என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு 7 வகையான அசைவ உணவுகளுடன் இன்று இரவு விருந்து- இ.பி.எஸ். ஏற்பாடு
- சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள புது வியூகம்.
- எம்.எல்.ஏ.க்களுடன் அமர்ந்து எடப்பாடி பழனிசாமியும் உணவு அருந்துகிறார்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகியுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியினரை உற்சாகத்தோடு வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கி உள்ளார்.
இதன்படி இன்று இரவு சென்னை அடையாறு பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் இரவு விருந்துக்கு அவர் ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த விருந்தில் 7 வகையான அசைவ உணவுகள் பரிமாறப்படுகிறது.
மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல், மட்டன் சுக்கா, முட்டை, இறால் தொக்கு ஆகியவை பரிமாறப்படுகிறது. அதே நேரத்தில் அசைவ சாப்பாட்டை விரும்பாதவர்கள், சைவ உணவை அருந்தும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சைவ உணவில் இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, ஆகியவற்றுடன் சாதம் சாம்பார், ரசம், பொரியல், அவியல் போன்றவையும் இடம் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களையும் தொலைபேசியில் அழைத்து நீங்கள் சைவமா? அசைவமா? என கேட்டு, அதற்கேற்ப உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.
இந்த இரவு விருந்தின் போது எம்.எல்.ஏ.க்களுடன் அமர்ந்து எடப்பாடி பழனிசாமியும் உணவு அருந்துகிறார்.
அப்போது சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்களது தொகுதி மக்களிடம் சென்று அவர்களது பிரச்சனைகளை கேட்டு தெரிந்து கொண்டு அதற்கேற்ப வேகமாக செயல்பட வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளை எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளார். எடப்பாடி பழனிசாமி அளிக்க உள்ள இந்த இரவு விருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.






