என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • டாப்சிலிப் பகுதியில் உள்ள கோழிக முத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் சுமார் 25 யானைகள் உள்ளன.
    • கடும் வெயில் காரணமாக யானைகளுக்கு போதுமான நீர் கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வருகிறது.

    ஆறுகள் அனைத்தும் வறண்டுள்ளதால் போதிய நீர் கிடைக்காமல் வால்பாறை வனத்தில் இருந்து வனவிலங்குகள் வெளியேறத் தொடங்கி உள்ளன.

    டாப்சிலிப் பகுதியில் உள்ள கோழிக முத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் சுமார் 25 யானைகள் உள்ளன.

    அப்பகுதியில் கடும் வெயில் காரணமாக யானைகளுக்கு போதுமான நீர் கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து கோழிக முத்தி முகாமில் இருந்து வரகலியாறு வழியாக வால்பாறையை அடுத்த மானாம்பள்ளி எஸ்டேட் பகுதிகளுக்கு கலீம், பேவி, காவேரி ஆகிய 3 யானைகள் நேற்று அழைத்து வரப்பட்டன.

    டாப்சிலிப் பகுதியில் போதிய நீர் கிடைக்காததால் இந்த மூன்று யானைகள் மானாம்பள்ளி பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், சில நாட்கள் இங்கு அமைக்கப்பட்டு உள்ள முகாமில் மூன்று யானைகளும் இருக்கும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • தேர்தல் நடத்தை விதியை மீறியதாக கூறி பறக்கும்படை அதிகாரி தாமோதரதாஸ் என்பவர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • வேட்பாளர் வசந்தராஜன் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    குனியமுத்தூர்:

    பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். நேற்று காலை பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட கோணவாய்க்கால் பாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.

    அப்போது தேர்தல் நடத்தை விதியை மீறியதாக கூறி பறக்கும்படை அதிகாரி தாமோதரதாஸ் என்பவர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில் தேர்தல் விதியை மீறி வேட்பாளர் வசந்தராஜன் உள்ளிட்டோர் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை திரட்டி ஊர்வலமாகச் சென்றனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. அதன்பேரில் வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

    அதன்பேரில் வேட்பாளர் வசந்தராஜன் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து பா.ஜ.க.வினர் கூறுகையில், அனுமதி குறித்து ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சர்வர் பிரச்சனை காரணமாக அனுமதி இன்னும் கையில் கிடைக்கப் பெறவில்லை என்று தெரிவித்தனர். ஆயினும் போலீசார் பா.ஜ.க. வேட்பாளர் வசந்தராஜன் மீது வழக்கு தொடர்ந்தனர்.

    • பயிற்சி வகுப்பில் 980 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்காமல் இருந்தது தெரியவந்தது.
    • பயிற்சியிலும் பங்கேற்காத நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவை:

    கோவை மாவட்த்தில் கோவை, பொள்ளாச்சி என 2 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.

    மொத்தம் 3,096 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவினை முன்னிட்டு 10 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு அலுவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 24-ந் தேதி நடைபெற்றது.

    இந்த பயிற்சி வகுப்புகளில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் ஆகியோருக்கு காலை முதல் மாலை வரை பயிற்சிகள் வழங்கப்பட்டன.

    அதன்படி மொத்தம் 10 சட்டசபை தொகுதிகளில் 3,779 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் 12,294 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு என மொத்தம் 15,073 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் பயிற்சி வகுப்பில் 980 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்காமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த நோட்டீசை பெற்றுக் கொண்ட அரசு ஊழியர்கள் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு தேர்தல் பயிற்சி நாளில் விடுமுறை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளனர். பலர் மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இன்றும் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது. இதில் கடந்த முறை பங்கேற்காத 980 பேரும் பங்கேற்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இந்த பயிற்சியிலும் பங்கேற்காத நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இன்று நடக்கும் பயிற்சி வகுப்பில் மொத்தம் 1,700 பேர் பங்கேற்றனர்.

    இவர்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து விளக்கம், மாஸ்டர் கவரில் உள்ள மிக முக்கியமான படிவங்களை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல், வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு மண்டல அலுவலர்கள், வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள் ஒப்படைக்க வேண்டியவை, போல் மானிடரிங் சிஸ்டம் செயலி குறித்த விளக்கம் உள்ளிட்டவை குறித்து வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

    • ராட்சத பலூன்கள், உறுதிமொழி, மாரத்தான் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
    • தேர்தல் திருவிழா அழைப்பிதழை வழங்கி வாக்காளர்களை வாக்களிப்பதற்கு அழைத்தனர்.

    பொள்ளாச்சி:

    தமிழகத்தில் ஏப்ரல் 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது.

    இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வா கம், தேர்தல் பிரிவினர் சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்ப ட்டு வருகிறது.

    பஸ் நிலையங்கள், மக்கள் அதிகமாக கூடக் கூடிய இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு செல்பி ஸ்பாட் வைத்து விழிப்புணர்வு, வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வீடியோவும் ஒளிபரப்பப்படுகிறது.

    மேலும் ராட்சத பலூன்கள், உறுதிமொழி, மாரத்தான் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பகுதியில் திருமணத்திற்கு வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து அழைப்பது போன்று தேர்தல் தினத்தன்று வாக்களிக்க வருமாறு, அதிகாரிகள் அழைத்து வருகின்றனர்.

    பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தல்களில் சில இடங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்குப்பதிவு இருந்துள்ளது.

    அந்த இடங்களை கண்டறிந்து, அங்கு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, தேர்தல் அதிகாரிகள், ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை வைத்து, தேர்தல் திருவிழா அழைப்பிதழை வழங்கி வாக்காளர்களை வாக்களிப்பதற்கு அழைத்தனர்.

    பொள்ளாச்சி சப்-கலெக்டரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கேத்ரின் சரண்யா தலைமையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளோடு வீடு, வீடாக சென்று அழைப்பிதழ் வழங்கி தேர்தலில் வாக்களிக்க அழைத்தனர். மேலும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எரிவாயு சிலிண்டர், பஸ் நிலையம், ரெயில் நிலையம், உணவு விடுதி ஆகியவற்றில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஓட்டி வருவதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கோவையில் ஏராளமான சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன.
    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    கோவை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்தார். சிங்காநல்லூரில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

    கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டராக உள்ளது. கோவை மாநகராட்சி மற்ற மாநகராட்சிக்கு எல்லாம் முன்னுதாரணமாக சிறந்த மாநகராட்சியாக விளங்கியது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாறி விட்டது.

    கோவை என்றதுமே சிறுவாணி தண்ணீர் தான் நினைவுக்கு வரும். ஆனால் இன்று அப்படிப்பட்ட கோவை நகரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 20 நாளைக்கு ஒருமுறை தான் தண்ணீர் வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. ஒன்றும் இல்லை.

    கோவையில் ஏராளமான சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. இதன் மூலம் ஏராளமானோர் வேலை வாய்ப்பினை பெற்று வந்தனர். தற்போது சிறு, குறு தொழில்கள் முடங்கி உள்ளது.

    இதற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம். மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி.யால் பல சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார கட்டணத்தையும் மாநில அரசும் மத்திய அரசும் சேர்ந்து உயர்த்தி விட்டன. இதனால் தொழில் பாதிக்கப்பட்டு, அதன் மூலம் வேலைவாய்ப்பை பெற்று வந்த பலரும் வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர்.

    மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தன. ஆனால் ஒன்றையுமே நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    இந்த நிலைமை எல்லாம் மாற கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். அவரது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோவையில் இருந்து சென்ட்ரல் வரும் ரெயில்கள் வழக்கமாக பெரம்பூரில் நிறுத்தப்படும்.
    • கோவையில் இருந்து வரும் ரெயில் எண் 06050 என்ற சிறப்பு ரெயிலும் பெரம்பூரில் நின்று செல்லும்.

    கோவை:

    கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் பகுதி மக்கள் கோடை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் வழியாக சிறப்பு ரெயில் ஒன்றும், சென்னை வழியாக மற்றொரு சிறப்பு ரெயிலும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரெயில் எண் 06050 கோவை- சென்னை சென்ட்ரல் இடையே சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் கோவையில் வருகிற 31-ந்தேதி அன்று இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.

    அதேபோல் ரெயில் 06049 ரெயில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 1-ந்தேதி காலை 10.20 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.25 மணிக்கு கோவை சென்றடையும். இந்த ரெயில்கள் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    கோவையில் இருந்து சென்ட்ரல் வரும் ரெயில்கள் வழக்கமாக பெரம்பூரில் நிறுத்தப்படும். அந்தவகையில் கோவையில் இருந்து வரும் ரெயில் எண் 06050 என்ற சிறப்பு ரெயிலும் பெரம்பூரில் நின்று செல்லும். சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

    ரெயில் எண் 06043 தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து 31-ந்தேதி மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். இந்த ரெயில் கோவைக்கு அதிகாலை 1.57 மணிக்கு வந்து 2 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

    06044 கொச்சுவேலி- தாம்பரம் சிறப்பு ரெயில் கொச்சுவேலியில் இருந்து 1-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரெயில் கோவை ரெயில் நிலையத்துக்கு நள்ளிரவு 12.40 மணிக்கு வந்து 12.45 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. சென்னை எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒத்தப்பாலம், திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கொல்லம் ஆகிய இடங்களில் நிற்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான கொடூரங்கள் 2 மடங்கு அதிகரித்துள்ளது.
    • தேர்தல் பத்திரம் மூலம் மற்ற கட்சிகளை விட எல்லாம் அதிகமாக நிதி பெற்ற கட்சி என்றால் அது பா.ஜ.க. தான்.

    கோவை:

    கோவையில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆதரித்து இன்று தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி பிரசாரம் செய்தார். துடியலூர் சந்தைக்கடை பகுதியில் அங்கு திரண்டு இருந்த மக்கள் மத்தியில் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    பா.ஜ.க.வினர் பொய் செய்திகளை பரப்புவதற்கு என்றே ஒரு குழு வைத்துள்ளனர். அந்த குழுவினர் மூலம் பொய் செய்திகளை பரப்பி மக்களிடத்தில் மத ரீதியிலான பிரச்சனைகளை பா.ஜ.க. ஏற்படுத்தி வருகிறது. பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில், மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை தான் உள்ளது. குறிப்பாக மணிப்பூரில் உள்ள மக்கள் தங்கள் குழந்தைகள் உயிரோடு இருந்தாலே போதும் என்று தான் நினைக்கின்றனர். அந்தளவுக்கு பா.ஜ.க. ஆட்சி உள்ளது. கலவரம் நடந்த மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஏன் இதுவரை செல்லவில்லை?.

    பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான கொடூரங்கள் 2 மடங்கு அதிகரித்துள்ளது. பா.ஜ.க. எம்.பி.க்களில் 44 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. பா.ஜ.க. தேர்தல் பத்திரம் ஒன்றை கண்டுபிடித்து, அதனை கொண்டு வந்தது. அந்த தேர்தல் பத்திரம் மூலம் மற்ற கட்சிகளை விட எல்லாம் அதிகமாக நிதி பெற்ற கட்சி என்றால் அது பா.ஜ.க. தான்.

    விசாரணை அமைப்புகளை அனுப்பி, ரெய்டு நடத்தி அவர்களிடம் இருந்து தேர்தல் பத்திரத்தை பயன்படுத்தி நிதி பெற்றுள்ளனர். தேர்தல் பத்திரத்தில் பா.ஜ.க. ஊழல் செய்துள்ளது. இந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஒருவேளை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நாட்டில் நடைபெறுகிற கடைசி தேர்தல் இதுவாக தான் இருக்கும். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடைபெறாமல் போகலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்கனவே இங்கு 2 முறை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
    • நீலகிரியிலும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    கோவை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு நேற்று பரிசீலனையும் முடிந்து விட்டது. இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வருகிற 30-ந்தேதி வெளியிடப்படுகிறது.

    கோவை, பொள்ளாச்சி, நீலகிரி தொகுதியில் 4 முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., நாம்தமிழர் கட்சி ஆகிய 4 கட்சி வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனால் 3 தொகுதிகளிலும் தேர்தல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது.

    குறிப்பாக கோவை தொகுதியில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் இந்த தொகுதி எதிர்பார்ப்பு மிக்க தொகுதியாக உள்ளது. இங்கும் போட்டி கடுமையாக உள்ளது.

    பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏற்கனவே இங்கு 2 முறை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லடத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் கோவை வந்து ரோடுஷோவில் பங்கேற்று வாக்கு சேகரித்தார். அவரை தொடர்ந்து வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலையும் கோவை வந்து ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    இதேபோல தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விரைவில் இந்த தொகுதிகளுக்கு வர உள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர்.

    இந்நிலையில் கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று பிரசாரம் மேற்கொண்டார். காலையில் துடியலூர், சிங்காநல்லூர், சூலூர் பகுதியில் திறந்து வேனில் நின்றபடி பேசி வாக்கு சேகரித்தார்.

    தொடர்ந்து மாலையில் அவர் மலுமிச்சம்பட்டி, நெகமம், மடத்துக்குளம் பகுதியில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கிறார்.

    இதேபோல தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சிங்காநல்லூரில் கோவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார். சிங்காநல்லூர் பஸ்நிலையம் அருகே திரண்டு நின்ற பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றபடி அவர் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கிறார். தொடர்ந்து நீலகிரியிலும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இன்று மாலை அவர் திருப்பூரில் பிரசாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து நாளை அவர் ஈரோட்டில் பிரசாரம் செய்கிறார்.

    கோவையில் இன்று ஒரே நாளில் கனிமொழி எம்.பி.யும், பிரேமலதா விஜயகாந்த்தும் பிரசாரம் மேற்கொண்டனர். தொடர்ந்து வரும் நாட்களில் தலைவர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கும்.

    • தொகுப்பூதிய பணியாளர்களும் கட்டாயம் பணிக்கு செல்ல வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
    • கட்டாயம் தேர்தல் பணிக்கு வர வேண்டும், இல்லா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    சேலம்:

    தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தேர்தல் பணியில் கல்வித்துறை மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.

    இதற்கிடையே சேலம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்கு கடந்த டிசம்பர் மாதம் வருவதாக கூறிய அரசு ஊழியர்களில் தற்போது தேர்தல் பணிக்கு வராமல் 1781 பேர் மருத்துவ விடுப்பில் சென்று விட்டனர். இதையடுத்து தேர்தல் பணியை புறக்கணித்து மருத்துவ விடுப்பில் சென்ற கல்வித்துறை ஊழியர்கள் 946 பேர் உள்பட 1781 பேருக்கும் விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சரியான விளக்கம் அளிக்காதோர் சஸ்பெண்டு செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

    இதே போல பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் 21 பேரும் கடந்த டிசம்பர் மாதம் தேர்தல் பணிக்கு வருவதாக கூறி விட்டு தற்போது அதில் 20 பேர் பணிக்கு வர மறுத்துள்ளனர். இதையடுத்து பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) விஸ்வநாத மூர்த்தி , உதவி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், தொகுப்பூதிய பணியாளர்களும் கட்டாயம் பணிக்கு செல்ல வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

    இது குறித்து கலெக்டர் பிருந்தா தேவி கூறுகையில், கட்டாய மருத்துவ விடுப்பு தேவைப்படுவோருக்கு மட்டும் தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படும், மற்ற படி யாருக்கும் விலக்கு கிடையாது. கட்டாயம் தேர்தல் பணிக்கு வர வேண்டும், இல்லா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களையும் தரிசித்து விட்டு கோவில் வளாகத்தில் கட்சியினருடன் வந்து கொண்டிருந்தார்.
    • அண்ணாமலையை பார்த்ததும், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

    நேற்று அண்ணாமலை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனையொட்டி அவர் கோவை பெரியகடைவீதியில் உள்ள கோனியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களையும் தரிசித்து விட்டு கோவில் வளாகத்தில் கட்சியினருடன் வந்து கொண்டிருந்தார்.

    அண்ணாமலையை பார்த்ததும், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது அங்கு வந்த கோவைப்புதூரை சேர்ந்த ரவி-தேவிகா ஆகியோர் திடீரென அண்ணாமலையின் காலில் விழுந்தனர்.

    இதை பார்த்ததும் ஒரு நிமிடத்தில் அண்ணாமலை திக்குமுக்காடி போனார். பின்னர் அவர்களை ஆசிர்வதித்து விட்டு எழுந்திருக்கும் படி கூறினார்.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரித்த போது, தங்களுக்கு இப்போது தான் திருமணம் முடிந்ததாகவும், கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த போது உங்களை பார்த்ததும், உங்களிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்பதற்காக காலில் விழுந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அண்ணாமலை புதுமண தம்பதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    தொடர்ந்து 1989-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வீர கணேசன் என்பவரின் தாயாரை பா.ஜ.கவினர் கோவிலுக்கு அழைத்து வந்திருந்தனர். அவரின் காலில் விழுந்து அண்ணாமலை ஆசி பெற்றுக்கொண்டார்.

    • தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
    • 3 ஆண்டுகால தி.மு.க ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    மத்திய மந்திரியும், நீலகிரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான எல்.முருகன் மேட்டுப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:-

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் கூட்டமாக இந்த செயல்வீரர்கள் கூட்டம் உள்ளது.

    சேலத்தில் நடந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர்களை அறிமுகப்படுத்தி, கூட்டணியை உறுதி செய்து சென்றார். தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

    இந்த தேர்தல் பாராளுமன்றத்திற்கான தேர்தல். இந்த தேர்தல் பிரதமர் நரேந்திரமோடிக்கான தேர்தல். இந்த தேர்தல் மூலம் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பிரதமர் ஆக போகிறார்களா?.

    ஒரு சீட் கூட வெற்றி பெற முடியாத அதி.மு.க எப்படி பிரதமராக போகிறார்கள். 3 ஆண்டுகால தி.மு.க ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    தேர்தலின் போது தி.மு.க டாஸ்மாக் கடைகளை குறைப்போம். கல்வி கடன் ரத்து, மகளிர் சுயஉதவிக்குழு கடன், விவசாய கடன்களை ரத்து செய்வதாக தேர்தல் வாக்குறுதிகளை அளித்தனர்.

    ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் எதையுமே செய்யவில்லை. வழக்கம் போல சொல்வது எதையும் செய்யாத ஆட்சியாக இந்த தி.மு.க ஆட்சியானது செயல்பட்டு கொண்டிருக்கிறது. எனவே தி.மு.க.வை தூக்கி எறிய மக்கள் தயராகிவிட்டனர். பொய் பேசுவதும், கொள்ளையடிப்பதும், லஞ்சம் வாங்குவது, கட்டபஞ்சாயத்து பண்ணுவது, குடும்ப ஆட்சி இவை எல்லாம் தான் தி.மு.க.வின் சிறந்த கொள்கையாக உள்ளது.

    கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க ஆட்சியில் சாலை கள், விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் நாடு முழுவதும் அசுர வளர்ச்சியில் முன்னேறி கொண்டிருக்கிறது.அந்த வகையில் மேட்டுப்பாளையத்திற்கான ரெயில் வசதியையும் மேம்ப டுத்தி கொடுத்துள்ளோம்.

    இனி அடுத்து அமையும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியிலும் இந்த சேவைகள் தொடர்ந்து செய்யப்படும். நேர்மையாக மக்களுக்கான ஆட்சியை நடத்தி கொண்டிருப்பது பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க தான். பாராளுமன்றத்தில் செங்கோல் வைப்பது உள்பட பல்வேறு வகைகளில் தமிழர்களுக்கு பா.ஜனதா பெருமை சேர்த்து வருகிறது.

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் இதுவரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து இந்த தொகுதிக்கு என்ன திட்டத்தை வாங்கி தந்துள்ளார். ஒன்றுமில்லை. அவர் வரலாற்றில் யாரும் செய்ய முடியாத 2 ஜி ஊழலை செய்துள்ளார். மேலும் அவர் இந்துக்கள், பெண்கள் மற்றும் தலை வர்களை கொச்சைப்படுத்தி பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் மத்திய அரசு செய்துள்ள திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வேட்பாளர்களின் பெயர்களை குழப்புவதற்காக அதே பெயரில் உள்ள நபர்களை எதிர் அணியினர் தேர்தலில் போட்டியிடச் செய்வது வழக்கம்.
    • விரும்பும் வேட்பாளர்கள் யார் என்பதை கட்சி சின்னம் மற்றும் அவர்களது புகைப்படத்தை வைத்தே அடையாளம் காண முடியும்.

    கோவை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. கோவை தொகுதியில் பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் இந்த தொகுதி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

    வழக்கமாக தேர்தலில் முக்கிய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை குழப்புவதற்காக அதே பெயரில் உள்ள நபர்களை எதிர் அணியினர் தேர்தலில் போட்டியிடச் செய்வது வழக்கம். அதேபோல கோவை தொகுதியிலும் அந்த ருசிகரம் அரங்கேறி உள்ளது.

    கோவை தொகுதியில் போட்டியிடுவதற்காக மொத்தம் 59 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். தி.மு.க. சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி உள்ளிட்டோர் போட்டியிடு வதற்காக வேட்பு மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

    இவர்களில் தி.மு.க. வேட்பாளராக கணபதி ராஜ்குமார் பெயரில் மட்டும் ராஜ்குமார் பெயரை கொண்ட மேலும் 4 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதேபோல சிங்கை ராமச்சந்திரன் பெயரை குழப்பும் வகையில் ராமச்சந்திரன் பெயரை கொண்ட மேலும் 4 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை பெயரிலும் ஒருவர் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். பாரதிய பிரஜா ஐக்கிய பார்ட்டி என்ற கட்சி பெயரில் அவர் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

    வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று நடக்கிறது. தொடர்ந்து நாளை மறுநாள் இறுதி வேட்பாளர் பட்டியலில் எத்தனை ராஜ்குமார், எத்தனை ராமச்சந்திரன் போட்டியிடப் போகிறார்கள் என்ற முழு விவரம் தெரியவரும்.

    போட்டி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்படும் பட்சத்தில் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும். அவர்கள் விரும்பும் வேட்பாளர்கள் யார் என்பதை கட்சி சின்னம் மற்றும் அவர்களது புகைப்படத்தை வைத்தே அடையாளம் காண முடியும்.

    ×