என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக தற்போது சரண் அடைந்துள்ள 8 பேரும் உண்மையான குற்றவாளிகள் இல்லை.
    • இல்லம் அருகே மாநில தலைவர் கொல்லப்பட்டது தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் மிகப்பெரிய சவால்

    சென்னை:

    சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * சமூக விரோத கும்பலால் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை விசிக வன்மையாக கண்டிக்கிறது.

    * ஏழை, எளிய மக்களுக்காக தன்னை முழுமையாக ஒப்படைத்து கொண்டவர் ஆம்ஸ்ட்ராங்.

    * ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் உள்ளவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும்.

    * ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக தற்போது சரண் அடைந்துள்ள 8 பேரும் உண்மையான குற்றவாளிகள் இல்லை.

    * சரணடைந்தவர்களை கைது செய்து விட்டோம் என்று இருந்துவிடாமல் உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்.

    * ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடையவர்கள், கொலை செய்ய தூண்டியவர்கள் என அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

    * இல்லம் அருகே மாநில தலைவர் கொல்லப்பட்டது தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் மிகப்பெரிய சவால்

    * பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடலை வைத்து அஞ்சலி செலுத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

    * பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • கோவில் கோசலராமன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது.
    • கோவிலில் அமாவாசை தோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ளது நகலூர் கிராமம். இங்கு கலியுக ரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் கோசலராமன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது.

    நகலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் கோவிலுக்கு வந்து ரங்கநாதரை வழிபாடு செய்து வந்தனர். இந்த கோவிலில் அமாவாசை தோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கோசலராமன் திடீரென கோவிலுக்குள் சென்று மூலவரான ரங்கநாதர் சாமி சிலை மீது அமர்ந்து தான் கடவுள் என்று கூறிக்கொண்டு தனக்கு பூஜை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

    அதனைத்தொடர்ந்து அங்கு இருக்கும் பூசாரி ஒருவர் கோசலராமன் மீது பாலை ஊற்றி பால் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபர ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை தேடி வந்தனர்.
    • போலீசார் அவர்களிடமிருந்த கஞ்சா மற்றும் அதனை புகைக்க பயன்படுத்திய புகையிலை உறிஞ்சி ஆகியவற்றை கைப்பற்றினர்.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு சொந்தமான சிறுவர் பூங்காவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கஞ்சா புகைத்தபடி வாலிபர்கள் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோவில் 2 வாலிபர்கள் போதை அதிகரிக்கவே அவர்களை மற்றவர்கள் தூக்கிச் செல்வது போலவும், அதற்கேற்றபடி சினிமா பாடலும் இடம் பெற்றிருந்தது.

    இந்த வீடியோ வைரலான நிலையில் இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை தேடி வந்தனர். அப்போது கஞ்சா போதையில் வீடியோ பதிவிட்டது பாலசமுத்திரத்தை சேர்ந்த சிவக்குமார், மகாபிரபு, கார்த்திக், பாலசுப்பிரமணியன், ராம்குமார், மதன்குமார் ஆகியோர் என தெரியவரவே அவர்களை கைது செய்தனர்.

    இவர்கள் அதே பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிலும் சாமி வேடமணிந்து ரீல்ஸ் பதிவிட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த கஞ்சா மற்றும் அதனை புகைக்க பயன்படுத்திய புகையிலை உறிஞ்சி ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள பாலசமுத்திரத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் மதி, கஞ்சா விற்பனை செய்த பாலசமுத்திரத்தை சேர்ந்த பாஸ்கர், முத்துராஜா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    பழனி மற்றும் சுற்றுப்புற பகுதியில் இதுபோல குடிபோதை மற்றும் கஞ்சா போதையில் ரீல்ஸ் வெளியிடுவதற்காக சுற்றித்திரியும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இழப்பீடு வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
    • அரசு தரப்பு வக்கீல்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த முகமது கோஸ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    சாராயம் குடிப்பது சட்டவிரோத செயல். அதனால் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை பாதிக்கப்பட்டவர்களாக கருத முடியாது. அவ்வாறு கருதவும் கூடாது.

    தீ விபத்து உள்ளிட்ட விபத்துக்களில் பலியாவோருக்கு குறைந்த இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்குகிறது. ஆனால், கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு எந்த அடிப்படையில் அதிக தொகை இழப்பீடு வழங்கப்படுகிறது? என்பது குறித்து பொதுமக்களுக்கு அரசு தெளிவுப்படுத்தவில்லை. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகளோ, சமூக சேவகர்களோ, சமூகத்துக்காக உயிர் தியாகம் செய்தவர்களோ இல்லை.

    அவர்களுக்கு இழப்பீடாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்குவதை ஏற்க முடியாது. இழப்பீடு வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கள்ளச்சாராயம் குடித்து மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது அதிகம். இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    பின்னர், இந்த இழப்பீட்டு தொகையை குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய முடியுமா? என்று அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அரசு தரப்பு வக்கீல்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

    • 5 மாவட்டங்களில் உள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயர வைகை அணை மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் முதல் போக பாசனத்துக்கும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் 2ம் போக பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

    இதன் மூலம் 5 மாவட்டங்களில் உள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். கடந்த 3 ஆண்டுகளாக வைகை அணையில் போதிய நீர் இருந்ததால் ஜூன் 2-ந் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தின் முதலே நீர்வரத்து குறைவாக இருந்ததால் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.

    வைகை அணையில் இருந்து இருபோக பாசனத்துக்காக பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் பாசன வசதி பெறும் மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் 45 நாட்களுக்கு 900 கன அடி வீதம் முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 6739 மி.கன அடி தண்ணீர் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் என கடந்த 3ம் தேதி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால் 3 நாட்களிலேயே தண்ணீர் திறப்பு 900 கனஅடியில் இருந்து 750 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இன்று காலை மதுரை மாநகர குடிநீரோடு சேர்த்து 819 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து 857 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 52.07 அடியாக உள்ளது. பாசனத்திற்கான தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளதால் மேலூர், கள்ளந்திரி வரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லுமா என விவசாயிகளிடையே கேள்வி எழுந்துள்ளது.

    மழை குறைந்துள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் முழுவதும் மதுரை நகருக்கு செல்வதே கேள்விக்குறியாக உள்ளது. எனவே வழக்கம்போல் பாசனத்திற்கு 900 கனஅடி நீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.95 அடியாக உள்ளது. அணைக்கு 744 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1200 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121.03 அடியாக உள்ளது. பெரியாறு 8.4, தேக்கடி 7.3, கூடலூர் 3.4, சண்முகாநதி அணை 2.1 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியிலில் ஈடுபட்டனர்.
    • நெல்லையை சேர்ந்த கூலிப்படையினர் கொலை பின்னணியில் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    சென்னை :

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன் வைத்து 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியிலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பலமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலை பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் போட்டு கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், ஆம்ஸ்ட்ராங் வீடு உள்ள பகுதியில் இருக்கும் பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்துவது போல ஒருவாரமாக நோட்டமிட்டு வந்த திருமலை, ஆம்ஸ்ட்ராங் அடிக்கடி தான் கட்டி வரும் வீட்டருகே குறைந்த அளவிலான நண்பர்களுடன் வருவதை நோட்டமிட்டு புன்னை பாலுவுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதன்பிறகே கொலையே அரங்கேற்றி உள்ளனர்.

    புன்னை பாலு என்பவர் ஆற்காடு சுரேஷின் தம்பி ஆவார். கைதான புன்னை பாலு போலீசில் அளித்த வாக்குமூலத்தில், அண்ணனைக் கொன்றதோடு ஜெயபால், ஆம்ஸ்ட்ராங் தரப்பினர் எனக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். தொடர் கொலை மிரட்டல் வந்ததால் என் மனைவி பயத்தில் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அண்ணன் ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில் திட்டமிட்டு கொலை செய்ததாக கூறியுள்ளார்.

    இதற்கிடையே, நெல்லையை சேர்ந்த கூலிப்படையினர் கொலை பின்னணியில் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து என உளவுத்துறையும், குற்றப்புலனாய்வு பிரிவும் 3 முறை எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    • 10 நாட்களுக்கு முன்பு கிட்டத்தட்ட 70 பேர் கள்ளச்சாராயத்தால் இறந்தனர்.
    • ராகுல் காந்தி ஹத்ராஸ் சென்றார். ஆனால் முதலமைச்சர் கள்ளக்குறிச்சிக்கு கூட வரவில்லை.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு நேற்று இரவு வெட்டி கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறுகையில்,

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் உயிரிழந்துள்ளார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் திமுக அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.

    10 நாட்களுக்கு முன்பு கிட்டத்தட்ட 70 பேர் கள்ளச்சாராயத்தால் இறந்தனர். தமிழக முதலமைச்சர் காவல்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தை கட்டுப்படுத்துகிறார். அதில் அவர் தோல்வியடைந்து உள்ளார்.

    ராகுல் காந்தி ஹத்ராஸ் சென்றார். ஆனால் முதலமைச்சர் கள்ளக்குறிச்சிக்கு கூட வரவில்லை. அரசியல் தலைவர்கள் கொல்லப்படுகிறார்கள், அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.
    • கோவை கிங்ஸ்-ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சேலம்:

    8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று சேலத்தில் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக கோவை கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.15 மணிக்கு திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. திண்டுக்கல் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், பாபா இந்திரஜித், வருண் சக்ரவர்த்த்தி, ஷிவம்சிங், சந்தீப் வாரியர், விமல்குமார் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    திருச்சி அணியில் கங்கா ஸ்ரீதர் ராஜ்குமார், அந்தோணி தாஸ், சஞ்சய் யாதவ், டேவிட்சன், ஈஸ்வரன், சரவணகுமார் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப் பரீட்சை நடத்துகின்றன. மதுரை அணியில் ஹரி நிசாந்த், சசிதேவ், சதுர்வேத், கவுசிக், அஜய் கிருஷ்ணா, அலெக்சாண்டர், முருகன் அஸ்வின், சரவணன், ஸ்வப்னில்சிங் ஆகியோர் உள்ளனர்.

    சேலம் அணியில் அபி ஷேக், கவின், விவேக், கணேஷ்மூர்த்தி, ஹரீஷ் குமார், பொய்யா மொழி, சச்சின்ரதி ஆகிய வீரர்கள் உள்ளனர்.


    நாளையும் இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் மாலை 3.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தனது தொடக்க ஆட்டத்தில் கோவையிடம் தோற்றது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் கேப்டன் பாபா அபராஜித், ஜெகதீசன், பிரதோஷ் ரஞ்சன்பால் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    ஆல்-ரவுண்டர்கள் அபிஷேக் தன்வர், சதீஷ், பந்து வீச்சில் பெரியசாமி, ரஹில்ஷா, சிலம்பரசன் ஆகியோர் உள்ளனர்.

    நெல்லை அணியில் அருண் கார்த்திக், அஜிதேஷ், ராஜகோபால், சூரியபிர காஷ், சோனு யாதவ், கவுதம், ஹரீஷ், ஆர்.சிலம்பரசன், மோகன் பிரசாத் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    நாளை இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    • தேசிய அளவில் இயங்கி வரும் சட்டப் பள்ளிகளுக்கு இடையே இந்த சட்டப் பல்கலைக்கழகம் முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறது.
    • மாணவா்கள் தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டு வந்தனா்.

    சென்னை:

    சீா்மிகு சட்டப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் சிலா் அடிக்கடி தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், அவா்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை கடுமையாக்கவும் தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் முடிவு செய்து உள்ளது.

    இது தொடா்பாக பல்கலைக்கழகத்தின் முதல்வா் வே.பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் அதன் கீழ் செயல்படும் சீா்மிகு சட்டப் பள்ளி, சட்டக் கல்வியின் தரத்திலும், மாணவா்கள் வருங்கால வழக்குரைஞா்களாகவும், நீதிபதிகளாகவும் மற்றும் பிற உயரிய பதவிகள் வகிப்பவா்களாகவும் உருவாக்கி வருகிறது.

    தேசிய அளவில் இயங்கி வரும் சட்டப் பள்ளிகளுக்கு இடையே இந்த சட்டப் பல்கலைக்கழகம் முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறது.

    இந்த சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் சில மாணவா்கள் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் சக மாணவா்கள் மீது உடல் ரீதியான தாக்குதலில் ஈடுபடுவதும், தங்களுக்குள்ளே தாக்கி கொள்வதும், வெளியில் இருந்து வருபவா்களை தாக்குவதும் நடந்து வருகிறது.

    இது சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வதற்கு சமம். சட்டப் பல்கலைக்கழகம் என்ற முறையில் இந்த செயல்பாடுகள் ஏற்கத்தக்கதல்ல.

    இதுவரை இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவா்கள் தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டு வந்தனா்.

    ஆனால், இனிமேல் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவா்கள் தோ்வு எழுதுவதில் இருந்து விலக்கி வைக்கப்படுவ தோடு, சட்டப் பள்ளியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவா்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
    • தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவரது மறைவு பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பாகும்.

    ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்கள் 38 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர்.
    • வீட்டை சுற்றி வளைத்த இஸ்ரேல் ராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

    ஜெனின்:

    பாலஸ்தீனத்தின் காசா நகரில் இஸ்ரேல் படையினர் கடந்த 7 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்கள் 38 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர்.

    இந்த நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை நகரமான ஜெனினில் உள்ள ஒரு கட்டிடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது.

    மேலும் அந்த வீட்டை சுற்றி வளைத்த இஸ்ரேல் ராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் 7 பாலஸ்தீனர்கள் உயிர் இழந்ததாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • பொதுவாக வார இறுதி நாட்களில் அருவிகளில் கூட்டம் அலைமோதும்.
    • இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்து வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டு வரும் குற்றாலம் அருவிகளில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சீசன் தொடங்கும்.

    அப்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவு ஆர்வம் காட்டுவார்கள்.

    தற்போது குற்றாலத்தில் சீசன் தொடங்கி உள்ள நிலையில் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. இதனால் உள்ளூர் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளிக்க குவிந்து வருகின்றனர்.

    பொதுவாக வார இறுதி நாட்களில் அருவிகளில் கூட்டம் அலைமோதும். அதன்படி இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்து வருகிறது.

    இருப்பினும் இன்று காலை முதல் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    நேற்று காலை முதல் குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வெயில் சுட்டெரித்த நிலையில் பிற்பகலுக்கு மேல் குளிர்ந்த காற்றுடன் மிதமான சாரல் மழை பரவலாக பெய்தது.

    இதனால் குளிர்ந்த காற்றுடன் ரம்மியமான சூழ்நிலை நிலவுவதால் சீசனை அனுபவிக்க வெளியூர் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்கு குளுகுளு சீசன் நிலவுகிறது.

    ×