என் மலர்tooltip icon

    சென்னை

    • மாம்பழம் கொள்முதல் விலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியாலும், மாம்பழக்கூழ் மிகக் குறைவான அளவில் கொள்முதல் செய்யப்பட்டதாலும் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
    • மா விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் மாம்பழ விவசாயிகள் மற்றும் மாம்பழம் பதப்படுத்துவோர் நலன் கருதியும் மாம்பழ ஏற்றுமதி மற்றும் மதிப்புக்கூட்டுப் பொருட்களை உற்பத்தியை மேம்படுத்தும் வகையிலும் தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 10-10-2025 அன்று கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், 2025ஆம் ஆண்டின் மாம்பழப் பருவத்தில் மா விவசாயிகள் மற்றும் மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க ஒன்றிய அரசின் தலையீட்டைக் கோரி 24.06.2025 அன்று தாம் எழுதியிருந்த கடிதத்தினை சுட்டிக்காட்டியுள்ளார்.

    அதன் அடிப்படையில், பதப்படுத்தக்கூடிய மாம்பழ வகைகளை பயிரிட்ட விவசாயிகள், மாம்பழம் கொள்முதல் விலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியாலும், மாம்பழக்கூழ் மிகக் குறைவான அளவில் கொள்முதல் செய்யப்பட்டதாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர் என்றும் கடந்த ஆண்டு நடந்தது போலவே இந்தப் பருவத்திலும் மா விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதன் ஒரு முக்கிய பகுதியாக இக்கடிதத்தை தாம் எழுதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் தனது முந்தைய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தபடி, இந்தியாவில் விற்கப்படும் மாம்பழ பானத்தில் உள்ள பழக்கூழின் அளவு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) விதிமுறைகளைப் பின்பற்றாமல், பேக்கேஜ் செய்யப்பட்ட மாம்பழச் சாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்றும், பானங்களில் மாம்பழக்கூழ் சேர்க்கப்படுவதில் FSSAI தரநிலைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கான வழிமுறைகளைப் பிறப்பிக்குமாறு இந்திய அரசைக் தாம் கேட்டுக்கொண்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

    மேலும் இதுகுறித்த தனது கடிதத்திற்கு இன்னும் நேர்மறையான பதில் ஏதும் கிடைக்கப்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, மா விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், நம்நாட்டில் இந்த பானத்தை அதிகளவில் பயன்படுத்தும் நுகர்வோரின் நலனைக் கருத்தில் கொண்டும், மாம்பழங்களை அடிப்படையாகக் கொண்ட பான உற்பத்தித் தொழிலில் குறைந்தபட்சம் 18 முதல் 20 சதவீதம் வரை பழக்கூழ் உள்ளடக்கத்தை உறுதிசெய்ய அறிவுறுத்தப்படவேண்டும் என்று தாம் கேட்டுக்கொள்வதாகவும் அதனால் அப்பானத்தின் தரமும் மேம்படும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டின் மாம்பழ ஏற்றுமதிக் கொள்கையானது மாம்பழ வகை ஏற்றுமதியை மேம்படுத்துவதிலும், மாம்பழப் பொருட்களை பல்வகைப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதாகவும், அதற்குத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமும், ஏற்றுமதி தரநிலைகளுக்கு இணங்க செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் சாத்தியப்படும் என்றும் அத்தகைய நடவடிக்கைகள் மாம்பழங்களுக்கு அதிக மதிப்பைச் சேர்க்கும் அதே வேளையில், மாம்பழக்கூழ் தொழில்களை அதிகமாகச் சார்ந்திருப்பதையும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    ஆகவே, இந்த முயற்சிகளை மேலும் வலுப்படுத்திட இந்திய அரசின் வணிக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA), ஒருங்கிணைந்த பேக்கிங் செய்யும் வசதிகள், உள்நாட்டு கொள்கலன் கிடங்குகள், குளிரூட்டப்பட்ட துறைமுகங்கள், தரச்சோதனை ஆய்வகங்கள், வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்புகளை ஏற்பாடு செய்தல், வெளிநாட்டு வாங்குபவர்களை அடையாளம் காணுதல் மற்றும் ஏற்றுமதி தரநிலைகள் குறித்த திறன் மேம்பாட்டுத் திட்டங்களை நடத்துதல் போன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் தமிழ்நாட்டிற்குத் தேவையான ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இந்தப் பிரச்சினையில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் இத்தருணத்தில் தலையிட்டு, மா விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், மேம்பட்ட ஏற்றுமதி மற்றும் மதிப்புக் கூட்டல் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்ய உதவிடுமாறும் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.
    • சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள முக்கிய தலைவர்கள், பிரபலங்கள், நிறுவனங்களுக்கு தினந்தோறும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீசார் மெயில் ஐ.டி.யை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது.

    • போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • மழைக்காலம் முடிந்ததும் அடுத்தாண்டு ஜனவரி முதல் பணிகளை மேற்கொள்ள மெட்ரோ நிறுவனத்திற்கு அறிவுறுத்தினார்.

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரெயில் செயல்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து மீனம்பாக்கம் வரையில் ஒரு வழித்தடமும், விம்கோ நகரில் இருந்து மீனம்பாக்கம் வரையில் மற்றொரு வழித்தடமும் செயல்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

    இதனிடையே, மாதவரம்- சோழிங்கநல்லூர் வரையிலும், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், நாளை முதல் மெட்ரோ ரெயில் பணிகளுக்கு தடை விதிப்பதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேயர் பிரியா கூறுகையில், சென்னையில் பண்டிகை கால கூட்ட நெரிசல் மற்றும் மழைக்காலத்தை கருத்தில் கொண்டு நாளை முதல் மெட்ரோ பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. மழைக்காலம் முடிந்ததும் அடுத்தாண்டு ஜனவரி முதல் பணிகளை மேற்கொள்ள மெட்ரோ நிறுவனத்திற்கு அறிவுறுத்தினார். 

    • அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட 'அ.தி.மு.க' வருகிற 17-ந்தேதி அன்று 54-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
    • கழகத்தின் தொடக்க நாளை விழாக்கோலத்துடன் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட ''அ.தி.மு.க.'' வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 54-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் கொண்டாடும் வகையில் அன்று காலை 10 மணியளவில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது உருவச் சிலைகளுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்க உள்ளார்.

    இந்த நிகழ்ச்சிகளில், பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    அதேபோல் கழகத்தின் 54-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு ஆங்காங்கே கம்பீரமாக வீற்றிருக்கும் கழக கொடிக் கம்பங்களுக்கு புதுவர்ணம் பூசியும், கொடிக்கம்பங்கள் இல்லாத இடங்களில் புதிய கொடிக் கம்பங்களை அமைத்து கழகக் கொடியினை ஏற்றி வைத்தும், நம் இருபெரும் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கியும், ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்வதோடு, கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, கழகத்தின் தொடக்க நாளை விழாக்கோலத்துடன் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒப்பந்தத்தை தற்காலிகமாக நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்ததால் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
    • இருதரப்பு இடையே சமரசம் ஏற்பட்டதால் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடைகோரிய வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது.

    நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென்மண்டல எல்.பி.ஜி.கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த போராட்டம் இன்று 6-வது நாளாக நீடித்தது. இதன் காரணமாக கியாஸ் டேங்கர் லாரிகள் சாலை ஓரங்கள் மற்றும் பட்டறைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கியாஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் தொழிற்சாலைகளுக்கு கியாஸ் கொண்டு செல்லும் பணி முற்றுலுமாக முடங்கியுள்ளது. எனவே தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    இந்நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரிகளுக்கான ஒப்பந்தத்தை தற்காலிகமாக 2026 மார்ச் வரை நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்தது.

    புதிய டெண்டர் பணிகள் நிறைவடையாததால் தற்போதைய ஒப்பந்தத்தை அடுத்தாண்டு மார்ச் வரை நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்தன.

    ஒப்பந்தத்தை தற்காலிகமாக நீட்டிக்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புதல் அளித்ததால் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    2026 மார்ச் மாதம் வரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என டேங்கர் லாரிகள் சங்கத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இருதரப்பு இடையே சமரசம் ஏற்பட்டதால் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடைகோரிய வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது.

    இதையடுத்து 6 நாட்களாக நடைபெற்று வந்த எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரி வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

    • பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தினாலும் கூட எந்தப் பாதிப்பும் இருக்காது.
    • கேரள அரசின் இச்சதித்திட்டத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள பாதுகாப்பு பிரிகேட் என்ற தன்னார்வ நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் ரசூல் ஜோய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், இடைக்கால நடவடிக்கையாக முல்லைப் பெரியாறு நீர்த்தேக்க மட்டத்தை உடனடியாகக் குறைக்க வேண்டும். தேவைப்பட்டால், விரிவான அணை பாதுகாப்பை மறுமதிப்பீடு செய்வதற்கோ, அணையைச் செயலிழக்கச் செய்வதற்கோ அல்லது அணை புனரமைப்பு திட்டத்தைத் தயாரிப்பதற்கோ வழிமுறைகள் உருவாக்க உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது.

    மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வி.கிரி, இது 130 ஆண்டுகள் பழமையானது என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

    ஆனால் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தினாலும் கூட எந்தப் பாதிப்பும் இருக்காது; அந்த அளவுக்கு முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது'' என்று நீதிபதி ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு அறிக்கையில் தெளிவாகக் கூறி இருக்கின்றது.

    இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரளா மாநில அரசு, கேரள பாதுகாப்பு பிரிகேட் போன்ற அமைப்புகள் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

    கேரள அரசின் இச்சதித்திட்டத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த இரு தினங்களில் விலகக்கூடும். அதே சமயம், வடகிழக்கு பருவமழை தமிழகம்-புதுவை-காரைக்கால் பகுதிகள், கேரளா மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திர பிரதேச பகுதிகளில் வரும் 16-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும்.

    தென்மேற்கு வங்கக்கடல்- பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, வரும் 19-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் கேரள கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

    இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    16-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    17-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    18-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    19-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    20-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:-

    இன்று முதல் 18-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்து விட்டு கரூருக்கு விஜய் சென்ற வழித்தடத்தையும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
    • கரூர் நெரிசல் விவகாரத்தில் விஜய் பிரசாரத்துக்கு தாமதமாக வந்ததே காரணம் என்று போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூரில் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் ஆலோசனை நடத்தி சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க உள்ளனர். போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் நியமிக்கப்படும் அந்த அதிகாரிக்கு கீழ் செயல்படுவதற்கு டி.எஸ்.பி. இன்ஸ் பெக்டர்கள் அடங்கிய குழுவும் அமைக்கப்படுகிறது.

    விசாரணை அதிகாரி புதிதாக நியமிக்கப்பட்டதும் உடனடியாக அவர் விசாரணையை தொடங்குகிறார்.

    தமிழகத்தில் ஏற்கனவே சி.பி.ஐ. அதிகாரிகள் குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவில் இருந்தே சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சி.பி.ஐ. இயக்குனர்தான் யாரை அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வார் என்பதால் வேறு மாநிலங்களை சேர்ந்த வரும் சி.பி.ஐ. அதிகாரியாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சிறப்பு அதிகாரி இன்று அல்லது நாளை நியமிக்கப்பட உள்ளார். இதன் பிறகு புதிய அதிகாரி கரூருக்கு சென்று தனது விசாரணையை தொடங்குகிறார்.

    கரூரில் 41 பேர் பலியான இடமான வேலுச்சாமிபுரத்துக்கு சென்று ஆய்வு செய்ய உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் குழு 41 பேர் பலியானது தொடர்பாக அதிரடி விசாரணையை நடத்துகிறார்கள்.

    கரூர் சம்பவத்தின்போது உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களிடமும் தகவல்களை சேகரிக்க முடிவு செய்துள்ள அதிகாரிகள் நெரிசலில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து நடந்த சம்பவம் பற்றி விரிவாக கேட்டறிகிறார்கள்.

    நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்து விட்டு கரூருக்கு விஜய் சென்ற வழித்தடத்தையும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

    கரூரில் கடந்த மாதம் 27-ந்தேதி ஏற்பட்ட நெரிசல் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. தமிழக அரசு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனும் விசாரணை நடத்தி வந்தார்.

    இந்த 2 விசாரணையும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் இதுவரை நடத்திய விசாரணை விவரங்கள் அனைத்தையும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    இதைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவினரும் நீதிபதி அருணா ஜெகதீசனும் தாங்கள் நடத்திய விசாரணை தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒப்படைத்ததும் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணையை வேகப்படுத்த உள்ளனர்.

    ஒரு நபர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் சம்பவம் நடந்த மறுநாள் கரூர் வந்தார். பின்னர் 2 நாட்கள் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரிடம் நேரில் விசாரணை நடத்தினார். பின்னர் சென்னை புறப்பட்டு சென்றார்.

    ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்து ஆம்புலன்ஸ் டிரைவர்கள், சம்ப வத்தை நேரில் பார்த்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் என 100-க்கும் மேற்பட்டோ ரிடம் விசாரணை நடத்தினர். டிரோன் கேமரா காட்சிகள், சி.சி.டி.வி. பதிவுகள் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இந்த ஆவணங்கள் அனைத்தும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது.

    கரூர் நெரிசல் விவகாரத்தில் விஜய் பிரசாரத்துக்கு தாமதமாக வந்ததே காரணம் என்று போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விஜய் தரப்பிலோ, போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்காமல் தடியடி நடத்தியதே நெரிசலுக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே விஜய் பிரசார கூட்டத்துக்குள் ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டதாகவும் பலர் குற்றம் சாட்டியுள்ளனர். இப்படி பல்வேறு தரப்பில் இருந்தும் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் அது தொடர்பாக எழுந்துள்ள சந்தேக கேள்விகளுக்கும் விடை காண வேண்டிய கட்டாயத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடங்க உள்ள விசாரணை பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தி.நகரில் மட்டும் புதிதாக 90 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்றவையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் சென்னை மாநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    சென்னையில் மற்ற பகுதிகளைவிட தி.நகர் பகுதியில்தான் அதிக அளவில் பொதுமக்கள் ஜவுளி மற்றும் பொருட்களை வாங்குவதற்காக கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த ஆண்டும் தி.நகரில் தீபாவளிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தி.நகர் ரங்கநாதன் தெருவில் 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் மற்ற இடங்களில் 3 கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

    தி.நகரில் மட்டும் புதிதாக 90 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அந்த பகுதிகளில் 28 கேமராக்கள் உள்ள நிலையில் பாண்டி பஜார் மாம்பலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 155 கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    3 டிரோன் கேமராக்கள் மூலமாக தீபாவளி திருடர்களைப் பிடிப்பதற்கு வலை விரிக்கப்பட்டுள்ளது. புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் தீபாவளி நெருங்கும் நேரங்களில் டிரோன் கேமராக்களை பயன்படுத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

    தி.நகர் பகுதியில் தினமும் 200 போலீசார், 100 ஊர்க்காவல் படையினர், 100 ஆயுதப் படை காவலர்கள் ஆகியோர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள்.

    வண்ணாரப்பேட்டை பகுதியில் 150 போலீசாரும், புரசைவாக்கத்தில் 120 போலீசாரும், தாம்பரம் பகுதியில் 250 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தி.நகர் பகுதியில் 16 ஒலி பெருக்கிகள் மூலமாகவும் போலீசார் பொதுமக்களை உஷார்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் கொண்டு வந்துள்ள பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். உடமைகளை தவறவிட்டு விடாதீர்கள் என்பது போன்ற எச்சரிக்கை தகவல்களை திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே உள்ளனர். மக்களின் வசதிக்காக 4 காவல் உதவி மையங்கள், 2 தற்காலிக உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்றவையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

    தி.நகர் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு வெங்கட் நாராயணா சாலையில் உள்ள சோமசுந்தரம் மைதானம், ராமகிருஷ்ணா பள்ளி மைதானம், தி.நகர் மேம்பாலத்துக்கு கீழே என இடங்களும் ஒதுக்கி கொடுக்கப்பட்டு உள்ளன.

    பொதுமக்களின் வசதிக்காக அவர்களின் அவசர தேவையை கருத்தில் கொண்டு 8939977649, 91504 72278 ஆகிய செல்போன் எண்களும் அவசர உதவி எண்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

    ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும் குற்றவாளிகள் கூட்டத்துக்குள் புகுந்தால் அவர்களை அடையாளம் காணும் நவீன தொழில்நுட்பத்தையும் மாம்பலம் போலீசார் கையாண்டு வருகிறார்கள். இந்த ஆண்டும் அது போன்ற குற்றவாளிகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பிக்பாக்கெட், செயின் பறிப்பு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்கு வணிகப் பகுதிகள் அனைத்திலும் சாதாரண உடையிலும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    வருகிற 18, 19 ஆகிய தேதிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த 2 நாட்களும் தற்போது இருப்பதைவிட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில், தி.நகர் துணை கமிஷனர் குத்தா லிங்கம், உதவி கமிஷனர் சுரேஷ், இன்ஸ்பெக்டர் விமல் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகர பகுதியில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    • விவசாய தொழிலாளர்களும் விடுமுறை அறிவித்து உள்ளனர்.
    • மளிகை, பழம் மற்றும் பூ மார்க்கெட் வழக்கம் போல செயல்படும்.

    போரூர்:

    தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி வேலை பார்த்து வரும் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல உள்ளனர். இதேபோல் விவசாய தொழிலாளர்களும் விடுமுறை அறிவித்து உள்ளனர்.

    இதையடுத்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு வருகிற 21-ந் தேதி விடுமுறை விடப்படுவதாக காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர். 22-ந் தேதி அதிகாலை முதல் வழக்கம் போல் சந்தை செயல்படும். அதேநேரம் மளிகை, பழம் மற்றும் பூ மார்க்கெட் வழக்கம் போல செயல்படும் என்று அதன் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • ஆம்னி பஸ்களில் கட்டணம் 4 மடங்கு உயர்வு.
    • பெரும்பாலான ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் 100-யை தாண்டி உள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் சென்னையில் வசிக்கும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை, பெங்களூரு, திருவனந்தபுரம், கொல்லம் உட்பட பல்வேறு நகரங்களுக்கு 15 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டன.

    ஆம்னி பஸ்களில் கட்டணம் 4 மடங்கு அதிகரித்து உள்ள நிலையில் குடும்பத்துடன் செல்லும் பெரும்பாலானோர் ரெயில்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் சிறப்பு ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.

    பெரும்பாலான ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் 100-யை தாண்டி உள்ளது. ஆம்னி பஸ்களை விட ரெயில்களில் கட்டணம் குறைவு என்பதால் வழக்கமான ரெயில் மற்றும் சிறப்பு ரெயில்களில் டிக்கெட் கிடைக்காதோர் அடுத்ததாக பயணம் செய்யும் ஒரு நாளுக்கு முன்னதாக கூடுதல் கட்டணம் செலுத்தி தட்கல் முறையில் டிக்கெட் எடுக்க காத்து இருக்கிறார்கள்.

    எனவே தீபாவளியை முன்னிட்டு மேலும் கூடுதல் சிறப்பு ரெயில்கள் மற்றும் முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில்களை இயக்க ரெயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம்.
    • ஜெயலலிதா இருக்கும் போது சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியுமா?

    சென்னை:

    அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், "தேர்தலுக்குப் பல அறிவிப்புகள் வரும். இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு மனைவியையும் கூட இலவசமாக வழங்குவார்கள்" என மிகக் கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார்.

    அ.தி.மு.க.வுக்குப் பெண்கள் மீது இருக்கும் வக்கிரமும் வன்மமும் வெளிப்பட்டிருக்கிறது.

    ஓர் அரசியல்வாதியாக அல்ல. அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம். ஜெயலலிதா இருக்கும் போது சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியுமா? அவரை இருக்கும் இடம் தெரியாமல் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் போன்ற பொருளாதாரத் தன்னிறைவு திட்டங்களால் பெண்கள் முன்னேறி வருகிறார்கள். அது அ.தி.மு.க.வுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் பெண் இனத்தைக் குறிக்கும் வகையில் 'பொண்டாட்டி இலவசம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

    திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களால் தமிழ்நாட்டுப் பெண்களின் வாழ்க்கைத் தரம், பொருளாதாரம் உயர்ந்துள்ளது, கல்வியில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. பெண்களை அவதூறாகப் பேசிய அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இழந்த வரலாறு நிறைய உண்டு.

    பெண்களை இழிவுபடுத்தி வரும் அ.தி.மு.க.வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் தக்கப் பதிலடிக் கொடுத்து பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார். 

    ×