என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • திருப்பரங்குன்றம் மலையின் மீது சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது.
    • இந்துத்துவ அமைப்பினர் பிரச்சனை செய்ய தொடங்கியுள்ளனர்.

    திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் முருகன் கோயிலும், மலையின் மீது காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது. தர்காவும், கோயிலும் அருகருகே அமைந்துள்ளதை வைத்து இந்துத்துவ அமைப்பினர் பிரச்சனை செய்ய தொடங்கியுள்ளனர்.

    அதிலும் சமீபத்தில் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். ஜிவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு இன்னும் பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது. அவரை இம்பீச்மெண்ட் செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தீர்மான கடிதமும் வழங்கியுள்ளனர்.

    இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அது புரளி என்று தெரியவந்தது.

    இந்நிலையில், மீண்டும் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தர்காவில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் போலி என்று தெரிய வந்தது

    • மாவட்ட நீதிபதி செம்மல், காஞ்சீபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்
    • மாவட்ட நீதிபதிக்கும், துணை போலீஸ் சூப்பிரண்டுக்கும் ஏற்கனவே முன்பகை உள்ளது.

    வன்கொடுமை தடுப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தவறியதற்காக மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செம்மல், காஞ்சீபுரம் சட்டம்-ஒழுங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதில் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கோர்ட்டு நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு அரசு தரப்பில் முறையிடப்பட்டது.

    அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மாவட்ட நீதிபதிக்கும், துணை போலீஸ் சூப்பிரண்டுக்கும் ஏற்கனவே முன்பகை உள்ளது. அதில்தான் இப்படி ஒரு உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார் என்றார்.

    இதையடுத்து காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை உடனடியாக விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவர் மீதான வழக்கு விசாரணைக்கும் தடைவிதித்து உத்தரவிட்டது.

    இதனையடுத்து, முன்பகை விவகாரத்தில் டி.எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவு பிறப்பித்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல், அரியலூர் லோக் அதாலத் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    இந்நிலையில், காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உயர்நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு பிறகு நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமைப்பதிவாளர் அல்லி தெரிவித்துள்ளார்.

    • அரசு பஸ் மற்றும் ஒரு தனியார் மினிபஸ்சுக்கு இடையே யார் முன்னே சென்று பயணிகளை ஏற்றி செல்வது தொடர்பாக பிரச்சனை எழுந்தது.
    • பஸ் நிலையத்தில் இரண்டு பஸ்களும் நிறுத்தப்பட்டு இரண்டு பஸ் டிரைவர், கண்டக்டர்களும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கி வருகிறது. இது தவிர ஏராளமான மினிபஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. எப்போதும் பழைய பஸ் நிலையம் பயணிகள் கூட்டத்தால் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

    இந்த நிலையில் இன்று அரசு பஸ் மற்றும் ஒரு தனியார் மினிபஸ்சுக்கு இடையே யார் முன்னே சென்று பயணிகளை ஏற்றி செல்வது தொடர்பாக பிரச்சனை எழுந்தது. இதில் 2 நிமிட நேர பிரச்சனையால் அரசு பஸ்சை மறித்து தனியார் மினி பஸ் டிரைவர் திடீரென பயணிகளை ஏற்றி கொண்டு செல்ல முற்பட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அரசு பஸ் டிரைவர் , கண்டக்டர் அந்த மினிபஸ்சை நிறுத்தி சிறை பிடித்தனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பஸ் நிலையத்தில் இரண்டு பஸ்களும் நிறுத்தப்பட்டு இரண்டு பஸ் டிரைவர், கண்டக்டர்களும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு பதட்டம் உருவானது,

    இது பற்றி தகவல் அறிந்த மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு பஸ் டிரைவர், கண்டக்டர்களையும் சமதானப்படுத்தினர். மேலும் முன்கூட்டியே பயணிகளை ஏற்ற முற்பட்ட தனியார் மினி பஸ்சை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பஸ்கள் வழக்கம்போல் இயங்கின.

    தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இதுபோல் அடிக்கடி யார் பஸ்சை முன்னே எடுப்பது போன்ற நேர பிரச்சனை ஏற்படுவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • கலெக்டர் பவன்குமார் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணியை பார்வையிட்டார்.
    • எந்திரங்களை சரிபார்க்கும் பணியில் பெல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    கோவை:

    கோவை தெற்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள தனி கட்டிடத்தில் கோவை மாவட்டத்திற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இங்குள்ள எந்திரங்களை 3 மாதங்களுக்கு ஒருமுறை கலெக்டர் தலைமையில் அரசியல் கட்சி பிரமுகர் முன்னிலையில் திறந்து பார்க்கப்பட்டு பின்னர் அந்த அறைக்கு சீல் வைப்பது வழக்கம்.

    தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இதனையொட்டி இன்று கோவையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது.

    அதன்படி கோவை தெற்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள தனி கட்டிடத்தில் 8,391 வாக்குப்பதிவு கருவி எனப்படும் பேலட் எந்திரங்கள், 5 ஆயிரத்து 245 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 5,885 வாக்குச்சீட்டு சரிபார்க்கும் கருவி எனப்படும் வி.வி.பேட் எந்திரம் என மொத்தம் 19,521 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளன.

    இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் முதல்கட்ட சோதனை பணி இன்று கலெக்டர் பவன்குமார் தலைமையில், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது.

    அப்போது கலெக்டர் பவன்குமார் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணியை பார்வையிட்டார். இந்த எந்திரங்களை சரிபார்க்கும் பணியில் பெல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகளானது 1 மாதம் வரை நடைபெற உள்ளது. இதனை தினமும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சரிபார்க்கும் பணியில் 19 ஆயிரம் மின்னணு எந்திரங்களும் தற்போது எந்த நிலையில் உள்ளது என பரிசோதனை செய்யப்படும். வேட்பாளர்கள் பெயர் பட்டியல் ஒட்டப்படும் பேலட் எந்திரத்தின் அனைத்து பொத்தான்களும் சரியாக செயல்படுகிறதா என்பது குறித்து சரிபார்க்கப்படுகிறது. மேலும் அந்த எந்திரத்தில் உள்ள தேர்தல் கால தகவல்கள் அனைத்தும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் அழிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    நாளை தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    13 மற்றும் 14-ந்தேதிகளில் தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    15-ந்தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    16 மற்றும் 17-ந்தேதிகளில் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனிடையே இன்று முதல் 13-ந்தேதி வரை தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 15-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவ விடுப்பில் சென்றார்.
    • ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஜிபியான அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி ஆக அபய்குமார் சிங் பொறுப்பேற்றார்.

    பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவ விடுப்பில் சென்றார். இதையடுத்து வெங்கட்ராமனுக்கு பதில் பொறுப்பு டிஜிபியாக அபய்குமார் சிங்கை தமிழக அரசு நியமித்தது.

    ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஜிபியான அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

    பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் 15 நாட்கள் தொடர் விடுப்பில் உள்ளதால் அபய்குமாருக்கு கூடுதல் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளன.
    • வருகிற 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ஒரு வாரத்திற்கு விருப்ப மனுக்கள் பெறப்படும்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தல்களில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் உள்ள தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடம் இருந்து வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 20-ந்தேதி (சனிக்கிழமை) வரை ஒரு வாரத்திற்கு விருப்ப மனுக்கள் பெறப்படும்.

    சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள கட்சித் தலைவர் அலுவலகத்தில் மேற்குறிப்பிடப்பட்ட நாள்களில் தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். போட்டியிட விருப்பம் தெரிவிப்பதற்கான விண்ணப்பங்களை வாங்குபவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாளான திசம்பர் 20-ந் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை நிரப்பி, பனையூர் அலுவலகத்தில் தலைமை நிலைய நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்தியாவைக் கனவு கண்ட மகத்தான கவிஞன் பாரதியின் பிறந்த நாள் இன்று.
    • டிசம்பர் குளிரில் இந்தியத் திருநாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் நின்றபடி..

    இந்திய திருநாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் நின்றபடி மகாகவியின் சொற்களை மனதில் ஏந்துகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    "எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்

    எல்லாரும் இந்திய மக்கள்,

    எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை

    எல்லாரும் இந்நாட்டு மன்னர்"- என அனைவரையும் உள்ளடக்கிய வலிமையான இந்தியாவைக் கனவு கண்ட மகத்தான கவிஞன் பாரதியின் பிறந்த நாள் இன்று.

    டிசம்பர் குளிரில் இந்தியத் திருநாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் நின்றபடி மகாகவியின் சொற்களை மனதில் ஏந்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண்களின் உயர்கல்வியை உறுதிசெய்யும் நமது அரசின் திட்டத்துக்குப் பாரதியின் கவிதையில் இருந்தே புதுமைப்பெண் எனப் பெயரிட்டோம்.
    • சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் புதுமையை நோக்கி விரைந்து தமிழ்ச்சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதி.

    மகாகவி சுப்ரமணிய பாரதியின் 144-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    "திறமையால் இங்கு மேனிலை சேர்வோம்;

    தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்" எனப் பாடிப் பெண்களின் உயர்வை வலியுறுத்திய மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாள்!

    நமது திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்ததுமே பாட்டுக்கொரு புலவன் பாரதி மறைவெய்திய நூற்றாண்டினையொட்டி அவரது புகழ் பரப்பும் 14 சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டுச் செயல்படுத்தி வருகிறோம்.

    பெண்களின் உயர்கல்வியை உறுதிசெய்யும் நமது அரசின் திட்டத்துக்குப் பாரதியின் கவிதையில் இருந்தே புதுமைப்பெண் எனப் பெயரிட்டோம்.

    பாரதியாரின் நினைவுநாளினை "மகாகவி நாள்" எனக் கடைப்பிடிக்கவும் அறிவிப்பு செய்தோம்.

    சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் புதுமையை நோக்கி விரைந்து தமிழ்ச்சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு நிர்வாகிகளையும் தனித்தனியாக சந்தித்து கட்சி நிலவரங்களை கேட்டறிந்து வருகிறார்.
    • அரசு திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்து சொல்லி வருகிற தேர்தலில் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    சென்னை:

    சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன்பிறப்பே வா' என்ற நிகழ்ச்சியின் மூலம் சட்டசபை தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் நடைபெற்று வரும் உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் தினமும் 2 அல்லது 3 சட்டசபை தொகுதி நிர்வாகிகள் பங்கேற்று வந்தனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு நிர்வாகிகளையும் தனித்தனியாக சந்தித்து கட்சி நிலவரங்களை கேட்டறிந்து வருகிறார்.

    அந்த வகையில் இன்று தாராபுரம், காங்கேயம் தொகுதி நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து ஆலோசித்தார். அரசு திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்து சொல்லி வருகிற தேர்தலில் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    கடந்த 46 நாட்களில் மட்டும் 105 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அனைத்து மாவட்டங்களில் மாவட்ட தலைநகரங்களில் உள்ள கிடங்குகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.
    • பெல் நிறுவன பொறியாளர்கள் இந்தப் பணியை மேற்கொள்ள உள்ளனர்.

    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தலில் பயன்படுத்தபட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் இன்று தொடங்கியது. ஜனவரி 24-ந்தேதி வரை இந்த பணிகள் நடைபெற உள்ளது.

    தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற உள்ளது. இதில் பயன்படுத்த தற்போது 1.30 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது.

    அனைத்து மாவட்டங்களில் மாவட்ட தலைநகரங்களில் உள்ள கிடங்குகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரங்களில் முதல் நிலை சரி பார்ப்பு பணி நாளை முதல் தொடங்க உள்ளது. பெல் நிறுவன பொறியாளர்கள் இந்தப் பணியை மேற்கொள்ள உள்ளனர்.

    அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இந்தப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக அரசியல் கட்சிகளிடம் இருந்து பிரதிநிதிகள் பட்டியல் பெறப்பட்டு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாத பிரதிநிதிகளுக்கு அனுமதி அளிக்கப்படாது.

    இதன்படி பிரதிநிதிகள் இந்தப் பணி மேற்கொள்ளப்படும் நாட்களில் காலை 8.45 மணி முதல் மாலை 7 மணிவரை எந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறையில் இருக்க வேண்டும்.

    முதல் நிலை சரிபார்ப்பு பணியின் நிறைவாக அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் தவறாது மாதிரி வாக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    முதல் நிலை சரிபார்ப்பு பணியில் பழுதானது என கண்டறியப்படும் எந்திரங்கள் பெங்களூரு பெல் நிறுவனத்திற்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • 2003ம் ஆண்டு முதல் விஜயக்கு மக்கள் தொடர்பு அலுவலராக பி.டி.செல்வகுமார் இருந்தார்.
    • கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் உள்ள பி.டி.செல்வகுமார் திமுகவில் இணைந்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி.செல்வகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

    அப்போது தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் ரெ.மகேஷ், ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

    தி.மு.க.வில் இணைந்த பி.டி.செல்வகுமார் த.வெ.க. தலைவர் விஜய்யின் முன்னாள் மேலாளர் ஆவார்.

    பின்னர் பி.டி. செல்வகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை சிறப்பாக ஆண்டு கொண்டிருக்கிறார். தி.மு.க.வின் கட்டமைப்பு என்னை ஈர்த்ததால் நானும் கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகளும் தி.மு.க.வில் இணைந்து உள்ளோம்.

    விஜய் மக்கள் இயக்கத்துக்கு நான் ஒரு தூணாக இருந்து பணியாற்றினேன். அதில் புதிது புதிதாக உள்ளே வந்தவர்களால் அங்கு என்னை போன்றவர்களை பயணம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.

    விஜய் மக்களையும், ரசிகர்களையும் சரியான படி வழி நடத்தி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வாரா என்பது எனக்கு தெரியவில்லை.

    விஜய்யிடம் நல்ல கூட்டமும் இருக்கிறது. தீய கூட்டமும் இருக்கிறது. தீய கூட்டம் நல்லவர்களை வெளியே தள்ளிவிடும். சுற்றி இருப்பவர்கள் சரியாக அமையாவிட்டால் புகழ் பெற்றவர்களை கூட வேறு திசைக்கு கொண்டு சென்று விடுவார்கள்.

    சினிமா வேறு, அரசியல் வேறு. நிலவு கொஞ்ச நாள் தான் இருக்க முடியும். ஆனால் சூரியன் என்றும் இருக்கும். அதன் பிரகாசம் மக்களுக்கு நல்லது. அதனால் தான் நான் சூரியன் பக்கம் வந்திருக்கிறேன்.

    விஜய் சிறப்பாக செய்தால் எனக்கு சந்தோசம் தான். 27 ஆண்டுகள் உழைத்து உள்ளேன். இப்போது வந்தவர்களால் வேதனையை அனுபவித்தேன். த.வெ.க.-வில் தலைமை சரியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் தொண்டர்களை வழி நடத்தமுடியும். விஜய் நல்லபடியாக வர வேண்டும் என்பது எனது ஆசைதான். ஆனால் எனது பயணத்துக்கு அது சரியான இடம் இல்லை. விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறாது. நடிகர், நடிகைகள் எங்கு வந்தாலும் கூட்டம் கூடும். விஜய் ஒரு நிலவு அவரை மக்கள் ரசிக்க மட்டும்தான் முடியும்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் 224 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×