வறண்டு காணப்படும் பவானிசாகர் நீர்த்தேக்க அணை பகுதி

அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Bhavanisagar Dam
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 46.41 அடியாக குறைந்துள்ளது. கடந்த 2 மாதத்திற்கும் மேல் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடிக்கு கீழ் வருவது குறிப்பிடத்தக்கது.

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காளிங்கராயன் வாய்க்கால் பாசனம், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனம் ஆகியவற்றுக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு தற்போது 200 கனஅடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 28.46 அடியாக குறைந்து உள்ளது. 33 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 22.01 அடியாக உள்ளது. அதே சமயம் 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து இன்றி அணை முழுமையாக வறண்டு விட்டது.

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

பவானிசாகர் அணை நீர் தேக்கப்பகுதியில் கடல் போல் காட்சி அளிக்கும் பகுதியில் தற்போது நீர் வறண்டு காட்சியளிக்கிறது. கடந்த 1995-ம் ஆண்டு அணை வறண்டு காட்சியளித்தது. அதன் பிறகு தற்போது வறண்டு போய் உள்ளது. இதனால் டணாய்க்கன் கோட்டை முழுவதுமாக வெளியே தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com