என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • காங்கயத்தில் இருந்து திருப்பூர் நோக்கி இறந்த ஆடுகளை பாடை கட்டி தூக்கி வந்தனர்.
    • விவசாயிகள் மற்றும் போலீசார் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்களால் ஆடுகள் தொடர்ந்து வேட்டையாட்டப்பட்டு வருகிறது. ஆடுகளை கடித்து கொன்று வருவதால், கால்நடை விவசாயிகள் கடும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் வீராணம்பாளையம் செந்தில்குமார் என்பவருக்கு தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை நாய்கள் கடித்ததில், ரூ. 1 லட்சம் மதிப்பிலான 7 ஆடுகள் உயிரிழந்தன.

    இந்நிலையில் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர். தொடர்ந்து காங்கயம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடையவே, இன்று ஆடுகளை பாடை கட்டி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்து வந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து இன்று காலை காங்கயத்தில் இருந்து திருப்பூர் நோக்கி இறந்த ஆடுகளை பாடை கட்டி தூக்கி வந்தனர்.

    திருப்பூர் மாநகர எல்லையான நல்லூர் சிக்னல் அருகே வரும் போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகள் மற்றும் போலீசார் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகள், பாடை கட்டி தூக்கி வந்த இறந்த ஆடுகளை சாலையில் போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனிடையே இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இப்பிரச்சனை எதிரொலித்தது.

    • 13 இடங்களில் மூன்றாவது இடத்தில் வந்திருக்கிறது.
    • பிற பாராளுமன்றத் தொகுதிகளிலும் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது.

    சென்னை:

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 120-வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பத்திரிகை உலகில் அடித்தட்டு மக்கள் வரை சுலபமாக தமிழில் படிக்க ஆதித்தனார் ஆற்றிய பணி இன்றும் கிராமப்புறங்களில் பாமர மக்களால் பாராட்டப்படுகிறது. அவர் புகழ் உலகம் உள்ள வரை நிலைத்து நிற்கும். அ.தி.மு.க.வில் பிரிந்து இருக்கக்கூடிய சக்திகள் அனைவரும் தொண்டர்கள்தான்.

    தொண்டர்கள் ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது. நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை கேட்டு பெற்று வாங்கி ஏழு இடங்களில் டெபாசிட் பறிபோய் இருக்கிறது. 13 இடங்களில் மூன்றாவது இடத்தில் வந்திருக்கிறது. பிற பாராளுமன்றத் தொகுதிகளிலும் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது.

    ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாமல் இருக்கக்கூடியதற்கு தொண்டர்களை பிரித்து வைத்திருப்பது தான் காரணமாகும். தொண்டர்கள் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய இந்த இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும். ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட போது என்னை எதிர்த்து போட்டியிடுவதற்கு ஆறு பன்னீர் செல்வம் என்னுடன் நின்றார்கள்.

    இரட்டை இலையை டெபாசிட் இழக்க செய்து தமிழக அரசியலில் அருவருக்கத்தக்க அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சுயேச்சையாக நின்ற நான் 33 சதவீத வாக்குகள் பெற்று இருக்கிறேன்.

    தொண்டர்களும் பொதுமக்களும் எங்கள் பக்கத்தில் தான் இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிற தடங்களில் 150 சிறப்பு பஸ்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் நாளை, நாளை மறுநாள் (சனி, ஞாயிறு) வார விடுமுறையையொட்டி திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கும் 295 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    திருச்சியில் இருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்து திருச்சிக்கும் 175 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும்.

    அதேபோன்று, விடுமுறைக்கு பின் பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 29, 30 ஆகிய தேதிகளில் (ஞாயிறு, திங்கட்கிழமை) சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிற தடங்களில் 150 சிறப்பு பஸ்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் மதித்தல்.
    • நான் இஸ்லாத்தை பின்பற்றும் ஒரு பிறவி முஸ்லீம்.

    சென்னை:

    நடிகை குஷ்பு திருப்பதி பெருமாள் பக்தை. அவ்வப்போது அங்கு சென்று வழிபடுவார். தற்போது வெளியாகி உள்ள திருப்பதி லட்டு சர்ச்சை அவரை வருத்தம் அடைய வைத்துள்ளது.

    இது தொடர்பாக அவர் தனது வலைத்தள பதிவில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

    திருப்பதி லட்டு பற்றி ஏராளமாக பேசப்படுகிறது. இதில் நான் கவனித்த தெல்லாம் எப்போதெல்லாம் இந்து மதம் குறி வைக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அமைதியாக நடந்து கொள ளும் மனோபாவத்தோடு இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறோம். அது ஏன்?

    ஒரு குறிப்பிட்ட மதத்தை அதாவது இந்து மதத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களிடம் நான் கேட்கிறேன்.

    இஸ்லாம் அல்லது கிறிஸ்தவம் பற்றி அதே மொழியில் அதே வார்த்தையில் பேச உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? வேறு எந்த மதத்தை பற்றி தவறாக பேச நினைத்தாலே உங்கள் முதுகெலும்பு நடுங்குகிறது.

    மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் மதித்தல். பாரபட்சம் காட்டுவது அல்ல. நான் இஸ்லாத்தை பின்பற்றும் ஒரு பிறவி முஸ்லீம். ஆனால் நான் கடவுள் மீது பக்தியும், நம்பிக்கையும் கொண்ட இந்து குடும்பத்தில் திருமணம் செய்து கொண்ட ஒரு இந்து. எனக்கு எல்லா மதங்களும் ஒன்றுதான்.

    இந்து மதத்தை அவமதிக்கவோ, சாதாரணமாகவோ எடுத்து கொள்ளவோ கூடாது. எந்த விதமான அவமரியாதையையும் பொறுத்து கொள்ள முடியாது.

    கலப்படம் செய்யப்பட்ட திருப்பதி லட்டு உலகெங்கிலும் வாழும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளையும், நம்பிக்கையையும் புண்படுத்துகிறது.

    இதற்கு பொறுப்பானவர் யாராக இருந்தாலும் அதற்கான விலையை கொடுத்தே தீர வேண்டும். எல்லாவற்றையும் வெங்கடேச பெருமான் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.

    • பிரதமர் மோடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது.
    • இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு டெல்லி புறப்பட்டு சென்றார்.

    டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சாணக்கியாபுரத்தில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று தங்கினார்.

    இன்று காலையில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சென்று சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி அவரை இன்முகத்துடன் வரவேற்றார். பிரதமருக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக் கொண்டார். அதன் பிறகு பிரதமருடன் அமர்ந்து பேசினார்.

     

    பிரதமர் மோடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது.

    தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தடம் பெட்டகத்தை பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பரிசளித்தார்.

    நெல்லையில் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழைநார் கூடை, பனை ஓலை பெட்டியை பிரதமர் மோடிக்கு பரிசளித்தார்.

    இதைத்தொடர்ந்து சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்துக்கான மத்திய அரசின் பங்கு ரூ.7,425 கோடியை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

    மேலும் மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    • தண்டவாளத்தின் நடுவில் சுமார் 10 கிலோ எடை கொண்ட பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது.
    • ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நெல்லை:

    செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் மாலை 6.25 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

    பாம்புச்சந்தை ரெயில் நிலையத்திற்கும், சங்கரன்கோவில் ரெயில் நிலையத்திற்கும் இடையே சங்கனாப்பேரி பகுதியில் மாலை 6.50 மணிக்கு ரெயில் வந்தபோது, தண்டவாளத்தின் நடுவில் சுமார் 10 கிலோ எடை கொண்ட பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது.

    உடனடியாக சாமர்த்தியமாக என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் அந்த கல்லை அகற்றிவிட்டு சுமார் 20 நிமிடம் தாமதமாக ரெயில் இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நெல்லை ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மேற்பார்வையில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்தனர்.

    தொடர்ந்து தண்டவாளங்களை ஆய்வு செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளதா, என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பாறாங்கல்லை வைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து இன்று 2-வது நாளாக ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சம்பவம் நடந்த நாளன்று அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஏதேனும் வாகனங்கள் வந்துள்ளதா? அங்கு திட்டமிட்டு ஏதேனும் கும்பல் வந்ததா? அல்லது குடிபோதையில் யாரேனும் இந்த செயலை செய்தார்களா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • பெண்கள் தங்கள் புகைப்படங்களை பிறருக்கு அனுப்பக்கூடாது.
    • வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ், புரொபைல் வைப்பதையும் தவிர்க்க வேண்டும் என்றனர்.

    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தனுஷ்வெங்கட் (வயது 20) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

    அதே நிறுவனத்தில் கோவையைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும் பணியாற்றினார். ஒரே நிறுவனத்தில் பணியாற்று வதால் 2 பேரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. தனுஷ்வெங்கட் அந்த பெண்ணை காதலிப்பதாக கூறினார். முதலில் அந்த பெண், காதலை ஏற்க மறுத்தார். ஆனால் தனுஷ்வெங்கட், விடாமல் காதல் வலை வீசினார்.

    தனுஷ்வெங்கட்டின் ஆசைவார்த்தைகளில் மயங்கி அந்த பெண்ணும் அவரை காதலிக்கத் தொடங்கினார். நேரில் சந்தித்து பேசுவது மட்டுமல்லாமல் வீடுகளுக்கு திரும்பியபிறகு அவர்கள் செல்போனிலும் பேசி காதலை வளர்த்து வந்தனர்.

    சம்பவத்தன்று இரவு தனுஷ்வெங்கட், அந்த பெண்ணை வாட்ஸ்-அப் அழைப்பில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர் அந்த பெண்ணை ஆடையின்றி பார்க்க விரும்புவதாக கூறி உள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். நான் தானே உன்னை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன், பிறகு ஏன் தயங்குகிறாய் என கூறி கெஞ்சி உள்ளார்.

    அந்த பெண்ணும் தனுஷ்வெங்கட்டை நம்பி, அவர் கூறியதுபோல வாட்ஸ்-அப் அழைப்பில் ஆபாசமாக நின்றுள்ளார். அதனை அந்த பெண்ணுக்கு தெரியாமலேயே தனுஷ்வெங்கட் தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார். அதன்பின் காதலியின் ஆபாச வீடியோவை அடிக்கடி பார்த்து ரசித்துள்ளார்.

    அவர் ரசித்தது மட்டுமல்லாமல் தனது நண்பர் ஒருவருக்கும் காதலியின் ஆபாச வீடியோவை அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த நண்பர் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார். காரணம் அவர் அந்த இளம்பெண்ணின் உறவினர் ஆவார். உடனே அவர் ஆபாச வீடியோ குறித்து பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பெண்ணை கண்டித்தனர். அப்போது தன்னை ஏமாற்றி தனுஷ்வெங்கட் ஆபாச படம் எடுத்து விட்டதாக கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

    இதையடுத்து பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளுக்கு ஏற்பட்ட துயர சம்பவம் குறித்து கோவை மேற்கு மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தனுஷ்வெங்கட்டை கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையில் தனுஷ்வெங்கட்டின் நடவடிக்கைகளால் பிடிக்காமல் அவர் காதலித்த பெண் அவரை விலகிச் சென்றுள்ளார். மீண்டும் அந்த பெண், தன்னுடன் பழக வேண்டும் என்று எதிர்பார்த்த தனுஷ்வெங்கட், பெண்ணை மிரட்டும் வகையில் அவரது உறவினரான தனது நண்பருக்கு ஆபாச வீடியோவை அனுப்பி வைத்துள்ளார். தற்போது போலீசில் சிக்கிக் கொண்டார்.

    இதுபற்றி போலீசார் கூறும்போது தற்போது சைபர் கிரைம் குற்றங்கள் பெருகி விட்டன. எனவே பெண்கள் தங்கள் புகைப்படங்களை பிறருக்கு அனுப்பக்கூடாது. வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ், புரொபைல் வைப்பதையும் தவிர்க்க வேண்டும் என்றனர்.

    • இந்து சமூக அமைப்புகள் ஆலோசனை கூட்டம்.
    • சென்னையில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரை செல்ல திட்டம்.

    சென்னை:

    திருப்பதி லட்டு தயாரிக்கும் நெய்யில் கலப்படம் செய்து இருப்பதாக வெளியான தகவல்கள் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதில் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மக்கள் மத்தியில் வலுத்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்து அமைப்புகளும் களம் இறங்கி உள்ளன.

    இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிசத் மற்றும் இந்து சமூக அமைப்புகள் உள்பட 16 அமைப்புகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது.

    அப்போது இந்த விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் கோவிலின் புனித தன்மையும், நம்பிக்கையும் காக்கப்படவும் பெருமாளிடமே பிரார்த்தனை செய்யவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடிவு செய்தனர்.

    அதன்படி நாளை (சனிக்கிழமை) அனைத்து பெருமாள் கோவில்கள், ஆஞ்சநேயர் கோவில்கள், கருடாழ்வார் சன்னதிகளில் சிதறு தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

    அதேபோல் அடுத்த வாரம் சென்னையில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளார்கள்.

    புரட்டாசி கடைசி சனிக்கிழமைக்கு முன்னதாக சென்னையில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரை சென்று சனிக்கிழமை திருமலையில் ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்யவும் முடிவு செய்துள்ளார்கள்.

    • நாமக்கல் அருகே விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் போலீசில் தகவல்.
    • டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது பணம் இருந்ததாக தகவல்.

    கேரள மாநில ஏ.டி.எம். கொள்ளை

    கேரள மாநிலம் திருச்சூரில் மாப்ராணம், கொளழி, சொரனூர் ரோடு பகுதிகளில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரங்கள் உள்ளன. இந்த ஏ.டி.எம்.மையங்களில் நேற்று இரவு யாரோ புகுந்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இன்று அதிகாலை அந்த வழியே சென்றவர்கள், ஏ.டி.எம். எந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வங்கி அதிகாரிகளும் ஏ.டி.எம். மையங்களுக்கு வந்தனர். அவர்கள் ஏ.டி.எம். எந்திரங்களில் இருந்த ரூ.65 லட்சம் கொள்ளை போயிருப்பதாக தெரிவித்தனர்.

    ஏ.டி.எம். மையங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பெயிண்ட் அடித்து பதிவுகள் தடுக்கப்பட்டிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதிகளில் உள்ள மற்ற கண்காணிப்பு காமிராக்களின் பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது இன்று அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் வெள்ளைநிற காரில் முகமூடி அணிந்த 4 பேர் வந்து இறங்குவதும், அவர்கள் கையில் கியாஸ் கட்டர் எடுத்து வந்திருப்பதும் தெரியவந்தது. 4 பேரும் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைவதும் அங்குள்ள கண்காணிப்பு காமிரா மீது பெயிண்ட் அடிக்கின்றனர். பின்னர்தான் அவர்கள் கியாஸ் கட்டர் கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தை வெட்டி பணம் எடுத்துள்ளனர்.

    • சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • சி.பா.ஆதித்தனாருக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    சென்னை:

    "தமிழர் தந்தை" சி.பா.ஆதித்தனாரின் 120-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    எளிய மக்களுக்கு உலக நடப்புகளைக் கொண்டு சென்று தமிழ் இதழியலின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கியவரும், கழக ஆட்சியில் சட்டப்பேரவைத் தலைவராகவும் அமைச்சராகவும் இருந்து அளப்பரிய சேவை புரிந்தவருமான சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாளில், அவர் ஆற்றிய நற்பணிகளை நினைவுகூர்ந்து போற்றுவோம்! என்று தெரிவித்துள்ளார்.

    • பூத்துறையை சேர்ந்த மீனவர் ஒருவர் என 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
    • ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இவர்களது விசைப்படகின் எந்திரம் கோளாறு காரணமாக பழுது ஏற்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.

    குமரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் தொழில் செய்து வருகின்றனர். இரவிபுத்தன் துறை பகுதியை சேர்ந்த அருளப்பன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 11-ந்தேதி கொச்சி துறைமுகத்திலிருந்து அருளப்பன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த 2 மீனவர்கள், மேற்கு வங்கத்தை சேர்ந்த 3 மீனவர்கள், பூத்துறையை சேர்ந்த மீனவர் ஒருவர் என 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இவர்கள் கடந்த 15-ந்தேதி ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இவர்களது விசைப்படகின் எந்திரம் கோளாறு காரணமாக பழுது ஏற்பட்டது. ஆழ்கடலில் இவர்கள் தற்போது தத்தளித்து வருகிறார்கள். இந்த தகவல் இரவிபுத்தன்துறையில் உள்ள அருளப்பன் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.

    மேலும் மீனவ அமைப்புகளுக்கும் இந்த தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் அமைப்பினர் தமிழக முதலமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றபோது எந்திர கோளாறு ஏற்பட்டதால் விசைப்படகில் 12 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்து வருகிறார்கள்.

    தற்பொழுது அவர்கள் இந்திய-ஓமன் கடல் எல்லையில் தத்தளிப்பதாக தெரிகிறது. எனவே அவர்களை மீட்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

    • வியாபாரிகள் குப்பை தொட்டி வைக்காவிட்டால் விதிக்கப்படும் அபராதம் ரூ.100 லிருந்து 1000 ஆக உயர்த்த முடிவு.
    • சென்னை மாநகராட்சியின் பொது இடத்தில் குப்பை கொட்டினால் விதிக்கப்படும் அபராதத்தை ரூ.1000 ஆக உயர்த்த மாமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    பொது இடத்தில் திடக்கழிவை எரித்தால் விதிக்கப்படும் அபராதத்தை ரூ.1000 லிருந்து ரூ.5000 ஆக உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

    சென்னையில் பொது இடத்தில் மரக்கழிவு கொட்டினால் விதிக்கப்படும் அபராதம் ரூ.200 லிருந்து ரூ.2000 ஆகவும், வியாபாரிகள் குப்பை தொட்டி வைக்காவிட்டால் விதிக்கப்படும் அபராதம் ரூ.100 லிருந்து 1000 ஆகவும், மெரினா, அண்ணாநகரில் பொது இடத்தில் நிகழ்ச்சி நடத்திவிட்டு தூய்மைப்படுத்தாவிட்டால் ரூ.5000 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சியின் பொது இடத்தில் குப்பை கொட்டினால் விதிக்கப்படும் அபராதத்தை ரூ.1000 ஆக உயர்த்த மாமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

    ×