என் மலர்tooltip icon

    கடலூர்

    • புதுப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
    • கேமராக்கள் எத்தகைய செயலுக்காக அனுப்பப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே சித்திரை சாவடி கிராமத்திற்கு இன்று காலை கழுகு ஒன்று பறந்து வந்தது. அது அந்த பகுதியில் இருந்த காமன் கோவில் மேலே பறந்து வந்து அங்கு அமர்ந்தது

    அந்தக் கழுகின் முதுகு பகுதி முன்பகுதிகளில் கேமரா பொருத்தப்பட்டிருந்தது. இதனை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த செய்தியை காட்டு தீப்போல கிராமத்துக்குள் பரவியது. அங்கு பொது மக்கள் திரண்டனர்.

    இதுகுறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கழுகு எங்கிருந்து வந்தது. யார் அனுப்பினார்கள் அதில் உள்ள கேமராக்கள் எத்தகைய செயலுக்காக அனுப்பப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • உற்சவத்தில் 9 நாட்களும் விஷேச 21 தீபாராதனை நடைபெறும்.
    • 13-ந் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன மகோற்சவ ஞானாகாச சித்சபா பிரவேசம் நடைபெறும்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம்

    இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6.15 மணிமுதல் 7 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    5-ந் தேதி வெள்ளிசந்திர பிரபைவாகன காட்சி,6-ந் தேதி தங்க ஸர்யபிரபை வாகன காட்சி, 7-ந் தேதி வெள்ளி பூத வாகனகாட்சி, 8-ந்தேதி வெள்ளி ரிஷப வாகன காட்சி (தெருவடைச்சான்) ஆகியவை நடக்கிறது.

    9-ந்தேதி வெள்ளி யானை வாகன காட்சி, 10-ந்தேதி தங்க கைலாஸ வாகன காட்சி,11-ந்தேதி தங்க ரதத்தில் பிஷாடன மூர்த்தி காட்சி, பின்னர் சோமாஸ் கந்தர் வெட்டுங்கு திரையில் வீதியுலா நடக்கிறது.

    12-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 5 மணிமுதல் 5.30 மணிக்குள் ரதயாத்ராதானம் நடராஜர், அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ரதோத்றவக் காட்சி தேர் உற்சவம் நடக்கிறது.

    13-ந் தேதி அதிகாலை 2 மணி முதல் 6 மணிவரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் மகாபிஷேகம் நடைபெறும்.

    6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரம், பஞ்ச மூர்த்தி வீதி உலா காட்சி, சித்சபையில் விஷேக ரகசிய பூஜை, 2 மணிக்கு மேல் மார்கழி ஆருத்ரா தரிசன மகோற்சவ ஞானாகாச சித்சபா பிரவேசம் நடைபெறும்.

    14-ந்தேதி இரவு முத்துப்பல்லக்கு காட்சி நடைபெறுகிறது. உற்சவத்தில் 9 நாட்களும் மாலை சாயரட்சை காலத்தில் மாணிக்க வாசகர், நடராஜர் சன்னதிக்கு வந்தவுடன் திருவெம்பாவை பாடி விஷேச 21 தீபாராதனை நடைபெறும்.

    இவ் வைபவத்தில் 10 நாட்களும் இரு வேளைகளிலும் யாகங்களும் 4 வேத (ரிக், யஜூர், சாம, அதர்வண) பாராயணங்களும், பன்னிரு திருமுறைகளும் பஞ்சமூர்த்தி வீதி உலா காட்சியும், நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சிகளும் மற்றும் ருத்ராபிஷேகம், அன்னதானமும் நடைபெறும்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை சபாநாயகர் கோவில் டிரஸ்டி பாஸ்கர தீட்சிதர் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • பஸ்களை சுங்கச்சாவடியில் நிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்துவோம்.

    கடலூர்:

    விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடியில் இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டணம் வசூல் செய்ய உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது. மேலும் கட்டண விவரங்களையும் வெளியிட்டது.

    இதுபற்றி அறிந்த கடலூர் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர், சாலை பணி முழுமை பெறாமல் சுங்க கட்டணம் வசூலிக்கக்கூடாது. மேலும் கட்டண விகிதம் அதிகமாக உள்ளது. இதை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.

    இதற்கிடையில் இந்த போராட்டத்தை யொட்டி கடலூர்-சிதம்பரம் இடையே தனியார் பஸ்கள் ஓடாது என்று அறிவித்துள்ளனர்.

    இதுபற்றி கடலூர் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் நலச்சங்க செயலாளர் தேசிங்குராஜன் கூறுகையில், கொத்தட்டை சுங்கச்சாவடியில் 50 முறை சென்றால் ஒரு மாத கட்டணம் ரூ.14 ஆயிரத்து 90 அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் வட்டார போக்குவரத்து அதிகாரி நிர்ணயித்த கால நேர அட்டவணைப்படி ஒரு நாளைக்கு 8 முதல் 10 முறை சட்டப்படி பஸ்கள் இயங்கி வருகிறது. இப்படி என்றால் 5 நாளில் ஒரு மாத கணக்கு தீர்ந்து விடும். ஆகவே இந்த கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி இன்று கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு செல்லும் 50-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் ஓடாது.

    இந்த பஸ்களை சுங்கச்சாவடியில் நிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்துவோம். இது தொடர்பாக சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தின் தீவிரம் குறித்து அறிவிப்போம் என்றார்.

    அதன்படி இன்று காலை கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் அனைத்து தனியார் பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளானார்கள்.

    அவர்கள் அரசு சார்பில் இயக்கப்பட்ட பஸ்களில் சென்றனர். இதனால் பணிக்கு செல்ல வேண்டியவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல இயலாமல் தவித்தனர்.

    இந்த நிலையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் அனைத்து பஸ்களையும் கொத்தட்டை சுங்கச்சாவடிக்கு கொண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்து உள்ளனர்.

    அதேபோல் கொத்தட்டை சுங்கச்சாவடி சுற்று வட்டார கிராம மக்களும், அனைத்து கட்சியினர், சமூகநல அமைப்பினர் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

    இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவியதால் அங்கு 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு இன்று தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
    • பேருந்துகள் இயக்கப்படாததால் வேலைக்கு செல்வோர் சிரமம் அடைந்துள்ளனர்.

    சிதம்பரம்:

    விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம் அருகே கொத்தட்டை பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி மையத்திற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த சுங்கச்சாவடி வழியாக செல்லும் தனியார் பேருந்துகளுக்கு 50 முறை சென்று வர ரூ.14,090 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நெடுஞ்சாலைப் பணிகள் இன்னும் நிறைவு பெறாத நிலையில், கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து, கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு இன்று தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் வேலைக்கு செல்வோர் சிரமம் அடைந்துள்ளனர். 

    • ஆம்னி பேருந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
    • 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற ஆம்னி பேருந்து, கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே சென்ற போது சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுக்து நின்றன. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நகராட்சி அலுவலகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
    • பல்வேறு கோணத்தில் அதிகாரிகள் மற்றும் நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பாட்டில் நகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த வளாகத்தில் தேக்கு மரங்கள் இருந்து வந்த நிலையில் மர்ம நபர்கள் வெட்டி திருடி சென்றனர். இத்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜன் நெல்லிக் குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலத்திடம், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இந்த நிலையில் இன்று காலை நகராட்சி அலுவலகத்தில் வெட்டப்பட்ட தேக்கு மரங்கள் இருந்தது. இதனை பார்த்த நகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜனுக்கு தகவல் அளித்தனர். மேலும் இரவு நேரத்தில் நகராட்சி அலுவலகம் பூட்டப்பட்டு இருக்கும் நிலையில் யார் திருடி சென்ற மரத்தை வைத்தார்கள்? என விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    மேலும் நகராட்சி அலுவலகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதுமட்டும் இன்றி வெட்டப்பட்ட தேக்கு மரத்தை நகராட்சி அலுவலர் மற்றும் ஊழியரின் உடைந்தையுடன் வைத்தார்களா? என பல்வேறு கோணத்தில் அதிகாரிகள் மற்றும் நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் இன்று காலை மர்ம நபர்களால் வெட்டி திருடப்பட்ட தேக்கு மரத்தை மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் வைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரூ.2 ஆயிரம் வழங்காததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்.
    • போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்களவாய் கிராம பொதுமக்கள் தமிழக அரசு அறிவித்த புயல் நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்காததை கண்டித்து செஞ்சி சேத்பட் சாலையில் மேல்களவாய் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாவில் மேல்மலையனூர் தாலுக்கா மற்றும் செஞ்சி தாலுகாவில் ஒரு சில பகுதிகளுக்கு குறிப்பாக வல்லம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்கலவாய், வடவானூர், வடபுத்தூர், முடையூர் உள்பட ஏராளமான கிராம பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை, எனக் கூறி இருந்த நிலையில், தற்போது மேல்களவாய் கிராம பொதுமக்கள் செஞ்சி சேத்பட் சாலையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது ஃபெஞ்சல் புயலில் பாதிக்கப்பட்டு எங்களுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ. 2 ஆயிரம் புயல் நிவாரண நிதி எங்கள் பக்கத்தில் இருக்கும் ஊர்களின் எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் பகுதியை புறக்கணித்து விட்டதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தற்போது செஞ்சி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை செய்து நிவாரண நிதி ரூ. 2 ஆயிரம் வழங்குவது சம்பந்தமாக மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் அடிப்படையில் சாலை மறியலை கைவிட்டனர்.

    • இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
    • சுடுமண் புகைப்பிடிப்பான், அகல்விளக்கு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சங்கத் தமிழ் மக்களின் நாகரீக வாழ்வை எடுத்துரைக்கும் வண்ணம் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

    இதுவரை 40-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு பழந்தமிழ் மக்களின் வாழ்வு வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. கீழடிப் பகுதி அகழாய்வுகளில் சங்ககால மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையிலான நிறைய நமக்கு தரவுகள் கிடைத்திருக்கின்றன.

    இதனைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை- விஜயகரிசல் குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், பழமையான அணிகலன் தயாரிப்பு மற்றும் விலங்குகளை வேட்டையாட பயன்படும் கருவிகள் தயாரிப்பின் மூலப்பொருட்களான ஜாஸ்பர், சார்ட் கற்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.

    பல ஆயிரம் ஆண்டுகாலமாகவே தமிழர் நாகரிகம் பொன்னும், பொருளும், அறிவும் நிறைந்த செழிப்பான மூத்த நாகரிகமாக இருந்தது என்பதற்கு மேலும் ஒரு சான்றாக வெம்பக்கோட்டை அகழாய்வில் 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தினால் ஆன மணி மற்றும் சுடு மண்ணால் ஆன பதக்கம், கழுத்தில் அணியும் நீல நிற கண்ணாடி மணி ஆகியவை கண்டெடுக்கப்பட்டது.

    மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சென்னானூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் அகழாய்வில் இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள பகண்டை தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதியில் நடந்துவரும் மேற்புற கள ஆய்வில் பழங்கால சுடுமண் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதில் பழங்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் புகைப்பிடிப்பான், அகல்விளக்கு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    • கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.
    • தினந்தோறும் எங்கள் போராட்டம் தொடரும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஃபெஞ்சல் புயல் மழை மற்றும் வெள்ள பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் 2 ரூபாய் நிவாரணத் தொகை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றது.

    இந்த நிலையில் அண்ணா கிராமம் ஒன்றியத்திற்குட்பட்ட 12 ஊராட்சிக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு 12 ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசியல் கட்சியினர் பொதுமக்கள் நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது தாசில்தார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அண்ணா கிராமம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெங்கட்ராமன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கடலூர் கலெக்டரை நேரில் சந்தித்து நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.

    இந்த நிலையில் நிவாரணத் தொகை வழங்கவில்லை என்றால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அறிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் வேல்முருகன் எம்.எல்.ஏ. எனது தொகுதிக்குட்ட்பட்ட பண்ருட்டி அண்ணாகிராமம் ஒன்றிய பகுதியில் நிவாரணத் தொகை வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுப்பி இருந்தார்.

    இதனை தொடர்ந்து இன்று காலை 12 ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அந்தந்த பகுதிகளில் இருந்து ஊர்வலமாக ஏராளமானோர் பாலூர் பகுதியில் திரண்டனர்.

    பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர்-பாலூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.

    அப்போது கலெக்டர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி எங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கினால் மட்டுமே நாங்கள் போராட்டத்தை கலைப்போம் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில், தாசில்தார் ஆனந்த் மற்றும் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது எங்களுக்கு நிவாரணத்தை வழங்கினால்மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம். மேலும் தினந்தோறும் எங்கள் போராட்டம் தொடரும் என ஆக்ரோஷமாக தெரிவித்தனர். மேலும் பாலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மறியல் போராட்டத்தில் தொடர்ந்து பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் கடலூர் பாலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு.
    • வீடியோ காலில் பேசும்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அத்தியாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவருக்கும் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள குளத்தகுறிச்சி பகுதியை சேர்ந்த கவுரி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நித்திஷா (வயது 4) நிதிஷா (வயது 2 ) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    பன்னீர் செல்வம் சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வருவார். அப்போதெல்லாம் மனைவியிடம் சண்டையிட்டுக் கொண்டு இருப்பார் என கூறப்படுகிறது.

    இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு கவுரி அடிக்கடி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் கவுரி, தனது கணவர் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்துள்ளார்.

    இதையடுத்து நேற்று முன் தினம் தனது தங்கையிடமும் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள தனது தந்தையிடமும் வீடியோ காலில் கவுரி பேசியதாக தெரிகிறது. அவர்களிடம் பேசிவிட்டு தனது கணவருடனும் வீடியோ காலில் பேசியுள்ளார்.

    கணவரிடம் பேசி முடித்த சில மணி நேரங்களில் வீட்டில் உள்ள ஒரு அறையில் கவுரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அங்கிருந்த குழந்தைகள் அழுவதை அறிந்த அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது கவுரி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

    இதையடுத்து புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கவுரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கணவர் பன்னீர் செல்வத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பன்னீர் செல்வம், அங்கு ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கவுரியின் உறவினர்கள் கூறுகையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு நடக்கும். இதனால் கவுரி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிடுவார். நேற்று என்ன நடந்தது என தெரியவில்லை. அவர்களுக்குள் என்ன சண்டை நடந்தது என்றும் தெரியவில்லை.

    தற்போது இரு பெண் குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். பன்னீர் செல்வத்தின் உடலை தமிழகம் கொண்டு வர அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து கவுரியின் தங்கை கார்த்திகா கூறியதாவது:-

    எனது அக்காளுக்கும் அவரது கணவருக்கும் கடந்த 4 மாதமாக குடும்ப தகராறு இருந்து வந்தது. நேற்று எனது அக்காள் தனது கணவருடன் வீடியோ காலில் பேசி உள்ளார். அப்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் எனது அக்காள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தற்கொலையில் சந்தேகம் உள்ளது.

    எனது அக்காளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களது எதிர் காலத்தை கருதி பன்னீர் செல்வத்தின் சொத்துக்களை சரிபாகமாக பிரித்து கொடுக்க வேண்டும். பன்னீர் செல்வத்தின் உடல் தமிழகம் கொண்டு வரப்பட்டு இருவரது உடல்களையும் ஒரே நாளில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.

    பன்னீர் செல்வம் உடல் வரும் வரை எனது அக்காள் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது. அப்படி பிரேத பரிசோதனை செய்தால் உடலை நாங்கள் வாங்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கவுரியின் தந்தை கொளஞ்சி நாதன் கூறும் போது, மருமகனின் தந்தையோ, உடன் பிறந்தவர்களோ கண்டு கொள்ளவே இல்லை. சேர்ந்து வாழலாம் என தனது மகளை அழைத்து வந்த நிலையில் மகள் கவுரி தற்கொலை செய்து கொண்டார் என அழுது துடித்தார். 

    • அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் ஏரியை தூர்வாருவதாக ஊழல் நடைபெறுகிறது.
    • கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவில்லை.

    திமுக அரசு மீது அதன் கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.  கடலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

    * தேர்தல் வரும்போது மட்டும் முக்கியத்துவம் தரப்படும் கூட்டணி தலைவர்கள் தற்போது ஒதுக்கப்படுகின்றனர்.

    * மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய துணை முதலமைச்சர் வரும்போது எனக்கு தகவல் அளிக்கவில்லை.

    * அமைச்சர்கள் எங்களிடம் பேசினால் கவுரவ குறைச்சல் ஏற்பட்டுவிடுமா?

    * தேர்தலின்போது அமைச்சர்கள் பேசுவர்; தேர்தல் முடிந்ததும் அமைச்சரின் உதவியாளர்கள்தான் பேசுவார்கள்.

    * தமிழகத்தில் பல தவறுகள் நடந்து கொண்டிருக்கின்றன. முதலமைச்சரின் கவனத்திற்கு உண்மை தகவல்கள் செல்லவில்லை.

    * அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் ஏரியை தூர்வாருவதாக ஊழல் நடைபெறுகிறது.

    * கேள்வி கேட்டால் கூட்டணி கட்சி தலைவர்களை புறக்கணிப்பார்கள். தேர்தலின்போது மக்கள் எதிர்வினையாற்றுவார்கள்.

    * திமுக ஆட்சியிலும் கூட அதிகாரிகள் தான்தோன்றி தனமாக செயல்படுகின்றனர்.

    * மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.

    * மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடதமிழகம் என்ன பாவம் செய்தது.

    * மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2,000 மட்டுமே நிவாரணம் வழங்குகின்றனர்.

    * மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு ஒரு நியாயம் மற்ற மாவட்ட மக்களுக்கு ஒரு நியாயம்.

    * மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடதமிழக மாவட்ட மக்களுக்கு ரூ.2,000 பிச்சையா போடுகிறீர்கள்.

    * கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவில்லை.

    * சட்டசபையை குறைந்தது 10 நாட்களாவது நடத்துங்கள் என கதறினேன். ஆனால் 2 நாட்கள் மட்டுமே நடத்தப்பட்டது என்று கூறினார்.

    • சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது
    • சிதம்பரம் அருகே உள்ள வெள்ளாற்றில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி 11 கி.மீ. நீளமும், 4 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த ஏரியில் 1.46 டி.எம்.சி. நீரை தேக்கி வைக்க முடியும். இந்த ஏரியின் முழு கொள்ளளவு 47.50அடியாகும்.

    இந்த ஏரி சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    இந்த ஏரிக்கு பருவகால மழை மூலமாகவும் காவிரியின் கொள்ளிடத்தில் உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக நீர்வரத்து இருக்கும்.

    இந்த ஏரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிரம்பி வருகிறது. இந்த ஏரியில் தற்போது 46.8 அடி தண்ணீர் உள்ளது. மேலும் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளான மீன் சுருட்டி, ஜெயங்கொண்டம், அரியலூர், ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் ஏரி அமைந்துள்ள லால்பேட்டையில் 30 செ.மீ மழை பெய்துள்ளது.

    நீர்வரத்து அதிகமாக உள்ளதால் வீராணம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. வி.என்.எஸ் மதகு வழியாக 2 ஆயிரம் கன அடி தண்ணீரும், வெலிங்டன் ஓடை வழியாக 18 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.

    சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் திருநரையூர், சித்தமல்லி, அறந்தாங்கி உள்ளிட்ட 5 கிராமங்களில் தண்ணீர் புகுந்தது.

    என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீர் அங்குள்ள பெருமாள் ஏரியில் வந்தடையும். தற்போது அதிக அளவில் சுரங்க நீர் வெளியேற்றப்படுவதால் பெருமாள் ஏரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    சிதம்பரம் அருகே உள்ள வெள்ளாற்றில் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது. கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே உள்ள பெல்லாந்துறை அணைக்கட்டில் இருந்தவினாடிக்கு 22 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    ×