என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூரில் நாளை மறுநாள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் மொழிப்போர் தியாகிகள் தின வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் தினகரன் பங்கேற்கிறார்.
    அரியலூர்:

    அரியலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாநில அமைப்பு செயலாளர் திருச்சி மனோகர், பாளை அமரமூர்த்தி, மாவட்ட செயலாளர் துரை.மணிவேல் (அரியலூர்), பாலமுருகன் (கடலூர்), வக்கீல் குலோத்துங்கன், மாவட்ட தலைவர் ஜெயராமன், மாணவரணி செயலாளர் கதிர் ஜெகதீசன், ஜீவானந்தம், துரை.செல்வம், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் மருதை, நகர செயலாளர் தமிழரசன், வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் கமலகண்ணன், பொறியாளர் புகழேந்தி உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    மாநில பொருளாளர் ரெங்கசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். நாளை மறுநாள் 25-ந்தேதி அரியலூர் திருச்சி பைபாஸ் சாலையில் வாணி மகால் எதிரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் தின வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. மொழிப்போர் தியாகி கீழப்பழுர் சின்னசாமி வாழ்ந்த மண் அரியலூர் என்பதால் இந்த கூட்டம் அரியலூரில் நடத்தப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் துணை பொது செயலாளர் டிடிவி. தினகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். கூட்டத்தை மிகச்சிறப்பாக நடத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் சுவர் விளம்பரங்கள், விளம்பர தட்டிகள், அதிக அளவு விளம்பரம் செய்ய வேண்டும். இதுவரை எங்குமே நடைபெறாத அளவிற்கு மிகச்சிறப்பான முறையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த கூட்டம் வீர வணக்கநாள் பொதுக்கூட்டம். ஆரவார மில்லாமல் அமைதியான முறையில் நடத்திட வேண்டும். எதிர்காலத்தில் வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்தான் வெற்றி பெறும். இந்த கூட்டமானது அடித்தளம், வெற்றி படிகட்டுகளாக இருக்க வேண்டும். அனைவரும் சொந்த விழாவாக கருதி முழு மூச்சுடன் செயல்பட வேண்டும் என்றார்.
    ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, கீழக்கொளத்தூர் கிராம மக்கள் கருப்பு கொடி ஏந்தி, காளையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் கீழகொளத்தூர் கிராமத்தில் உள்ள நடுத்தெருவில் தைப்பூசத்தையொட்டி ஜல்லிக்கட்டு நடத்தப்படும். அதன்படி ஜல்லிக்கட்டு நடத்த அப்பகுதி மக்கள் முன்னேற்பாடுகளை செய்து வந்தனர். இந்த ஏற்பாடுகளை ஆய்வு செய்ய நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகத்தில் இருந்து அரசு அதிகாரிகள் வந்தனர். அப்போது, கிராமத்தின் மத்தியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் ஜல்லிக்கட்டு திடல் அமைத்ததால், பல்வேறு இடையூறுகள் ஏற்படும் என்று கூறி, ஜல்லிக்கட்டை நடத்த அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.

    ஊருக்கு ஒதுக்குப்புறமாகவும், இட வசதிகள் அதிகமாக உள்ள இடத்தில் மைதானம் அமைத்தால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. ஆனால் காலம், காலமாக நடுத்தெருவில் தான் ஜல்லிக்கட்டு நடத்தி வருகிறோம் என்று கிராம மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும், அவர்கள் அனுமதி மறுத்துவிட்டனர்.

    இதையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த அரசு அதிகாரிகள் அனுமதி மறுத்ததை கண்டித்து நேற்று கிராமம் முழுவதும் உள்ள வீடுகள், தெருக்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றில் கிராம மக்கள் கருப்பு கொடிகளை கட்டி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் கிராம மக்கள் ஏராளமானவர்கள் ஒன்று திரண்டு கைகளில் கருப்பு கொடிகளை ஏந்தியவாறு, ஜல்லிக்கட்டு காளையுடன் பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராமத்தின் நடுவே உள்ள நடுத்தெருவில் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி தரும் வரை இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும், கிராம மக்கள் தெரிவித்தனர்.  #tamilnews
    செந்துறை அருகே ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆர்.எஸ். மாத்தூர் 108 ஆம்புலன்ஸ்க்கு உஞ்சினி கிராமத்தில் இருந்து அவசர அழைப்பு வந்தது. அதனைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆம்புலன்சுடன் உஞ்சினிக்கு சென்றனர். அங்கே சென்ற ஊழியர்கள் அவசர அழைப்பு விடுத்தவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொண்டிருந்தபோது அங்கு வந்த சிலர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். 

    இதில் ஓட்டுநர் சரவணன் காயமடைந்தார். இது குறித்து சரவணன் இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கியது உஞ்சினி கிழக்கு தெருவை சேர்ந்த முத்து மகன் சுரேஷ் அண்ணாதுரை மகன்கள் விஜய் மற்றும் அருண் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து சுரேஷ் மற்றும் விஜயை கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 

    தலைமறைவாக உள்ள அருணை இரும்புலிக்குறிச்சி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கடும் பனிப் பொழிவால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    அரியலூர்:

    அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் டிசம்பர் மாதத்தில் கடும் பனிப் பொழிவு இருக்கும். ஆனால் கடந்த மாதம் பனிப்பொழிவு குறைவாக இருந்தது. இந்தநிலையில் கடந்த 10 நாட்களாக அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பனிப்பொழிவின் தாக்கம் அதிக மாகவே உள்ளது. இந்த பகுதி களில் மாலை 6 மணிக்கு மேல் தொடங்கி மறுநாள் காலை 8 மணி வரை கடும் குளிர் நிலவுகிறது. காலை நேரத்தில் உள்ள கடும் குளிரால் ஏதோ ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் இருப்பதுபோல் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் உணருகின்றனர். இதனால் காலை நேரத்தில் வெளியே செல்லாமல் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.     

    மேலும் பொதுமக்கள் காலையில் தாமதமாக எழுந்திருக்கும் நிலையும் காணப் படுகிறது. அதே வேளையில் பகல் நேரத்தில் வெயில் நன்கு அடிக்கிறது. இருவேறு கால நிலைகளால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதற்கிடையே வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் தற்போது வழக்கத்துக்கு மாறாக இதுவரை இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு உள்ளது. இதனால் நேற்று காலை நேரத்தில் வாகனங்களில் செல்வோர் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் அவர்கள் வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி பயணிக்கிறார்கள். எல்லோரும் குளிரைத் தடுக்கும் கம்பளி ஆடைகளை அணிந்தபடி செல்ல வேண்டி இருக்கிறது. அதிகாலையில் நடைபயிற்சி செல்பவர்கள், இந்த கடும் குளிருக்கு பயந்து காலை 8 மணிக்கு மேல் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். தேசிய, மாநில நெடுஞ்சாலையில் வாகனங்களும், கனரக வாகனங்களும் பனிப்பொழிவுக்கு பயந்து மெதுவாக பயணிக்கும் சூழல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். #tamilnews
    வாகனங்களை ஓட்டி வரும் டிரைவர்களின் சோர்வை குறைக்கும் வகையில் தேநீர் வழங்கி புத்துணர்ச்சி ஏற்படுத்தி பின்னர் வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டு விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆணைக்கிணங்க ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி ஆலோசனையின் பேரில், போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தா.பழூர் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில் தா.பழூர் கடைவீதியில் நள்ளிரவுக்கு மேல் வரும் அனைத்து கனரக, இலகுரக மற்றும் இரு சக்கர வாகனங்களை ஓட்டி வரும் டிரைவர்களின் சோர்வை குறைக்கும் வகையில், அவர்களை முகத்தினை கழுவ செய்து தேநீர் வழங்கி புத்துணர்ச்சி ஏற்படுத்தி பின்னர் வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டு விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகப்படியான வாகனங்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல வேண்டியிருப்பதாலும், மீண்டும் ஊரிலிருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர் செல்ல இருப்பதாலும் அதன் ஓட்டுனர்களுக்கு சோர்வை நீக்கும் வகையில் நள்ளிரவுக்கு மேல் வரும் வாகனங்களை நிறுத்தி அவர்களின் முகங்களை கழுவ செய்து தேநீர் வழங்கி புத்துணர்ச்சி ஏற்படுத்தி விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தினேஷ்குமார், ராமதாஸ் உள்பட போலீசார் கலந்துகொண்டு விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள டிரைவர்களிடம் அறிவுரை வழங்கினர்.

    போலீசாரின் இத்தகைய செயலைக்கண்டு டிரைவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வியந்தனர். மேலும் இதேபோல் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, உடையார்பாளையம் உள்ளிட்ட ஜெயங்கொண்டம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
    செந்துறை அருகே மரத்தில் பைக் மோதி என்ஜினீயர் பலியானதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    செந்துறை:

    திண்டுக்கல் அருகே உள்ள செந்துறை கக்கன் காலனியை சேர்ந்தவர் முத்து பழனி. அவரது மகன் மணிகண்டன். (வயது 22). சென்னையில் என்ஜினீயராக உள்ளார்.

    இவர் தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி ஊருக்கு வந்து உள்ளார். இவரது பாட்டி வீடு மோர்பட்டியில் உள்ளது. எனவே பாட்டியின் நினைவு நாளை கடைபிடிப்பதற்காக மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் மோர்பட்டிக்கு சென்றார்.

    பின்னர் இரவு நேரத்தில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். செந்துறை அருகே அய்யனார் அருவி சாலையில் வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் புளியமரத்தில் மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை இரவு நேரத்தில் யாரும் பார்க்கவில்லை. எனவே பரிதாபமாக மணிகண்டன் இறந்தார்.

    இரவு முழுவதும் மணிகண்டன வீடு திரும்பவில்லை என்று அறிந்த உறவினர்கள் அவரை தேடினர். அப்போது அவர் சாலை ஓரத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் விசாரிக்கிறார்கள்.


    ஜெயங்கொண்டத்தில் நகராட்சி அதிகாரி இழிவாக பேசியதாக கூறி பெண் எழுத்தர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் வரி வசூலிப்பவர், பதிவறை எழுத்தர், இளநிலை உதவியாளர், புள்ளி விவர கணக்காளர் உள்ளிட்ட ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். இந்த அலுவலகத்தின் மேலாளர் கடந்த சில நாட்களாக பெண் ஊழியர்களை இழிவாக பேசியும், அதிக அளவில் பணிச்சுமை கொடுத்தும் மன உளைச்சல் ஏற்படுத்துவதாக ஊழியர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் அலுவலக பதிவறை எழுத்தராக பணிபுரியும் லட்சுமி (வயது 41) நேற்று காலை வரி வசூலுக்கு சென்றுவிட்டு மீண்டும் அலுவலக பணியை மேற்கொண்டுள்ளார். அப்போது திடீரென பணி செய்யவில்லை என கூறி அவருக்கு “மெமோ” கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் விரக்தியடைந்த லட்சுமி திடீரென நான் இதே அலுவலகத்தில் தற்கொலை செய்துகொள்கிறேன் எனக்கூறி நகராட்சி அலுவலக மாடியில் உள்ள அறைக்கு சென்று கதவை வேகமாக பூட்டினார். பின்னர் மின்விசிறியில் தனது சேலையை மாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதனை பார்த்த சக ஊழியர்கள் அவரை மீட்டு ஆறுதல் கூறினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலக சங்கத்தினர் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு அதிகாரியை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது உங்களது பிரச்சனை குறித்து மனுவாக எழுதி கொடுங்கள், நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    சம்பள உயர்வு வழங்காததை கண்டித்து அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தாமரைக்குளம்:

    அரியலூரில் அரசுக்கு சொந்தமான சிமெண்ட் ஆலையில் 734 நேரடிபணியாளர்கள் மற்றும் 750 க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவிலான பணியாளர்கள் பணி ஓய்வு பெற்ற நிலையில் சுமார் 400 க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கும் மேலாக சம்பளம் உயர்த்தபடாமல் அதே ஊதியம் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் மத்திய அரசு தினக்கூலி தொழிலாளர்களுக்கான அடிப்படை ஊதியத்தினை நிர்ணயித்து அதனையே வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஊதியத்தினை அரியலூர் அரசு சிமெண்ட் தினக்கூலிதொழிலாளர்கள் நிர்வாகத்தினரிடம் கடந்த சிலஆண்டுகளாக கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஆலை நிர்வாகம் தரப்பில் பழைய ஊதியமே வழங்கப்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த சுமார் 400க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் ஆலையின் நுழைவு வாயிலில் நின்று கொண்டு பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அறிந்ததும் ஆலை நிர்வாகத்தினர் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தொழிலாளர்கள் மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஊதியம் வழங்குவதாக உத்திராவதம் அளித்தால் தான் மீண்டும் பணிக்கு திரும்புவோம் என தெரிவித்து தொடர்ந்து பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் அரியலூர் அரசு சிமெண்ட் ஆலையின் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஜெயங்கொண்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 45 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    தனியார் கம்பெனிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு விரோதமாகவும் செயல்படும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், நூறு நாள் வேலை, வீட்டுமனை பட்டா வழங்க கோரியும், ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டத்தை உடனே தொடங்க வலியுறுத்தியும், இல்லையென்றால் அதற்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களை உரியவர்களுக்கு திருப்பி வழங்க வேண்டும், விவசாயிகளின் வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் ஜெயங்கொண்டத்தில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி, நேற்று அந்த சங்கங்களை சேர்ந்தவர்கள் ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, நான்கு ரோடு சந்திப்பு வந்து, பின்னர் தபால் நிலையம் அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மகாராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் உத்திராபதி, ஒன்றிய செயலாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மணிவேல் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.  #tamilnews
    வயல்களில் மின் வேலிகளை அமைப்பது கூடாது எனவும் அது தண்டனைக்குரிய குற்றம் எனவும் மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    தமிழக மின்சார வாரியத்தின் அரியலூர் மின்வாரிய செயற்பொறியாளர் செல்வராசு வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின் விபத்துக்களை தடுக்கும் வகையில், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மின்பாதையில் உள்ள மின்சார கம்பிகள் அறுந்து கிடந்தால், அதனருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம். மின் கம்பங்கள் பழுதடைந்திருந்தாலோ, கம்பங்கள் சாய்ந்த நிலையிலோ, மின்கம்பிகள் தொய்வாக இருப்பதை கண்டறிந்தாலோ பொதுமக்கள் அதனை தொடாமல் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

    மின்தடையை சரி செய்யும் பொருட்டு மின்கம்பத்திலோ, மின்மாற்றியிலோ ஏறி மின் வாரியத்தில் இல்லாத நபர்கள் பணி செய்யக்கூடாது. மின்தடை ஏற்பட்டால் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்து வாரிய பணியாளர் மூலம் மட்டுமே மின்தடையை சரி செய்ய வேண்டும். மின்பாதைக்கு அருகில் கட்டிடம் கட்டும்போது போதிய இடைவெளி விட்டு பணி மேற்கொள்ள வேண்டும். கால்நடைகளை மின்கம்பத்திலோ அல்லது அதன் இழுவை கம்பியிலோ கட்டக் கூடாது. உயரமான வாகனங்கள், டிப்பர் லாரிகளை மின்கம்பிகளுக்கு கீழே இயக்குவதை தவிர்க்க வேண்டும். வயல்களில் மின் வேலிகளை அமைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #tamilnews
    ஜெயங்கொண்டம் அருகே சாக்லேட் வாங்கி தருவதாக கூறி 6 வகுப்பு மாணவியை கடத்திய மர்ம நபர்கள் போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் சாலையோரம் விட்டு சென்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இடையார் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், கறிகோழி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி செல்வகுமாரி ஜெயங்கொண்டம் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இவர்களது மகள் ராகவி (வயது 12), துழாரங்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த ராகவி இரவு 7 மணி அளவில் தெருவில் தனது தம்பி மற்றும் தோழியுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் ராகவியுடன் பேச்சுக்கொடுத்தனர். பின்னர் அவரிடம் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அருகிலுள்ள கடைக்கு அழைத்து சென்றனர். மிகவும் அக்கறையுடன் பேசியதால் அவர்களை நம்பி ராகவியும் மோட்டார் சைக்களில் ஏறினார்.

    மோட்டார் சைக்கிளில் வந்த மற்ற இரண்டு நபர்களும் வாகனத்தை பின் தொடர்ந்து நடந்து சென்றனர். அப்பகுதியில் இருந்த கடையை தாண்டி நிற்காமல் சென்றதால் ராகவி அதிர்ச்சி அடைந்தார்.

    இதைப்பார்த்த ராகவியின் தம்பியும், தோழியும் கூச்சல் போட்டனர். பின்னர் பெற்றோரிடம் சென்று கூறினர். உடனடியாக ராகவியின் தந்தை ரவிச்சந்திரன் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட சிலர் மோட்டார் சைக்கிளில் துரத்தினர். மக்கள் துரத்துவதை பார்த்து மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளின் வேகத்தை அதிகரித்து மறைந்து விட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் உடையார்பாளையம் போலீசார் அருகில் உள்ள தா.பழூர், வி.கைகாட்டி காவல் நிலையங்களுக்கு தகவல் அளித்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    சிறிது நேரத்தில் மணகெதி கிராம பேருந்து நிறுத்தத்தில் ஒரு மாணவி நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் மற்றும் பொதுமக்கள் சென்று ராகவி மீட்டனர். போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கை மற்றும் ஆங்காங்கே ரோந்து பணியை தீவிரப்படுத்தியதையும், பொதுமக்கள் தேடுவதையும் அறிந்த மர்ம நபர்கள் ராகவியை இறக்கி விட்டு சென்றுள்ளது தெரிய வந்தது.

    இதனையடுத்து மாணவியை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து ஆறுதல் கூறினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த உடையார்பாளையம் போலீசார் ராகவியை கடத்திய மர்ம நபர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? ரவிச்சந்திரனுக்கு விரோதிகள் யாராவது இருக்கிறார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே இடையார் கிராம பொதுமக்கள் கடத்தல்காரர்களை விரைந்து பிடிக்க கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் உடையார்பாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவம் தொடர்பாக அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் டி.எஸ்.பி. கென்னடி ஆகியோர் தலைமையில் போலீசார் விடிய, விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் மர்ம நபர்கள் சிக்கவில்லை. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடக்கிறது. #tamilnews
    அரியலூர் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் தொடக்க விழா நடைபெற்றது.
    அரியலூர்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 282 ரேஷன் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 1 லட்சத்து 74 ஆயிரத்து 684 ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புடன் தலா ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா துறைமங்கலத்தில் உள்ள ரேஷன் கடையில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், மருதராஜா எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் கலெக்டர் சாந்தா தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, 2 அடி கரும்பு துண்டு, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவற்றுடன் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக ரூ.1,000 அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தார். அப்போது விலையில்லா வேட்டி- சேலையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

    இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்ட வழங்கல் அதிகாரி அல்லிராணி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மண்டல மேலாளர் பிரேமா, பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் ராஜாராம், பொது வினியோக திட்டத்தின் துணைப்பதிவாளர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 556 ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா அரியலூர் அண்ணா நகரில் உள்ள பொதுவினியோக திட்ட அங்காடியில் நடந்தது. இந்த விழாவிற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தலா ரூ.ஆயிரத்துடன் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி- சேலைகளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

    இதில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், அரியலூர் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, தாசில்தார் கதிரவன் மற்றும் அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாளன் வரவேற்றார். முடிவில் பொதுவினியோக திட்டத்தின் துணைப்பதிவாளர் செல்வராஜ் நன்றி கூறினார். பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. 
    ×