என் மலர்tooltip icon

    அரியலூர்

    செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.28 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. செந்துறை தாலுகாவில் 68 ரே‌‌ஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கான மாதாந்திர கூட்டம் செந்துறை தாலுகா அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. பொதுவினியோக திட்ட முதுநிலை ஆய்வாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலர் பழனிவேல் மற்றும் 33 ரே‌‌ஷன் கடை ஊழியர்களும், 2 பகுதி நேர ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கணக்கில் வராத லஞ்ச பணம் கைமாறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து திடீரென வந்த அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் வானதி உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் தாலுகா அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து கூட்ட அரங்கை பூட்டினர்.

    அதனை தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து ரே‌‌ஷன் கடை ஊழியர்களின் கைப்பைகளை சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.28 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இந்த சோதனை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது.

    லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் இந்த திடீர் சோதனையை அறிந்த தாலுகா அலுவலகத்திற்கு வந்து இருந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அவசரமாக வெளியேறி விட்டனர். அலுவலகம் வராத ஊழியர்களும், அதிகாரிகளும் அலுவலகம் வராமல் தவிர்த்தனர். இதனால் நாள் முழுவதும் தாலுகா அலுவலகத்திற்கு அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். செந்துறை தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் இந்த திடீர் சோதனையால் செந்துறை மற்றும் அரியலூர் மாவட்ட வருவாய் துறை மற்றும் அரசு ஊழியர்கள் இடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
    ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்ட வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் சரவணபவன் வரவேற்றார். போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ், கே.ஆர்.டி., டி.வி.எஸ். உரிமையாளர் ராஜன், அன்னை தெரசா மெட்ரிகுலே‌‌ஷன் பள்ளி தாளாளர் முத்துக்குமரன், ரமே‌‌ஷ் ஜுவல்லரி உரிமையாளர் பிஜி.ரமே‌‌ஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை ஜெயங்கொண்டம் ஜே.கே.என்.ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலமானது ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு தொடங்கி, அண்ணாசிலை, கடைவீதி, 4 ரோடு, பஸ் நிறுத்தம் ரோடு வழியாக சென்று பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. காரில் செல்லும்போது சீட்பெல்ட் அணிய வேண்டும். இருசக்கர வாகனத்தில் 3 பேர் செல்லக்கூடாது. இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பன போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோ‌‌ஷங்கள் எழுப்பியவாறும் சென்றனர். பின்னர் பஸ்நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சை பற்றிய உயிர்காக்கும் முறைகளை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தின் சார்பில் நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான வீரர்கள் வீட்டில் தீப்பிடித்தால் அவற்றை எப்படி அணைப்பது, சிலிண்டரில் தீப்பிடித்தால் எப்படி அணைப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு முறைகளை செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் லயன்ஸ் சங்க தலைவர் பாண்டியன், ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கே.ஆர்.டி., டி.வி.எஸ். நிறுவனம் மற்றும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் செய்திருந்தனர். முடிவில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் கண்ணன் நன்றி கூறினார்.        
    5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது குல கல்விக்கு வழிவகுப்பதாக உள்ளது. இதனை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது குல கல்விக்கு வழிவகுப்பதாக உள்ளது. இதனை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். டிஎன்பிஎஸ்சி. தேர்வில் முறைகேடு குறித்து தமிழக அரசு உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் சொத்துக்களை பறிமுதல் செய்து அதனை முழுமையாக நாட்டுடைமையாக்க வேண்டும். 

    இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு மக்களின் அனுமதியை பெற வேண்டியதில்லை என மத்திய அரசு கூறியிருப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதற்குரிய நிலங்களை கையகப்படுத்துவதில் விவசாயிகளின் கருத்துக்களை கேட்க வேண்டும். 

    மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
    அரியலூரில் தேசிய வாக்காளர் தின விழாவையொட்டி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது.
    அரியலூர்:

    அரியலூர் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட சைக்கிள் ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ரத்னா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. மேலும், வாக்காளர் விழிப்புணர்வு குறித்த ஒட்டு வில்லைகள் பஸ்களில் ஒட்டப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை கலெக்டர் தலைமையில், அனைத்து அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஏற்றுக்கொண்டனர். பின்னர், வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி, நாடகம் போன்றவற்றில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களும், மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுக்கிடையே நடைபெற்ற கோலப்போட்டியில் சிறந்த கோலத்திற்கான பரிசுகளையும் கலெக்டர் ரத்னா வழங்கி பாராட்டினார்.

    முன்னதாக மூத்த வாக்காளரான அரியலூரை சேர்ந்த பிச்சைக்கு (வயது 91) கலெக்டர் ரத்னா பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது, பொறுப்பு) ரவிச்சந்திரன், அரியலூர் கோட்டாட்சியர் (பொறுப்பு) பாலாஜி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஏழுமலை, தனி தாசில்தார் (தேர்தல்) கண்ணன், அரியலூர் தாசில்தார் கதிரவன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார். ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் குத்து விளக்கேற்றி வேலை வாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்து, 803 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். முன்னதாக அவர் தனியார் நிறுவனங்களின் அரங்குகளை பார்வையிட்டு பேசுகையில், அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் மூலம் கடந்த ஓராண்டில் அரசு பணி காலியிடங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் 57 ஆண்களும், 69 பெண்களும் என மொத்தம் 126 பேர் பணி நியமனம் பெற்று பயனடைந்துள்ளனர். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் வட்டார அளவில் திறன் பயிற்சி அவசியம் குறித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதில் 493 இளைஞர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் மத்திய-மாநில அரசு பணிகளுக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மூலம் 32 பேர் அரசு பணி பெற்றுள்ளனர். இதுவரை நடத்தப்பட்ட தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக 2,500-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்கள் தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் பெற்று பயனடைந்துள்ளனர் என்றார்.

    வேலைவாய்ப்பு முகாமில் 54 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் கலந்து கொண்ட 2,706 பேரில் 803 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் வழங்கப்படும் திறன் பயிற்சியில் கலந்துகொள்ள 184 இளைஞர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வெளிநாடு செல்ல 11 இளைஞர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சந்திரசேகர், ஒன்றியக்குழு பெருந்தலைவர் செந்தமிழ்செல்வி, பால்வளத் துணைத்தலைவர் தங்க. பிச்சமுத்து, வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பாலாஜி, திட்ட இயக்குனர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) ஜெயராம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமேஷ், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் வினோத்குமார், அண்ணாதுரை மற்றும் அலுவலக பணியாளர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
    அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
    தாமரைக்குளம்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் கூறுகையில், தூத்தூர் குருவாடி மற்றும் டெல்டா பகுதியான திருமானூர் தா.பழூர் ஆகிய ஒன்றியங்களில் நெல் அறுவடைப்பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே அந்தந்த கிராமத்தில் விரைவில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். அரியலூர் மாவட்டம் தூத்தூர், தஞ்சாவூர் மாவட்டம் வாழ்கை இடையே உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்டும் திட்டத்தை அரசு செயல் படுத்த வேண்டும். தூத்தூர் பெரிய ஏரியில் இருந்து பாசன கிளை வாய்க்கால்களை தூர்வார வேண்டும். தா.பழூர் ஒன்றியம் முத்துவாஞ்சேரி திருமானூர் ஒன்றியம் வைப்பூர் இடையில் உள்ள மருதையாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குருவாடி கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்க அரசு ஆவன செய்ய வேண்டும் என்றார்.

    அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப்பிரிவு மாநில தலைவர் தங்க.சண்முகசுந்தரம் கூறுகையில், காவிரி டெல்டாவை பாதிக்கக் கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது. மேலும் கிராமங்கள், பொது இடங்களில் இயற்கை சாண எரிவாயு நிலையம் அமைக்க வேண்டும். காய்கறி கழிவுகள், விவசாயக் கழிவுகள், மனித கழிவு மூலமும் மின்சாரம், இயற்கை எரிவாயு தயாரிக்கும் நிலையங்களை உருவாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    அரியலூர் மாவட்ட விவ சாயிகள் சங்க தலைவர் செங்கமுத்து கூறுகையில், கூட்டுறவு சங்கத்திற்கு நிகழாண்டு ரூ.47 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதா? என்பதனை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

    தமிழக அம்பேத்கர் விவசாய இயக்க மாநில தலைவர் அம்பேத்கர் வழியன் கூறுகையில், ஏலாக்குறிச்சி, திருமானூர், திருமழபாடி, அழகியமணவளம், வைப்பூர் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். சிமெண்டு ஆலைகள் ஆக்கிரமித்துள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு, அதனை நிலம் இல்லாத ஏழைகளுக்கு வழங்க வேண்டும். அரியலூரில் மேலராமநல்லூருக்கு உடனடியாக புதிய வழித்தடத்தை அமைத்து, புதிய பஸ்களை இயக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். தா.பழூர் ஊராட்சி ஒன்றியம் கோரைக்குழியில் ஆதிதிரா விடர், அருந்ததியர் தெரு ஈடுகாடு சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றார்.

    ஆண்டிமடம் விவசாயி ஜெயச்சந்திரன் கூறுகையில், ஆண்டிமடம், ஆத்துக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். செங்கால் ஓடையை சீரமைக்க வேண்டும் என்றார்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விவசாய பிரிவு நிர்வாகி பாலசிங்கம் கூறுகையில், பெரியாக்குறிச்சி, ஆதனக்குறிச்சி, ஆலத்தியூர் உள்ளிட்ட பகுதியிலுள்ள சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை அரியலூர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் ஆழமாக தோண்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுண்ணாம்புக்கல் சுரங்கங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர் ரத்னா கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாள் விழாவில் 160 பேருக்கு ரூ.35 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் வழங்கினார்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம் வேம்புக்குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 58 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 2 ஆயிரத்து 500 மதிப்பில் முதியோர் ஓய்வூதியத்தொகைக்கான ஆணைகளையும், வருவாய்த்துறையின் சார்பில் 19 நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், சமூக நலத்துறையின் சார்பில் 8 பட்டப்படிப்பு படித்த பயனாளிகளுக்கும், 29 10-ம் வகுப்பு படித்த பயனாளிகள் என மொத்தம் 37 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கமும், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின்கீழ் 23 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.99 ஆயிரத்து 15 மதிப்பில் உதவி உபகரணங்களையும் வழங்கினார்.

    மேலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பேருக்கு ரூ.47 ஆயிரத்து 500 மதிப்பில் இலவச தையல் எந்திரம் மற்றும் சலவை பெட்டிகளும், வேளாண்மைத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.9 ஆயிரத்து 130 மதிப்பில் வேளாண் உப கரணங்களையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.3 ஆயிரம் மதிப்பில் இடுபொருட்களையும், 1 பயனாளிக்கு ரூ.1 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் உழவு எந்திரமும், 5 விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் காய்கறி விதைகளும் என மொத்தம் 160 பேருக்கு ரூ.35 லட்சத்து 3 ஆயிரத்து 145 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

    இந்த விழாவில் திட்ட இயக்குனர்கள் சுந்தரராஜன் (ஊரக வளர்ச்சி முகமை), ஜெயராமன் (மகளிர் திட்டம்), மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சந்திரசேகர், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஏழுமலை, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி, ஊராட்சி மன்றத்தலைவர் ரமேஷ், துணை இயக்குனர் (தோட்டக்கலை) அன்புராஜன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பூங்கோதை, வட்டாட்சியர் கலைவாணன் ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் கல்யாண சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    திருமானூரில் புதிதாக போடப்பட்ட தார் சாலை குண்டும் குழியுமாக கிடப்பதை சரி செய்ய கோரி மாடுகளுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தை சார்ந்த சேனாபதி கிராமத்தில் புதிதாக போடப்பட்ட தார் சாலை குண்டும் குழியுமாக கிடப்பதை சரி செய்யவும், மின்சாரம் அடிக்கடி தடைபடுவதை சரி செய்யவும், குடிநீர் மற்றும் சுடுகாடு செல்லும் சாலைகளை சரி செய்யக்கோரியும் சேனாபதி காலனி பொதுமக்கள் தங்களது வளர்ப்பு மாடுகளுடன் சாலைகளின் குறுக்கே மரங்களை போட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    இதனை அறிந்த திருமானூர் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை அரசிடம் எடுத்துச் சென்று உடனடியாக நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி அளித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சேனாபதி காலனி ரோட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    அரியலூரை விபத்தில்லா மாவட்டமாக்க டிரைவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று சாலை பாதுகாப்பு வாரவிழாவில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் 31-வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று அரியலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலையில் இருந்து சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி, பள்ளி மாணவ- மாணவிகள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் காவல்துறையினர், ஊர் காவல் படையினர், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் ரத்னா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு ரோஜாப்பூ கொடுத்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அரியலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வாரம் கடந்த 20-ந் தேதி முதல் வருகிற 27-ந் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை பாதுகாப்பு வார விழாவானது சாலை பாதுகாப்பு- உயிரின் பாதுகாப்பு, ஹெல்மெட் உயிர் கவசம் என்ற கருப்பொருளை மையப்படுத்தி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இவ்வார விழாவினை முன்னிட்டு, நாள்தோறும் பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் சிமெண்டு தொழிற்சாலைகளில், பணிபுரியும் டிரைவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி வாகன டிரைவர்கள், அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் பிற வாகன டிரைவர்களுக்கு இலவச மருத்துவ உடல் பரிசோதனை மற்றும் கண்பரி சோதனை முகாம் நடத்துதல். கல்லூரி மற்றும் பள்ளிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி போன்ற பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அரியலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகித்தல். வாகனத்தின் பின்புறங்களில் சிவப்பு நிற பிரதிபலிப்பான்கள் ஓட்டுதல் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வாகனங்கள் தடம் மாறுதல், அதிக பாரம் ஏற்றுதல் வாகனத்தினை முந்தி செல்லும்போது கவனிக்க வேண்டிய நடைமுறைகள் சம்பந்தமான அறிவுரைகள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இரவில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டுநர்களுக்கு தேநீர் வழங்கி சாலைபாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    விபத்து முதலுதவி குறித்து அவசரகால ஊர்தி 108 பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு மீட்பு துறை பணியாளர்கள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செயல் விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

    இச்சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு அனைவரும் வாகனங்களை நல்ல முறையில் பராமரிப்பு செய்து விபத்தில்லா மாவட்டமாக அரியலூர் மாவட்டத்தை மாற்றிட அனைத்து டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    இதில் கோட்டாட்சியர் பாலாஜி, வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி தலைவர் சந்திரசேகர், ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்செல்வி, துணை தலைவர் சரஸ்வதி, மோட்டார் ஆய்வாளர் சரவணபவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் உடையார்பாளையத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். இதில் உடையார்பாளையம் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் நவுபல் மெட்ரிக் பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். வெள்ளபிள்ளையார் கோவிலில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று உடையார்பாளையம் பஸ் நிறுத்ததில் முடிவடைந்தது. இதில் ஓட்டுனர் பயிற்சி நிலைய உரிமையாளர்கள் கண்ணபிரான், அரவிந்த், சிவராஜ் மற்றும் நவுபல் மெட்ரிக் பள்ளி தாளாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    செந்துறை அருகே முன்விரோத தகராறில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். 7 பேரை தேடி வருகிறார்கள்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம்செந்துறை அருகே உள்ள இலைக் கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. 

    சம்பவதன்று வயலுக்கு சென்ற சிலம்பரசனை மணிகண்டன் தரப்பினர் வழிமறித்து தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து சிலம்பரசன் கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் மணிகண்டன், வெற்றி, வேலு உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். 

    அதேபோன்று மணிகண்டனின் தந்தை செல்வமணி கொடுத்த புகாரின்பேரில் சிலம்பரசனை கைது செய்து செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயங்கொண்டம் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரை செந்துறை போலீசார் தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 914 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது.
    பெரம்பலூர்:

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் இளம்பிள்ளை வாத நோயை ஒழிக்க 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் சிறப்பு முகாம்கள் பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் துறைமங்கலம் டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளியில் நடந்த போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமிற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, பெரம்பலூர் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை கொடுத்து முகாமினை தொடங்கி வைத்தார். மேலும் அவர் கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசின் அம்மா பரிசு பெட்டகத்தை வழங்கினார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் கீதாராணி, தாசில்தார் பாரதிவளவன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    இதேபோல் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை வேப்பந்தட்டை ஒன்றியக்குழு தலைவர் ராமலிங்கம் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கவுன்சிலர்கள் பாஸ்கர், மகாதேவி ஜெயபால், ஒன்றியக்குழு துணை தலைவர் ரெங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 387 மையங்களில் 45 ஆயிரத்து 758 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. முகாமில் சுகாதாரப்பணியாளர்கள், அங்கான்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் என மொத்தம் ஆயிரத்து 548 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அரியலூர் பஸ் நிலையத்தில் கலெக்டர் ரத்னா தலைமையில் நடந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் கலந்து கொண்டு, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை கொடுத்து முகாமினை தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சந்திரசேகர், துணை தலைவர் அசோகன், ஒன்றியக்குழு பெருந்தலைவர் செந்தமிழ்செல்வி, துணை தலைவர் சரஸ்வதி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் ஹேமசந்த் காந்தி, அரியலூர் நகராட்சி ஆணையர் குமரன், வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பாலாஜி, வட்டாட்சியர் கதிரவன், வட்டார மருத்துவ அலுவலர்கள் அனிதா, நிரஞ்சனா, சுந்தர்ராஜன், மாவட்ட பயிற்சி குழு மருத்துவ அலுவலர் சதீஸ்குமார் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    இதேபோல் செந்துறை போலீஸ் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை வட்டார மருத்துவ அலுவலர் இந்துமதி தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்டத்தில் நகர்புறங்களில் 46 மையங்களிலும், ஊரக பகுதிகளில் 496 மையங்களிலும் என மொத்தம் 542 மையங்களில் 68 ஆயிரத்து 156 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் முகாமில் சுகாதாரப்பணியாளர்கள், அங்கான்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 340 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிசு வழங்கினார்.
    அரியலூர்:

    மாட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரியலூரில் உள்ள மாவட்ட ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. இதற்கு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார். அரியலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன் முன்னிலை வகித்தார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அனைவருக்கும் பொங்கலை பகிர்ந்து, மரக்கன்றுகளை மைதானத் தில் நட்டு வைத்தார். பின்னர் அவர் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து, அதிலும் பங்கேற்று விளையாடினார்.

    பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிசு வழங்கி பாராட்டினார். இதையடுத்து கலைக்குழுவினரின் காவடியாட்டம் நடைபெற்றது. இதில் போலீசாரின் குடும்பங்கள், ஆயுதப்படை போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்க செந்துறை ரவுண்டானா பகுதியில் வாகன டிரைவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக தேநீர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    ×