என் மலர்tooltip icon

    சென்னை

    • நீட் தேர்வின் காரணமாக பல மாணவர்களின் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம்.
    • மும்மொழி கொள்கை மூலம் தமிழக மாணவர்களிடம் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சி செய்கிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * தேசியக் கல்வி கொள்கையை ஏற்காததால் ரூ.2,500 கோடியை மத்திய அரசு கொடுக்கவில்லை.

    * கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டியது இன்றியமையாதது.

    * மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு மருத்துவ கல்வி கொள்கையை நீர்த்துப் போக செய்துவிட்டது.

    * நீட் தேர்வின் காரணமாக பல மாணவர்களின் மருத்துவக்கனவு சிதைந்துள்ளது.

    * நீட் தேர்வின் காரணமாக பல மாணவர்களின் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம்.

    * இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் போது தமிழக அரசுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.

    * மாநில அரசுகளின் தீவிர மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு மத்திய அரசு தண்டனை வழங்கியுள்ளது.

    * மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியை திணிக்க முயற்சி நடைபெறுகிறது.

    * கல்விக் கொள்கையில் தமிழக மாணவர்களின் நலனை மட்டுமே முதன்மையாக கொள்கிறது திராவிட மாடல் அரசு

    * நாம் இயற்றிய சட்டமுன்வடிவுகள் மீது கவர்னர் காலம் தாழ்த்திய விவகாரத்தில் வரலாற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    * மாநிலங்களின் நியாமான உரிமைகளை பாதுகாக்க குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும்.

    * மாநில உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசு உடனான உறவுகளை மேம்படுத்திட ஆய்வு செய்து உயர்மட்டக்குழு அறிக்கை அளிக்கும்.

    * உயர்நிலைக்குழு ஜனவரியில் இடைக்கால அறிக்கையும், 2 ஆண்டுகளில் இறுதி அறிக்கையும் வழங்கும் என்றார்.

    • மாநில அரசின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது. இதனால் மாநிலங்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
    • மும்மொழி கொள்கை மூலம் தமிழக மாணவர்களிடம் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சி செய்கிறது.

    சென்னை:

    சட்டசபையில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முன்மொழிந்தார்.

    தி.மு.க.வின் ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்று மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி. முதலமைச்சர்கள் கொடியேற்றுவது தொடங்கி மாநில உரிமைகளை தி.மு.க. பல சமயங்களில் நிலைநாட்டியதோடு தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதே சமயம் மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு மாநில உரிமைகள் பறிக்கப்படுவதாக தொடர்ச்சியாக தி.மு.க. குற்றம்சாட்டி வருகிறது.

    நீட் விவகாரம், மும்மொழிக்கொள்கை, நிதி பகிர்ந்தளிப்பு, பேரிடர் நிவாரணம், திட்டங்கள் என பல வகைகளில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்தும் விமர்சனங்கள் வைத்துள்ளார். மாநிலப் பட்டியலில் உள்ள விவகாரங்களிலும் மத்திய அரசு கைவைப்பதாக விமர்சனம் செய்து வருகிறார்.

    குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை செயல்படவிடாமல் கவர்னர்கள் மூலம் மத்திய அரசு போட்டி அரசு நடத்துவதாக குற்றம்சாட்டினார்.

    சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு கவர்னர் அனுமதி வழங்காத நிலையில், அதற்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் கவர்னரின் செயல் சட்ட விரோதம் என அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர், கவர்னர்களுக்கு காலக்கெடுவும் விதித்தது.

    இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரிமைகளை நிலைநாட்டினால் தான் தமிழ் மொழியை காக்க முடியும். தமிழ் இனத்தையும் உயர்த்த முடியும். இதனை உறுதி செய்திடும் வகையில் இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்" என்று தகவல் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டசபை இன்று கூடியது. அப்போது மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்க வலியுறுத்தும் வகையில், மாநில சுயாட்சி தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    மாநில அரசின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகிறது. இதனால் மாநிலங்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதுவரை மத்திய அரசு அதை ஏற்கவில்லை. நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

    நீர் தேர்வை அமல்படுத்துவதன் மூலம் கல்வி கொள்கை முழுவதையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறது. கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும்.

    மும்மொழி கொள்கை மூலம் தமிழக மாணவர்களிடம் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சி செய்கிறது. மும்மொழி கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.2 ஆயிரம் கோடி நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டுக்கு பொதுவாகவே நிதி குறைவாகவே பகிரப்படுகிறது. மாநில அரசுக்கு இத்தகைய காரணங்களால் கடும் பாதிப்புகள் ஏற்படுகிறது.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார்.

    அதன்பிறகு ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் இதன் மீது பேசினார்கள். இறுதியாக உறுப்பினர்களின் வாக்கெ டுப்புக்குப் பிறகு அது நிறைவேறியது.

    மாநில உரிமைகள் தொடர்பான விவாதங்கள் இந்திய அளவில் எழுந்துள்ள நிலையில் முதல்-அமைச்ச ரின் இந்த கோரிக்கை முக்கி யத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    • அதிரடி மாற்றங்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
    • கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வுக்கு மீண்டும் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

    குறிப்பாக 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை இலக்காக கொண்டு அ.தி.மு.க. நிர்வாக அமைப்புகளில் அதிரடி மாற்றங்களுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து எதிர்கொள்ள அ.தி.மு.க. உடன்பாடு செய்துள்ளது. இதன் காரணமாக அ.தி.மு.க.வில் உள்ள சிறுபான்மையின நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சற்று அதிருப்தி அடைந்து உள்ளனர்.

    அவர்களை சமரசம் செய்யும் நடவடிக்கைகளை அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் செய்து வருகிறார்கள். சிறுபான்மையின மக்களுக்கு எதிராக அ.தி.மு.க. ஒருபோதும் நடந்து கொள்ளாது என்று உறுதி அளிக்கப்பட்டு வருகிறது.

    பா.ஜ.க.வுடன் குறைந்தபட்ச பொது செயல் திட்டம் உருவாக்கப்படும் போது சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அ.தி.மு.க. செயல்படும்என்றும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

    இது தவிர தேர்தலுக்கு ஆயத்தமாகும் பணிகளையும் இப்போதே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுபற்றி எல்லாம் ஆலோசனை நடத்த எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

    அதன்படி அடுத்த மாதம் (மே) 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அ.தி.மு.க. செயற்குழுவை கூட்ட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 2.5.2025 (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் கழக அவைத் தலைவர் டாக்டர் அ.தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.

    கழக செயற்குழு உறுப்பினர்களான, தலைமைக் கழக செயலாளர்க்ள, மாவட்டக் கழக செயலாளர்கள், பிற மாநிலக் கழக செயலாளர்கள், கழக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.

    உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிததோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • தமிழ்நாடு மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில் தொண்டர்கள், பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும் என கட்சி தலைமை தெரிவித்துள்ளது.

    தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டு வந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதையடுத்து தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியை நியமித்து அக்கட்சியின் மாநில தலைவரான ஆனந்தன் உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்த பொற்கொடி மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் இனி கட்சி பதவிகளில் ஈடுபட மாட்டார் என்றும் தனது குழந்தையையும் குடும்பத்தையும் மட்டுமே இனி கவனித்துக் கொள்வார் என்றும் கட்சி தலைமை அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு மாநில தலைவர் ஆனந்தன் தலைமையில் தொண்டர்கள், பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டும் என கட்சி தலைமை தெரிவித்துள்ளது.

    • நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.15-ம், சவரனுக்கு ரூ.120-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 755-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளி விலை உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 9-ந் தேதியில் இருந்து கிடுகிடுவென உயர்ந்து வந்தது. ரூ.68 ஆயிரம், ரூ.69 ஆயிரம், ரூ.70 ஆயிரம் என புதிய உச்சங்களை கடந்து இதுவரை இல்லாத வரலாறு காணாத உயரத்தையும் எட்டியது. தொடர்ந்து 5 நாட்களாக விலை அதிகரித்து வந்த நிலையில், நேற்று சற்று குறைந்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 770-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.15-ம், சவரனுக்கு ரூ.120-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 755-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,720-க்கும் சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.69,760-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    14-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    13-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,160

    12-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,160

    11-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,960

    10-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,480

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    14-04-2025- ஒரு கிராம் ரூ.108

    13-04-2025- ஒரு கிராம் ரூ.110

    12-04-2025- ஒரு கிராம் ரூ.110

    11-04-2025- ஒரு கிராம் ரூ.108

    10-04-2025- ஒரு கிராம் ரூ.107

    • இனிப்பும் உப்பும் எப்படி ஒரே சுவை தர முடியும்?
    • உங்களின் 'டபுள் ரோல்' நடிப்பு தமிழ்நாட்டில் எடுபடாது.

    சென்னை:

    உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களை எல்லாம் பல மாதங்களாகக் கிடப்பில் போட்ட ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்தியா முழுவதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க குடியரசுத் தலைவருக்கும் 3 மாதம் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.

    இந்த வடுக்களையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாமல், வழக்குப் போட்டு வென்ற தமிழ்நாடு அரசுக்கு எதிராக வழக்கம் போல ஒலமிட்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள். புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் பேசிய ஆளுநர் ரவி, அபத்தமான கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.

    "சமூகநீதிக் குறித்துப் பேசும் இந்த மாநிலத்தில் செருப்பு போட்டுச் செல்வதற்காகவும், இரு சக்கர வாகனத்திற்காகவும் தலித்துகள் தாக்கப்படுகின்றனர்" எனப் பச்சை பொய்யைச் சொல்லியிருக்கிறார் ஆளுநர். 'பட்டியல் சாதியினருக்கு எதிரான குற்றங்களில் பீகார் இரண்டாவது இடத்தில் இருக்கிறது' எனத் தேசியப் பட்டியல் சாதியினருக்கான ஆணையத்தின் (NCSC) தலைவர் விஜய் சாம்ப்லா 2023-இல் சொன்னார்.

    ஆளுநர் அவர்களே. உங்கள் சொந்த மாநிலத்தில் இப்படி அநீதி நடந்து கொண்டிருக்கும் போது தமிழ்நாட்டைப் பற்றிப் பேச உங்களுக்குத் தகுதி இருக்கிறதா? பீகாரில் பா.ஜ.க. தயவில்தான் ஆட்சி நடக்கிறது. அதைக் கண்டித்துப் பேச முடியுமா உங்களால்?

    அம்பேத்கரைப் பற்றியெல்லாம் உருகிப் பேசியிருக்கிறீர்கள். "அனைவரும் ஒன்று. அனைவரும் சமம் என்பதைத்தான் சனாதன தர்மம் கூறுகிறது" எனச் சனாதனத்திற்குப் பிராண்ட் அம்பாசிடராகப் பேசிக் கொண்டிருக்கும் நீங்கள், சனாதனத்தை எதிர்த்தப் புரட்சியாளர் அம்பேத்கரைப் புகழ்வது பொருத்தமாகவா இருக்கிறது?

    சனாதனம் போதித்த சாதியால் ஏற்பட்ட இழிவுகளை அகற்றத்தானே அம்பேத்கர் போராடினார். இனிப்பும் உப்பும் எப்படி ஒரே சுவை தர முடியும்?

    சனாதனத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டே பட்டியலின மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களே! உங்களின் 'டபுள் ரோல்' நடிப்பு தமிழ்நாட்டில் எடுபடாது.

    நாடு முழுவதும் பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர் மீதான வன்கொடுமைகளில் 97.7 விழுக்காடு வழக்குகள் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 13 மாநிலங்களில்தான் பதிவாகியிருக்கின்றன என ஒன்றிய அரசின் அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 2024-ஆம் ஆண்டில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகள் குறித்த ஒன்றிய அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, நாடு முழுவதும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் குறித்து 51,656 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 12,287 வழக்குகள் உத்தரப் பிரதேசத்தில் பதிவாகியிருக்கிறது. இது, மொத்தம் பதிவானவற்றில் 23.78 விழுக்காடாகும்.

    உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்த இடத்தில் ராஜஸ்தானில் 8,651 வழக்குகளும் - மத்தியப் பிரதேசத்தில் 7,732 வழக்குகளும் பீகாரில் 1,799 வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் ஒடிசாவில் 5.93 விழுக்காடும் மகாராஷ்டிராவில் 5.24 விழுக்காடும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த 6 மாநிலங்களில் மட்டும் 81 விழுக்காடு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த ஆறு மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. தமிழ்நாட்டில் 3 விழுக்காடு வழக்குகளே பதிவானது.

    நாட்டிலேயே பட்டியலின மக்களுக்கு எதிராக அதிகளவில் வன்முறைகளும் கொடுமைகளும் நடைபெறுவது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில்தான் என்பதை ஒன்றிய அரசின் தரவுகளே சொல்கின்றன. சாதிக் கொடுமைகளுக்கு அடிப்படையான மனுநீதியை உயர்த்திப் பிடிக்கும் சனாதனி ஆளுநர் ஆர்.என்.ரவி, சாதிக்கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் சமூகநீதி மாநிலத்தில் நீலிக்கண்ணீர் சிந்துகிறார்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனநாயக முறையில் செயலாற்றி வரும் மாநில அரசுக்குக் குடைச்சலைக் கொடுக்கிறார். உச்சநீதிமன்றம் ஓங்கிக் குட்டிய பிறகும் அந்த அவமானத்தைத் துடைக்க அவதூறுகளை அள்ளி வீசுகிறார். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவதைப் போல் பட்டியலின மக்கள் மீது கரிசனத்தைக் கொட்டுகிறார்.

    உங்களை ஆளுநராக நியமித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் அம்பேத்கரைப் பற்றிச் சொன்னது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா ஆளுநரே! "இந்தக் காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்குப் பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்" என அமித்ஷா நாடாளுமன்றத்தில் சொன்னபோது நாடு முழுவதும் கொந்தளிப்பு எழுந்தது.

    அம்பேத்கர் தலித் தலைவர் அல்ல; அவர் பாரதத் தாயின் மகன்" என இன்றைக்குச் சொல்லும் ஆளுநர் அவர்களே.. அமித்ஷா சொன்ன போது ராஜ்பவனின் தர்பார் மண்டபத்தில் ஒரு கண்டனக் கூட்டத்தை ஏன் நடத்தவில்லை? அமித்ஷா சொல்வது போல உங்களுக்கும் அம்பேத்கர் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டதா?

    ஆரியம் பேசும் நீங்கள் அம்பேத்கரைப் போற்றி பாடுகிறீர்கள். புரட்சியாளர் அம்பேத்கரைப் பற்றிப் பேசவோ திராவிடத்தைத் தூற்றவோ உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்கவும் மிகச்சரியான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
    • மாநில சுயாட்சி குறித்த அறிவிப்பை, இன்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி, இருமொழி கொள்கை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவின் கூட்டாட்சி தன்மையை காக்கவும், மாநிலங்களின் சுயாட்சியை வென்றெடுக்கவும் மிகச்சரியான முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மாநில சுயாட்சியை உறுதி செய்து, மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ் மொழியையும் காக்க முடியும், தமிழினத்தையும் உயர்த்த முடியும் என்பதை உறுதிபடத் தெரிவித்து, அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிலையில், மாநில சுயாட்சி குறித்த அறிவிப்பை, இன்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • பழங்குடியின மாணவர்களை ஏந்திக்கொள்ளும் பெருந்தலைவர் எம்.சி.ராஜா பெயரிலான சீரமைக்கப்பட்ட விடுதிக் கட்டடத்தைத் திறந்து வைத்தேன்.
    • பழங்குடியினருக்கான 1000 குடியிருப்புகளைத் திறந்து வைத்து, 49,542 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினேன்.

    சமத்துவ நாள் விழாவில் பழங்குடியினருக்கான 1000 குடியிருப்புகளை திறந்து வைத்தேன். மதெவறியை மாய்த்து மனிதநேயம் காப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கல்வி எனும் பேராயுதத்தைத் துணைக்கொள்ளச் சென்னை நோக்கி வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களை ஏந்திக்கொள்ளும் பெருந்தலைவர் எம்.சி.ராஜா பெயரிலான சீரமைக்கப்பட்ட விடுதிக் கட்டடத்தைத் திறந்து வைத்தேன்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களையும் நிதிகளையும் வழங்கி, தொழில் முனைவோர்களை உருவாக்கி, மாணவர்களை உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி, வன்கொடுமைகளைக் குறைத்து, சமத்துவத்தை நிலைநாட்டும் பொற்கால ஆட்சியாக இருக்கும் நமது திராவிட மாடல் அரசின் சமத்துவ நாள் விழாவில் பழங்குடியினருக்கான 1000 குடியிருப்புகளைத் திறந்து வைத்து, 49,542 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினேன்.

    மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வேளச்சேரி காவலர் காமராஜ் என்பவர் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • மதுபோதையில் இருந்த தந்தை, மகன் காவலர் காமராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.

    சென்னை வேளச்சேரியில் காவலர் காமராஜை மதுபோதையில் இருந்த தந்தை, மகன் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    117வது வார்டு திமுக சார்பில் வேளச்சேரியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடைபெற இருந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேளச்சேரி காவலர் காமராஜ் என்பவர் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது, மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த தந்தை, மகனை காவலர் காமராஜ் ஓரமாக போக சொன்னதாக தெரிகிறது. இதனால், மதுபோதையில் இருந்த தந்தை, மகன் காவலர் காமராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    சென்னை வேளச்சேரியில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொள்ளவிருந்த விழாவில், போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்து கொண்டிருந்த காவலர் திரு. காமராஜ் என்பவரை, மது போதையில் இருந்த திமுகவினர் கடுமையாகத் தாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

    காவல்துறையினரை தாக்கும் அளவுக்க திமுகவினருக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது? ஏற்கனவே பெண் காவலர்கள் மீது பாலியல் சீண்டல்கள், தாக்குதல்கள் என தமிழகம் முழுவதும் பார்த்து வருகிறோம். அந்த குற்றங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாமல், காவல்துறையினரின் கண்ணியம் காற்றில் பறக்கவிடப்பட்டதால், காவல்துறையினர் மீது திமுகவின் தாக்குதல் தொடர்கதை ஆகியிருக்கிறது. தற்போதும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

    சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு முக்கியக் காரணம், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருப்பதே. தற்போது, காவல்துறை மீதும் தொடரும் திமுகவினர் தாக்குதலுக்கு என்ன சொல்லப் போகிறார் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்க வேண்டும் என்று சி.பி.ஐ.எம் வலியுறுத்தி உள்ளது.
    • ஆளுநர் என்ற மதச்சார்பற்ற அரசியல் சாசன உயர்பொறுப்பில் நீடிக்கும் தகுதி இவருக்கு சிறிதும் இல்லை.

    மதுரை தியாகராஜர் கல்லூரி விழாவில் மாணவர்களிடையே ஜெய்ஸ்ரீராம் என ஆளுநர். ஆர்.என்.ரவி கோஷம் எழுப்ப வைத்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின், அரசியல் சாசன மாண்புக்கு முரணான திட்டமிட்ட அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

    மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது உரையின் முடிவில் ஜெய் ஸ்ரீராம் என்று மூன்று முறை கூறியதோடு, மாணவர்களையும் கூறுமாறு நிர்ப்பந்திந்துள்ளார். உயர்கல்வி நிலையங்களை அவற்றின் மதச்சார்பற்ற தன்மைக்கு மாறாக, இந்துத்துவ கூடமாக மாற்ற முயலும் ஆர்.என்.ரவியின் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

    தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்டமுன்வரைவுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காதது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் ஓங்கி கொட்டிய பின்பும், அரசியல் சாசனக் கடமைகளை மறுத்து ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் போலவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

    வள்ளலார், ஸ்ரீவைகுண்ட சாமிகள் உள்ளிட்ட சமூக சீர்திருத்த செம்மல்கள் மற்றும் திருவள்ளுவரை மனுவாதக் குடுவைக்குள் அடைக்க முயலும் இவர், மதச்சார்பின்மை, அறிவியல், பகுத்தறிவின் வாசல்களாகத் திகழ வேண்டிய கல்விக்கூடங்களை காவி கூடாரமாக மாற்ற முயல்வதை சகித்துக் கொள்ள முடியாது.

    ஆளுநர் என்ற மதச்சார்பற்ற அரசியல் சாசன உயர்பொறுப்பில் நீடிக்கும் தகுதி இவருக்கு சிறிதும் இல்லை என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது.

    எனவே, ஆளுநர் பொறுப்பிலிருந்து இவரை நீக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கடற்கரையில் கழிவு பிளாஸ்டிக்கை சேகரிக்கும் போது கோகைன் கிடைத்ததாக வாக்குமூலத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கைப்பற்றப்பட்ட 2 கிலோ கோகைனின் சந்தை மதிப்பு ரூ.6 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னை பரங்கிமலையில் இன்று மேற்கொண்ட சோதனையில் ஒரு கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பரங்கிமலையில் நடைபெற்ற சோதனையில் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், 5 பேர் அறித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு ஒரு கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கைப்பற்றப்பட்ட 2 கிலோ கோகைனின் சந்தை மதிப்பு ரூ.6 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கடற்கரையில் கழிவு பிளாஸ்டிக்கை சேகரிக்கும் போது கோகைன் கிடைத்ததாக வாக்குமூலத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில், பழனீஸ்வரன் என்பவரும் கடற்கரையோரத்தில் இருந்து 1 கிலோ கோகைன் கிடைத்ததாக கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சாயல்குடி வனக்காப்பாளராக பணிபுரியும் மகேந்திரன் என்பவர் ஏ1 குற்றவாளி என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறாமல் அவர்களைப் புறக்கணித்து வருகிறார்.
    • தமிழர்களின் கலாச்சாரக் கொண்டாட்டமான தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்துக் கூற மனமில்லையா?

    ஜனவரி 1 அன்று உற்சாகமாக வாழ்த்துகளை பகிரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சித்திரை 1 அன்று மௌன விரதம் இருப்பது தமிழர்களை அவமதிக்கும் கீழ்த்தரமான செயல்! தமிழர் வாழ்வியல் பண்டிகையை புறக்கணிக்கும் முதல்வரை, தமிழகம் புறக்கணிக்கும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஒட்டுமொத்த உலகமும் தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், தமிழ் மொழியின் காவலன் நான் என வீராப்பு காட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நண்பகல் கடந்தும் நமது தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறாமல் அவர்களைப் புறக்கணித்து வருகிறார்.

    மேலும், இந்த ஆண்டும் தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனத்தின் "ஆவின்" பால் பாக்கெட்டுகளில் புத்தாண்டு வாழ்த்துகள் பதிவிடப்படவில்லை.

    ஆங்கிலப் புத்தாண்டிற்கு அகிலத்திற்கெல்லாம் வாழ்த்துமடல் எழுதும் முதல்வருக்கு, ஆண்டாண்டு காலமாகத் தமிழர்களின் கலாச்சாரக் கொண்டாட்டமான தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்துக் கூற மனமில்லையா?

    'தமிழுக்காக உயிரைக் கொடுக்கும் கழகம் திமுக" என விளம்பர வசனம் பேசிக் கொண்டு நமது தாய்த் தமிழை வெறும் அரசியல் பிழைப்பு மொழியாக மட்டுமே திமுக பயன்படுத்துகிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

    தொடர்ந்து தமிழர்களின் மத-கலாச்சார நம்பிக்கைகளின் மீது சேற்றை வாரி இறைக்கும் திமுக-விற்கு வாக்குச்சாவடிகளில் சவுக்கடி கிடைக்கப் போவது நிச்சயம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×