என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் சுரேந்திரன் (வயது 20). இவர், ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், கடந்த 31-ந் தேதி நள்ளிரவு ஆங்கில புத்தாண்டை கொண்டாட வீட்டின் முன்பு உள்ள சாலையில் தனது பெயரை எழுதிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று சுரேந்திரன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த சுரேந்திரனை, அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேந்திரன், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் 6-வது கட்டமாக அரியலூர் மற்றும் உடையார்பாளையம் வட்டங்களில், வட்டத்திற்கு இரண்டு கிராமத்திலும் மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஒரு கிராமத்திலும் அம்மா திட்ட முகாம் நாளை 4-ந் தேதி அன்று வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
அரியலூர் வட்டத்தில் ஏலாக்குறிச்சி, சன்னாவூர் (தெ) ஆகிய கிராமங்களிலும், உடையார்பாளையம் வட்டத்தில் சூரியமணல், வாழைக்குறிச்சி ஆகியகிராமங்களிலும், ஆண்டி மடம் வட்டத்தில் அய்யூர் கிராமத்திலும் நடைபெறுகிறது.
இம்முகாமில் வருவாய்த்துறையின் சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதிசான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். இத்தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். #tamilnews
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 55). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தற்போது திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் செக்யூரிட்டி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பானு. இவர்களது மகன் தமிழரசன்.
இந்த நிலையில் நேற்று நடராஜன் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். பானுவும், தமிழரசனும் வீட்டை பூட்டிவிட்டு தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். மாலையில் தமிழரசன் மட்டும் வீடு திரும்பினார். வீட்டை திறந்து உள்ளே சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. அறைக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் தங்க நகை, 300 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாயும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
நகை கொள்ளை போனது பற்றி தமிழரசன் செல்போனில் தனது தாய் பானுவுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
முதல் கட்ட விசாரணையில் புத்தாண்டு அன்று வீடு பூட்டி கிடப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க வழியாக வந்து பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து இந்த கொள்ளை ஈடுபட்டது தெரிய வந்தது. பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.எஸ்.மாத்தூர்:
தமிழக பாரம்பரிய வீர விளையாட்டுக்களில் ஜல்லிக்கட்டு தனித்துவம் பெற்று விளங்குகிறது. காளைகளுக்கு நன்றி தெரிவிக்கவும், அவற்றிற்கு பெருமை சேர்க்கவும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது தொடங்கும் ஜல்லிக்கட்டு போட்டி தென் மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு மேல் நடைபெறும். இதில் வீரர்களுக்கு அடங்காத காளைகளுக்கு பலவித பரிசுகள் வழங்கப்படும்.
இந்தநிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டு தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அரியலூர் மாவட்டம் மலத்தான்குளத்தில் இன்று தொடங்கியது. இதில் அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அலங்கரித்து கொண்டு வரப்பட்ட 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
போட்டி தொடங்கியதும் வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர். இதில் சீறி பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற போது 10 பேர் காளைகள் முட்டியதில் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், கட்டில், பண பரிசுகள், தங்கம் மற்றும் வெள்ளிக்காசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் கோவிந்தசாமி (வயது 29). இவர் கடந்த 24-ந்தேதி இரவு ஜெயங்கொண்டம் விருத்தாச்சலம் சாலையில், ராங்கியம் கிராமப்பகுதியில் தலையில் காயத்துடன் சாலையில் கிடந்தார்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தசாமியை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்தநிலையில் கடந்த 25-ந்தேதி சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி இறந்தார்.
இந்தநிலையில் கோவிந்த சாமியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதே பகுதியை சேர்ந்த வேணு கோபால் மகன் வேல்முருகன் (26) மற்றும் சிலர் கோவிந்த சாமியை கொலை செய்ததாகவும் அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஆண்டிமடம் போலீசார் வேல்முருகனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கோவிந்தசாமியை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
கோவிந்தசாமியும், வேல் முருகனும் நண்பர்கள். சம்பவத்தன்று மது வாங்கி தருமாறு கோவிந்தசாமி, வேல் முருகனிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் வாங்கி கொடுக்க மறுத்து விட்டார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வேல் முருகன் இரும்பு கம்பியால் கோவிந்தசாமியின் தலையில் தாக்கியுள்ளார்.
இதில் அவர் காயம் அடைந்து மயக்கம் அடைந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரிடம், வேல்முருகன், கோவிந்தசாமியின் முகவரியை கூறியதோடு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவரது குடும்பத்திற்கும் தகவல் தெரிவித்து விட்டு தலைமறைவாகி விட்டார்.
இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி இறந்துள்ளார். போலீசார் விசாரணையில் வேல்முருகன் சிக்கிக் கொண்டார். அவரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பனை கொன்று வாலிபர் நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






