என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பா.ம.க.வில் 78 புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் 61 புதிய மாவட்ட தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நியமித்துள்ளார்.
- டாக்டர் ராமதாசால் நீக்கப்பட்டவர்கள் அப்பொறுப்பில் தொடர்வார்கள் என அன்புமணி அறிவித்து வருகிறார்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக பா.ம.க.வில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்து வருகிறார்.
பா.ம.க.வின் பொருளாளராக இருந்த திலகபாமாவை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக சையத் மன்சூர் உசேன் நியமிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து வழக்கறிஞர் சமூக நீதி பேரவையின் தலைவராக இருந்த பாலு நீக்கப்பட்டு வக்கீல் கோபு நியமிக்கப்பட்டார்.
மேலும் பா.ம.க.வின் பொதுச்செயலாளராக இருந்த வடிவேல் ராவணன் நீக்கப்பட்டு முரளி சங்கர் நியமிக்கப்பட்டார்.
இதுவரை பா.ம.க.வில் 78 புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் 61 புதிய மாவட்ட தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நியமித்துள்ளார்.
டாக்டர் ராமதாசால் நீக்கப்பட்டவர்கள் அப்பொறுப்பில் தொடர்வார்கள் என அன்புமணி அறிவித்து வருகிறார். இதனால் தந்தை-மகன் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.
இந்த நிலையில் புதிய மாவட்ட செயலாளர்கள் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் இன்று காலை முதலே தைலாபுரம் தோட்டத்திற்கு வரத் தொடங்கினார்கள். அவர்களுடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
மேலும் புதிதாக நியமிக்கப்பட்ட பொதுச்செயலாளர் முரளி சங்கர், சமூக நீதிப்பேரவை கோபு, பொருளாளர் சையத் மன்சூர் உசேன் ஆகியோரை புதிய மாவட்ட செயலாளர்கள், தலைவர்களுக்கு டாக்டர் ராமதாஸ் அறிமுகம் செய்து வைத்தார்.
- இந்தியாவின் அரசியல் போக்கையே தலைகீழாகப் புரட்டிப்போட்ட புரட்சியாளர் வி.பி.சிங்.
- சிறப்புக்குரிய வி.பி.சிங் அவர்களுக்கு முதலமைச்சர் சென்னையில் வங்கக்கடலோரம் ஆளுயர சிலை வைத்து பெருமை சேர்த்தார்கள்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சாமானியர்களின் கைகளில் அதிகாரத்தை கொண்டு சேர்க்க தனக்கு கிடைத்த பிரதமர் பொறுப்பை பயன்படுத்திய சமூகநீதி காவலர் வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாள் இன்று!
மண்டல் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்தியதன் மூலம் இந்தியாவின் அரசியல் போக்கையே தலைகீழாகப் புரட்டிப்போட்ட புரட்சியாளர்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பராக திகழ்ந்து இந்தியாவுக்கே சமூகநீதி வெளிச்சத்தை பாய்ச்சியவர்.
சமூகநீதி மற்றும் மதசார்பின்மையின் பக்கம் உறுதியாக நின்று ஆட்சி புரிந்து, அதன் காரணமாகவே பதவியையும் இழந்த தியாக வரலாற்றுக்கு சொந்தக்காரர்.
இத்தகைய சிறப்புக்குரிய வி.பி.சிங் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வங்கக்கடலோரம் ஆளுயர சிலை வைத்து பெருமை சேர்த்தார்கள்.
உயரிய அதிகாரப் படிக்கட்டுகளில் எளிய மக்களை ஏற்றிவிட்ட வி.பி.சிங் அவர்களின் புகழ் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அய்யா வைகுண்டர் அவதாரபதி அருகே கடற்கரையில் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது.
- பாறைகள் மீது பக்தர்கள் ஏறி நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகில் கடல் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் உள்வாங்குவதும், வெளியே வருவதுமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று அமாவாசை என்பதால் இயற்கை சீற்றம் காரணமாக திருச்செந்தூர் கடல் இன்று காலையில் இருந்தே சுமார் 100அடி தூரம் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் அய்யா வைகுண்டர் அவதாரபதி அருகே கடற்கரையில் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது. பாறைகள் மீது பக்தர்கள் ஏறி நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். ஆனாலும் பக்தர்கள் வழக்கமாக நீராடும் பகுதியில் பக்தர்கள் எந்தவித அச்சமின்றி புனித நீராடி வருகின்றனர்.
திருச்செந்தூர் கடல் கடந்த சில நாட்களாக இவ்வாறு நடப்பதால் இது வழக்கமான ஒன்று என பக்தர்கள் கருதி அச்சமின்றி புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- கிருஷ்ணா மீதும் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் போலீசாரின் நடவடிக்கை அடுத்தகட்டமாக பாய்ந்துள்ளது.
- திரைப்பட விழாக்களிலும், தனியாா் நிகழ்ச்சிகளிலும் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ்த் திரைப்படத்துறையினரை அதிா்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் போதைப்பழக்கத்துக்கு அடிமையானது எப்படி? என்பது குறித்து அவர் வாக்குமூலமாக அளித்துள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து, கழுகு படத்தில் நடித்த பிரபல நடிகர் கிருஷ்ணா மீதும் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் போலீசாரின் நடவடிக்கை அடுத்தகட்டமாக பாய்ந்துள்ளது.
போலீசாரின் தீவிர விசாரணையைத் தொடர்ந்து, திரைப்பட விழாக்களிலும், தனியாா் நிகழ்ச்சிகளிலும் போதைப்பொருள் பயன்படுத்தி வந்த தமிழ்த் திரைப்படத்துறையைச் சோ்ந்த மேலும் சிலா் இந்த வழக்கில் சிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், போதைப்பொருள் பயன்படுத்தும் பட்டியலில் தமிழ் சினிமாவில் 10 பிரபல நடிகர்கள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மூன்றெழுத்தில் பெயர் கொண்ட முன்னணி நடிகர் ஒருவர், தான் நடத்தும் விருந்து நிகழ்ச்சிகளில் கொகைன் போதைப்பொருளை வழங்குவாராம். அவருடன் இணைந்து நடித்த நடிகைகள் கூட கொகைனுக்கு அடிமையாகி கிடப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இளம் இசையமைப்பாளர் ஒருவர் கொகைன் இல்லாமல் இரவில் தூங்கமாட்டாராம். கொகைன் உறிஞ்சினால் தான் அவருக்கு இசைஞானம் பொங்கி வருமாம்.
போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் இவர்களும் கொண்டுவரப்பட இருக்கிறார்கள். இதனால் நடிகர்-நடிகைகள் கடும் கலக்கம் அடைந்துள்ளனர்.
- அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
- பக்தர்கள் வருகையை முன்னிட்டு கோவில், கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இதற்காக நாடு முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் வருகை தருகிறார்கள். அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. அதன்படி ஆனி அமாவாசையை முன்னிட்டு நேற்று முதலே ஏராளமானோர் வாகனங்களில் ராமேசுவரம் வந்தனர். இன்று அதிகாலை அவர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்தனர். வட மாநிலத்தில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கடற்கரை மணலில் சிவலிங்கம் செய்து பின் அதற்கு பூஜை செய்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர்.
பின்னர் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி-பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையை முன்னிட்டு கோவில், கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ராமேசுவரத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
- தனது செல்போனை சுவிட்ச்-ஆப் செய்துவிட்டு நடிகர் கிருஷ்ணா தலைமறைவாகிவிட்டார்.
- வீட்டில் இருந்தவர்களிடம் சம்மன் கொடுக்கப்பட்டது.
நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து, கழுகு படத்தில் நடித்த பிரபல நடிகர் கிருஷ்ணா மீதும் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் போலீசாரின் நடவடிக்கை அடுத்தகட்டமாக பாய்ந்துள்ளது. இவர் முன்னணி இயக்குனரான விஷ்ணுவர்தனின் தம்பி ஆவார். கிருஷ்ணாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் கொடுத்துள்ளனர்.
இதனால் தனது செல்போனை சுவிட்ச்-ஆப் செய்துவிட்டு நடிகர் கிருஷ்ணா தலைமறைவாகிவிட்டார். அவர் கேரளாவுக்கு தப்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கிருஷ்ணா உடனடியாக நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர் கைது செய்யப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்தனர். போலீசார் நேற்று சம்மன் கொடுக்க சென்றபோது, கிருஷ்ணா வீட்டில் இல்லை. அவரது வீட்டில் இருந்தவர்களிடம் சம்மன் கொடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
- உங்கள் கட்சியின் ஆபாசப் பேச்சாளர்கள் போல கைத்தட்டல்களுக்காக எதையாவது உளறுவது ஆபத்தானது.
- மஞ்சள் காமாலைக்காரர் கண்களுக்கு அத்தனையும் மஞ்சளாகத் தெரிவது போல.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கண்களுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்து, அம்பலப்பட்டு, சிறை சென்றுவந்த திமுக எம்பி ஆ. ராசா, நாட்டிற்காக நேர்மையாக உழைத்துக் கொண்டிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தரக்குறைவாக விமர்சித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மக்களின் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் பதவி வகிப்போருக்கு நாவடக்கம் தேவை, ஆ. ராசா அவர்களே! உங்கள் கட்சியின் ஆபாசப் பேச்சாளர்கள் போல கைத்தட்டல்களுக்காக எதையாவது உளறுவது ஆபத்தானது.
கடந்த சில தினங்களாக பயங்கரவாதிகளின் புகலிடமாகத் தமிழகம் மாறியதற்கு முழு முதற்காரணம் உங்கள் திராவிட மாடல் அரசு, சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னனைக் கட்சிப் பொறுப்பில் வைத்துத் தாலாட்டிக் கொண்டிருந்த அரசு உங்கள் விடியா அரசு, தமிழகத்தில் ஆயுதக் கலாச்சாரம் வேரூன்றி வளர்வதை வேடிக்கை பார்க்கும் அரசு உங்கள் விளம்பர மாடல் அரசு, கர்ப்பிணிப் பெண்ணைக் காவல் நிலையத்திலேயே வைத்துக் கொடூரத் தாக்குதல் நடத்திய அரசு உங்கள் கொடுங்கோல் அரசு. இப்படி பொதுமக்களின் பாதுகாப்பை முழுவதுமாக அடகுவைத்த நீங்கள், இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக நாட்டின் பாதுகாப்பை மொத்தமாகக் கட்டிக் காக்கும் மத்திய உள்துறை அமைச்சரைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?
அதுசரி, திமுக ஆட்சியில் தமிழகத்தின் அவல நிலை குறித்து எதுவும் தெரியாமல், "நாம் தான் நம்பர் 1 முதல்வர்" என்ற மாய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ஒருவரை தலைவராகக் கொண்ட மூடர் கூட்டத்திற்கு அனைவரும் முட்டாளாகத் தான் தெரிவார்கள். மஞ்சள் காமாலைக்காரர் கண்களுக்கு அத்தனையும் மஞ்சளாகத் தெரிவது போல. உங்கள் கீழ்த்தரமான ஆணவமிக்க அரசியல் நாகரிகமற்ற பேச்சுக்களுக்கு, தமிழக மக்கள் உங்களை 2026-க்குப் பிறகு அரசியலை விட்டே துரத்திவிடுவது உறுதி என்று கூறியுள்ளார்.
- வழக்கமான ஆட்சியாளர்களுக்கும், வி.பி.சிங் அவர்களுக்கும் இடையிலான வேறுபாடு இமயத்தை விட பெரிதானது
- பெருந்தகை வி.பி.சிங் சமூகநீதியைக் காப்பதற்காக ஆட்சியைப் பலி கொடுத்தவர்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சமூகநீதிக்கான பெருந்தலைவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் 95-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தியா விடுதலை அடைந்த நாளில் இருந்து பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மறுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை ஆதிக்க சக்திகளின் எதிர்ப்புகளையும் மீறி செயல்படுத்தியதற்காக நாமும், நமது பல தலைமுறையினரும் அவருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். அவரது பிறந்தநாளில் அவரது சமூகநீதிப் பார்வையையும், அதற்காக அவர் செய்த தியாகங்களையும் நினைவு கூர்ந்து அவரை வணங்குகிறேன்.
வழக்கமான ஆட்சியாளர்களுக்கும், வி.பி.சிங் அவர்களுக்கும் இடையிலான வேறுபாடு இமயத்தை விட பெரிதானது. சுருக்கமாகக் கூற வேண்டுமானால், தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சமூக நீதியை பலி கொடுப்பவர்கள்; ஆனால், பெருந்தகை வி.பி.சிங் அவர்களோ சமூகநீதியைக் காப்பதற்காக ஆட்சியைப் பலி கொடுத்தவர். அதனால் தான் அவரது தியாகம் மிகப்பெரியது ஆகும்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில், மக்கள்தொகைக்கு இணையான அளவில் இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். தேசிய அளவில் அது சாத்தியமாவதற்கு மத்திய அரசு விரைவில் நடத்தவிருக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு வகை செய்யக்கூடும். ஆனால், தமிழக ஆட்சியாளர்களுக்கு அது குறித்த பார்வையே இல்லாததால் அதற்கான வாய்ப்புகளே தென்படவில்லை. சமூகநீதி நாயகன் வி.பி.சிங் அவர்களின் பிறந்தநாளில் அவரது ஆன்மா தமிழக ஆட்சியாளர்களின் சமூகநீதிக் கண்களை திறக்க வகை செய்யட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
- அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்றும், அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்:
தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகம் மற்றும் கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.
இதன்காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதனிடையே ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.
நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. தொடர்ந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. இந்த நீர்வரத்தை கர்நாடகா-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியதால் மெயின் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டார். அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்றும், அருவியில் குளித்தும் மகிழ்ந்தனர். இருப்பினும் நேற்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து குறைவாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
- தமிழக பா.ஜ.க.வில் புதிய பொறுப்பாளர்கள் கொண்ட பட்டியலை நயினார் நாகேந்திரன் நட்டாவிடம் சமர்ப்பித்தார்.
- நட்டா ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பா.ஜ.க.வில் புதிதாக 4 பொதுச்செயலாளர்கள் நியமிக்கப்பட வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். அப்போது தமிழக பா.ஜ.க.வில் புதிய பொறுப்பாளர்கள் கொண்ட பட்டியலை நயினார் நாகேந்திரன் நட்டாவிடம் சமர்ப்பித்தார். கே.வி.ராமலிங்கம், கருப்பு முருகானந்தம், வினோஜ் செல்வம், கார்த்தியாயினிக்கு வாய்ப்பு வழக்கப்பட உள்ளது.
நயினார் நாகேந்திரனின் பட்டியலுக்கு நட்டா ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே அனுப்பப்பட்ட பட்டியலில் சில மாற்றங்கள் செய்து வரும் வெள்ளியன்று பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியாக உள்ளது.

குஷ்புக்கு மாநிலப் பொறுப்பும், மீனா பா.ஜ.க.வில் சேர்ந்து மாநிலப்பொறுப்பு பெறலாம் என்றும் சரத்குமார் தேசிய பொறுப்பு கேட்பதால் தற்போதைய பட்டியலில் அவரது பெயர் இல்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
- நடிகர் சத்யராஜுக்கு பெரியார் ஒளி விருது வழங்கப்பட்டது.
- தமிழறிஞர் சண்முகதாசுக்கு செம்மொழி ஞாயிறு விருதும் வழங்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2025-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. வரவேற்று பேசினார்.
இதில் பொதுசெயலாளர் சிந்தனை செல்வன், துணை பொதுச்செயலாளர்கள் வன்னியரசு, ஆளுர் ஷாநவாஸ், பனையூர் பாபு, மாவட்டச்செயலாளர்கள் இளங்கோ, ஜேக்கப், கரிகால்வளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில், ஆந்திராவில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் கே.எஸ்.சலமுக்கு அம்பேத்கர் சுடர் விருது, நடிகர் சத்யராஜுக்கு பெரியார் ஒளி விருது, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகுவுக்கு மார்க்ஸ் மாமணி விருது வழங்கப்பட்டது.
புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி வைத்திலிங்கத்துக்கு காமராசர் கதிர் விருது, பவுத்த ஆய்வறிஞர் ஜம்புலிங்கத்துக்கு அயோத்தி தாசர் ஆதவன் விருது, தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவிக்கு காயிதேமில்லத் பிறை விருது வழங்கப்பட்டது. தமிழறிஞர் சண்முகதாசுக்கு செம்மொழி ஞாயிறு விருதும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது:- கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதில் நமக்கு பிரச்சனை இல்லை. நமக்கு பிரச்சனையே சாதி ஒழிப்பு, தமிழ் தேசியம்...
சாதி வைத்து தமிழ் தேசியம் எப்படி சாத்தியமாகும். ஆணவக் கொலை எப்படி நடக்கிறது? ஒரு தமிழனை இன்னொரு தமிழன் தான் வெட்டுகிறான். சாதி ஒழியாமல் எப்படி தமிழ் தேசியம் மலரும்? சாதி ஒழிப்பு, தமிழ் தேசியம்... அதுதான் முக்கியமான கொள்கை.
பெரியாரிடம் ஒருவர் கேட்டார்... ஆத்திகத்துக்கும்- நாத்திகத்துக்கும் என்ன வித்தியாசம் என்று... அதற்கு பெரியார், கோவிலில் கடவுள் சிலைக்கு முன்னாடி ஒரு உண்டியல் வைக்குறீங்க இல்லையா... அதுக்கு பெயர் ஆத்திகம். அந்த கடவுளையை நம்பாமல் அந்த உண்டியலுக்கு பூட்டு போடுறீங்க இல்லையா அதுக்கு பெயர் நாத்திகம். முருகனுக்காக ஒரு மாநாடு நடத்தி இவர்களை ஏமாற்றிவிட்டோம் என்று நினைக்கிறார்கள். ஆனால், முருகன் உங்களை ஏமாற்றிவிடுவார் என்றார்.
- மூன்று நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 40 ரூபாயும், நேற்று சவரனுக்கு 600 ரூபாயும் குறைந்து ஒரு சவரன் ரூ.73,240-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,070-க்கும் சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.72,560-க்கும் விற்பனையாகிறது. மூன்று நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 4 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 119 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
24-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,240
23-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,840
22-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880
21-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880
20-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
24-06-2025- ஒரு கிராம் ரூ.120
23-06-2025- ஒரு கிராம் ரூ.120
22-06-2025- ஒரு கிராம் ரூ.120
21-06-2025- ஒரு கிராம் ரூ.120
20-06-2025- ஒரு கிராம் ரூ.120






