என் மலர்tooltip icon

    சென்னை

    • தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணையில் பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு.
    • கே.சி.வீரமணி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு.

    2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

    ராமமூர்த்தி என்பவர் 2021-ம் அண்டு இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்ததுடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணையில் பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கே.சி.வீரமணி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது.

    அப்போது, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • மாணவர் கொல்லி நீட் தேர்வுக்கு முடிவு கட்ட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சத்தால் நடப்பு மார்ச் மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட இரண்டாவது மாணவி தர்ஷினி ஆவார்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீட் அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை: மாணவர் கொல்லி நீட் தேர்வுக்கு முடிவு கட்ட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்...!

    மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில் போதிய மதிப்பெண்களை எடுக்க முடியாதோ? என்ற அச்சத்தில் சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் தர்ஷினி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தர்ஷினியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தர்ஷினி ஏற்கனவே இருமுறை நீட் தேர்வு எழுதியும் போதிய மதிப்பெண்களை பெற முடியாததால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை.

    இந்த முறையாவது மருத்துவப் படிப்பில் சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் தர்ஷினி பயின்று வந்தார்.

    நீட் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், தம்மால் போதிய மதிப்பெண் பெற முடியாதோ? என்ற அச்சத்தில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சத்தால் நடப்பு மார்ச் மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட இரண்டாவது மாணவி தர்ஷினி ஆவார். இதற்கு முன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தையடுத்த தாதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இந்துமதி என்ற மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகளாகியும் தற்கொலைகள் தொடர்வது பெரும் கவலையளிக்கிறது.

    நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லாத ஒன்று. மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவோ, மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கவோ நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை என்பது கடந்த 8 ஆண்டுகால புள்ளிவிவரங்களில் இருந்து உறுதியாகிறது.

    இதை உணர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும் அதை மத்திய அரசு செவிமடுக்கவில்லை.

    தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று வரை நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. மாணவ, மாணவிகளின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

    மாணவச் செல்வங்களைக் காக்க நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட மாணவி தர்ஷினியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதிய முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும்- இ.பி.எஸ் யுகாதி வாழ்த்து.
    • தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள யுகாதி திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    'யுகாதி' என்னும் புத்தாண்டுத் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயமார்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    தெலுங்கு மற்றும் கன்னட மக்கள், தாங்கள் பேசும் மொழி வேறுபட்டிருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணர்வுடன் தமிழகத்தில் பலநூறு ஆண்டுகளாய் ஒருமித்து வாழ்ந்து வருவதும், ஒருவரோடு ஒருவர் நல்லுறவைப் பேணி, ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதுமான செயல், தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

    இவ்வண்ணம் தமிழ் மக்களோடு ஒன்றி, உறவாடி, உவகையுற வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரும் இந்தப் புத்தாண்டில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், அனைவருக்கும் எனது இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 96 காவலர் குடியிருப்புகள் மற்றும் 2 காவல் நிலையங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • வாகனங்களின் சேவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 8 கோடியே 71 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 50 காவலர் குடியிருப்புகள், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் 9 கோடியே 34 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 46 காவலர் குடியிருப்புகள், என 18 கோடியே 5 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 96 காவலர் குடியிருப்புகள்;

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் 93 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் மற்றும் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 80 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம் என 1 கோடியே 74 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 காவல் நிலையக் கட்டிடங்கள் என்று மொத்தம் 19 கோடியே 80 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 96 காவலர் குடியிருப்புகள் மற்றும் 2 காவல் நிலையங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    சென்னை துரைப்பாக்கத்தில் 1 கோடியே 20 லட்சத்து 64 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 6 குடியிருப்புகள்; மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் 1 கோடியே 10 லட்சத்து 15 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 2 குடியிருப்புகள்; ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டையில் 4 கோடியே 27 லட்சத்து 2 ஆயிரம் செலவில் கட்டப்பட்டு உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 19 குடியிருப்புகள்; திருச்சி மாவட்டம் துறையூரில் 3 கோடியே 53 லட்சத்து 44 ஆயிரம் செலவில் கட்டப்பட்டு உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 18 குடியிருப்புகள்;

    சென்னை மாவட்டம் அம்பத்தூரில் 6 கோடியே 23 லட்சத்து 88 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட அலுவலகம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம்; மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் 1 கோடியே 65 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம்;

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டில் 2 கோடியே 32 லட்சத்து 35 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் 1 கோடியே 19 லட்சத்து 30 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம் என மொத்தம் 21 கோடியே 51 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைத்தல், காவல்துறையின் பயன்பாட்டிற்காக 5 கோடி ரூபாய் செலவிலான 500 இருசக்கர வாகனங்கள் மற்றும் 27 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவிலான 300 நான்கு சக்கர வாகனங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் பயன்பாட்டிற்காக 28 கோடியே 45 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவிலான 50 நீர்தாங்கி வண்டிகள், 10 ஜீப்புகள் மற்றும் 50 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 60 கோடியே 54 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவிலான வாகனங்களின் சேவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    • கிராமசபைக் கூட்டம் என்று கூறி பொதுமக்களை வரச் சொல்லி, திமுக நடத்தும் போராட்ட நாடகத்தில் பங்கேற்க வைக்க முயற்சித்திருக்கிறார் திமுக அமைச்சர்.
    • நிதி என்ன ஆனது என்பதைக் கூறாமல் மோசடி நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இன்றைய தினம், விருதுநகர் மாவட்டத்தில், கிராமசபைக் கூட்டம் என்று கூறி பொதுமக்களை வரச் சொல்லி, திமுக நடத்தும் போராட்ட நாடகத்தில் பங்கேற்க வைக்க முயற்சித்திருக்கிறார் திமுக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன். அங்கிருந்த தமிழக பா.ஜ.க. அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் சகோதரி மீனா அவர்கள் இது குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதும், உடனடியாக அங்கிருந்து சென்றிருக்கிறார் அமைச்சர்.

    கடந்த நான்கு ஆண்டுகளில், நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு நாட்டில் அதிகபட்சமாக தமிழகத்திற்கு, 39,339 கோடி ரூபாய் வழங்கியுள்ளதை தமிழக மக்கள் அறிவார்கள். தமிழகத்துக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ள விவரங்களை, திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களிடம், மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் தெளிவாகக் கூறியிருக்கிறார். ஆனால், அந்த நிதி என்ன ஆனது என்பதைக் கூறாமல் மோசடி நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக.

    தமிழகத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் திமுக ஆதரவோடு நடக்கும் மோசடிகள் குறித்துப் பலமுறை புகார் அளித்தும், தொடர்ந்து மோசடியில் ஈடுபடும் திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என்று கூறியுள்ளார். 



    • த.வெ.க கூட்டணி செய்திகள் வெளியான நேரத்தில் தான் செங்கோட்டையன், இ.பி.எஸ். மோதல் உண்டானது.
    • கூட்டணிக்காக செங்கோட்டையனுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறதா பா.ஜ.க.?

    டெல்லி:

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை கடந்த வாரம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சந்திப்பிற்கு பின்னர் சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து மனு அளித்ததாகவும், கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றும் கூறினார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று மதியம் டெல்லி சென்றதாக தகவல் வெளியானது.

    டெல்லி சென்ற செங்கோட்டையன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பதற்கு முன்னதாகவே சந்தித்து பேச செங்கோட்டையன் நேரம் கேட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த சந்திப்பு இந்தியன் வங்கி கெஸ்ட் ஹவுசில் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு செங்கோட்டையன் குறி வைக்கிறாரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

    செங்கோட்டையன் ஆதரவாளர்களுக்கு இ.பி.எஸ். பதவி வழங்கவில்லை என புகார் எழுந்தது. இ.பி.எஸ். புறக்கணிப்பதால் பா.ஜ.க. உதவியுடன் தனது இருப்பை தக்க வைக்க செங்கோட்டையன் முயல்கிறாரா?

    த.வெ.க கூட்டணி செய்திகள் வெளியான நேரத்தில் தான் செங்கோட்டையன், இ.பி.எஸ். மோதல் உண்டானது. செங்கோட்டையனுடனான மோதலுக்கு பின்னரே உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இ.பி.எஸ். சந்தித்து பேசினார்.

    இபிஎஸ்-ஐ காலி செய்துவிட்டு அந்த இடத்திற்கு முயற்சிக்கிறாரா செங்கோட்டையன்? தர்மயுத்தம் நடத்தினால் ஆதரவு கிடைக்காது என்பதால் பா.ஜ.க. உதவியை நாடி உள்ளாரா?

    கூட்டணிக்காக செங்கோட்டையனுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கிறதா பா.ஜ.க.? அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உருவாகாவிட்டால் ஷிண்டேவாக மாறுகிறாரா செங்கோட்டையன் போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

    எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு இணங்காவிட்டால், செங்கோட்டையனை முன்னிறுத்தி கூட்டணி அமைத்து 2026-ம் ஆண்டு தேர்தலில் களம் காண பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

    • தாய்மொழியின் அருமையை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் உணர்த்த வேண்டும்.
    • தெற்கின் மேல் தொடுக்கப்படும் சமூக, அரசியல், பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த அடுத்த தலைமுறையையும் நாம் ஆயத்தப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள யுகாதி திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழின் உடன்பிறப்பு மொழிகளான தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் புத்தாண்டாகக் கொண்டாடும் யுகாதி திருநாள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள மொழிச்சிறுபான்மையினரை என்றும் மதித்துப் போற்றி அவர்களின் உற்ற தோழனாய் விளங்குவது கழக அரசு. யுகாதி திருநாளுக்கு அறிவிக்கப்பட்ட அரசு விடுமுறை அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ரத்து செய்யப்பட்டாலும் 2006-ம் ஆண்டு அதனை மீண்டும் நடைமுறைப்படுத்தியவர் அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் ஆவார்.

    தமிழ் முதலிய திராவிட மொழிகள் பேசும் தென் மாநிலங்கள் அனைத்தும் தொகுதி மறுசீரமைப்பில் தங்கள் குரல் நெரிக்கப்படும், பாராளுமன்றத்தில் வலிமை குறைக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் நமது ஒற்றுமையை மார்ச் 22 அன்று சென்னையில் வெளிப்படுத்தி இருந்தோம். மேலும், அடுத்தடுத்த கூட்டங்கள் நடைபெறவுள்ளன. நாடு முழுவதும் நமது முன்னெடுப்புக்குக் கவனமும் ஆதரவும் பெருகி வருகிறது.

    இன்று தென்மாநிலங்கள் பொருளாதாரரீதியாக அடைந்துள்ள வளர்ச்சிக்கு முதன்மையான காரணங்களில் ஒன்று அரை நூற்றாண்டுக்கு முன்னரே இந்தித் திணிப்பை எதிர்த்து நாம் நடத்திய மொழிப்போர்தான். இப்போது மீண்டும் இந்தித் திணிப்பு மூலம் அந்த வளர்ச்சியையும் நமது மொழி அடையாளத்தையும் அழிக்கத் திட்டமிட்ட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வேளையில், தாய்மொழியின் அருமையை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் உணர்த்த வேண்டும். மொழி இருந்தால்தான் இனம் இருக்கும். தெற்கின் மேல் தொடுக்கப்படும் சமூக, அரசியல், பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த அடுத்த தலைமுறையையும் நாம் ஆயத்தப்படுத்த வேண்டும். இதையே எனது யுகாதி புத்தாண்டுச் செய்தியாக, கோரிக்கையாக உங்கள் முன்வைக்கிறேன்.

    அறுசுவைப் பச்சடி, மாவிலைத் தோரணம், வண்ணக்கோலம் என எழுச்சியோடு புத்தாண்டை வரவேற்கும் தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது யுகாதி திருநாள் நல்வாழ்த்துகள். நமது மொழி, அரசியல் உரிமைகளைக் காப்பதற்கான ஊக்கத்தை வழங்குவதாக இந்த உகாதி திருநாள் அமையட்டும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சக்தி மயமான இந்த ஆட்சியை எந்த சக்தியாலும் அகற்ற முடியாது.
    • விஜய் தவழ்கின்ற குழந்தை. நாங்கள் பி.டி.உஷா போன்று பல்வேறு ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று வெற்றி கண்டவர்கள்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.

    கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், மன்னராட்சி முதல்வரே, உங்கள் ஆட்சியை பற்றி கேட்டால், உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது. நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தி இருந்தால் பெண்கள் பாதுகாப்பு ஒழுங்காக இருந்திருக்கும். 2026-ம் ஆண்டு தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டே இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே. ஒன்று த.வெ.க. இன்னொன்று தி.மு.க. என்று கூறினார்.

    இந்நிலையில் இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:

    ஒரு சினிமா பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

    "மன்னராட்சி காத்து நின்ற தெங்கள் கைகளே

    மக்களாட்சி காணச்செய்த தெங்கள் நெஞ்சமே

    எங்களாட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே

    கல்லில் வீடுகட்டித் தந்த தெங்கள் கைகளே

    கருணைத் தீபம் ஏற்றிவைத்த தெங்கள் நெஞ்சமே"

    இதுதான் அவருக்கு பதிலாக சொல்லிக்கொள்கிறேன்.

    * பெண்கள் தான் இந்த ஆட்சியை மீண்டும் 2026-ம் ஆண்டு தூக்கி பிடிப்பார்கள்.

    * முதலமைச்சர் எங்கு போனாலும் வரவேற்கிற கூட்டத்தில் 80 சதவீத கூட்டம் பெண்கள் கூட்டம்தான்.

    * சக்தி மயமான இந்த ஆட்சியை எந்த சக்தியாலும் அகற்ற முடியாது.

    * விஜய் தவழ்கின்ற குழந்தை. நாங்கள் பி.டி.உஷா போன்று பல்வேறு ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று வெற்றி கண்டவர்கள்.

    * பல கரடு முரடான பாதைகளை கடந்து வந்தவர்கள்.

    * சிறை என்றால் என்னவென்று தெரியாதவர்கள், போராட்ட களம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், ஆர்ப்பாட்ட களம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், பொதுக்கூட்டம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், மக்கள் பணி என்றால் என்னவென்று தெரியாதவர்கள், புயல், மழை, வெள்ளம் போன்றவற்றை கூட தன்னுடைய இருப்பிடத்திற்கு அழைத்து வந்து 10 பேருக்கு நலத்திட்ட உதவிகளை செய்து அதை போட்டோ போட்டுக்கொண்டு, அதையும் பிரசுரிப்பதற்கு ஊடகங்கள் தயாராக இருந்தால் தமிழகத்தின் நிலை இப்படி தான் இருக்கும். இப்படி தான் பேசிக்கொண்டு இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாம் சுயமரியாதையுடன் இருப்பதற்கு பெரியாரும், அம்பேத்கருமே காரணம்.
    • கடந்த ஆண்டு மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எஸ்.சி., எஸ்.டி. நலத்துறை மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் பங்கேற்றனர்.

    எஸ்.சி., எஸ்.டி. மக்களின் வளர்ச்சிக்காக தீட்டப்பட்டுள்ள திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * சமூக நீதி அடிப்படையில் கல்வி, திறன்மேம்பாடு, வீட்டு வசதி, உள்கட்டமைப்பு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    * ஆதி திராவிட பழங்குடியின வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் தமிழக அரசு செயல்படுகிறது.

    * ஆதி திராவிட மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    * நாம் சுயமரியாதையுடன் இருப்பதற்கு பெரியாரும், அம்பேத்கருமே காரணம்.

    * தி.மு.க. அரசு சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக செயல்படுகிறது.

    * சமூக நீதி அடிப்படையில் கல்வி, திறன்மேம்பாடு, வீட்டுவசதி, உள்கட்டமைப்பு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    * வன்கொடுமை அடிப்படையில் பதியப்படும் வழங்குகள் எண்ணிக்கை கடந்தாண்டை விட 6 சதவீதம் குறைந்துள்ளது.

    * வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17,098 நபர்களுக்கு தீர்வு உதவித்தொகையாக ரூ.207 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    * வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 421 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    * பழங்குடியின மக்கள் எளிதாக கல்வி பெற அப்பகுதியிலேயே 328 உண்டு உறைவிடப்பள்ளிகள் நடத்தப்படுகிறது.

    * கடந்த ஆண்டு மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.

    * பழங்குடியினர் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் ஆதாயத்திற்காக சொன்ன பெரும் பொய்யால் உங்கள் கைகளில் சேர்ந்துகொண்டே இருக்கும் இரத்தக் கறைகளை எப்படி துடைக்கப் போகிறீர்கள்?
    • மாணவச் செல்வங்களே- எதற்காகவும் உங்கள் இன்னுயிரை இழக்கத் துணியாதீர்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நீட் தேர்வு அச்சத்தால் சென்னையில் தர்ஷினி என்ற மாணவி தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    நீட் என்ற தேர்வை நாட்டிற்கே அறிமுகப்படுத்தி, கூட்டணி கட்சியுடன் சேர்ந்து அதனை உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடி, தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்திட அடித்தளம் இட்டதோடு அல்லாமல், "ஆட்சிக்கு வந்தால் நீட் என்ற தேர்வே தமிழ்நாட்டில் இருக்காது" என்று பச்சைப் பொய் சொல்லி ஏமாற்றிய திமுக-விற்கு தொடரும் நீட் மரணங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா?

    செப் 2021- தனுஷ், சௌந்தர்யா, கனிமொழி

    அக் 2021- அனு, கீர்த்திவாசன்

    நவ 2021- சுபாஷ் சந்திரபோஸ்

    ஜூன் 2022- தனுஷ்

    ஜூலை 2022- முரளி கிருஷ்ணா, நிஷாந்தி

    ஆகஸ்ட் 2022- ப்ரீத்தி ஸ்ரீ

    செப் 2022- லஷ்மண ஸ்வேதா, ராஜலட்சுமி

    மார்ச் 2023- சந்துரு

    ஏப்ரல் 2023- நிஷா

    ஆகஸ்ட் 2023- ஜெகதீசன்

    டிசம்பர் 2023- ஆகாஷ்

    அக்டோபர் 2024- புனிதா

    மார்ச் 2025-இந்து, தர்ஷினி

    இந்த 19 மாணவச் செல்வங்களின் உயிர்களுக்கும் மு.க.ஸ்டாலின் சொல்லப்போகும் பதில் என்ன?

    உதயநிதி ஸ்டாலினின் நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்?

    தேர்தல் ஆதாயத்திற்காக சொன்ன பெரும் பொய்யால் உங்கள் கைகளில் சேர்ந்துகொண்டே இருக்கும் இரத்தக் கறைகளை எப்படி துடைக்கப் போகிறீர்கள்?

    மாணவி தர்ஷினி மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு! எனவே, நீட் தேர்வு நாடகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்! மாணவர்களை ஏமாற்றாதீர்கள் மு.க.ஸ்டாலின்!

    மாணவச் செல்வங்களே- எதற்காகவும் உங்கள் இன்னுயிரை இழக்கத் துணியாதீர்கள். வாழ்க்கை பெரிது; உலகம் பெரிது! வாழ்ந்து சாதிக்க வேண்டுமே தவிர, செத்து வீழக் கூடாது. "நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என்ற நம்பிக்கையோடு எப்போதும் முன் செல்லுங்கள். வெற்றி நிச்சயம் உங்களை வந்து கெஞ்சும்!

    #நீட்ரகசியம்_திமுக_சதுரங்கவேட்டை என கூறியுள்ளார். 



    • நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.105-ம், சவரனுக்கு ரூ.840-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 340-க்கும், ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 20-ந் தேதி ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 310-க்கும், ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்து 480-க்கும் விற்பனை ஆனது. இது அப்போதைய உச்சபட்சமாக பார்க்கப்பட்டது. அதற்கு மறுநாளே விலை குறையத் தொடங்கியது.

    தொடர்ந்து 25-ந்தேதி வரை விலை குறைந்து வந்த நிலையில், கடந்த 26-ந் தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை உயர்ந்து காணப்பட்டது.அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 235-க்கும், ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 880-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.105-ம், சவரனுக்கு ரூ.840-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 340-க்கும், ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,360-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,880-க்கும் விற்பனையானது.

    வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 113 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    28-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,720

    27-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,880

    26-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,560

    25-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,480

    24-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,720

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    28-03-2025- ஒரு கிராம் ரூ.114

    27-03-2025- ஒரு கிராம் ரூ.111

    26-03-2025- ஒரு கிராம் ரூ.111

    25-03-2025- ஒரு கிராம் ரூ.110

    24-03-2025- ஒரு கிராம் ரூ.110

    • சிறு வயதில் இருந்து இடுப்பு திசுக்கள் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த சிங்கம் கடந்த ஒரு மாதமாக எழுந்து நடக்க முடியாமல் அவதிப்பட்டு இருந்தது.
    • டாக்டர்கள் மற்றும் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர்கள் தீவிரமாக அந்த சிங்கத்துக்கு சிகிச்சைகளை மேற்கொண்டனர்.

    வண்டலூர்:

    சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்படுகிறது. வண்டலூர் பூங்காவில் ராகவா என்ற ஆண் சிங்கம் மற்றும் கவிதா என்ற பெண் சிங்கத்துக்கு கடந்த 2011 -ம் ஆண்டு ஜூன் மாதம் வீரா என்ற ஆண் சிங்கம் பிறந்தது.

    சிறு வயதில் இருந்து இடுப்பு திசுக்கள் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த சிங்கம் கடந்த ஒரு மாதமாக எழுந்து நடக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து பூங்கா டாக்டர்கள் மற்றும் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர்கள் தீவிரமாக அந்த சிங்கத்துக்கு சிகிச்சைகளை மேற்கொண்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த சிங்கம் நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.

    இந்த தகவலை பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×