என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • உலகில் உள்ள பிரதான மதங்களின் மந்திர மற்றும் இசை அர்ப்பணிப்புகள் தியானலிங்கத்தில் நடைப்பெறுகிறது.
    • ரச வைத்திய முறையில் உருவாக்கப்பட்டுள்ள லிங்கங்களில் இதுதான் உலகிலேயே மிகப்பெரிய லிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தின் 25-ஆம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா இன்று (ஜூன் 24) பெரு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் இந்து, பௌத்த மதங்களின் மந்திர உச்சாடனங்களும் மற்றும் கிறிஸ்தவ, இஸ்லாமிய சூஃபி பாடல்கள் இசை வடிவிலும் அர்ப்பணிக்கப்பட்டன.

    தியானம் என்றால் என்னவென்றே அறியாத மக்களும் தியானத் தன்மையை உணர வழிவகுக்கும் வகையில், யோகா அறிவியலின் படி 7 சக்கரங்களும் சக்தியூட்டப்பட்ட லிங்க வடிவமே தியானலிங்கம். சாதி, மத, இன பேதங்களுக்கு அப்பாற்பட்டு தியானம் செய்ய விரும்பும் ஒவ்வொரு தனி மனிதருக்கும், அந்த வாய்ப்பை வழங்க தியானலிங்க வாசல் எப்போதும் திறந்தே இருக்கிறது என்பதை உணர்த்தவே ஒவ்வொரு ஆண்டும் தியானலிங்க பிரதிஷ்டை தினத்தில், உலகில் உள்ள பிரதான மதங்களின் மந்திர மற்றும் இசை அர்ப்பணிப்புகள் தியானலிங்கத்தில் நடைப்பெறுகிறது.

     இந்தாண்டு பிரதிஷ்டை தின கொண்டாட்டங்கள் தியானலிங்கத்தில் இன்று காலை 6 மணிக்கு ஈஷா பிரம்மச்சாரிகளின் "ஆம் நமசிவாய" மந்திர உச்சாடனையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆதிசங்கரர் இயற்றிய 'நிர்வாண ஷடகம்' எனும் சக்திவாய்ந்த மந்திர உச்சாடனம் நிகழ்த்தப்பட்டது.

    பின்னர் மயிலை சத்குரு நாதன் அவர்களால் தேவாரமும், 'செரா மே' என்ற புத்த மடாலயத்தை சேர்ந்த துறவிகளின் புத்த மந்திர உச்சாடனமும் நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து கோவையை சேர்ந்த FSPM சிஸ்டர்ஸ் கிறிஸ்தவ பாடல்களையும், சிதம்பரம் கோவில் தீக்ஷிதர்கள் ருத்ர-சமக வேத கோஷத்தையும் அர்ப்பணித்தனர்.

    மேலும் வெறும் இசைக்கருவிகளை கொண்டு நடத்தப்படும் நாத ஆராதனை நிகழ்வும், அதனை தொடர்ந்து குருத்வாரா சிங் சபா அவர்களின் குருபானி, சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதியின் மந்திர உச்சாடனங்கள் நடைப்பெற்றன. பின்னர் சிறப்பு விருந்தினர்கள் இஸ்லாமிய பாடல்களை அர்ப்பணித்தனர்.

    அதற்கடுத்து, ஆசிரமவாசிகள் சூஃபி பாடல்களையும், சவுண்ட்ஸ் ஆப் ஈஷா பாடல்களையும் இசை அர்ப்பணிப்புகளாக வழங்கினர். பிறகு தீக்ஷை நிகழ்ச்சியும் இறுதியாக 'குண்டேச்சா சகோதரர்களின்' இசை நிகழ்ச்சியுடன் இந்தாண்டு கொண்டாட்டங்கள் நிறைவுப்பெற்றன.

    ஈஷாவில் உள்ள தியானலிங்கமானது சுமார் 3 ஆண்டுகள் தீவிர ஆத்ம சாதனைகளுக்கு பிறகு சத்குரு அவர்களால் 1999-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பாதரசத்தைக் கொண்டு ரச வைத்திய முறையில் உருவாக்கப்பட்டுள்ள லிங்கங்களில் இதுதான் உலகிலேயே மிகப்பெரிய லிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2025ம் ஆண்டு முதல் ஜூன் 3ஆம் தேதி செம்மொழி தமிழ் நாளாக கொண்டாடப்படும்.
    • பரிசு தொகையாக ரூ. 1.88 கோடி ஆண்டு தோறும் வழங்கப்படும்.

    சட்டசபை கூட்டத்தில் பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

    அதில் கூறியிருப்பதாவது,

    • 2025ஆம் ஆண்டு முதல் ஜனவரி 25ம் தேதி தமிழ் வழி தியாகிகள் நாளாக கடைப்பிடித்து சென்னையில் உள்ள நினைவகங்களில் வீரவணக்கம் செலுத்தப்படும்.

    • 2025ம் ஆண்டு முதல் ஜூன் 3ஆம் தேதி செம்மொழி தமிழ் நாளாக கொண்டாடப்படும்.

    • முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மன்மோகன் சிங் தலைமையிலான அரசு 12.10 2004ஆம் ஆண்டு அன்று தமிழை செம்மொழியாக அறிவித்தது. இதனை அடுத்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையில் 2010 ஆம் ஆண்ட உலக செம்மொழி விழா கோவையில் சிறப்பாக நடத்தப்பட்டது. தமிழிற்கு பெருமை செய்த கலைஞரின் பிறந்த நாளை செம்மொழி தமிழ் நாளாக தமிழ் அரசு சார்பாக கொண்டாடப்படும்.

    • செம்மொழி சிறப்பை உணர்த்தும் வகையில், 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு பேட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தப்படும்.

    • தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடத்தப்படும் இந்த போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசு தொகையாக ரூ. 1.88 கோடி ஆண்டு தோறும் வழங்கப்படும்.

    • தமிழ் அறிஞர்கள் ஒன்பதின்மர் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும். நூலுரிமை தொகைக்கென ரூபாய் 91 லட்சத்திலிருந்து 35 ஆயிரம் வழங்கப்படும்.

    • டெல்லி தமிழ் சங்கத்தின் கலையரங்கத்தில் தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்திட ஏதுவாக ரூபாய் 50 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.

    • சிறந்த நூலை எழுதிய நூலாசிரியர் நூலை பதிப்பிக்கும் பதிப்பாளருக்கு பரிசு தொகை உயர்த்தி வழங்கப்படும். கூடுதல் செலவினத்திற்கு ரூபாய் 11 லட்சத்து 55 ஆயிரம் வழங்கப்படும்

    • ஜனவரி 25ம் நாளினை தமிழ்மொழித் தியாகிகள் நாள் என பின்பற்றி, புகழ் வணக்கம் செய்திட ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும்

    • முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருது தோற்றுவிக்கப்படும் ரூபாய் 17 லட்சம் ஆண்டுதோறும் வழங்கப்படும்.

    • வீறுகவியரசர் முடியரசன் அவர்களின் புகழைப் போற்றும் வண்ணம் சிவகங்கை மாவட்டத்தில் திருவுருச் சிலை நிறுவிட ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும்

    • சண்டிகர் தமிழ் மன்றம் கட்டிட விரிவாக்க பணிக்கு ரூபாய் 50 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்

    இவ்வாறு கூறியுள்ளார்.

    • ஜூலை 10-ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 13-ந்தேதி வாக்குகள் எண்ணப்படும்.
    • வேட்புமனு வாபஸ் பெற நாளைமறுதினம் கடைசி நாளாகும்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந்தேதி தொடங்கியது. 21-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதில் அதிமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் போட்டியிடுகின்றன. ஸ்ரீமதி தாயார் உள்ளிட்ட பலர் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    மொத்தமாக 54 பேர் தாக்கல் செய்தனர். இன்று வேட்புமனு மீதான பரிசீலனை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது ஸ்ரீமதி தாயார் உள்பட 35 பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகள் சார்பில் மனு தாக்கலில் குறைபாடு உள்ளது. முறையான ஆவணங்கள் இல்லாததால் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

    ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல் வேண்டுமென்றே தங்களது வேட்புமனுக்கள் நிராரிக்கப்பட்டது எனக் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

    விக்கிரவாண்டியில் ஜூலை 10-ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 13-ந்தேதி வாக்குகள் எண்ணப்படும். நாளை மறுநாள் வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும்.

    கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி பள்ளியில மர்மமான முறையில் மாணவி உயிரிழந்தார். இதையடுத்து அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் பள்ளி வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பள்ளியில் இருந்த பொருட்களும் சூறையாடப்பட்டது.

    இதையடுத்து மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்து அவரது தாய் செல்வி சின்னசேலம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதன் அடிப்படையில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஸ்ரீமதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சுமார் 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையையும் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மூன்று இயந்திரப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகச் தெரிவித்துள்ளார்.
    • தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு மீனவர் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    தனது முந்தைய கடிதத்தில் சுட்டிக் காட்டியது போன்று மீனவர்களை கைது செய்தல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்வதால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அச்சமுதாயத்தினரிடையே மிகுந்த அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர் கடந்த 22.06.2024 அன்று, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள். IND- TN-10-MM-84, IND-TN-10-MM-88 IND-TN-10-MM-340 எண்களைக் கொண்ட மூன்று இயந்திரப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகச் தெரிவித்துள்ளார்.

    எனவே, இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர். ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட படகுகளை இலங்கையில் இருந்து கொண்டு வருவதற்கு மீட்புப் படகுகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோன்று, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதலும் அடிப்படைத் தேவைகளையும் வழங்கிட அனுமதி தர வேண்டுமென தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு மீனவர் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மீனவர்களின் வாழ்வை சீர்குலைக்கும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், இதற்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட கூட்டுப் பணிக்குழுவினை மீண்டும் புதுப்பிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ள முதலமைச்சர், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண இலங்கை அதிகாரிகளிடம் எடுத்துரைத்திட உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் அவர்களை தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • பணியில் சேர்ந்த 8 ஆண்டுகளில் உதவி மருத்துவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
    • கால்நடை உதவி மருத்துவர்களுக்கு பணியில் சேர்ந்து 24 ஆண்டுகளுக்குப் பிறகுதான் உதவி இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

    பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையில் பணியாற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு காலம் சார்ந்து பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று கால்நடை பராமரிப்புத்துறை பரிந்துரை வழங்கியும் அதை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு மறுத்து வருகிறது.

    ஒரே நிலையிலான கல்வித் தகுதி கொண்டவர்களுக்கு சம ஊதியம், சம பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற இயற்கை நீதிக்கு எதிரான தமிழக அரசின் இந்த நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது ஆகும்.

    கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை உதவி மருத்துவர்களாக சேருபவர்களுக்கு, மருத்துவத் துறையில் பணியாற்றும் உதவி மருத்துவர்களுக்கு இணையான தொடக்க நிலை ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், பணியில் சேர்ந்த 8 ஆண்டுகளில் உதவி மருத்துவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் நிலையில் கால்நடை உதவி மருத்துவர்களுக்கு அவ்வாறு பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை.

    அவர்கள் பணியில் சேர்ந்து 24 ஆண்டுகளுக்குப் பிறகுதான் உதவி இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதனால், பணியில் சேர்ந்து 24 ஆண்டுகளை நிறைவு செய்ய முடியாத கால்நடை உதவி மருத்துவர்கள் எந்த நிலையில் பணியில் சேர்ந்தார்களோ, அதே நிலையில் பணி ஓய்வு பெற வேண்டியுள்ளது. இது பெரும் அநீதி ஆகும்.

    மருத்துவத்துறை மருத்துவர்களைப் போலவே தங்களுக்கும் காலம் சார்ந்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் அடிப்படையில் பணியில் சேர்ந்த 8, 16, 24 ஆகிய ஆண்டுகளில் பதவி உயர்வு வழங்குவதற்கான அரசாணை கடந்த ஆட்சியில் பிறப்பிக்கப்பட்டது.

    ஆனால், சில காரணங்களால் அந்த ஆணை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனாலும், அதில் சில திருத்தங்களைச் செய்து செயல்படுத்தலாம் என்று தமிழக அரசுக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு முன் கால்நடை பராமரிப்புத் துறை பரிந்துரை வழங்கியது. ஆனால், எந்தக் காரணமும் இல்லாமல் அந்த பரிந்துரையை தமிழக அரசின் நிதித்துறை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது.

    கால்நடை மருத்துவர்களுக்கு காலம் சார்ந்து பதவி உயர்வு வழங்குவதை தடுப்பதற்காக தமிழக அரசின் சார்பில் கூறப்படும் காரணங்கள் நியாயமற்றவை. அரசு மருத்துவர்களுக்கு இணையாக தங்களுக்கும் காலம் சார்ந்து பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று பல் மருத்துவர்கள் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டு அவர்களுக்கு 8, 15, 17 மற்றும் 20-ஆம் ஆண்டுகளில் நான்கு முறை பதவி உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால், கால்நடை மருத்துவர்களுக்கு 24 ஆண்டுகளில் 3 முறை பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட நிறைவேற்ற தமிழக அரசு மறுப்பது நியாயமல்ல.

    தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்காக உழைப்பவர்களில் கால்நடை மருத்துவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். மருத்துவத்துறை மருத்துவர்களுக்கும், பல் மருத்துவர்களுக்கும் வழங்கப்படும் பதவி உயர்வை கால்நடை மருத்துவர்களுக்கும் வழங்குவது தான் சமூக நீதி. அதை மதித்து கால்நடை மருத்துவர்களுக்கான பதவி உயர்வு தொடர்பான கால்நடை பராமரிப்புத் துறையின் பரிந்துரையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • வாழ்த்துக் கூறிய அனைவரும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
    • பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்.

    தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், நடிகருமான விஜய் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கூறிய அனைவரும் நன்றி கூறும் விதத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    "எனது பிறந்த நாளை முன்னிட்டு தொலைபேசி வாயிலாகவும். சமூக ஊடகத் தளங்கள் வாயிலாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமி. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர், பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய செந்தமிழன் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தொல். திருமாவளவன். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய டாக்டர் அன்புமணி இராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய டி.டி.வி. தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கமல்ஹாசன். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் மதிப்பிற்குரிய ஜான் பாண்டியன், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய நெல்லை முபாரக்,

    சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான மதிப்பிற்குரிய கு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர். மதிப்பிற்குரிய கே. அண்ணாமலை.

    முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய எஸ். திருநாவுக்கரசர். முன்னாள் அமைச்சர் மதிப்பிற்குரிய டி. ஜெயக்குமார். முன்னாள் அமைச்சர். சட்டமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய எஸ்.பி.வேலுமணி. முன்னாள் அமைச்சர். சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய சி.விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய வானதி சீனிவாசன், நாடாளுமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய தாரகை கத்பட், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். மதிப்பிற்குரிய ஒ.பி.ரவீந்திரநாத் மற்றும் என்றும் எனது நெஞ்சிற்கினிய கலைத்துறை சார்ந்த அனைத்து ஆளுமைகள், வழிகாட்டிகள், நண்பர்கள், சகோதர சகோதரிகள், ஊடக நிறுவனங்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகள், என் நெஞ்சில் குடியிருக்கும் கழகத் தோழர்கள், உலகெங்கும் உள்ள என் உயிரினும் மேலான கோடானு கோடி சொந்தங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்" என்று கூறியுள்ளார்.

    • அரசுப் பள்ளிகளில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.58 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.
    • ரூ.1.14 இலட்சம் மதிப்பீட்டில் சொந்த நூலகங்களுக்கான விருது வழங்கப்படும்

    பள்ளிக் கல்வித் துறையின் 2024-2025 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் இடம் பிடித்துள்ள முக்கியம்சங்கள் பின்வருமாறு-

    1. அரசுப் பள்ளிகளில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.58 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்.

    2. இவ்வாண்டு பாரத சாரண சாரணிய இயக்கத்தின் வைர விழா ஆண்டாகும். இதனையொட்டி, தேசிய அளவிலான முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு வைர விழா ஜாம்போரி (Diamond Jubilee National Jamboree) ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடத்தப்படும்.

    3. காலநிலை மாற்றம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கல்வி ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

    4. ஆளுமைத் திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

    5. 6  முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படைக் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் திறன் பாடத்திட்டம் தயார் செய்து ஆசிரியர்களுக்குப் பயிற்சியும், மாணவர்களுக்கு மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) சார்ந்த அடிப்படைத் திறன்களும் கற்றுக் கொடுக்கப்படும்.

    6. அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.42 கோடி செலவில் அமைக்கப்படும்.

    7. எந்திரனியல் ஆய்வகங்கள் (Robotics Labs)

    உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை வளர்க்கவும், குழுவாக இணைந்து செயல்படக்கூடிய திறனைக் கற்றுக் கொள்ளவும், படைப்பாற்றலை வளர்க்கவும் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற அளவில் 38 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் எந்திரனியல் ஆய்வகம் (Robotics Lab) ரூ.15.43 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

    8 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் புலன் உணர்வுத்திறன், அறிவுத்திறன், பெருந்தசை இயக்கத்திறன் மற்றும் நுண்தசை இயக்கத்திறன் ஆகியவை மேம்படுவதற்காக ஒரு மாவட்டத்திற்கு ஒரு "பல்வகைத் திறன் பூங்கா" என 38 மாவட்டங்களில் ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

    9. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றித் தொடர்ந்து பள்ளிக்கு வருகைப் புரியும் பொருட்டு அவர்களுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஏற்படும் இடையூறுகளில் இருந்து தங்களைக் பாதுகாத்துக் கொள்ளவும், இணையதள பயன்பாடுகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்து வழிகாட்டுதல் வழங்கவும் "அகல் விளக்கு" என்ற திட்டம் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

    10. இக்கல்வியாண்டு முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் பங்கேற்கும் வகையில் கலைத் திருவிழா நடத்தப்படும்.

    11. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே ஏற்றுக்கொள்ளும். இதற்கென ஆண்டுதோறும் ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    12. "நம்ம School நம்ம ஊரு பள்ளி" திட்டத்தின் வாயிலாகத் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளுக்குப் பங்களிப்புகளைத் திரட்டுவதற்கும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கும் தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்துடன் (ICTACT) புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) மேற்கொள்ளப்படும்.

    13. ஆறு மாவட்டங்களில் செயல்பட்டுவரும் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் ரூ.41.63 கோடி மதிப்பீட்டில் தகைசால் நிறுவனங்களாகத் தரம் உயர்த்தப்படும்.

    14. பன்முகத் திறமையாளராக ஆசிரியர்களை மேம்படுத்தும் வகையில் ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் திறன்வளர் பயிற்சி வழங்கப்படும்.

    15 1000 ஆசிரியர்களுக்குத் தொல்லியல் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டது. இவ்வாண்டில் இரண்டாம் கட்டமாக, மேலும் 1000 ஆசிரியர்களுக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் தொல்லியல் பயிற்சி வழங்கப்படும்.

    16. மாணவர்களின் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்துதலை அறவே தவிர்க்க உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, உயர்கல்வித் துறை ஆகியவற்றுடன் சேர்ந்து கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படும். இத்திட்டம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

    17. தூத்துக்குடி மாவட்டத்தில் வாசகர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட மைய நூலகத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

    18. பார்வைத் திறன் குறைபாடுடைய மாணவர்கள் நலனுக்காக மாவட்ட மைய நூலகங்களில் கணினி மற்றும் எழுத்துணரி மென்பொருள் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

    19. அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு வருகை தரும் சிறுவர்களின் அறிவியல் அறிவினை மேம்படுத்தும் வகையில் அறிவியல் சாதனங்கள் கொண்ட சிறார் அறிவியல் பூங்கா ரூ.80.24 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

    20. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உதவியுடன் நூலகங்களுக்கான புதிய சேவைகள்

    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உதவியுடன் மொழிபெயர்ப்பு, நூல் சுருக்கம், மறுஉருவாக்கம், காணொளிகள் எழுத்தாக்கம் போன்ற புதிய சேவைகள் மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் முழுநேரக் கிளை நூலகங்களில் வாசகர்கள் பயன்பெறும் வகையில், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மூலம் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

    21 ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்கள் அமைத்துச் சிறப்பாகப் பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களைக் கண்டறிந்து ஊக்குவிக்க ரூ.1.14 இலட்சம் மதிப்பீட்டில் சொந்த நூலகங்களுக்கான விருது வழங்கப்படும்.

    22. தமிழ் இலக்கியம், தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் பண்பாட்டை எடுத்துக்காட்டும் நூல்களை ஆங்கிலம் மற்றும் தென்னிந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பதற்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் "திசைதோறும் திராவிடம்" என்ற திட்டம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் பிற இந்திய மொழிகள் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

    23. தமிழ்நாட்டின் பண்பாடு, கட்டடக்கலை, சிற்பக்கலை, நாட்டுப்புறக் கலைகள், தனித்துவமான உணவு வகைகள், புவிசார் குறியீடுகள் போன்றவற்றைக் உள்ளடக்கிய புகைப்பட ஓவிய நூல்கள் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் "மிளிரும் தமிழ்நாடு" என்ற பெயரில் பரிசுப் பதிப்புகளாக வெளியிடப்படும்.

    24. வணிகவியல் மற்றும் கணக்கியல் பாடங்களைப் பயிலும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் பட்டயக்கணக்காளர் அடிப்படைத் தேர்வுக்கான நூல்கள் தமிழ் கலைச் சொற்களோடு கூடிய வெளியீடாக ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் வெளியிடப்படும்.

    25. இணையதள மேம்பாடு மற்றும் விற்பனை முகவர்கள் மூலமாக தேசிய மற்றும் சர்வதேச அளவில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகப் புத்தகங்களை விற்பனை செய்திட ஏதுவாக விற்பனைக்கான இணைய தளம் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். 

    • அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் மாணவியர்களுக்கென தனி ஓய்வறைக் கட்டடம் 8.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
    • அரசு பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அளிக்கப்படும்.

    சட்டமன்ற கூட்டத்தொடரின் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் பொன்முடி 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட்டார்.

    அதன் விவரம் பின்வருமாறு:-

    1. அச்சு தொழில்நுட்பம், வேதியியல் தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம் மற்றும் நெசவு தொழில்நுட்பம் ஆகிய 4 சிறப்பு பயிலகங்களில் புதிதாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப 6 புதிய பட்டயப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.

    2. கோவையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதிக் கட்டடம் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    3. ஈரோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 200 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதிக் கட்டடம் 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    4. மைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் சிறப்பு பயிலக மாணவர்களுக்காக சென்னை மைய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் ஆண்கள் விடுதிக் கட்டடம் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    5. அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் மாணவியர்களுக்கென தனி ஓய்வறைக் கட்டடம் 8.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    6. கோவை, சேலம் மற்றும் பர்கூர் ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரனியல் ஆய்வகம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

    7. திருநெல்வேலி, தருமபுரி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் மின்சார வாகன தொழில்நுட்ப ஆய்வகம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

    8. காரைக்குடி மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் உள்ள 2 அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருட்களின் இணையம் ஆய்வகும் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

    9. வேலூர், தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருள்சேர் உற்பத்தி ஆய்வகம் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

    10. GATE, IES, CAT, GMAT, GRE, IELTS, TOEFL உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தீவிர பயிற்சி பெறும் மாணாக்கர்களின் எண்ணிக்கையை 500-ல் இருந்து 1400 ஆக உயர்த்தப்படும். இதற்காக கூடுதலாக 77 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.

    11. அரசு பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அளிக்கப்படும்.

    12. அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு தேவையான தளவாடங்கள் 7.05 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.

    13. தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் செயல்படும் தமிழ்நாடு வரலாற்று ஆராய்சி மன்னறம் மீளுருவாக்கம் செய்யப்படும்.

    14. திருச்சி அண்ணா அறிவியல் மையம் கோளரங்கத்தில் வேடிக்கை அறிவியல் காட்சிக்கூடம் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

    15. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணாக்கர்களின் சேர்க்கை அதிகரிக்கப்படுகிறது. அரசு கல்லூரிகளில் 20 சதவீதம், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதம், சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீத மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்படும்.

    இவ்வாறு அந்த மானிய கோரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க.வுக்கு நல்ல பெயர் வந்து விடும் என்ற எண்ணத்தில் தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
    • மாறாக தி.மு.க பிரமுகர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.

    ஈரோடு:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவத்தில் தமிழக அரசின் மெத்தன போக்கை கண்டித்து இன்று ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் கே.சி. கருப்பண்ணன் எம்.எல்.ஏ பேசியதாவது:-

    கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. சட்டமன்றத் உறுப்பினர் செந்தில்குமார் கடந்த பட்ஜெட் சட்டசபை கூட்டத்தொடர் போது கவனம் ஈர்ப்பு தீர்மானம் கொடுத்த போது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

    அன்றைய தினமே நடவடிக்கை எடுத்து வந்திருந்தால் தற்போது கள்ளச்சாராயம் காரணமாக உயிரிழப்பு நிகழ்ந்திருக்காது. அ.தி.மு.க.வுக்கு நல்ல பெயர் வந்து விடும் என்ற எண்ணத்தில் தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எம்.எல்.ஏ., பஞ்சாயத்து தலைவர்கள், எஸ்.பி.யிடம் சொன்ன போதும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக தி.மு.க பிரமுகர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.

    கள்ளச்சாராயம் மூலம் இவ்வளவு உயிரிழப்புக்கு தி.மு.க அரசு தான் காரணம். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதற்கு பொறுப்பு ஏற்று ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சட்ட ஒழுங்கு பிரச்சனை காப்பாற்ற சாராயம் தயாரித்த நபர்கள் மீது நிறைய வழக்குகள் இருப்பதால் அவர்களை என்கவுண்டரில் போடுங்கள். அப்போதுதான் மற்றவர்களுக்கு பயம் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    27-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை/இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் இல்லாதது போல எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார்.

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் மாதவச்சேரியை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சாராய விற்பனையை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி அளித்தார்.

    அப்போது, "கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் நடந்த உடனேயே நீதி விசாரணை மற்றும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுக மற்றும் பாஜகவுக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வருகிறது. விஷச் சாராய உயிரிழப்பை வைத்து எடப்பாடி பழனிசாமியும் பாஜகவும் அரசியல் செய்கின்றனர்.

    இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க ஒத்துழைக்காமல் எதிர்க்கட்சி தலைவர் நாடகமாடுகிறார்.

    அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் இல்லாதது போல எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார்.

    கள்ளக்குறிச்சி விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கேட்கும் எடப்பாடி பழனிசாமி, நான் தொடர்ந்த டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கியது எதற்காக?

    திடீரென சிபிஐ மீது இபிஎஸ்க்கு எப்படி நம்பிக்கை வந்தது? சிபிசிஐடி மீது ஏன் அவர் சந்தேகப்படுகிறார்? காவல்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியே தமிழ்நாடு காவல்துறையை களங்கப் படுத்துகிறார்.

    கள்ளக்குறிச்சி விவகாரத்தை திசை திருப்பி பிரச்சனை செய்ய வேண்டும் என்பதாலேயே எடப்பாடி பழனிசாமி சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்கிறார்.

    1971 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மதுக்கடைகள் வந்தது என்று நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். அக்காலகட்டத்தில் கள்ளச்சாராய மரணங்கள் அதிகளாவில் நடந்தது. தமிழ்நாட்டை சுற்றியுள்ள அனைத்து மாநிலங்களிலும் மது விற்பனை நடைபெற்று வந்ததால் கள்ளச்சார்யா மரங்களை தடுப்பதற்காக மது விற்பனை அனுமதிக்கப்பட்டது. ஆகவே வரலாறு தெரிந்து கொண்டு நிர்மலா சீதாராமன் பேச வேண்டும்" என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

    • பா.ஜ.க. கூட்டணியில் தான் பா.ம.க. உள்ளது.
    • சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும்.

    சென்னை:

    சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடப்பில் உள்ளதாகவும், சாதிவாரி கணக்கெடுப்புகளை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

    இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

    இப்போது பா.ஜ.க. கூட்டணியில் தான் பா.ம.க. உள்ளது. பா.ஜ.க.வுடன் பேசி நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகு தான் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும்.

    ஏற்கனவே இடஒதுக்கீடு அமல்படுத்தி நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண வேண்டுமென்றால், சாதிவாரி கணக்கெடுப்பு மத்திய அரசால் விரைந்து நடத்தப்பட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×