என் மலர்tooltip icon

    அரியலூர்

    அட்மா திட்ட செயல் பாடுகளை வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்ரமணியன் ஆய்வு செய்தார்.
    அரியலூர்:

    திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்ரமணியன் செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், அரியலூர் ஆகிய வட்டாரங்களில் நடைபெறும் அட்மா திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை, செயல் விளக்கதிடல் மண்புழு உர உற்பத்தி செயல் விளக்கத்திடல், சம்மங்கியில் பாலதீன் தாள் கொண்டு நிலபோர்வை அமைத்த செயல் விளக்கத்திடல், விதை விதைக்கும் நிலக்கடலை கருவி கொண்டு நிலக்கடலை விதைப்பு செயல் விளக்கத் திடல், காய்கறிகளை தரம் பிரித்து விற்பனைக்கு கொண்டுசெல்லும் பிளாஸ்டிக் பெட்டிகள், சோலார் மின் விளக்கு பொறி செயல்விளக்க திடல் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து அங்கங்க பண்ணையம் செயல்விளக்க திடல் திட்டங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு உற்பத்தி முறைகள் மற்றும் நவீனயுத்தி முறைகள் பற்றியும் லாபம் ஈட்டும் முறைகள் பற்றியும் எடுத்துக்கூறினார். ஆய்வின் போது வேளாண்மை துணை இயக்குனர் பழனிசாமி மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர்கள், வேளாண்மை அலுவலர்கள், வட்டார தொழில் நுட்ப மேலாளர்கள், உதவி தொழில்நுட்ப மேலளார்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
    செந்துறை வெள்ளாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் காமராஜர் மணல் டயர் மாட்டுவண்டி உரிமையாளர்கள் நலசங்கம் செயல்பட்டு வருகிறது இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் மாவட்ட கலெக்டர் ரத்னாவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் செந்துறை ஒன்றியம் ஆலத்தியூர் வெள்ளாற்றில் மணல் எடுத்து வந்தோம், ஆனால் அதிகாரிகள் இந்த குவாரியில் மணல் எடுக்க கூடாது, வேறு குவாரியில் மணல் எடுக்க அனுமதி வழங்குவதாக கோரிதடுத்து விட்டனர், இதனால் 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், வேறு தொழில்கள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றோம்,

    எனவே செந்துறை ஒன்றியம் வெள்ளாற்று மணல் குவாரியில் மாட்டுவண்டியின் மூலம் மணல் எடுத்து செல்ல அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. 

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சுண்ணாம்புக்கல் சுரங்கம் சரிந்து விபத்துக்குள்ளானதில் ஆபரேட்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தில் தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் அனுபவமில்லாத ஆபரேட்டர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்தநிலையில் திருமானூர் அருகே உள்ள பெரிய பட்டாக்காடு கிராமத்தைச் சேர்ந்த சுப்பையன் மகன் வினோன்மணி (வயது 24) என்பவர் ஹிட்டாச்சி எந்திரத்தின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். பாதுகாப்பற்ற முறையில் தோண்டப்பட்டு வந்த இந்த சுரங்கத்தில் நேற்று முன்தினம் இரவு வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென சுரங்கம் சரிந்து ஹிட்டாச்சி எந்திரத்தை மூடியது. இதுகுறித்து தகவலறிந்து மைன்ஸ் மேனேஜர் முரளி அங்குள்ள ஊழியர்கள் மூலம் மற்றொரு ஹிட்டாச்சி எந்திரத்தை கொண்டு வந்து மண்ணைத் தோண்டி மண்ணிற்குள் புதைந்த ஹிட்டாச்சி எந்திரம் மற்றும் ஓட்டுநரை மீட்டனர்

    அதன் பின்னர் வினோன் மணியனை அரியலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். அதனைத்தொடர்ந்து அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வினோமணியின் உறவினர் மனோகரன் இரும்புலிக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் முதல்முறையாக ஹிட்டாச்சி டிரைவர் ஒருவர் சுரங்க விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சிமெண்ட் நிறுவனங்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சிறுபான்மையினர் வாக்குக்காக கட்சிகள் அரசியல் செய்வதாக முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்ளாட்சி தேர்தலில் சில இடங்களில் பா.ஜ.க. தனித்து போட்டியிட்டு சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. வருங்காலங்களில் கூட்டணியாக செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பயங்கரவாதிகளால் காவல் உதவி ஆய்வாளர் கொல்லப்பட்டது குறித்து சட்டமன்றத்தில் யாரும் விவாதிக்கவில்லை.

    இது தொடர்பாக அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகள் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. சிறுபான்மையினர் வாக்குக்காக கட்சிகள் அரசியல் செய்கின்றன.

    தி.மு.க., கூட்டணி கட்சிகளோடு பயங்கரவாதிகளும் கூட்டணி வைத்திருக்கிறார்கள். இதற்கு தி.மு.க. விளக்கம் அளிக்க வேண்டும். தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலிருந்தே நான் இதனை கூறி வருகிறேன். தற்போது கேரளா, குஜராத், புதுடெல்லி, தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் தமிழகத்தை சார்ந்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது இதை உறுதிப்படுத்தி உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உள்ளாட்சிகளுக்கு, நான் அமைச்சராக இருந்தபோது ரூ.1,700 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தேன். தற்போது பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் மத்தியஅரசின் நிதி விரைவில் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அரியலூர் அருகே குடிக்க பணம் கேட்டு கொடுக்காத தந்தையை கொன்ற மகனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
    அரியலூர்:

    அரியலூர் அருகே வாரணாசி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன் (வயது 65) . இவரது மகன் பொம்மன் (27). கடந்த 31-5-2017அன்று தனது தாயாரிடம் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அப்போது தந்தை சின்னையன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொம்மன் அருகிலிருந்த உருட்டு கட்டையை எடுத்து தந்தை என்றும் பாராமல் கடுமையாக தாக்கியுள்ளார்.

    இதில் பலத்த காயமடைந்த சின்னையன் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 9-1-2017அன்று உயிரிழந்தார். இது குறித்து கீழப்பளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொம்மனை கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மாவட்டம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று நீதிபதி சுமதி தீர்ப்பு அளித்தார். அதில் பொம்மனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தார்.
    அரியலூரில் வீடு புகுந்து கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 55). இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வாசுகி (48). இவர்களுக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக காமராஜ் நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதில் 6 வீடுகள், 3 கடைகளை வாடகைக்கு விட்டுள்ளனர்.

    இதில் ஒரு வீட்டில் தனது மகள் மற்றும் மகனுடன் வாசுகி வசித்து வருகிறார். கடந்த 6-ந்தேதி வாசுகி சிதம்பரத்திற்கு சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தில் வீட்டில் இருந்த 20 பவுன் நகை ரூ.4 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இது குறித்து அரியலூர் போலீசார் விசாரணை நடத்தி, கொள்ளையில் ஈடுபட்ட அரியலூர் புதுமார்க்கெட் பகுதியை சேர்ந்த செந்தமிழ் செல்வன் (வயது 24) என்பவரை கைது செய்தனர்.

    செந்துறை அருகே சாலை விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முளையூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மனைவி காசியம்மாள் (வயது 80). சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியே வந்தகார் அவர் மீது மோதியது. இதில்படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கு காரணமான காரை ஓட்டி வந்த வசந்தகுமார் என்பவரை தேடிவருகின்றனர்.

    செந்துறை அருகே வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 5 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தளவாய் பகுதி வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. 

    அதன்படி போலீசார் தளவாய் பகுதியில் சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. 

    உடனடியாக 5 மாட்டு வண்டிகளை தளவாய் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த 20 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் ரத்னா தெரிவித்தார்.
    அரியலூர்:

    அரியலூர்மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்குதல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் அரியலூரில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி பேசியதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விரும்புபவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து மாவட்ட நிர்வாகம் மூலம் அரசிடம் அனுமதி பெற்று, அதன் பின்னர் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் குழுவினர் ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ள தேதிக்கு 20 நாட்கள் முன்பே மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதிக்கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம், ஜல்லிக்கட்டு தொடர்பாக கிராம கணக்கு புத்தகத்தில் பதியப்பட்டுள்ள விவரம் ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

    ஜல்லிக்கட்டு நடத்து வதற்காக அனுமதி கேட்கும் இடத்தில் ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அனுமதி பெற்றதற்கான ஆவணங்கள், பத்திரிகை செய்தி, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் போது ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் அதற்கு ஜல்லிக்கட்டு நடத்தும் குழுவினரே பொறுப்பு என்பதற்கான உத்தரவாத பத்திரம், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி காப்பீடு செய்யப்பட்டது தொடர்பான விவரங்கள் ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்து அரசாணை பெறப்பட்ட பின்னரே ஜல்லிக்கட்டு நடத்த சம்பந்தப்பட்ட குழுவினருக்கு அனுமதி வழங்கப்படும்.

    ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை அரசாணை மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி ஏதும் பெறாமல் நடத்துபவர்கள் மீது போலீசார் மூலம் சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி அரியலூர் மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் கள்-போலீசார் பங்கேற்பு ஆலோசனை கூட்டம் ஆண்டிமடம் போலீஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
    வரதராஜன்பேட்டை:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் கள்-போலீசார் பங்கேற்பு ஆலோசனை கூட்டம் ஆண்டிமடம் போலீஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் விழிப்புணர்வு குழு குறைந்தபட்சம் 10 நபர்களுக்கு மேல் இருக்கும்படி உருவாக்க வேண்டும். அதில் அனைத்து இனத்தவர்கள் மற்றும் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் இருக்க வேண்டும். கிராமங்களில் ஏற்படக்கூடிய சட்டம்- ஒழுங்கு பிரச்சினை யாவும் போலீஸ் நிலையத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

    தங்கள் கிராமங்களில் சட்டத்திற்கு புறம்பான செயல்களான மது விற்பனை, சூதாட்டம், லாட்டரி சீட்டு, மணல் கடத்தல் போன்றவை நடந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தங்கள் கிராமங்களில் சந்தேக நபர்களின் நடமாட்டம் இருப்பின் அதை உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும். தங்கள் பஞ்சாயத்துகளில் குறைந்தபட்சம் 100 கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 30 ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
    ஆண்டிமடம் அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் நபரை கட்டையால் தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே தவ சிக்குழி கிராமம் வாண்டையார் தெருவைச் சேர்ந்தவர் மதியழகன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுரேசுக்கும் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் மதியழகன் தனது வீட்டருகே நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த சுரேஷ் மதியழகனை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி கீழே கிடந்த கட்டையால் தலை மற்றும் உடம்பில் தாக்கியுள்ளார்.

    பின்னர் கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து மதியழகனின் மனைவி உமாராணி ஆண்டிமடம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தார்.
    அரியலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது55). இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வாசுகி , மகள் ரோஜா. சம்பவத்தன்று சிதம்பரத்திலுள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இது குறித்து பக்கத்து வீட்டுக்காரர்கள் வாசுகிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் உறவினர் மூலம் அரியலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். 

    இதையடுத்து அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டின் முன் பக்க கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருந்தது. மேலும் 20 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க மர்மநபர்கள் மிளகாய் பொடியை வீட்டில் தூவி விட்டு சென்றுள்ளனர். 

    கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    ×