என் மலர்tooltip icon

    சென்னை

    • புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • தாங்கள் எப்போதும் மகிழ்ச்சியோடும் மங்காத உடல்நலத்தோடும் திகழ்ந்திட விழைகிறேன்.

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில்,

    மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

    தாங்கள் எப்போதும் மகிழ்ச்சியோடும் மங்காத உடல்நலத்தோடும் திகழ்ந்திட விழைகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மலைப்பகுதிகளில் ஆடு, மாடு மேய்ப்பதை தடுத்தால் மீண்டும் மாடு மேய்க்கும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவோம்.
    • சீமான் உள்ளிட்ட அக்கட்சியினர் 56 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பாரம்பரிய நாட்டுமாடு இனமான மலைமாடுகளுக்கு வனப்பகுதியில் மேய்ச்சல் அனுமதி வழங்கக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி மாவட்டம் போடி அருகே முந்தல் பகுதியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. போராட்டத்துக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார்.

    இந்த போராட்டத்துக்கு வனத்துறையினர் அனுமதி கொடுக்கவில்லை. இதனால், வனத்துறை மற்றும் போலீசார் முந்தல் அடவுப்பாறை பகுதியில் தடுப்புகள் அமைத்து இருந்தனர்.

    தடையை மீறி சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் மலைப்பகுதிக்கு சென்றனர். அப்போது கட்சியினர் அங்கு இருந்த தடுப்புகளை அகற்றினர். இதனால் போலீசாருக்கும், அக்கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    அதன்பிறகு மாடுகளையும் தடையை மீறி மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர். மாடு மேய்க்கும் போராட்டத்துக்காக சீமான் கையில் கம்புடன் மலையேறினார். அங்கு போராட்டத்தை நடத்திவிட்டு பின்னர் அவர் திரும்பி வந்தார்.

    அப்போது பேசிய சீமான் கூறுகையில்,

    தேனி மாவட்டத்தில் மலைகளில் கற்குவாரிகள் நடத்த அனுமதி கொடுக்கிறார்கள். ஆனால், பாரம்பரிய மாடுகளை மேய்ப்பதற்கு அனுமதிப்பது இல்லை. வனத்துறையினர் இதற்கு தடை விதித்ததால் 1 லட்சம் மாடுகள் இருந்த இடத்தில், தற்போது 5 ஆயிரம் மாடுகள் தான் உள்ளன. மலைப்பகுதிகளில் ஆடு, மாடு மேய்ப்பதை தடுத்தால் மீண்டும் மாடு மேய்க்கும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவோம் என்று கூறினார்.

    இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அக்கட்சியினர் 56 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வனத்துறையினர் தடுத்து நிறுத்தியும் அத்துமீறி சென்று மாடு மேய்த்ததால் சீமான் மீது வன உயிரின விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து துக்கம் விசாரித்து அஞ்சலி செலுத்துவதும் தமிழ்ப் பண்பாடு.
    • இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாக என்னுடைய கருத்தை பதிவு செய்து இருக்கிறேன்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியவர்களை அவர்களது இல்லம் தேடிச் சென்று நலம் விசாரிப்பதும், உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து துக்கம் விசாரித்து அஞ்சலி செலுத்துவதும் தமிழ்ப் பண்பாடு.

    இந்த வகையில், முதலமைச்சர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகு பூரண குணமடைந்து இல்லம் திரும்பிய நிலையில், அவரது வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன்.

    இதேபோன்று அவரது மூத்த சகோதரர் மு.க.முத்து மறைவு குறித்து இரங்கல் தெரிவித்தேன். இந்தச் சந்திப்பு தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாடு. என்னுடைய மனைவியும், என்னுடைய தாயாரும் இறந்தபோது, என்னை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியவர் முதலமைச்சர் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தச் சந்திப்பில் எவ்வித அரசியலும் இடம்பெறவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆனால், இந்தச் சந்திப்பை வைத்து என்னை தி.மு.க.வின் 'B' Team என்றும், நான் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கப் போவதாகவும், தி.மு.க.வில் இணையப் போவதாகவும் பல்வேறு வதந்திகளை சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பும் நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களும் இதுகுறித்த செய்திகளை கற்பனையாக வெளியிட்டு வருகின்றன. இதில் எள்ளளவும் உண்மையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்னைப் பொறுத்தவரையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியில் பயணிப்பவன். 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் போவை பொதுத் தேர்தலில்அம்மா அவர்களின் ஆட்சியை அமைக்க வேண்டுமென்பதுதான் எங்களின் நோக்கம் என்பதையும், அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என்பதையும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ்ப் பண்பாட்டை நிலைநிறுத்தும் வகையில் நான் முதலமைச்சர் அவர்களை சந்தித்தேனே தவிர, இதில் துளியும் அரசியல் ஏதுமில்லை. இதனை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களைப் பார்க்கும்போது, பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழியான "பண்பு தெரிந்தவர்கள் பாராட்டுகிறார்கள். அது இல்லாதவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்" என்பதுதான் என் நினைவிற்கு வருகிறது.

    அடுத்தபடியாக, சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நிதியை நான் ஏதோ இப்போதுதான் வெளியிடுவதுபோல சில விமர்சனங்கள் எழுகின்றன. இது முற்றிலும் தவறு. சமக்ரா சிக்ஷா திட்டத்திற்கான நிதியை விடுவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி 29-08-2024 அன்றே அறிக்கை வெளியிட்டவன் நான்.

    இதேபோன்று, தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவைப் பற்றி விமர்சித்து பேசிய இந்து முன்னணிக்கு கண்டனம் தெரிவித்து 25-06-2025 அன்று அறிக்கை வெளியிட்டவன் நான். அம்மா அவர்களை பா.ஜ.க. முன்னாள் தலைவர் விமர்சித்தபோது அதற்கு கண்டனம் தெரிவித்து 12-06-2023 அன்று அறிக்கை வெளியிட்டவன் நான். இதே போன்று, இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாக என்னுடைய கருத்தை பதிவு செய்து இருக்கிறேன்.

    இஸ்லாமிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வக்ப் வாரிய சட்டத்திற்கு எதிராக மாநிலங்களவையில் வாக்களிக்க உத்தரவிட்டேன். நான் எங்கு இருந்தாலும், தமிழக மக்களின் உரிமை, தமிழக மக்களின் நலன் என்று வந்துவிட்டால் அம்மா அவர்களின் வழியில் செயல்படக் கூடியவன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.
    • தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை, வெப்பசலன மழை கடந்த சில மாதங்களாக கைக்கொடுத்து வருகிறது. இடையில் பல நாட்கள் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக இந்த மழை பெய்து வருகிறது.

    அந்த வகையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, குமரி கடலை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக டெல்டா, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை தீவிரமாக இருக்கிறது.

    இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இன்று, நாளை (செவ்வாய்க்கிழமை), நாளை மறுதினம் (புதன்கிழமை) ஆகிய 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

    இதேபோல், இன்று (திங்கட்கிழமை) கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) நீலகிரி மாவட்டம், கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை வரையிலும் பெய்யக்கூடும். கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் எதிர்பார்க்க்படுகிறது.

    நாளை மறுதினம் (புதன்கிழமை) கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    இதில் அதிகனமழை வரை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மிககனமழை வரை பெய்யும் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கனமழை வரை பெய்யும் இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

    • நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
    • கள நிலவரத்தை ஆராய்ந்து அதற்கேற்ப தக்கநேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்.

    அரசியல் கூட்டணி குறித்த கருத்துகளை தவிர்க்குமாறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து மக்களின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.

    எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துரோகக் கூட்டத்திடமிருந்து மீட்டெடுப்பதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை ஏற்படுத்தி நாம் போராடி வருகிறோம். இதில் நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.

    இந்தச் சூழ்நிலையில், வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை நாம் எதிர்கொள்ளும் வகையில், எம்.ஜி.ஆரால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும், ஜெயலலிதாவால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் செல்லவும், தி.மு.க. ஆட்சியில் தற்போது மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் மற்றும் தமிழ்நாட்டிற்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்லவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறிவுப் பாதையில் அழைத்துச் செல்லப்படுவதை மக்களுக்கு எடுத்துக் காட்டவும் பொதுக் கூட்டங்களை கழக நிர்வாகிகள் ஆங்காங்கே நடத்த வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் செய்தித் தொடர்பாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன். இதனை மீறிச் செயல்படுபவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கூட்டணி குறித்த முடிவு தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்டவர்களின் கருத்தினைக் கேட்டு, கள நிலவரத்தை ஆராய்ந்து அதற்கேற்ப தக்கநேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • செல்வன் முகிலன் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா?
    • அனைத்து கோணங்களிலும் இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    திருப்பத்தூர் அருகே பள்ளியில் மூடப்பட்ட கிணற்றில் மாணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தில், மாணன் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? போன்ற அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டம் தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்த செல்வன் முகிலன் என்ற 11 ஆம் வகுப்பு மாணவன், அப்பள்ளியில் உள்ள கிணற்றில் உடலில் தீக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்த மாணவனின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கடந்த ஒன்றாம் தேதி முதல் வகுப்பிற்கு வராத மாணவனை அவரது பெற்றோரும் போலீசாரும் தேடி வந்துள்ள நிலையில், பள்ளியில் மூடியிருந்த கிணற்றில் பள்ளி சீருடையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. செல்வன் முகிலன் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா?

    மாணவன் தொலைந்து இரண்டு நாட்களாகியும் பள்ளி நிர்வாகம் பள்ளியின் அனைத்து இடங்களிலும் அவரைத் தேடாதது ஏன்? இதில் அரசியல் தலையீடுகள் ஏதாவது இருக்கின்றனவா? போன்ற அனைத்து கோணங்களிலும் இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட வேண்டும். எவ்வித சமரசமுமின்றி இதில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

    மேலும், கடந்த நான்காண்டுகளாக மாணவர்களின் மரணங்கள் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், படிக்கும் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான மனநிலையையும், பள்ளியில் அவர்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையையும் உருவாக்கிடத் தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு முன்னெடுக்க வேண்டுமென முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நடிகர் சூர்யாவை கட்டியணைத்து கமல்ஹாசன் வாழ்த்தினார்.
    • நான் ஓரளவுக்கு நல்லா நடிப்பேன். என் நடிப்பு மேல எனக்கே சந்தேகம் வந்திருச்சு.

    நடிகர் சூர்யாவின் அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், கடந்த 15 ஆண்டுகளாக அகரத்தில் படித்து பயன்பெற்ற அனைத்து மாணவர்கள், மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    மேலும், நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா, சிவக்குமார், இயக்குனர் வெற்றி மாறான் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவையின் எம்.பி.,யுமான கமல் ஹாசன் பங்கேற்றார்.

    அப்போது, சூர்யாவை கட்டியணைத்து கமல்ஹாசன் வாழ்த்தினார்.

    பின்னர், நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    டீஸர், ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா என எவ்வளவோ விழாக்கள் நடத்துகிறோம். அதிலெல்லாம் கிடைக்காத சந்தோசம் எனக்கு இதில் கிடைக்கிறது.

    சனாதன சங்கிலிகளை, சர்வாதிகார சங்கிலிகளை எல்லாம் நொறுக்கித் தள்ளும் ஒரே ஆயுதம் கல்விதான். இதைத் தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள்.

    நான் ஓரளவுக்கு நல்லா நடிப்பேன். என் நடிப்பு மேல எனக்கே சந்தேகம் வந்திருச்சு. அதனாலதான் இது(டிஷ்யூ பேப்பர்) கொண்டு வந்தேன். பரவால நான் நல்ல நடிகன்தான் அழாம பேசிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுமார் 42 மணி நேரத்திற்கும் மேலாக மக்களிடம் உரையாற்றியுள்ளேன்.
    • புரட்சிப் பயணத்தில், வெற்றிகரமாக 3,200 கி.மீ. தூரம் பயணித்துள்ளேன்.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

    'Greatest journey begins with a single step'

    எனச் சொல்லுவார்கள். பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் பாதம் தொட்டு, அவர்களின் கொள்கைகளின் அடிப்படையில் எனது "மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்"" என்ற உயரிய லட்சியத்துடன் கோவையில் கடந்த ஜூலை 7-ஆம் தேதி எனது எழுச்சிப் பயணத்தை தொடங்கினேன்.

    கோவை மேட்டுப்பாளையத்தில் தொடங்கிய எனது பயணத்தில், இதுவரை 21 நாட்களில், 14 மாவட்டங்கள், 61 சட்டமன்றத் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டுள்ளேன்.

    சுமார் 25 லட்சம் மக்களைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். அவர்களில் பலரிடம் நேரடியாக உரையாடி அவர்களின் குறைகளை, கோரிக்கைகளை, எண்ணவோட்டங்களைக் கேட்டறியும் வாய்ப்புகள் கிடைத்தன. இந்த பயணத்தில் சுமார் 42 மணி நேரத்திற்கும் மேலாக மக்களிடம் உரையாற்றியுள்ளேன்.

    இந்தப் புரட்சிப் பயணத்தில், வெற்றிகரமாக 3,200 கி.மீ. தூரம் பயணித்துள்ளேன்.

    எனது எழுச்சிப் பயணத்திற்கு, செல்லும் இடமெல்லாம் மக்கள் அளித்துவரும் பேராதரவிலும், அவர்களின் அளவற்ற அன்பிலும் மிகுந்த மகிழ்ச்சியுற்றேன். மக்களின் குரலாக, அவர்களில் ஒருவராக என் மீது அன்பு பாராட்டி வரும் தமிழக மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்.

    எனக்கு அளித்த இந்த வரவேற்புக்கு, திமுக மக்கள் விரோத ஆட்சியை அகற்றிவிட்டு, தமிழக மக்களாகிய உங்களுக்கு நல்லாட்சியை வழங்குவதே நான் தெரிவிக்கும் நன்றிக்கு நிகரானது. அதுவே எனது கடமை. அதுவே தமிழ் நாட்டு மக்களின் விருப்பமும் கூட.

    எனது பயணத்தில் - பொதுமக்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர், வேலையில்லாப் பட்டதாரிகள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், வியாபாரிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், சிறுகுறு தொழில் முனைவோர், மருத்துவர்கள், பாட்டாளி வர்க்கத்தினர், மாணவர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள், உப்பு உற்பத்தியாளர்கள், வழக்கறிஞர்கள், ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்போர், மாடு பிடி வீரர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் ஆகியோரைச் சந்தித்தேன். அப்போது, அவர்கள் அனைவரும் 'Failure Model ஸ்டாலின் அரசால்' தாங்கள் படும் துயரங்களையும், தங்கள் குறைகளையும், எங்களிடமிருந்து அவர்கள் எதிர்பார்க்கும் திட்டங்களையும் என்னிடம் தெரிவித்தனர்.

    ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்துப் பகுதிகளிலும் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என அனைத்து வரியையும் தாறுமாறாக உயர்த்தி உள்ளார்கள்.

    ஆனால், தற்போதைய 'Failure Model ஸ்டாலினின் திமுக ஆட்சியில்' குடிதண்ணீருக்காக சுமார் ஒரு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய பரிதாப நிலைதான் உள்ளது என தூத்துக்குடி மாவட்டம், வேலாயுதபுரம் கிராம மக்கள், அவர்களது வேதனையை என்னிடம் தெரிவித்தனர். இதே நிலைமைதான் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் உள்ளது.

    விவசாயிகளுக்கான நலத் திட்டங்கள், மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு ஏற்படும் இடர்ப்பாடுகளை சரி செய்தல், வேலை வாய்ப்புகளை அதிகரித்தல் உள்ளிட்ட பணிகளை இந்த 'Failure Model ஸ்டாலின் அரசு' மேற்கொள்ளத் தவறியுள்ளது.

    எனது தலைமையிலான கடந்த அஇஅதிமுக ஆட்சியில் இவை எல்லாம் நிறைவேற்றப்பட்டன. மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினேன்.

    ஆனால் இந்த ஆட்சி, நிதி மேலாண்மை, நிர்வாகத் திறன், சட்டம் ஒழுங்கு என அனைத்துத் துறைகளிலும் கோட்டை விட்டு, தோல்வியடைந்த ஒரு அரசாகவேதான் இருக்கிறது.

    போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த அரசு முற்றிலும் தவறிய காரணத்தினால், திருட்டு, கொலை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது.

    தினந்தோறும் ஊடகங்கள், தங்க நகை விலை நிலவரம் போல விலைவாசி உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் கொலை நிலவரங்களையும், வானிலை அறிக்கை போல, பாலியல் குற்ற அவலங்களையும் வெளியிடுகின்றன.

    இது பற்றியெல்லாம் சாமானிய மக்களின் குரலாக எவ்வளவுதான் கேள்வி கேட்டாலும், எதற்கும் செவி சாய்க்காமல், ஒரு பொம்மையைப் போலவே ஆட்சியை செய்து கொண்டிருக்கிறார் பொம்மை முதல்-அமைச்சர்.

    விடியா ஆட்சி நடத்தும் Failure Model ஸ்டாலின் அவர்கள் இன்று வெளியிட்ட கடிதத்தில், மத்தியில் சிறப்பான ஆட்சி நடத்தும் பா.ஜ.க-விடம் அதிமுக அடிமையாக உள்ளது என குறிப்பிட்டிருக்கிறார். இதே பா.ஜ.க-விற்கு வெள்ளைக் குடை பிடித்து குழைந்து பேசி உங்கள் குடும்பத்தையும், கொள்ளை அடித்த சொத்துக்களையும் காப்பாற்ற நீங்கள் மண்டியிட்டதை தமிழக மக்கள் மட்டுமல்ல, உங்கள் கழகத் தொண்டர்களே வெறுப்புடன் பார்த்ததை மறந்துவிட்டீர்களா ஸ்டாலின்?

    அஇஅதிமுக ஆட்சியில் கொண்டுவந்த நல்ல திட்டங்களைத் தொடர முடியாமல், ஆடத் தெரியாதவர்க்கு தெருக்கோணல் என்பது போல, ஆளத் தெரியாத Failure Model ஸ்டாலினுக்கு ஆட்சி முழுவதுமே கோணலாக உள்ளது. 7-ஆவது முறையாக அல்ல, இன்னமும்

    70 ஆண்டுகள் ஆனாலும் இனி திமுக-விற்கு தமிழகத்தில் இடமே இல்லை. ஆகவே, வீட்டிற்குள் உட்கார்ந்து வீரவசனம் மட்டும் பேசினால் போதாது. எங்களைப் போல வீதியில் இறங்கி மக்களைச் சந்தித்துப் பாருங்கள். அப்போதாவது உங்கள் ஆட்சியின் அவல நிலை உங்களுக்குப் புரிகிறதா என்று பார்ப்போம்.

    இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என செய்ய முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, இப்போது திணறி தடுமாறுகின்றனர். ஃபோட்டோ ஷூட் விளம்பர மயக்கத்தின் மூலம் மக்களை ஏமாற்றலாம் என மனக் கணக்கு போடுகின்றனர்.

    ஆட்சிக்கு வந்து 50 மாதங்களாக 'தனது குடும்ப நலனைப் பேணி காத்துவிட்டு', அம்மா அரசு செயல்படுத்திய திட்டங்களுக்கு, தனது பெயரையே சூட்டி புது திட்டங்கள் போல் அறிமுகப்படுத்துவதும்; முறையாக நிதி மேலாண்மை மேற்கொள்ளத் தெரியாமல் மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதுடன், அவர்களது கட்சிக்கான தேர்தல் விளம்பரச் செலவுகளைச் செய்து, தமிழகத்தை கடன் வாங்குவதில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்கியதுதான் இந்த 'Failure Model ஸ்டாலின் அரசின்' சாதனை.

    தூத்துக்குடியில், வர்த்தக சங்கங்கள் மற்றும் சமூக நல அமைப்புகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர், மாணவர்களிடையே அதிக அளவில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்தார்.

    இந்த அரசு அதைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது மிக மிக வேதனையான ஒன்று. நீங்கள் ஆட்சிக்கு வருவீர்கள். இந்த நாட்டுக்கு செய்ய வேண்டிய ஒரே ஒரு முக்கிய கடமை இளைய சமுதாயத்தினரை அழிக்கும் போதைப் பொருள் புழக்கத்தை முழுவதுமாக கட்டுப்படுத்த வேண்டும் என்று, என்னிடம் வேதனையுடன் தெரிவித்தனர்.

    இதுபோல, இந்த அலங்கோல ஆட்சி மீது தமிழக மக்கள் கடும் விரக்தியும் அதிருப்தியும் மட்டுமல்ல, கோபத்துடனும் இருக்கின்றனர். இந்த மோசமான திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் என்பது மட்டும் எனக்கு தெளிவாகத் தெரிகிறது. தமிழக மக்கள் இழந்த அமைதி, வளத்தை மீட்டுத் தருவது தான் எனது முதல் வாக்குறுதியாக, தமிழக மக்களுக்கு அளித்துள்ளேன். கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட:-

    தாலிக்குத் தங்கம்.

    மகளிரின் பொருளாதார மேம்பாட்டிற்காக கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம்.

    மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி.

    படித்த பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம்

    என, இந்த அரசு காழ்ப்புணர்ச்சியுடன் முடக்கியுள்ள மக்கள் நலத் திட்டங்கள், 2026-ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன், மீண்டும் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை மக்களுக்கு நான் அளித்துள்ளேன்.

    மேலும்,

    தீபாவளிக்கு சேலை.

    தீப்பெட்டி தொழிலுக்கு சவாலாக உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு தடை.

    சத்துணவுத் திட்டத்தில் கடலை மிட்டாய்.

    4000 அம்மா மினி கிளினிக்குகள்.

    காவிரி - குண்டாறு திட்டம், தாமிரபரணி – வைப்பாறு திட்டம்.

    பனை ஏறும் தொழிலாளர்களுக்கு, அவர்கள் பயன்படுத்தும் கத்தி, பதனி இறக்கும் குடுவை போன்ற பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும். அவர்களின் பாதுகாப்பு நலனைக் கருத்தில்கொண்டு காப்பீட்டுத் திட்டத்திற்குள் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கான பிரீமியத் தொகையை அரசே செலுத்தும்.

    மழைக் காலங்களில் பணியில்லாமல் இருக்கும் உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

    மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை, அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதிகப்படுத்தி வழங்கப்படும்.

    உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்துள்ளேன். 2026-ல் கழக ஆட்சி அமைந்தவுடன் இவையெல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.

    நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்

    நாடொறும் நாடு கெடும்.

    தன் ஆட்சியின் குறைகளை சரி செய்யாமல், விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கும் ஆட்சி, விரைவில் அகற்றப்படும். மக்கள் அகற்றுவார்கள்.

    நாமும், நமது கழகத்தொண்டர்களும் மக்களுடன் உறுதியாக நின்று, வீடு வீடாகச் சென்று அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்து தலைமைக் கழகத்திடம் சமர்ப்பிக்க அறிவுறுத்துகிறேன்.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றுமே மக்களுடன்தான் நிற்கும் என்பதை மக்களுக்கு மீண்டும் உறுதிப்படுத்துவது கழகத் தொண்டர்களின் பொறுப்பு.

    2026-ம் ஆண்டு தமிழகத்தில் நமது ஆட்சி அமைந்தவுடன், 'Failure Model ஸ்டாலின் அரசால்' இந்த மக்கள் அடைந்த இன்னல்களை தீர்ப்பதுதான் நமது முக்கியமான பணி.

    மக்களின் தேவைகளை ஒவ்வொன்றாகப் பார்த்து பார்த்து செய்யும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நல்லாட்சி அமையும். தமிழக மக்கள் ஏற்றம் பெறுவர், அவர்கள் வாழ்வு உயரும். அதுவரை நான் ஓயப்போவதில்லை. எனது எழுச்சிப் பயணம் தொடரும்!

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
    • ஆகஸ்ட் 23 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்கட்ட சுற்றுப் பயணத்தை நிறைவு செய்கிறார்.

    தேமுதிகவும் தனது கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தின் கும்மிடிப்பூண்டி தொகுதியிலிருந்து தனது சுற்றுப் பயணத்தை பிரேமலதா தொடங்கி உள்ளார்.

    தொடர்ந்து ஆகஸ்ட் 4ல் ஆவடி, ஆகஸ்ட் 5ல் காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை, ஆகஸ்ட் 6ல் வேலூர், ஆகஸ்ட் 7ல் திருப்பத்தூர், ஆகஸ்ட் 8ல் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 9ல் தருமபுரி, ஆகஸ்ட் 11ல் சேலம், ஆகஸ்ட் 13ல் கள்ளக்குறிச்சி, ஆகஸ்ட் 14ல் நாமக்கல், ஆகஸ்ட் 16ல் கரூர், ஆகஸ்ட் 17ல் பெரம்பலூர், ஆகஸ்ட் 18ல் அரியலூர், ஆகஸ்ட் 19ல் மயிலாடுதுறை, ஆகஸ்ட் 20ல் கடலூர் மற்றும் ஆகஸ்ட் 22ல் விழுப்புரம் பகுதிகளில் பிரசார பயணத்தை மேற்கொள்கிறார்.

    ஆகஸ்ட் 23 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்கட்ட சுற்றுப் பயணத்தை நிறைவு செய்கிறார்.

    அதன்படி, தேமுதிக சார்பில் 'இல்லம் தேடி.. உள்ளம் நாடி..' என்ற பெயரில் பிரசார சுற்றுப் பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தொடங்கினார்.

    தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுடன் விஜய பிரபாகரனும் பிரசாரப் பயணத்தில் பங்கேற்றுள்ளார்.

    • திரைப்பிரபலங்கள் பலர் மதன் பாப் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர்.
    • மதன் பாப்பின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    சினிமா குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் மதன் பாப் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71.

    புற்று நோய்க்காக ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5 மணி அளவில் அவர் உயிரிழந்தார்.

    அவரது உடல் சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    அங்கு, திரைப்பிரபலங்கள் பலர் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர், இன்று பிற்பகலில் மதன் பாப்பின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    இந்நிலையில், மதன் பாப்பின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் மதன் பாப் உடலுக்கு உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    • அலுவலகத்தில் பல அதிகாரிகள் மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்டனர்.
    • விரைவில் புதிய நிர்வாக இயக்குனர் நியமிக்கப்படுவார் என தெரிகிறது.

    சென்னை:

    டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி மோசடி புகார் தொடர்பாக அதன் தலைமையகம் மற்றும் எழும்பூரில் உள்ள நிர்வாக இயக்குனர் விசாகனின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தி இருந்தனர்.

    நிர்வாக இயக்குனர் விசாகன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அலுவலகத்தில் பல அதிகாரிகள் மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்டனர்.

    இந்த சோதனைக்கு தடை விதிக்கும்படி கோர்ட்டில் முறையிட்ட பிறகு மேற்கொண்டு விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் டாஸ்மாக் அதிகாரிகள் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகினார்கள்.

    இந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் வேறு துறைக்கு இடமாற்றம் கேட்டுள்ளதாகவும் அதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. எனவே விரைவில் புதிய நிர்வாக இயக்குனர் நியமிக்கப்படுவார் என தெரிகிறது.

    • வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா நாளை நடைபெறுகிறது.
    • தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.

    சென்னை:

    தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா மற்றும் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி செல்கிறார்.

    வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில், தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

    இந்த தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினார். இப்போது முதல் கட்ட கார் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில், வி.எப்.6, வி.எப்.7 வகை கார்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு தயார் செய்யப்பட்டுள்ளன.

    வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா நாளை (4-ந்தேதி) நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நாளை காலை தூத்துக்குடி செல்கிறார்.

    அங்கிருந்து கார் மூலம் வின்பாஸ்ட் தொழிற்சாலைக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் விழாவில் ஆலையை திறந்து வைத்து கார் விற்பனையை தொடங்கி வைக்கிறார்.

    இதை தொடர்ந்து தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். மாநாட்டில் பல்வேறு தொழில் முதலீடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்படுகிறது. மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.

    நிகழ்ச்சி முடிந்ததும் மதியம் 12.45 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் சென்று தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

    ×