என் மலர்tooltip icon

    சென்னை

    • விருப்பத்துக்கு ஏற்ப குறிப்பிட்ட கட்சிகளை மட்டுமே அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அரசு அழைக்க முடியாது.
    • மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் வருகிற 5-ந் தேதி நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் அதிமுக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர்.

    இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எந்த தேர்தலிலும் களம் கானாத பல கட்சிகளும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    விருப்பத்துக்கு ஏற்ப குறிப்பிட்ட கட்சிகளை மட்டுமே அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அரசு அழைக்க முடியாது. இதனால் இந்த கூட்டத்துக்கு தடை வதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நாளை அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினம்
    • ஏற்றத் தாழ்வை நீக்கி, சமத்துவமும், சமாதானமும் நிலவ வேண்டும்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    சமூகத்தில், ஏற்றத் தாழ்வை நீக்கி, சமத்துவமும், சமாதானமும் நிலவ வேண்டும் என்பதை போதித்த அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினம், நாளை (4-ந் தேதி) கொண்டாடப்படுகிறது.

    அய்யா வைகுண்டர் அவதார தினத்துக்காக, ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுடன், அய்யா வைகுண்டரின் பக்தர்கள் அதிகம் உள்ள தென் மாவட்டங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டத்துக்கும், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டு மென்று, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும், அன்பையும், ஆன்மீகத்தையும், வலி யுறுத்திய அய்யா வைகுண்டரின் அவதார தினத்தன்று, மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும், அய்யா வைகுண்டரின் பக்தர்கள் சார்பாக, தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஸ்டாலின் மாடல் அரசுதான் மாணவியின் மரணத்திற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்.
    • இனியாவது எந்த நீட் மரணமும் நிகழாவண்ணம் தடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக இந்துமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.

    அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நேற்று தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட தி.மு.க.வின் நீட் ரகசிய அரசியல் நாடகம் குறித்து நான் பேசிய நிலையில்,

    நாமும் மருத்துவர் ஆகிவிடலாம் என்கிற உயரிய லட்சியத்தோடு அல்லும் பகலும் படித்து வரும் மாணவர்கள் மத்தியில்,

    ஆட்சிப்பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை அவர்களுக்கு விடியா தி.மு.க. அந்த நீட் ரகசியத்தை சொல்லாமல், ரகசியம் இருப்பதாக பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை குழப்பத்திலேயே வைத்திருக்கும் இந்த ஸ்டாலின் மாடல் அரசுதான் மாணவியின் மரணத்திற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்.

    அந்த நீட் ரகசியத்தை மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உடனடியாக சொல்ல வேண்டும், அப்படி இல்லை என்றால், தி.மு.க. பொய்தான் சொன்னது என்ற உண்மையை ஒப்புகொண்டு, இனியாவது எந்த நீட் மரணமும் நிகழாவண்ணம் தடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் ஏழுகிணறு பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்.
    • ரத்த வெள்ளத்தில் தந்தை கிடந்ததை வீடியோ எடுத்து ரோகித் தனது மாமாவுக்கு அனுப்பி உள்ளார்.

    சென்னை ஏழுகிணறு பகுதியில் தந்தையை மகன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் ஏழுகிணறு பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் ஜெகதீஷை அவரது மகன் ரோகித் இரும்பு ராடால் அடித்து கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் தந்தை கிடந்ததை வீடியோ எடுத்து ரோகித் தனது மாமாவுக்கு அனுப்பி உள்ளார்.

    இதையடுத்து தந்தையை கொலை செய்த வழக்கில் ரோகித்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனது தாயை தந்தை அடித்துக் கொடுமைப்படுத்தியதால் ஆத்திரம் அடைந்த ரோகித் அவரை கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • தமிழக மக்கள் அவர்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கக்கூடிய பரிசு என்னவென்றால் தோல்வி தான்.
    • 2026-ம் ஆண்டு 200 அல்ல 200-ஐ தாண்டி தி.மு.க. தலைமையில் உள்ள மதசார்பற்ற கூட்டணி வெல்லும்.

    சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், முதல் எதிரி தி.மு.க.தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

    அப்போது அவர் கூறியதாவது:

    ஏற்கனவே ஒழிந்துகொண்டு இருக்கக்கூடிய கட்சி அந்த கட்சி. முழுமையாக அதை அவர் ஒழித்து விட்டார்.

    எதிரிகளே இல்லை நான் தான் எதிரி என்கிறார். நாங்கள் அவரை எதிரியாக பார்க்கவில்லை உதிரியாகத்தான் பார்க்கிறோம்.

    அவர் தலைமை ஏற்ற பிறகு தமிழக மக்கள் அவர்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கக்கூடிய பரிசு என்னவென்றால் தோல்வி தான்.

    எங்கள் கழகத்தலைவர் தலைவராக முன்னின்று தேர்தலை சந்தித்த பிறகு தமிழக மக்கள் அவருக்கு கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய பரிசு வெற்றி.

    ஆகவே 2026-ம் ஆண்டு 200 அல்ல 200-ஐ தாண்டி தி.மு.க. தலைமையில் உள்ள மதசார்பற்ற கூட்டணி வெல்லும். இதை நாளைய வரலாறு சொல்லும் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு சவரன் 63 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. சென்னையில் நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.7,940-க்கும், ஒரு சவரன் ரூ.63,520-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை. ஒரு சவரன் 63 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 7 ஆயிரத்து 940 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ரூ.106-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    02-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    01-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    28-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,680

    27-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,080

    26-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    02-03-2025- ஒரு கிராம் ரூ.105

    01-03-2025- ஒரு கிராம் ரூ.105

    28-02-2025- ஒரு கிராம் ரூ.105

    27-02-2025- ஒரு கிராம் ரூ.106

    26-02-2025- ஒரு கிராம் ரூ.106

    • பிளஸ்-2 தேர்வை மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதுகின்றனர்.
    • தேர்வு முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் தேர்வுப் பணியில் ஈடுபடுகின்றனர்.

    சென்னை:

    பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பள்ளி மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதுகின்றனர்.

    இன்று முதல் 25ம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன. இன்று தமிழ் மொழி பாடத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை மாணவ-மாணவிகள் எழுதுவதற்கு ஏதுவாக 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை கண்காணிக்க ஒவ்வொரு நாளும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் தேர்வுப் பணியில் ஈடுபடுகின்றனர்.

    தேர்வு நடைபெற உள்ள பள்ளிகளில் தொடர் மின்சாரம் வழங்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதுகின்றனர்.
    • அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற நெஞ்சார வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று காலை தொடங்குகிறது. இந்த தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பள்ளி மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதுகின்றனர்.

    இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இன்று முதல் பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள 12-ஆம் வகுப்பு மாணவச் செல்வங்கள் யாவருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    திடநம்பிக்கையோடும் பெருமகிழ்வோடும் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டுகிறேன்.

    விரும்பும் உயர்கல்வியைப் பெறுவதற்கேற்ப அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற நெஞ்சார வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • நாடு முழுவதும் யூனியன் பிரதேசங்கள் உள்பட 30 மாநிலங்கள் சிறப்பு விரைவு கோர்ட்டுகளை அமைத்து உள்ளன.
    • தமிழகத்தில் அமைக்கப்பட்ட 14 சிறப்பு விரைவு கோர்ட்டுகள் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரித்து வருகின்றன.

    சென்னை:

    'தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்' என்பது சட்டத்தின் கோட்பாடு ஆகும். மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜனநாயகத்தின் 3-வது தூணாக விளங்கும் நீதி தேவதையின் கதவை தட்டுகிறார்கள்.

    அந்தவகையில், பாதிக்கப்பட்டவர்கள் தொடுக்கும் வழக்குகளை விசாரித்து, நீதியை நிலைநாட்டும் மகத்தான பணியை கோர்ட்டுகள் செய்துவருகின்றன.

    இதற்கிடையே பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் 'போக்சோ' வழக்குகள், பாலியல் குற்றங்கள், நீண்டகாலமாக விசாரணை நடைபெற்று வரும் முக்கிய வழக்குகளை விரைவாக விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் 'போக்சோ' கோர்ட்டுகள் உள்பட சிறப்பு விரைவு கோர்ட்டுகள் மத்திய அரசின் நிதி உதவியுடன் மாநிலங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    நிலுவையில் உள்ள ஒவ்வொரு 65 முதல் 165 வழக்குகளுக்கும் ஒரு சிறப்பு விரைவு கோர்ட்டு அமைக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் யூனியன் பிரதேசங்கள் உள்பட 30 மாநிலங்கள் சிறப்பு விரைவு கோர்ட்டுகளை அமைத்து உள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளின் விகிதம் குறைவாக இருப்பதாக கூறி, அருணாசலபிரதேசம் இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. மேலும் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் சிறப்பு விரைவு கோர்ட்டுகள் அமைக்க இசைவு தெரிவித்திருந்தாலும், இன்னும் செயல்படுத்தவில்லை.

    கடந்த டிசம்பர் மாதம் வரையிலான நிலவரப்படி நாடு முழுவதும் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரிக்கும் கோர்ட்டுகள் உள்பட 747 சிறப்பு விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த கோர்ட்டுகளில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 633 போக்சோ வழக்குகள் உள்பட 2 லட்சத்து 99 ஆயிரத்து 624 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளன. அதிகபட்சமாக போக்சோ வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதில் 42 ஆயிரத்து 404 வழக்குகளுடன் உத்தரபிரதேசம் முதல் இடத்தில் உள்ளது.

    தமிழகத்தில் அமைக்கப்பட்ட 14 சிறப்பு விரைவு கோர்ட்டுகள் போக்சோ வழக்குகளை மட்டும் விசாரித்து வருகின்றன. இந்த கோர்ட்டுகள் மூலமாக 8 ஆயிரத்து 898 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளன. புதுச்சேரியில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் முதல் செயல்பட்டு வரும் போக்சோ கோர்ட்டில் 122 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளன.

    மத்திய அரசு 2019-20 முதல் 2024-25 நிதியாண்டு வரை (கடந்த மாதம் 3-ந்தேதி வரையிலான நிலவரப்படி) சிறப்பு விரைவு கோர்ட்டுகள் திட்டத்துக்காக மாநிலங்களுக்கு ரூ.1,008 கோடி விடுவித்து உள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு ரூ.281 கோடி, மத்தியபிரதேசத்துக்கு ரூ.105 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.84 கோடி கொடுத்துள்ளது. தமிழகத்துக்கு ரூ.25 கோடியே 46 லட்சமும், புதுச்சேரிக்கு ரூ.55 லட்சமும் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
    • 2026ல் நாங்கள் இடம்பெறும் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 5ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.

    இந்த கூட்டத்தில், பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்காது என தெரிவித்தது. இதற்கிடையே, அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

    இந்நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

    தேமுதிகவை பொறுத்தவரையில் தாய் மொழியை காத்து அதேபோல் அனைத்து மொழியையும் காக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.

    பல்வேறு வகைகளில் வருங்காலம் சிறக்கும். எனவே அவர் அவர்களுக்கு பிடித்த மொழிகளை படிப்பதில் எந்த தவறும் இல்லை.

    அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சியான எங்களுக்கும் ஒரு வார காலத்திற்கு முன்பே அழைப்பு வந்துவிட்டது. அதனால் உறுதியாக தேமுதிக அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்.

    தமிழக முழுவதும் பல்வேறு விதமான சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் இருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம் டாஸ்மாக், கள்ளச்சாராயம், போதை வஸ்துகள் அதிகரிப்பு, வேலை இல்லாத நிலைமை, பாலியல் வன்கொடுமை என எல்லா பக்கமும் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. நிச்சயம் இது தடுக்கப்பட வேண்டும். 2026ல் நாங்கள் இடம்பெறும் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மாணவ, மாணவியர்களுக்கும் எனது சிறப்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • தயவு செய்து வீட்டுச் சூழலை மன அழுத்தமில்லாமல் வைத்திருங்கள்.

    தமிழ்நாட்டின் 12-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் முறையே 03.03.2025 மற்றும் 05.03.2025 அன்றும் தொடங்க இருக்கின்றன.

    12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,21,057 மாணவ, மாணவியர்களும், 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,23,261 மாணவ, மாணவியர்களும் தேர்வெழுதவுள்ளனர்.

    இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தமிழக ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    நாளை +2 தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் எனது சிறப்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    இன்று இரவு நன்றாக உறங்குங்கள். உங்கள் தேர்வுகளை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் அணுகுங்கள்.

    முன்கூட்டியே தேர்வு மையத்தை அடையவும். ஒவ்வொரு கேள்வியையும் கவனமாகப் படித்து, உங்களுக்கு எளிதாகத் தெரிந்தவற்றுக்கு விடை எழுதத் தொடங்கவும்.

    ஒரு கேள்வி சவாலானதாக உணர்ந்தால், ஆழமாக பெரு மூச்சு விட்டு, சில நொடிகள் அமைதி காத்தால் - தெளிவாகும் நமது மனம் விடைகளை கண்டுபிடிக்கும்.

    அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் மாணவ, மாணவியர்களுக்கான உங்களுடைய உணர்வுபூர்வ ஆதரவு முக்கியமானது.

    தயவு செய்து வீட்டுச் சூழலை மன அழுத்தமில்லாமல் வைத்திருங்கள். உங்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பணிக்காலம் முழுவதும் அவர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
    • வாக்குறுதி அளித்து விட்டு, அதை செயல்படுத்தாமல் தொழிலாளர்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடலா?

    மேட்டூர் அனல் மின்நிலைய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மேட்டூர் அனல் மின்நிலையத்தின் முறையே 210*4 மெகாவாட், 600 மெகாவாட் திறன் கொண்ட மின்னுற்பத்திப் பிரிவுகளில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் 200 பெண்கள் உள்ளிட்ட 1500 ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களைப் பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று கோரி பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கி மூன்றாம் நாளாக இன்றும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சு நடத்துவதற்குக் கூட தமிழக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.

    போராடும் தொழிலாளர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. அவர்கள் அனைவரும் மேட்டூர் அனல் மின்நிலையத்தில், பல்வேறு நிறுவனங்களின் மூலமாக 10 முதல் 13 ஆண்டுகளாக ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    பணிக்காலம் முழுவதும் அவர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதைத் தவிர அவர்களின் சமூகப் பாதுகாப்புக்கான எந்த உரிமையும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

    இத்தகைய சூழலில் அவர்கள் தங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்காக பணி நிலைப்புக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பணி நிலைப்பு என்பது அவர்களின் சட்டப்பூர்வ உரிமை. அதை தமிழக அரசும், மின்வாரிய நிர்வாகமும் மறுப்பது பெரும் சமூக அநீதி ஆகும்.

    பத்தாண்டுகள் பணி செய்த ஒப்பந்தப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் பல வழக்குகளில் தீர்ப்பளித்திருக்கின்றன.

    அதுமட்டுமின்றி, ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பத்தாண்டுகளுக்கும் மேல் உழைத்த தொழிலாளர்களுக்கு பணிநிலைப்பு வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டியது அந்த நிறுவனத்தின் கடமை.

    தனியார் நிறுவனங்கள் அத்தகைய கடமையை நிறைவேற்றத் தவறினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசே, இத்தகைய உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுவது சிறிதும் நியாயமற்றது.

    2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 153-ஆம் வாக்குறுதியாக, "அறநிலையத்துறை, காகித ஆலைகள், கூட்டுறவு நூற்பாலைகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள், உள்ளாட்சித் துறையில் மேல்நிலைக் குடிநீர்த் தொட்டிகள் பராமரிப்புப் பணியாளர்கள், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அரசுத் துறை மற்றும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துவரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்வது குறித்துப் பரிசீலிக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததன் மூலம் உழைக்கும் தொழிலாளர்களுக்கு திமுக அரசு பெருந்துரோகம் செய்துவிட்டது.

    மேட்டூர் அனல்மின்நிலையத்தில் இவர்களுக்கு முன் ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றி வந்தவர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 1998-ஆம் ஆண்டில் போராட்டம் நடத்தினார்கள்.

    அவர்களுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி களமிறங்கி போராடியது. போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், பா.ம.க. மற்றும் தொழிலாளர்கள் அமைப்புடன் பேச்சு நடத்திய கலைஞர் தலைமையிலான திமுக அரசு, ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிலைப்பு செய்தது.

    அன்று தந்தை கலைஞர் காட்டிய மனிதநேயத்தையும், தொழிலாளர்கள் மீதான அக்கறையையும் இன்று தனயன் மு.க.ஸ்டாலின் காட்ட மறுப்பது ஏன்? என்பது தான் பா.ம.க. எழுப்ப விரும்பும் வினா.

    திமுக தொழிலாளர்களின் உழைப்பில் வளர்ந்த கட்சி. அப்படிப்பட்ட கட்சி தொழிலாளர்களின் நலன்களை காற்றில் பறக்கவிட்டு, அவர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்கு துணைபோவது எந்த வகையில் நியாயம்? குறைந்தது பத்தாண்டுகள் பணி செய்தால் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் உழைக்கும் தொழிலாளர்களுக்கு வாக்குறுதி அளித்து விட்டு, அதை செயல்படுத்தாமல் தொழிலாளர்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடலா?

    மேட்டூர் அனல் மின்நிலையத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் தமிழக அரசு பணி நிலைப்பு செய்ய வேண்டும்.

    இல்லாவிட்டால் கால் நூற்றாண்டுகளுக்கு முன் அவர்களுக்காக களமிறங்கி போராடி வெற்றி பெற்றதைப் போலவே இப்போதும் மேட்டூர் அனல் மின் நிலையத் தொழிலாளர்களுக்காக களமிறங்கி போராடுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தயங்காது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×