என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இன்று 2-வது நாளாக மருத்துவ முகாம் உறையூர் பகுதியில் நடந்து வருகிறது.
    • மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது.

    திருச்சி:

    திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவில் நேற்று முன்தினம் அங்குசாமி மனைவி மருதாம்பாள் (வயது 75) கோவிந்தராஜ் மனைவி லதா(52) மற்றும் நான்கு வயது சிறுமி பிரியங்கா ஆகியோர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர். குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அவர்கள் இறந்ததாக குற்றச்சாட்டப்பட்டது.

    மேலும் மின்னப்பன் தெரு மற்றும் சுற்றுவட்டார தெருக்களை சேர்ந்த 40 பேர் வாந்தி மற்றும் வயிற்று வயிற்றுப்போக்கு ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என திட்டவட்டமாக மறுத்தது.

    மேலும் வாந்தி-பேதிக்கு அந்த பகுதியில் கடந்த 14-ந் தேதி சித்திரை திருவிழா திருவிழாவில் அன்னதானத்தின் போது வழங்கிய மோர் காரணமாக இருக்கலாம் என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த பிரச்சனையை தொடர்ந்து அந்த பகுதியில் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டது.


    லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. பொதுமக்கள் சந்தேகம் எழுப்பிய பகுதிகளில் குழிதோண்டி பார்த்த பின்னரும் கழிவு நீர் குடிநீரில் கலந்ததற்கான தடயம் எதுவும் காணப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே உறையூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அப்பகுதியில் வசிக்கும் 11 ஆயிரம் பேருக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) 2-வது நாளாக மருத்துவ முகாம் உறையூர் பகுதியில் நடந்து வருகிறது.

    இது தொடர்பாக மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று கூறும்போது, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிகளின் போது, குடிநீரில் கழிவு நீர் கலந்து சோழராஜபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது யாருக்கும் வாந்தி பேதி வரவில்லை. மாறாக மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது.

    உறையூர் பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை. அங்கு தற்போது பாதாள சாக்கடை பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டது. இருப்பினும் சித்திரை திருவிழாவில் அன்னதானத்தின் போது, காலாவதியான குளிர்பானம் வழங்கியதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

    அதனால் பிரச்சனை ஏற்பட்டதா ? என அறிய ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். குழாய் மூலமாக குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ள உறையூர் பணிக்க தெரு, விண்ணப்ப தெரு, நாடார் தெரு ஆகிய பகுதிகளில் நாளை குடிநீர் சப்ளை குழாய் மூலமாக வழங்க இருக்கிறோம்.

    அப்போது வீடு வீடாக சென்று குடிநீரில் பிரச்சனை உள்ளதா என கண்டறிய ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள். கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் திருச்சி மாநகராட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என்றார்.

    • அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பல்ராம் சிங் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.
    • பல்ராம்சிங் வீட்டார் தரப்பில் வக்கீல் பரிமளம் ஆஜரானார்.

    நெல்லை:

    நெல்லையின் பிரபல இருட்டுக்கடை உரிமையாளரான கவிதா- ஹரிசிங் தம்பதியரின் மகள் கனிஷ்காவிற்கும், கோயம்புத்தூரை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

    திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவன்- மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கணவர் பல்ராம்சிங் வரதட்சணையாக இருட்டுக்கடை உரிமத்தை எழுதி தருமாறு கேட்பதாக கூறி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருட்டுக்கடை உரிமையாளரின் மகள் கனிஷ்கா புகார் அளித்தார்.

    அதன் அடிப்படையில் இன்று காலை 10 மணிக்கு பாளையங்கோட்டையில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பல்ராம் சிங் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.

    இந்நிலையில் இன்று பல்ராம் சிங் நேரில் ஆஜராகி விளக்கமளிப்பார் என்று எதிர்பார்த்து இருட்டுக்கடை உரிமையாளர் தரப்பினர் வக்கீல் ரமேஷ் என்பவருடன் போலீஸ் நிலையத்திற்கு வந்து காத்திருந்தனர்.

    ஆனால் பல்ராம்சிங் வீட்டார் தரப்பில் வக்கீல் பரிமளம் ஆஜரானார். தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக பல்ராம் சிங் சென்றிருப்பதால் 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று அவர் தரப்பு வக்கீல், போலீஸ் நிலையத்தில் மனு அளித்துவிட்டு சென்றார்.

    • தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் 100 வேலைத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வேலையை மட்டுமே தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கின்றன.
    • 2024-25-ம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.3,850 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 2025-26-ம் ஆண்டில் 12 கோடி மனித நாள் வேலைகளும், அதற்கான நிதியும் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு சராசரியாக 50 நாட்களாவது வேலை வழங்க வேண்டும் என்றால் குறைந்தது 43 கோடி மனிதநாட்கள் வேலை தேவைப்படும் நிலையில், அதில் சுமார் நான்கில் ஒரு பங்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டிருப்பது போதுமானது அல்ல. 2023-24-ம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு மொத்தம் 41 கோடி மனித நாள்கள் வேலை வழங்கப்பட்டது. அவற்றில் 40.87 கோடி மனித நாள் வேலை மக்களுக்கு வழங்கப்பட்டது.

    ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு வெறும் 20 கோடி மனித நாள்கள் மட்டுமே மத்திய அரசு வேலை வழங்கியது.

    தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் 100 வேலைத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வேலையை மட்டுமே தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு இருக்கும் போது ஆண்டுக்கு வெறும் 16 நாட்களுக்கு மட்டும் வேலை வழங்குவதன் மூலம் ஏழை மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்க முடியாது; வறுமையையும் போக்க முடியாது.

    தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பயன் பெறும் குடும்பங்களுக்கு குறைந்தது 50 நாள்கள் வேலைவழங்க 43 கோடி மனித நாள்கள் வேலை தேவைப்படுவதால், அந்த அளவுக்கு வேலை நாட்களை தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டும். 2024-25-ம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.3,850 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அணைக்கு வரும் தண்ணீர் வினாடிக்கு 2034 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.
    • தொடர்ந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அதனால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 107.59 அடியாக அதிகரித்து காணப்பட்டது. மேலும் அணைக்கு வரும் தண்ணீர் வினாடிக்கு 2034 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    கோடையிலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107 அடியில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அடித்து நொறுக்கி சேதம்.
    • சி.சி.டி.வி. காட்சி அடிப்படையில் விசாரணை.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கிராஜா தலைமையில் இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று இரவு 10 கார்களில் ஸ்ரீவைகுண்டத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

    அவர்கள் வந்த வாகனங்கள் தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடி வந்த போது சுங்கச்சாவடிக்கு கட்டணம் செலுத்தாமல் கடந்து செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தததால், காரில் வந்தவர்கள் இறங்கி வந்து அங்கிருந்த பேரிகாடை தூக்கி வீசி உள்ளனர்.


    மேலும் சுங்கச்சாவடியில் இருந்த கண்ணாடி மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி சூறையாடி உள்ளனர்.

    மேலும்,அங்கு பணியில் இருந்த ஊழியர்களான தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்த பாபு என்ற பரமசிவம் (வயது 45), நெல்லையை சேர்ந்த அண்ணாவி என்ற ஆகாஷ் (27) ஆகியோரை நாற்காலியால் தாக்கி உள்ளனர். இதில் பாபு என்ற பரமசிவத்திற்க்கு தலையில் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது.

    அவர் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த திடீர் சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்

    இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் அங்கு பதிவாகி இருந்த சி.சி.டி.வி. காட்சி அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் இயக்க தலைவர் இசக்கிராஜா உட்பட 30 பேர் மீது பொது சொத்துக்களை சேதப்படுத்துதல்,கொலை முயற்சி, தீண்டாமை வன்கொடுமை மற்றும் பொது இடத்தில் ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • தவறான தகவல்களும் தொடர்ந்து வலை தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
    • உண்மைக்கு மாறாக செய்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் ஜீவன் மயோபதி மருத்துவமனை தலைமை இயன்முறை மருத்துவர் டேனியல் ராஜா இன்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் முன்னாள் மத்திய மந்திரியும், நடிகருமான நெப்போலியன் நடத்தி வரும் ஜீவன் அறக்கட்டளை மயோபதி மருத்துவ மனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி வருகிறேன்.

    எங்கள் நிறுவனத் தலைவரின் மூத்த மகன் தனுஷின் குடும்ப வாழ்க்கை குறித்தும், அவரது உடல்நிலை குறித்தும் அவதூறாகவும், தவறான தகவல்களும் தொடர்ந்து வலை தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

    இது எங்கள் நிறுவனர் நெப்போலியன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும், அவரிடம் பணிபுரியும் எங்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. எனவே உண்மைக்கு மாறாக தவறான செய்திகளை பரப்புபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அந்த செய்திகளை உடனடியாக தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தனுஷ் நெப்போலியன், அவரது மனைவி அக்ஷயா ஆகியோர் ஒன்றாக நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • திறந்த வெளியில் கட்டில் போட்டு தூங்கி உள்ளார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை.

    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தா.பேட்டை சேந்தமங்கலம் அம்பாய் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியரின் மகன் கோபிநாத் (வயது 26). டிப்ளமோ பட்டதாரி.

    தாயும் மகனும் வேலம்பட்டியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். நேற்று இரவு வழக்கம்போல் கோபிநாத் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றார்.

    வீட்டில் புழுக்கம் அதிகமாக இருந்ததால் வீட்டின் முன்பு திறந்த வெளியில் கட்டில் போட்டு தூங்கி உள்ளார். தாய் வீட்டுக்குள் படுத்து உறங்கினார்.

    நள்ளிரவு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் கோபிநாத் உடலின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். இதில் தீ உடல் முழுவதும் பரவி, உடல் கருகி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

    இது எதுவும் தெரியாமல் அவரது தாயார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இன்று காலை எழுந்து பார்த்தபோது, மகன் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடப்பது கண்டு அலறி துடித்தார்.

    பின்னர் இது குறித்து தாப்பேட்டை போலீசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.தகவல் அறிந்த துணை போலீஸ் பிரண்டு சுரேஷ்குமார், தா.பேட்டை இன்ஸ்பெ க்டர் அனந்த பத்மநாபன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி மற்றும் போலீ சார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.

    பின்னர் மோப்பநாய் உதவியுடன் விசாரணை தொடங்கப்பட்டது. அது சம்பவ இடத்தை மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் சென்று நின்று விட்டது. கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? எதுவும் உடனடியாக தெரியவில்லை.

    இது குறித்து தாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடந்து வருகிறார்கள்.

    வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்து தூங்கிய பட்டதாரி வாலிபர் உயிருடன் எரித்து கொலை செய்யப் பட்ட சம்பவம் தா.பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கூடலூர் தொகுதியில் சிறிய ஐடி பார்க் அமைத்து தருமாறு அதிமுக MLA ஜெயசீலன் கோரிக்கை
    • இப்படி பேச வேண்டாம். பாசிட்டிவாக பேசுங்கள் என சபாநாயகர் அப்பாவு அறிவுரை

    சட்டப்பேரவையில் இன்று கேள்வி, பதில் நேரத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் ஜெயசீலன், "எனது கூடலூர் சட்டமன்ற தொகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதற்கான நிறுவனங்கள் கிடையாது. ஆகவே எனது தொகுதியில் சிறிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்து தருமாறு அரசு முன்வர வேண்டும்

    எனது துறையில் உள்ள சிக்கல்களை நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். எனது துறைக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படுகிறது. எல்லா தகவல் தொழில்நுட்ப பூங்காவும் எனது துறையில் செயல்படுவதில்லை. அதில் சிறிய பங்கு தான் எனது துறையின் கீழ் வருகிறது. மற்றவை தொழில்துறையின் கீழ் தான் வருகிறது. யாரிடம் நிதியும், திறனும், அதிகாரமும் இருக்கிறோ அவரிடம் கேட்டால் அவர் செய்து தருவார் என்று கருதுகிறேன். என்னிடம் கேட்காதீர்கள். என்னிடம் எந்த அதிகாரமும் இல்லை" என்று தெரிவித்தார்.

    உடனே குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் அப்பாவு, "இப்படி பேச வேண்டாம். பாசிட்டிவாக பதில் கூறினால் நன்றாக இருக்கும்" என்று அறிவுரை கூறினார்.

    • போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தை இயக்குனர் அமீர் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்குகளில் ஜாபர் சாதிக் செலுத்தியுள்ளார்.
    • சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளார்.

    சென்னை:

    போதைப்பொருள் கடத்தியதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜாபக் சாதிக் கைது செய்யப்பட்டார். இவர் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இதனை தொடர்ந்து சட்டவிரோத பரிமாற்ற வழக்கு தொடர்பாக ஜாபக் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலிக் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள்.

    இதனிடையே, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமின் வழங்கக்கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    இதனை தொடர்ந்து இம்மனு மீதான விசாரணையில், "போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தை இயக்குனர் அமீர் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்குகளில் ஜாபர் சாதிக் செலுத்தியுள்ளார். மேலும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளார். ஜாபர் சாதிக் திமுகவின் நிர்வாகியாக இருந்ததால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது" என்று அமலாக்கத்துறை தெரிவித்தது. இதனை தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது.

    இந்த நிலையில், இன்று ஜாமின் மனு மீது நீதிபதி சுந்தரமோகன் தீர்ப்பளித்துள்ளார். தீர்ப்பின் போது, டெல்லியின் முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியாவின் தீர்ப்பை முன் உதாரணமாக வைத்து ஜாபர் சாதிக் மற்றும் முகமது சலீமுக்கு முன் ஜாமின் வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார்.

    • ராம்குமார் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
    • நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர்.

    சென்னை:

    'ஜகஜால கில்லாடி' திரைப்படத் தயாரிப்புக்காக பேரன் துஷ்யந்தின் நிறுவனம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    இதனை தொடர்ந்து சிவாஜி வீட்டில் எந்த பங்கும் இல்லாத நிலையில் அந்த வீட்டை ஜப்தி செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ராம்குமார் தரப்பில், சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் நடிகர் பிரபுவுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது.

    இதனிடையே, அன்னை இல்லம் தனக்கு சொந்தமானது என்பதால் இல்லத்தை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்யக்கோரி நடிகர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, ராம்குமார் தரப்புக்கும் தனக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆகவே அன்னை இல்லத்தை ஜப்தி செய்யும் உத்தரவு தவறானது என்று பிரபு தரப்பில் வாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அன்னை இல்லம் வீட்டில் தனக்கு எந்த பங்கும், உரிமையும் இல்லை என ராம்குமார் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

    அதனை தொடர்ந்து, அன்னை இல்லம் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை. எதிர்காலத்தில் எந்தவித உரிமையும் கோரமாட்டேன் என்று ராம்குமார் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இன்று பிரபு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர். இதனால் வில்லங்கப் பதிவில் நீதிமன்ற ஜப்தி உத்தரவை நீக்க பதிவுத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    • அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா-தமிழக எல்லையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம் பாளையம், ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் 4 ஆயிரம் கன அடியாக வந்த நீர்வரத்து தொடர்ந்து 3-வது நாளாக இன்று தண்ணீர் அதே அளவு நீடித்து வந்தது.

    மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

    • ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமே வாக்காளர்களும், வாக்குச்சாவடி முகவர்களும் தான்.
    • தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோயம்புத்தூரில் குரும்பப்பாளையம் எஸ்.என்.எஸ். கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழக வெற்றிக் கழகத் தோழர்களுக்கு வணக்கம்!

    தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்தப் பேரன்பையும் பேராதரவையும் பெற்ற நம் வெற்றித் தலைவர் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய நாள் முதலே நமக்கான வெற்றிப் பாதை விரிவடைந்துகொண்டே வருகிறது. நம் செல்வாக்கு வளர்ந்துகொண்டே வருகிறது. இதை நமது கொடி அறிமுக விழா, வெற்றிக் கொள்கைத் திருவிழா, இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழா மற்றும் இதர மக்கள் பணிகள் வாயிலாகத் தொடர்ந்து கண்டு வருகின்றோம்.

    தமிழக மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கையின் அடுத்தக் கட்டமாக, நமது கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம், வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோயம்புத்தூரில் குரும்பப்பாளையம் எஸ்.என்.எஸ். கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதை நம் வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் உங்களுடன் பெருமகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறேன்.

    இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் முதல் நாளில் 10 கழக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும், இரண்டாம் நாளில் 13 கழக மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களும் பங்கேற்பார்கள்.

    இந்தக் கருத்தரங்கில், நம் வெற்றித் தலைவர் அவர்கள் கலந்துகொண்டு, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாகக் கழகம் சார்ந்து நாம் மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்கவுரை ஆற்ற உள்ளார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமே வாக்காளர்களும், வாக்குச்சாவடி முகவர்களும் தான். எனவே தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி தொடர்பான பணிகளுக்கு முதுகெலும்பாகத் திகழும் வாக்குச்சாவடி முகவர்கள் மட்டும், நம் வெற்றித் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.

    ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற உள்ள நம் வெற்றித் தலைவர் அவர்களின் கரங்களுக்கு வலுச் சேர்ப்போம். வாகை சூடுவோம்!



    ×