என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
    • இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் மதியம் 1 மணி வரை அங்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.

    புதுக்கோட்டை:

    இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல் இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மதியம் 1 மணி வரை அங்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை, அதிகாரிகள் வாக்காளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • தொழிலாளர்கள் அங்கு இருந்த ஹீட்டர் மிஷினை சுவிட்ச் ஆப் செய்யாமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
    • தொழிற்சாலையின் கட்டிடம் இடிந்து தரை மட்டமானது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி நேஷனல் காலனியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது47). இவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சந்தன மகாலிங்கம் என்பவர் பட்டாசு தயாரிக்க தேவையான அட்டைக் குழாய்களுக்கு யூ.வி. கோட்டிங் செய்யும் தொழிற்சாலை நடத்தி வருகின்றார். இங்கு வழக்கம் போல் நேற்று இரவில் வேலை நடைபெற்றது.

    அப்போது தொழிலாளர்கள் அங்கு இருந்த ஹீட்டர் மிஷினை சுவிட்ச் ஆப் செய்யாமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதில் அந்த தொழிற்சாலையின் கட்டிடம் இடிந்து தரை மட்டமானது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இடர்பாடுகளில் வேறு யாரும் சிக்கி இருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தனர்.

    இந்த சம்பவத்தின்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராணி (35) என்கிற பெண்ணிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    • தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 12.55 சதவீதம் வாக்குகள் பதிவு.
    • வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

    இந்நிலையில், வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    தொடர்ந்து, காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 23.72 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இந்நிலையில், 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    அதிகபட்சமாக, சேலத்தில் 46.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இதற்கிடையே, சென்னையில் வழக்கம்போல் வாக்குப்பதிவு மந்தமாக பதிவாகியுள்ளது. ஒரு மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதத்தில் சென்னை தொகுதிகள் கடைசி 3 இடங்களை பிடித்துள்ளது.

    இதில், மத்திய சென்னை 32.31 சதவீதமும், தென் சென்னை 33.93 சதவீதமும், வட சென்னை 35.09 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

    • அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
    • ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

    அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 46.41 அடியாக குறைந்துள்ளது. கடந்த 2 மாதத்திற்கும் மேல் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடிக்கு கீழ் வருவது குறிப்பிடத்தக்கது.

    கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காளிங்கராயன் வாய்க்கால் பாசனம், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனம் ஆகியவற்றுக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு தற்போது 200 கனஅடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 28.46 அடியாக குறைந்து உள்ளது. 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 22.01 அடியாக உள்ளது. அதே சமயம் 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து இன்றி அணை முழுமையாக வறண்டு விட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பவானிசாகர் அணை நீர் தேக்கப்பகுதியில் கடல் போல் காட்சி அளிக்கும் பகுதியில் தற்போது நீர் வறண்டு காட்சியளிக்கிறது. கடந்த 1995-ம் ஆண்டு அணை வறண்டு காட்சியளித்தது. அதன் பிறகு தற்போது வறண்டு போய் உள்ளது. இதனால் டணாய்க்கன் கோட்டை முழுவதுமாக வெளியே தெரிகிறது.

    • தளவாய்பட்டி பிரிவு சாலையின் அருகே நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
    • ஜானி பிரகாஷின் உடலை கைப்பற்றிய ஆத்தூர் ஊரக போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜானி பிரகாஷ்( 39). இவரது மனைவி அனிதா (39). இவர் சேலம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இன்று நடைபெறும் தேர்தலுக்காக சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சந்தனகிரி அரசு தொடக்கப்பள்ளியில் தேர்தல் பணிக்காக அனிதா தனது கணவர் ஜானி பிரகாஷ் உடன் இருசக்கர வாகனத்தில் அனிதாவின் தாய் வீடான ஏத்தாப்பூரில் இருந்து ஆத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது தளவாய்பட்டி பிரிவு சாலையின் அருகே நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி ஜானி பிரகாஷ் உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த நிலையில் அனிதா சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து ஜானி பிரகாஷின் உடலை கைப்பற்றிய ஆத்தூர் ஊரக போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சந்திரன் தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு வாக்களிக்க பெயர் உள்ளது.
    • பூத் சிலீப் வழங்கப்பட்டும் அதிகாரிகள் குளறுபடியால் பெயர் இறந்ததாக கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 56). கூலித்தொழிலாளியான இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இன்று அப்பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்ற போது அவர் இறந்துவிட்டதாக வாக்காளர் ஜாபிதாவில் இருந்துள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சந்திரன் தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு வாக்களிக்க பெயர் உள்ளது. தனது பெயர் மட்டும் எவ்வாறு விடுபட்டது? என கேள்வி எழுப்பினார்.

    நகராட்சி அலுவலகத்தில் சென்று விண்ணப்பம் அளித்து புதிதாக வாக்காளர் அட்டைக்கு மனு அளிக்குமாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பூத் சிலீப் வழங்கப்பட்டும் அதிகாரிகள் குளறுபடியால் பெயர் இறந்ததாக கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    • வாக்களிக்க பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைபள்ளியில் வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
    • மலைவாழ் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவை செய்ய அணையில் படகு மூலம் வந்திறங்கினர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட தச்சமலை, மாங்கமலை, முடவன்பொற்றை உட்பட 10-க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்களில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் வாக்களிக்க பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைபள்ளியில் வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் இந்த வாக்குசாவடி மையத்திற்கு மலைவாழ் மக்கள் வாக்களிக்க அணையில் படகு மூலம் வந்து வாக்களிப்பது வழக்கம்.

    இதையடுத்து தற்போது நடைபெற்றுவரும் பாராளுமன்ற தேர்தலிலும் மலைவாழ் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவை செய்ய அணையில் படகு மூலம் வந்திறங்கினர். தொடர்ந்து சுமார் 2 கிலோ மீட்டர் நடந்து பேச்சிப்பாறையில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் வந்ததுடன் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

    • நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என என்னுடைய கணிப்பு.
    • இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவு உரிமை தமிழகத்திற்கும் உள்ளது.

    வேலூர்:

    தி.மு.க. பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் இன்று காட்பாடி காந்தி நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவருடன் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

    அப்போது துரைமுருகன் கூறியதாவது:-

    தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் எங்களுக்கு வெற்றி பிரகாசமாக இருப்பதாக எனக்கு தகவல் வந்து கொண்டிருக்கிறது.

    இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடக்கிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என என்னுடைய கணிப்பு.

    வாக்காளர்கள் ஒழுங்கா வந்து வாக்கு மட்டும் போட்டால் போதும். இன்னமும் ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்தி தான். இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூளை முடுக்குகள் உள்ளன.

    தேர்தல் ஆணையம் எப்போதுமே சரியாக இருக்காது. ஆளுங்கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். எந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை.

    நதிநீர் இணைப்பிற்கு தமிழகம் எப்போதும் தயாராக உள்ளது. தற்போது மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவோம் என கர்நாடக துணை முதல்-மந்திரி சிவகுமார் கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் கர்நாடக மக்களை உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் அப்படி பேசுகிறார்.

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவு உரிமை தமிழகத்திற்கும் உள்ளது.

    மேகதாது அணை கட்டக்கூடாது என்பது தமிழகத்தின் உரிமை. நான் 25 ஆண்டுகளாக காவிரி பிரச்சனையை கவனிக்கிறேன். இது எனக்கு சாதாரணமான செய்தி.

    புதியதாக பதவிக்கு வந்ததால் கர்நாடகா துணை முதல்- மந்திரி சிவக்குமாருக்கு இது புதுசாக தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாற்று எந்திரம் வரவழைக்கப்பட்டு அரசியல் கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் அதிகாரிகள் பொருத்தினர்.
    • சுமார் 45 நிமிட நேரம் தாமதத்திற்கு பிறகு காலை 7.45 மணியளவில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

    ஏரியூர்:

    ஏரியூர் அருகே வாக்குப்பதிவு எந்திரம் பழுது காரணமாக 45 நிமிடம் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு தொடங்கியது.

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டடமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரியூர் அருகே உள்ள ராமகொண்ட அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட, புதூர் சோளப்பாடியில், வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதனை தொடர்ந்து மாற்று எந்திரம் வரவழைக்கப்பட்டு அரசியல் கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் அதிகாரிகள் பொருத்தினர்.

    சுமார் 45 நிமிட நேரம் தாமதத்திற்கு பிறகு காலை 7.45 மணியளவில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. இதன் காரணமாக வாக்காளர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பின்னர் வாக்களித்தனர்.

    • அண்ணாமலை தனது சொந்த ஊரில் வாக்கு செலுத்தி விட்டு கோவை நோக்கி சென்றார்.
    • வாக்களிப்பதற்காக நின்று கொண்டிருந்த முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

    பல்லடம்:

    கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சட்டமன்ற தொகுதியில் இன்று 417 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது சொந்த ஊரில் வாக்கு செலுத்தி விட்டு கோவை நோக்கி சென்றார்.

    அப்போது கோவை தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் பகுதியில் உள்ள அவினாசிபாளையம், மாதப்பூர், பனப்பாளையம், கொசவம்பாளையம், காரணம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பூத்களில் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் வாக்களிப்பதற்காக நின்று கொண்டிருந்த முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். வாக்குச்சாவடிகளில் எத்தனை வாக்காளர்கள் உள்ளார்கள்? வாக்குப்பதிவு மையங்கள் முறையாக இயங்குகிறதா என வாக்குச்சாவடி முகவர்களிடம் கேட்டறிந்தார்.

    • குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 20.09 வாக்குகளும் பதிவாகி இருந்தன.
    • வெயில் அதிகமாக இருப்பதால் எல்லா வாக்குச்சாவடிகளிலும் பந்தல், நாற்காலி போட்டுள்ளோம். வீல்சேர் கைவசம் உள்ளது.

    சென்னை:

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் காலை 9 மணி வரை 12.55 சதவீத வாக்குப்பதிவும், 11 மணி வரை 24.37 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 26.58 சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 20.09 வாக்குகளும் பதிவாகி இருந்தன.

    சென்னை அண்ணாநகர் உள்பட சில பூத்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதை அறிந்ததும் என்ஜினீயர்கள் விரைந்து சென்று அதை சரி செய்தனர்.

    சேலத்தில் வாக்களிக்க வந்த 2 பேர் வெயில் காரணமாக உயிரிழந்தனர் என்ற தகவல் வந்தது. அதுபற்றி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விவரம் கேட்டுள்ளோம்.

    வெயில் அதிகமாக இருப்பதால் எல்லா வாக்குச்சாவடிகளிலும் பந்தல், நாற்காலி போட்டுள்ளோம். வீல்சேர் கைவசம் உள்ளது. எனவே வாக்காளர்கள் முழுமையாக வந்து ஓட்டு போடலாம். ஒரு சில பிரச்சனைக்காக சில இடங்களில் வாக்களிக்காமல் புறக்கணிப்பதாக தகவல் வந்தது. அவர்களிடம் மாவட்ட அதிகாரி பேசி வருகிறார். ஓட்டு போடுமாறு அவர்களை கேட்டுக்கொண்டு உள்ளோம். இதுவரை தமிழ்நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
    • அதிகாரிகளிடம் கேட்டால் முறையாக பதில் தெரிவிக்காமல் அலைக்கழிப்பதாக கூறினார்.

    சென்னை:

    பாராளுமன்ற மக்களவை தேர்தலானது ஏழு கட்டமாக நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அதே போல் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், சர்கார் பட பாணியை தழுவும் சம்பவம் சென்னை சூளைமேட்டில் நடைபெற்றுள்ளது.

    சென்னையை சேர்ந்த பால்ராஜ் (67) என்பவர் பணி நிமித்தமாக லண்டனில் உள்ளார். இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக லண்டனில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவு செய்து சென்னை வந்துள்ளார்.

    இதையடுத்து இன்று வாக்களிக்க சென்ற போது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் முறையாக பதில் தெரிவிக்காமல் அலைக்கழிப்பதாக கூறினார்.

    ×