என் மலர்
உத்தரப் பிரதேசம்
- அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது.
- கர்நாடகாவை சேர்ந்த அருண் யோகிராஜ் வடிவமைத்த ராமர் சிலை தேர்ந்தெடுக்கப்பட்டது.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள், பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து, பிரதமர் மோடி தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.
குழந்தை வடிவிலான ராமர் சிலையை மூன்று சிற்பிகள் வடிவமைத்திருந்த நிலையில், கர்நாடகாவை சேர்ந்த அருண் யோகிராஜ் வடிவமைத்த சிலை தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அருண் யோகிராஜ், செய்தியாளர்களிடம் கூறியதாவது, "நான் இப்போது மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். ராமரின் ஆசி எனக்கு எப்போதும் உண்டு. சில நேரங்களில் நான் கனவு உலகில் இருப்பது போல உணர்கிறேன். இது எனக்கு மிகப் பெரிய நாள்" எனக் கூறினார்.
- வீட்டின் மேல்மாடியில் செயல்பட்டு வந்த பட்டாசு கடையில் வெடி விபத்து.
- வெடி விபத்தினால் கடையில் வேலை செய்துகொண்டிருந்த 2 சிறுவர்கள் உயிரிழப்பு
உத்தர பிரதேசம் மாநிலம் கெல்வாடா கிராமத்தில் உள்ள வீட்டின் மேல்மாடியில் பட்டாசுக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கடையில் இன்று தீடிரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஹிமான்சு என்கின்ற 12 வயது சிறுமியும், பராசு என்ற 14 வயது சிறுவனும் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் உயிரிழந்த சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வீட்டின் உரிமையாளர் ஷதாப் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் மக்கள் இந்த நாளை நினைத்து பார்ப்பார்கள்.
- நாடு முழுவதும் மக்கள் இந்த நாளை தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தி நகரம் இன்று காலை ராமர் சிலை பிரதிஷ்டைக்காக கோலாகலமாக மாறியது.
அயோத்தி முழுவதும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. திரும்பிய திசையெல்லாம் ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது. மக்கள் ஆடல்-பாடலுடன் தீபாவளி போல இன்றைய விழாவை கொண்டாடினார்கள்.
இதைதொடர்ந்து, மிக சரியாக மதியம் 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது. பிரதமர் மோடி, ராமர் சிலையை வழிபட்டார்.
பின்னர், ராமர் கோவிலுக்கு வருகை தந்திருந்த சுமார் 8 ஆயிரம் பேர் முன்னிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு இன்று ராமர் வந்துவிட்டார். இந்த நன்னாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
ராமர் இனி கூடாரத்தில் வசிக்க வேண்டிய நிலை இருக்காது. தேசத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ராம நாமம் ஒலிக்கிறது.
பகவான் ராமரின் ஆசிர்வாதம் நம் அனைவருக்கும் உள்ளது. இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க தருணம் மட்டுமல்ல, புதிய காலச்சக்கரத்தின் துவக்கம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் மக்கள் இந்த நாளை நினைத்து பார்ப்பார்கள். அனுமன், லட்சுமணன், பரதன் உள்ளிட்ட அனைவரையும் வணங்குகிறேன். தெய்வீக அனுபவத்தை நான் உணர்கிறேன்.
குறைகள் இருப்பின், ராமர் நம்மை மன்னிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டில் நியாயத்தை வழங்குவதற்கு நியாய ராஜ்ஜியம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மக்கள் இந்த நாளை தீபாவளியாக கொண்டாடுகின்றனர். ராமரின் ஆசிர்வாதத்தால் ராமர் பாலம் தொடங்கும் அரிச்சல்முனையில் நேற்று வழிபட்டேன். 11 நாள் விரதத்தின்போது ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் உள்ளிட்ட கோவில்களில் வழிபட்டேன்.
பகவான் ராமர் நாட்டு மக்களின் மனங்களில் உள்ளார். கடந்த 11 நாட்களில் பல்வேறு மாநிலங்களில், பல மொழிகளில் ராமாயணத்தை கேட்டேன். கடவுள் ராமர் தேசத்தை இணைக்கிறார்.

ராமர் நம்முடையவர் மட்டுமல்ல, அனைவருக்கும் ஆனவர். இந்த நிகழ்வை உலகம் முழுவதும் உள்ள ரமர் பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். ராமர் தான் பாரத தேசத்தின் ஆதாரம். ராமர் நிரந்தரமானவர் மட்டுமல்ல நித்தியமானவர்.
பகவான் ராமர் நமக்கான வழிகளை காட்டுவார். இன்று இன்னும் ஆயிரம் ஆண்டுகள் அவரது ராஜ்ஜியம் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.
வலிமையான நாட்டை உருவாக்க வேண்டுமென்ற உறுதியை நாம் ஏற்க வேண்டும். ராமர், அனுமனை வெளியே தேடாமல், நம் உள்ளத்தில் வைக்க வேண்டும். ராமர் கோவிலை நிர்மானிக்க வேண்டுமென்ற எண்ணம் நம் அனைவரின் மனதிலும் இருந்தது.
இன்றைய இந்தியாவின் கனவுகள் நிறைவேறாது என்ற பேச்சுக்கே இடமில்லை. பகவான் ராமர் பிரச்சினைக்குரியவர் அல்ல, அவர் பிரச்சினைகளுக்கான தீர்வாக உள்ளவர்.
ராமருக்கான நமது பூஜைகள் விசேஷமானதாக இருக்க வேண்டும். இந்த காலக்கட்டம் நாட்டின் வளர்ச்சிக்கான அமிர்த காலம். அடுத்த ஆயிரம் ஆண்டுக்கான அடித்தளத்தை நாம் தற்போது அமைக்க வேண்டும்.
அடுத்த ஆயிரம் ஆண்டுக்கான அடித்தளத்தை நாம் தற்போது அமைக்க வேண்டும். வளர்ச்சி அடைந்த நாட்டை உருவாக்க அடித்தளமாக ராமர் கோவில் இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
+2
- பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் இருந்து ராமர் சென்ற இடங்களில் உள்ள ஆலயங்களுக்கு எல்லாம் சென்று வழிபட்டு புனித நீர் சேகரித்தார்.
- அயோத்தி ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்பு சடங்குகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
அயோத்தி:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 3 அடுக்குகளுடன் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி நடந்த பூமிபூஜையை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக ராமர் ஆலயம் கட்டப்பட்டு வந்தது.
அயோத்தி ராமர் கோவிலை 3 கட்டங்களாக அடுத்த ஆண்டுக்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது முதல் பகுதி ரூ.1,100 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது. நாகரா கட்டிடக்கலை அடிப்படையில் 2.27 ஏக்கர் பரப்பளவில் 5 மண்டபங்களுடன் இந்த கோவில் கட்டப்பட்டு இருக்கிறது.
மொத்தம் 71 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலயம் அமைந்து இருக்கிறது. 380 அடி நீளம், 250 அடி அகலம், 161 அடி உயரத்தில் ஆலயம் கம்பீரமாக காணப்படுகிறது. நூற்றுக்கணக்கான சிற்பங்களுடன் கூடிய தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 44 நுழைவு வாயில்களும் கட்டப்பட்டுள்ளன.
கோவிலின் தரை தளப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. அங்குதான் ஸ்ரீராமரின் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கருவறையில் மூலவராக 5 வயதுடைய பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதையடுத்து 3 ராமர் சிலைகள் செய்யப்பட்டன. அதில் கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த பிரபல நிபுணர் யோகிராஜ் செதுக்கிய 51 அங்குல உயர ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டது. சுமார் 200 கிலோ எடை கொண்ட இந்த சிலை பழமையான கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
இந்த சிலையை கருவறையில் பிரதிஷ்டை செய்வதற்கான விழா இன்று (திங்கட்கிழமை) நடத்தப்படும் என்று அயோத்தி ராமர் ஆலய நிர்வாகிகள் அறிவித்தனர். இதையடுத்து பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் இருந்து ராமர் சென்ற இடங்களில் உள்ள ஆலயங்களுக்கு எல்லாம் சென்று வழிபட்டு புனித நீர் சேகரித்தார்.
இதற்கிடையே அயோத்தி ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்பு சடங்குகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தினமும் கருவறை புனித நீரால் சுத்தப்படுத்தப்பட்டு யாக சாலை பூஜைகளும் நடத்தப்பட்டன. கடந்த வியாழக்கிழமை இரவு 51 அங்குல ஸ்ரீபால ராமர் சிலை கருவறை பீடத்தில் நிலைநிறுத்தப்பட்டது.
அந்த சிலைக்கு கடந்த 3 நாட்களாக சிறப்பு சடங்குகள் செய்யப்பட்டு வந்தன. நேற்று முன்தினம் வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. நேற்று இறுதிக்கட்ட சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று காலை இறுதி யாகசாலை பூஜை நிறைவு பெற்றது.

இதையடுத்து இன்று காலை அயோத்தி நகரம் ராமர் சிலை பிரதிஷ்டைக்காக கோலாகலமாக மாறியது. அயோத்தி முழுவதும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. திரும்பிய திசையெல்லாம் ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது. மக்கள் ஆடல்-பாடலுடன் தீபாவளி போல இன்றைய விழாவை கொண்டாடினார்கள்.
விழாவுக்கு சுமார் 8 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 2 ஆயிரம் பேர் சாதுக்கள் ஆவார்கள். முக்கிய பிரமுகர்கள் வருகை காரணமாக அயோத்தி வரலாறு காணாத கோலாகலத்தை இன்று கண்டது.
விழாவின் நாயகரான ஸ்ரீ பாலராமரை சிறப்பிக்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அயோத்திக்கு வந்தார். காலை 10.30 மணிக்கு மேல் அவரது விமானம் அயோத்தி விமான நிலையத்துக்கு வந்தது. விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அயோத்தி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ராமர் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தளத்தில் பிரதமர் மோடி சென்று இறங்கினார். பிறகு அங்கிருந்து கார் மூலம் அயோத்தி கோவிலுக்கு 12.05 மணிக்கு வந்தார்.
சரியாக மதியம் 12.10 மணிக்கு அயோத்தி ஆலய கருவறையில் ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டைக்கான பூஜைகள் தொடங்கின. பிரதமர் மோடி முன்னிலையில் அனைத்து பூஜைகளும் மேற்கொள்ளப்பட்டன. தென்தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆடலரசன் தம்பதி உள்பட 14 தம்பதிகள் ராமர் சிலை பிரதிஷ்டை சடங்குகளை முன்னின்று நடத்தினார்கள்.
கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டைக்கான 84 வினாடி நேரம் குறித்து கொடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி மிக சரியாக மதியம் 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது.

திட்டமிட்டபடி 84 வினாடிகள் இந்த பூஜை நடந்தது. அப்போது 121 வேதவிற்பனர்கள் பிராண பிரதிஷ்டைக்கான மந்திரங்களை ஓதினார்கள். இதன் மூலம் அயோத்தியில் 500 ஆண்டுகளுக்கு பிறகு ராமராஜ்யம் இன்று முறைப்படி தொடங்கி உள்ளது.
ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட போது ஆலயத்தில் திரண்டிருந்த சுமார் 8 ஆயிரம் சிறப்பு அழைப்பாளர்களும் பார்ப்பதற்கு வசதியான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பல இடங்களில் அகன்ற திரைகள் வைத்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. 12.30 மணிக்கு பிராண பிரதிஷ்டை நடந்தபோது ஹெலிகாப்டரில் இருந்து அயோத்தி ராமர் ஆலயம் மீது பூ மழை பொழியப்பட்டது.
மதியம் 1 மணி வரை சுமார் ஒருமணி நேரம் கருவறை பூஜைகள் நடக்கின்றன.
- 380 அடி நீளம், 250 அடி அகலத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. 161 அடி உயரம் கொண்டது.
- 392 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 44 கதவுகள் உள்ளன.
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
- உலகமே எதிர்பார்த்துக்கொண்டு இருந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது.
- கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள நாடு முழுவதிலும் இருந்து திரளான பக்தர்கள் அயோத்தி வந்த வண்ணம் உள்ளனர்.
அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து, ராமர் கோவில் கட்டுமான பணிகளை கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கட்டுமான பணிகள் ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை மேற்பார்வையில் நடந்து வந்தது.
உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் அளித்த நன்கொடை மூலம் கோவில் கட்டுமான பணிகள் நடந்தது. கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த பிரமாண்ட கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை இன்று பகல் 12.20 மணிக்கு நடக்கிறது.
கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் கடந்த 16-ந்தேதி தொடங்கின. கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட யாகசாலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருகிறது. 121 ஆச்சார்யார்கள் இந்த பூஜைகள் மற்றும் யாகங்களை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே கோவில் கருவறையில் ராஜ உடையில் நின்ற கோலத்தில் செதுக்கப்பட்ட பால ராமர் சிலை வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கோவில் கருவறையில் வைக்கப்பட்டது. தற்போது, சிலையில் கண்கள் மஞ்சள் துணியால் மூடிவைக்கப்பட்டு உள்ளது. சிலை பிரதிஷ்டை செய்யப்படும்போது துணி அகற்றப்படும்.
உலகமே எதிர்பார்த்துக்கொண்டு இருந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. பல்வேறு ஆகம பூஜைகள் முடிந்த பிறகு, மதியம் 12.20 மணிக்கு கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை நடைபெறும்.
கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள நாடு முழுவதிலும் இருந்து திரளான பக்தர்கள் அயோத்தி வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் அயோத்தி நகர எல்லையில் தங்கியுள்ளனர். இதனால் நகரம் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது.
கும்பாபிஷேக விழாவையொட்டி, அயோத்தி நகரம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னரே விழாக்கோலம் பூண்டது. கோவில் வளாகம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மராட்டிய மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட 7 ஆயிரத்து 500 அலங்கார செடிகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர இரவு நேரத்தில் கோவில் வளாகம் ஜொலிக்கும் வகையில் வண்ண வண்ண மின்விளக்கு சரங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. முக்கிய கோவில்களும், அயோத்தி அரச குடும்ப மாளிகையான 'ராஜ் சதன்' ஆகியவையும் விளக்குகளால் ஜொலிக்கின்றன.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை, தீபாவளி பண்டிகையைபோல் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி கொண்டாடுங்கள் என்று பிரதமர் மோடி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
அதன்படி இன்று இரவு அயோத்தியில் 10 லட்சம் விளக்குகள் ஏற்றப்படும். அதுபோல், நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் 'ராம ஜோதி' ஏற்றி வைக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- புத்தகத்தை அச்சிடுவதற்கான காகிதம் பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
- புத்தகத்தை அச்சிடுவதற்கான மை ஜப்பானில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் ஒரு புத்தக விற்பனையாளர் ரூ.1.65 லட்சம் மதிப்பிலான ராமாயண புத்தகத்தை கோவிலுக்குப் பரிசாக வழங்க உள்ளார். இதுவே உலகில் உள்ள ராமாயண புத்தகங்களில் மிகவும் விலை உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்து அந்த புத்தக விற்பனையாளரான மனோஜ் சாத்தி வெளியிட்டு உள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
வால்மீகி எழுதிய ராமாயணப் புத்தகம். கடவுள் ராமரின் வாழ்க்கை வரலாற்றை நமக்குக் கூறும் அருமையான புத்தகமாகும்.
தற்போது உலகின் மிக விலை உயர்ந்த ராமாயணப் புத்தகத்தை நான் உருவாக்கி உள்ளேன். இதன் மதிப்பு ரூ.1.65 லட்சமாகும். 3 அழகான பெட்டிகளில் அச்சிட்டு இந்தப் புத்தகம் வைக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் 3 அடுக்குகளாக அமைவதைக் குறிக்கும் பொருட்டு 3 பெட்டிகளில் புத்தகம் தயாராகி உள்ளது.
இந்தப் புத்தகத்தை அச்சிடுவதற்கான காகிதம் பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த காகிதம் மீது அமிலத்தை வீசினாலும் அழியாது. புத்தகத்தின் அட்டை பகுதியானது இறக்குமதி செய்யப்பட்ட கச்சாப் பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
புத்தகத்தை அச்சிடுவதற்கான மை ஜப்பானில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ளது. புத்தகம் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் அமெரிக்காவில் உள்ள வால்நட் மரம், குங்குமப்பூ மரங்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
புத்தகத்தின் எடை 45 கிலோவாக இருக்கும். இது 400 வருடங்கள் ஆனாலும் அழியாது.
நான்கு தலைமுறைகளுக்கும் மேல் இந்தப் புத்தகத்தை படிக்க முடியும். தற்போது மிகவும் அழகான அயோத்தி நகரை அடைந்துள்ளோம். மிகவும் விலை உயர்ந்த ராமாயணப் புத்தகத்தைப் போலவே, அயோத்தி நகரும் சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
எனவே அயோத்தியில் மிகவும் அழகிய ராமாயணம் இருக்கிறது என்று சொல்லலாம். புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் வித்தியாசமான டிசைன்கள் இருக்கும். கோவில் நிர்வாகத்திடம் புத்தகத்தை விரைவில் வழங்க உள்ளோம்.
இவ்வாறு மனோஜ் சாந்தி கூறினார்.
- அயோத்தி கோவில் முழுவதும் நாடு முழுவதும் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
- பிரதமர் மோடி 11 நாட்கள் இளநீர் மட்டும் அருந்தி மிக கடுமையான விரதத்தை மேற்கொண்டுள்ளார்.
அயோத்தி:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 108 ஏக்கர் பரப்பளவில் ராமர் கோவில் வளாகம் அமைகிறது.
அதில் 71 ஏக்கரில் ஆங்காங்கே தற்போது கட்டுமான பணிகள் நடக்கிறது. இதில் 5.7 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்குகளில் ராமர் ஆலயம் கட்டப்பட்டு வருகிறது.
360 அடி நீளம், 235அடி அகலம், 161 அடி உயரம் கொண்டதாக ராமர் ஆலயம் இருக்கும். இந்த ஆலயத்தில் 392 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 44 நுழைவு வாயில்கள் இருக்கின்றன.
மூலவராக 5 வயது பால ராமர் இடம் பெறுகிறார். ஆலயத்தின் மற்ற பகுதிகளில் விநாயகர், சிவன், அனுமன், சூரியன், துர்கா, அன்னபூரணி, வால்மீகி, வசிஸ்டர், விசுவாமித்திரர், அகத்தியர் உள்பட பல்வேறு சன்னதிகளும் கட்டப்பட உள்ளன.
கருவறையில் நாளை (திங்கட்கிழமை) பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இதையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அயோத்தியில் பூஜைகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக அயோத்தி நகரம் திருவிழா கோலம் பூண்டு இருக்கிறது. இன்னொரு தீபாவளி போல அயோத்தி நகர மக்கள் ராமர் கோவில் பால ராமர் பிரதிஷ்டை விழாவை கொண்டாடி வருகிறார்கள்.
அயோத்தி கோவில் முழுவதும் நாடு முழுவதும் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. சிறப்பு மின் விளக்கு அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன. இதனால் அயோத்தி ராமர் கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது.
அயோத்தி நகர் முழுக்க ஆங்காங்கே பிரமாண்டமான பதாகைகளை வைத்துள்ளனர். பல இடங்களில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ராமரின் வில்-அம்பு வடிவங்களும் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன.
ராமர் சிலை பிராண பிரதிஷ்டைக்கு முன்பு 7 நாட்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த வியாழக்கிழமை இரவு கருவறைக்கு பால ராமர் எடுத்து கொண்டு செல்லப்பட்டு பீடத்தில் நிறுவப்பட்டது.
பால ராமர் சிலை சுமார் 5 அடி உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மைசூருவை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் இந்த சிலையை வடிவமைத்துள்ளார். 200 கிலோ எடை கொண்ட இந்த பாலராமர் சிலை 3 ஆயிரம் கோடி ஆண்டுகள் பழமையான கல்லில் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
நேற்று இந்த சிலையின் புகைப்படம் வெளியிடப்பட்டது. சமூக வலைதளங்களில் அந்த படம் வைரலாக பரவியது. இந்த புதிய சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கருவறையில் நேற்று வாஸ்து பூஜைகள் நடத்தப்பட்டன. இன்று (ஞாயிற்றுக்கிழமை)யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நாளை காலை பூர்வாங்க பூஜைகள் அனைத்தும் நிறைவு பெறும். இதையடுத்து நாளை மதியம் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். நாளை அபிஜித் முகூர்த்த நேரத்தில் இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த நேரம் நாளை பகல் 11.51 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணிக்குள் முடிகிறது. எனவே இந்த குறிப்பிட்ட நேரத்தில் பால ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளனர்.
அதிலும் மிகவும் நல்ல நேரமாக 12.29 நிமிடங்கள் 8 வினாடிகள் முதல் 12.30 நிமிடங்கள் 32 வினாடிகள் வரை என மொத்தம் 84 வினாடிகளில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி முன்னிலையில் இந்த பிரதிஷ்டை நடைபெறும். இதற்காக பிரதமர் மோடி 11 நாட்கள் இளநீர் மட்டும் அருந்தி மிக கடுமையான விரதத்தை மேற்கொண்டுள்ளார்.
வாரணாசி ஆலயத்தை சேர்ந்த ஆச்சார்யார்கள் முன்னிலையில் பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. ராமர் சிலை பிரதிஷ்டையின்போது சடங்குகளை முன்னின்று நடத்த நாடு முழுவதும் இருந்து 14 தம்பதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் தென் தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆடலரசனும், அவரது மனைவியும் இடம் பெற்றுள்ளனர். நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு பகுதிகளில் இருந்து 14 தம்பதிகளும் தேர்வாகி இருக்கிறார்கள்.
ராமர் சிலை பிரதிஷ்டையின்போது இந்த 14 தம்பதிகளும் பிரதிஷ்டை விழா தொடர்பான சடங்குகளை முன்னின்று நடத்துவார்கள். இதற்காக அவர்களுக்கு இன்று சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
விழாவில் சுமார் 8 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 8 ஆயிரம் பேரில் சுமார் 2 ஆயிரம் பேர் சாதுக்கள். மற்றவர்கள் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் ஆவார்கள். ஒரே இடத்தில் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்க இருப்பதால் அயோத்தி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
அயோத்தி ஆலயத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அயோத்தி முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய பிரமுகர்கள் பிரதிஷ்டை முடிந்ததும் வழிபடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கவும் அயோத்தி ஆலய அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
அயோத்தி ஆலய விழா நாளை நாடு முழுவதும் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்து அமைப்புகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் தங்கள் பகுதிகளில் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
நாடு முழுவதும் உள்ள ஆலயங்களிலும் நேரடி ஒளிபரப்புக்கு சிறப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் சிறைவாசிகளும் அயோத்தி ஆலய விழாவை கண்டுகளிப்பதற்காக சிறைச்சாலைகளில் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பால ராமர் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு அயோத்தி முழுவதும் ஆங்காங்கே அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களுக்கு லட்டு மற்றும் இனிப்புகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான லட்டுகள் தயாரிக்கப்பட்டு அயோத்திக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.
அயோத்தி ராமர் கோவில் விழாவை இந்தியா கூட்டணி தலைவர்கள் புறக்கணித்த நிலையில் பா.ஜ.க. கூட்டணி தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர். பிரதிஷ்டை விழா நடைபெறும் நாளை முழுவதும் பொதுமக்கள் யாரும் ஆலயத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் பொதுமக்கள் அயோத்தி ஆலயத்துக்கு சென்று பால ராமரை வழிபடலாம். நாடு முழுவதிலும் இருந்து அடுத்த 2 மாதங்களுக்கு பொதுமக்களை அழைத்து வந்து ராமரை வழிபட வைக்க பாரதிய ஜனதா கட்சி சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதற்காக இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. தினமும் 1 லட்சத்துக்கும் மேல் பக்தர் கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 5 அடி உயரமுள்ள பால ராமர் சிலை மிகப்பெரிய பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதனால் சுமார் 20 அடி தூரத்தில் வரும்போதே பால ராமர் சிலையை எளிதாக பக்தர்கள் பார்த்து வழிபட முடியும்.
- வெளிநாடுகளில் இருந்து சுமார் 100 உயரதிகாரிகள் ராமர் கோவில் நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
- மிதக்கும் எல்இடி திரையின் முழு திரையின் நீளம் 69 அடி ஆகும்.
உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (ஜனவரி 22ம் தேதி) மிக விமரிசையாக நடைபெறுகிறது.
இந்த விழாவிற்கு முக்கிய அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என ஏராளமோனோர் அழைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து சுமார் 100 உயரதிகாரிகள் ராமர் கோவில் நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
பிரான் பிரதிஷ்டை என்று கூறப்படும் இந்நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப அயோத்தியில் உள்ள சரயு காட்டில் இந்தியாவின் மிகப்பெரிய ஒளி-உமிழும் டையோட்கள் (எல்இடி) மிதக்கும் திரை நிறுவப்பட்டுள்ளது.

மிதக்கும் எல்இடி திரையின் முழு திரையின் நீளம் 69 அடி மற்றும் உயரம் 16 அடி ஆகும். பக்தர்கள், பிரதிஷ்டை விழாவை நேரடியாக ஒளிபரப்ப குஜராத் நிறுவனம் திரையை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து மிதக்கும் எல்இடி திரையின் எம்டி அக்ஷய் ஆனந்த் கூறியதாவது:-
இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் எல்இடி திரையை குஜராத் நிறுவனம் ஒன்று ஜனவரி 22ம் தேதி நடைபெறும் வரலாற்று நிகழ்வுக்காக தயாரித்துள்ளது. இதில், பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சி நேரடியாக சரயு காட்டில் இருந்து நேரடியாக காண்பிக்கப்படும்.
இந்த முழு திரையின் நீளம் 69 அடி மற்றும் உயரம் 16 அடி., இது முழு மிதக்கும் எல்இடி திரை தோராயமாக 1100 சதுர அடியாக உள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பிரதமர் மோடி முக்கிய பூஜைகளை நடத்த உள்ளார்.
- முக்கிய பிரமுகர்கள் வருகை காரணமாக அயோத்தி முழுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அயோத்தி:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 3 அடுக்குகளுடன் மிக பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
அந்த ஆலயத்தின் தரைதளத்தில் நாளை மறுநாள் (22-ந்தேதி) 5 வயது பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. மைசூருவை சேர்ந்த சிற்பி செய்துள்ள அந்த சிலை தற்போது கருவறையில் பீடத்தில் நிறுத்தப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன.
முக்கிய நிகழ்ச்சியான சிலை பிரதிஷ்டை 22-ந்தேதி (திங்கட்கிழமை) மதியம் 12.20 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி முக்கிய பூஜைகளை நடத்த உள்ளார். இந்த விழாவில் பங்கேற்குமாறு 7 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சுமார் 2 ஆயிரம் பேர் சாதுக்கள் ஆவார்கள். மீதமுள்ள சுமார் 5 ஆயிரம் பேர் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் ஆவார்கள். இதனால் 22-ந்தேதி அயோத்தி மாநகரம் மிகப் பெரிய விழா கோலத்தை எதிர்நோக்கி உள்ளது.
பிரதமர் மோடி உள்பட முக்கிய பிரமுகர்கள் ஒரே இடத்தில் பங்கேற்க இருப்பதால் அயோத்தியில் அதிநவீன கருவிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அயோத்தி ராமர் கோவிலில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆலய கருவறைப் பகுதியில் சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்படுவார்கள்.
அவர்களுக்கு பிறகு 2-வது அடுக்கில் மத்திய துணைநிலை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 3-வது அடுக்கில் உத்தரபிரதேச மாநில போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.
முதல் அடுக்கில் இருக்கும் சிறப்பு பாதுகாப்பு படையில் 100 கமாண்டோ வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் நன்கு குறிபார்த்து சுடும் வல்லமை பெற்றவர்கள். மேலும் அனைத்து வகையான நவீன கருவிகளையும் கையாள பயிற்சி பெற்றவர்கள்.
ஆலயத்தின் நுழைவு வாயில் பகுதியில் துணைநிலை ராணுவ வீரர்கள் 1,400 பேர் நிறுத்தப்பட்டு இருப்பார்கள். அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஆலய வளாகம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை தொடர்ந்து ஆலயத்துக்கு வெளியே உத்தரபிரதேச மாநில உள்ளூர் போலீசார் பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் ஈடுபடுவார்கள். அயோத்தி நகரம் முழுக்க உள்ளூர் போலீசார் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இருக்கும்.
முக்கிய பிரமுகர்கள் வருகை காரணமாக அயோத்தி முழுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர பேரிடர் மீட்பு குழுவினரும் உத்தரபிரதேசம் முழுக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அயோத்தியில் சிறப்பு பேரிடர் மீட்பு குழு ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த குழு இயற்கை சீற்றங்களின்போது எத்தகைய ஆபத்து ஏற்பட்டாலும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டது. அவர்களும் நவீன கருவிகளுடன் அயோத்தியில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

ராமர் சிலையின் உயரம்
4.25 அடி
அகலம்
3 அடி
மொத்த எடை
1.5 டன்
மூலவர் சிலை ராமரின் வயது
5
மூலவரின் தோற்றம்
பரந்த நெற்றி, வசீகரமான கண்கள், நீண்ட கைகள்.
சிலை வடிவமைக்கப்பட்ட கல்
கர்நாடகத்தின் கருப்பு பாறைகளில் இருந்து செதுக்கப்பட்டது.
அடித்தளம்
தாமரையில் ராமர் நிற்பது போன்ற வடிவம்.
ராமர் சிலையைச் சுற்றியுள்ள பிரபையில் அமைந்துள்ளவை
தசாவதாரம், ஸ்வஸ்திக் சின்னத்துடன் ஓம், சுதர்சன சக்ரம், கதாயுதம், சூரியன், சந்திரன்.
சிலையைச் செதுக்கியவர்
மைசூருவைச் சேர்ந்த அருண் யோகிராஜ்.
- அலிகாரில் இருந்து 400 கிலோ எடையுள்ள பூட்டு மற்றும் சாவி அயோத்திக்கு வந்தடைந்தன.
- 6 மாதங்களில் தயாரிக்கப்பட்ட இந்த பூட்டு 10 அடி உயரமும் 4.5 அடி அகலமும் கொண்டது.
லக்னோ:
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். ராமர் கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான 7 நாட்கள் பூஜையானது கடந்த 16-ம் தேதி தொடங்கியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு பரிசுப் பொருட்கள், நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், அலிகாரில் இருந்து 400 கிலோ எடையுள்ள பூட்டு மற்றும் சாவி அயோத்திக்கு வந்தடைந்தன. இந்த பூட்டு இந்து மகா சபா சார்பில் அயோத்தி ராமர் கோவிலுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 6 மாத காலமாக தயாரிக்கப்பட்ட இந்த பூட்டு 10 அடி உயரமும் 4.5 அடி அகலமும் கொண்டது. இது உலகின் மிக பெரிய பூட்டு என்ற சாதனையை படைத்துள்ளது.
இந்த பூட்டை உருவாக்கிய அலிகாரை சேர்ந்த கைவினைக் கலைஞர் சத்யா பிரகாஷ் ஷர்மா சமீபத்தில் காலமானார். அயோத்தி ராமர் கோவிலுக்கு இந்த பூட்டை பரிசாக வழங்கவேண்டும் என்பதே அவரது கடைசி ஆசை என அவரது மனைவி ருக்மணி ஷர்மா தெரிவித்தார்.
#WATCH | Uttar Pradesh: Lock and Key weighing around 400 kg, made in 6 months arrives at Ayodhya from Aligarh, ahead of the Pran Pratishtha ceremony on 22nd January. pic.twitter.com/Agl4I1nThK
— ANI (@ANI) January 20, 2024
- சுமார் 55 நாடுகளில் இருந்து நூறு உயர் அதிகாரிகள் விழாவில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
- ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதற்காக, சிறப்பான ஏற்பாடுகளை கோவிலின் அறக்கட்டளை செய்து வருகிறது. திறப்பு விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள முக்கிய தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டில் மட்டுமல்ல சுமார் 55 நாடுகளில் இருந்து நூறு உயர் அதிகாரிகள் விழாவில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

சில மாநிலங்களில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 22ம் தேதி அன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு 22ம் தேதி பிற்பகல் 2.30 மணி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
ராமர் கோவில் திறப்பு விழா தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு ஏதுவாக அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






