என் மலர்
கோயம்புத்தூர்
- கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய நடனமான வள்ளி-கும்மி நடனம் ஆடி வரவேற்பு அளிக்கப்பட்டது.
- கொங்கு பாரம்பரியத்தை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கோவை தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வெள்ளக்கிணறு பகுதியில் அவருக்கு கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய நடனமான வள்ளி-கும்மி நடனம் ஆடி வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அண்ணாமலையும் வேனில் இருந்து இறங்கிபொதுமக்களுடன் சேர்ந்து வள்ளி கும்மி நடனம் ஆடினார். அப்போது அங்கு திரண்டு இருந்தவர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.
இதுபற்றி அண்ணாமலை கூறுகையில் வள்ளி கும்மிக்கு மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கிறது. பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியில் அமர்ந்த பின்னர் வள்ளி கும்மிக்கு என்று உரிய அங்கீகாரம் மத்திய அரசால் வழங்கப்படும். பாரம்பரிய கலை என்று அங்கீகாரம் கொடுக்கப்படும். அப்படி கொடுக்கும்போது அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் வள்ளி கும்மி ஆட முடியும். கொங்கு பாரம்பரியத்தை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி மற்றும் தலைமை செயலாளர் ஒப்புதலுடன் தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டு உள்ளது.
- 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை மட்டும் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா தேர்தல் அலுவலகத்தை இன்று மத்திய மந்திரி எல்.முருகன் திறந்துவைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கச்சத்தீவு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஒப்புதலுடன் தான் தாரைவார்க்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்க சென்னையில் நடந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றுள்ளனர்.
அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி மற்றும் தலைமை செயலாளர் ஒப்புதலுடன் தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டு உள்ளது. அது குறித்து தற்போதைய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உரிய ஆதாரங்களுடன் விளக்கி அதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை மட்டும் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். இதற்கு முழு காரணம் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது தான். இதற்கு முழு பொறுப்பு அப்போதைய காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி அரசு தான். இதனால் இன்று வரை தமிழக மீனவர்கள் பாதிப்படைந்து வருகிறார்கள். எனவே மீனவர்களின் இந்த நிலைக்கு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பழங்குடியின குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் பா.ஜ.க. கவனம் செலுத்தி வருகிறது.
- பழங்குடியின மக்களின் குழந்தைகள் படிப்பதற்கு என்று ஏகலைவா என்ற ஒரு பள்ளி இருப்பதே அவர்களுக்கு தெரியாது.
கவுண்டம்பாளையம்:
கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோவை ஆனைகட்டி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-
இந்தியாவின் முதல் குடி பழங்குடியின இனம் தான். பழங்குடியின மக்களுக்காக பிரதமர் மோடி பல்வேறு சிறப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
மத்திய அரசின் நிதி மட்டுமே மலைப்பகுதிகளுக்கு வருகிறது. பிரதமர் மோடி வந்த பிறகு தான் மலைவாழ் மக்களுக்கு அனைத்து வசதிகளுமே கிடைத்தன.
பழங்குடியின இனத்தை சேர்ந்த திரவுபதி முர்முவை இந்தியாவின் முதல் குடிமகளாக, குடியரசு தலைவராக அமர்த்தி கவுரப்படுத்தியது பிரதமர் மோடியின் பா.ஜ.க. அரசு தான். மொத்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்களின் பாதுகாவலராக இருந்து வருகிறார்.
பழங்குடியின குழந்தைகளின் கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் பா.ஜ.க. கவனம் செலுத்தி வருகிறது. அவர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி கொடுக்க வேண்டும் என்பதற்காக ஏகலைவா பள்ளி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியிலும் அந்த பள்ளி வர வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆனைகட்டி பகுதிக்கு மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த தேர்தல் கவுன்சிலர் யார்? பஞ்சாயத்து தலைவர் யார்? முதலமைச்சர் யார்? என்பதற்கான தேர்தல் அல்ல. இது பிரதமருக்கான தேர்தல். டெல்லியில் யார் ஆட்சி அமைந்தால் நல்லது நடக்கும் என்பதற்கான தேர்தல். எனவே மக்கள் யோசித்து தங்கள் வாக்கை செலுத்த வேண்டும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி 400 இடங்களை தாண்டி வெற்றி பெற்று மீண்டும் 3-வது முறையாக பிரதமராக ஆட்சியில் அமர வேண்டும். 100 சதவீதம் பிரதமரின் திட்டங்கள் அனைத்தும் இங்கு கிடைக்க வேண்டும். மோடி பிரதமராக வந்தால் தான் நல்ல திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கும்.
இயற்கை வளங்கள் நிறைந்த பகுதி மலைப்பகுதி தான். நகரத்தில் இருப்பவர்களுக்கும் ஆக்சிஜன் கொடுப்பவர்கள் நீங்கள் தான். இங்குள்ள ஒவ்வொரு மரமும் வைரத்திற்கு சமம். அனைவரும் இந்த பகுதியை தேடி தான் வருவார்கள்.
செங்கல் சூளை பிரச்சனையில் தி.மு.க. குழந்தையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுகிறது. இதுதான் எப்போதும் அவர்களுக்கு வேலையாக உள்ளது. இது அவர்களுக்கு கைவந்த கலை. இந்த விவகாரத்தில் சுற்றுச்சுழல் அமைச்சரிடம் பேசி நிரந்தர தீர்வு காணப்படும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் இந்த ஒரு வண்டி தான் டெல்லி செல்லும். மற்ற 2 வண்டிகளும் போகாது. அந்த வண்டிகள் லோக்கல் வண்டிகள். இங்கேயே தான் சுற்றி கொண்டிருக்கும்.
அவர்களுக்கு பழங்குடியின மக்களின் குழந்தைகள் படிப்பதற்கு என்று ஏகலைவா என்ற ஒரு பள்ளி இருப்பதே தெரியாது. எனவே பொதுமக்களாகிய நீங்கள் சிந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்து டெல்லிக்கு அனுப்ப வேண்டும்.
இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக்கை அகற்ற வேண்டும் என கேட்டுள்ளனர். இந்த ஒரு டாஸ்மாக்கை மட்டும் அகற்றுவது நமது நோக்கம் அல்ல. அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் என்பதே நமது நோக்கம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அகற்றி விட்டு, அதற்கு பதிலாக கள்ளுக்கடை திறக்கப்படும்.
தி.மு.க. 5 வருடம் மக்களை மறந்து விடுவார்கள். தேர்தல் நேரத்தில் மட்டுமே அவர்களுக்கு மக்கள் ஞாபகம் வரும். தேர்தல் நேரத்தில் வந்து பணம் கொடுத்து கொடுத்து வெற்றி பெறுகின்றனர். மீண்டும் 5 வருடம் மக்களை மறந்து விடுகிறார்கள். எப்படியாவது வாக்கை விலை கொடுத்து வாங்கி விடலாம் என்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது. அதனை மக்களாகிய நீங்கள் உடைத்தெறிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கச்சத்தீவு கிடைத்தால் தான் தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
- கச்சத்தீவு விவகாரத்தை அறிவியல் பூர்வமாகவும், சட்ட பூர்வமாகவும் பா.ஜ.க அணுகி வருகிறது.
கோவை:
கோவையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பிரசாரத்துக்கு மத்தியில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கச்சத்தீவு தொடர்பாக சில நபர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியத்தை தற்போது வெளியில் கொண்டு வந்துள்ளோம்.
கச்சத்தீவை கொடுத்ததற்காக இலங்கையிடம் இருந்து இந்தியாவிற்கு ஏதும் கிடைக்கவில்லை. கச்சத்தீவு விவகாரத்தில் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்.
கச்சத்தீவு தொடர்பாக மேலும் ஒரு தகவலையும் ஆர்.டி.ஐ.யில் கேட்டுள்ளோம். கச்சத்தீவு கிடைத்தால் தான் தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
கச்சத்தீவு விவகாரத்தை அறிவியல் பூர்வமாகவும், சட்ட பூர்வமாகவும் பா.ஜ.க அணுகி வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்ணாமலை என் சிலிப்பர் செல் என்று கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, சீமானுக்கு சின்னமும் இல்லை. வாக்கும் இல்லை. அதனால் அவர் சொல்வதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என தெரிவித்தார்.
- பாரம்பரிய முறையில் சத்குருவிற்கு உணர்ச்சிப்பூர்வமான வரவேற்பு அளித்தனர்.
- பலரும் சத்குருவை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
புதுடெல்லியில் மார்ச் 17-ம் தேதி நடைபெற்ற அவசர மூளை அறுவை சிகிச்சைக்கு பிறகு சத்குரு அவர்கள் இன்று (ஏப்ரல் 11) கோவை ஈஷா யோக மையத்திற்கு வந்தடைந்தார்.
பழங்குடி மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் ஒன்று கூடி அவர்களின் பாரம்பரிய முறையில் சத்குருவிற்கு உணர்ச்சிப்பூர்வமான வரவேற்பு அளித்தனர். மேலும், சத்குருவின் வருகையையொட்டி, ஒட்டுமொத்த ஈஷா யோக மையமும் வண்ணமயமான அலங்காரங்களுடன் விழா கோலம் பூண்டது.
ஈஷாவில் தங்கி இருக்கும் ஆசிரமவாசிகளும், தன்னார்வலர்களும் சத்குருவை மீண்டும் பார்த்ததில் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்தனர். பலரும் சத்குருவை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த சத்குருவை வரவேற்பதற்காக ஏராளமான பொதுமக்களும், தன்னார்வலர்களும் விமான நிலையத்தில் திரண்டனர்.
இதுதவிர, வழிநெடுகிலும், சாலை ஓரங்களில் உள்ளூர் கிராம மக்கள் ஒன்று கூடி பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து சத்குருவை வரவேற்றனர்.
இந்த தருணத்தில் அனைவரிடம் இருந்தும் சத்குருவிற்கு கிடைத்த அளவற்ற அன்பிற்கும் ஆதரவிற்கும் ஈஷா அறக்கட்டளை நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டது.
- தேர்தலில் மோடி 400 எம்.பிக்கள் வேண்டும் என்று சொல்லி வருகிறார்.
- பிரதமர் மோடி எந்த ஒரு முடிவு எடுத்தாலும் பாராளுமன்றத்தில் உள்ள எம்.பிக்களின் ஆதரவு தேவை.
கோவை:
கோவை பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவர் இன்று காலை மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு மலையடி வாரத்தில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.
தொடர்ந்து வடவள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அண்ணாமலை வடவள்ளி பகுதியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-
2024-ம் ஆண்டு நடக்கிற பாராளுமன்ற தேர்தலானது ஒரு வித்தியாசமான தேர்தல். மீண்டும் பிரதமர் மோடியே வெற்றி பெறுவார் என்று உறுதியாக தெரிந்து கொண்டு நடக்கிற தேர்தல் தான் இது.
கடந்த 10 வருடமாக தொலைநோக்கு பார்வையுடன் பிரதமர் மோடி நிறைவேற்றிய திட்டங்களால் தற்போது மிகப்பெரிய அளவில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
2024-2029 காலகட்டம் என்பது தற்போதைக்கு முக்கியமான காலகட்டம். இந்த காலகட்டத்தில் தான் உலக அரங்கில் இந்தியா வல்லரசாக போகிறது. அதனால் இந்த தேர்தலில் மோடி 400 எம்.பிக்கள் வேண்டும் என்று சொல்லி வருகிறார். ஒவ்வொரு குடும்பத்தினரும் பா.ஜனதாவுக்கும், பிரதமருக்கும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

பிரதமர் மோடியின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா பொருளாதாரத்தில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. வருகிற காலத்தில் பொருளாதாரத்தில் இந்தியா 2-வது இடத்திற்கு முன்னேறும். வறுமை கோட்டிற்கு கீழ் இருந்த பல கோடி மக்கள் பிரதமர் மோடியின் ஆட்சியில் முன்னேறி உள்ளனர்.
பிரதமர் மோடி எந்த ஒரு முடிவு எடுத்தாலும் பாராளுமன்றத்தில் உள்ள எம்.பிக்களின் ஆதரவு தேவை. அதனால் வருகிற தேர்தலில் 400 எம்.பிக்கள் தேவை. அதனை கொடுக்க மக்களும் தயாராகி விட்டனர். கோவை தொகுதியில் போட்டியிடும் என்னையும் வெற்றி பெற செய்து டெல்லிக்கு அனுப்ப வேண்டும்.
இந்தியாவில் 70 வருடமாக எடுக்கப்படாத முக்கிய முடிவுகள் இனிமேல் எடுக்கப்பட உள்ளது. இந்தியாவை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்து செல்ல வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் நாடு மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளது.
எதிர்கட்சிகளில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யார் பிரதமர் வேட்பாளர் என்று தெரியவில்லை. இன்னும் அவர்களில் யார் மாப்பிள்ளை என்பதே தெரியவில்லை.
தி.மு.க.வினர் பற்றி இனி பேச வேண்டிய அவசியம் இல்லை. கடந்த 33 மாதங்களாக தி.மு.கவினர் குறித்து நாம் கடும் விமர்சனங்கள் வைத்து வருகிறோம். ஆனால் அவர்கள் அதற்கு பிறகும் திருந்தவில்லை. அப்படி இருக்கையில் இந்த 16 நாள் பிரசாரத்தில் பேசுவதால் மட்டும் அவர்கள் என்ன திருந்தி விடவா போகிறார்கள்? இல்லவே இல்லை.
தற்போதைய காலகட்டத்தில் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த பலரும் மீண்டும் களத்தில் இறங்கி உள்ளனர்.
கோவை தொகுதி எம்.பியாக இருந்தவர் கோவைக்கு தேவையான எந்த திட்டத்தையும் பிரதமரிடம் கேட்டு பெற்று நிறைவேற்ற தவறிவிட்டார். கோவையில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. மத்திய அரசு ஒதுக்கிய நிதியும் முறையாக எந்த திட்டத்திற்கும் பயன்படுத்தப்படவில்லை.
நான் வெற்றி பெற்றதும் கோவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வன். தற்போது ஐ.ஓ.பி காலனியில் குப்பை சுத்திகரிப்பு நிலையம் வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர். நான் வெற்றி பெற்றதும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சென்னை 45-வது இடத்தில் இருந்தது. தற்போது சென்னை அந்த திட்டத்தில் 199-வது இடத்திற்கு சென்று விட்டது. நகரங்கள் அனைத்தும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. நான் வெற்றி பெற்றதும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். நகரங்கள் அனைத்தும் சுத்தமானதாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு முறையாக செயல்படுத்தவில்லை.
- மேட்டுப்பாளையம் நகராட்சி முழுவதுமே சுத்தம் இன்றி காணப்படுகிறது.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரும், மத்திய மந்திரியுமான எல்.முருகன், இன்று மேட்டுப்பாளையத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார்.
தொடர்ந்து அந்த பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு மக்களிடம் வாக்கு சேகரித்து பேசியதாவது:-
பிரதமர் மோடி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம். வீட்டுக்கு வீடு கியாஸ் இணைப்பு திட்டம் என பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை ஏழை எளிய மக்களுக்காக கொண்டு வந்துள்ளார்.
மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு முறையாக செயல்படுத்தவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே தமிழ்நாட்டில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு விடும். இது தி.மு.க.வின் சாபக்கேடு.
மேட்டுப்பாளையம் மக்களின் உயிர்நாடியாக கருதப்படும் பவானி ஆறு தற்போது வறண்டு வருகிறது. மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் குப்பைகளாகவே உள்ளது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மத்திய மந்திரி எல்.முருகன், அங்குள்ள இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய காட்சி.
சுகாதாரம் என்றால் என்ன விலை எனக் கேட்பார்கள் போல. மேட்டுப்பாளையம் நகராட்சி முழுவதுமே சுத்தம் இன்றி காணப்படுகிறது.
மேட்டுப்பாளையம் மக்கள் தேசியத்தையும் தெய்வீகத்தையும் ஒன்றாகப் பார்ப்பவர்கள். இது சாதாரண ஊர் இல்லை, தியாகபூமி, ரத்தம் சிந்திய பூமி. மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலை முடிவுக்கு கொண்டுவர நெடுஞ்சாலை அமைக்கப்படும்.
மேட்டுப்பாளையம் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தி.மு.க. ஆட்சியில் பெண்களை மிகவும் தரக்குறைவாக தான் பேசுவார்கள். நடத்துவார்கள். மேட்டுப்பாளையத்தில் தாமரை மலர்ந்தே தீர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேட்பாளர் பட்டியலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பெயரை கொண்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.
- அண்ணாமலை போட்டியிடுவதால் கோவை தொகுதி வி.ஐ.பி. தொகுதியாக மாறி இருக்கிறது.
கோவை:
பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் கோவை தொகுதி வி.ஐ.பி. தொகுதியாக மாறி இருக்கிறது. இதனால் இந்த தொகுதி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள் ளது.
இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை உள்பட 59 பேர் போட்டியிட மனுத்தாக்கல் செய்து இருந்தனர். இவர்களில் 41 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 18 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
41 பேரில் 4 பேர் நேற்று வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொண்டனர். இதனால் இறுதி வேட்பாளர் பட்டியலில் 37 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம்தமிழர் கட்சி, பகுஜன சமாஜ் கட்சி உள்பட 11 கட்சிகளை சேர்ந்தவர்களும், 26 சுயேச்சைகளும் இடம்பெற்றுள்ளனர். 37 பேர் போட்டியிடுவதால் 3 வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இறுதி வேட்பாளர் பட்டியலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பெயரை கொண்ட பலர் இடம்பெற்றுள்ளனர். தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பெயரை கொண்ட ராஜ்குமார் என்ற பெயரில் 4 பேர் போட்டியிடுகிறார்கள். கோ.ராஜ்குமார், கோ.பா.ராஜ்குமார், எம்.ராஜ்குமார், ராஜ்குமார் ஆகிய 4 பேர் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள்.
அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை பெயரை கொண்ட ராமச்சந்திரன் பெயரில் மேலும் 2 பேர் போட்டியிடுகிறார்கள். ரா. ராமச்சந்திரன், எம்.ராமச்சந்திரன் ஆகியோர் சுயேச்சைகளாக களமிறங்கி உள்ளனர்.
வேட்பாளர்களின் பெயரை குழப்பும் வகையில் ஒரே பெயரை கொண்டவர்களை எதிர்க்கட்சியினர் நிறுத்தி உள்ளதாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
- பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் சின்னங்கள் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
- நாம் தமிழர் கட்சி இழந்த கரும்பு விவசாயி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பானை ஆகிய சின்னங்களில் வேறு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக 29 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
தொடர்ந்து 28-ந்தேதி நடைபெற்ற வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில், 18 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
மீதம் உள்ள 11 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தொடர்ந்து பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களின் வேட்புமனுக்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.
வேட்புமனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த 3 பேர் தங்களின் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் சின்னங்கள் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
அந்த வகையில் ஈஸ்வரசாமி (தி.மு.க) உதயசூரியன், கார்த்திக் அப்புசாமி (அ.தி.மு.க) இரட்டை இலை, வசந்தராஜன் (பா.ஜனதா) தாமரை, சுரேஷ்குமார் (நாம் தமிழர் கட்சி) மைக் சின்னம் என 15 பேர் களமிறங்கி உள்ளனர்.
பொள்ளாச்சி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் ஒருவர் கூட பெண் இல்லை.
மேலும் நாம் தமிழர் கட்சி இழந்த கரும்பு விவசாயி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பானை ஆகிய சின்னங்களில் வேறு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மகாசிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.
- மலையடிவாரத்தில் உள்ள டாக்டர்கள் குழுவினர், பக்தர்களை பரிசோதித்து மலையேற அனுமதித்து வந்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் பூண்டி அருகே வெள்ளியங்கிரி மலை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான இங்குள்ள 7 மலைகளை கடந்து மலை உச்சியில் இருக்கும் சுயம்புலிங்கத்தை வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டு வருகிறார்கள்.
இங்கு மலையேறுவதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். மலையேற சிரமமாக இருக்கும் என்பதால் மலையேறுபவர்கள் கையில் கம்பை ஊன்றியபடியே செல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.
இவ்வாறு வெள்ளியங்கிரி மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரு மாதத்தில் மட்டும் 5 பக்தர்கள் பலியானார்கள். ஏற்கனவே அவர்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டு இருந்து மலையேறும் போது உடல்நிலை ஒத்துக் கொள்ளாமல் அவர்கள் இறந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மலையேற அனுமதித்து வருகிறார்கள். இதயநோய், மூச்சுத்திணறல், உடல் பருமன், நீரிழிவு நோய், வயது முதிர்ந்தவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள், கொரோனாவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளியங்கிரி மலையேற வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். இதற்காக மலையடிவாரத்தில் உள்ள டாக்டர்கள் குழுவினர், பக்தர்களை பரிசோதித்து மலையேற அனுமதித்து வந்தனர்.
இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையேறிய மேலும் ஒரு பக்தர் மரணம் அடைந்தார். சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் ரகுராம் (வயது 50). தனியார் வேலைவாய்ப்பு மையம் நடத்தி வந்தார். தீவிர ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்.
இவரும், அவரது பகுதியில் வசிக்கும் 15 பேரும் சென்னையில் இருந்து ஒரு வேன் மூலம் வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக நேற்று இரவு கோவை மாவட்டம் வந்தனர். பின்னர் அவர்கள் மலையேற தொடங்கினர். 4 மலைகளை கடந்து 5-வது மலைக்கு சென்ற நிலையில் ரகுராமுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார்.
இதனால் அவருடன் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்குள்ள மலைவாழ் மக்களின் உதவியுடன் ரகுராமை மீட்டு அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். முகாமில் இருந்த மருத்துவர்கள், ரகுராமை சோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரகுராமின் உடல் பிரேத பரிசோதனை க்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே 5 பேர் இறந்தநிலையில் நேற்று ரகுராமும் மரணம் அடைந்ததால் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
- சிகிச்சை பெற்று வந்த கிஷோர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
- கிஷோரின் தந்தை பிச்சைமுத்து கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரனிடம் புகார் அளித்தார்.
சரவணம்பட்டி:
கரூர் மாவட்டம் காந்தி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைமுத்து. இவர் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகன் கிஷோர் (வயது22). கிஷோர் போதை பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது. இதையடுத்து அவரது பெற்றோர் கிஷோரை கோவை அருகே கோவில்பாளையத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவர் கடந்த பிப்ரவரி 28-ந் தேதி முதல் தங்கி சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர் அடிக்கடி அதிக அளவில் கூச்சல் போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று கிஷோர் தன்னை வீட்டிற்கு அனுப்புமாறு அதிக அளவில் கூச்சல் போட்டுள்ளார். அங்கிருந்த வார்டன் சொல்லி பார்த்தும் அவர் கேட்கவில்லை என தெரிகிறது.
இதையடுத்து அங்கு பணியில் இருந்த காப்பாளர் அரவிந்த்சாமி மற்றும் மனநல ஆலோசகர் பிரசன்னராஜ் ஆகியோர் அவர் சத்தம் போடாமல் இருப்பதற்காக அவரது வாயில் டேப் மற்றும் துணியால் கட்டியுள்ளனர். இதில் சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார்.
இதனால் அதிர்ச்சியான அவர்கள், அவரை அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிஷோர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த கிஷோர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கிஷோரின் தந்தை பிச்சைமுத்து கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரனிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் போதை மறுவாழ்வு மைய வார்டனான ஆலாந்துறையை சேர்ந்த அரவிந்த்சாமி, திருப்பூர் சூசைபுரத்தை சேர்ந்த உளவியல் நிபுணர் பிரசன்னராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மத்தியில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபோது சிஆர்பிஎப் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத முடியவில்லை.
- மத்திய தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான் நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை:
மத்திய மந்திரி எல்.முருகன் இன்று தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் எல்.முருகன் கூறியிருப்பதாதவது:-
பிரதமர் நரேந்திரமோடி இந்தியை பரப்புவதாக ஒரு பொய் செய்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பரப்பி வருகிறார். பிரதமர் மோடி, தமிழில் பேச ஆரம்பித்தால், உங்களைப் போன்ற போலி திராவிட மாடல் ஆட்சியாளர்களுக்கு, மீண்டும் மீண்டும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பே கிடைக்காது என்பது தான் உண்மை.
இந்த உண்மையை, இன்று தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சாமானிய மக்களும் உணர்ந்துள்ளார்கள். அதன் விளைவே உங்களின் இந்த அறிக்கை என்பதையும் உணர்கிறேன்.
இதுவரை எந்தவொரு மத்திய அரசும் செய்யாத அளவிற்கு, தமிழுக்கு அரும்பெரும் தொண்டாற்றி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழுக்கு செய்த தொண்டுகளை பட்டியலிடுகிறேன்.
கடந்த காலங்களில், பல்வேறு நாடுகளுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று வரும் பிரதமர், திருக்குறள் உள்ளிட்ட தமிழின் தொன்மைக்கால இலக்கியங்கள் ஒவ்வொன்றையும் உலக அரங்கில் முன்மொழிந்து வருகிறார் என்பதை முதலமைச்சர் பார்ப்பதில்லையா?
கடந்தாண்டு பொதுத்தேர்வு எழுதுகிற மாணவர்களிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நமது தேசத்தின் மிகவும் தொன்மையான மொழி தமிழ் தான் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டும் வண்ணம், 'காசித் தமிழ்ச் சங்கமம்' விமரிசையாக நடத்தப்பட்டது என்பதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நினைவில்லையா?
பாராளுமன்றம் புதிய கட்டிடத்தில் தமிழகத்தின் பெருமையான செங்கோல், சென்னையில் செம்மொழி ஆராய்ச்சி மையத்திற்கான புதிய கட்டிடம் என்று, தமிழ் மொழி முன்னிலைப்படுத்தப்பட்டு வருவதை கவனிப்பதில்லையா?
மத்தியில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபோது சிஆர்பிஎப் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத முடியவில்லை. மத்திய தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ் தான் எல்லாம் என்று இத்தனை ஆண்டு காலமாக பொய் சொல்லியே தமிழ் மக்களை ஏமாற்றி வந்த உங்களால், உங்களின் கட்சிக்காரர்கள் நடத்துகிற தனியார் பள்ளிகளில் தமிழை கட்டாய மொழியாக்க முடிந்ததா? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்றால், உங்கள் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து தமிழின் பெயரைச் சொல்லியே புளுகி வரும் உங்களைப் பற்றி சுயபரிசோதனை செய்து பாருங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி ஜி அவர்கள் இந்தியை பரப்புவதாக ஒரு பொய் செய்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பரப்பி வருகிறார்.
— Dr.L.Murugan (மோடியின் குடும்பம்) (@Murugan_MoS) March 30, 2024
பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தமிழில் பேச ஆரம்பித்தால், உங்களைப் போன்ற 'போலி திராவிட மாடல்' ஆட்சியாளர்களுக்கு, மீண்டும்… https://t.co/UMBhsH5LCl






