட வருவாய் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் (வயது 47) என்பவரிடம் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் மனு கொடுத்தார்.

    ஆனால் கிராம நிர்வாக அலுவலர், ரூ.5ஆயிரம லஞ்சம் கொடுத்தால் ஓய்வூதியம் வாங்கி தர ஏற்பாடு செய்ய முடியும் என கூறி உள்ளார்.

    லஞ்சம் தர விருப்பம் இல்லாத நாகன் இது குறித்து தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார்.

    அதனை தொடர்ந்து 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி அன்று தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை நாகனிடம் கொடுத்து வி.ஏ.ஓ, கேட்ட லஞ்ச பணத்தை கொடுக்க செய்தனர்.

    நாகனிடம், முருகேசன் லஞ்ச பணத்தை பெறும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு விசாரணை தர்மபுரி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, தலைமை குற்றவியல் நடுவர் சந்தோஷ், முருகேசனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

    • ஆர்த்தியின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள தேவராஜ பாளையம் அருகே கருமாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ். விவசாயி.

    இவரது மகன் கோவிந்தராஜ் (வயது 27). டிரைவரான இவர் கனரக வாகனம் ஓட்டி வந்தார்.

    இவர் அதேபகுதியில் உள்ள போதக்காடு பழங்குடியினத்தைச் சேர்ந்த புகழேந்தியின் மகள் ஆர்த்தி (24) என்பவரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். ஒரு மகன் என 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வீட்டில் ஆர்த்தி பிணமாக இறந்து கிடந்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆர்த்தியின் உறவினர்கள் வீட்டில் வந்து பார்த்தபோது கணவன் கோவிந்தராஜ், மாமனரும், வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

    தகவல் அறிந்து வந்த அரூர் போலீசார் மற்றும் தடய அறிவியல் துறையினர் பிணமாக கிடந்த ஆர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே இறந்து போன ஆர்த்தியின் உறவினர்கள் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்த்தியை கொன்றவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அரூர் டி.எஸ்.பி. ஜெகநாதன் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து தலைமறைவாக இருந்த கணவர் கோவிந்தராஜை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ஆர்த்தியை கொன்றதை அவரது கணவர் கோவிந்தராஜ் என்பது தெரியவந்தது. உடனே போலீசார் இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து ஆர்த்தியின் கணவர் கோவிந்தராஜை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

    போதக்காடு பகுதியைச் சேர்ந்த புகழேந்தியின் மூத்த மகளான ஆர்த்தி பள்ளியில் படிக்கும் போது தன்னுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. எங்களது காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. இந்த நிலையில் நானும், ஆர்த்தியும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டேன். இந்த நிலையில் எங்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தது. சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தோம்.

    இதற்கிடையே ஆர்த்தி பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், நாங்கள் கலப்பு திருமணம் செய்து கொண்டதை அரசு சார்பில் கலப்பு திருமணம் நிதிஉதவி கிடைப்பதற்காக விண்ணப்பித்து இருந்தோம். அந்த பணம் அவருக்கு கிடைத்தது.

    மேலும், தனக்கு பணம் தேவைப்பட்டதால், ஆர்த்தியிடம் அவரது வீட்டில் வரதட்சணை பணம் வாங்கி வருமாறு கூறினேன். இதற்கிடையே கலப்பு திருமணம் நிதிஉதவி பணம் ஆர்த்திக்கு வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து அவரிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டேன். சம்பவத்தன்று மீண்டும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது எனது மனைவி ஆர்த்தியை சரமாரியாக தாக்கினேன். இதில் ஆத்திரம் தீராத நான் அவரை கழுத்தை நெரித்து கொன்றேன். பின்னர் எனது மூத்த மகளை மட்டும் என்னுடன் அழைத்து சென்றுவிட்டேன். எனது மனைவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஆர்த்தியின் உறவினர்கள் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், என்னை விசாரிக்க போலீசார் தேடியபோது சிக்கி கொண்டேன்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.

    திருமணமாகி 7 வருடங்கள் ஆனநிலையில் ஆர்த்தி இறந்த சம்பவம் குறித்து பிடிப்பட்ட கோவிந்தராஜிடம் விசாரணை நடத்த அரூர் ஆர்.டி.ஓ. வில்சன் ராஜசேகர் முன்னிலையில் இன்று போலீசார் ஆஜர்ப டுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். இந்த சம்பவம் ஆர்த்தியின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அ.தி.மு.க. - தி.மு.க.வினர் இடையே பெரும் வாக்குவாதம்.
    • கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த வேப்பனஅள்ளி பகுதியில் உள்ள கும்பாளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ராமன் தொட்டி கிராமம் அமைந்துள்ளது.

    இந்த கிராமத்தில் இருந்து சின்னாறு தொட்டி வரை தார் சாலை அமைக்க வேண்டும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று ஒன்றிய அரசு ரூ.5 கோடி மதிப்பிலான தார்சாலை அமைக்க தி.மு.க. நிர்வாகியும், கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி மன்ற குழு தலைவருமான மணிமேகலை நாகராஜ் தலைமையில், கும்பாளம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் பூமி பூஜை தொடங்கியது.

    இந்த நிகழ்ச்சி நடைபெறுவதை அறிந்த அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், வேப்பனஅள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.பி.முனுசாமி தனது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து இந்த தார் சாலை பணிக்கு தங்களுக்கும் பங்கு உள்ளது என கூறி தனியாக பூமிபூஜை போடுவதற்காக வந்ததாக தெரிகிறது.

    அப்போது அங்கு வந்த தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் நாகேஷ், பாக்கியராஜ் மற்றும் தி.மு.க.வினர் இந்த பகுதியில் எங்கள் கட்சியை சேர்ந்தவர் தலைவராக உள்ளார். எனவே எம்.எல்.ஏ. மீண்டும் பூஜை போடக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த சம்பவத்தை கண்டித்து பேரிகை-தீர்த்தம் சாலையில் திடீரென்று கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க.வினர் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.


    அப்போது அ.தி.மு.க.வினர் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

    இதைத்தொடர்ந்து, அங்கு திரண்டிருந்த தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஓசூர் ஏ.எஸ்.பி. அக்ஷய் அணில் மற்றும் பேரிகை போலீசார் இருதரப்பினர் இடையே சமாதானம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் 2 மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • கர்நாடக மற்றும் கேரளா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது.
    • தொடர் விடுமுறை காரணமாக நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லக்கு குவிந்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடக மற்றும் கேரளா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழுமையாக நிரம்பி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவு காரணமாக நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கடந்த இரு தினங்களாக வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக நீடித்து வந்தது.

    இந்த நீர்வரத்தானது நேற்று காலை வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக சரிந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேலும் சரிந்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

    நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    இந்த நீர்வரத்தை கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளதால் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடையாக தொடர்ந்து 8-வது நாளாக நீடிக்கிறது.

    தொடர் விடுமுறை காரணமாக நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லக்கு குவிந்தனர். பரிசலில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

    • இந்த ஆண்டு காவிரி ஆற்றில் ஒரு நாள் மட்டும் 17 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாக கலந்து உள்ளது.
    • தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் உபரி நீரை நிரப்புவதற்கு 2 டி.எம்.சி. தண்ணீர் போதுமானது. இந்த தண்ணீர் ஒரு ஆண்டிற்கு போதுமானது.

    தருமபுரி:

    தருமபுரி பென்னாகரம் சாலையில் உள்ள பா.ம.க. கட்சி நிர்வாகி இல்லத்திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று தருமபுரிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பசுமை தாயகத்தின் தலைவர் சவுமியா அன்புமணி ஆகியோர் இன்று வருகை தந்தனர்.

    அப்போது அன்புமணி ராமதாஸ் நிருபர்களை சந்தித்து கூறியதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் ஒரே ஒரு பிரச்சனை பெரிய பிரச்சனையாக உள்ளது. அது தண்ணீர் பிரச்சனை. இந்த பிரச்சனை தீர்க்க பா.ம.க.வினர் பல கட்டங்களாக போராட்டங்களை மருத்துவர் ராமதாஸ் தலைமையில் அரங்கேற்றி இருக்கிறோம். அதன் விளைவாக நிறைவேற்றப்பட்டது தான், ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம்.

    தருமபுரி மாவட்டம் முழுவதும் விவசாயம் நிறைந்த மாவட்டம் திகழ்கிறது. அப்படிப்பட்ட இந்த மாவட்டத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் வசதி இல்லாததால், 2, 3, அல்லது 5 ஏக்கர் வரை நிலம் வைத்து முதலாளியாக இருந்த விவசாயிகள் தற்போது கூலி ஆட்களாக திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், பெங்களூரு, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கும் தினக்கூலிகளாக வேலைக்கு செல்கின்றனர்.

    தருமபுரி மாவட்டத்திலேயே அவர்கள் சொந்தமாக தொழில் செய்து முன்னேறுவதற்காக பல திட்டங்களை பா.ம.க. முன்னெடுத்தது. இதில் எண்ணகோள்புதூர் திட்டம், ஆணைமடுவு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் முக்கிய திட்டமான காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்ற கோரி கையெழுத்து இயக்கம் தொடங்கி 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி அதனை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்தோம். இதுபோன்று பல கட்டங்களாக போராட்டம் நடத்தியதன் விளைவாக சென்ற ஆட்சியில் காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்றுவதாக அவர் அறிவிப்பையும் வெளியிட்டனர்.

    இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு காவிரி உபரி நீர் திட்டம் குறித்து எந்தவித அறிவிப்பு இதுவரை வெளியிடவில்லை.

    இந்த ஆண்டு காவிரி ஆற்றில் ஒரு நாள் மட்டும் 17 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாக கலந்து உள்ளது. ஆனால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் உபரி நீரை நிரப்புவதற்கு 2 டி.எம்.சி. தண்ணீர் போதுமானது. இந்த தண்ணீர் ஒரு ஆண்டிற்கு போதுமானது.

    இதைக்கூட நிறைவேற்ற தி.மு.க. அரசுக்கு மனமில்லை. அதனால் அகிம்சை முறையில் முதற்கட்டமாக அடுத்த மாதம் 4-ந்தேதி தருமபுரியில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை அனைத்து கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெறும். இதற்கு அரசுக்கு செவி சாய்க்கவில்லை என்றால், எங்களது போராட்டம் வேறு விதமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கர்நாடக மற்றும் கேரளா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழுமையாக நிரம்பின.

    ஒகேனக்கல்:

    ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அருவியில் குளிப்பதற்கான தடை தொடர்ந்து 5வது நாளாக நீடிக்கிறது.

    கர்நாடக மற்றும் கேரளா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழுமையாக நிரம்பின. இதன் காரணமாக இரு அணைகளில் இருந்து 20 ஆயிரத்து 319 கன அடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவு காரணமாக நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக வந்தது.

    இன்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    நீர்வரத்து அதிகரித்ததால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதேபோன்று காவிரி ஆற்றிலும் தண்ணீர் சீறி பாய்ந்து சென்றது.

    இந்த நீர்வரத்தை கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலு வில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளதால் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடையாக தொடர்ந்து 5-வது நாளாக நீடிக்கிறது.

    • தினமும் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எங்களது ஓட்டலில் உணவு சாப்பிட வருவது வழக்கம்.
    • சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவேரி முத்தமிழை தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது.

    தருமபுரி:

    தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என தினந்தோறும் 3000-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு புறக்காவல் நிலையம் அமைந்துள்ளது.

    இந்த போலீஸ் நிலையத்தில் போலீசார் சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவேரி தினமும் மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஓட்டலில் உணவு சாப்பிடுவது வழக்கம். அவ்வாறு சாப்பிடும் உணவிற்கு கையில் உள்ள பணத்தை கொடுத்துவிட்டு மீதியை பின்பு தருகிறேன் என கூறிவிட்டு சென்று விடுவார் என கூறப்படுகிறது.

    இதேபோன்று நேற்று சாப்பிட்ட உணவிற்கு பணம் கொடுக்காமல் பின்பு தருவதாக கூறி உள்ளார். அதேபோல் மாலை உணவு சாப்பிட வந்த காவேரி உணவை சாப்பிட்டுவிட்டு சென்றபோது கடை உரிமையாளர் முத்தமிழ் நேற்று சாப்பிட்ட உணவிற்கும் சேர்த்து பணம் கேட்டு உள்ளார். இதனால் கோபமடைந்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவேரி முத்தமிழை தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது.

    மேலும் பணத்தை தூக்கி வீசிவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. மேலும் ஆத்திரமடைந்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவேரி தனது காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி அடிக்க சென்ற சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து கடை உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறியதாவது:-

    தினமும் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எங்களது ஓட்டலில் உணவு சாப்பிட வருவது வழக்கம். இவர் உணவு சாப்பிட்டு விட்டு பாக்கி வைத்து விட்டு சென்று விடுவார். மேலும் சாப்பிட்ட உணவிற்கு முழு தொகையை தராமல் கையில் இருப்பதை மட்டும் கொடுத்துவிட்டு செல்வார்.

    நேற்று முன்தினம் சாப்பிட்ட உணவிற்கும் சேர்த்து பணம் கேட்டதற்காக தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி என்னை தாக்க வந்தார்.

    இது குறித்து தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்க உள்ளேன் என தெரிவித்தார்.

    இந்நிலையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷூவை கழற்றி ஓட்டல் உரிமையாளரை தாக்க முயன்ற  சி.சி.டி.வி. காட்சி வெளியானதை அடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின்பேரில் தருமபுரி உதவி போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் விசாரணை நடத்தினர்.

    சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவேரியை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி மகேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    • நீர்வரத்து குறைந்தபோதிலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • குளிப்பதற்கு தொடர்ந்து இன்று 3-வது நாளாக தடையானது நீடித்து வருகிறது.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நீரானது தமிழக-கர்நாடகா எல்லையில் உள்ள பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதும் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் காவிரி கரையோரங்களில் பெய்த கனமழையின் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து கடந்த சில தினங்களாக அதிகரித்த வண்ணமாக இருந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவு காரணமாக நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படி யாக குறைந்து நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக வந்தது.

    இன்று காலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் சரிந்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

    நீர்வரத்து குறைந்தபோதிலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதேபோன்று காவிரி ஆற்றிலும் தண்ணீர் சீறி பாய்ந்து சென்றது.

    இந்த நீர்வரத்து குறைந்ததால், சின்னாறு, கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து பரிசல் இயக்கம் மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. குளிப்பதற்கு தொடர்ந்து இன்று 3-வது நாளாக தடையானது நீடித்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ×