என் மலர்
சென்னை
- ஆழ்கடலில் இந்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதால் அடுத்தடுத்த நிலைகளை வேகமாக அடையக்கூடும்.
- சென்னைக்கு அருகே கடந்து, ஆந்திரா சென்றால், வட தமிழகத்தில் நல்ல மழை இருக்கும்.
சென்னை:
வங்கக்கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. மேலும் தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ வலுவடையும் என சொல்லப்பட்டது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அதற்கான அமைப்பு அப்படியே மாறியது.
இதனால் எதிர்பார்த்த மழையும் கிடைக்கவில்லை. வலுப்பெற இருந்த அமைப்பும் வலு குறைந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தற்போது நிலவி வருகிறது. இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாக இருக்கிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்தகட்டமாக எப்படி நகரும்? வலுவடைந்தால் அதன் இலக்கு எங்கே நோக்கி இருக்கும்? என்பது பற்றிய மற்ற விவரங்களை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கவில்லை.
ஆனால் இதுபற்றி வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தரிடம் கேட்டபோது, 'இது தமிழகம், ஆந்திரா 2 பகுதிகளை நோக்கி நகருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆழ்கடலில் இந்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதால் அடுத்தடுத்த நிலைகளை வேகமாக அடையக்கூடும். அந்தவகையில் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. தொடர்ந்து இது புயலாகவும் மாற வாய்ப்புகள் அதிகம். இப்படி அடுத்தடுத்து வேகமாக வலுவடைந்தால், ஆந்திராவை நோக்கி நகரும். அதுவே அமைப்பு வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டால், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது சாதாரண புயலாகவோ வடதமிழகம்-தெற்கு ஆந்திராவை நோக்கி நகரக்கூடும். இந்த 2 போக்கில் எது அதன் இலக்காக இருக்கும் என்பதை இன்று கணிக்க முடியும்' என்றார்.
வங்கக்கடலில் உருவாகி இருக்கும் இந்த அமைப்பு ஆந்திரா நோக்கி சென்றால், தமிழகத்துக்கு மழை உள்ளிட்ட எந்த தாக்கமும் ஏற்படாது. அதுவே சென்னைக்கு அருகே கடந்து, ஆந்திரா சென்றால், வட தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என சொல்லப்படுகிறது.
வானிலை ஆய்வு மையம் இதை சொல்லாமல் சொல்வது போல, தமிழகம் நோக்கி இந்த அமைப்பு நகரும் பட்சத்தில் மழைக்கான வாய்ப்பு எங்கெல்லாம் இருக்குமோ, அதனை 26-ந்தேதியில் இருந்து சுட்டிக்காட்டியிருக்கிறது. அதன்படி, 26-ந்தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும், 27-ந்தேதி (திங்கட்கிழமை) ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த 2 நிகழ்வுகளில் எது நடந்தாலும், நடக்காவிட்டாலும் மத்திய மாவட்டங்கள், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் பகலில் வெப்பமான சூழலும், இரவில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கான வாய்ப்பும் இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு-வடமேற்காக ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.
- முன்னதாக உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.
சென்னை:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்று புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு-வடமேற்காக ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து புயல் சின்னமாக மாறும் என கருதப்பட்ட நிலையில், நிலப்பரப்புக்கு அருகே வரும் போது அது வலுவிழந்தது குறிப்பிடத்தக்கது.
- அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
- மழை காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது.
- புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர்.
சென்னை:
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி நடிகர் ஸ்ரீகாந்தும், 26-ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர். இருவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அவர்கள் இருவரும் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த மனு தள்ளுபடி ஆனது.
இதையடுத்து, ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணை முடிந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது. அதன்படி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர்.
இந்நிலையில், போதைப் பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி ஸ்ரீகாந்த் வரும் 28-ம் தேதியும், கிருஷ்ணா வரும் 29-ம் தேதியும் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தூய்மை பணியாளர்களுக்கு தினசரி 3 வேளை உணவு, மாநகராட்சியின் உணவகங்கள் மூலம் வழங்கப்படும்.
- தூய்மை பணியாளர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் முதல் படியாக அமைந்துள்ளது.
தூய்மை பணியாளர்களுக்கு 3 ஆண்டு காலத்திற்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு ரூ.186 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்றது. அப்போது, முதலமைச்சர் மு.க.ஸடாலின் தூய்மைப் பணியாளர்களுக்காக 6 சிறப்புத் திட்டங்களை அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலுக்கு தந்தார்.
இதில், தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனித் திட்டம் செயல்படுத்தப்படும்.
தூய்மைப் பணியாளர்கள் பணியில் இருக்கும்போது இறக்க நேரிட்டால் நல வாரியம் மூலம் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி உதவியுடன் கூடுதலாக ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும். இதன் மூலம் ரூ.10 லட்சம் அவர்களது குடும்பத்திற்கு கிடைக்கும்.
தூய்மைப் பணியாளர்கள் சுயத்தொழில் தொடங்கினால் 35 சதவீதம் மானியமாக அதாவது, ரூ.3½ லட்சம் வரை வழங்கப்படும்.
6 சதவீத வட்டி மானியத்துடன் வழங்குவதற்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்வியில் சேரும் போதும் உதவித் தொகைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
அவர்கள் எந்தப் பள்ளியில் பயின்றாலும் கல்விக் கட்டணம், விடுதிக் கட்ட ணம் உள்ளிட்ட அனைத்தும் வழங்கும் வகையில் புதிய கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.
தூய்மைப் பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளில் வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்படும். தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கப்படும்.
தூய்மை பணியாளர்கள் அதிகாலையிலேயே வேலைக்கு வர வேண்டி இருப்பதால் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் காலை உணவு இலவசமாக வழங்கப்படும். இது சென்னை மாநகராட்சி பகுதியில் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று வெளியான அரசாணைப்படி, தூய்மை பணியாளர்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு 3 வேளைகளும் இலவச உணவு வழங்கப்படும். இது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் முதற்கட்டமாக செயல்படுத்தப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், இந்தத் திட்டம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என அரசு எதிர்பார்க்கிறது. அரசாணைப்படி, தூய்மை பணியாளர்களுக்கு தினசரி 3 வேளை உணவு, மாநகராட்சியின் உணவகங்கள் மூலம் வழங்கப்படும்.
காலை உணவில் இட்லி, போன்றவை, மதியம் ரசம், சாம்பார், கூட்டு, இரவு சப்பாத்தி அல்லது ரொட்டி உள்ளிட்டவை அடங்கும். இந்த உணவுகள், ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருக்கும். சென்னை மாநகராட்சி, இதற்கான உணவகங்களை அமைத்து, பணியாளர்களின் பணி நேரத்துடன் ஒத்திசைவாக வழங்கும் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்தத் திட்டம், தூய்மை பணியாளர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் முதல் படியாக அமைந்துள்ளது" குறிப்பிடப்பட்டுள்ளது.
- திமுக அரசு, இப்போது 150 அலுவலர்களுக்கு மேல் டெல்டா பகுதிகளை ஆய்வு செய்ய அனுப்பியுள்ளது.
- அதிமுக ஆட்சியில் நாற்று நடும் அளவிற்கு முளைத்த நெல்மணிகள், இப்போது சிறியதாகவே முளைத்துள்ளன.
விவசாயிகள் படும் சிரமங்களை கண்டுகொள்ளாமல் கோமாளித்தனமாக செயல்படும் விடியா திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசுக்கு கண்டனம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
டெல்டா பகுதியில் விவசாயிகள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்ய விடியா திமுக அரக தவறியதால், கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வந்த நெல், மழையில் நனைந்து விளாவதை சுட்டிக்காட்டி அறிக்கைகள் வாயியாகவும்.
சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் எழுப்பிய பின்னரும், விசாக பிரச்சனைக்கு தீர்வு காணப்படாததாய், 22.10.2025 அன்று நான் டெல்டா மாவட்டங்களுக்கு நேரில் சென்று விவசாயிகள் படும் துயரத்தையும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே நெல்மணிகள் குவியலாக குவிக்கப்பட்டு முளைவிட்டு இருந்ததையும், இந்த தீபாவளி, விவசாயிகளின் கண்ணீர் தீபாவளியாக மாறியதையும் கட்டிக் காட்டி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைந்து நிவாரணம் வழங்க இந்த அரme வலியுறுத்தினேன்.
நான், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களுடன் நேரில் ஆய்வு செய்து, விவசாயிகள் படும் துயரை எடுத்துக் கூறிய பிறகும், விளம்பர மாடல் விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர். நான் பொய் குற்றச்சாட்டு சுமத்துவதாகவும், விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் பேட்டி அளிக்கிறார்.
ஆனால், விவசாயத் துறை அமைச்சரோ 16 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெல் பயிர் பாதிப்படைந்துள்ளது என்று பேட்டி கொடுக்கிறார்.
உணவுத் துறை அமைச்சர் நெல் கொள்முதல் செய்ய தாமதம் ஏற்பட்டதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று கூறுகிறார்.
கும்பகர்ண தூக்கத்தில் இருந்த இந்த விடியா திமுக அரசு, இப்போது 150 அலுவலர்களுக்கு மேல் டெல்டா பகுதிகளை ஆய்வு செய்ய அனுப்பியுள்ளது.
* நாட்டில் என்ன நடக்கிறது ? களத்தில் உள்ள பிரச்சனை என்ன? என்பதைக் கூட அறிந்து கொள்ளாத முதலமைச்சர், இன்று தமிழ் நாட்டில் முதலமைச்சராக இருக்கிறார். இதுதான் தமிழ் நாட்டின் துரதிஷ்டம்.
* அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தபோது, எதற்கெடுத்தாலும் குறை சொல்லும் ஒருசில பத்திரிகைகளும், ஊடகங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும், விடியா திமுக அரசின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் இந்தக் கூற்றை கேட்டுக்கொண்டு இன்று மௌனமாக இருக்கின்றனர்.
குறிப்பாக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்படுவதற்குப் போராடுவதாகக் கூறும் கம்யூனிஸ்ட் தோழர்கள்கூட நெல் கொள்முதலில் நடைபெறும் குளறுபடிகளைப் பற்றி எதுவும் கூறாமல் மௌனம் சாதிப்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.
நான், நேற்று டெல்டா மாவட்டங்களுக்கு நேரில் சென்று நெல் கொள்முதலில் விவசாயிகள் படும் வேதனையை ஊடகங்களில் வெளிப்படுத்தினேன். அதன்படி விவசாயிகளின் வேதனையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதற்கு பதில், நான் விவசாயிகளின் உண்மை நிலையை வெளிப்படுத்திவிட்டேன் என்று திமுக அமைச்சர்களுக்கு ஆத்திரம் வருகிறது. அவர்களது கோமாளித்தனமான கருத்துகள் இன்றைய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியாகி உள்ளது. அதில் விவசாயத் துறை அமைச்சர் கூறுகிறார்.
* அதிமுக ஆட்சியில் நாற்று நடும் அளவிற்கு முளைத்த நெல்மணிகள், இப்போது சிறியதாகவே முளைத்துள்ளன என்கிறார்.
நெல் சிறிதளவு முளைத்தால் என்ன ? நாத்து நடும் அளவுக்கு முளைத்தால் என்ன? நெல் முளைத்துவிட்டாலே அது வீண் தானே.
அதிமுக ஆட்சியில் ஒரு நாளைக்கு 600 முதல் 700 மூட்டைகள் கொள்முதல் செய்ததாகவும், இப்போது ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.
திமுக ஆட்சியில் நாளொன்றுக்கு 800 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் 1000 மூட்டைகளாக உயர்த்தி கொள்முதல் செய்யப்பட்டது. 2021-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், கொள்முதல் செய்வது 800 மூட்டையாகக் குறைத்தது இந்த அரசு. கொள்முதல் விளைச்சலை ஒட்டித்தான் அமையும்.
கூடுதலாக நெல் வந்தால் வாங்கத்தானே வேண்டும். மேலும், கொள்முதல் செய்த மூட்டைகளை அடுக்க இடம் இல்லை, சாக்கு இல்லை என்று ஒரு நாளைக்கு 800 மூட்டைகளைக் கூட கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியது இந்த அரசு.
எடுத்தவுடன் நெல்லை கொள்முதல் செய்ய முடியாது. முதலில் டோக்கன் பெற வேண்டும்; நெல்மணிகளைத் தூற்ற வேண்டும்; எடை போட வேண்டும்; அதன் பின்பு தான் கொள்முதல் பணிகள் முடியும்.
அதற்குத் தேவையான அளவு சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் இயந்திரங்கள் வேண்டும்.
ஈரப் பதம், குப்பை எல்லாம் பார்க்காமல் தனியார் நெல் கொள்முதல் செய்வார்கள் என்று விவசாயத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளே, விவசாயத் துறை அமைச்சரின் அறிக்கையை மீண்டும் படித்துப் பாருங்கள். எவ்வளவு கோமாளித்தனமான பதில் ? இவருக்குதான் இந்த வழிமுறை தெரிந்தது போல பேசி இருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல, இவர் விவசாயிகளை எவ்வளவு கேவலப்படுத்துகிறார் என்பதையும் காட்டுகிறது.
உணவுத் துறை அமைச்சர் இதற்கு ஒருபடி மேலே சென்று செறிவூட்டப்பட்ட அரிசியை கலக்க மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை; இதுதான் பிரச்சனைக்குக் காரணம் என்கிறார். ஆகஸ்ட் மாதமே மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது என்று நான் விவரத்தைக் கூறினால் அது பொய் என்கிறார்.
* இந்த அரசுக்கு, குறுவை சாகுபடி எவ்வளவு பரப்பு செய்யப்பட்டது என்று முன்கூட்டியே தெரியும்; எவ்வளவு நெல் விளைச்சல் என்பது தெரியும்; டெல்டா பகுதியில் தனியார் பெரும்பாலும் கொள்முதல் செய்வதில்லை என்பது அரசு அதிகாரிகள் அனைவருக்கும் தெரியும்.
குறுவை கொள்முதல் சமயம், அதிக ஈரப் பதம் இருக்கும் என்பதும், ஆண்டுதோறும் மத்திய அரசை வலியுறுத்தி 22 சதவீதம் வரை ஈரப் பதம் உள்ள நெல்லை தளர்வு செய்து வாங்க முன்அனுமதி பெற வேண்டும் என்பதும் இந்த அரசுக்குத் தெரியும். இப்படி ஆண்டுதோறும் அனுமதி பெற்றுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டது.
எனவே, இவற்றையெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு, நெல் கொள்முதலில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதுடன், அதிக அளவு வரும் நெல்லை சேமிக்க தற்காலிக குடோன்களை அமைத்து, விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை உடனுக்குடன்
கொள்முதல் செய்திருக்க வேண்டாமா இந்த அரசு ? விவசாயிகள் வியர்வை சிந்தி விளைவித்த நெல்லை பாதுகாக்க வேண்டியது ஒரு அரசின் கடமையல்லவா?
* விவசாயிகளிடமிருந்து நெல்லை முழுமையாகக் கொள்முதல் செய்ய முடியவில்லை என்பதைக் கூட உணரவில்லை இந்த விடியா திமுக விளம்பர மாடல் அரசு. டெல்டா மாவட்டத்தில் என்ன நடக்கிறது என்பதுகூட முதலமைச்சருக்குத் தெரியவில்லை.
* தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால், தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று கூறுவார்கள்.
முதலமைச்சரும், அமைச்சர்களும் ஒரு பொய்யான கற்பனை உலகத்தில் வாழ்கிறார்கள். இவர்கள் பொதுவான ஊடகங்களையோ, பத்திரிகைகளைப் பார்த்தோ தமிழக மக்கள் படும் துன்பங்கள், வேதனைகளை அறிவதில்லை; நேரில் சென்றும் பார்ப்பதில்லை.
* இவர்களுக்கென்று ஒரு உலகம். அதில் இவர்களுக்கு வேண்டிய அதிகாரிகள், உளவுத் துறை, ஊடகங்கள், பத்திரிகைகள்.
மக்கள் சுபிட்சமாக இருக்கிறார்கள் என்று தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொண்டு, கனவு உலகத்தில் வாழும் இவர்களை நம்பிய விவசாயிகளும், மக்களும் தான் ஏமாறுகிறார்கள்.
இனியாவது இந்த அரசு விழித்துக்கொண்டு, என்மீது பாய்வதை விட்டுவிட்டு, விவசாயிகள் கடன் வாங்கி, வியர்வை சிந்தி விளைவித்த நெல்லை உடனடியாகக் கொள்முதல் செய்வதுடன், முளைவிட்ட நெல்மணிகளை வேளாண் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளைக் கொண்டு கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறும்;
மேலும், டெல்டா மற்றும் பல மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மற்றும் அண்மையில் நடவு செய்த நெற்பயிர்கள் சமீபத்திய கனமழையால் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
இதையும் வேளாண் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் சென்று கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு விடியா திமுக விளம்பர மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந்தேதி சீமான் திருச்சியில் மாநாட்டை நடத்துகிறார்.
- இது நம் இனத்தின் திருவிழா. எல்லோரும் கூடுவோம்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு நாம் தமிழர் கட்சி தயாராகி வருகிறது.
அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வேட்பாளர்களையும் தேர்வு செய்து அறிவித்து வருகிறார்.
இந்த நிலையில் "மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு 2026" என்ற பெயரில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந்தேதி சீமான் திருச்சியில் மாநாட்டை நடத்துகிறார். இது தொடர்பாக சீமான், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
என் உயிரோடும் உறவோடும் கலந்து வாழும் அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம். மாற்றம் என்பது சொல் அல்ல, செயல். இது மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு. இது நம் இனத்தின் திருவிழா. எல்லோரும் கூடுவோம்.
தீய ஆட்சி முறை ஒழிய தூய ஆட்சி முறை மலர கேடுகெட்ட பணநாயகம் ஒழிய மாண்புமிக்க ஜனநாயகம் மலர அடிப்படை அரசியல் அமைப்பு மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி எப்போதும் வெல்லும். நமது வெற்றி அதை சொல்லும். திருச்சியில் திரள்வோம். தீந்தமிழ் இனத்தீரே.
இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.
இயற்கை வளங்களை காக்கும் வகையில் மலைகள், மரங்களின் மாநாடு உள்ளிட்டவற்றை நடத்திய சீமான் தற்போது மக்களின் மாநாட்டுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
- சாலை சரி செய்யாமல் கட்டுப்பாட்டு அறையில் என்ன செய்கிறீர்கள் துணை முதலமைச்சர் அவர்களே.
- திண்டாடும் திராவிட மாடல் அரசு. வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டிய அரசு.
சென்னை:
பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் மிதமான மழைக்கே பல தெருக்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. அசாதாரண மழை என்றால் பரவாயில்லை. சாதாரண மழைக்கு சென்னை தாங்குவதாக தெரியவில்லை. இயற்கையான மழைக்கு கூட 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை துணை முதலமைச்சர் கண்காணித்தார் என்று விளம்பர போட்டோக்கள் வருகின்றன.
சாலையை சரி செய்து விட்டு கட்டுப்பாட்டு அறையில் பார்த்தால் தான் நல்ல சாலை தெரியும். சாலை சரி செய்யாமல் கட்டுப்பாட்டு அறையில் என்ன செய்கிறீர்கள் துணை முதலமைச்சர் அவர்களே.
சென்னை மட்டுமல்ல டெல்டாவிலும் இதே கதை தான். ஒரே நாளில் 20 லட்சம் டன் நெற்பயிர்கள் வீணாகி இருக்கின்றன. எதற்கெடுத்தாலும் திராவிட மாடல் என்று சொல்லும் முதலமைச்சரே இந்தியாவிற்கே வழிகாட்டுகிறோம் என்று சொல்லிக்கொண்டு தமிழ் மக்களின் வலியைத் தான் கூட்டிக் கொண்டிருக்கிறீர்கள். திண்டாடும் திராவிட மாடல் அரசு. வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டிய அரசு.
இவ்வாறு அதில் கூறினார்.
- சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
- நேற்றைய தினம் அனைத்து தூதரக சேவை சந்திப்புகளும் (Consular Appointments) ரத்து செய்யப்பட்டது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்தது. இதனையொட்டி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் நேற்றைய தினம் திட்டமிடப்பட்ட அனைத்து தூதரக சேவை சந்திப்புகளும் (Consular Appointments) ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. நேற்று ரத்து செய்யப்பட்ட அனைத்து தூதரக சேவை சந்திப்புகளும் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூதரக சேவை சந்திப்புகள் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் விசா விண்ணப்ப மையத்தை (VAC) தொடர்பு கொள்ளவும் என்றும் support-india@usvisascheduling.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்றும் அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
- சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய அனைத்து ஏரிகளும் நிரம்பும் வகையில் மகிழ்ச்சிகரமான செய்திகள் வருகிறது.
- சென்னையில் கடந்த 5 நாட்களில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சென்னை:
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடையார் பெசன்ட் நகர் கடற்கரை முகத்துவாரத்தில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை இன்று ஆய்வு செய்தார். அவருடன் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., அசன் மவுலானா எம்.எல்.ஏ. ஆகியோர் சென்றனர்.
ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மாவட்ட அளவிலான மாநில அளவிலான அலுவலர்கள் என்று ஆயிரம் பேர் அளவிற்கு கலந்துகொண்ட ஒரு பெரிய கூட்டம் நடத்தப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விளக்கங்கள் தந்து அதற்கான குறிப்புகள் எல்லாம் அவர்கள் இடத்தில் தந்து அனுப்பப்பட்டது.
சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று கடந்த 4½ ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை மாநகரில் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்ற மழைநீர் வடிகால்வாய்கள் குறிப்பாக நீர்வள ஆதாரத்துறை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, பெருநகர சென்னை மாநகராட்சி என்று அனைத்து துறைகளின் சார்பிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
அரசு பொறுப்பேற்ற பிறகு பெரிய அளவிலான பாதிப்புகளில் இருந்து சென்னையை காப்பதற்கும் ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய அனைத்து ஏரிகளும் நிரம்பும் வகையில் மகிழ்ச்சிகரமான செய்திகள் வருகிறது.
5300 கன அடி தண்ணீர் கடலில் கலக்கிறது. அடையாறு பொருத்தவரை 25 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தால் கரையோரம் உள்ள பகுதி மக்கள் பாதிக்கப்படுவர். தற்போது 40,000 கன அடி தண்ணீர் வந்தால் கூட குடியிருப்பு பகுதிகளை பாதிக்காது.
இந்த முகத்துவாரத்தை பொறுத்தவரை 40 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் கொண்டு வர முடியும். வடகிழக்கு பருவமழை முடியும் வரை மூன்று பொக்லைன் எந்திரங்கள் இங்கு அகலப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படும்.
சென்னையில் கடந்த 5 நாட்களில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஒரு இடத்திலும் கூட மழை நீர் சூழ்ந்து மக்களை பாதிக்கவில்லை.
முகத்துவாரத்தை சீர்படுத்தும் பணி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. 4 லட்சம் கனஅடி மணல் எடுக்கப்பட்டதன் மூலம் சீனிவாசபுரம் பகுதி பாதுகாக்கப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றின் வெள்ளநீர் வெகு வேகமாக கடலில் கலப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிகபட்சமாக மேடவாக்கம் சந்திப்பில் 18.30 மி.மீ. மழை பெய்து உள்ளது.
- சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் 454 குடிநீர் வாகனங்கள் வாயிலாக சராசரியாக 3,500 நடைகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, சென்னை மாநகரில் 22 சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழைநீர் போர்க்கால அடிப்படையில் அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சீரான போக்குவரத்து பராமரிக்கப்பட்டுள்ளது.
நேற்று (22.10.2025) காலை 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை சராசரியாக 4.66 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மேடவாக்கம் சந்திப்பில் 18.30 மி.மீ. மழைப்பொழிவும் (பெருங்குடி மண்டலம்), குறைந்தபட்சமாக திருவொற்றியூரில் 0.30 மி.மீட்டர் மழையும் பெய்து உள்ளது.
தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கும் வகையில் நேற்று (22.10.2025) 68 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு, 1,48,450 பேருக்கு காலை உணவும், 76 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு 2,20,950 பேருக்கு மதிய உணவும், 15 சமையல் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு 27,000 பேருக்கு இரவு உணவும் என மொத்தம் 3,96,400 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் 454 குடிநீர் வாகனங்கள் வாயிலாக சராசரியாக 3,500 நடைகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 106 சமையல் கூடங்கள் மற்றும் 215 வெள்ள நிவாரண மையங்களுக்கு சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,436 மோட்டார் பம்புகளும், 150 எண்ணிக்கையில் 100 எச்.பி. மோட்டார் பம்புகளும், டிராக்டர் மேல் 500 மோட்டார் பம்புகளும் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இதன் மூலம் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீர் அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் பிற மாவட்டங்களில் இருந்து 299 தூர்வாரும் எந்திரங்கள், 73 கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 298 ஜெட்ராடிங் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
17.10.2025 முதல் 22.10.2025 வரை மழையின் காரணமாக விழுந்த 24 மரங்களும் உடனடியாக அகற்றப்பட்டு உள்ளன. சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களை 1913 என்ற எண்ணிற்கும், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றல் தொடர்பான புகார்களை 1916 என்ற உதவி எண்ணிற்கும் கட்டணமில்லாமல் 24 மணி நேரமும் தெரிவித்து தேவையான உதவிகளை பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வ மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 26-ந்தேதி 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 27, 28-ந்தேதிகளில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






