என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்துக்குள் நிபா வைரஸ் நுழையாமல் தடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
- தமிழ்நாட்டிற்குள் நிபா வைரஸ் நுழையாமல் தடுக்க வேண்டியது தி.மு.க. அரசின் கடமை ஆகும்.
- நிபா வைரஸ் தொற்று தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சிறுவன் ஒரு மாதத்திற்கு முன்பு நிபா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் செய்தி வந்துள்ளது.
தமிழ்நாட்டை ஒட்டி பாலக்காடு மாவட்டம் இருப்பதால், நிபா வைரஸ் தொற்று தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம். தமிழ்நாட்டிற்குள் நிபா வைரஸ் நுழையாமல் தடுக்க வேண்டியது தி.மு.க. அரசின் கடமை ஆகும். எனவே, கேரள மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்குள் நுழைபவர்களை கண்காணிக்கும் வகையில், மாநில எல்லையில் கட்டுப்பாட்டு மையங்களை அமைத்து தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பரவாமல் இருப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






