search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு கொறடா தாமரை ராஜேந்திரன்
    X
    அரசு கொறடா தாமரை ராஜேந்திரன்

    அரியலூரில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 803 பேருக்கு பணி நியமன ஆணை

    அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார். ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் குத்து விளக்கேற்றி வேலை வாய்ப்பு முகாமினை தொடங்கி வைத்து, 803 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். முன்னதாக அவர் தனியார் நிறுவனங்களின் அரங்குகளை பார்வையிட்டு பேசுகையில், அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் மூலம் கடந்த ஓராண்டில் அரசு பணி காலியிடங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் 57 ஆண்களும், 69 பெண்களும் என மொத்தம் 126 பேர் பணி நியமனம் பெற்று பயனடைந்துள்ளனர். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் வட்டார அளவில் திறன் பயிற்சி அவசியம் குறித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதில் 493 இளைஞர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் மத்திய-மாநில அரசு பணிகளுக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மூலம் 32 பேர் அரசு பணி பெற்றுள்ளனர். இதுவரை நடத்தப்பட்ட தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக 2,500-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்கள் தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் பெற்று பயனடைந்துள்ளனர் என்றார்.

    வேலைவாய்ப்பு முகாமில் 54 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் கலந்து கொண்ட 2,706 பேரில் 803 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் வழங்கப்படும் திறன் பயிற்சியில் கலந்துகொள்ள 184 இளைஞர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வெளிநாடு செல்ல 11 இளைஞர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சந்திரசேகர், ஒன்றியக்குழு பெருந்தலைவர் செந்தமிழ்செல்வி, பால்வளத் துணைத்தலைவர் தங்க. பிச்சமுத்து, வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பாலாஜி, திட்ட இயக்குனர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) ஜெயராம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமேஷ், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் வினோத்குமார், அண்ணாதுரை மற்றும் அலுவலக பணியாளர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×