என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
    • காயமடைந்த தமிழக மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் புதுப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் ஜெகன், ராமகிருஷ்ணன், செந்தில், சாமுவேல் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த தமிழக மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் ரூ.2 லட்சம் மதிப்பிலான எஞ்சின், ஜிபிஎஸ், 2 செல்போன்கள், பேட்டரி மற்றும் 30 கிலோ மீன்களை பறித்துச் சென்றனர்.

    • அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடி வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் அரசு பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பு அடைந்துள்ளது.
    • இதுவரையில் மிக குறைந்த அளவில் இருந்த முன்பதிவு ஒரு சில நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிந்துவிட்டதால் மாணவர்கள் விடுமுறையை கழிக்க வெளியூர் செல்கிறார்கள். உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு 24-ந் தேதியுடன் தேர்வு முடிகிறது.

    கோடை விடுமுறை விடப்பட்டதால் வெளியூர் பயணம் இன்று அதிகரித்துள்ளது. நாளை புனித வெள்ளி என்பதால் அரசு விடுமுறையாகும். அதனை தொடர்ந்து சனி, ஞாயிறு பொதுவான விடுமுறை வருவதால் சொந்த ஊர்களுக்கு பயணத்தை தொடங்கி உள்ளனர்.

    ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் அரசு பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பு அடைந்துள்ளது. இதுவரையில் மிக குறைந்த அளவில் இருந்த முன்பதிவு ஒரு சில நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் மே மாதம் வரையில் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும் பிற மாவட்டங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பொதுமக்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள். இன்றைய நிலவரப்படி ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர்.

    இதுகுறித்து அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கோடை விடுமுறையில் வெளியூர் பயணம் அதிகரிக்கும். இந்த வருடம் கடந்த ஆண்டை விட கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அரசு விரைவு பஸ்களுக்கு 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. தற்போது 1000 பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. அடுத்த மாதம் முதல் கூடுதலாக 100 பஸ்கள் இயக்கப்படும். புதிதாக 50 ஏ.சி.பஸ்கள் மே மாதம் விடப்படுகிறது.

    இந்த மாதத்தின் இறுதியில் இருந்து வெளியூர் பயணம் மேலும் அதிகரிக்கும். கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்து பயணத்தை தொடரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • தீரன் சின்னமலை படத்திற்கு அமைச்சர்கள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    சென்னை:

    சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாளையொட்டி, கிண்டியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    மாவீரன் தீரன் சின்னமலை படத்திற்கு அமைச்சர்கள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீரன் சின்னமலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். 

    • நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.95-ம், சவரனுக்கு ரூ.760-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 815-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 9-ந் தேதியில் இருந்து 'கிடுகிடு'வென உயர்ந்து வந்து, கடந்த 12-ந் தேதி ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 160-க்கு விற்பனை ஆனது. இது அப்போது இதுவரை இல்லாத உச்சமாக பார்க்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து 14-ந் தேதியில் இருந்து விலை சற்று குறையத் தொடங்கியது. அன்றைய தினம் சவரனுக்கு ரூ.120-ம், அதற்கு மறுநாள் சவரனுக்கு ரூ.280-ம் குறைந்து மீண்டும் ஒரு சவரன் தங்கம் ரூ.70 ஆயிரத்துக்கு கீழ் வந்து ஆறுதலை கொடுத்தது.

    இந்த நிலையில் நேற்று விலை ஏறுமுகத்தை நோக்கி சென்றது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 720-க்கும், ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்து 760-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.95-ம், சவரனுக்கு ரூ.760-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 815-க்கும், ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் வரலாறு காணாத புதிய உச்சத்தை மீண்டும் எட்டியிருந்தது.

    இதனை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கம் கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,920-க்கும் சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,360-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    16-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,520

    15-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760

    14-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    13-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,160

    12-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,160

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    16-04-2025- ஒரு கிராம் ரூ.110

    15-04-2025- ஒரு கிராம் ரூ.110

    14-04-2025- ஒரு கிராம் ரூ.108

    13-04-2025- ஒரு கிராம் ரூ.110

    12-04-2025- ஒரு கிராம் ரூ.110

    • சுதந்திரப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய, முதல் சுதந்திரப் போராட்ட வீரர்.
    • வீரத்தின் அடையாளமாக விளங்கியவர்.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இளம் வயதிலேயே நாட்டுக்காக பெரும் படை திரட்டி, ஆங்கிலேயர்களுக்கு எதிராக இறுதி மூச்சு வரை போராடிய மாவீரன் தீரன் சின்னமலை அவர்கள் பிறந்த தினம் இன்று.

    சுதந்திரப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய, முதல் சுதந்திரப் போராட்ட வீரர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1801 ஆம் ஆண்டு, ஈரோடு காவிரிக் கரை போரிலும், 1802 ஆம் ஆண்டு ஓடாநிலை போரிலும், 1804 ஆம் ஆண்டு அரச்சலூர் போரிலும் பெரும் வெற்றி பெற்றவர். வீரத்தின் அடையாளமாக விளங்கியவர்.

    தன் வாழ்நாளில் பெரும்பகுதியை போர்களில் செலவிட்டிருந்தாலும், சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ள கல்வெட்டுகள் அவரின் ஆலயத் திருப்பணிகளுக்குச் சான்று.

    தன்னுயிரைப் பற்றிக் கவலைப்படாது, நாட்டிற்காகப் போராடி உயிர்த் தியாகம் செய்த தீரன் சின்னமலை அவர்கள் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம் என்று கூறியுள்ளார்.

    • கஸ்தூரி ரங்கன் தலைமையில் பல லட்சம் கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு கொண்டுவரப்பட்டது புதிய கல்விக் கொள்கை.
    • உங்கள் விருப்பு வெறுப்பிற்கு ஏற்ப தமிழக மாணவி மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்து கொண்டிருக்கிறீர்கள்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடனான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் பல்கலைக்கழகங்களில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை மாணவர்களிடையே பரப்பக்கூடாது என்று துணை வேந்தர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிலையில், இது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீங்கள் நேற்று துணைவேந்தர்களை கூப்பிட்டு என்ன சொல்லி இருக்கிறீர்களோ அதுதான் புதிய கல்வி கொள்கை. நீங்கள் ஒருவர் பேசுவதற்காக மட்டும் எழுதி கொடுக்கப்பட்டது அல்ல அது. மரியாதைக்குரிய கஸ்தூரி ரங்கன் தலைமையில் பல லட்சம் கல்வியாளர்களிடம் கருத்து கேட்டு கொண்டுவரப்பட்டது புதிய கல்விக் கொள்கை.

    அதை அறிமுகப்படுத்தும் போது பாரத பிரதமர் மோடி சொன்னது நம் இந்திய குழந்தைகளை வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு உயர்த்துவது தான் இந்த கல்வி. ஆக புதிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக படிக்காமல் மற்ற மாநிலங்கள் எல்லாம் பின்பற்றி மாணவ மாணவிகளை உலக அரங்கிற்கு உயர்த்திக் கொண்டிருக்கும்போது நீங்கள் மோடி எதிர்ப்பு என்ற கருப்பு கண்ணாடியை போட்டுக்கொண்டு உங்கள் விருப்பு வெறுப்பிற்கு ஏற்ப தமிழக மாணவி மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்து கொண்டிருக்கிறீர்கள். உலகளாவிய தலைமையகமாக தமிழக பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டும் என்று சொல்லிவிட்டு பல்கலைக்கழகங்களை உங்கள் தலைமைக் கழக அலுவலகங்களாக மாற்றி விடாதீர்கள். அறிவு அரங்கமாக இருக்க வேண்டிய பல்கலைக்கழகங்களை உங்கள் அறிவாலயங்களாக மாற்றி விடாதீர்கள் என்று கூறியுள்ளார். 

    • மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • கோவில் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் சுமார் 22 மாதங்களுக்கு பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று திறக்கப்பட்டது. இதையடுத்து, மிகுந்த மகிழ்ச்சியுடன் பட்டியலின மக்கள் வழிபாடு செய்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து, திரௌபதி அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ததை தொடர்ந்து நடை சாத்தப்பட்டது.

    தினந்தோறும் ஒரு மணிநேரம் நடை திறக்கப்படும் என்பதன் அடிப்படையில் நடை திறக்கப்பட்டு பின்னர் சாத்தப்பட்டது. கோவில் நடைசாத்தப்பட்ட நிலையில் கோவில் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    • திரௌபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் சென்று அம்மனை மகிழ்ச்சியுடன் வழிபட்டனர்.
    • ஒருதரப்பினரிடம் நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுரை வழங்கினர்.

    விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே உள்ள மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, இருதரப்பினரும் சென்று வழிபட இன்று அதிகாலை முதல் கோவில் திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து பட்டியலின மக்கள் வழிபாடு செய்து வந்தனர்.

    இந்த நிலையில், திரௌபதி அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் வழிபட மற்றொரு தரப்பினர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஒருதரப்பினரிடம் நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுரை வழங்கினர். இருப்பினும் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, திரௌபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியலின மக்கள் சென்று அம்மனை மகிழ்ச்சியுடன் வழிபட்டனர். 

    • 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கோவிலில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே உள்ள மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலில் கடந்த 2023-ம் ஆண்டு பட்டியலின மக்கள் வழிபாடு செய்வதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது.

    இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பட்டியலின மக்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என தெரிவித்தது.



    இதனை தொடர்ந்து, சுமார் 22 மாதங்களுக்கு பிறகு திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    எஸ்.பி. சரவணன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோவிலில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.

    • புதுமுக குழந்தை நட்சத்திர நடிகர் சித்தார்த் பன்னீர் சொந்த குரலில் பாடி நடனமாடியுள்ளார்.
    • அதில் தமிழ், தெலுங்கு , மலையாளம் ,கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகள் அடங்கியுள்ளது.

    சென்னை:

    நியோ கேஸ்டில் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் சத்யா கரிகாலன் தயாரிப்பில், இசையமைப்பாளர் அஸ்வமித்ரா இயக்கத்தில், புதுமுக குழந்தை நட்சத்திர நடிகர் சித்தார்த் பன்னீர் சொந்த குரலில் தமிழ், தெலுங்கு , மலையாளம் ,கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பாடி, நடனமாடியிருக்கும் மிஸ் மேல கிரஷ் ( Miss u Mela Crush u) எனும் வீடியோ ஆல்பம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

    இந்நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து, இசையமைப்பாளர் தேவா, நடிகர்கள் செந்தில், தம்பி ராமையா, கருணாஸ், இளவரசு, ரோபோ சங்கர், பிக்பாஸ் முத்துகுமரன், இயக்குநர்கள் சற்குணம், இரா. சரவணன், போஸ் வெங்கட், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சிமுருகன், காயத்ரி ரகுராம், மாஸ்டர் ராதிகா, சாண்டி மாஸ்டர், ராமர் ரவிக்குமார், கடம்பூர் ராஜா, ரத்தினம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் கருப்பையா பன்னீர்செல்வம் வரவேற்றார்.


    இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் அஸ்வமித்ரா பேசுகையில், மாஸ்டர் சித்தார்த்தை முதலில் வேறு ஒரு பாடலுக்காக தான் அணுகினேன். பெப்பியான அந்த பாடலை பாடமாட்டேன் என சொல்லி விட்டார். அதன்பிறகு ஒரு பாடலை உருவாக்கி கொண்டிருந்தபோது என் பின்னால் நின்று கொண்டு ஒரு பாடலை 'ஹம்' செய்தான். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உடனடியாக பாடுகிறாயா? என கேட்டேன். சொல்லிக் கொடுத்தால் பாடுவேன் என்றான் நம்பிக்கையுடன். அதன்பிறகு தான் இந்தப் பாடலை உருவாக்கினோம். சித்தார்த் திறமைசாலி. எதை சொல்லிக் கொடுத்தாலும் அதனை உடனடியாக கற்றுக்கொண்டு விடுவான். அதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளிலும் அவரே இந்தப் பாடலை பாடியிருக்கிறார்.

    சிலம்ப வித்தையில் மாஸ்டர் சித்தார்த் நேஷனல் சாம்பியன். அவர் சிலம்பத்தில் தேசிய விருதினை வென்றவுடன் அது தொடர்பான பாடலையும் உருவாக்கி இருக்கிறோம். அந்தப் பாடலும் விரைவில் வெளியாகும். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கும், இந்த வீடியோ ஆல்பத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

    இயக்குநர் மற்றும் நடிகர் தம்பி ராமையா பேசுகையில், ''எம் மண்ணின் மைந்தன் சித்தார்த்திற்கு வாழ்த்துகள். இந்நிகழ்வில் நான் தாய்மாமன் எனும் உறவினையும், அதன் மேன்மையையும் காண்கிறேன். சத்யா கரிகாலன் ஆகிய சகோதர சகோதரிகளைப் பார்த்து வியக்கிறேன். அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். சில ஆண்டுக்கு முன் இவர்களின் வீட்டிற்கு ஒருமுறை விஜயம் செய்தபோது சித்தார்த்தை பார்த்தவுடன் மலைக்கள்ளன் எம்ஜிஆரை நேரில் பார்த்தது போல் இருந்தது. சித்தார்த்தின் தாய் சத்யா அவர்கள் சித்தார்த்தை கைபிடித்து உயரத்திற்கு அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சித்தார்த் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். சித்தார்த் அற்புதமாக பாடுகிறார். அதிலும் 5 மொழிகளில் பாடியிருக்கிறார். அவரிடம் ஞானம் இருக்கிறது. அதனை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சித்தார்த் எதிர்காலத்தில் மிகப்பெரிய உயரத்தை தொடுவார் என வாழ்த்துகிறேன்'' என்றார்.

    நடிகர், அரசியல்வாதி கருணாஸ் பேசுகையில், 'இந்த வரலாற்று சிறப்புமிக்க அரங்கத்தில் 6 வயது மதிக்கத்தக்க குழந்தையின் பாடும் திறமையையும், நடனமாடும் திறமையையும் கண்டோம். அனைவரும் பாராட்டினார்கள். ஆனால் இந்த சித்தார்த்திடம் திறமை இருக்கிறது என்று முதலில் கண்டறிந்தவன் நான். இந்த இடம் மிகவும் ராசியானது. இவருடைய திறமை மேலும் வளர்த்து இறைவனின் ஆசியால் மென்மேலும் உயர வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்றார்.

    ரோபோ சங்கர் பேசுகையில், ''குழந்தை நட்சத்திரம் சித்தார்த்துக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். மேடையில் நடனம் ஆடும்போது 'நானே மாஸ்டர்' என சமயோசிதமாக பேசியது என்னை வியக்கவைத்தது. எனக்கும் சின்ன வயசுல மிஸ் மேல் கிரஷ் இருந்தது. குழந்தைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அவருடைய பெற்றோர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்'' என்றார்.

    நடிகர்- இயக்குநர் போஸ் வெங்கட் பேசுகையில், ''சித்தார்த்தின் வீட்டிற்கு சென்றிருக்கிறேன். இவனுக்கு ஒரு தம்பி இருக்கிறார். அவரும் மிகுந்த திறமைசாலி. இருவருமே திறமை மிக்கவர்கள். சகோதரி சத்யா குழந்தையின் நடனத்தைப் போனில் காண்பித்த போது சித்தார்த்தின் நடனத் திறமையை பார்த்து ஆச்சரியப்பட்டேன். ஆனால் 5 மொழிகளில் பாடி, அதனை ஒரு வீடியோ ஆல்பமாக வெளியிடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதனை சித்தார்த் நேர்த்தியாக செய்திருக்கிறார். சித்தார்த்தை விரைவில் நாம் நடிகராகவும் பார்ப்போம். சித்தார்த்தின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்றார்.


    இயக்குநர் இரா. சரவணன் பேசுகையில், ''சித்தார்த் ஆடி பாடி நடித்திருக்கும் இந்த ஆல்பத்தை நடிகர்கள் சசிகுமார், சூரி ஆகியோர் பார்த்தார்கள். இதில் சசிகுமார் - இந்த ஆல்பம் ஹிட் ஆவதற்கு முன்பே இவனிடம் கால்ஷிட் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்றார். அந்த அளவிற்கு அவருக்கு இந்த ஆல்பம் பிடித்திருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சூரி என்னிடம் இந்த ஆல்பத்தை பார்த்த பிறகு, ஆறு மாதத்திற்கு முன்னர் இந்த குழந்தையை பற்றி எனக்குத் தெரிந்திருந்தால் 'மாமன்' படத்தில் நடிக்க வாய்ப்பளித்திருப்பேன் என்றார். அந்த அளவிற்கு சித்தார்த்திடம் ஒரு எனர்ஜிடிக்கான டேலண்ட் இருக்கிறது. இந்த ஆல்பத்தை பார்த்தவுடன் சித்தார்த் மீது 'நம்ம வீட்டு பிள்ளை' என்ற பாசப்பிணைப்பு ஏற்படுகிறது. நாமெல்லாம் இரு மொழி... மும்மொழி... என பேசிக் கொண்டிருக்கும்போது.. சித்தார்த் 5 மொழியில் பாடி ஆடி அசத்தியிருக்கிறார். இதனால் சித்தார்த் புதுக்கோட்டை மண்ணிலிருந்து பாலிவுட் வரை உயர்வார் என உறுதியாக சொல்ல முடியும். இதற்கு இங்கு வருகை தந்திருக்கும் எல்லோரும் சித்தார்த்தை ஆசீர்வதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

    இயக்குநர் சற்குணம் பேசுகையில், ''ஒரு தேர்ந்த நடன கலைஞராகவும் பாடகராகவும் நடிகராகவும் சித்தார்த் இந்த ஆல்பத்தில் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அதிலும் 5 மொழியில் அவர் பாடியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆல்பத்தில் நடனமாடி இருப்பதைவிட அதனை மேடையில் எந்தவித தவறும் இல்லாமல் ஆடுவது தான் தனி சிறப்பு. சித்தார்த்தை தமிழ் சினிமா சார்பாக பாராட்டுகிறேன். தமிழ் சினிமாவின் உச்சம் தொட வாழ்த்துகிறேன்'' என்றார்.

    காயத்ரி ரகுராம் பேசுகையில், ''நடிகர் சிலம்பரசன் சின்ன வயதில் என்னுடன்தான் பாட்டு, நடனம் ஆகியவற்றை கற்றுக் கொண்டார். அத்துடன் நடிப்பு, சண்டை பயிற்சி, உடற்பயிற்சி, இசைக்கருவி வாசிப்பு ஆகியவற்றையும் கற்றுக் கொள்வார். அவர் சின்ன வயதில் கற்றுக்கொண்ட அனைத்து திறமையும் இந்த சித்தார்த்திடமும் இருப்பதை நான் பார்க்கிறேன். சித்தார்த்திற்கு கற்றுக் கொடுப்பதற்கு மாஸ்டர்கள் தயாராக இருந்தாலும்.. பெற்றோர்களின் ஊக்கமும் , ஆர்வமும் என்பது முக்கியம். அதனால் அவர்களுக்கும் நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மேடை ராசியானது. அந்த வகையில் சித்தார்த்தும் ஆண்டவனின் ஆசியுடன் பெரும் புகழை பெறுவார்'' என்றார்.


    • பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே.
    • பிரியங்கா, பிரவீன் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு பிரிந்தனர்.

    சென்னை:

    பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் அதில் ஒளிபரப்பப்படும் சூப்பர் சிங்கர் சீசன்ஸ், ஸ்டார் மியூசிக் சீசன்ஸ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

    இவர் கடந்த 2016-ம் ஆண்டு பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான ஒரு சில வருடங்களிலேயே பிரியங்கா மற்றும் பிரவீன் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு பிரிந்தனர்.

    இந்நிலையில், தற்போது வசி என்பவருடன் பிரியங்காவுக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகின்றன.

    ×