என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தினசரி மார்க்கெட் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது.
    • உழவர்சந்தை விவசாயிகளின் போராட்டத்தால் தாராபுரத்தில் இன்று காலை பரபரப்பு நிலவியது.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணாநகரில் உழவர் சந்தை அமைந்துள்ளது. இங்கு தாராபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை கொண்டு வந்து அதிகாலை 4 மணி முதல் விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தரைக்கடை காய்கறி வியாபாரிகள் உழவர் சந்தை அருகே உள்ள பொள்ளாச்சி சாலையில் சாலையோரம் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், விற்பனை ஆகாத காய்கறிகளை குப்பையில் கொட்டுவதாகவும் உழவர்சந்தையில் வியாபாரம் செய்யும் விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இது தொடர்பாக ஏற்கனவே போராட்டம் நடத்தி உள்ளனர். அப்போது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதும், பின்னர் மீண்டும் தரைக்கடை வியாபாரிகள் வியாபாரம் செய்வதுமாக இருந்தனர்.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி தாராபுரம் உழவர்சந்தை விவசாயிகள் இன்று காலை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். காய்கறிகளை விற்காமல் தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். உழவர் சந்தையிலேயே சமையல் செய்து சாப்பிட்டு உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் தாராபுரம் தாசில்தார் திரவியம் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் , போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொள்ளாச்சி சாலையில் உள்ள வியாபாரிகளை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.


    இது குறித்து ரங்கபாளையத்தை சேர்ந்த விவசாயி கருப்புசாமி கூறுகையில், நாங்கள் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் பழ வகைகள், ஊட்டி காய்கறிகள் என அனைத்தையும் உழவர்சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு மீதியை மொத்த மார்க்கெட்டுக்கு கொடுத்து வருகிறோம். தாராபுரத்தில் உள்ள தினசரி மார்க்கெட் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது.

    மார்க்கெட்டில் கடை அமைத்தவர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் தற்போது உழவர்சந்தை அருகே உள்ள பொள்ளாச்சி சாலை மற்றும் உழவர் சந்தையை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருவதால் எங்களுடைய வியாபாரம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை நாங்கள் போராட்டம் நடத்திய போதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    உழவர்சந்தை அருகிலேயே கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருவதால் பொது மக்கள் உழவர் சந்தைக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் நாங்கள் கொண்டுவரும் காய்கறிகளில் 30 சதவீதம் மற்றும் 40 சதவீதம் மட்டுமே விற்பனை செய்து பின்னர் குப்பையில் போட வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும். பொள்ளாச்சி சாலை மற்றும் உழவர் சந்தை பகுதிகளில் இருந்து 200 மீட்டர் தள்ளி தரைக்கடை வியாபாரிகள் கடைகளை அமைக்க வேண்டும் என்றனர். சாலையோர கடை வியாபாரிகள் கூறுகையில்,

    தாராபுரம் தினசரி மார்க்கெட் இடிக்கப்பட்டு வணிக வளாகம் கட்டி வருவதால் அரசின் விதிப்படி சாலை ஓரங்களில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகிறோம் என்றனர். உழவர்சந்தை விவசாயிகளின் போராட்டத்தால் தாராபுரத்தில் இன்று காலை பரபரப்பு நிலவியது.

    • ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
    • பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது . அதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    கோடை விடுமுறையையொட்டி ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள அண்ணா பூங்கா, மான் பூங்கா, பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், படகு குழாம், ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட், கிளியூர் நீர் வீழ்ச்சி உள்பட அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் கன மழை பெய்த நிலையில் ரம்மியமான சூழல் நிலவியது. அதனை தொடர்ந்து நேற்றும் ஏற்காட்டில் சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு மேலும் குளிர்ச்சி அதிகரித்து ரம்மியமான சூழல் நிலவுகிறது. நேற்று சாரல் மழையிலும் படகு குழாமில் குடும்பத்துடன் ஆனந்தமாக சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

    இதே போல சேலம் மாவட்டம் சங்ககிரியில் நேற்று கன மழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம் மாநகரில் அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி என மாநகரில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மழையை தொடர்ந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1200 கனஅடியாக வந்தது. இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை அட்சய திருதியையொட்டி, எகிறி காணப்பட்டது. பின்னர், கடந்த 1-ந்தேதியில் இருந்து விலை குறைந்து வந்து, கடந்த 5 மற்றும் 6-ந்தேதிகளில் அதன் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் விலை குறைந்த நிலையில், நேற்று மீண்டும் ஏறுமுகத்தில் இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 75-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.55-ம், சவரனுக்கு ரூ.440-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 130-க்கும், ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர்ப்பதற்ற சூழல் நிலவுவதன் காரணமாக, தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 115 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,015-க்கும் சவரனுக்கு 920 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.72,120-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    08-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040

    07-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,600

    06-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800

    05-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,200

    04-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    08-05-2025- ஒரு கிராம் ரூ.110

    07-05-2025- ஒரு கிராம் ரூ.111

    06-05-2025- ஒரு கிராம் ரூ.111

    05-05-2025- ஒரு கிராம் ரூ.108

    04-05-2025- ஒரு கிராம் ரூ.108

    03-05-2025- ஒரு கிராம் ரூ.108

    • பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்தும் சென்னையில் பேரணி நடைபெறுகிறது.
    • தமிழ்நாட்டு மக்கள் இந்த பேரணியில் பங்கேற்று, நமது ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து கடந்த 36 மணி நேரத்தில் எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளது. பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்தும் சென்னையில் நாளை பேரணி நடைபெற உள்ளது.

    பாகிஸ்தான் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து வரும் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து போர்நினைவு சின்னம் வரை நாளை மாலை 5 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெறுகிறது.

    இந்திய ராணுவத்தின் வீரத்தையும், தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றுவதற்காக நாளை பேரணி நடைபெறுகிறது. தமிழ்நாட்டு மக்கள் இந்த பேரணியில் பங்கேற்று, நமது ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

    வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம். முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்பார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • இன்றைய முக்கிய செய்திகள்...
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி, சில முக்கிய இடங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
    • பயிற்சியின்போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எந்த விதமான அவசர கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்படும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய இடங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்றும் (வியாழக்கிழமை), நேற்று முன்தினமும் (புதன்கிழமை) சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இன்று (வெள்ளிக்கிழமை) சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்பட உள்ளது.

    இந்த ஒத்திகை, நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் சென்னையை அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையம் அலகு-2 ஆகிய இடங்களில் மாலை 4 மணிக்கு நடக்க உள்ளது.

    இந்த பயிற்சியின்போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எந்த விதமான அவசர கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் 23 சங்கங்களை உள்ளடக்கிய சங்கம்.
    • 55 ஆண்டுகள் கடந்து இந்த சங்கம் செயல்பட்டு வருகிறது.

    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி அடையாள வேலை நிறுத்தம் தொடர்பாக அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் சென்னை வடபழநியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் 23 சங்கங்களை உள்ளடக்கிய சங்கம்.

    55 ஆண்டுகள் கடந்து இந்த சங்கம் செயல்பட்டு வருகிறது.

    வரும் 14ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த ஃபெப்சி முடிவு செய்துள்ளது.

    தொழிலாளர்களின் வாழ்க்கையை முதலாளிகள் சிலர் அழிக்க முயற்சிக்கும் கொடுமைக்கு எதிராக வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது.

    ஆர்ப்பாட்டம் நடைபெறும் அன்று படப்பிடிப்புகள், Post Production, pre production உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெறாது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டத்தை திருத்தி புதியபிரிவை சேர்ப்பதற்காக இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
    • மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஆளுநர் ஆர்‌.என்.ரவி ஒப்புதல் வழங்கினார்.

    சென்னை:

    கட்டணத்துடன் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா டிசம்பர் மாதம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்து இருந்தார்.

    தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டத்தை திருத்தி புதியபிரிவை சேர்ப்பதற்காக இந்த சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, கல்வி நிறுவனம், சங்கம், குழு மம், யாருடைய பெயரிலாவது அமைக்கப்பட்டுள்ள கழகம் போன்ற நிறுவனங்களின் வளாகங்கள் மைதானங்கள் மற்றும் நுழைவுச் சீட்டு அல்லது சந்தா போன்ற கட்டணங்கள் செலுத்த வேண்டிய இடங்கள் ஆகியவற்றில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது பிற நிகழ்ச்சி எதற்கும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் 10 சதவீதம் (அனுமதி கட்டணத்தில்) கேளிக்கை வரி வசூலிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த மசோதா கடந்த டிசம்பர் மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் இப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கினார்.

    • சுற்றுலாப் பயணிகள் சோதனை சாவடியில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் அருவிக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
    • சுற்றுலா பயணிகள் நலன் கருதி பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் அதிக அளவில் வருகின்றனர்.

    சின்ன சுருளி அருவியில் கடந்த சில நாட்களாக குறைந்த அளவு தண்ணீரே வந்த நிலையில் தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதே போல் கும்பக்கரை அருவி, சுருளி அருவியிலும் அதிக அளவு தண்ணீர் வருவதால் கோடை விடுமுறைக்காக வரும் சுற்றுலா பயணிகள் இங்கு ஆனந்தமாக நீராடி செல்கின்றனர்.

    மேகமலை அருவிக்கு செல்லும் வாகனங்களுக்கு கோம்பைத்தொழு கிராமத்தில் மேகமலை ஊராட்சி நிர்வாகம் சார்பில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு நுழைவுக் கட்டணமாக ரூ.10 முதல் ரூ.300 வரை வசூலிக்கப்படுகிறது. அருவியில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு முன்பு வனத்துறை சார்பில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு குளிக்க வரும் நபர் ஒருவருக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் அந்த பகுதியில் தடுத்து நிறுத்தப்படுகிறது. மேலும் அங்கிருந்து அருவிக்கு நடந்து செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

    இதனால் சுற்றுலாப் பயணிகள் சோதனை சாவடியில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் அருவிக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், அண்டைமாநிலமான கேரள மாநிலத்தில் இதுபோன்ற இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் அனுமதி மறுப்பதோடு, சுற்றுலா பயணிகள் நலன் கருதி பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, சுற்றுலா பயணிகள் சிரமம் இன்றி சென்று வர ஏதுவாக உள்ளது.

    எனவே மேகமலை அருவிக்கும் வனத்துறை சோதனைச்சாவடியில் இருந்து பேட்டரி வாகனங்களை இயக்க வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல கடந்த சில ஆண்டுகளாக கட்டணம் வசூலித்து வரும் நிலையில் அருவியில் பாதுகாப்பு கம்பிகள், பெண்கள் உடை மாற்றும் அறை பெண்கள் கழிப்பறை உள்ளிட்ட எந்தவித வசதிகளும் ஏற்படுத்தவில்லை. எச்சரிக்கை பலகை மற்றும் வன காவலர்கள் இல்லாததால் சில நாட்களுக்கு முன்பு 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் நடைபெற்றது.

    இங்கு வசூல் செய்யப்படும் பணம் வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் அருவியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த பயன்படுத்த வேண்டும். மேலும் அருவியில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட கூடுதலாக வனத்துறை பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனிடையே மேகமலை ஊராட்சி சார்பில் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பது குறித்து மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்ததால் அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

    • சித்திரை முழு நிலவு கூட்டத்தால் வடநெமிலி பஞ்சாயத்து பகுதியில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
    • பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகும் சூழல் இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு தடை.

    மாமல்லபுரம் அருகே வருகிற 11ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து சித்திரை முழு நிலவு பெருவிழாவை நடத்துகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிகழ்ச்சிக்கு தடைகேட்டு வடநெமிலி பஞ்சாயத்து தலைவர் பொன்னுரங்கம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அதில், சித்திரை முழு நிலவு கூட்டத்தால் வடநெமிலி பஞ்சாயத்து பகுதியில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகும் சூழல் இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும். அனுமதி வழங்க கூடாது என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி எல்.விக்டோரிய கவுரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் முகிலன், ''கடந்த 5-ந்தேதி நிகழ்ச்சிக்கு 42 நிபந்தனைகள் விதித்து, போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். எனவே இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல'' என்று கூறினார்.

    இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, "ஏற்கனவே நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் அனுமதி வழங்க கூடாது என உத்தரவிட முடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்'' என்று உத்தரவிட்டார்.

    • திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
    • கும்பகோணம் கோட்டத்தின் பிற முக்கிய நகரங்களில் இருந்தும் பக்தர்கள் வசதிக்காக பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

    எனவே, 10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    அதன்படி, கும்பகோணத்தில் இருந்து 145 பஸ்கள், திருச்சி, துறையூர், பெரம்பலூரில் இருந்து 190 பஸ்கள், அரியலூர், ஜெயங்கொண்டத்தில் இருந்து 58 பஸ்கள், மயிலாடுதுறையில் இருந்து 65 பஸ்கள், நாகப்பட்டினத்தில் இருந்து 50 பஸ்கள், காரைக்குடி, ராமேஸ்வரத்தில் இருந்து 48 பஸ்கள், புதுக்கோட்டையில் இருந்து 51 பஸ்கள் என மொத்தம் 607 பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளன.

    மேலும், கும்பகோணம் கோட்டத்தின் பிற முக்கிய நகரங்களில் இருந்தும் பக்தர்கள் வசதிக்காக பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×