search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் கலெக்டர் ரத்னா
    X
    அரியலூர் கலெக்டர் ரத்னா

    ஜல்லிக்கட்டு நடத்த 20 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் - கலெக்டர் ரத்னா தகவல்

    அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த 20 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் ரத்னா தெரிவித்தார்.
    அரியலூர்:

    அரியலூர்மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்குதல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் அரியலூரில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ரத்னா தலைமை தாங்கி பேசியதாவது:-

    அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விரும்புபவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து மாவட்ட நிர்வாகம் மூலம் அரசிடம் அனுமதி பெற்று, அதன் பின்னர் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் குழுவினர் ஜல்லிக்கட்டு நடத்தப்படவுள்ள தேதிக்கு 20 நாட்கள் முன்பே மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதிக்கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம், ஜல்லிக்கட்டு தொடர்பாக கிராம கணக்கு புத்தகத்தில் பதியப்பட்டுள்ள விவரம் ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

    ஜல்லிக்கட்டு நடத்து வதற்காக அனுமதி கேட்கும் இடத்தில் ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அனுமதி பெற்றதற்கான ஆவணங்கள், பத்திரிகை செய்தி, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் போது ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் அதற்கு ஜல்லிக்கட்டு நடத்தும் குழுவினரே பொறுப்பு என்பதற்கான உத்தரவாத பத்திரம், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி காப்பீடு செய்யப்பட்டது தொடர்பான விவரங்கள் ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்து அரசாணை பெறப்பட்ட பின்னரே ஜல்லிக்கட்டு நடத்த சம்பந்தப்பட்ட குழுவினருக்கு அனுமதி வழங்கப்படும்.

    ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை அரசாணை மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி ஏதும் பெறாமல் நடத்துபவர்கள் மீது போலீசார் மூலம் சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி அரியலூர் மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×