என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • குமாரின் கடையின் அருகில் உள்ள ஜெயராமனின் பேன்சி ஸ்டோர் கடையிலும் அந்த தீப்பற்றி கொண்டது.
    • தீ விபத்தால், கோவிலுக்குள் சென்றவர்கள், அந்த பகுதியில் மற்ற கடைகளில் இருந்த பொதுமக்கள் பதறியடித்து அங்கிருந்து தப்பித்து ஓடினர்.

    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கல்லாவி சாலை பகுதியில் உள்ள சுப்ரமணிய சாமி கோவில் அமைந்துள்ளது. அந்த கோவில் அருகே பூக்கடை, எலெக்டரிக்கல் பொருட்கள் பழுது பார்க்கும் கடை, பேன்சி ஸ்டோர் கடைகள் என ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றனர்.

    இதில் கோவிலையொட்டி அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் எலக்ட்ரிக்கல் பொருட்கள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். அதன் அருகே ஜெயராமன் என்பவர் பேன்சி ஸ்டோர் கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் வழக்கம் போல் இன்று காலை 2 பேரும் கடைகளை திறந்து வைத்திருந்தனர். அப்போது திடீரென்று குமாரின் எலக்ட்ரிக்கல் பழுது பார்க்கும் கடையில் இருந்து புகை வெளியேறியது. இந்த புகை சிறிது நேரத்தில் தீப்பிடிக்க ஆரம்பித்தது.

    அப்போது குமாரின் கடையின் அருகில் உள்ள ஜெயராமனின் பேன்சி ஸ்டோர் கடையிலும் அந்த தீப்பற்றி கொண்டது.

    உடனே கடையில் இருந்து வெளியே குமாரும், ஜெயராமனும் ஊத்தங்கரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதில் தீ மளமளவென பரவி கடைகள் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. அதற்குள் குமாரின் கடையில் இருந்த பழைய எலெக்ட்ரிக்கல் பொருட்களும், ஜெயராமன் கடையில் இருந்த பேன்சி பொருட்களும் முழுவதும் எரிந்து சேதமானது.

    இந்த தீ விபத்தால், கோவிலுக்குள் சென்றவர்கள், அந்த பகுதியில் மற்ற கடைகளில் இருந்த பொதுமக்கள் பதறியடித்து அங்கிருந்து தப்பித்து ஓடினர்.

    தகவலறிந்த ஊத்தங்கரை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். மேலும், தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மின் கசிவால் தீப்பற்றி கொண்டதா? அல்லது வேறு யாரவாது தீ வைத்தனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த தீவிபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் நாளை (சனிக்கிழமை) எழுத உள்ளனா்.
    • தமிழ்நாடு முழுவதும் 2,763 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    தமிழ்நாடு முழுவதும் நாளை (சனிக்கிழமை) குரூப்-2 தேர்வு நடைபெற உள்ளது.

    குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் நாளை (சனிக்கிழமை) எழுத உள்ளனா். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 2,763 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மொத்தமுள்ள 2,763 தோ்வு மையங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளா்கள், கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

    தோ்வா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்குள் நாளை காலை 8.30 மணிக்குள் இருக்க வேண்டும். 9 மணி வரை அவா்கள் வருவதற்கு அனுமதி உண்டு என அறிவிக்கப்பட உள்ளது.

    தமிழகம் முழுவதும் 2763 தேர்வு மையங்களும் பள்ளிக்கூடங்கள் ஆகும்.

    இதனால், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நாளை நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    • சிறுவன் தாக்கப்படும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ளவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
    • 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இசக்கி ராணியை கைது செய்தனர். தலைமுறைவான ஜோதி கிளியை வலைவீசி தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள தருவையை சேர்ந்தவர் ஜோதி கிளி. தொழிலாளி. இவரது மனைவி இசக்கிராணி. இவர்களது மகன் தருவையில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளியில் இந்த மாணவனுக்கும், சக மாணவனுக்கும் இடையே சிறு பிரச்சனை ஏற்பட்டு அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

    இதில் சக மாணவர் தன்னை தாக்கியதாக ஜோதிகிளியின் மகன் தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த ஜோதி கிளி நேராக தனது மகனை தாக்கிய சக மாணவனை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். தொடர்ந்து ஜோதி கிளியின் மனைவி இசக்கிராணியும் சிறுவனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சிறுவன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.

    இந்த சம்பவங்கள் தொடர்பாக ஊர் பெரியவர்கள் பேசி இருதரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

    இந்நிலையில் சிறுவன் தாக்கப்படும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ளவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதையடுத்து முன்னீர்பள்ளம் போலீசார் காயம் அடைந்த மாணவனின் தாயாரிடம் புகார் மனு பெற்று சிறுவனை தாக்கிய ஜோதி கிளி மற்றும் அவரது மனைவி இசக்கிராணி ஆகியோர் மீது சிறுவனையும், அவனது தாயாரையும் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் கொடுத்ததாகவும், சிறுவனை தாக்கியதாகவும் கூறி இந்திய தண்டனைச் சட்டம் 294 பி, 323, 506 (2), பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இசக்கி ராணியை கைது செய்தனர். தலைமுறைவான ஜோதி கிளியை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • பாத்திரங்கள், கிரைண்டர், மிக்சி போன்றவை ரிப்பேர் ஆகி கிடக்கின்றன.
    • இதுவரையில் 300 அம்மா உணவக கட்டிடங்களை சீரமைக்க கடிதம் பெறப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மூலம் 388 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட இந்த உணவகங்கள் செயல்படும் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன.

    பாத்திரங்கள், கிரைண்டர், மிக்சி போன்றவை ரிப்பேர் ஆகி கிடக்கின்றன. இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்.

    இந்த நிலையில் அம்மா உணவகங்களை சீரமைக்கவும், உடைந்து போன பாத்திரங்களை மாற்றவும் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    388 அம்மா உணவகங்களுக்கும் பாத்திரங்கள் மற்றும் சமையல் அறை உள்ளிட்டவற்றை சரி செய்ய ரூ.7 கோடியே 6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அம்மா உணவகத்திற்கும் தலா ரூ.2 லட்சம் வீதம் செலவிடப்பட உள்ளது.

    என்னென்ன பாத்திரங்கள் புதிதாக வாங்க வேண்டும் என்பது குறித்து கணக்கெடுக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல கட்டிடங்களையும் பழுது பார்க்க ஆய்வு செய்யும் பணி நடந்தது. அம்மா உணவகங்கள் செயல்படும் கட்டிடங்களை சீரமைக்கும் வகையில் கணக்கெடுக்கப்பட்டது. அதில் இதுவரையில் 300 அம்மா உணவக கட்டிடங்களை சீரமைக்க கடிதம் பெறப்பட்டுள்ளது.

    • சுமார் 6 பவுன் தங்க நகைகளை ஒருநகை பெட்டியில் வைத்து தனது கைப்பையில் வைத்திருந்தார்.
    • நகைகள் கிடைக்காததால் அதற்கு முன்பு பஸ் நிறுத்தப்பட்ட இடத்தை போலீசார் விசாரித்தனர்.

    திண்டிவனம்:

    சீர்காழி அடுத்த திருவெண்காடு பகுதி சேர்ந்தவர் ராஜன் இவரது மனைவி மெர்லின் (27). இவர் தனது இரு கை குழந்தைகளுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தாய் வீடான சென்னையில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு கலந்து கொண்ட பின் நேற்று முன்தினம் தனது சகோதரர் வசந்த் (19) மற்றும் தனது இரு கை குழந்தைகளையும் அழைத்து கொண்டு அரசு பஸ்சில் சீர்காழிக்கு திரும்பி கொண்டு இருந்தார்.

    சுப நிகழ்ச்சியில் தான் அணிந்திருந்த நெக்லஸ் கம்மல் மற்றும் தனது குழந்தைகள் அணிந்திருந்த பிரேஸ்லெட், மோதிரம் உள்ளிட்ட சுமார் 6 பவுன் தங்க நகைகளை ஒருநகை பெட்டியில் வைத்து தனது கைப்பையில் வைத்திருந்தார். பஸ் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடக்கும் பொழுது தனது குழந்தைக்கு பால் பாட்டில் எடுப்பதற்காக தனது கை பையை திறந்த போது அதிலிருந்து நகை பெட்டி காணாமல் போய் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பஸ் டிரைவர் அவர்களை அங்கு இறக்கி விடாமல் பஸ் வழியில் எங்கும் நிற்காது. அடுத்ததாக பண்ருட்டியில் தான் நிற்கும் எனக் கூறி பண்ருட்டிக்கு அவர்களை அழைத்துச் சென்று அங்கிருந்த போலீஸ் நிலையத்தில் தங்க நகைகள் திருடப்பட்ட தகவலை தெரிவித்தனர். தகவலின் பேரில் பஸ்சில் இருந்த பயணிகளிடம் பண்ருட்டி போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் நகைகள் கிடைக்காததால் அதற்கு முன்பு பஸ் நிறுத்தப்பட்ட இடத்தை போலீசார் விசாரித்தனர். விசாரித்ததில் இதற்கு முன்பாக திண்டிவனம் பஸ் நிலையத்தில் நின்ற போது 4 பயணிகள் மட்டுமே கீழ இறங்கினர் என தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து பண்ருட்டி போலீசார் பெண் பயணியிடம் திண்டிவனம் போலீஸ் நிலையத்திற்கு சென்று அங்கு புகார் அளிக்குமாறு அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். காலை 7 மணிக்கு நகைகளை பறிகொடுத்த அந்த பெண் பயணி நண்பகல் 1 மணியளவில் திண்டிவனம் போலீஸ் நிலையத்திற்கு வந்தடைந்தார். அதனை தொடர்ந்து அந்த பயணி தான் பறிகொடுத்த நகைகள் விபரங்களை திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் தெரிவித்து புகார் அளித்துச் சென்றார்.

    விக்கிரவாண்டி டோல்கேட்டில் நகைகளை பறிகொடுத்த இடத்தில் பெண் பயணியை இறக்கி விட்டிருந்தால் அங்கிருந்த விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் அவர் நடந்த விபரங்களை தெரிவித்து இருப்பார். ஆனால் பஸ் டிவைரோ பஸ் வழியில் எங்கும் நிற்காது என்று கூறி மனிதாபிமானம் அற்ற முறையில் அவரை அங்கிருந்து பண்ருட்டியில் இறக்கி விட்டு சென்றுள்ளார். இதுபோல மனிதாபிமானம் அற்ற முறையில் பணிபுரியும் அரசு பஸ் டிரைவர்மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலரும் பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர். 

    • மதுவை ஒழிக்கட்டும். திமுக வெல்லட்டும்.
    • மதுவிற்கு எதிராக நீண்ட காலமாக போராடுபவர் எங்கள் ஐயா ராமதாஸ்.

    சென்னை:

    ஜி.எஸ்.டி. குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளங்களில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * மதுவை ஒழிக்கட்டும். திமுக வெல்லட்டும்.

    * மதுவிற்கு எதிராக நீண்ட காலமாக போராடுபவர் எங்கள் ஐயா ராமதாஸ். அவரை மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைக்க வேண்டும். ஆனால் என்னை மாநாட்டிற்கு அழைக்கவில்லை.

    * 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்ததாகவும், 31 லட்சம் பேருக்கு வேலை கொடுத்ததாகவும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சொல்கிறார். இதற்கு முதல்வரும் ஆமாம் என்று சொல்கிறார். இதை நீங்கள் நம்புகிறீர்களா?

    * மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உரிமையாளர் பேசியது சத்தியமான உண்மை.

    * அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்டாலும் பேசிய உண்மை மாறாது.

    * அவர் கேட்ட கேள்வி நாடெங்கும் பரவிடுச்சு, அதை அதிகாரம் வந்து பணிய வைக்குது. அவர் எவ்வளவு தான் வருத்தம் தெரிவிச்சாலும் அந்த கேள்வியில் உள்ள உண்மையை சத்தியத்தை யாராலும் மறைக்க முடியாது என்று அவர் கூறினார்.

    • யானை நடமாட்டம் உள்ளதால் மக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகின்றனர்.
    • வனத்துறையினர் மற்றும் தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் நரசீபுரம், ஓணாப்பாளையம், மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒன்றரை மாதமாகவே ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது.

    குடியிருப்புக்குள்புகும் யானை, வீடுகளை சேதப்படுத்துவது, தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது, மக்களை தாக்குவது என தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாக உள்ளது. யானை நடமாட்டம் உள்ளதால் மக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகின்றனர்.

    தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் அருகே அட்டுக்கல் என்ற மலைக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது34). இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை 7 மணிக்கு அவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகே உள்ள புளியந்தோப்பு என்ற பகுதிக்கு சென்றார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த ஒற்றை யானை, தேவராஜை தாக்கி தூக்கி வீசியது. மேலும் காலால் மிதித்தும் கொன்றது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    சத்தம் கேட்டு, மக்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் யானை அங்கிருந்து சென்று விட்டது. இதுகுறித்து வனத்துறையினர் மற்றும் தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் தொண்டாமுத்தூர் போலீசாரும், வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இறந்தவரின் உடலை பார்வையிட்டு, அந்த பகுதியில் யானை நடமாட்டத்தையும் கண்காணித்தனர். மேலும் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். யானை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பிறந்த குழந்தை எங்கே என்று கேட்டபோது, தங்களால் குழந்தையை பராமரிக்க இயலாது என்பதால் மதுரையில் உள்ள தனது அண்ணன் வீட்டில் கொடுத்து வளர்க்க வைத்துள்ளதாக சங்கர் கூறினார்.
    • 4 பேரையும் பிடித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள உப்புக்கோட்டை முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 35). இவருக்கு திருமணமாகி குழந்தை இல்லாததால் முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனையடுத்து மனைவியின் தங்கை பாண்டீஸ்வரியை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த 1 மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை மதுரையைச் சேர்ந்த சிவக்குமார்-உமா மகேஸ்வரி தம்பதிக்கு விற்று விட்டதாக தகவல் பரவியது. மேலும் கடந்த 2 நாட்களாக குழந்தையை விற்ற பணத்தில் சங்கர் அளவுக்கு அதிகமாக மது குடித்து வீட்டிலேயே அலப்பறை செய்து வந்துள்ளார்.

    இது குறித்து சிறார் நலக்குழு மற்றும் வீரபாண்டி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் மற்றும் சிறார் நலக்குழு களப்பணியாளர் வனராஜ் ஆகியோர் சங்கர் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல் தெரிவித்தனர். பிறந்த குழந்தை எங்கே என்று கேட்டபோது, தங்களால் குழந்தையை பராமரிக்க இயலாது என்பதால் மதுரையில் உள்ள தனது அண்ணன் வீட்டில் கொடுத்து வளர்க்க வைத்துள்ளதாக சங்கர் கூறினார்.

    இருந்தபோதும் அவர்களது பேச்சில் நம்பிக்கை இல்லாமல் சங்கர் கூறிய விலாசத்தில் மதுரைக்கு விரைந்து சென்றனர். மதுரை அம்புஜம் நகரில் வசிக்கும் சிவக்குமார் (45) மற்றும் அவரது மனைவி உமா மகேஸ்வரி (35) ஆகியோரை போலீசார் வரவழைத்து விசாரித்தனர். அவர்களும் முறையான பதில் அளிக்காததால் சந்தேகம் வலுத்தது. இதனைத் தொடர்ந்து 4 பேரையும் பிடித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    குழந்தை கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும், போலீசார் கைப்பற்றி கொண்டு வந்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் குழந்தை ரூ.1.50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவக்குமார்- உமாமகேஸ்வரி தம்பதி வேறு யாரிடமாவது இது போல வறுமையில் உள்ள தம்பதியிடம் குழந்தையை வாங்கி விற்பனை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வீடியோவில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்டது பதிவாகி உள்ளது.
    • தனிப்பட்ட இந்த சந்திப்பு குறித்த வீடியோவை எங்கள் நிர்வாகிகள் வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

    சென்னை:

    ஜி.எஸ்.டி. குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளங்களில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்டது பதிவாகி உள்ளது.

    இந்நிலையில் அன்னபூர்ணா உணவக உரிமையாளர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

    தனிப்பட்ட இந்த சந்திப்பு குறித்த வீடியோவை எங்கள் நிர்வாகிகள் வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

    தமிழக பாஜக சார்பில் மன்னிப்பு கோருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • அன்னபூர்ணா ஓட்டலுக்கு சென்று நான் ஜிலேபி சாப்பிட்டு பிரச்சனை செய்ததாக சீனிவாசன் கூறினார்.
    • மறுநாள் காலையில் இருந்து அவர் (சீனிவாசன்) எனக்கு தொடர்ச்சியாக போன் செய்தார்.

    கோவை கொடிசியாவில் நேற்று முன்தினம் தொழில் முனைவோர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், "இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் இருக்கிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும். அதே போல, Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்ல.. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி.. வாடிக்கையாளர் சொல்றாரு.. க்ரீமை கொண்டு வா.. நானே வச்சிக்கிறேன்னு சொல்றாரு... கடை நடத்த முடியல மேடம்... ஒரே மாதிரி வையுங்கள். ஒரு குடும்பத்துக்கு பில் போடணும்னா கம்யூட்டரே திணறுது மேடம்..'' என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார். சீனிவாசன் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இதையடுத்து, ஜி.எஸ்.டி. குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்த அன்னபூர்ணா சீனிவாசன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதற்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் செயல்பட்டாளர் சுந்தரராஜன், கேரள காங்கிரசார் மற்றும் பலர் கண்டனங்களை தெரிவித்தனர்.

    இந்நிலையில், அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் மத்திய நிதி அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில், பா.ஜ.க. எம்.எல்ஏ. வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    * அன்னபூர்ணா ஓட்டலுக்கு சென்று நான் ஜிலேபி சாப்பிட்டு பிரச்சனை செய்ததாக சீனிவாசன் கூறினார். நான் இதுவரை அன்னபூர்ணா ஓட்டலில் ஜிலேபி சாப்பிட்டதோ, பிரச்சனையில் ஈடுபட்டதோ இல்லை.

    * மறுநாள் காலையில் இருந்து அவர் (சீனிவாசன்) எனக்கு தொடர்ச்சியாக போன் செய்தார். நான் தப்பாக பேசிவிட்டேன். மத்திய மந்திரியிடம் மன்னிப்பு கேட்பதற்கு நேரம் கொடுங்கள் என்று கேட்டார்.

    * ஓட்டலுக்கு வந்த சீனிவாசன், நான் பேசியது தவறு, தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டேன். உங்கள் மனது புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அவர் தாமாக முன் வந்து மன்னிப்புக்கேட்டார்.

    * தான் பேசியதை இணையத்தில் வேறுமாதிரி பரவிடுச்சி. நான் ஆர்.எஸ்.எஸ். சார்ந்தவர் என்று சொல்லி குடும்பத்தை பற்றி எல்லாம் பேசினார்.

    இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார். 

    • வன விலங்குகள் அணையின் தண்ணீர் உள்ள பகுதியில் வந்த தண்ணீர் குடித்து விட்டு செல்வது வழக்கம்.
    • சில வருடங்களுக்கு முன்பு அணையின் இருபுறம் முள்வேலி அமைக்கப்பட்டு நுழைவாயிலில் இரும்பு கதவு போடப்பட்டது.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகேயுள்ள கொங்கர்பாளையம் கிராமத்தில் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது குண்டேரிப்பள்ளம் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 42 அடியாகும். தற்போது அணை நிரம்பி வழியும் தருவாயில் உள்ளது. அணையின் மூலம் 2498 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

    இந்த அணைக்கு நீர்வரத்தானது குன்றி உட்பட அடர்ந்த வனப்பகுதியில் பெய்யும் மழையால் குண்டேரிப்பள்ளம் அணை நிரப்பப்பட்டு இங்கு கட்லா, லோகு, சிலேப்பி உள்ளிட்ட மீன் குஞ்சுகள் விடப்பட்டு பெரிதானதும் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மூலிகைகள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வரும் நீரால் இந்த மீன்கள் வளர்வதால் ஆரோக்கியத்துடனும், சுவையாகவும் இருப்பதால் உள்ளூர் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் குண்டேரிப்பள்ளம் மீன்களை வாங்கி செல்வது வழக்கம்.

    மேலும் பண்டிகை காலங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து குண்டேரிப்பள்ளம் அணையை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் வருவர். அப்படி குண்டேரிப்பள்ளம் அணைக்கு வரும் பொது மக்கள் உணவு பொட்டலங்கள், பழவகைகள், எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வந்து மீதமாவதை அணைக்கு உள்ளும் அணையை ஒட்டிய பகுதியில் வீசி செல்கின்றனர்.

    பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை சுற்றுலா பயணிகள் குண்டேரிப்பள்ளம் அணையில் வீசி செல்வதால் அணையின் நீர் மாசுபட்டு மீன்கள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு இறக்க வாய்ப்பு உள்ளதால் சில வருடங்களுக்கு முன்பு அணையின் இருபுறம் முள்வேலி அமைக்கப்பட்டு நுழைவாயிலில் இரும்பு கதவு போடப்பட்டது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறி காட்டுயானை அணையின் நடைபாதை வழியாக வந்த நுழை வாயிலில் அமைக்கப்பட்ட இரும்பு கதவை உடைத்து நொறுக்கி தாறுமாறாக வீசி சென்றது.

    குண்டேரிப்பள்ளம் அணை வனத்தையொட்டியே அமைந்துள்ளதால் யானை உள்ளிட்ட வன விலங்குகள் அணையின் தண்ணீர் உள்ள பகுதியில் வந்த தண்ணீர் குடித்து விட்டு செல்வது வழக்கம்.

    ஆனால் அன்று இரவு யானை இரும்பு கதவை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் சுற்றுலா பயணிகளிடத்தில் அச்சத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொதுப்பணித்துறை மற்றும் டி.என்.பாளையம் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • தமிழ்நாடு முழுவதும் 2,763 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
    • காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் நாளை (சனிக்கிழமை) குரூப்-2 தேர்வு நடைபெற உள்ளது.

    துணை வணிகவரி அதிகாரி, தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலா், சாா்-பதிவாளா் உள்ளிட்ட பதவியிடங்கள் குரூப் 2 பிரிவில் வருகின்றன.

    இதேபோன்று, உதவியாளா்கள் உள்பட அமைச்சுப் பணியில் காலியாக உள்ள இடங்கள் குரூப் 2ஏ பிரிவில் உள்ளன. 2 பிரிவுகளிலும் சோ்த்து மொத்தமாக 2,327 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு அறிவிக்கையை அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டது.

    குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் நாளை (சனிக்கிழமை) எழுத உள்ள னா். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 2,763 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    தோ்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவ லா்கள், இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவா். தோ்வை கண்காணிக்க, துணை கலெக்டர் நிலையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு தோ்வு மையத்துக்கும் ஆய்வு அலுவலா் ஒருவரும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளாா். மொத்தமுள்ள 2,763 தோ்வு மையங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளா்கள், கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

    தோ்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தோ்வு நடைபெறும் நாளன்று அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ பதிவு செய்யப்படும்.

    தோ்வா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்குள் நாளை காலை 8.30 மணிக்குள் இருக்க வேண்டும். 9 மணி வரை அவா்கள் வருவதற்கு அனுமதி உண்டு. அதற்குப் பிறகு தோ்வு மையத்தில் நுழைய அனு மதியில்லை.

    தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். தடை செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள் உள்பட வேறு எந்தவகை சாதனங்களையும் எடுத்துச் செல்லக் கூடாது.

    ×