என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தாயை கொன்று, அவரது உடலை யமுனை ஆற்றின் கரையில் அப்புறப்படுத்த முயன்றுள்ளார் ஹிமான்சு
    • ஹிமான்சுவினுடைய தாயின் உடலை யமுனை ஆற்றில் இருந்து காவல்துறையினர் மீட்டெடுத்தனர்.

    உத்தர பிரதேச மாநிலம் படேக்பூரில் ஆன்லைன் சூதாட்டத்தால் ₹4 லட்சம் வரை கடன் வாங்கிய ஹிமான்சு என்ற நபர், காப்பீடு பணம் கிடைக்கும் என்பதால் தாயைக் கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

    ஹிமான்சு என்ற நபர், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ளார். குறிப்பாக அவர், ஸுபி (Zupee) என்ற செயலியில் சூதாட்டம் விளையாடி தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளார். இதன் விளைவாக நண்பர்களிடம் அவர் 4 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதன்பின் நண்பர்கள், இவரிடம் கடன் தொகையை திருப்பி தரும்படி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், அவரது தந்தை பக்கத்தில் உள்ள அனுமான் கோயிலில் வழிபாடு நடத்த சென்றிருந்த நேரத்தில், தாயை கழுத்தை நெரித்துக் கொன்று, அவரது உடலை யமுனை ஆற்றின் கரையில் அப்புறப்படுத்த முயன்றுள்ளார் ஹிமான்சு.

    இது தொடர்பாக ஹிமான்சுவை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம், "தனது உறவினர் வீட்டில் நகை திருடிய ஹிமான்சு, அதன் மூலம் தனது பெற்றோருக்கு ₹50 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு வாங்கியதாகவும், அதனை பெறுவதற்காக தாயை கொலை செய்து அவரது உடலை யமுனை ஆற்றில் வீசியதாகவும்" அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    கடந்த பிப்ரவரி 21-ம் தேதி ஹிமான்சுவினுடைய தாயின் உடலை யமுனை ஆற்றில் இருந்து காவல்துறையினர் மீட்டெடுத்தனர். 

    • உ.பி.யின் அலிகாரில் இன்று நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரையில் பிரியங்கா பங்கேற்றார்.
    • இந்த யாத்திரையில் லோக்தளம் கட்சி தொண்டர்களும் பங்கேற்றனர். 

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ஜமால்பூரில் நடந்த இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி இன்று கலந்து கொண்டார். இதில் லோக்தளம் கட்சி தொண்டர்களும் பங்கேற்றனர். 

    இந்த யாத்திரை அம்ரோஹா, சம்பல், புலந்த்சாஹர், அலிகார், ஹத்ராஸ் மற்றும் ஆக்ரா வழியாக பதேபூர் சிக்ரி செல்கிறது. இதில் ராகுல் காந்தியுடன் திறந்த ஜீப்பில் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் அமர்ந்து கொண்டு தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தவாறு சென்றார். அப்போது பிரியங்கா காந்தி பேசியதாவது:

    பா.ஜ.க. 10 ஆண்டாக ஆட்சியில் உள்ளது. ஜி20 மாநாடு போன்ற பல பெரிய நிகழ்வுகள் நடந்தன. இதுபோன்ற நிகழ்வுகளால் நாட்டின் மரியாதை கூடுகிறது என எல்லோரும் சொன்னார்கள். நாங்கள் கூட ஒப்புக்கொள்கிறோம்.

    நாட்டின் மரியாதையில் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் தொடர்பில்லையா? இளைஞர்களுக்கு வேலை இல்லை, விவசாயிகள் இன்னும் சாலையில் அமர்ந்திருக்கிறார்கள். பணவீக்கம் நாட்டு மக்களுக்கு சுமையாக இருக்கிறது. இதை எல்லாம் நான் சுட்டிக்காட்டி கேள்வி கேட்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.

    காங்கிரஸ், சமாஜ்வாதி இடையேயான தொகுதி பங்கீடு முடிந்துள்ள நிலையில், யாத்திரை நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த யாத்திரை இந்தியா கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.

    இன்று மாலை ஆக்ராவில் நடைபெற உள்ள யாத்திரையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்க உள்ளார்.

    • ராமர் கோயில் அறக்கட்டளையின் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா விளக்கம்.
    • ஜனவரி 23 முதல் மொத்தம் 60 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதன் மறுநாள் முதல் பொது மக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. அன்று முதல் நேற்று வரை ஒரு மாதத்தில் சுமார் ரூ.25 கோடி நன்கொடையாகவும், 25 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் கிடைத்துள்ளதாக அறக்கட்டளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    இதுகுறித்து ராமர் கோயில் அறக்கட்டளையின் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா கூறியிருப்பதாவது:-

    ரூ. 25 கோடியில் காசோலைகள், வரைவோலைகள் மற்றும் கோயில் அறக்கட்டளை அலுவலகத்தில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் மற்றும் நன்கொடை பெட்டிகளில் டெபாசிட் செய்யப்பட்டவை அடங்கும்.

    இருப்பினும், அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செய்யப்படும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் குறித்து எங்களுக்குத் தெரியாது.

    ஜனவரி 23 முதல் மொத்தம் 60 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

    ராமர் பக்தர்களின் பக்தி என்னவென்றால், ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் பயன்படுத்த முடியாத வெள்ளி மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களை ராம் லல்லாவுக்கு நன்கொடையாக வழங்குகிறார்கள். 

    இருப்பினும் பக்தர்களின் பக்தியைக் கருத்தில் கொண்டு, ராம் மந்திர் அறக்கட்டளை தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட நகைகள், பாத்திரங்கள் மற்றும் பொருட்களை ஏற்றுக்கொள்கிறது.

    அயோத்தியில் வரும் ராம நவமி பண்டிகை நாட்களில் சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருகையால் நன்கொடைகள் அதிகரிக்கும் என்று கோயில் அறக்கட்டளை எதிர்பார்க்கிறது.

    ராம நவமியின் போது அதிக அளவில் பணம் வருவதையும், எதிர்பார்க்கப்படும் பிரசாதத்தையும் கட்டுப்படுத்த ராம் ஜென்மபூமியில் நான்கு தானியங்கி உயர் தொழில்நுட்ப எண்ணும் இயந்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) நிறுவியுள்ளது.

    "ராமர் கோவில் அறக்கட்டளை மூலம் ரசீதுகளை வழங்க அறக்கட்டளை மூலம் ஒரு டஜன் கணினி மயமாக்கப்பட்ட கவுன்டர்கள் நிறுவப்பட்டுள்ளன.

    மேலும், கூடுதல் நன்கொடை பெட்டிகள் ராமர் கோவில் அறக்கட்டளையால் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எழுத்துத் தேர்வில் சுமார் 50 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்தனர்.
    • தேர்வு எழுதுவதற்காக ரெயில்வே ஸ்டேஷனில் கூட்டம் குவிந்திருந்தது.

    உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 17ம் தேதி மற்றும் 18ம் தேதி நடைபெற்ற காவல்துறை பணியிடங்களுக்கான தேர்வை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    60 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வில் சுமார் 50 லட்சம் பேர் தேர்வு எழுதி இருந்தனர்.

    தேர்வு எழுதுவதற்காக ரெயில்வே ஸ்டேஷனில் கூட்டம் குவிந்திருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் கசிந்து சமூக வலைதளங்களில் பரவியதாக புகார் வெளியான நிலையில் உ.பி அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 

    • பவுர்ணமி தினத்தை முன்னிட்டு கங்கையில் நீராட யாத்ரீகர்கள் டிராக்டரில் பயணம்.
    • காருடன் மோதுவதை தவிர்க்க டிரைவர் டிராக்டரை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலத்தில்  யாத்ரீகர்களை ஏற்றிக் கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று பவுர்ணமி என்பதால் கங்கையில் நீராட அவர்கள் கதர்கஞ்ச் என்ற இடத்திற்குச் சென்றனர். டிராக்டரின் டிராலியில் பயணம் செய்தோர்களில் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும்  ஆவார்கள்.

    இந்த டிராக்டர் கஸ்கஞ்ச்  பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அதே வழியில் சென்ற காருடன் மோதாமல் இருக்க டிரைவர் டிராக்டரை திருப்பியுள்ளார். அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தது டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் 15 யாத்ரீகர்கள் நீரில் மூழ்கி பலியாகினர். இதில் 8 பேர் குழந்தைகள் என முதற்கட்ட தகவல் வெளியானது. இந்த நிலையில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளா்.

    • ஆக்ராவில் நடக்கும் ராகுல் காந்தி பாத யாத்திரையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கிறார்.
    • மார்ச் மாதம் முதல் வாரம் ராகுல் காந்தியின் பாத யாத்திரை மத்திய பிரதேசத்துக்கு செல்ல உள்ளது.

    லக்னோ:

    காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். தற்போது இந்த பாத யாத்திரை உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் பாத யாத்திரை இன்று மொரதாபாத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.

    இருவரும் காரின் மேலே அமர்ந்து கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். பொதுமக்களைப் பார்த்து வணக்கம் தெரிவித்தபடியும், கைகளை அசைத்தபடியும் சென்றனர். அப்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியிடம் பலர் ஆர்வமுடன் கை குலுக்கினர். பாதயாத்திரையை ஒட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதேபோல் சம்பல், அம்ரேகா, கத்ரஸ், அலிகர், ஆக்ரா, பதேப்பூர் சிக்கிரி மாவட்டங்களில் நடக்கும் பாத யாத்திரையிலும் பிரியங்கா கலந்துகொள்வார் என தெரிய வந்துள்ளது.

    ஆக்ராவில் நாளை நடக்கும் ராகுல் பாத யாத்திரையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்துகொள்வார் என அறிவிக்கப் பட்டுள்ளது.

    இதையடுத்து, மார்ச் முதல் வாரம் ராகுல் காந்தியின் யாத்திரை மத்திய பிரதேசத்துக்குச் செல்ல உள்ளது. அந்த யாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நல்ல நிலையிலான குடிமக்களின் வாழ்க்கைத்தரம் கொண்ட ஒரு நாடுதான் பொருளாதாரத்தில் வலுவான நிலையில் இருப்பதாக அர்த்தம்.
    • அடுத்த ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் 3-வது இடத்தை பிடித்து விடும்.

    மகராஜ்கஞ்ச்:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், உத்தரபிரதேசத்தின் மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில் நடந்த கடன் வழங்கும் முகாமில் கலந்து கொண்டார். இதில் 40,011 பேருக்கு ரூ.1,143 கோடி கடன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:-

    நல்ல நிலையிலான குடிமக்களின் வாழ்க்கைத்தரம் கொண்ட ஒரு நாடுதான் பொருளாதாரத்தில் வலுவான நிலையில் இருப்பதாக அர்த்தம். அதன் மூலம் ஒவ்வொருவரும் பலனடைவார்கள்.

    அந்தவகையில் உலக பொருளாதாரத்தில் 10-வது இடத்தில் இருந்த இந்தியா, பிரதமர் மோடி தலைமையின் கீழ் 5-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. இது அடுத்த ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் 3-வது இடத்தை பிடித்து விடும்.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

    • உத்தர பிரதேச இளைஞர்கள் தங்களது மாநிலத்தைக் கட்டமைத்து வருகின்றனர்.
    • சிறு விவசாயிகள், தொழில்முனைவோர்கள் தூதராக செயல்பட்டு வருகிறேன் என்றார் பிரதமர் மோடி.

    லக்னோ:

    பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்றுள்ளார். அங்கு பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர், சந்த் ரவிதாசின் 647-வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும், வாரணாசியில் ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    கடந்த 10 ஆண்டுகளில் வாரணாசியில் வளர்ச்சியானது பல மடங்கு அதிகரித்துள்ளது. சிறு விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களின் தூதராக செயல்படுகிறேன்.

    குடும்ப அரசியல் மற்றும் ஊழல் காரணமாக உத்தர பிரதேச மாநிலம் வளர்ச்சியில் பின்தங்கியது. காங்கிரசின் இளவரசர் காசி மற்றும் உத்தர பிரதேச இளைஞர்களை அடிமைகள் என்கிறார். என்ன மாதிரியான விமர்சனம் இது? அவர்கள் உ.பி. இளைஞர்கள் மீது விரக்தியை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் இளைஞர்கள் தங்களது மாநிலத்தைக் கட்டமைத்து வருகின்றனர் என தெரிவித்தார்.

    • வீடியோ வைரலான நிலையில் வாலிபர்களின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்தன.
    • காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபர்களை பிடித்து அவர்களுக்கு ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    நொய்டாவில் சாலையில் வேகமாக செல்லும் ஒரு காரில் இருந்து வாலிபர் ஒருவர் பணத்தை காரின் ஜன்னல் வழியாக வெளியே தூக்கி வீசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    செக்டார் 20 பகுதியில் பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோவில், இரவு நேரத்தில் சாலையில் சொகுசு கார் ஒன்று வேகமாக செல்கிறது. அந்த காரில் வாலிபர்கள் சிலர் இருக்கின்றனர். அதில், ஜன்னல் ஓரம் இருந்த வாலிபர் ரூபாய் நோட்டுகளை எடுத்து சாலையில் வீசும் காட்சிகள் உள்ளது.

    இந்த வீடியோ வைரலான நிலையில் வாலிபர்களின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்தன. இதுபோன்ற செயல்களால் மற்றவர்களின் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படும் என விமர்சனங்களை பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து நொய்டா போலீசார் விசாரணையில் இறங்கினர். காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபர்களை பிடித்து அவர்களுக்கு ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • வாரணாசி ஒரு மினி பஞ்சாப் ஆகிவிட்டதாகத் தெரிகிறது.
    • இந்தியா இன்று சாந்த் ரவிதாஸின் தகவல்களை ஏற்று வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது.

    பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியை தாக்கி, அதன் உறுப்பினர்கள் சாதிவெறியின் பெயரால் மக்களைச் சுரண்டுவதாக குற்றம் சாட்டினார்.

    அவர் தனது வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் சாந்த் ரவிதாஸின் 647-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். முன்னதாக, இங்கு புதிதாக நிறுவப்பட்ட சாந்த் ரவிதாஸ் சிலையையும் பிரதமர் திறந்து வைத்தார். 

    அப்போது பிரதமர் மோடி பேசுகையில்," சாந்த் ரவிதாஸின் பிறந்தநாளின் புனிதமான நிகழ்வில், உங்கள் அனைவரையும் அவரது பிறந்த இடத்திற்கு வரவேற்கிறேன். இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் தொலைதூர இடங்களிலிருந்து வந்திருக்கிறீர்கள். குறிப்பாக பஞ்சாபில் இருந்து வந்திருக்கும் என் சகோதர சகோதரிகள். வாரணாசி ஒரு மினி பஞ்சாப் ஆகிவிட்டதாகத் தெரிகிறது.

    இந்தியா இன்று சாந்த் ரவிதாஸின் தகவல்களை ஏற்று வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. அவரது ஆசீர்வாதத்தால் இவை அனைத்தும் சாத்தியமானது.

    தங்களின் குடும்பத்தினரின் நலன் மீது மட்டுமே அக்கறை கொண்டவர்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் நலன் பற்றி சிந்திக்க முடியாது. பழங்குடியின பெண் ஒருவரை இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுப்பதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்" என்றார்.

    • உத்தர பிரதேசத்தில் கடந்த முறை காங்கிரஸ் ஒரு தொகுதி மட்டுமே வெற்றி பெற்றது.
    • இந்த முறை காங்கிரசுக்கு 17 இடங்களை சமாஜ்வாதி ஒதுக்கியுள்ளது.

    லக்னோ:

    2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. தேர்தல் நெருங்க நெருங்க இந்தக் கூட்டணி தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்வதில் தான் சிக்கல்.

    மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை காங்கிரசுக்கு அதிக இடங்கள் கொடுக்க மறுத்துள்ளது.

    இதற்கிடையே, ராகுல் காந்தி தற்போது உத்தர பிரதேசத்தில்நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    நாங்கள் தரும் இடங்களை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ராகுல் காந்தி நடைபயணத்தில் கலந்துகொள்வேன் என அகிலேஷ் யாதவ் கண்டிஷன் போட்டதாகத் தெரிகிறது.

    உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, காங்கிரஸ் இடையே நேற்று தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஏற்பட்டது.

    இந்நிலையில், தனது கண்டிஷனுக்கு காங்கிரஸ் கட்சி ஓகே சொன்னதால், ராகுல் காந்தி யாத்திரையில் அகிலேஷ் பங்கேற்கிறார்.

    இதுதொடர்பாக அகிலேஷ் கூறுகையில், ஆக்ராவில் நடைபெறும் யாத்திரையில் நான் பங்கேற்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    • பாலிவுட் பிரபலங்கள், கோடீஸ்வரர்கள் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.
    • நாட்டின் 73 சதவீத மக்களான ஓபிசி, தலித் அல்லது பழங்குடியினர் கலந்து கொள்ளவில்லை.

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த மாதம் ராமர் சிலை பிரதிஷ்டை, ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் நேரடியாக கலந்து கொள்ள நாட்டில் உள்ள பெரும்பாலான பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பெரும்பாலானோர் நேரில் கலந்து கொண்டனர்.

    பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மகனும் நடிகருமான அபிசேக் பச்சன், அபிசேக் பச்சனின் மனைவியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    அழைப்பிதழ் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பா.ஜனதா மற்றும் மோடியை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பாலிவுட் பிரபலங்கள், கோடீஸ்வரர்கள் அழைக்கப்பட்டனர். அமிதாப் பச்சன், அபிசேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    அவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் ஓபிசி, தலித் அல்லது பழங்குடியினர் என யாரும் கலந்து கொள்ளவில்லை. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 73 சதம்வீதம் பேர் எனத்தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே ஐஸ்வர்ரா ராய் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

    இந்த நிலையில் ராகுல் காந்தியை பா.ஜனதா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. "இந்திய மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட விரக்தியில் ராகுல் காந்தி இந்தியாவின் பெருமைக்குரிய ஐஸ்வர்ரா ராயை இழிவுப்படுத்தும் புதிய மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார்.

    நான்காவது தலைமுறை அரசியல் வம்சம், எந்தவித சாதனையும் இல்லாததோடு, ராகுல் காந்தியின் முழு குடும்பத்தையும் விட இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஐஸ்வர்யா ராய் மீது இப்போது அவதூறுகளை கையாள்கிறார்." எனத் தெரிவித்துள்ளார்.

    ஐஸ்வர்யா ராயை இழிவு படுத்தும் வகையில் ராகுல் காந்தி பேசிய பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ள பா.ஜனதா, கர்நாடகத்தை சேர்ந்தவர் இழிவுப்படுத்தப்படும்போது சித்தராமையா அமைதியாக இருக்கிறார் எனவும் விமர்சனம் செய்துள்ளது.

    "உங்களுடைய தலைவர் தொடர்ந்து சக கன்னடியரை இழிவு படுத்தும் நிலையில், உங்கள் கன்னட பெருமையை நிலைநாட்டி, அத்தகைய அவமரியாதைக்கு எதிராக பேசுவீர்களா அல்லது உங்கள் முதல்வர் நாற்காலியை பாதுகாக்க அமைதியாக இருப்பீர்களா? என சித்தராமையாவுக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளது.

    ×