என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் அருகே ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளர் மற்றும் டிரைவரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நல்ல நாயகபுரம் பாசனதாரர் சங்க தலைவராக இருப்பவர் தமிழ்வேல். இவர் சங்கத்தின் மூலம் டெண்டர் எடுத்து அங்குள்ள பெரிய ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்தி உள்ளார். இப்பணி முடிவடைந்ததை அடுத்து அதற்கான தொகையை அரியலூர் செந்துறை சாலையில் உள்ள மருதையாறு வடிநில கோட்ட நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில் அவர் கேட்டுள்ளார். 

    அப்போது அந்த தொகையை வழங்குவதற்கு செயற்பொறியாளர் மணிமாறன் ரூ.18ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும், அதற்கு இடைத்தரகராக மணிமாறனின் கார் டிரைவர் சக்திவேல் செயல்பட்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத தமிழ்வேல், இது குறித்து அரியலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசாரின் ஆலோசனையின்படி, ரசாயன பொடி தடவிய ரூ.18 ஆயிரத்தை மருதையாறு வடிநில கோட்ட நீர்வளத்துறை அலுவலகத்தில் இருந்த மணிமாறனிடம் தமிழ்வேல் கொடுத்துள்ளார். அதனை மணிமாறன் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த போலீசார் மணிமாறன் மட்டும் டிரைவர் சக்திவேல் ஆகிய 2பேரையும் கைது செய்தனர். 

    பின்னர் அவர்களை அரியலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சஞ்சீவி பாஸ்கர்,2 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 2 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 
    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி இன்று பகல் பத்து திருநாள் தொடங்கியது.
    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி இன்று பகல் பத்து திருநாள் தொடங்கியது.

    இதையொட்டி இன்று காலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி ஜெயங்கொண்டத்தில் இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஜெயங்கொண்டம்: 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர் கோட்ட செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். திருச்சி கோட்ட தலைவர் கனகராஜ் கலந்துகொண்டு பேசினார். மாவட்ட செயலாளர் ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்ட துணை தலைவர்கள் பழனிசாமி, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.   #Ayodhya #Ramtemple 
    அரியலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க ரூ.30 லட்சத்தில் திட்ட பணிகள் செய்யப்பட உள்ளது என்று கலந்தாய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துகளை தடுப்பது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள், அரியலூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், தேசிய, மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமபுற சாலைகள் தொடர்பான உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அரியலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு, விபத்துகளை தடுப்பது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சிமெண்டு நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மேலும் ராம்கோ சிமெண்டு நிறுவனத்தினர் செந்துறை ரவுண்டானாவில் இருந்து ஓட்டக்கோவில் வரை சாலையில் முகப்பு குவி கண்ணாடி வைத்தல், உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்தல், எச்சரிக்கை பலகை வைத்தல் உள்ளிட்ட திட்ட பணிகளுக்காக ரூ.30 லட்சம் செலவு செய்வதாக கூட்டத்தில் தெரிவித்தனர். மற்ற தனியார் சிமெண்டு நிறுவனத்தினர் சாலை விபத்தை தடுக்க தடுப்பு அரண்கள், தகுந்த ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டி தர கூட்டத்தில் சம்மதித்தனர்.

    பின்னர் விபத்து தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பாக செந்துறை பைபாஸ் சாலையில் கண் கூசும் விளக்குகள் எரியும் வாகனங்களுக்கு முகப்பு விளக்கில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கருப்பு வில்லை ஒட்டியும், வாகன ஓட்டிகளுக்கு அறிவுரையும் வழங்கினார். 
    ரூ.41 லட்சத்தில் 137 பேருக்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    அரியலூர்:

    அரியலூரில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது. விழாவிற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் 45 மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 40 பேருக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களையும், 2 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்களையும், 2 பேருக்கு மடக்கு சக்கர நாற்காலிகளையும், 2 பேருக்கு சிறப்பு சக்கர நாற்காலிகளையும், 5 பேருக்கு கைக்கடிகாரம் மற்றும் கருப்பு கண்ணாடிகளையும், 22 பேருக்கு காதுக்கு பின்புறம் அணியும் காதொலிக்கருவிகளையும், 29 பேருக்கு திருமண உதவித்தொகைக்கான காசோலைகளையும் என மொத்தம் 137 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.41 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்.

    முன்னதாக சிறப்பாக பணியாற்றிய அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை முட நீக்கியியல் டாக்டர்கள் கொளஞ்சிநாதன், மணிகண்டன், பிரவீன் ஆகியோரை பாராட்டி, நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். பின்னர் ஹெலன் ஹெல்லர் காது கேளாதவர் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அதிகாரி (பொறுப்பு) காமாட்சி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) (பொறுப்பு) லலிதா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பூங்கோதை, மாவட்ட தொழில் மைய அலுவலர் சகுந்தலா, முடநீக்கு வல்லுனர் ராமன், கொல்லாபுரம் ஹெலன்ஹெல்லர் காதுகேளாதோர்க்கான சிறப்பு பள்ளி சகோதரி லில்லிகேத்ரின் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 
    சேந்தமங்கலம் பொதுமக்கள் மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளும் குவாரி இயங்கி வருகிறது. வெள்ளாற்றில் இருந்து மணல் அள்ளும் மாட்டு வண்டிகள் அங்கே இயங்கி வரும் தனியார் சிமெண்டு ஆலை பகுதி வழியாக வந்து கொண்டு இருந்தது. இதனால் தங்களது லாரிகளை இயக்க சிரமம் ஏற்படுவதாக ஆலை நிர்வாகத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு கொடுத்தனர்.

    இந்த நிலையில் மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் மாட்டு வண்டிகளை சேந்தமங்கலம் கிராமம் வழியாக செல்ல வலியுறுத்தினர். இந்த நிலையில் சேந்தமங்கலம் பொதுமக்கள் மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற தளவாய் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரத்குமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது இந்த பிரச்சினை குறித்து செந்துறை தாசில்தார் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காணலாம் என்று கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். #tamilnews
    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே முன்விரோத தகராறில் தந்தை-மகனை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    மீன்சுருட்டி, 

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள ரெட்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தவசாமி (வயது 49). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தனது மகன் தினேஷ்குமாருடன் வீட்டின் முன்பு பேசிக்கொண்டு இருந்தார். 

    அப்போது அதே தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் ஜவகர்(24) முன்விரோதம் காரணமாக தவசாமியையும், தினேஷ்குமாரையும் திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வசந்த் வழக்குப்பதிந்து ஜவகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    மத்திய பாஜக மற்றும் மாநில அரசுகளுக்கு மக்கள் மீது அக்கறையில்லை என்று த.மா.கா. 5-ம் ஆண்டு தொடக்க விழாவில் ஜி.கே.வாசன் பேசினார். #gkvasan #tngovt #centralgovernment #tamilmaanilacongress

    அரியலூர்:

    அரியலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 5-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் த.மா.கா. கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:-

    த.மா.கா. ஆரம்பிக்கப்பட்ட போது இருந்த ஆர்வம் இன்றும் மக்களிடம் உள்ளதை காண முடிகிறது. லட்சியத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி த.மா.கா. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு இதுவரை நிவாரணம் வழங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. ஏற்கனவே 2,3 புயல் தாக்கிய போதும் மத்திய அரசு முறையாக நிவாரணம் வழங்கவில்லை. ரூ.1000 கோடி நிவாரணம் என்பது போதுமானதல்ல. கூடுதலாக நிதியை அரசு வழங்க வேண்டும்.

    வீடுகளை இழந்தவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிதர வேண்டும். மத்தியில் உள்ள பா.ஜ.க. மதவாத கட்சியாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக உள்ளது. மத்திய பா.ஜ.க. மற்றும் மாநில அ.தி.மு.க. அரசுகளின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கை குறைந்து வருவது தெரிகின்றது.

    மாநில அரசை பொருத்த மட்டில் விவசாயிகள், அரசு ஊழியர்கள் மற்றும் நெசவாளர்களின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்கும் அரசாக இல்லை. மக்கள் விரும்பாத எதிர்க்கின்ற திட்டங்களை செயலாக்கும் அரசாக மத்திய மாநில அரசுகள் உள்ளது. மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு மறைமுகமாக ஆதரவு தருவதாக தெரிகிறது. அதனை கண்டித்து வரும் 8-ந்தேதி கிருஷ்ணகிரியில் த.மா.கா. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.


    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு மாற்று நிலைபாட்டில் ஈடுபட கூடாது. அங்கு பணியில் இருந்தவர்களுக்கு அரசு மாற்று வேலையை வழங்க வேண்டும்.

    தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும். மக்களின் எதிர்ப்பை மீறி தமிழகத்தில் எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வருவதற்கு தமிழக அரசு அனுமதியளிக்க கூடாது. பெட்ரோல், டீசல், ஜி.எஸ்.டி உள்ளிட்ட பிரச்சினைகளில் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    ஆட்சிக்கு வந்தவுடன் 1 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாக கூறிய மோடி இதுவரை தர வில்லை. மேலும், கருப்பு பணத்தை இதுவரை மீட்கவில்லை. பா.ஜ.க., அ.தி.மு.க.வுக்கு மக்களின் மீது அக்கறையில்லை. புயல் நிவாரணத்துக்கு மாநில அரசு கோரிய நிதியை மத்திய அரசு உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கஜா புயலால் ஏற்பட்டுள்ள பெரிய பாதிப்பை பிரதமர் பார்க்காதது கண்டனத் திற்குரியது. த.மா.கா.எந்த பலமும் இல்லாமல் மக்கள் பலத்தை மட்டுமே நம்பி இயங்கும் கட்சி. தேர்தல் நேரத்தில் ஒருமித்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி அமைக்கும். அக்கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அரியலூர் மாவட்ட த.மா.கா. சார்பில் ஜி.கே.வாசனுக்கு வீரவாள் வழங்கப்பட்டது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட த.மா.கா. சார்பில் ரூ.1லட்சும் நிவாரணத்துக்கான காசோலை ஜி.கே.வாசனிடம் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் மாநில துணை தலைவர் ஞான தேசிகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆர்.மூப்பனார், சுரேஷ் மூப்பனார், மாநில பொதுச் செயலாளர் கோவை தங்கம், நிர்வாகிகள் சித்தன், விடியல் சேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள்,தொண்டர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    ரெட்டிபாளையத்தில் ரேஷன் கடை இடமாற்றத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வி.கைகாட்டி:

    அரியலூர் அருகே உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் தமிழக அரசின் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையில் ரெட்டிபாளையம் கிராமத்திற்கு அருகில் உள்ள சந்திரபாளையம் மயிலாண்டக்கோட்டை உள்ளிட்ட 4 கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் ரேஷன் கடை இயங்கி வந்த கட்டிடம் பழுதடைந்ததை அடுத்து இக்கடையை அருகில் உள்ள மயிலாண்டக்கோட்டை கிராமத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ரெட்டிபாளையம் கிராம மக்கள் எங்கள் கிராமத்தில் இயங்கிவந்த ரேஷன் கடையை மாற்ற கூடாது என வலியுறுத்தி அப்பகுதியில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரேஷன் கடையை வேறு கிராமத்தில் மாற்றக்கூடாது எனவும், மாற்று இடத்தில் ரேஷன் கடை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் அருகில் உள்ள சந்திரபாளையம், நாயக்கர்பாளையம் ஆகிய கிராமங்களுக்கு மத்தியில் உள்ளதால் இதனை மாற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது என கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீசார் மற்றும் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், ரேஷன் கடையை மாற்ற மட்டுமே நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வேறு கட்டிடம் கிடைத்தால் பக்கத்திலேயே ரேஷன் கடை இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சிதம்பரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
    அரியலூரில் தமிழ்மாநில காங்கிரஸ் 5-ம் ஆண்டுதுவக்க விழா பொதுக்கூட்டத்தில் ஜி.கே.வாசன் கலந்து கொள்கிறார். #gkvasan
    அரியலூர்:

    அரியலூர் - திருச்சி புற வழிச்சாலையில் (வாணிமகால் எதிரே) தமிழ் மாநில காங்கிரஸ் 5ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது. 

    அந்த கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆர்.மூப்பனார், சுரேஷ் மூப்பனார், மாநிலதுணை தலைவர் ஞானதேசிகன், மாநில பொது செயலாளர் கோவைதங்கம், விடியல் சேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, முன்னாள் எம்.பி கிருஷ்ணமூர்த்தி, சித்தர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெங்க ராஜன், மாசிலாமணி, நல்ல முத்து, அரியலூர் மாவட்ட தலைவர் எஸ்ஆர்எம்குமார், மற்றும் முன்னாள், இன்னாள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து மாவட்ட  தலைவர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.   

    பொது கூட்டத்தின் ஏற்பாடுகளை விழா குழுவினர் தமிழ் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர். #gkvasan
    அரியலூர் மாவட்டத்தில் 4,613 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
    அரியலூர்:

    தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

    விழாவிற்கு ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் உடையார்பாளையம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மகிமைபுரம் சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 2,356 மாணவ, மாணவிகளுக்கும், அரியலூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 2,257 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 4,613 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

    விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, திருச்சி ஆவின் துணைத்தலைவர் தங்க.பிச்சைமுத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் மணிவண்ணன் (பொறுப்பு) (உடையார்பாளையம்), செல்வராசு (அரியலூர்), வெற்றிச்செல்வி (செந்துறை), பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் சங்கர், முத்தையன், தலைமையாசிரியர்கள் சாமிதுரை, அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    புற்று நோய் பாதிப்பால் விரக்தி அடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரியலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அரியலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 60), விவசாயி. இவரது மனைவி மருதாம்பாள். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். லட்சுமணனுக்கு கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு கால் பகுதியில் கேன்சர் நோய் வந்தது. இதற்காக அவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். ஆனால் குணமாகவில்லை. 2 கால்களிலும் வலி அதிகமானது. 

    இதனால் சிகிச்சைக்காக லட்சுமணன் கடந்த 18-ந் தேதி அரியலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்தார். ஆனால் நோயின் தாக்கம் அதிகமாகி காலில் புண் ஏற்பட்டது. இதனால் அவர் மனவேதனை அடைந்தார். இந்த நிலையில்  நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் லட்சுமணன் சிறுநீர் கழிப்பதற்காக அங்கு உள்ள கழிவறைக்கு சென்றார். பின்னர் தனது காலில் கட்டப்பட்டு இருந்த துணியை அவிழ்த்து அதன் மூலம் ஜன்னலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தனக்கு ஏற்பட்டிருந்த புற்று நோயை இனிமேல் சிகிச்சையால் காப்பாற்ற முடியாத என்ற விரக்தியில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

    அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×