என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • நிதியை ஒதுக்குமாறு தமிழக அரசு சார்பில் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
    • இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டது.

    மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்துள்ளது. மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கியதாக இருந்ததால் இந்த புதிய கல்விக்கொள்கையை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு உறுதிபட தெரிவித்து வருகிறது.

    இதனால் மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்துக்காக (சமக்ர சிக்ஷா அபியான்) தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இந்த நிதியை ஒதுக்குமாறு தமிழக அரசு சார்பில் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

    மத்திய அரசும்-தமிழ்நாடு அரசும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள நிலையில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், 'புதிய கல்விக் கொள்கையை அமல் படுத்தாவிட்டால் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்க முடியாது' என்று அறிவித்தார்.

    இந்த நிலையில் மத்திய அரசு இந்தியை திணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில் தி.மு.க.வினர் ஈடுபட்டனர்.

    தி.மு.க சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் தமிழ், ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளில் ஊரின் பெயர் எழுதப்பட்டிருந்தது.

    பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை மட்டும் தி.மு.க.வினர் தாங்கள் கொண்டு வந்திருந்த கருப்பு மையை அதன் மீது பூசி அதனை அழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறிய அவர்கள் ரெயில் நிலையம் முன்பும் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தியை எதிர்ப்போம், மீண்டும் மொழிப்போரை தூண்டாதே என கோஷங்கள் எழுப்பினர்.

    பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை தி.மு.க.வினர் அழித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஈஷா அறக்கட்டளையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுவாமி பாரகா கலந்து கொண்டு பேசினார்.
    • ‘மிராக்கிள் ஆப் தி மைண்ட்’ எனும் இலவச செயலியை சத்குரு அறிமுகப்படுத்த உள்ளார்.

    கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி பெருவிழா கொண்டாட்டங்கள் வரும் பிப்.26ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.

    இவ்விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் ஈஷா அறக்கட்டளையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுவாமி பாரகா கலந்து கொண்டு பேசினார். அவருடன் ஈஷா தன்னார்வலர் கணேஷ் ரவீந்தரன் மற்றும் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

    அப்போது, சுவாமி பாரகா கூறியதாவது:-

    நம் பாரத ஆன்மீக மரபில் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி நாள் மகாசிவராத்திரி திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கோள்களின் அமைப்பு இயற்கையாகவே மனிதர்களின் உயிர் சக்தி மேல்நோக்கி எழுவதற்கு உதவும் வகையில் இருக்கின்றது.

    இந்த ஆன்மீக சாத்தியத்தை மனிதர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், நம் கலாச்சாரத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மகாசிவராத்திரி நாளில் இரவு முழுவதும் விழிப்புணர்வுடன் இருக்கும் வகையில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் ஈஷாவில் 31-ஆவது மகாசிவராத்திரி கொண்டாட்டங்கள் வரும் 26-ஆம் தேதி மிக பிரம்மாண்டமான அளவில் நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

    ஈஷாவில் மகாசிவராத்திரி விழா ஆதியோகி முன்பு 26-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை கொண்டாடப்பட உள்ளது.

    சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், தலைசிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.

    ஒவ்வொரு ஆண்டும் சத்குரு அவர்கள் வழிநடத்தும் நள்ளிரவு தியானத்தில் மட்டும் உச்சரிக்கப்படும் திருவைந்தெழுத்து மஹாமந்திரத்தை இந்தாண்டு விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் தீட்சையாக சத்குரு வழங்கவுள்ளார்.

    இதன் மூலம் தீட்சைப் பெறும் அனைவரும் அவரவர் இல்லங்களில் இனி திருவைந்தெழுத்து மத்திரத்தை தினமும் உச்சாடணை செய்ய முடியும். இதனுடன் 'மிராக்கிள் ஆப் தி மைண்ட்' எனும் இலவச செயலியை சத்குரு அறிமுகப்படுத்த உள்ளார்.

    மேலும் மகாசிவராத்திரி விழாவிற்கு நேரில் வரும் மக்களின் வசதிக்காக தேவையான பார்கிங், சுத்திகரிக்கப்பட குடிநீர், சுகாதாரமான கழிவறைகள், உடனடி மருத்துவ வசதி உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

     

    விழாவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் வருகை தரவுள்ளனர், இருப்பினும் தமிழக மக்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் சிறப்பு தனி இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் விழாவிற்கு முன்பதிவின்றி நேரடியாக வருகை தரும் மக்கள் இலவசமாக கலந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விழாவில் கலந்து கொள்ளும் லட்சக்கணக்கான மக்களுக்கு மகா அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

    மஹாசிவராத்திரி விழா இந்தியா முழுவதிலும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

    அந்த வகையில் தமிழ்நாட்டில் 50 இடங்களிலும், கேரளாவில் 25 இடங்களிலும் நேரலை செய்யப்பட உள்ளது. இதனுடன் தமிழ், மலையாளம், ஓடியா, அசாமி, பெங்காலி உள்ளிட்ட 11 இந்திய மொழிகள் மற்றும் அரபிக், இத்தாலி, பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட 11 அயல் மொழிகள் என மொத்தம் 22 மொழிகளில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

    மேலும் 150-க்கும் அதிகமான தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களிலும், இந்தியா முழுவதும் 100-க்கும் அதிகமான PVR-INOX திரையரங்குகளிலும், ஜியோ ஹாட்ஸ்டார், ZEE5 ஆகிய OTT தளங்கள் மற்றும் BIG 92.7, ஃபீவர் ஆகிய பண்பலை வானொலிகளிலும் விழா நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

    இவ்விழாவில் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்கள் இரவு முழுவதும் விழிப்பாக இருக்க உதவும் வகையில் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

    இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகர் சத்ய பிரகாஷ், கர்நாடகாவை சேர்ந்த பாடகி சுபா ராகவேந்திரா, 'பாரடாக்ஸ்' என அழைக்கப்படும் தனிஷ் சிங், மராத்தி இசை சகோதரர்கள் அஜய் - அதுல், குஜராத் நாட்டுப்புற கலைஞர் முக்திதான் காத்வி மற்றும் இந்திய மொழிகளில் ஆன்மீகப் பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் வைரலான ஜெர்மன் பாடகி கசான்ட்ரா மே ஆகியோர் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க. திறப்பு விழா நடைபெறும் இடம் மற்றும் அமித் ஷா வந்து செல்லும் இடங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • மேடை மற்றும் பந்தல் அமைக்கப்படுகிறது.

    கோவை:

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வருகிற 25-ந்தேதி மாலை கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜ.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அன்று இரவு அவர் பீளமேடு பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஓய்வெடுக்கிறார். பின்னர் மறுநாள் 26-ந்தேதி காலை பீளமேடு அருகே எல்லைத்தோட்டம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள பா.ஜ.க. அலுவலகத்தை அமித் ஷா திறந்து வைக்கிறார்.

    மாலையில் ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் அமித் ஷா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்.

    மத்திய மந்திரி அமித் ஷா வருகையையொட்டி கோவை மாவட்ட பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அவரை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். மேலும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். பா.ஜ.க. திறப்பு விழா நடைபெறும் இடம் மற்றும் அமித் ஷா வந்து செல்லும் இடங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    இதற்கிடையே பா.ஜ.க. அலுவலகம் திறப்புக்கு பின்னர் அங்கு திரளும் பா.ஜ.க.வினர் மத்தியில் அமித் ஷா உரையாற்ற உள்ளார். இதற்காக அங்கு சிறிய அளவில் மேடை மற்றும் பந்தல் அமைக்கப்படுகிறது. இதற்கான கால்கோள் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

    நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் சேகர், மாவட்டத் தலைவர் ரமேஷ் குமார், ஊட்டி பொறுப்பாளர் நந்தகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை, இளைஞரணி மாவட்ட தலைவர் கிருஷ்ண பிரசாத், விஜயகாண்டீபன், விஜயகாந்த், கனக சபாபதி, ஜி.கே. செல்வகுமார், மாவட்ட துணைத் தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோவையில் பா.ஜ.க. புதிய அலுவலகம் 2 மாடி கட்டிடத்துடன் கட்டப்பட்டுள்ளது. இங்கு 500 பார்வையாளர்கள் அமரும் வகையில் ஒரு கூட்ட அரங்கமும், சிறிய அளவில் மற்றொரு கூட்ட அரங்கமும், மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் அறை தனியாகவும் உள்ளன. 

    • கோவை பாப்பநாயக்கன்பாளையம் பொன்னிநகரில் உள்ள வீடுகள் முன்பு, தி.மு.க.வினர் இன்று காலை பெரிய கோலம் போட்டனர்.
    • வீடுகள் முன்பு இன்று காலை போடப்பட்ட கோலங்களால் பரபரப்பு ஏற்பட்டது.

    கோவை:

    தமிழ்நாட்டில் 3-வது மொழியாக இந்தி மொழியை திணிக்க கூடாது என தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நேற்று இந்தி மொழியை அழித்து பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

    இந்தநிலையில் இந்திமொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் தங்கள் வீடுகள் முன்பு வாசலில் கோலம் போட வேண்டும் என கூறப்பட்டது.

    கோவை மாநகர், மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று தி.மு.க.வினர் தங்கள் வீடுகள் முன்பு இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து வாசலில் கோலமிட்டனர். கோவை பாப்பநாயக்கன்பாளையம் பொன்னிநகரில் உள்ள வீடுகள் முன்பு, தி.மு.க.வினர் இன்று காலை பெரிய கோலம் போட்டனர்.

    அதில் இந்தி மொழி திணிப்பை எதிர்ப்போம். இந்தி மொழியை திணிக்காதே. தமிழ் வாழ்க என்று எழுதி கோலம் போட்டிருந்தனர். அந்த பகுதியில் உள்ள வீடுகள் முன்பு இன்று காலை போடப்பட்ட கோலங்களால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதில் தி.மு.க. பகுதி செயலாளர் நாகராஜ், பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு, வட்டச் செயலாளர் ஜெபமாலை தாஸ், சந்திரசேகர் மற்றும் தி.மு.க. மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். 

    • பயிற்சி வகுப்புகள் மார்ச் 1-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
    • “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா” எனும் பிரம்மாண்ட விழா பிப். 27 முதல் மார்ச் 9 வரை நடைபெற இருக்கிறது.

    கோவை ஈஷா யோக மையத்தில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில் "தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா" எனும் பிரம்மாண்ட விழா பிப். 27 முதல் மார்ச் 9 வரை நடைபெற இருக்கிறது.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் நேற்று நடைபெற்றது. இதில் பிரபல கவிஞரும் எழுத்தாளருமான கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா பங்கேற்று பேசினார்.

    இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் முத்தையா கூறியதாவது:-

    சத்குரு அவர்களின் வழிகாட்டுதலின் படி தமிழ் மொழியின் செழுமையையும், தமிழ் மண்ணின் கலாச்சாரம், வீரம், கலைகள், வரலாறு, உணவு முறைகள், வாழ்வியல் உள்ளிட்ட தமிழர் பண்பாட்டின் தொன்மையையும் கொண்டாடும் விதமாக 'தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா' கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் இந்தாண்டு 'தமிழ்த் தெம்பு திருவிழா' மிகவும் பிரம்மாண்டமான முறையில் பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை 11 நாட்கள் ஆதியோகி முன்பு நடைபெற இருக்கிறது.

    இத்திருவிழாவில் 150-க்கும் மேற்பட்ட கைவினை, கைத்தறி, உணவு, விவசாய மற்றும் விளையாட்டு பொருட்களின் அரங்குகள் இடம்பெற உள்ளன. 

    இதில் தமிழ் மொழியின் செழுமை, தமிழ் அரசர்களின் ஆளுமை, தமிழ் வளர்த்த அடியார்களின் பக்தி, காலத்தால் அழியாத தமிழரின் கட்டிடக்கலையின் நுட்பம், இயற்கையோடு இயைந்து வளர்ந்த சித்த மருத்துவம், அகிலமே பார்த்து வியக்கும் ஆலயங்கள் என தமிழரின் பெருமையை பறைசாற்றும் வகையிலான 24 கண்காட்சி அரங்குகளும் இடம்பெற உள்ளன.

    நாட்டின மாடுகள் மற்றும் குதிரைகளின் கண்காட்சியும் இத்திருவிழாவில் நடைபெற உள்ளது. இதனுடன் தமிழகத்திலேயே முதன்முறையாக மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஆதியோகி முன்பு மார்ச் 7 முதல் 9 ஆம் தேதி வரை 'நாட்டு மாடுகள் மற்றும் குதிரைகளின் சந்தையும்' நடைபெற உள்ளது.

    நம் தமிழ் பண்பாட்டில் நிகழ்த்து கலைகள் என்பன எளிய மக்களுடைய உணர்ச்சிகளின் வடிகாலாக, வாழ்வியல் வரலாற்று பதிவுகளாக, உடல் மன ஒத்திசைவின் உச்சமாக வளர்ந்து வந்துள்ளன.

    இன்றைய காலத்தில் இந்த கலைகள் அனைத்தும் அழியும் அபாயத்தில் உள்ளது, ஆகையால் இந்த கலைகளையும், கலைஞர்களையும் வளர்த்து ஊக்குவிக்கும் விதமாக 11 நாட்களும் மாலை நேரங்களில் தமிழ் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    குறிப்பாக இதில் பறையாட்டம், ஒயிலாட்டம், பொய்கால் குதிரையாட்டம், வள்ளி கும்மி உட்பட பல நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    நம் தமிழ்நாட்டில் விளையும் பொருட்கள் முதல் தயாரிக்கப்படும் பொருட்கள் வரை பலவும் இந்த மண்ணுக்கே உரிய தனித்தன்மை கொண்டவைகளாகும்.

    அந்த வகையில் தஞ்சாவூர் ஓவியம், வில்லியனூர் டெரகோட்டா, தோடா எம்பிராய்டரி, கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், மகாபலிபுரம் கற்சிலை, சுவாமிமலை ஐம்பொன் சிற்பங்கள் உள்ளிட்ட 20 புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையும் இத்திருவிழாவில் இடம்பெற உள்ளது.

    இந்த கண்காட்சியுடன் கூடுதலாக பார்வையாளர்களுக்கு இந்த கலைகளின் எளிமையான ஒருநாள் செய்முறை பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் மார்ச் 1-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

    தமிழர் பண்பாடு குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி, கோலப் போட்டி, பறையிசைப் போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    இப்போட்டிகள் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக நடைபெற உள்ளன. இதில் பங்கேற்று வெற்றி பெறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கபட உள்ளன.

    தமிழர்கள் போர்க்களங்களில் பயன்படுத்தும் உத்திகள் மட்டுமல்ல ஆடுகளத்தில் ஆடும் விளையாட்டுகளும் வீரம் செறிந்தது தான், அந்த வகையில் கொங்குநாட்டு வீர விளையாட்டான 'ரேக்ளா பந்தயம்' மார்ச் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.

    இதனுடன் பொது மக்களும், குழந்தைகளும் பங்கேற்று விளையாடி மகிழும் வகையில் கேளிக்கை விளையாட்டுகளும், மெகா இராட்டினங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நமக்கு தமிழ் மொழி தான் ஆதாரம், ஆணிவேர் எல்லாம்.
    • மத்திய அரசு 3-வது மொழியாக இந்தி மொழியை திணிக்க பார்க்கிறது.

    கோவை:

    கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் இன்று உலக தாய்மொழி நாள் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பாட்டரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

    விழாவில் லண்டன், சிங்கப்பூர், பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உலக தமிழ் அறிஞர் விருது வழங்கப்பட்டது. விருதுகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    நமக்கு தமிழ் மொழி தான் ஆதாரம், ஆணிவேர் எல்லாம். தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை வாங்கி கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. முன்பு மத்தியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தலைவர் கருணாநிதி செம்மொழி அந்தஸ்தை பெற்றுத் தந்தார். அதன் பிறகு செம்மொழி மாநாடு கோவையில் தான் நடந்தது. அந்த சிறப்புக்குரியது கோவை.

    நான் கல்லூரியில் படித்து பட்டம் பெற்று, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தபோது இந்தி மொழி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் அன்பழகன், கோவை ராமநாதன் ஆகியோரின் எம்.எல்.ஏ. பதவியை அப்போது சபாநாயகராக இருந்தவர் பறித்தார். நான் 45 நாட்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். இப்போது அதே துறைக்கு, தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஆசியோடு அமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறேன்.

    தமிழ் மொழியை காக்க அனைவரும் பாடுபட வேண்டும். இன்று மத்திய அரசு 3-வது மொழியாக இந்தி மொழியை திணிக்க பார்க்கிறது. முன்பு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற போது தமிழ் மொழிக்காக உயிர் நீத்தவர்கள் சின்னசாமி, நடராஜன், தாளமுத்து போன்றோர். எனவே தாய் மொழியை அழியாமல் பாதுகாக்க வேண்டும். தமிழ் மொழியை வளர்க்க வேண்டும். தாயை போல தாய் மொழியாம் தமிழ் மொழியை மதிக்க வேண்டும்.

    தொடர்ந்து மொழியைப் வளர்க்க, பாதுகாக்க நாம் பாடுபட வேண்டும். அனைவரும் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும். இன்று தமிழ் மொழியை பாதுகாக்க வளர்க்க பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் வழியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பாடுபட்டு வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தொல்லியல் ஆராய்ச்சி துறை இயக்குனர் அவ்வை அருள், மேயர் ரங்கநாயகி, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், துணை மேயர் வெற்றி செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தண்ணீர் தேவைக்காக பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளில் உலா வருகின்றன.
    • நீண்ட நேரம் சாலையில் பொறுமையாக நின்று உணவருந்தியது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானை, சிறுத்தை, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளம் உள்ளன.

    தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக வனவிலங்குகள் அவ்வப்போது பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளில் உலா வருகின்றன.

    இந்நிலையில் நேற்று மாலை ஆழியார்-வால்பாறை சாலையில் உள்ள சின்னார்பதி அருகே ஒற்றை காட்டு யானை சாலையில் உலா வந்தது. அப்போது பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை நோக்கி சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து, அப்பகுதியிலேயே முகாமிட்டது. மேலும் நீண்ட நேரம் சாலையில் பொறுமையாக நின்று உணவருந்தியது.

    இதனால் நீண்ட நேரமாக ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் தவிப்புக்குள்ளானது. பின்னர் யானை அங்கிருந்து வனப்பகுதி க்குள் சென்றபிறகே ஆம்புலன்ஸ் மற்றும் மற்ற வாகனங்களால் அந்த இடத்தை கடந்து செல்ல முடிந்தது.

    ஆழியார்-வால்பாறை சாலையில் ஒற்றை காட்டு யானை உலா வருவதால் சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • முக்கிய நிகழ்வுகளின்போது இங்கு வந்து வழிபடுவது வழக்கம்.
    • சிவபுராணம் பாடி தீபாராதனை செய்து வழிபட்டார்.

    வால்பாறை:

    புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமியின் ஆன்மீக குருவாக சேலம் அப்பா பைத்தியம் சுவாமிகள், பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூர் அழுக்கு சித்தர் என அழைக்கப்படும் அழுக்கு சுவாமி ஆகியோர் விளங்குகிறார்கள்.

    இவர்களில் அழுக்கு சித்தரின் ஜீவசமாதி பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன்புதூரில் உள்ளது. முக்கிய நிகழ்வுகளின்போது முதலமைச்சர் ரங்கசாமி இங்கு வந்து வழிபடுவது வழக்கம்.

    அதன்படி நேற்று அவர் வேட்டைக்காரன்புதூர் அழுக்கு சித்தர் ஜீவசமாதிக்கு வந்தார். அங்கு பூ, பழம் வைத்தும், மாலை அணிவித்தும், சிவபுராணம் பாடியும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தீபாராதனை செய்து வழிபட்டார்.

    இதைத்தொடர்ந்து அங்கிருந்த பக்தர்களுக்கு பிரசாதம், எலுமிச்சம்பழம் ஆகியவற்றை வழங்கினார். பின்னர் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார்.

    தொடர்ந்து அங்குள்ள திருமண மண்டபத்தில் ஆசிரியர் ஜெயக்குமார் என்பவர் எழுதிய 3 புத்தகங்களை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில் எழுத்தாளர்கள் எத்தகைய கருத்துக்களை வேண்டுமானாலும் எழுதலாம், வெளிப்படுத்தலாம். மற்றவர்களை பாதிக்காதவாறு எழுத வேண்டும். நம்முடைய எண்ணம், செயல்பாடு எதிர்கால சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றார்.

    தேசிய கல்விக்கொள்கை குறித்து நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு தற்போது கோவிலுக்கு வந்து இருக்கிறேன். எனவே அதுபற்றி பேச முடியாது என கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

    நிகழ்ச்சியில் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொடக்கத்தில் ஆயிஷாவுக்கு சிறிய தொகை லாபமாக கிடைத்துள்ளது.
    • கோவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஆயிஷா புகார் செய்தார்.

    கோவை:

    கோவை சாய்பாபா காலனி சண்முகா தெருவைச் சேர்ந்தவர் ஆயிஷா ஷர்மி ஜெகன் (வயது 29). என்ஜினீயரிங் படித்த இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு வாட்ஸ்அப் மூலம் ஆலியா என்ற பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் ஆனார். அப்போது ஆலியா, ஆயிஷாவிடம் பகுதிநேர வேலை மூலம் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறினார். இதைநம்பி அவருடன் ஆயிஷா தொடர்ந்து பேசத் தொடங்கினார்.

    முதலில் குறிப்பிட்ட இலக்கு வழங்கப்படும் என்றும் அதை வெற்றிகரமாக செய்து முடித்து கொடுத்தால் பிறகு கூடுதல் லாபம் கிடைக்கும் வகையில் வாய்ப்பு வழங்கப்படும் என்று ஆலியா கூறியுள்ளார்.

    அவர் கூறியபடி தொடக்கத்தில் ஆயிஷாவுக்கு சிறிய தொகை லாபமாக கிடைத்துள்ளது. இதனால் ஆயிஷா தொடர்ந்து முதலீடு செய்தார். மொத்தம் ரூ.5 லட்சத்து 42 பணத்தை அவர் பல்வேறு தவணைகளில் செலுத்தி உள்ளார்.

    இதற்கான லாபத்தொகையை ஆயிஷா வங்கி கணக்கில் இருந்து எடுக்க முயன்றார். ஆனால் அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதுகுறித்து கேட்பதற்காக தனக்கு பழக்கமான ஆலியாவை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆக இருந்தது. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டத்தை ஆயிஷா உணர்ந்தார்.

    இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஆயிஷா புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து என்ஜினீயர் ஆயிஷாவை ஏமாற்றிய ஆலியா மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகிறார்கள்.

    • கோவை ஆர்.எஸ்.புரத்தில் கடந்த 14-ந்தேதி குண்டுவெடிப்பு நினைவு தினத்தை முன்னிட்டு மலரஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
    • காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

    கோவை:

    கோவை மாநகர போலீசார் சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துக்கள் பதிவிடும் நபர்கள் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அவ்வாறு கருத்து பதிவிட்டு சமூக பிரச்சனைகளை ஏற்படுத்தும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோவை மாநகர சட்டம் ஒழுங்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு என்பவர் எக்ஸ் வலைதளத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பெயரில் வலைதளத்தில் இரண்டு சமூகத்தினருக்கு இடையே பிரச்சனை ஏற்படும் வகையில் கருத்து பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அழகுராஜ், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இது தொடர்பாக அர்ஜூன் சம்பத்துக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை செய்ய உள்ளனர்.

    இதேபோல இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மீதும் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை ஆர்.எஸ்.புரத்தில் கடந்த 14-ந்தேதி குண்டுவெடிப்பு நினைவு தினத்தை முன்னிட்டு மலரஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.

    இதில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்தது. அதன்பேரில் ஆர்.எஸ்.புரம் போலீஸ்நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு காடேஸ்வரா சுப்பிரமணியத்துக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.

    அதன்பேரில் நேற்றுமுன்தினம் இரவு காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவருடன் இந்து முன்னணியினரும், பா.ஜ.க.வினரும் சென்றனர். அப்போது அவர்கள் போலீஸ்நிலையத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுதொடர்பாக போலீசார் காடேஸ்வரா சுப்பிரமணியம், கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் ரமேஷ்குமார் உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியில்லாமல் திரண்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததாக கூறி 2 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கோவை மாநகர சட்டம்-ஒழுங்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்து, ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    • முன்னாள் அமைச்சர் உதயகுமார் போன்றவர்களுக்கு எல்லாம் எந்த நேரத்திலும் நான் பதில் சொல்ல தேவையில்லை.
    • கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வினர் வாக்குகளை பெற தவறி விட்டார்கள்.

    கோவை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் எதையும் எதிர்பார்க்காமல் எம்ஜி.ஆர். காலத்தில் இருந்து கட்சிக்காக உழைப்பவர். கட்சிக்காக பல நிலைகளில் இருந்து நானும், அவரும் இணைந்து பணியாற்றி உள்ளோம். அந்த வகையில் எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக்கு உழைக்க கூடிய ஒரு உன்னத தொண்டராக தான் அவர் இருக்கிறார்.

    முன்னாள் அமைச்சர் உதயகுமார் போன்றவர்களுக்கு எல்லாம் எந்த நேரத்திலும் நான் பதில் சொல்ல தேவையில்லை. அவர் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். அதனை மக்கள் கவனித்து கொள்வார்கள்.

    கட்சி இணைய வேண்டும் என்பது அனைவருடைய கருத்தாகவும் இருக்கிறது. அ.தி.மு.க.வில் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவியின் விசுவாசமிக்க தொண்டர்கள், கட்சி இணைய வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். கட்சி மீண்டும் இணைந்தால் தான் அ.தி.மு.க. ஆட்சிக்கு வர முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் நாட்டுக்கு செய்த சேவையை, நலப்பணிகளை எண்ணி பார்க்கிறார்கள். மக்களும் அ.தி.மு.க. இணைய வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வினர் வாக்குகளை பெற தவறி விட்டார்கள். 7 தொகுதிகளில் டெபாசிட் தொகை இழந்தனர். 13 தொகுதிகளில் 3-ம் இடத்தில் இருக்கிறார்கள்.

    அ.தி.மு.க. தொண்டர்களின் உரிமையை மீட்கின்ற குரலாக இருக்கின்ற நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று விசுவாசமிக்க அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் மக்களும் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காக தான் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி யில் நான் போட்டியிடும் சூழல் ஏற்பட்டது. அந்த தொகுதியில் என்னை யாரெல்லாம், எப்படியெல்லாம் தோற்கடிப்பதற்கு சதி செய்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். அங்கு 3 லட்சத்துக்கும் மேல் வாக்குகளை மக்கள் எனக்கு அளித்தனர். பதிவான வாக்குகளில் 33 சதவீத வாக்குகள் எனக்கு கிடைத்தது.

    இதில் இருந்து மக்களும், தொண்டர்களும் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்து இருக்கிறோம்.

    அவர்கள் இன்றைக்கு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட போட்டியிட முடியாத பய உணர்வுடன் இருக்கிறார்கள். பிரிந்து இருக்கின்ற அ.தி.மு.க. சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பது தான் உண்மையான கருத்து ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • யோகா கற்றுக் கொடுக்கும்போது மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
    • அதிர்ச்சி அடைந்த பள்ளி முதல்வர், காந்திபுரம் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார்.

    கோவை:

    கோவை வடவள்ளி அருகே உள்ள கோல்டன் நகரைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 54). இவர் கோவை நகரின் மத்தியில் உள்ள பிரபல பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வந்தார். மேலும் மாணவ-மாணவிகளுக்கு யோகாவும் கற்றுக் கொடுத்தார்.

    இந்தநிலையில் யோகா கற்றுக் கொடுக்கும்போது மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரது தொல்லை அதிகரிக்கவே மாணவிகள் பள்ளி முதல்வரிடம் சென்று புகார் செய்தார்.

    ஆசிரியர் ராஜன், யோகா பயிற்சியின்போது தவறான முறையில் நடந்து கொள்வதாகவும், பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், தொடக்கூடாத இடங்களில் தொட்டு பேசுவதாகவும் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி முதல்வர், காந்திபுரம் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், ஓவிய ஆசிரியர் ராஜனை பிடித்து விசாரித்தனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை இன்று கைது செய்தனர்.

    கோவையில் 17 வயது சிறுமியை அறையில் அடைத்து கூட்டு பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர்கள் 7 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு யோகா ஆசிரியர் கைதான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×