என் மலர்tooltip icon

    சென்னை

    • கல்வியுடன் கூடிய தன்னம்பிக்கை மற்றும் அதிகாரம் பெற்ற பெண்களே ஒரு நாட்டின் வலுவான அடித்தளம்.
    • பெண்களின் கனவுகள் வளரவும், அவர்களின் திறமைகள் முழுமையாக வெளிப்படவும் சமமான வாய்ப்புகளை வழங்குவது நம் அனைவரின் பொறுப்பாகும்.

    உலக மகளிர் தினத்தையொட்டி பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    கல்வியுடன் கூடிய தன்னம்பிக்கை மற்றும் அதிகாரம் பெற்ற பெண்களே ஒரு நாட்டின் வலுவான அடித்தளம். அறிவியல் முதல் தொழில்நுட்பம் வரை பல துறைகளில் பெண்கள் தங்கள் திறமையாலும் துணிவாலும் சாதித்து வருவது நம் சமூகத்தின் வளர்ச்சிக்கும் சமத்துவத்திற்கும் பெரும் ஊக்கமாக உள்ளது. அவர்களின் உறுதி, அர்ப்பணிப்பு மற்றும் சாதனைகள் நம் எதிர்காலத்தை இன்னும் நம்பிக்கையுடனும் வளமுடனும் வடிவமைக்கின்றன.

    இந்த சிறப்பான நாளில், ஒவ்வொரு பெண்ணும் மரியாதை, பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்துடன் வாழக்கூடிய சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதியாக இணைவோம். பெண்களின் கனவுகள் வளரவும், அவர்களின் திறமைகள் முழுமையாக வெளிப்படவும் சமமான வாய்ப்புகளை வழங்குவது நம் அனைவரின் பொறுப்பாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குடும்பத்தின் பொருளாதார தூணாக இருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும்.
    • பெண்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எங்கள் அன்பின் அடையாளமுமாகும்.

    உலக மகளிர் தினத்தையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    எனது அன்பிற்குரிய தாய்மார்களுக்கும், எனதருமை சகோதரிகளுக்கும், எதிர்காலத்தை ஆளப் போகும் இளம் கண்மணிகளுக்கும் எனது உளம் கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துகள்!

    ஒரு குடும்பத்தின் ஆணிவேராக இருந்து, துன்பங்களை சுமந்து அன்பையும் அரவணைப்பையும் வாரி வழங்கும் பெண்களின் தியாகத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை. இதனை உணர்ந்துதான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்கான பல புரட்சிகரமான திட்டங்களைக் கொண்டு வந்தார்.

    இன்றைய விடியா திமுக ஆட்சியில், பாதுகாப்பற்ற சூழ்நிலையாலும், விலைவாசி உயர்வாலும், தத்தளிக்கும் பெற்றோர்கள் மற்றும் குடும்பத் தலைவிகளின் கவலை எனக்கு நன்றாகவே புரிகிறது. அந்த சுமையை குறைப்பதே எனது முதல் கடமை!

    அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன், குடும்பத்தின் பொருளாதார தூணாக இருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும். இது வெறும் பணம் அல்ல, பெண்களின் உழைப்புக்கான அங்கீகாரமும் மரியாதையும் ஆகும்.

    பெண்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எங்கள் அன்பின் அடையாளமுமாகும்.

    மகளிர் சுயமாக சாதிக்க உதவும் வகையில் 5 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.

    உங்கள் கனவுகள் நனவாக, உங்கள் பாதுகாப்பு , நீங்கள் பயணிக்கும் போதும் , நம் பிள்ளைகள் படிக்கின்ற இடங்களிலும், உங்கள் பணியிடங்களிலும் உறுதி செய்யப்பட, நான் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறேன்.

    தாயுள்ளத்தோடு தன் கடமைகளை ஆற்றி வரும் சகோதரிகள் அனைவருக்கும், மீண்டும் என் இனிய #மகளிர்தினம் நல்வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெண்களுக்கு சம வாய்ப்புகளையும், அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்கையில் ஒட்டுமொத்த சமுதாயம் வெற்றி பெறுகிறது.
    • வீட்டையும் நாட்டையும் தாங்கிப் பிடிக்கும் உலகெங்கிலும் வாழும் மகளிருக்கு இனிய மகளிர் தின வாழ்த்துகள்.

    உலக மகளிர் தினத்தையொட்டி கமல்ஹாசன் எம்.பி. வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    ஒவ்வொரு பெண்ணும் தனக்கான சிறகுகளைப் பெறுவதை உறுதி செய்வோம்.

    பெண்களுக்கு சம வாய்ப்புகளையும், அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்கையில் ஒட்டுமொத்த சமுதாயம் வெற்றி பெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.

    உலக மகளிர் தினத்தையொட்டி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    வீட்டையும் நாட்டையும் தாங்கிப் பிடிக்கும் உலகெங்கிலும் வாழும் மகளிருக்கு இனிய மகளிர் தின வாழ்த்துகள்.

    அண்ணா பல்கலை, ஆரம்பாக்கம், கோவை நிகழ்வுகள் இல்லாத தமிழகம் உருவாகும் நாள் தான் உண்மையான மகளிர் நாள் என்று தெரிவித்துள்ளார்.

    • நீங்கள் வெல்வதற்கு உலகும் - உங்களுக்குத் துணை நிற்க #DravidianModel-உம் இருக்கிறது!
    • உங்களது பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உடன்நிற்க நமது #DravidianModel அரசு இருக்கிறது.

    உலக மகளிர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    வெல்லும் தமிழ்ப் பெண்களே...

    நீங்கள் வெல்வதற்கு உலகும் - உங்களுக்குத் துணை நிற்க #DravidianModel-உம் இருக்கிறது!

    தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களது பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உடன்நிற்க நமது #DravidianModel அரசு இருக்கிறது... அனைவருக்கும் உங்கள் ஸ்டாலினின் உலக மகளிர் நாள் நல்வாழ்த்துகள்!

    #IWD #IWD2026 #InternationalWomensDay #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் #வெல்வோம்_ஒன்றாக!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனியாக இருக்கும் பெண் ஒருவரின் வீடு புகுந்து அத்துமீறலில் ஈடுபடும் அளவிற்கான துணிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
    • குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலை தொடர்ந்து நீடிப்பதும் தொடர்கதையாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை ராயப்பேட்டையில் தனியாக வீட்டிலிருந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகக் காவலர் கைது - தன் துறை சார்ந்த காவலர்களையே கட்டுப்படுத்தாத முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களால் சட்ட ஒழுங்கை எப்படிப் பேணிக்காக்க முடியும்?

    சென்னை ராயப்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக மதுபோதையிலிருந்த காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

    கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதிலும், கள்ளச்சாராயம் காய்ச்சுவதிலும் உடந்தையாகச் செயல்பட்ட காவலர்கள் மீது திமுக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறியதன் விளைவே, தற்போது தனியாக இருக்கும் பெண் ஒருவரின் வீடு புகுந்து அத்துமீறலில் ஈடுபடும் அளவிற்கான துணிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

    காவல்துறைக்கென தலைவர் (DGP) ஒருவரை நியமிக்கக் காலம் தாழ்த்தி வரும் திமுக அரசால், சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களே கட்டுப்பாடின்றி குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலை தொடர்ந்து நீடிப்பதும் தொடர்கதையாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

    எனவே, குழந்தைகள் தொடங்கி வயதான முதியவர்கள் வரை அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்திய திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவது தான் இதற்கான ஒரே தீர்வு என்பதை உணர்ந்திருக்கும் தமிழக பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு வரும் தேர்தலில் அதனைப் பிரதிபலிப்பார்கள் என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.



    • ஒன்றிய அரசின் தன்னிச்சையான இந்த முடிவிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
    • சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது பொதுமக்களின் வாழ்க்கையை மேலும் சிரமப்படுத்தும் நடவடிக்கையாகும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நாடு முழுவதும் சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ள ஒன்றிய அரசின் முடிவு பொதுமக்கள் மீது மேலும் பொருளாதார சுமையை ஏற்படுத்தும் ஒன்றாகும். ஒன்றிய அரசு சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதின் மூலம் சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது. ஒன்றிய அரசின் தன்னிச்சையான இந்த முடிவிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மார்ச்7 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விலை உயர்வின் மூலம் 14.2 கிலோ வீட்டு உபயோக சமையல் சிலிண்டரின் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் சிலிண்டர் விலை ரூ.868.50 இலிருந்து ரூ.928.50 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் ரூ.853 இருந்து ரூ.913 ஆகவும், மும்பையில் ரூ.852.50 இருந்து ரூ.912.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.879 இருந்து ரூ.930 ஆகவும் உயர்ந்துள்ளது.

    அதேபோல்19 கிலோ வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.115 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் விலை ரூ.1929 இருந்து ரூ.2043.50 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு உணவகங்கள், சிறிய உணவு கடைகள் மற்றும் தேநீர் கடைகள் போன்ற தொழில்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக உணவுப் பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு உள்ளது.

    ஒன்றிய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றும், தேவையான அளவு கையிருப்பு இருப்பதாகவும் கூறிவரும் நிலையில், மத்திய கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள போர் சூழ்நிலையை காரணம் காட்டி சமையல் எரிவாயு விலையை உயர்த்துவது பொதுமக்களின் வாழ்க்கையை மேலும் சிரமப்படுத்தும் நடவடிக்கையாகும்.

    ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, இந்த சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்.

    • எஸ்.ஏ.தர்மாதிகாரி சென்னை ஐகோர்ட்டின் 55-வது தலைமை நீதிபதி ஆவார்.
    • தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மேற்கு வங்காள ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம்.ஸ்ரீவத்சவா ஓய்வு பெற்றார். இதையடுத்து கேரள ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த எஸ். ஏ.தர்மாதிகாரி சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    எஸ்.ஏ.தர்மாதிகாரி சென்னை ஐகோர்ட்டின் 55-வது தலைமை நீதிபதி ஆவார். அவர் தற்போது சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கி உள்ளார்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அங்கு அவர் புதிதாக பதவி ஏற்ற சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பின்னர் அவருக்கு மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

    இதேபோல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மேற்கு வங்காள ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் இன்னும் சில நாட்களில் மேற்கு வங்காள ஆளுநராக பொறுப்பேற்க உள்ளார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவருக்கு மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

    • தமிழக முழுவதும் 189 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தை மேற்கொண்டு முடித்துள்ளார்.
    • அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    ஈரோடு:

    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

    தமிழக முழுவதும் மாவட்ட வாரியாக சட்டமன்ற பகுதிகளில் தனது பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். பிரசாரத்தில் தி.மு.க.வை கடுமையாக சாடி வருகிறார். அதேபோல் பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.

    இதுவரை தமிழக முழுவதும் 189 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தை மேற்கொண்டு முடித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் என 4 தொகுதிகளில் தனது பிரசாரத்தை எடப்பாடி பழனிசாமி முடித்துள்ளார்.

    பல்வேறு கட்டங்களாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் எடப்பாடி பழனிசாமி அடுத்த கட்டமாக இன்று மாலை 190-வது தொகுதியாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    அந்தியூர் அருகே கந்தம்பாளையத்தில் உள்ள தனியார் இடத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு பிரசாரம் நடைபெறுகிறது. இதற்காக இன்று மாலை சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து சாலை மார்க்கமாக காரில் அந்தியூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகிறார். அவருக்கு ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிரசாரம் நடைபெறும் இடத்தில் அ.தி.மு.க கட்சி கொடிகள் கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இன்று புதிய அறிவிப்புகளை வெளியிடுவாரா என அ.தி.மு.க.வினரும் பொதுமக்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) 191-வது பகுதியாக மாலை 4 மணி அளவில் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காஞ்சி கோவில் ரோட்டில் தாய்நகர் குடியிருப்பு எதிரே எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்கான பணிகளும் விரைவாக நடந்து வருகிறது.

    இதை முடித்துக் கொண்டு நாளை மாலை 5.30 மணி அளவில் ஈரோடு மாவட்டம் பவானியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக சேலம் மேட்டூர் ரோடு டி ஏ கே வளாகத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த கூட்டத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பிரசார கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்பை வெளியிடுவாரா என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால் அ..தி.மு.க.வினர் உற்சாகத்தில் உள்ளனர்.

    • நெருக்கடி வந்தபோதெல்லாம் கலைஞருடன் கரம்கோத்து நின்றவர் பேராசிரியர்.
    • நட்புக்கும்-கொள்கைப் பற்றுக்கும் இலக்கணமாகத் திகழ்ந்தவர் பேராசிரியர்.

    சென்னை:

    பேராசிரியர் க. அன்பழகனின் நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறி இருப்பதாவது:-

    பேராசிரியப் பெருந்தகை எனும் கொள்கைப் பேரொளி கழகத்துக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம் கலைஞருடன் கரம்கோத்து நின்றவர் பேராசிரியர். கலைஞரின் நிறைவுக்குப் பிறகு எனக்கும் ஆறுதலாய், அரவணைப்பாய், வழிகாட்டியாய் இருந்தவர்.

    நட்புக்கும்-கொள்கைப் பற்றுக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த நம் இனமானப் பேராசிரியரின் நினைவு நாளில் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதியேற்போம்! உழைப்போம்.

    இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

    • நாடு முழுவதும் வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
    • வளைகுடா போர் தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நாடு முழுவதும் வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. சென்னையில் இதுவரை ரூ.868.50 ஆக இருந்த எரிவாயு சிலிண்டரின் விலை இப்போது ரூ.928 ஆக அதிகரித்திருக்கிறது.

    வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகக்கடுமையாக பாதிக்கும். வளைகுடா போர் தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    வளைகுடா போரின் தாக்கம் நீண்ட காலத்திற்கு இருக்காது; விரைவாக இயல்பு நிலை திரும்பி விடும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ள நிலையில், தற்காலிகமாக இந்த விலை உயர்வு சுமையை மக்கள் மீது சுமத்தாமல் எண்ணெய் நிறுவனங்களே தாங்கிக் கொள்ள வேண்டும். மக்களை பாதிக்கக்கூடிய சமையல் எரிவாயு விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேளாண்துறையின் ஓர் அங்கமான வேளாண் விற்பனைத்துறையில் 27 மாவட்ட விற்பனைக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
    • தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய கிடங்குகளை கட்டியிருக்க முடியும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வணிகர்களிடமிருந்து சந்தைக்கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகையில் கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.500 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க கிடங்குகள் இல்லாமல் உழவர்கள் அவதிப்படும் நிலையில், அவர்களின் பணத்தை ஆட்சியாளர்கள் கொள்ளையடிப்பது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாடு அரசின் வேளாண்துறையின் ஓர் அங்கமான வேளாண் விற்பனைத்துறையில் 27 மாவட்ட விற்பனைக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் கட்டுப்பாட்டில் 284 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களும், 13 துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் செயல்பட்டு வருகின்றன. உழவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து, அதன் மூலம் உழவர்களுக்கு அதிக விலை பெற்றுத் தருவது தான் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் பணியாகும். இதற்காக உழவர்களிடமிருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால், விளைபொருள்களை கொள்முதல் செய்யும் வணிகர்களிடம் இருந்து அவர்கள் வாங்கும் பொருள்களின் மொத்த மதிப்பில் 1% சந்தைக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    இவ்வாறு வசூலிக்கப்பட்ட தொகையில் தான் பெருமளவில் ஊழல்கள் நடைபெற்றிருப்பதுடன், உழவர்களுக்கு இரு வகைகளில் துரோகமும் இழைக்கப்படுகிறது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அனைத்து விளைபொருள்களும் மறைமுக ஏலத்தில் தான் விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், ஏட்டில் இந்த முறை தான் உள்ளது என்றாலும், நடைமுறையில் இது பின்பற்றப்படுவதில்லை. மாறாக, வணிகர்களுடன் ஊழல் கூட்டணி அமைத்துக் கொண்டு உழவர்களுக்கு குறைவான கொள்முதல் விலையைத் தான் பெற்றுத் தருகின்றனர். இது உணவு படைக்கும் கடவுள்களான உழவர்களுக்கு இழைக்கப்படும் முதல் துரோகமாகும்.

    அடுத்த துரோகம் தான் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வணிகர்களிடமிருந்து வசூலிக்கப்படும் சந்தைக் கட்டணத்தில் பெருமளவு ஊழல் செய்யப்படுவதாகும். இதனால் உழவர்கள் மறைமுகமாக பாதிக்கப்படுகின்றனர். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வசூலிக்கப்படும் சந்தைக் கட்டணம் திமுக ஆட்சியாளர்களால் விஞ்ஞான முறையில் சுரண்டப்படுகிறது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை அவற்றின் மேம்பாடு மற்றும் பராமரிப்புக்காக பயன்படுத்திக் கொள்ள விதிகள் அனுமதிக்கின்றன. மேலும் 06.06.2018-ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 144-இன்படி ரூ.5 லட்சம் மற்றும் அதற்கும் குறைவான தொகையை விற்பனைக் குழுக்களே செலவழித்துக் கொள்ளலாம். இதற்காக யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. இது தான் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஊழல் நடப்பதற்கான ஊற்றுக்கண்ணாக திகழ்கிறது.

    இந்த அரசாணையை பயன்படுத்திக் கொள்ளும் வேளாண்மை சந்தைத் துறையினர், ஒவ்வொரு விற்பனைக் குழுவிலும் உள்ள தொகையை ரூ.5 லட்சம், ரூ.5 லட்சமாக பிரித்து அதை பல்வேறு பணிகளுக்கு செலவு செய்ததாக சுருட்டிக் கொள்கின்றனர். இது வேளாண்துறை அமைச்சர் ஆசியுடன் தான் நடப்பதாகவும், இவ்வாறு ஊழல் செய்யப்படும் தொகையில் 50% அமைச்சருக்கு வழங்கப்படுவதாகவும், மீதமுள்ள தொகை பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளால் பகிர்ந்து கொள்ளப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

    தமிழ்நாட்டில் அதிக சந்தைக் கட்டணம் ஈட்டக் கூடிய விற்பனைக் குழுக்களில் முதன்மையானது கோவை மாவட்ட சந்தைக் குழு ஆகும். கோவை மாவட்டத்தில் மட்டும் 10 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உள்ளன. இவற்றிலிருந்து சந்தைக் கட்டணமாக வசூலிக்கபடும் தொகை மட்டுமின்றி, சந்தைக் குழுவுக்கு சொந்தமான கட்டிடங்களில் இருந்து வாடகையாக மாதம் ரூ.2,04,326 வீதம் ஆண்டுக்கு ரூ.24 லட்சத்து 51,912 கிடைக்கிறது. மேலும் சந்தைக் கட்டணங்களையும் சேர்த்தால் கோவை மாவட்ட விற்பனைக்குழுவுக்கு 2021-2025 வரையிலான 4 ஆண்டுகளில் ரூ.80 கோடிக்கும் கூடுதலாக வருவாய்க் கிடைத்துள்ளது. இதில் ரூ.76.475 கோடி செலவழிக்கப்பட்டிருப்பது தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநிலச் செயலாளர் இல. வேலுச்சாமி அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட தகவல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    இந்தத் தொகையில் வேளாண் சந்தைத் துறை திட்டங்களுக்காக வழங்கப்பட்ட குறிப்பிட்ட தொகை தவிர மீதமுள்ள தொகை முழுவதும் ரூ.5 லட்சத்திற்கும் குறைவான மதிப்புள்ள பணிகளுக்கு செலவிடப்பட்டதாகக் கூறி சுருட்டப்பட்டிருக்கிறது. மதில் சுவர் கட்டுதல், சிமெண்ட் தளம் அமைத்தல், சுற்றுச்சுவர் கட்டுதல், வண்ணம் பூசுதல், மின்சாரம் தொடர்பான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்காகவே இந்தத் தொகை செலவிடப்பட்டதும் தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

    இந்த செலவுகளுக்கு தணிக்கை கிடையாது, போட்டி ஏல முறை கிடையாது என்பதால் அதிக மதிப்பு கொண்ட பணிகள் கூட, ஊழல் செய்வதற்கு வசதியாக சிறு, சிறு பணிகளாக பிரித்து மேற்கொள்ளப்பட்டு, அதில் பெருந்தொகை சுருட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எடுத்துக்காட்டாக கோவை மாவட்டம் சூலூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 150 மீட்டர் நீள சேதமடைந்த சுற்றுச்சுவர் ரூ.49.85 லட்சத்தில் கட்டப் பட்டதாக கணக்குக் காட்டப்பட்டுள்ளது. இவ்வளவு அதிக மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டால் அதற்கு திட்ட மதிப்பீடு தயாரித்தல், போட்டி ஏல முறையில் ஒப்பந்தப்புள்ளி பெறுதல் உள்ளிட்ட பல நடைமுறைகள் பின்பற்ற பட வேண்டும்; இவை அனைத்திற்கும் மேலாக பணிகள் முடிந்த பிறகு தணிக்கை செய்யப்பட வேண்டும். இந்த நடைமுறை பின்பற்றப்படும்போது குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஊழல் செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

    அதனால், 150 மீட்டர் நீளமுள்ள சுற்றுச்சுவர் தலா 15 மீட்டர் வீதம் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. பின்னர் அந்த 10 பிரிவுகளும் தலா 50% வீதம் 20 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவுக்கும் அதிகபட்சம் ரூ.2.50 லட்சம் வீதம் மொத்தமாக ரூ.49.85 லட்சம் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் 2022-23ஆம் ஆண்டில் இந்தப் பணிகள் நடைபெற்றதாக கணக்கு காட்டப்பட்டுள்ள போதிலும், அந்த காலத்தில் சில மேற்பூச்சு பணிகளைத் தவிர வேறு எந்தப் பணியும் நடைபெறவில்லை என்று உழவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளும் இவ்வாறு தான் செய்யப்பட்டுள்ளன.

    அதேபோல் குறிச்சி உழவர் சந்தையில் கடைகளுக்கு மின்விளக்கு அமைத்தல், சுற்றுச்சுவர் கட்டுதல், பேவர்பிளாக் நடைபாதை அமைத்தல் ஆகிய பணிகள் மொத்தம் 16 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பணியும் சராசரியாக ரூ.5 லட்சம் மதிப்பில் ரூ.76.52 லட்சத்துக்கு மேற்கொள்ளப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் இதில் 10% தொகை கூட செலவழிக்கப்படவில்லை என உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

    இவற்றை அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற ஊழலாகக் கருதி ஒதுக்கி விட முடியாது. துறை அமைச்சர் அலுவலக ஆணைப்படி தான் அனைத்தும் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு உடன்படாத அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டதும் நடந்துள்ளது. 2023-24ஆம் ஆண்டில் சேலம், எடப்பாடி ஆகிய நகரங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வண்ணம் பூசும் பணியை 15 பிரிவுகளாக பிரித்து ரூ.75 லட்சத்தில் மேற்கொள்வதற்கு அத்துறையின் துணை இயக்குனர் நிலையில் உள்ள அதிகாரி ஒப்புக்கொள்ளாததால் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் உழவர் அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

    தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே போன்று ஊழல்கள் நடைபெற்றிருப்பதை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றப்பட்ட தரவுகள்வாரியாக அறிந்து கொள்ள முடிகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் ரூ.75 கோடி அளவுக்கும், தமிழ்நாடு முழுவதும் ரூ.500 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக உழவர்கள் குற்றஞ்சாட்டுகின்றன. 4 ஆண்டுகளில் ரூ.500 கோடி ஊழல் என்பது பெருந்தொகையாகும். இதைக் கொண்டு தமிழ்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய கிடங்குகளை கட்டியிருக்க முடியும். அவ்வாறு கட்டியிருந்தால் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியிருந்திருக்காது.

    வேளாண்மை விற்பனைக் கூடங்களில் சந்தைக் கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகை சும்மா கிடைக்கவில்லை. உழவர்கள் வியர்வை சிந்தி விளைவித்த பொருள்களை வாங்கி விற்பதில் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதியைத் தான் வணிகர்கள் சந்தைக் கட்டணமாக செலுத்துகின்றனர். அதைக் கொண்டு உழவர்களுக்கு நன்மை செய்யாமல் ஆட்சியாளர்களே சுருட்டிக் கொள்வதை மன்னிக்கவே முடியாது. இது தொடர்பான அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ளும் உரிமை தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு. எனவே, 27 சந்தைக் குழுக்களிலும் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
    • சென்னை, பல்லவன் இல்லம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சியில் அமர்ந்த விடியா திமுக அரசு, மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமலும், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றித் தராமலும், குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

    அந்த வகையில் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்த பணப் பலன்கள், விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தராமல் காலம் தாழ்த்தி வரும் விடியா திமுக அரசைக் கண்டித்தும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் 13.3.2026 பிற்பகல் 3 மணியளவில், சென்னை, பல்லவன் இல்லம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தலைமையிலும், கழக அண்ணா தொழிற்சங்கப் போவைச் செயலாளர் கமலக்கண்ணன், தலைவர் தாடி ம. இராசு, பொருளாளர் எம். அப்துல் அமீது ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

    கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், அண்ணா தொழிற்சங்கப் போவையின் மாநில நிர்வாகிகள், போக்குவரத்துப் பிரிவு நிர்வாகிகள், தமிழ் நாடு முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொழிலாளர்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு ஆதாவாக, விடியா திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளப் பெருமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×