என் மலர்tooltip icon

    சென்னை

    • 2021-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் 27 தமிழர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கினோம்.

    2024-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் நேற்று வெளியானது. இந்த தேர்வில் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23-ம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயின்றவர் ஆவார். அதேபோல, இந்திய அளவில் 39-ம் இடம் பிடித்த மோனிகா என்பவரும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர் ஆவார்.

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் 2024 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த நிலையில் சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயன்பெற்ற 50 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    * 2021-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் 27 தமிழர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது 57 தமிழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    * தேர்ச்சி பெற்ற 57 பேரில் 50 பேர் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்கள்.

    * ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கினோம்.

    * தேர்ச்சி பெற்ற மாணவர்கள் டெல்லி செல்ல தலா ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குழந்தை கண்ணெதிரே தன்னுடைய தகப்பன் உயிரிழந்தது மிகமிக கொடுமையானது.
    • தமிழ்நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் காயமடைந்து இருக்கிறார்கள்.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

    இதையடுத்து பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சட்டசபையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. சட்டசபை உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

    * பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இரக்கமற்ற செயல்.

    * குழந்தை கண்ணெதிரே தன்னுடைய தகப்பன் உயிரிழந்தது மிகமிக கொடுமையானது.

    * தமிழ்நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் காயமடைந்து இருக்கிறார்கள்.

    * இறந்து கிடக்கும் கணவர் அருகில் மனைவி அமர்ந்து அழும் காட்சி மனதை வாட்டியது.

    * பயங்கரவாதிகளின் இரக்கமற்ற செயலை ஒருபோதும் ஏற்க முடியாது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மெகா கூட்டணியை அமைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டம்.
    • நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கும் எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு

    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளார். இதற்காக பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது.

    இந்த கூட்டணியில் பா.ம..க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளையும் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணியை அமைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு காயை நகர்த்தி வருகிறார்.

    சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் அவர் அடுத்தடுத்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு இன்று இரவு சைவ அசைவ உணவுகளுடன் இரவு விருந்து அளிக்கிறார்.

    இதைத் தொடர்ந்து நாளையும், நாளை மறுநாளும் கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாளை மாலை 4.30 மணி அளவில் அ.தி.மு.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

    அ.தி.மு.க. சார்பில் மாநில அளவிலான நிர்வாகிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வுக் கூட்டங்களை நடத்தி பூத் கமிட்டி பொறுப் பாளர்கள் போட்டிருப்பதை உறுதி செய்து எடப்பாடி பழனிசாமியிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதன்படி ஒவ்வொரு பூத்துக்கும் 45 வயதுக்குட்பட்ட 9 பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட பொது கமிட்டி பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    மாநில அளவிலான நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் அனைத்து பூத்களிலும் மிகுந்த கவனத்தோடு செயல்படுவதற்கான அறிவுரைகள் அவர்கள் மூலமாக பூத் கமிட்டியின் நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி நாளை பூத்தமிட்டி பொறுப்பாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடு கிறார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு சட்டமன்றதேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு முக்கிய ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெரிவிக்க உள்ளார். பூத் கமிட்டி நிர்வாகிகளை எப்படி ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்? என்பது பற்றி இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கும் எடப்பாடி பழனி சாமி ஏற்பாடு செய்திருப்ப தன் மூலம் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அவர் தீவிரமாக தயாராகி இருப்பது தெரியவந்து உள்ளது.

    மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் தொடர்பா கவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • ஜம்முவில் மோசமான சூழ்நிலை நிலவுவதற்கு இது எடுத்துக்காட்டு.
    • பயங்கரவாத அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப்பயணிகள் பலியானதாக வந்த செய்தி பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    * தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஜம்முவில் மோசமான சூழ்நிலை நிலவுவதற்கு இது எடுத்துக்காட்டு.

    * தாக்குதலில் தமிழர்கள் சிலர் பாதிக்கப்பட்டதாக தகவல் வந்த உடனேயே அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய உத்தரவிட்டேன்.

    * காஷ்மீர் அரசுடன் இணைந்து பணியாற்றி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய உதவி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்.

    * அப்பாவி மக்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய ஜனநாயகத்தில் இடமில்லை.

    * பயங்கரவாத அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

    * பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து மாநிலம் திரும்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.

    * காஷ்மீருக்கு சென்று பணிகளை மேற்கொள்ள புதுக்கோட்டை கூடுதல் ஆட்சியர் அப்தாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சட்டசபையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதையடுத்து சட்டசபை உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

    • சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள புது வியூகம்.
    • எம்.எல்.ஏ.க்களுடன் அமர்ந்து எடப்பாடி பழனிசாமியும் உணவு அருந்துகிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகியுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியினரை உற்சாகத்தோடு வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கி உள்ளார்.

    இதன்படி இன்று இரவு சென்னை அடையாறு பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் இரவு விருந்துக்கு அவர் ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த விருந்தில் 7 வகையான அசைவ உணவுகள் பரிமாறப்படுகிறது.


    மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல், மட்டன் சுக்கா, முட்டை, இறால் தொக்கு ஆகியவை பரிமாறப்படுகிறது. அதே நேரத்தில் அசைவ சாப்பாட்டை விரும்பாதவர்கள், சைவ உணவை அருந்தும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சைவ உணவில் இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, ஆகியவற்றுடன் சாதம் சாம்பார், ரசம், பொரியல், அவியல் போன்றவையும் இடம் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது தொடர்பாக ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களையும் தொலைபேசியில் அழைத்து நீங்கள் சைவமா? அசைவமா? என கேட்டு, அதற்கேற்ப உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

    இந்த இரவு விருந்தின் போது எம்.எல்.ஏ.க்களுடன் அமர்ந்து எடப்பாடி பழனிசாமியும் உணவு அருந்துகிறார்.

    அப்போது சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்களது தொகுதி மக்களிடம் சென்று அவர்களது பிரச்சனைகளை கேட்டு தெரிந்து கொண்டு அதற்கேற்ப வேகமாக செயல்பட வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளை எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளார். எடப்பாடி பழனிசாமி அளிக்க உள்ள இந்த இரவு விருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    • தங்கம் விலை நேற்று அதிகரித்து காணப்பட்டது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    தங்கம் விலை தினமும் பேசப்படக்கூடிய ஒரு சொல்லாக மாறிவிட்டது. ஒவ்வொரு நாளும் 'கிடுகிடு'வென தங்கம் விலை உயர்ந்து கொண்டே வந்து, புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது.

    அதிலும் கடந்த 9-ந்தேதியில் இருந்து ராக்கெட் வேகத்தில் விலை ஏறி வருகிறது. கடந்த 13-ந்தேதி ஒரு சவரன் ரூ.70 ஆயிரம் என்ற உச்சத்தை கடந்து இவ்வளவு விலையா? என அப்போது பேசப்பட்டது. அதன் பிறகு 2 நாட்களுக்கு விலை குறைந்து அனைவரும் சற்று மூச்சுவிட்ட நிலையில், மீண்டும் 16-ந்தேதியில் இருந்து உயரத் தொடங்கியது.

    இந்த முறை ராக்கெட் வேகத்தைவிட 'ஜெட்' வேகத்தில் விலை எகிறி வருகிறது. இதன் விளைவால் கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.71 ஆயிரம், 21-ந்தேதி ரூ.72 ஆயிரம் என்ற இதுவரை இல்லாத உச்சத்தையும் தாண்டியிருந்தது.

    இதன் தொடர்ச்சியாக தங்கம் விலை நேற்றும் அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 15-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 120-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.275-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 200-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 290-க்கும், ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.72 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.275 குறைந்து ரூ.9,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.111-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    22-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320

    21-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120

    20-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560

    19-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560

    18-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    22-04-2025- ஒரு கிராம் ரூ.111

    21-04-2025- ஒரு கிராம் ரூ.111

    20-04-2025- ஒரு கிராம் ரூ.110

    19-04-2025- ஒரு கிராம் ரூ.110

    18-04-2025- ஒரு கிராம் ரூ.110

    • தமிழ்நாட்டு சகோதரர்கள் உட்பட அப்பாவி உயிர்களைப் பலிகொண்டது குறித்து ஆழ்ந்த வேதனை அடைகிறேன்.
    • கோழைத்தனமான மற்றும் இழிவான வன்முறைச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    சென்னை:

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகள் மீது நடத்திய தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பகல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் 26 பேர் பலியாகியுள்ளனர். இதில் வெளிநாட்டு பயணிகளும் அடங்குவர் என்று சொல்லப்படுகிறது. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற கொடூர தாக்குதலுக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஜம்மு-காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், நமது தமிழ்நாட்டு சகோதரர்கள் உட்பட அப்பாவி உயிர்களைப் பலிகொண்டது குறித்து ஆழ்ந்த வேதனை அடைகிறேன். இந்த கோழைத்தனமான மற்றும் இழிவான வன்முறைச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகளையும் செய்கிறேன் என தெரிவித்துள்ளார் .

    • சுற்றுலாவிற்கு சென்றிருந்த பொது மக்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
    • தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

    சென்னை:

    காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாதிக்கப்பட்டோருக்கு உதவ அவசர எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பைசரான் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த பொது மக்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்தகவலை கேள்விப்பட்டவுடன், பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை பாதுகாக்கும் முகமாக முதற்கட்டமாக அவர்களுக்கு தொடர்பு கொள்ள ஏதுவாக புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் உதவி மையம் தொடங்கப்பட்டு, 011-24193300 (தொலைபேசி), 9289516712 (மொபைல் மற்றும் வாட்ஸ்-அப்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் அப்பகுதி மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளும். இதற்காக புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல ஆணையாளர் (Resident Commissioner) அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள உத்திரவிடப்பட்டுள்ளது.

    மேலும் புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூலை நேரடியாக ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதிக்குச் சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் தேவையான மருத்துவ வசதிகளை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுற்றுலாப் பயணிகளின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் மனசாட்சியை உலுக்கும் காட்டுமிராண்டித்தனமான செயல்.
    • உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் உள்ளனர் என்பதை அறிந்து மிகுந்த வருத்தம் அடைகிறேன்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிர்ப்பலி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

    இந்த நிலையில் பயங்கரவாத தாக்குதலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதவியில் கூறியிருப்பதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் மனசாட்சியை உலுக்கும் காட்டுமிராண்டித்தனமான செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. எனது எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன.

    உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் உள்ளனர் என்பதை அறிந்து மிகுந்த வருத்தம் அடைகிறேன். காஷ்மீர் அரசுடன் ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்ய டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • நீதிக் கட்சிக்கு இறுதி என்பதே கிடையாது.
    • நீதிக் கட்சியின் நீட்சிதான் திமுக.

    நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

    திராவிட இயக்கத்தின் வேராக விளங்கும் நீதிக்கட்சியின் முன்னோடிகளில் ஒருவரான திராவிட அறநெறியாளர் - தமிழவேள் பி.டி.ராஜன் குறித்த "வாழ்வே வரலாறு" என்ற நூலை நீதிக்கட்சியின் வழித்தடத்தில் உருவான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகஇருந்து நான் வெளியிடுவதில் என்னுடைய வாழ்நாளில் கிடைத்திருக்கக்கூடிய பெருமையாக நான் கருதுகிறேன்!

    1936-இல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் First Minister-ஆக இருந்த பி.டி. ராஜனின் வாழ்க்கை வரலாற்று நூலை, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற தகுதியோடு, அந்த பெருமையோடு நான் வெளியிடுகிறேன்!

    1937 தேர்தலில் நீதிக்கட்சி தோற்கடிக்கப்பட்டபோது, "என்றாவது ஒரு நாள் இதற்கு பழிக்கு பழி வாங்குவோம்" என்று பி.டி.ராஜன் சொன்னார். முப்பது ஆண்டுகள் கழித்து, திராவிட முன்னேற்றக் கழகம் வரலாற்று வெற்றியை பெற்றபோது, 'பழிக்கு பழி வாங்கப்பட்டது' என்று சொன்னார்.

    தி.மு.க.வின் எழுச்சியை- வெற்றியை- நீதிக்கட்சியின் வெற்றியாக எண்ணி, 'நீதிக்கட்சி மறுபடியும் வென்றது' என்று அவர் சொல்லி மகிழ்ந்தார். அந்த மகிழ்ச்சியும், தி.மு.க.வின் சாதனைகளும், செயல்பாடுகளும்தான், "1971 தேர்தலில், தி.மு.க.வுக்குத்தான் மக்கள் வாக்களிக்க வேண்டும்; பெரும்பான்மை பலத்தோடு கழக ஆட்சிதான் அமையவேண்டும்" என்று அறிக்கை வெளியிடுவதற்கு காரணமாக இருந்தது!

    அந்தளவுக்கு, அழுத்தமான திராவிட இயக்கத் தலைவராக இருந்தவர்தான் பி.டி.ராஜன். எந்தளவுக்கு பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும், பி.டி.ராஜனை போற்றினார்கள் என்றால், 1967-இல் தி.மு.க. ஆட்சி அமைந்தபோது, கழக அமைச்சர்களுக்கு எல்லாம் நீதிக்கட்சியின் சார்பில் ராயப்பேட்டை பகுதியில் இருக்கக்கூடிய உட்லண்ட்ஸ் உணவகத்தில் பி.டி.ராஜன் ஒரு விருந்து வைத்தார்.

    அப்போது உரையாற்றிய பேரறிஞர் அண்ணா, "தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்தக் கருத்துகளை நிறைவேற்றுவேன்" என்று குறிப்பிட்டுவிட்டு, ''தமிழவேள் பி.டி.ராஜன் போன்ற பெருந்தலைவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில், எனது ஆட்சி நடைபெறும்' என்று உறுதியளித்தார்.

    "பி.டி.ராஜனின் அரிய ஆலோசனைகளை நிறைவேற்றி வைக்கும் செயல் வடிவமாகத்தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி திகழ்கிறது" என்று கலைஞர் சொன்னார். அந்த வழித்தடத்தில்தான் நாமும் இன்றைக்கு பயணித்துக் கொண்டு இருக்கிறோம்!

    1966-ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் பவளவிழா பொதுக்கூட்டத்தில், ''இன்றைய தி.மு.க.வினர் நம்முடைய வாரிசுகள்தான்' என்று பி.டி.ராஜனே குறிப்பிட்டார். எனவே, நான் அழுத்தந்திருத்தமாக சொல்கிறேன்… திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி என்பது நீதிக்கட்சியின் தொடர்ச்சியான ஆட்சிதான்!

    பி.டி.ராஜனுக்கு நம்முடைய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மட்டும் வாரிசு அல்ல, நானும் வாரிசுதான்! திராவிட வாரிசுகள்! இங்கே இருப்பவர்கள் எல்லோரும் திராவிட வாரிசுகள்! வாரிசு என்ற சொல்லைக் கேட்டாலே சிலருக்கு எரிகிறது. பற்றிக்கொண்டு எரிகிறது. அப்படி எரியட்டும் என்றுதான் நாம் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

    இன்றைக்கு எப்படி திராவிடத்தை ஒழிப்போம் என்று சில கைக்கூலிகள் பேசிக்கொண்டு இருக்கிறார்களோ, அதே மாதிரி, பி.டி.ராஜன் காலத்திலும், "நீதிக்கட்சியை குழி தோண்டி பாதாளத்தில் புதைத்துவிடுவேன்" என்று ஒரு தலைவர் சொன்னார். ஆனால், பி.டி.ராஜனோடு தொடர்ச்சியாக, பண்பாளர் பழனிவேல் ராஜன் வந்தார்; இப்போது, பழனிவேல் தியாகராஜனும் நம்முடன் இருக்கிறார்.

    நம்முடைய பழனிவேல் தியாகராஜனை பொறுத்தவரைக்கும், அறிவார்ந்த– வலிமையான வாதங்களை வைக்க கூடியவர். நான் அவருக்கு கூற விரும்புவது, இந்தச் சொல்லாற்றல் அவருக்குப் பலமாகதான் இருக்க வேண்டுமே தவிர, அவரின் பலவீனமாக ஆகிவிடக்கூடாது.

    இதை ஏன் அதை சொல்கிறேன் என்றால், அது அவருக்கே தெரியும். நம்முடைய எதிரிகள், வெறும் வாயையே மெல்லக்கூடிய விநோத ஆற்றல் பெற்றவர்கள். அவர்களின் அவதூறுகளுக்கு உங்களின் சொல் அவலாக ஆகிவிடக் கூடாது என்பதை கழகத் தலைவராக மட்டுமல்ல, உங்கள் மீது இருக்கின்ற அக்கறை கொண்டவனாகவும், அறிவுரை வழங்க கடமைப்பட்டிருக்கிறேன். என் சொல்லை தட்டாத பி.டி.ஆர் என்னுடைய அறிவுரையின் அர்த்தத்தையும், ஆழத்தையும் நிச்சயம் புரிந்துகொள்வார் என நம்புகிறேன்!

    இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.

    • வி.பி. சிங்கை சமூக நீதி காவலர் என்று அழைக்கின்றனர்.
    • நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மாநில உரிமை காவலர் என்று அழைக்கலாம்.

    தமிழ்வேள் பி.டி. ராஜன் வாழ்வே வரலாறு நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். அப்போது "வி.பி. சிங்கை சமூக நீதி காவலர் என்று அழைப்பதை போல, நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மாநில உரிமை காவலர் என்று அழைக்கலாம்.

    மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து போராடி பல வெற்றிகளை குவித்து, நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழ்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்" என்றார்.

    • தேசிய அளவில் 23 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
    • தேர்ச்சி பெற்றுள்ள அனைவரும், தங்கள் பல ஆண்டு கால கடின உழைப்பின் பலனைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டு எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

    இன்று வெளியாகியுள்ள UPSC தேர்வு முடிவுகளில், தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் தேசிய அளவில் 23 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    தேர்ச்சி பெற்றுள்ள அனைவரும், தங்கள் பல ஆண்டு கால கடின உழைப்பின் பலனைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் பணியில் முன்வரிசையில் செயல்படவிருக்கும் அனைவரும், தங்கள் துறைகளில் வெகு சிறப்பாக பணிபுரிய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    ×