என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஓய்வூதியம் வழங்க லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
- லஞ்சம் தர விருப்பம் இல்லாத நாகன் இது குறித்து தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார்.
- நாகனிடம், முருகேசன் லஞ்ச பணத்தை பெறும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.
பாலக்கோடு:
பாலக்கோடு அடுத்த நடுகுட்லானஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் நாகன்.
இவருடைய தாய் காளியம்மாளுக்கு, இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்யும் வகையில் சிக்கதோரணபெட்ட வருவாய் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் (வயது 47) என்பவரிடம் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் மனு கொடுத்தார்.
ஆனால் கிராம நிர்வாக அலுவலர், ரூ.5ஆயிரம லஞ்சம் கொடுத்தால் ஓய்வூதியம் வாங்கி தர ஏற்பாடு செய்ய முடியும் என கூறி உள்ளார்.
லஞ்சம் தர விருப்பம் இல்லாத நாகன் இது குறித்து தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார்.
அதனை தொடர்ந்து 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி அன்று தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை நாகனிடம் கொடுத்து வி.ஏ.ஓ, கேட்ட லஞ்ச பணத்தை கொடுக்க செய்தனர்.
நாகனிடம், முருகேசன் லஞ்ச பணத்தை பெறும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை தர்மபுரி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, தலைமை குற்றவியல் நடுவர் சந்தோஷ், முருகேசனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.






