என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • த.வெ.க. தலைவர் விஜய், காவலாளி அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
    • போராட்டத்தை நடத்த அனுமதி கோரி த.வெ.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்தார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், காவலாளி அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

    இதனிடையே, அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், ஐகோர்ட்டின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் த.வெ.க. சார்பில் சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே கடந்த ஜூலை 3-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி கிடைக்காததால், ஜூலை 6-ந்தேதி போராட்டத்தை நடத்த அனுமதி கோரி த.வெ.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. இருப்பினும் அதற்கும் அனுமதி கிடைக்காததால் த.வெ.க. போராட்டம் மீண்டும் தள்ளிப்போனது.

    இந்தநிலையில் அஜித்குமார் மரணம் தொடர்பான த.வெ.க. போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • தமிழ்நாடு முழுவதும் 14 புறவழிச்சாலைகள் அமைப்பதற்காக ரூ.1,713 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • கோவையில் ரூ.348 கோடியில் 12.5 கி.மீ. புறவழிச்சாலை, நெல்லையில் ரூ.225 கோடியில் 12.4 கி.மீ. புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3,268 கி.மீ. நீளத்திற்கு சாலை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் 14 புறவழிச்சாலைகள் அமைப்பதற்காக ரூ.1,713 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆற்றுப்பாலம் சாலை விரிவாக்கம், மழைநீர் வடிகால் பணிகளுக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஆத்தூர், ஓசூரில் புறவழிச்சாலை அமைக்க ரூ.500 கோடி, ஆறுகளின் குறுக்கே 6 உயர்மட்ட சாலை அமைக்க ரூ.295 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கோவையில் ரூ.348 கோடியில் 12.5 கி.மீ. புறவழிச்சாலை, நெல்லையில் ரூ.225 கோடியில் 12.4 கி.மீ. புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. விருத்தாசலம் - தொழுதூர், கொடை-வத்தலகுண்டு, சிவகாசி-விருதுநகர் சாலைகள் 4 வழிச்சாலைகளாக மேம்படுத்தப்பட உள்ளன.

    • அஜித்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது, அவரது உடலில் இருந்த காயங்களையும் மறைக்கும் முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர்.
    • அஜித்குமார் குடும்பத்தினரிடம் பணம் தருவதாக கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர்.

    மதுரை:

    மதுரையைச் சேர்ந்த மகாராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த நிகிதா என்ற பெண் மணி கோவில் காவலர் அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்து உள்ளார். அதன்பேரில் விசாரணைக்கு அஜித்கு மாரை அழைத்துச்சென்ற போலீசார், அவரை 2 நாள் சட்டவிரோத காவலில் அடைத்து வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.

    இதில் அவர் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்து விட்டார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக மடப்புரம் கோவிலில் பதிவான கேமரா காட்சிகளை திருப்புவனம் போலீசாருடன் இணைந்து அப்பகுதியை சேர்ந்த சிலரும், ரகசியமாக எடுத்துச்சென்று விட்டனர். இதேபோல அஜித்குமார் உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தபோது, அவரது உடலில் இருந்த காயங்களையும் மறைக்கும் முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர்.

    அதுமட்டுமல்லாாமல் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அஜித்குமார் குடும்பத்தினரிடம் கேட்டுக்கொண்டு, அதற்காக பணம் தருவதாகவும் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். இதுபோன்ற மனித உரிமைக்கு எதிரான சட்டவிரோத காவல் மரணங்களை தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிக்க வேண்டும். அஜித்குமார் மரணத்தில் உள்ள உண்மைகளை மறைக்க முயற்சி செய்து வருபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியா கிளாட் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அஜித்குமார் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை (8-ந்தேதி) விசாரணைக்கு வருகின்றன. அந்த வழக்குகளுடன் இந்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.

    • அரசு கலைக் கல்லூரியில் தொல்லியல் சம்பந்தமான பாடப் பிரிவுகளை தமிழக அரசு ஏற்படுத்திட வேண்டியது அவசியமாகும்.
    • மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் தம் கங்கை வெற்றியின் நினைவாக உருவாக்கிய நினைவு சின்னம் கெங்கைகொண்ட சோழபுரம்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பண்டைய சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட தொல்லியல் அடையாளங்கள் அதிகம் உள்ளன. இவைகளை உலகிற்கு எடுத்துச் செல்லும் ஆய்வுகளை தொடரும் அளவிற்கு இந்த பகுதியில் செயல்படுகின்ற கல்லூரிகளில் தொல்லியல் சம்பந்தமான பாடப்பிரிவுகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தின், புது சாவடியில் தமிழக அரசால் அமைய உள்ள அரசு கலைக் கல்லூரியில் தொல்லியல் சம்பந்தமான பாடப் பிரிவுகளை தமிழக அரசு ஏற்படுத்திட வேண்டியது அவசியமாகும்.

    தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு அடுத்தபடியாக மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் தம் கங்கை வெற்றியின் நினைவாக உருவாக்கிய நினைவு சின்னம் கெங்கைகொண்ட சோழபுரம் ஆகும். இந்த நினைவு சின்னத்தை போற்றும் வகையில் இந்த பகுதி மக்களின் விருப்பத்தை ஏற்கவும் இந்த மண்ணின் பெருமையை வெளிக்கொணரும் வகையிலும் தமிழக அரசால் நிறுவப்படுகின்ற புதிய அரசு கலைக் கல்லூரிக்கு கங்கைகொண்ட சோழபுரத்தை நிறுவிய ராஜேந்திர சோழன் பெயரை சுட்டி, மாமன்னன் ராஜேந்திர சோழன் அரசினர் கலைக்கல்லூரி என்று பெயரை தமிழக அரசு நிறுவி ராஜேந்திர சோழன் நினைவை போற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 4 ஆண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    • சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 10 சதவீதம் இடமும் கூடுதலாக மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

    சென்னை:

    மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்கல்வியும், மருத்துவமும் தனது இருகண்களாக கொண்டு நமது இளைய சமுதாயம் உலகளவில் உயர்ந்த நிலையில் திகழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு உயர்கல்வி அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதால் புதுமைப்பெண், தமிழ் புதல்வன் போன்ற முத்தான திட்டங்களை வழங்கியதுடன் திறன் மிகுந்த சமுதாயத்தை உருவாக்க நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை இலவசமாக திறன் மேம்பாட்டு துறையின் மூலம் வழங்கி வருகிறார்.

    இதனால் கடந்த 4 ஆண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்காக அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இதனை அறிந்திருந்த நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாண்டு புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கிட ஆணையிட்டு, தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும் உயர்கல்வி பயில பெருமளவில் மாண வர்கள் காத்திருப்பதை அறிந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும், அதேபோல் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 15 சதவீதம் இடமும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 10 சதவீதம் இடமும் கூடுதலாக மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

    அதன்படி, இவ்வாண்டு மேற்படி கூடுதல் இடங்கள் அறிவிக்கப்படுகிறது. மாணவர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டிற்குள் நிபா வைரஸ் நுழையாமல் தடுக்க வேண்டியது தி.மு.க. அரசின் கடமை ஆகும்.
    • நிபா வைரஸ் தொற்று தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சிறுவன் ஒரு மாதத்திற்கு முன்பு நிபா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் செய்தி வந்துள்ளது.

    தமிழ்நாட்டை ஒட்டி பாலக்காடு மாவட்டம் இருப்பதால், நிபா வைரஸ் தொற்று தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம். தமிழ்நாட்டிற்குள் நிபா வைரஸ் நுழையாமல் தடுக்க வேண்டியது தி.மு.க. அரசின் கடமை ஆகும். எனவே, கேரள மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்குள் நுழைபவர்களை கண்காணிக்கும் வகையில், மாநில எல்லையில் கட்டுப்பாட்டு மையங்களை அமைத்து தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பரவாமல் இருப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நானும் ஒரு விவசாயி, விவசாயம் தான் எனது பிரதான தொழில்.
    • அ.தி.மு.க. ஆட்சியில் சொட்டு நீர் பாசனத்திற்கு மத்திய அரசிடம் அதிக நிதி பெற்றுத்தந்தோம்.

    தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார்.

    சட்டசபை தொகுதி வாரியாக ''மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டத்தில் தொடங்கினார்.

    கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் விவசாயிகள், செங்கல் உற்பத்தியாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

    * நானும் ஒரு விவசாயி, விவசாயம் தான் எனது பிரதான தொழில்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் சொட்டு நீர் பாசனத்திற்கு மத்திய அரசிடம் அதிக நிதி பெற்றுத்தந்தோம்.

    * விவசாயிகள் படும் கஷ்டங்களை அனுபவரீதியாக நான் உணர்ந்திருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவை, தேக்கம்பட்டியில் விவசாயிகள், செங்கல் உற்பத்தியாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
    • சட்டத்துக்கு உட்பட்டு செங்கல் சூளைகளை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார்.

    சட்டசபை தொகுதி வாரியாக ''மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி இன்று சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டத்தில் தொடங்கினார்.

    அதன்படி, மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட தேக்கம்பட்டி வன பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு, தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, வேளாண் மக்களின் உறுதுணையோடு தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில், கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் விவசாயிகள், செங்கல் உற்பத்தியாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.

    அப்போது அவரிடம் பேசிய விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் வழக்குப்போட்டு செங்கல் சூளையை மூட வைத்ததாக முறையிட்டனர்.

    செங்கல் உற்பத்தி நின்றதால் விறகு வியாபாரம் செய்ய முடியாமல், 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தாங்கள் முதலமைச்சரானதும் செங்கல் சூளை தொழிலை மீண்டும் இயக்க ஆவன செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    சட்டத்துக்கு உட்பட்டு செங்கல் சூளைகளை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    • எங்கிருந்து 17,702 பேரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்தது என்பதை தேர்வாணையமும், தமிழக அரசும் தான் விளக்க வேண்டும்.
    • தமிழ்நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பவர்கள் இளைஞர்கள் தான்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கடந்த ஓராண்டில் மட்டும் 17 ஆயிரம் பேருக்கும் கூடுதலானோருக்கு புதிதாக அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. கடந்த ஓராண்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிக்கையை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள நிலையில், வரலாறு காணாத வகையில் வேலைகளை வழங்கிவிட்டதாக கூறுவது அப்பட்டமான பொய் ஆகும்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,''அரசு பணியை எதிர்நோக்கி இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக, டி.என்.பி.எஸ்.சி. மூலம் 17 ஆயிரத்து 595 காலிப்பணியிடங்கள் 2026 ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது. அதன்படி, கடந்த 2024 ஜூன் முதல் நடப்பாண்டு ஜூன் மாதம் வரையில் பல்வேறு அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப 17 ஆயிரத்து 702 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்'' என்று கூறப்பட்டிருக்கிறது. எனினும் எந்தெந்தப் பணிகளுக்கு எவ்வளவு பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்ற விவரத்தை டி.என்.பி.எஸ்.சி வெளியிடவில்லை. இது மக்களை ஏமாற்றும் வகையில் வெளியிடப்பட்டுள்ள மிகவும் மோசடியான அறிவிப்பு ஆகும்.

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 25-ஆம் தேதி விதி எண் 110-இன் கீழ் அறிக்கை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''வரும் ஜனவரி 2026-க்குள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 17,595 பேர் உள்பட மொத்தம் 46,584 பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்'' என்று அறிவித்தார். அதைக்கேட்டு தமிழ்நாட்டு இளைஞர்களில் பெரும்பான்மையானவர்கள், தங்களுக்கு அரசு வேலை கிடைக்கக்கூடும் என்று மகிழ்ச்சியடைந்திருந்தனர். புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிக்கைகள் வெளியிடப்படும்; அதில் விண்ணப்பித்து அரசு வேலையை வென்றெடுக்கலாம் என்ற எண்ணத்தில் படித்த இளைஞர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தான், 17,702 பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட்டு விட்டதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருக்கிறது. இது படித்த இளைஞர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி மூலம் 17,502 பேருக்கு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார் என்றால், அதற்கான நடைமுறை அதன்பிறகு தான் தொடங்கும். காலியாக இருக்கும் அரசு பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விண்ணப்பித்தவர்களுக்கு போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவது தான் முறையாகும். ஆனால், சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்ட பிறகு 2024-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி, 2025-ஆம் ஆண்டு ஜூன் 13-ஆம் தேதி வரை மொத்தம் 12 ஆள்தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் வாயிலாக நான்காம் தொகுதி பணிகளுக்கு 3935 பேர் உள்பட மொத்தம் 8618 பேர் அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அவர்களுக்கான தேர்வு நடைமுறை பல்வேறு நிலைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், எங்கிருந்து 17,702 பேரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்தது என்பதை தேர்வாணையமும், தமிழக அரசும் தான் விளக்க வேண்டும்.

    கடந்த காலங்களில் நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகளை மிகவும் தாமதமாக அறிவித்து, அவற்றையெல்லாம் புதிய வேலைவாய்ப்புகளாக கணக்குக் காட்ட அரசுப் பணியாளர் தேர்வாணையம் முயல்வதாகத் தெரிகிறது. அப்படி செய்தால் அதை விட பெரிய மோசடியும், முறைகேடும் இருக்க முடியாது. எடுத்துக்காட்டாக தேர்வாணையம் குறிப்பிடும் 17,702 வேலைவாய்ப்புகளில் 9491 பணிகள், அதாவது 54% நான்காம் தொகுதி வேலைவாய்ப்புகள் ஆகும். இதற்கான அறிவிக்கை 30.01.2024-ஆம் நாள் வெளியானது. முதலமைச்சரின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளை, முதலமைச்சர் அறிவித்ததால் கிடைத்த வேலைவாய்ப்புகளாக காட்ட முயல்வது மிகப்பெரிய ஏமாற்று வேலை ஆகும்.

    திமுக ஆட்சிக்கு வந்தால் மூன்றரை லட்சம் காலியிடங்களை நிரப்புவதன் வாயிலாகவும், 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் வாயிலாகவும் மொத்தம் ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்பட்ட காலியிடங்களைக் கூட நிரப்ப முடியாமல் மு.க. ஸ்டாலின் அம்பலப்பட்டு நிற்கிறார். அவருக்கு முட்டுக்கொடுக்க வேண்டிய வேலையை திமுக தகவல்தொழில்நுட்பப் பிரிவினர் தான் செய்ய வேண்டும். அந்த வேலையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேற்கொள்வது அதன் தகுதிக்கு உகந்தது அல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்ட அமைப்பு என்பதை கருத்தில் கொண்டு அதன் கண்ணியத்தைக் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயல்பட வேண்டும்.

    தமிழ்நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பவர்கள் இளைஞர்கள் தான். ஆனால், அவர்களின் உயர்கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் எந்த நடவடிக்கையையும் திமுக அரசு செய்யவில்லை. அதற்கான பாடத்தை வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் கற்பிப்பார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திமுகவின் துணை அமைப்பாக மாறாமல் அதன் பணிகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவனை மனித உருவில் பார்க்கும் ஒரே தலமாக இக்கோவில் விளங்குகிறது.
    • இன்று காலை 8-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பூர்ணாஹூதி முடிவடைந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் ஒன்றாகும். இங்கு நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.

    மேலும், இங்கு சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து, தோன்றிய அகோர மூர்த்தி மனித உருவில் அருள்பாலிக்கிறார். சிவனை மனித உருவில் பார்க்கும் ஒரே தலமாக இக்கோவில் விளங்குவது குறிப்பிடத்தக்கது.

    இக்கோவிலில் விநாயகர், முருகர், நடராஜர், அகோர மூர்த்தி, புதன், சுவேத மகாகாளி மற்றும் சவுபாக்கிய துர்க்கை உள்ளிட்ட சன்னதிகள் அமைந்துள்ளன. இங்கு சந்திர, சூரிய மற்றும் அக்னி ஆகிய பெயர்களில் 3 குளங்களும் உள்ளன. மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

    முன்னதாக கடந்த 3-ந் தேதி பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது. பின்னர், கோவில் வளாகத்தில் 109 குண்டங்களுடன் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த யாகசாலை மண்டபத்தில் முதற்கால யாகசாலை பூஜை தொடங்கியது. சோமசுந்தர சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற யாகசாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 4-ந்தேதி 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜையும், 5-ந்தேதி 4 மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்று, பூர்ணாஹூதி நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முறையே நேற்று 6 மற்றும் 7-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர், இன்று காலை 8-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பூர்ணாஹூதி முடிவடைந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து காலை 5.30 மணிக்கு கோவிலில் உள்ள அனைத்து பரிவார சன்னதி விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

    அதனைத் தொடர்ந்து, காலை 9 மணிக்கு ராஜகோபுரம் உள்ளிட்ட 4 கோபுரங்கள் சுவேதராண்யேஸ்வரர் சுவாமி, பிரம்ம வித்யாம்பிகை அம்பாள், புதன் பகவான், அகோர மூர்த்தி உள்ளிட்ட சுவாமி சன்னதி விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், சுதா எம்.பி., எம்.எல்.ஏக்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன், ராஜகுமார், தமிழ் சங்க தலைவர் மார்கோனி இமயவரம்பன், தி.மு.க. பிரமுகர் முத்து. தேவேந்திரன், மாருதி பில்டர்ஸ் அகோரம் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 'ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய...' எனும் பக்தி கோஷம் முழங்க தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    பாதுகாப்பு பணியில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில், 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு இருந்தனர். மேலும், திருவெண்காடு ஊராட்சி சார்பில் 4 வீதிகளிலும் மினி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அதேபோல், தற்காலிக கழிவறை வசதியும், சுகாதார துறை சார்பில் மருத்துவ குழுவினர்கள் முகாமும் அமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் வசதிக்காக கோவிலுக்கு சிறப்பு பஸ்களும் விடப்பட்டு இருந்தன.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் நகரமே விழாக்கோலம் பூண்டது.

    • கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
    • மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

    மேட்டூர்:

    தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் உபரி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. இங்கிருந்து நீர் நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 58,500 கன அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் 40,000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

    • பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தவுடன், அ.தி.மு.க. தொண்டர்கள் மனம் சோர்ந்து விட்டனர்.
    • நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய சட்டப் பேரவை தொகுதி தி.மு.க. பாக நிலை முகவர்கள், டிஜிட்டல் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பேசினார்.

    அமைச்சர் சசிவ சங்கர்,ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    அரசின் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் பயன்பெற்று வருவதை திண்ணை பிரச்சாரம் செய்வது, தோழமை கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது, கட்சிக்கு எதிரான பொய், அவதூறுகளை முறியடிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தொடர்ந்து களமாடுவது, புதிய உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்ப்பது, 2 மாதங்களுககு முன்பு வரை நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தல் சவால் நிறைந்ததாக இருக்கும் என நினைத்தோம்.

    தற்போது நமது கூட்டணியில் எந்தவித சஞ்சலமும், சலசலப்பும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். ஆனால் எதிரணியினர் அப்படி அல்ல. பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தவுடன், அ.தி.மு.க. தொண்டர்கள் மனம் சோர்ந்துவிட்டனர். ஆட்சி அமைந்தால், அந்த அமைச்சரவையில் பா.ஜ.க.வும் பங்கு பெறும் என்று கூறி வருகின்றனர்.

    ஆகையால் அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இல்லாத நிலை உள்ளது. பா.ம.க.-வினருக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக நமக்கு ஒரு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது அரியலூர், பெரம்பலூரில் நமக்கு கூடுதல் பலம்.

    பா.ஜ.க.-வினர் தாங்கள் தேர்தலில் வெல்லவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் தி.மு.க. வெல்லக்கூடாது என நினைக்கின்றனர். அதனால்தான் நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வருகின்றனர். நாளையே முதல்வராவது போல் நான் உங்களோடு வரவில்லை, அவர்களோடு செல்லவில்லை என கூறிக் கொண்டுள்ளார்.

    அதற்கெல்லாம் நாம் கவலைப்பட தேவையில்லை. இளைஞரணியினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எனவே அனைவரும் சிறப்பாக செயல்பட்டு தேர்தலில் வெற்றிப்பெற்று மீண்டும் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவது நமது கடமை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×