என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் நகர் பகுதியில் உள்ள பள்ளிகளில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது
    தாமரைக்குளம்:

    அரியலூர் நகர் பகுதியில் உள்ள பள்ளிகளில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. நிர்மலாகாந்தி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டு பேசுகையில், பிளாஸ்டிக் பொருட்களானது எளிதில் மக்காத தன்மை கொண்டவை. சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி, மனிதனையும், மண்வளத்தையும் அதிகளவில் மாசுபடுத்தக்கூடியவை.

    பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தில் தேங்குவதனால் மழைநீர் நிலத்தடிக்குள் செல்வது தடைபட்டு நிலத்தடி நீர்மட்டம் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. அதே வேளையில் சுற்றுப்புறத்தில் குப்பையாக கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கும் மழைநீர், டெங்கு, மலேரியா போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களின் உற்பத்திக்கு காரணமாக அமைகின்றது. பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் நுரையீரல் பிரச்சினை, சுவாசகோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன என எடுத்துரைத்தனர்.

    தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய துணை மேலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    திருமானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயத்தை அழிக்கும் காட்டுபன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், விழுப்பணங்குறிச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளை துணைச் செயலாளர் முருகேசன், கலிய மூர்த்தி, பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    கூட்டத்தில் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் கட்சியினருக்கு, கட்சி உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கி கட்சியின் மாவட்ட முடிவுகளை விளக்கியும் கட்சியின் செயல்பாடுகள், வளர்ச்சி குறித்து பேசினார். 

    மேலும் கூட்டத்தில்  கட்சியின் வளர்ச்சி நிதியை வரும் 25-ந் தேதிக்குள் வசூல் செய்து மாவட்ட கமிட்டியிடம்  கொடுப்பது, விழுப்பணங்குறிச்சியில் இருந்து பாட்சா நகர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தார் சாலையாக மாற்றி அமைக்க வேண்டும், விவசாயத்தை அளிக்கும் காட்டுபன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், புள்ளம்பாடி வாய்க்காலில்  பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சியினர் கலந்து கொண்டனர்.
    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு ‘ஸ்மார்ட்’ போன் வழங்கும் நிகழ்ச்சி அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
    அரியலூர்:

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு ‘ஸ்மார்ட்’ போன் வழங்கும் நிகழ்ச்சி அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி 774 அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு ‘ஸ்மார்ட்‘ போனை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், 

    அங்கன்வாடி மையங்கள் மூலம் பயனாளிகளுக்கு அளிக்கப்படும் சேவையை சிறப்பாக செய்வதற்கும், அங்கன்வாடி பணியார்களிடம் இருந்து துல்லியமாக அறிக்கைகளை பெறவும், திட்ட சேவைகளை உரிய நேரத்தில் உரிய பயனாளிகளுக்கு கிடைக்கச்செய்வதற்கும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ‘ஸ்மார்ட்‘ போன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ‘ஸ்மார்ட்’ போனில் சி.ஏ.எஸ். என்கிற செயலி உள்ளது. அதன் மூலமாக அங்கன்வாடி பணியாளர்கள் குடும்ப நிர்வாகம், தினசரி உணவளித்தல், வீடுகள் பார்வைத் திட்டமிடல், வளர்ச்சி கண்காணிப்பு, வீட்டிற்கு கொண்டு செல்லப்படும் இணை உணவு, தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய விவரம், அங்கன்வாடி மைய மேலாண்மை, மாதாந்திர முன்னேற்ற அறிக்கை போன்ற அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும் என்றார்.

    இதில் திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம்) (பொறுப்பு) புவனேஸ்வரி, உதவித்திட்ட அலுவலர் அன்பரசி, போஜன்அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன், மாவட்ட திட்ட உதவியாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். 
    அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
    தாமரைக்குளம்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். இந்த நிலையில் அரியலூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கண்ணன் மனைவி கல்யாணி. இவர் தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவரது வீட்டிற்கு அருகில் உள்ள காசிநாதன் மற்றும் அவரது மனைவி அமுதவள்ளி ஆகியோர் தனக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, அபகரிக்க பார்ப்பதாகவும், வீட்டை சேதப்படுத்தியதாகவும் அரியலூர் போலீஸ் நிலையத்தில் பலமுறை கல்யாணி புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தான் கொண்டு வந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.



    அப்போது அருகில் இருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று கூறி அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் அலுவலக நுழைவு வாயிலில் போலீசார், பொதுமக்கள் கொண்டு வரும் பை உள்ளிட்டவற்றை முழுமையாக சோதனை செய்த பின்னரே கலெக்டர் அலுவலக வளாகத்தின் உள்ளே அனுப்புகின்றனர். எனினும் இது போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சுற்றியுள்ள மேலூர், செங்குந்தபுரம், தேவனூர் உள்ளிட்ட 13 கிராமங்களில் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்கு 1992-ம் ஆண்டு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது அரசு வழங்கிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், அதற்காக அமைக்கப்பட்ட 2 சிறப்பு நீதிமன்றங்கள் ஏக்கருக்கு ரூ.13லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வழங்கலாம் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தொடர்ந்து தமிழக அரசு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு தற்போதைய வழிகாட்டு மதிப்பை விட 2 மடங்கு உயத்தி வழங்குவது குறித்து, நிலம் கொடுத்த மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

    இந்நிலையில் ஒரே திட்டத்துக்காக நிலங்கள் கொடுத்தவர்களுக்கு, வழிகாட்டு மதிப்பை கொண்டு இழப்பீடு வழங்கப்படும் போது, கிராமத்துக்கு கிராமம் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. எனவே நிலம் கொடுத்த அனைவருக்கும் அப்போது அரசு கொடுத்த இழப்பீட்டு தொகையை விட 25 சதவீதம் உயர்த்தி தர வேண்டும் என பாதிக்கப்பட்ட 13 கிராமங்களை சேர்ந்த மக்கள், மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர்.

    இதேபோல் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 340 மனுக்களை பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெற்றார். தொடர்ந்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 2 பேருக்கு ரூ.10 ஆயிரத்து 550 மதிப்பில் இலவச தையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், துணை கலெக்டர் பூங்கோதை உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடைபெற்றது. #marxistcommunist
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாராஜன் தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஆனந்தன், மாவட்ட செயலாளர் மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 

    கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது. மத்திய, மாநில அரசுகளுடன் அல்லாது தோழமை கட்சிகளை ஆதரிப்பது. கட்சியில் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். வருகிற 2019 ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் கட்சி வளர்ச்சிக்காக நிதி வசூல் செய்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

    இந்த கூட்டத்தில் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், தா.பழூர் உள்ளிட்ட ஒன்றியத்தை சேர்ந்த மாவட்டக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், முன்னணி கட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆண்டிமடம் வட்ட செயலாளர் பரமசிவம் வரவேற்றார். முடிவில் தா.பழூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். #marxistcommunist
    செந்துறை அருகே நர்சிங் மாணவி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செந்துறை, 

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நல்லாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சகாதேவன். இவரது மகள் மாலதி(வயது 19). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த மாலதி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். 

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாலதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது தொடர்பாக இரும்புலிகுறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாலதி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் கீழவண்ணம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு அதன் மூலம் கீழவண்ணம் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனே குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறி நேற்று கீழப்பழுவூர்- ஏலாக் குறிச்சி சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கடந்த 3 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் தொலை தூரம் சென்று விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் பிடித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெளியில் வேலைக்காக செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பெரிதும் அவதிப்பட்டு வருகிறோம். இது குறித்து விரைவில் நட வடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பல்வேறு போராட்டங்கள் நடத்துவோம் என்று கூறினர். 

    இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துரைத்து விரைவில் கீழவண்ணம் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கீழப்பழுவூர்- ஏலாக் குறிச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    அரியலூர் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    அரியலூர்:

    அரியலூர் மற்றும் தேளுர் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை 15-ந் தேதி (சனிகிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த துணை மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் அரியலூர் ஒருசில பகுதி, கயர்லாபாத், வாலாஜா நகரம், கல்லங் குறிச்சி, காட்டுப்பிரிங் கியம், பெரியநாகலூர், வாரண வாசி, அஸ்தினாபுரம், கொளப்பாடி, ராஜீவ்நகர் மற்றும் மணக்குடி, குறிச்சி நத்தம், புதுப்பாளையம், சிறுவளுர், ஜெமீன் ஆத்தூர், ரசுலாபாத், பாளம் பாடி, பார்ப்பனச் சேரி, தவுத்தாய் குளம், மல்லூர், கடுகூர், கோப்பிலியன் குடிக்காடு, தாமரைக் குளம்,

    பொய் யாதநல்லூர், கோவிந்த புரம், ஓ.கூத்தூர், ஒட்டக் கோவில், சீனிவாச புரம், கிருஷ்ணாபுரம், ரெங்க சமுத்திரம், மண்ணுழி, வி.கை காட்டி, ரெட்டிபாளையம், விளாங்குடி, தேளுர்,நாக மங்கலம், நெரிஞ்சிக் கோரை, வெளிப்பிரிங்கியம், நாயக் கர்பாளையம், பெரியதிருக் கோணம், செட்டித் திருக்கோணம், விக்கிரமங்கலம், முனியங்குறிச்சி, நாச்சியார் பேட்டை, ஆச்சனூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (இயக்குதலும், காத்தலும்) சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
    அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு தே.மு.தி.க பொறுப்பாளர்கள் நியமக்கப்பட்டுள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்திலுள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த் உத்திரவின் பேரில் மாவட்ட பொருளாளர் கவியரசன் அரியலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும், மாவட்ட துணை செயலாளர் தெய்வசிகாமணி ஜெயங்கொண்டம் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளராகவும் நியமக்கப்பட்டுள்ளனர். 

    இத் தகவலை தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ராமஜெயவேல் தெரிவித்துள்ளார். #dmdk
    மூதாட்டியிடம் தங்க சங்கிலி திருடிய வழக்கில் 4 பெண்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜெயங்கொண்டம் கோர்ட்டு நீதிபதி தீர்ப்பளித்தார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஆண்டிமடம் விளந்தை சாவடி தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி(வயது 70). இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி காலை 9 மணியளவில் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனது மகள் வீட்டில் பேரக்குழந்தைகளை பார்ப்பதற்காக ஆண்டிமடம் நான்கு ரோட்டில் டவுன் பஸ் ஒன்றில் ஏறிவந்தார். சிறிது தூரம் வந்தபின் டிக்கெட் எடுப்பதற்காக பையை திறக்க குனிந்தபோது அவரது கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்க சங்கிலி திருட்டு போயிருந்தது தெரியவந்தது. 

    உடனடியாக கண்டக்டரிடம் கூறினார். கண்டக்டர் இடையில் நிறுத்தாமல் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் உள்ள போக்குவரத்து போலீசாரிடம் தெரிவித்தார். அப்போது பஸ்சில் ஜெயலட்சுமியிடம் சந்தேகத்திற்கிடமாக இடித்து சென்ற 4 பெண்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். உடனடியாக ஒரு ஆட்டோவில் அந்த 4 பெண்களையும் ஏற்றி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில், அவர்கள் ஏர்வாடியை சேர்ந்த ரவி மனைவி சுப்பு(37), ராஜா மனைவிகள் ராணி(25), ரம்யா(36), சுரேஷ் மனைவி இசக்கியம்மாள்(26) ஆகியோர் என்பதும், மேலும் அவர்கள் ஜெயலட்சுமியிடம் நகையை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் தினேஷ்குமார், அறிவழகன் ஆகியோர் அவர்கள் 4 பேரையும் கைது செய்து ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 

    இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மதிவாணன் நகையை திருடிய 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
    கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிடை நீக்கம் தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த 49 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தாமரைக்குளம்:

    அரியலூர் மாவட்டம் கருப்பூர் சேனாபதி கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் ராயர். இவர் விடுமுறை தொடர்பாக அரியலூர் தாசில்தார் அலுவலகத்தில் துணை தாசில்தார் குருமூர்த்தியிடம் கடந்த 7-ந் தேதி கேட்டபோது பேச்சுவார்த்தை முற்றியது. அப்போது அருகில் இருந்த வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் தட்டிக்கேட்டபோது கைகலப்பாக மாறியது.

    இந்நிலையில் ராயர் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் பிரபாகரன் (வெங்கனூர்), சுபாஷ்சந்திரபோஸ் (குலமாணிக்கம்) ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து அரியலூர் கோட்டாட்சியர் சத்தியநாராயணன் உத்தரவிட்டார்.

    நடந்த சம்பவம் என்ன என்பது குறித்து உரிய விசாரணை செய்யாமல் 3 கிராம நிர்வாக அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரியும் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு கொடுக்க தமிழ்நாடு கிராம நிர்வாக அதிகாரிகள் முன்னேற்றசங்கத்தை சேர்ந்த 10 பெண்கள் உள்பட 49 பேர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை உள்ளே செல்ல விடாமல் மறித்தனர். அனுமதி மறுத்ததால் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கலைந்து செல்ல கூறியபோது கலைந்து செல்ல மறுத்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இதனால் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    அரியலூரில் துணை தாசில்தாரை தாக்கிய 3 வி.ஏ.ஓ.க்களை ‘சஸ்பெண்டு’ செய்து வருவாய் அதிகாரி சத்யநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் சேனாதிபதி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் ராயர். இவர் விடுமுறை தொடர்பாக அரியலூர் வருவாய் ஆய்வாளர் கார்த்திக்கேயன் மற்றும் அரியலூர் தலைமையிடத்து துணை தாசில்தார் குருமூர்த்தி ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே அது கைகலப்பாக மாறியது.

    இதில் ராயருக்கு ஆதரவாக வெங்கனூர் கிராம நிர்வாக அதிகாரி பிரபாகரன் மற்றும் குலமாணிக்கம் கிராம நிர்வாக அதிகாரி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் செயல்பட்டனர்.

    தகராறில் 3 பேரும் சேர்ந்து கார்த்திகேயன் மற்றும் குருமூர்த்தியை தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த கார்த்திகேயன் அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று வருகிறார்.

    இந்தநிலையில் துணை தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரை தாக்கியதாக கிராம நிர்வாக அலுவலர்கள் ராயர், பிரபாகரன், சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய 3 பேரையும் மாவட்ட வருவாய் அதிகாரி சத்யநாராயணன் ‘சஸ்பெண்டு’ செய்து உத்தரவிட்டுள்ளார்.



    ×