என் மலர்tooltip icon

    சென்னை

    • கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
    • ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகரில் 250 இளஞ்சிவப்பு பிங்க் ஆட்டோக்கள் இயக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல்கட்டமாக தகுதியான பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச மகளிர் தினத்தன்று இளஞ்சிவப்பு ஆட்டோக்களை மகளிருக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து பிங்க் ஆட்டோக்கள் 2-ம் கட்டமாக வழங்கப்படவுள்ளதால் தகுதியான பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் பயன் பெற அடுத்த மாதம் 6-ந் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 20 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். சென்னையில் குடியிருக்க வேண்டும்.

    எனவே, சென்னையில் உள்ள ஆட்டோ ஓட்ட விருப்பமுடைய பெண் ஓட்டுநர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (வடக்கு) அல்லது சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (தெற்கு) என்ற முகவரியிட்டு 6.4.2025-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி 114 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 14-ந்தேதி வரை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து, கடந்த 14-ந்தேதி இதுவரை இல்லாத உச்சமாக ரூ.66 ஆயிரத்து 400 என்ற நிலையை அடைந்தது. அன்றைய தினம் ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1,440 அதிகரித்திருந்தது.

    அதனைத் தொடர்ந்து விலை குறைந்து வந்த நிலையில் நேற்று மீண்டும் உயர்ந்திருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 210-க்கும், ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 680-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 290-க்கும், ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,310-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,480-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 114 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    19-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,480

    18-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,000

    17-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,680

    16-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,760

    15-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,760

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    19-03-2025- ஒரு கிராம் ரூ.113

    18-03-2025- ஒரு கிராம் ரூ.113

    17-03-2025- ஒரு கிராம் ரூ.113

    16-03-2025- ஒரு கிராம் ரூ.112

    15-03-2025- ஒரு கிராம் ரூ.112

    • 4 மணி நேரம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    சென்னை:

    பொன்னேரி - கவரைப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிற்பகல் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை 4 மணி நேரம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் பயணிகள் வசதிக்காக இன்று சென்னை சென்ட்ரல் - பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    • அன்றாட படுகொலைகளுக்குக் காரணம் தமிழ்நாட்டில் சட்ட விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதுதான்.
    • வன்முறையில் முதன்மை மாநிலம் தமிழகம் தான் என்ற பெருமையை தமிழகத்திற்கு தி.மு.க. அரசு தேடித் தரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு உட்பட எதுவுமே முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் நேற்று நண்பகல் 12 மணியளவில் ஈரோடு மாவட்டம் நசியனூர் கோவை-சேலம் நெடுஞ்சாலையில் படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த படுகொலைச் சம்பவம் தமிழ்நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது

    சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாகவும், இவர் நேற்று காலை சேலத்திலிருந்து அவரது மனைவியுடன் காரில் திருப்பூர் சென்று கொண்டிருந்ததாகவும், ஈரோடு மாவட்டம் நசியனூர் கோவை-சேலம் நெடுஞ்சாலையில் நண்பகல் 12 மணியாலில் சாமி கவுண்டம்பாளையம் பிரிவு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, அவர்களைத் தொடர்ந்து வந்த மர்மக் கும்பல் அந்தக் காரை வழிமறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் இருந்த ஜான் என்கிற ரவடியை சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரது மனைவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்தப் படுகொலை கடும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற அன்றாட படுகொலைகளுக்குக் காரணம் தமிழ்நாட்டில் சட்ட விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதுதான்.

    மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், பட்டப்பகலில் நடைபெற்ற இந்தக் கொலையையும், நாள்தோறும் பல கொலைகள் இதுபோன்று நடப்பதையும் பார்க்கும்போது வன்முறையாளர்களின் புகலிடம் தமிழ்நாடு என்ற கருத்திற்கு மாற்றுக்கருந்து இல்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. காவல் துறை என்ற ஒன்று இருக்கிறதா என்று சந்தேகப்படக்கூடிய அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுப் போய்விட்டது. இந்த நிலைமை நீடித்தால் வன்முறையில் முதன்மை மாநிலம் தமிழகம் தான் என்ற பெருமையை தமிழகத்திற்கு தி.மு.க. அரசு தேடித் தரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

    தமிழ்நாட்டை அமளிக்காடாக மாற்றியிருக்கும் தி.மு.க. அரசின் செயல்பாடுகளை கண்டிப்பதோடு, தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் வன்முறையிலிருந்து காப்பாற்றவும், தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறக்கும் சமூக விரோதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    • போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு ஏப்.21-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    தமிழ்நாட்டில் 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு நாளை முதல் ஏப்.21-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு நாளை முதல் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கண்ணிமைக்கும் நேரத்தில் மர்மகும்பல் ஜானை சரமாரியாக வெட்டினர்.
    • ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த படுகொலை.

    சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான் என்கிற சாணக்கியன். இவரது மனைவி ஆதிரா. ஜான் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சேலத்தில் இருந்து ஜான் மற்றும் அவரது மனைவி ஆதிரா திருப்பூர் செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றனர்.

    ஈரோடு மாவட்டம் நசியனூர் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாமி கவுண்டம்பாளையம் பிரிவு அருகில் இன்று மதியம் 12.15 மணிக்கு அவர்களது கார் சென்று கொண்டிருந்தது. அவர்களது காரை பின் தொடர்ந்து வந்த மர்மகும்பல் ஜான் சென்ற காரை வழிமறித்து நிறுத்தியது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் மர்மகும்பல் ஜானை சரமாரியாக வெட்டினர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனத்துடன் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியதாவது:-

    இன்று, ஈரோடு மாவட்டத்தில், பட்டப்பகலில், தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ஜான் என்பவர் அவரது மனைவி கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    நேற்று திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த படுகொலை.

    திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள், கொள்ளை, பாலியல் வன்முறைகள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை.

    சட்டத்திற்கோ, காவல்துறைக்கோ சமூக விரோதிகள் பயப்படுவதே இல்லை. காவல் நிலையங்கள் செயல்படுகின்றனவா அல்லது திமுகவினர் பூட்டு போட்டு பூட்டிவிட்டார்களா என்பதும் தெரியவில்லை.

    இது போன்ற அவல நிலையைத் தமிழகம் இதுவரை கண்டதில்லை. இந்தச் சூழ்நிலையிலும் அப்பா, தாத்தா என்று சுய விளம்பரம் செய்து கொண்டிருக்க அசிங்கமாக இல்லையா மு.க.ஸ்டாலின் அவர்களே?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் மற்றும் இரும்பு கிடைத்துள்ளது.
    • முதல்முறையாக 102 சென்டிமீட்டர் ஆழத்தில் ஈயம் கிடைத்துள்ளது.

    தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வௌியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், 87 சென்டிமீட்டர் ஆழத்தில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் மற்றும் இரும்பு கிடைத்துள்ளது.

    மேலும், முதல்முறையாக 102 சென்டிமீட்டர் ஆழத்தில் ஈயம் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    தமிழ் மக்கள் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய பதக்கங்கள் மற்றும் இதர கலைப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளதை உறுதிசெய்யும் வகையில் கிடைக்கப்பெற்றுள்ள இந்த புதிய கண்டுபிடிப்புகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர வாய்ப்பு.
    • அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில், அமலாக்கத்துறை விசாரணை நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.

    இந்நிலையில், டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன்படி, மார்ச் 6 முதல் 8ம் தேதி வரை நடந்த அமலாக்கத்துறை சோதனை சட்டவிரோதமானது என அறிவிக்க மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த மனுவில், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளையோ, ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது.

    டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அனைத்து இடங்களிலும் நம் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகம் தணிக்கும்படி தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
    • தண்ணீர் பந்தலில் தண்ணீர் உள்ளதா? என தினந்தோறும் தவறாமல் கவனித்து செயல்பட வேண்டும்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் நிர்வாகிகளுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கோடை வெயிலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தங்கள் மாவட்டங்களில் உள்ள மாநகரம், நகரம், ஒன்றியம், பேரூர் பகுதி, வார்டு மற்றும் வட்டம் என அனைத்து இடங்களிலும் நம் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகம் தணிக்கும்படி தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    முக்கியமாக நிர்வாகிகள் செய்ய வேண்டிய விஷயம் என்னவென்றால் தாங்கள் அமைத்த தண்ணீர் பந்தலில் தண்ணீர் உள்ளதா? என தினந்தோறும் தவறாமல் கவனித்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • இந்த ஆண்டு என்ஜினீயரிங் வகுப்புகள் முன்கூட்டியே தொடங்கப்பட உள்ளது.
    • இந்த கல்வி ஆண்டில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 2-வது வாரத்தில் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 430-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் இளநிலை படிப்புகளில் சுமார் 1.70 லட்சம் இடங்கள் வரை உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இணையதளம் வழியாக நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் நடத்தி வருகிறது.

    இந்த ஆண்டு மொத்தம் 1.70 லட்சம் என்ஜினீயரிங் இடங்கள் இருக்கும் நிலையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.

    இந்த ஆண்டு என்ஜினீயரிங் வகுப்புகள் முன்கூட்டியே தொடங்கப்பட உள்ளது. இதனால் என்ஜினீயரிங் கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இந்த கல்வி ஆண்டில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 2-வது வாரத்தில் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே தரவரிசை பட்டியலும் முன்னதாகவே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 22-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரை நடந்தது.

    இந்த ஆண்டு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையின் ஒவ்வொரு செயல்முறையும் ஆன்லைனில் நடைபெற இருப்பதால் நேரத்தை மிச்சப்படுத்த கலந்தாய்வு கால அளவு குறைக்கப்படலாம். இருந்தாலும் இந்த யோசனை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெறப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பால்க்கன்-9 எனும் ராக்கெட்டுடன், டிராகன் எனும் விண்கலம் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது
    • அவர் பத்திரமாக மீண்டும் பூமிக்கு வந்தடைந்த செய்தி, நம் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார். அவர் ஆற்றிய உரை வருமாறு:-

    விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ். எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 287 நாட்களாக தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பூமிக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. இவர்களது உடல்நிலை பாதிக்கப்படும் எனவும், உயிருக்கு ஆபத்து எனவும் பல தகவல்கள் வெளிவந்தன. இருந்தும், அந்த விண்வெளி மையத்தில் அவர்கள் அயராது தங்களது பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில், பால்க்கன்-9 எனும் ராக்கெட்டுடன், டிராகன் எனும் விண்கலம் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது. இதன்மூலமாக சுனிதா வில்லியம்ஸ் அவர்களும், புட்ச் அவர்களும், அங்கிருந்த மேலும் 2 வீரர்களோடு இணைந்து பயணித்து, பத்திரமாக புளோரிடா அருகே கடலில் தரையிறங்கினர்.

    அவர் பத்திரமாக மீண்டும் பூமிக்கு வந்தடைந்த செய்தி, நம் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இத்தருணத்தில் சுனிதா வில்லியம்சுக்கும், அவரை பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டவர்களுக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்களையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    • டெல்லியில் யாரையெல்லாம் சந்தித்து பேசுவார் என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை 6.50 மணிக்கு டெல்லி சென்றார். டெல்லியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இன்று டெல்லியில் தங்கி இருக்கும் அவர் மத்திய மந்திரிகளை சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 22-ந்தேதி தென்மாநில கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்த இருக்கிறார். இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவர் டெல்லியில் யாரையெல்லாம் சந்தித்து பேசுவார் என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இன்று முழுவதும் டெல்லியில் இருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி நாளை மாலை சென்னை திரும்புகிறார்.

    ×