என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அ.தி.மு.க.வை மக்கள் ஆட்சியில் அமர வைப்பார்கள் - ஜெயக்குமார்
    X

    அ.தி.மு.க.வை மக்கள் ஆட்சியில் அமர வைப்பார்கள் - ஜெயக்குமார்

    • போலியான வாக்குறுதிகளையும் பசப்பு வார்த்தைகளையும் தமிழக மக்கள் இனியும் நம்புவதற்கு தயாராக இல்லை.
    • தமிழ்நாடே தலை குனிகின்ற செயலாக திருத்தணியில் வடமாநில வாலிபர் மதுபோதையில் தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் மக்கள் வருகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தி.மு.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவார்கள்.

    போலியான வாக்குறுதிகளையும் பசப்பு வார்த்தைகளையும் தமிழக மக்கள் இனியும் நம்புவதற்கு தயாராக இல்லை.

    கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தபோதும் கள்ளக்குறிச்சிக்கு செல்லாத முதலமைச்சர் இப்போது தேர்தலுக்காக அங்கு சென்று உள்ளார்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் என போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழகமே போர்க்களமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களின் குரலெல்லாம் தமிழக அரசுக்கு கேட்கவில்லை.

    செவிலியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து முதலமைச்சர் கவலைப்படாமலேயே இருந்து வருகிறார். ஆனால் தினந்தோறும் போட்டோ ஷூட் மட்டும் நடத்தி வருகிறார்.

    தமிழ்நாட்டை சீரழிக்கும் ஆட்சி புதிய ஆண்டில் முடிவுக்கு வரும். மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும்.

    தமிழ்நாடே தலை குனிகின்ற செயலாக திருத்தணியில் வடமாநில வாலிபர் மதுபோதையில் தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

    வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் இது போன்ற சம்பவம் நடந்திருப்பது அரசின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது.

    கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் தமிழ் நாட்டில் கஞ்சா இல்லை போதை பொருட்கள் புழக்கம் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி இருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாகும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×